Advertisement

அத்தியாயம் – 2

ஊதுபத்தியின் புகை வளையங்களுக்குள் புகைப்படத்தில் சிரித்துக் கொண்டிருந்தார் சரவணன். ஏற்றி வைக்கப் பட்டிருந்த விளக்கு சோகமாய் சுடர் விட்டுக் கொண்டிருந்தது.

ஏழாவது நாள் காரியத்துக்கு வந்திருந்த உறவினர்களும், அயல் வீட்டினரும் நல்லபடியாய் எல்லாம் முடிந்து உணவு உண்டு கிளம்பி இருந்தனர். முக்கியமான உறவுகள் சிலர் மட்டுமே வீட்டில் இருக்க கட்டிலில் சோர்ந்து படுத்திருந்தாள் மந்தாகினி தேவி. அழுதழுது அவளது கண்களில் கண்ணீர் வற்றியிருக்க, கன்னங்களில் கண்ணீர் சுவடுகளின் தடம் மிச்சம் இருந்தன.

தந்தையின் இழப்பை அவள் மனம் இன்னும் ஏற்றுக் கொண்டிருக்கவில்லை. கழுத்தில் தொங்கிய புதுத் தாலி மனதை உறுத்திக் கொண்டிருக்க வாழ்க்கையே சூன்யமாகி விட்டது போல் உணர்ந்தாள். கண் மூடி கட்டிலில் சுருண்டிருந்தவளை வேதனையுடன் பார்த்தாள் நந்தினி.

“கடவுளே…! தெரிந்தோ, தெரியாமலோ இவளது இந்த நிலைக்கு நானும் காரணமாகி விட்டேன்… சரவணன் அப்பாவிடம் முன்பே பக்குவமாய் விஷயத்தை சொல்லி விளக்கி இருந்தால் இத்தனை அதிர்ச்சிக்கு ஆளாகி இருக்க மாட்டார்… விக்ரமுடன் இவளுக்கு கல்யாணத்தை முடித்தே ஆகவேண்டுமென்ற அவசரத்தில் நான் செய்த விஷயம் ஒரு உயிரையே பறி கொடுக்க வேண்டியதாய் போயிற்றே…” யோசித்துக் கொண்டிருந்தவளை அன்னை சுபாஷினியின் குரல் திரும்ப வைத்தது.

“நந்து…! தேவியை எழுப்பி ஏதாச்சும் சாப்பிட சொல்லுடி, காலைல இருந்து பச்சத்தண்ணி பல்லுல படாம கிடக்குது புள்ள…” ஆதங்கத்துடன் சுபாஷினி சொல்ல, “எத்தனயோ தடவை சொல்லிட்டேன் மா, ஏதும் வேணாம்னு பிடிவாதம் பிடிக்கறா… நீங்க ஒரு தட்டுல சாதம் எடுத்திட்டு வாங்க, நானே ஊட்டி விட்டுடறேன்…” நந்தினி சொல்ல தலையாட்டியவர்,

“ம்ம்… இத்தன நாளா அண்ணன் வீட்டுல இருந்து என்ன ஏதுன்னு ஒரு வார்த்தை கேட்கல, நாம விஷயத்தை தெரியப் படுத்தியும், யாரு செத்தா எங்களுக்கென்னன்னு சொல்லிட்டாங்க, இவ வாழ்க்கையை நினைச்சா எனக்கே பயமாருக்கு… நாம இன்னும் கொஞ்சம் பொறுமையா இருந்திருக்கணுமோ…?”

“நாம பொறுமையா இருக்கலாம், ஆனா மறுபடி இப்படி ஒரு சந்தர்ப்பம் அமையுமா…?” என்ற மகளின் கேள்வி சரியாகவே பட மௌனமாய் தலையாட்டினார் சுபாஷினி.

“சரி, அவ வெறும் வயித்துல கிடந்தா முடியாம ஆகிரும், நான் சாதம் எடுத்தாரேன்…” சொன்னவர் அங்கிருந்து நகர பெருமூச்சுடன் தோழியிடம் சென்றாள் நந்தினி.

