Advertisement

அத்தியாயம் – 3

மதிய உணவு முடிந்து ஓய்வாய் அமர்ந்திருக்கையில் நந்தகுமார் தயக்கத்துடன் கணேச பாண்டியனிடம் கேட்டார்.

“மச்சான், இன்னும் மாப்பிள்ளையைக் காணமே…?”

“அவன் ஒரு முக்கியமான தவிர்க்க முடியாத வேலையா தான் வெளிய கிளம்பிப் போனான். இன்னும் வேலை முடிஞ்சிருக்காதுன்னு நினைக்கறேன், வந்திருவான்…”

“ம்ம்… அவருக்கு கல்யாணத்துல இப்படி நடந்ததுக்கு கண்டிப்பா கோபம் இருக்கும், நீங்க தான் கொஞ்சம் எடுத்து சொல்லி சின்னஞ்சிறுசுகளை வாழ வைக்கணும்…”

“சரியா புரிஞ்சுகிட்டிங்க மாப்பிள்ள, அவன் எதிர்பார்த்தது ஒண்ணு, நடந்தது வேறொண்ணு…! நாங்க மருமகளா இந்தப் பொண்ணை ஏத்துகிட்டது போல அவன் மனைவியா ஏத்துக்க கொஞ்சம் காலம் எடுக்கலாம், நான் புரிய வைக்கறேன்…”

“ம்ம்… எந்த சடங்கு சம்பிரதாயமும் சரியா நடக்கல, இனி அதை எல்லாம் சொல்லி மாப்பிள்ளையை வெறுப்பேத்தவும்  விரும்பல… வர்ற வெள்ளிக் கிழமை நாள் நல்லாருக்கு, ரெண்டு பேருக்கும் அன்னைக்கு சாந்தி முகூர்த்தத்துக்கு ஏற்பாடு பண்ணிட்டா நல்லாருக்கும்…” தயக்கத்துடனே சொல்லி முடித்தார் நந்தகுமார்.

அதைக் கேட்டதும் கணேசனின் மனதில் குழப்பம் சூழ்ந்தது.

“ஆஹா, இதை எல்லாம் விக்ரம் கிட்ட எப்படி சொல்லறது…? இவங்க வர்றோம்னு சொன்னதுக்கே வீட்டுல இருக்காம வெளிய கிளம்பியவன் இதைப் பத்திப் பேசினா எரிமலையா வெடிச்சிருவானே… இவங்ககிட்ட மறுத்து சொல்லவும் முடியாது, சரி அதை அப்புறம் பார்த்துக்கலாம்…” யோசித்துக் கொண்டிருந்த கணேச பாண்டியனைக் கலைத்தார் நந்து.

“என்ன மச்சான், எதுவும் சொல்லலை…?”

“ம்ம்… தேவி தான் எங்க மருமகள்னு ஆகிருச்சு, இனி எல்லாத்தையும் முறைப்படி செய்திருவோம் மாப்பிள, நீங்க ஒண்ணும் கவலைப் படாதீங்க…”

“ம்ம்… அப்பாவையும் இழந்திட்டு நிக்கற அவளுக்கு இனி நாம தான் எல்லாமா இருந்து பார்த்துக்கணும், மச்சான்… உங்களைதான் நம்பிருக்கேன்…”

“அட, பார்த்துக்கலாம் விடுங்க மாப்பிள்ள…” அவர்கள் அருகே நந்தினி வந்து அமரவும் பேச்சை மாற்றினார் நந்து.

“மாமா..! விக்ரம் எப்ப வருவார்னு கேக்க முடியுமா..? அவர் வந்ததும் பார்த்துட்டு தான் நாங்க கிளம்பணும்…”

“அவன் வர்றதுக்கு நைட் ஆகும்னு நினைக்கறேன் நந்தினி…”

“ஓ…! அப்ப நாம நைட்டு தங்கிட்டு நாளைக்கு அவரைப் பார்த்திட்டே கிளம்பலாம் ப்பா, இல்லன்னா மரியாதையா இருக்காதுல்ல…” நந்தினி சொல்ல கணேசன் திகைத்தார்.

நந்தகுமார் மகளின் சாதுர்யத்தை மனதில் மெச்சிக் கொள்ள, கணேச பாண்டியன் உடனே மகனிடம் கேட்டு சொல்லுவதாகக் கூறி அலைபேசியுடன் நகர்ந்தார்.

சற்றுத் தள்ளி தனியே சென்று விக்ரமுக்கு அழைக்க எடுத்தவன், “என்னப்பா, அந்தக் கூட்டம் கிளம்பிருச்சா…?” என்றான் எடுத்ததும்.

“இல்லடா விக்ரம், நீ வந்தா தான் ஊருக்குக் கிளம்புவோம்னு இருக்காங்க… கொஞ்சம் வீட்டுக்கு வாயேன் பா…”

“முடியாதுப்பா, அந்த நந்தினி முகத்துலயே நான் முழிக்க விரும்பல, அந்த மங்கி தேவியைப் பார்த்தாலே ஆத்திரம் பத்திகிட்டு வருது… அனாவசியமா என் வாழ்க்கைல புட்பால் விளையாடின அவங்க ரெண்டு பேரையும் கொன்னு போடுற அளவுக்கு ஆத்திரத்துல இருக்கேன்… எத்தன நாள் வேணும்னாலும் அதுங்க இங்கயே இருக்கட்டும். அதுங்க போகாம நான் வீட்டுப் பக்கம் வர மாட்டேன்…”

அவனது கோபம் புரிந்தாலும் நயமாய் பேசிப் பார்த்தார்.

“விக்ரம் உன் கோபம் புரியுதுடா, ஆனா நீ இதையும் யோசிக்கணும், நாம எதுக்கு எங்க கிராமத்துல கிடக்கற என் ஒண்ணு விட்ட தங்கச்சி வீட்டுல பொண்ணு எடுக்க நினைச்சோம்… உறவு விட்டுப் போயிடக் கூடாதுன்னா…? இங்க பணக்கார வீட்டுல பொண்ணு எடுத்தா நமக்கு உள்ள கடனைப் பத்தி தெரிஞ்சா அசிங்கமாயிரும்னு தான… இப்ப இந்தப் பொண்ணை நாம ஏத்துக்கலைனா நாம வாங்கின இருபது லட்சம் பணத்தை திருப்பிக் கொடுக்கணும்… ஆனா அந்த லூசு நந்தகுமாரு அந்தப் பணமும் வேண்டாம், மேல அம்பது பவுன் நகையும் தரேன், ஊருல கடன்ல இருந்த உங்க வீட்டுப் பத்திரத்தையும் மீட்டுத் தர்றேன்னு சொல்லும்போது நாமளும் கொஞ்சம் யோசிக்கணும்ல…”

“என்னப்பா சொல்லறிங்க…? இருபது லட்சம் வேண்டாம்னு சொல்லிட்டு மேலயும் இதெல்லாம் பண்ணறேன்னு சொன்னாரா…?” திகைப்புடன் கேட்டான் விக்ரம்.

“அட ஆமாப்பா, அதனால தான் நானும் உன் அம்மாவும் இறங்கி வந்தோம்… நமக்குத் தேவை பணம். அதை நந்தினி கொண்டு வந்தா என்ன…? இல்ல, மந்தாகினி கொண்டு வந்தா என்ன…? நீ ஒண்ணும் நந்தினியைக் காதலிச்சு கல்யாணம் பண்ண நினைக்கலியே…? அப்புறம் இவளை ஏத்துக்கிறதுல உனக்கு என்ன கஷ்டம்…?”

“அப்பா…! நீங்களும், அம்மாவும் வேணும்னா பணம் கிடைக்குதுன்னு மனசைத் தேத்திக்கலாம்… ஆனா எல்லார் முன்னாடியும் அசிங்கப்படுத்தி, வலுக்கட்டாயமா என்னைத் தாலி கட்டற சூழ்நிலைக்குத் தள்ளின நந்தினியையும், மங்கி தேவியையும் என்னால மன்னிக்கவே முடியாது…”

“சரி, அதை அப்புறமா யோசிச்சு ஏதாவது பண்ணுவோம், இப்ப நீ வீட்டுக்கு வாப்பா, இல்லேன்னா இந்தக் கூட்டம் கிளம்பற வரைக்கும் நாங்களும் நல்லவங்களா நடிச்சுகிட்டு இருக்கணும்…” கெஞ்சலாய் சொன்னார் கணேசன்.