“தேவி, எழுந்திருடீ…! கொஞ்சமாச்சும் சாப்பிடு…”

“ப்ச்… எனக்கு வேண்டாம் நந்து…”

“நீ ரொம்ப சோர்வா இருக்க, அதோட சாப்பிடாமலும் இருந்தா உடம்புக்கு ஏதாச்சும் வந்துடப் போகுது…”

“என்ன வந்துடும், என் உசுரு போகுமா, போகட்டும்… என் அப்பா சாகக் காரணமான இந்த உசுரு போனாத்தான் என்ன…? நான் பாவி, என்னால தான் நல்லாருந்த மனுஷன் மூச்சை நிறுத்திட்டாரு…” அவள் மீண்டும் அழத் தொடங்க அதட்டினாள் நந்தினி.

“ப்ச்… இப்ப நீ அழுகையை நிறுத்தப் போறியா இல்லியா…? அழுதா எதுக்காச்சும் தீர்வு கிடைக்கும்னா சொல்லு, நானும் உன்னோட சேர்ந்து அழறேன்… அடுத்து என்ன பண்ணனும்னு யோசிக்காம இப்படியே கிடந்தா என்ன அர்த்தம்…?” நந்தினியின் அதட்டலில் மந்தாகினியின் கண்ணீர் சுரப்பிகள் மூடிக் கொள்ள அவள் மௌனமாய் நிமிர்ந்து பார்த்தாள்.

அன்னை பிளேட்டில் சாதம் கொண்டு வருவதைக் கண்ட நந்தினி, “தேவி, எழுந்து உக்காரு…” எனவும் அமர்ந்தாள். நந்தினியே வலுக்கட்டாயமாய் அவளுக்கு ஊட்டிவிட்டு அரை குறையாகவாவது வயிற்றை நிறைய வைத்துவிட்டே அவளை விட்டு நகர்ந்தாள்.

அங்கே இருந்த நல்ல உள்ளங்கள் சிலர் சரவணனின் இழப்பையும், மந்தாகினியின் எதிர்கால வாழ்வையும் குறித்து உண்மையாகவே வருத்தப்பட்டு நந்தகுமாரிடம் பேசிக் கொண்டிருந்தனர். அவர் மனதிலும் அடுத்து என்ன செய்வது என்ற கேள்வி எழுந்திருக்க அனைவரும் சென்ற பிறகும் யோசனையுடன் அமர்ந்திருந்தார்.

தந்தையிடம் வந்த நந்தினி, “என்னப்பா யோசிச்சிட்டு இருக்கீங்க…?” கேட்டபடி அருகே அமர்ந்தாள்.

“எல்லாம் நம்ம தேவிப் புள்ளையப் பத்தி தான்… சரவணன் செத்ததுக்கு கூட அந்த வீட்டுலருந்து யாருமே எட்டிப் பார்க்கல, கல்யாணத்துல அடுத்து நடக்க வேண்டிய சடங்கு, சம்பிரதாயம் எதுவும் நடக்கல, அதான்… என்ன பண்ணறதுன்னு யோசிச்சிட்டு இருக்கேன்…”

“இதுல யோசிக்க என்னப்பா இருக்கு…? அவங்க இப்படிதான் நடந்துப்பாங்கன்னு நமக்குத் தெரியாதா…? இது அவங்க விரும்பாத கட்டாயக் கல்யாணம். நாமதான் அடுத்து செய்ய வேண்டியதை யோசிக்கணும், அவங்க ஏதும் பண்ணலைன்னு விட்டுட முடியாது… அடுத்து நல்ல நாள் எப்பன்னு பாருங்க, நாம செய்ய வேண்டிய முறையை செய்து அவளைப் புகுந்த வீட்டுல விட்டுட்டு வந்துடலாம்…”

“ம்ம்… நம்ம புள்ளையை நினைச்சா தான் ரொம்ப வருத்தமா இருக்கு, அப்பனையும் இழந்துட்டு நிக்கற அவளுக்கு ஆறுதலா அங்க யாரும் இருக்கப் போறதில்ல, இவ எப்படி அவங்களை சமாளிக்கப் போறாளோன்னு பயமா இருக்கு…”