“சரி நான் வர்றேன்…! ஆனா என்னால நடிக்கவெல்லாம் முடியாது…” என்றான் விக்ரம்.

“நீ வந்து நின்னாப் போதும், எதையும் பேசக் கூட வேண்டாம்… அவங்க சொல்லுறதைக் கேட்டுட்டு சரின்னு ஒரு வார்த்தை மட்டும் சொல்லிடு, கிளம்பிடுவாங்க…”

“ஓகே…” என்றவன் போனை வைக்க நிம்மதிப் பெருமூச்சுடன் ஹாலுக்கு வந்தார் கணேச பாண்டியன்.

சுபாஷினியுடன் பேசிக் கொண்டிருந்த பத்மாவதி, கணவனைக் கண்டதும் விக்ரமோடு பேசியாச்சா என்பது போல் பார்க்க, ஆமோதிப்பாய் தலையாட்டி விட்டு நந்தகுமாரிடம் அமர்ந்தார் கணேச பாண்டியன்.

“விக்ரம் கிட்ட பேசினேன், பாவம் நீங்கல்லாம் ஊருல இருந்து வேல, வெட்டி எல்லாம் விட்டுட்டு இங்க வந்து காத்திருக்கிங்கன்னு எடுத்து சொன்னேன்,  ஈவனிங் உள்ள மீட்டிங்கை கான்சல் பண்ணிட்டு வர்றேன்னு சொன்னான்…”

“ஓ…! நல்லதாப் போயிருச்சு, மாப்பிள்ளையைப் பார்த்துட்டு இன்னைக்கே நாங்க ஊருக்குக் கிளம்பிடலாம்…” என்ற நந்தகுமார் மகள் நந்தினியை நோக்க அவள் புன்னகைத்தாள்.

அவள் அருகே அமர்ந்திருந்த மந்தாகினியிடம், “தேவி, இன்னும் கொஞ்ச நேரத்துல உன் அத்தான் வந்திருவாராம்…” எனக் கூற அவள் மனதிலோ போதை ஏறுவதற்கு பதில் அந்த வார்த்தைகள் பதட்டத்தையே கொடுத்தன.

நந்தினியின் கையை இறுக பற்றிக் கொண்ட மந்தாகினியின் குளிர்ந்த கைகள் அவள் மனதை உணர்த்த ஆறுதலாய் கையைத் தட்டிக் கொடுத்த நந்தினி, “பயப்படாத, அப்பாவும் நானும் விக்ரம் கிட்டப் பேசறோம்…” எனத் தணிந்த குரலில் அவள் மட்டும் கேட்கும்படி கூறினாள்.

சரியாய் ஒரு மணி நேரம் கழிந்து விக்ரமின் கார் வாசலில் வந்து நிற்க, விரைப்புடன் இறங்கி உள்ளே வந்தவனின் அழகிய முகம் கடுகடுப்பில் விகாரமாய் தெரிந்தது.

அவனைக் கண்டதும் நந்தகுமார், சுபாஷினியோடு சட்டென்று மந்தாகினியும் எழுந்து கொண்டாள்.

“வாங்க மாப்பிள்ளை, உங்களுக்கு தான் காத்திருக்கோம்…”

“ம்ம்… அதான் வந்துட்டனே…”

“சரி, முதல்ல சாப்பிட்டு வாங்க மாப்பிள்ளை…” நந்தகுமார் சொல்ல, “நான் சாப்பிட்டேன்… சொல்லுங்க…” என்றான்.

“உங்ககிட்ட கொஞ்சம் தனியாப் பேசணும்…”

“இனி தனியாப் பேச என்ன இருக்கு…? நீங்க எல்லாத்தையுமே எல்லார் முன்னாடியும் பேசறது தானே வழக்கம்…” அவன் பட்டென்று கேட்க மந்தாகினி மீண்டும் நந்தினியின் கையை பயத்துடன் பற்றிக் கொள்ள, பத்மாவதியின் மனது கும்மாளமிட, நந்தகுமாரின் முகம் வாடியதைக் கண்ட கணேச பாண்டியன் மகனிடம் பேசினார்.

“விக்ரம், நினைச்சுப் பார்க்காம ஏதோ நடந்திருச்சு, அதை சரி பண்ணனும்னு வந்திருக்கவங்க கிட்ட இப்படி வெடுக்குன்னு பேசாதப்பா… உன் மாமன் சொல்ல நினைக்கறதைக் காது கொடுத்துக் கேளு, உன் ரூமுக்குப் போ…” என மகனை சமாதானப்படுத்த அவன் வேறு யாரையும் லட்சியம் செய்யாமல் மாடியில் அவனது அறைக்கு சென்று விட்டான்.

“யாரும் தப்பா நினைச்சுக்காதிங்க, சின்ன வயசுல்லையா..? நாம பெரியவங்கதான் எல்லாத்தையும் எடுத்து சொல்லிப் புரிய வைக்கணும்… நீங்க போயி அவன்கிட்ட பேசிட்டு வாங்க…” என்று சொல்ல நந்தகுமார், சுபாஷினியுடன் நந்தினியும் செல்லப் போக,

“நீ போக வேண்டாம் மா, பெரியவங்க பேசட்டும்… சின்னப் புள்ளைங்க பேசித்தான் இந்த விஷயம் இவ்ளோ தூரம் சிக்கலாப் போயிருச்சு…” என ஜாடையாய் பத்மாவதி அவளை சொல்ல நந்தகுமார் மகளிடம் கண் ஜாடை செய்துவிட்டு விக்ரமின் அறைக்கு மனைவியுடன் சென்றார்.

இறுகிய முகத்துடன் கட்டிலில் அமர்ந்திருந்த விக்ரம் அத்தையும் மாமனும் உள்ளே வரவும் எழுந்து கொண்டான்.

எதுவும் பேசாமல் சட்டென்று அவனது கையைப் பிடித்துக் கொண்ட நந்தகுமார், “மாப்பிள, நடந்த எதையும் மாத்த முடியாது, இனி நடக்கறதாவது நல்லதா நடக்கட்டும்… கல்யாணம் எப்படில்லாமோ நடந்திருச்சுன்னு அந்த சின்ன பொண்ணைத் தண்டிச்சுறாதிங்க… அம்மா இல்லாம வளர்ந்த பொண்ணு, இப்ப அப்பனையும் இழந்திட்டு நிக்கறா. இனி நீங்க தான் அவளுக்கு எல்லாமே…! தயவுசெய்து மனசார அவளை ஏத்துகிட்டு சந்தோஷமா உங்க வாழ்க்கையைத் தொடங்கணும்… கிராமத்துல வளர்ந்ததால அவளுக்கு இங்கத்த பழக்க வழக்கமும், நாகரீகமும் தெரியாம இருக்கலாம்… ஆனா ரொம்ப நல்லவ, நேசிச்சவங்களுக்கு உயிரையே வேணும்னாலும் கொடுப்பா… நீங்கதான் அவ  வாழ்க்கைன்னு வந்தவளை நல்லபடியா பார்த்துக்கங்க, தண்டிச்சுறாதிங்க…” என்றவரின் கண்கள் கலங்கி இருந்தது.

அதைக் கண்டு சுபாஷினியின் மனம் நெகிழ, “என்னங்க நீங்க…? என் அண்ணன் மகன் அப்படி ஒண்ணும் கட்டுன பொண்டாட்டியைத் தண்டிக்கற அளவுக்குக் கல் நெஞ்சம் உள்ளவன் இல்ல, அவர் தேவியை நல்லாப் பார்த்துக்குவார்… என்ன விக்ரம், அத்தை சொன்னது சரிதானே…?” எனக் கேள்வியுடன் அவனை நோக்க பதில் சொல்லாமல் அமைதியாகவே நின்றான் விக்ரம்.

“என்னப்பா, எதுவும் சொல்ல மாட்டிங்கற…?”

“மாமா, பிடிச்சதை வச்சுக்கலாம், ஆனா எதையும் பிடிச்சு வச்சுக்கக் கூடாதுன்னு நினைக்கிறவன் நான்… விதி என் வாழ்க்கையை சம்மந்தம் இல்லாம புரட்டிப் போட்டிருச்சு. நான் கெட்டவன் இல்லை, அதே சமயம் நல்லவனும் இல்லை. நடந்த விஷயத்தை என் மனசு ஏத்துக்க கொஞ்சம் டைம் வேணும்… அந்தப் பொண்ணைக் கொடுமை எல்லாம் பண்ணப் போறதில்ல, தாலி கட்டிட்டேன். இருக்கட்டும்…! என் மனசுக்குப் பிடிக்கும்போது ஏத்துக்குவேன்…”

“இப்படி சொன்னா எப்படிப்பா… கொஞ்சநாள் கழிச்சு உனக்கு அந்தப் பொண்ணைப் பிடிக்கலைனா வேண்டாம்னு சொல்லிடுவியா…?” சுபாஷினி தவிப்புடன் கேட்க நந்தகுமார் மனைவியைத் தடுத்தார்.