“அப்பா, இதான் நடக்கணும்னு விதி இருக்கு… இறங்கியாச்சு, இனி பயந்து என்ன பிரயோசனம்…? நீங்க எனக்கு கல்யாணம் முடிஞ்சு புகுந்த வீட்டுக்கு அனுப்பும்போது என்னெல்லாம் செய்விங்களோ அது எல்லாமே தேவிக்கும் செய்யணும், எந்தக் குறையும் நம்ம பக்கம் இருக்கக் கூடாது…”

“ம்ம்… அதெல்லாம் நல்லாப் பண்ணிடலாம் மா, அவங்க நம்ம புள்ளைய கஷ்டப்படுத்தாம ஏத்துகிட்டாப் போதும்…”

“ஊர் முன்னாடி விக்ரம் மாமாவை மிரட்டி, பலவந்தமா தாலி கட்ட வச்சிருக்கோம்… அவ்ளோ சீக்கிரம் எதையும் மறந்திட மாட்டாங்க, நம்ம தேவியும் கொஞ்சம்  அவங்க மனசை மாத்த சிரமப்படணும் பா…”

“ம்ம்… இது ஒரு அப்பாவிப் பொண்ணு, எதிர்த்து பேசக் கூட திராணி இல்லாத அப்பிராணி. எப்படி அவங்களை சமாளிப்பா…?”

“இது அவ வாழ்க்கை, இதை அவ தான் முயற்சி பண்ணி சரி பண்ணிக்கணும், நம்மால முடிஞ்சளவு நாம சப்போர்ட் பண்ணுவோம்… எல்லாம் நல்லபடியா நடக்கனும்னு கடவுள் மேல பாரத்தைப் போட்டுட்டு அடுத்ததை செய்வோம் பா…”

“ம்ம்… அந்தக் கடவுள் தான் எல்லாம் பார்த்துக்கணும்…” பெருமூச்சுடன் கூறிய நந்தகுமார் எழுந்து சென்றார்.

நல்லநாள் ஒன்றில் வண்டி நிறைய சீர்வரிசையுடன், மந்தாகினியை அழைத்துக் கொண்டு நந்தகுமாரின் குடும்பம் மற்றும் உறவுப் பெரியவர்கள் சிலருடன் விக்ரம் வீட்டு முன் காரில் சென்று இறங்கினர்.

ஊரிலிருந்து கிளம்புவதற்கு முன் நந்தினி எத்தனையோ எடுத்து சொல்லி மந்தாகினியை இந்தப் புதிய வாழ்க்கைக்குத் தயார் செய்திருந்தும் சென்னை சிட்டிக்குள் நுழைந்தது முதலே அவளிடம் பதட்டம் தொற்றிக் கொண்டது. விக்ரமின் வீட்டார் வாழ்ந்து கெட்டவர்கள் ஆனாலும் பகட்டுக்கும், படோடோபத்திற்கும் சற்றும் குறைச்சலில்லை. குட்டி பங்களாவும், முன்னில் அழகான பூந்தோட்டமுமாய் நின்ற வீட்டின் கேட்டுக்குள் கார் நுழைய மந்தாகினியின் இதயம் படபடக்கும் ஓசை அவள் காதுக்குள் தெளிவாய் கேட்டது. இதழ்கள் உலர்ந்து நாக்கு மேலே ஒட்டிக் கொள்ள பயத்தில் வெளிறிய முகமும், கலவரம் நிறைந்த கண்களுமாய் தான் வாழப் போகும் வீட்டின் முன் இறங்கினாள் மந்தாகினி.

அவர்கள் வரப் போவதை முன்பே அறிவித்தும் வரவேற்க வாசலில் யாருமில்லை. மெல்ல கண்களை உயர்த்தியவள் வீட்டைக் கண்டு பிரமிப்புடன் நின்று விட்டாள்.

“ப்ச்… புள்ளைக்கு வாழப் போற வீட்டுல ஆரத்தி எடுக்கக் கூட ஆளில்லையே, இந்த அண்ணி எங்க போச்சோ…” சுபாஷினி புலம்ப,

“ஒரு நிமிஷம் மா, வந்துடறேன்…” என்ற நந்தினி நெடுநெடுவென்று வீட்டுக்குள் நுழைய ஹால் சோபாவில் கடுகடுத்த முகத்துடன் அமர்ந்திருந்தனர் பத்மாவதியும், கணேச பாண்டியனும்.