“இரு சுபா, நாம ஏன் எதிர்மறையா நினைக்கணும்…? தேவியோட குணம் யாருக்கு தான் பிடிக்காது…? நிச்சயம் ஒரு நாள் மாப்பிள அவளை மனசார ஏத்துக்க தான் போறார், நம்புவோம்…” என்றார் நம்பிக்கையுடன்.

“சரி மாப்பிள்ள, நாங்க கிளம்பறோம்… தேவியைப் பார்த்துக்கங்க…” என மீண்டும் சொல்லிவிட்டு கிளம்பினர்.

“ச்சே… இவங்ககிட்ட மூஞ்சில அடிச்ச போல பேசி அனுப்பாம ஏன் நாம இப்படிப் பேசினோம்…? இந்த மாமா உருக்கமாப் பேசினதும் நெகிழ்ந்துட்டேன் போலருக்கு…” அவர்கள் சென்றதும் கட்டிலில் அமர்ந்தவன் பார்வை சற்றுத் தள்ளி சுவர் ஓரமாய் வைக்கப்பட்டிருந்த மந்தாகினியின் உடைப் பெட்டியின் மீது விழ பெருமூச்சுடன் எழுந்தான்.

சிறிது நேரத்தில் அவர்கள் ஊருக்குக் கிளம்பிவிட மந்தாகினியிடம் ஆயிரம் பத்திரம் சொல்லி, பார்த்து நடந்து கொள்ளும்படி சுபாஷினி சொல்ல, நந்தினி அங்கே எது நடந்தாலும் உடனே அவளை போனில் அழைத்து விவரம் சொல்லும்படி கூற கண்ணீருடன் தலையசைத்தாள் மந்தாகினி. இறுதியாய் அவளிடம் வந்தார் நந்தகுமார்.

“தேவிம்மா…!” என்றவரின் பரிதவிப்பான குரல் அவளுக்கு தந்தையை நினைவு படுத்த, “அப்பா…!” எனத் தோளில் சாய்ந்து கேவியவளைத் தேற்றி கண்ணைத் துடைத்து அவளைத் தனியே அழைத்துச் சென்று கையில் ஒரு சின்ன பாகைக் கொடுத்தவர், “உனக்கு ஏதாவது தேவைப்பட்டா அப்பாவைத் தயங்காமக் கூப்பிடு டா, இது இப்ப உன் கைல இருக்கட்டும்…” என்றார்.

“அ..அப்பா, எனக்கு பயமாருக்குப்பா…” அவள் மீண்டும் கலங்கத் தொடங்க தோளில் தட்டிக் கொடுத்தவர்,

“எதுக்குடா கலங்கற, இங்க உள்ளவங்களும் மனுஷங்க தான..? உன் அன்பும், பொறுமையும் எல்லாரையும் மாத்தும். நம்பிக்கையோட இந்தப் புது வாழ்க்கையைத் தொடங்கு…”

“தேவிம்மா, இது உன் வாழ்க்கை, நாங்க எல்லாம் கூடத்தான் வர முடியும், வாழவேண்டியது நீதான்… கலங்காம தைரியமா எதிர்கொள்ளப் பழகிக்க, நல்லதே நடக்கும்…! அப்பா சாமியா உன் கூடவே இருந்து பார்த்துப்பான்…” என கண்ணைத் துடைத்துவிட சற்றுத் தெளிந்தாள்.

மந்தாகினி அனைவரையும் வாசலுக்கு சென்று வழியனுப்ப, கணேசனும் பத்மாவும் வந்தாலும் விக்ரம் கீழே வரவில்லை. அவர்கள் வண்டி கிளம்பியதும் கணேசனும், பத்மாவும் உள்ளே சென்றுவிட அடுத்து என்ன செய்வது எனப் புரியாமல் அங்கேயே நின்று வெளியே பார்த்துக் கொண்டிருந்தாள் மந்தாகினி. கண்கள் ஈரத்துடன் பளபளத்துக் கொண்டிருக்க நேரம் நகர்ந்து இருட்டிய பிறகும் அங்கேயே நின்றவளிடம் பணிப்பெண் ஒருத்தி வந்தாள்.