“ஹாய் அத்தை, ஹலோ மாமா… ரெண்டு பேரும் இங்கதான் இருக்கிங்களா…?” சிரித்தபடி கேட்டவள், “உங்க மருமகளுக்கு நீங்களே ஆரத்தி எடுக்கறீங்களா அத்தை…?” எனவும் அவள் முறைத்தபடி எழுந்து அறைக்குள் சென்று விட கணேச பாண்டியன் எதுவும் சொல்லாமல் தவிப்புடன் நின்றிருந்தார். அடுக்களை அருகே இரண்டு பணிப் பெண்கள் தயக்கமாய் நிற்க அவர்களிடம் சென்றவள், “இந்த வீட்டு மருமகளுக்கு ஆரத்தி எடுக்கணும், ரெடி பண்ணுங்க…” என்றாள்.

அவர்கள் கணேச பாண்டியனைத் தயக்கத்துடன் நோக்க, அவர் தலையாட்டவும் விரைந்து சென்று ஆரத்தி தட்டுடன் வந்தனர். ஆரத்தி சுற்றி பயத்துடன் நின்ற மந்தாகினியை அழைத்துக் கொண்டு அனைவரும் வீட்டுக்குள் சென்றனர்.

வேறு வழியின்றி கணேச பாண்டியன் அவர்களை வரவேற்று அமர வைத்தவர், எல்லாருக்கும் குடிக்க ஜூஸ் கொடுக்குமாறு பணிப் பெண்ணிடம் சொல்லிவிட்டு, “ஒரு நிமிஷம்…” என மனைவியை அழைக்க சென்றார்.

“பத்மா, என்னதான் என் சித்தி பொண்ணா இருந்தாலும் சுபாஷினி என் தங்கச்சி… அவளும், மாப்பிள்ளையும் பெரியவங்களோட நம்ம வீட்டுக்கு வந்திருக்கும்போது நீ இப்படி ரூமுக்குள்ள வந்து இருக்கறது சரியில்ல… ஏதோ நடந்தது நடந்திருச்சு…” என சமாதானமாய் தொடங்க,

“ஆமா, நடக்காதது நக்கிட்டுப் போச்சு… அதுக்கென்ன இப்ப…?” கணவனிடம் சீறினாள் பத்மாவதி. அவளால் ஓட்டு வீடும், சிறிது விவசாய நிலமும் மட்டுமே சொத்தாகக் கொண்ட  மந்தாகினியை மருமகளாய் ஏற்க முடியவில்லை.

“அதுக்கில்ல பத்மா, என்ன இருந்தாலும் நம்ம உறவுக்காரப் பெரிய மனுஷங்களை மதிக்காம விட்டா நாளைப் பின்ன ஊருக்குள்ள நம்மளை யாரும் மதிக்க மாட்டாங்க…”

“ஆமா, மதிச்சுக் கிழிச்சு மரியாதை கொடுத்ததைத் தான் பார்த்தனே… என் பையனுக்கு இங்கயே எத்தனையோ நல்ல இடத்துல இருந்து சம்மந்தம் வந்துச்சு, நீங்க தான் உங்க தொங்கச்சியோட ஒரே பொண்ணைக் கல்யாணம் பண்ணி வச்சா அவளோட சொத்தெல்லாம் நமக்குக் கிடைக்கும், கடன்ல இருக்கற நம்ம கம்பெனியோட ஊருல அடமானத்துல இருக்கற நம்ம தோப்பு வீட்டையும் மீட்டுடலாம்னு எல்லாம் கனவு கண்டீங்க… எல்லாத்தையும் நாசமாக்கின அந்த மந்தாகினியையும், எல்லாம் தெரிஞ்சவ போல ஆடுற உங்க தொங்கச்சியோட குட்டிப் பிசாசு நந்தினியையும் பார்க்கவே எனக்குப் பிடிக்கல, பொண்ணா அது… ச்ச்சே, ஆங்காரம் பிடிச்சவ…” படபடவென்று பேசிய பத்மாவதியை சமாதானம் செய்தார் கணேசபாண்டியன்.