“அம்மா, உள்ள வாங்க… எவ்ளோ நேரம் தான் வெளியவே இருப்பிங்க.?” எனக் கேட்க திரும்பியவளின் மருண்ட பார்வை அவளை நெகிழ்த்த,

“மதியமும் நீங்க சரியா சாப்பிடல, ரொம்ப டயர்டா இருக்கீங்க… வந்து சாப்பிடுங்க…”

“அ..அத்தையும், மாமாவும்…?”

“ரெண்டு பேருக்கும் சுகர் அதிகம், அவங்களுக்கு சாப்பிட எதுவும் வேண்டாம்னு சொல்லி ராகி மட்டும் குடிச்சிட்டுப் படுக்கப் போயிட்டாங்க…”

“அ..அவரு…?” என்றவளின் குரல் தொண்டைக்குள்ளேயே சிக்கிக் கொள்ள, அவளைப் பாவமாய் பார்த்தாள் அந்தப் பெண்மணி.

“யாரு, விக்ரம் தம்பியா…? அவர் சப்பாத்தியை ரூமுக்கு அனுப்ப சொல்லி சாப்பிட்டார் மா…”

“ம்ம்…” என்றவள் அடுத்து மௌனமாகி நிற்க,

“நீங்களும் வந்து சாப்பிட்டுட்டா, நானும் சாப்பிட்டு பாத்திரமெல்லாம் கழுவி வச்சிருவேன்…” அவள் தயங்கிக் கொண்டே சொல்ல மந்தாகினிக்குத் தொண்டை அடைத்தது.

“எ..எனக்கு எதுவும் வேண்டாம்…”

“சாப்பிடாம இருந்தா உடம்பு தான் டயர்டாகும், எதுவும் மாறாது மா… வந்து சாப்பிடுங்க, தெம்பு வேணும்ல…” அவளது அக்கறையான சொல் நந்தினியை நினைவு படுத்த மேலே எதுவும் சொல்லாமல் உடன் சென்றாள். இரண்டு சப்பாத்தியை இறக்குவதற்குள் துக்கம் பொங்கி வர தண்ணீரைக் குடித்து இறக்கிவிட்டு எழுந்தாள்.

“அ..அக்கா…! எனக்குப் போதும், நீங்க சாப்பிடுங்க…” என்றவளை நேசத்துடன் நோக்கியவள், “என் பேரு விஜயா, பேரு சொல்லியே கூப்பிடுங்க மா, அக்கான்னு கூப்பிடறத பார்த்தா பெரிய மேடம் திட்டுவாங்க…”

அவள் சொல்லவும் திகைப்புடன் எழுந்தவளுக்கு விக்ரமின் அறைக்கு செல்லவும் பயமாய் இருக்க, ஹால் சோபாவில் சென்று அமர்ந்தாள். சிறிது நேரத்தில் அடுக்களையில் வேலை முடிந்து விஜயா வெளியே வர களைப்புடன் ஹால் சோபாவில் உறங்கி இருந்த மந்தாகினியை நெகிழ்வுடன் நோக்கினாள்.

அவள் அருகே வந்தவள், “அம்மா, சின்னம்மா…” என அழைத்து நோக்க மந்தாகினி எழுந்திருக்கவில்லை. அவளது குழந்தைத்தனம் மாறாத தூய முகத்தைக் கனிவோடு நோக்கியவள், “ம்ம்… சூதுவாது தெரியாத புள்ளையா இருக்கு, இவங்ககிட்ட வந்து மாட்டிருக்கே… என்ன பாடு படப் போகுதோ…?” என நினைத்துக் கொண்டே அடுக்களைக்கு சென்று தனது பாயை விரித்தாள்.

புதிய நமது மாற்றங்களின்

பிரதிபலிப்பே

பிறதொன்றின் மாற்றம்… அது

புரியாமல் போகையில்

மாற்றம் ஏமாற்றமாகலாம்…

 

 

Advertisement