“பத்மா, நம்ம புள்ளை அவ கழுத்துல தாலி கட்டிட்டான், இனி ஏத்துக்கத் தான வேணும், நீ எதுவும் பேச வேண்டாம், அமைதியா அங்க வந்து நின்னாப் போதும்… எல்லாத்தையும் நான் பேசிக்கறேன், விக்ரமும் அவங்க வரும்போது வீட்டுல இருக்க மாட்டேன்னு கிளம்பிட்டான்… நீயும் வரலைன்னா சரியா இருக்காது…” என்று ஏதேதோ சொல்லி அவளை ஒருவழியாய் வெளியே அழைத்துச் சென்றார்.

அனைவரையும் ஒரு பார்வை பார்த்துவிட்டு குனிந்த தலை நிமிராமல் அமர்ந்திருந்த மந்தாகினி மீது வெறுப்புடன் ஒரு பார்வை வீசிவிட்டு, “வாங்க…” எனப் பொதுவே அழைத்தவள் ஓரமாய் ஒரு சோபாவில் அமர்ந்து கொண்டாள்.

சற்று நேரம் யாரும் பேசாமல் அமைதியாய் கழிய பெரியவர் ஒருவரே பேச்சைத் தொடங்கினார்.

“என்ன கணேசு, மாப்பிள்ளைத் தம்பி எங்க காணோம், வீட்டுல இல்லையா…?”

“ஆ..ஆமா, வேலையா வெளிய போயிருக்கான்…”

“ம்ம்… பொண்ணு கழுத்துல தாலியைக் கட்டி அங்கயே விட்டுட்டு வந்துட்டிங்க, அவ அப்பன் சாவுக்கும் யாரும் வந்து எட்டிப் பார்க்கல, மத்த சடங்கு சம்பிரதாயமும் எதுவும் பண்ணல, இதெல்லாம் நல்லால்லையே…”

அவர் கேட்க பத்மாவதியின் முகம் கோபத்தில் சிவந்தது.

“ஆமா, நாங்க ஆசையாப் பார்த்து கல்யாணம் பண்ணி வச்சு தழையத் தழைய தாலியக் கட்டிகிட்டா உங்க பொண்ணு, அப்படியே தலைல வச்சு கொண்டாடுறதுக்கு…” அவள் சொன்னதும் மந்தாகினியின் கண்கள் உடைப்பெடுத்தது.

“என்னம்மா இப்படிப் பேசற…?”

“பத்மா, கொஞ்சம் அமைதியா இரு, நான் பேசிக்கறேன்…” கணேசபாண்டியன் மனைவியைத் தடுக்க முயன்றும் கேட்காமல் பொரியத் தொடங்கினாள் பத்மாவதி.

“வேற எப்படிப் பேசறதுன்னேன்…? எங்க பையன் படிப்புக்கும், அழகுக்கும் ஊருல எங்கயும் பொண்ணு கிடைக்காமலா அந்த கிராமத்துல வந்து இந்த அழகியைப் பொண்ணு எடுக்க நினைச்சோம்…? ஏதோ ஊருல நமக்குன்னு இருக்கற சொந்தம் விட்டுப் போயிடக் கூடாதுன்னு நினைச்சோம், அதுக்கு இல்லாத, பொல்லாத கதை எல்லாம் கட்டிவிட்டு எங்க பையன் தலைல இந்த விளங்காதவளைக் கட்டி வச்சுட்டிங்க… எங்க மனசு அப்படியே குளுகுளுன்னு ஆயிடுமா என்ன…?” பத்மாவதி சொல்ல பதிலுக்கு,

“அண்ணே, அண்ணி என்ன இப்படிப் பேசறாங்க…” என கணேசபாண்டியனிடம் எதையோ பேச வந்த சுபாஷினியிடம் அதுவரை அமைதியாய் இருந்த நந்தகுமார் கை காட்டினார்.

“இரு சுபா, நான் சொல்ல வந்ததை சொல்லிடறேன்…”

“மச்சான், உங்க ரெண்டு பேர்கிட்டயும் நான் கொஞ்சம் தனியாப் பேசணும்னு நினைக்கறேன்…” நந்தகுமார் சொல்ல மனைவியைத் தயக்கத்துடன் பார்த்த கணேசபாண்டியன்,

“வாங்க மாப்பிள்ள…” எனத் தனியே அறைக்கு அழைத்துச் செல்ல, முறைப்புடனே பத்மாவும் உடன் சென்றாள்.

“மச்சான், தேவியும் எனக்குப் பொண்ணு போலதான்… அவளை வேற வீட்டுப் பொண்ணா நாங்க யாரும் நினைச்சதே இல்ல, அது ஒரு அப்பாவிப் பொண்ணு…”

“ஹூக்கும், அடப்பாவின்னு சொல்ல வச்சவளை அப்பாவின்னு சொல்லாதீங்க….” பத்மா எகிற, கணேச பாண்டியன் நந்தகுமாரைக் கேள்வியாய் பார்த்தார்.

“நடந்த எதையும் மாத்த முடியாது… அவளுக்கும் என்னால முடிஞ்ச அளவு சீர் செய்ய நினைக்கறேன்… முன்னமே நந்தினி கல்யாணத்துக்குன்னு கொடுத்த வரதட்சணைப் பணத்தோட, ஊருல அடமானத்துல இருந்த உங்க வீட்டுப் பத்திரத்தை மீட்டுக் கொண்டு வந்திருக்கேன்… தேவியோட அம்மா நகை முப்பது பவுனோட இருபது பவுன் சேர்த்து ஐம்பது பவுனாக் கொடுக்கறோம்… அவளை உங்க வீட்டு மருமகளா மனசார ஏத்துகிட்டு இதெல்லாத்தையும் வாங்கிக்கணும்…” என்றதும் கிடைத்தவரை லாபம் என நினைத்த கணேச பாண்டியனின் முகம் மலர பத்மாவின் கோபமும் சற்றுக் குறைந்தது.

இருந்தாலும் உடனே இறங்கி வராமல் அவர்கள் மௌனமாய் இருக்க, “அப்பாவையும் இழந்துட்டு தவிச்சுப் போயி நிக்கறவளை நீங்க தான் இனி உங்க வீட்டுப் பொண்ணாப் பார்த்துக்கணும்…” கணேசனின் கையை பிடித்துக் கொண்டு நந்தகுமார் கெஞ்சலாய் சொல்ல அவர் தலையாட்டினார்.

“மாப்பிள்ள, என் தங்கச்சி பொண்ணு இந்த வீட்டு மருமகளா வர முடியலையேன்னு என் மனசுல இப்பவும் வருத்தம் இருக்கத்தான் செய்யுது, என்ன பண்ணறது? நடந்ததை மாத்த முடியாதே… எங்களுக்குப் பிடிச்சாலும், பிடிக்கலைன்னாலும் அந்தப் பொண்ணு தான் இந்த வீட்டு மருமக…” என்றார்.

“ரொம்ப சந்தோஷம் மச்சான், அப்படியே தங்கச்சியும் மந்தாகினியை மனசார ஏத்துக்கணும்…” நந்தகுமார் சொல்ல, பத்மாவும் சற்றுத் தணிந்தாள்.

“சரி, எதிர்பார்க்காம ஏதேதோ நடந்திருச்சு, விடுங்கண்ணே…” எனவும் மலர்ந்தார் நந்தகுமார்.

“எனக்கு இந்த வார்த்தை போதும் மா…” என்றவர் சந்தோஷமாய் வெளியே செல்ல அங்கே பேசிக் கொண்டிருந்தவர்கள் கேள்வியாய் இவர்களைப் பார்க்க சந்தோஷமாய் சொன்னார் நந்தகுமார்.

“எல்லாம் பேசியாச்சு, இனி அவங்க மருமகளை அவங்க தங்கமாப் பார்த்துப்பாங்க, நாம கவலைப்படத் தேவை இல்லை… என்ன மச்சான் சரி தான…”

“ம்ம்… சட்டுன்னு கோபத்துல இவ ஏதோ பேசிட்டா…  பெரியவங்க எல்லாரும் மன்னிக்கணும், இருந்து விருந்து சாப்பிட்டு தான் கிளம்பனும்…”

கணேச பாண்டியன் சொல்ல,

“ஆமா, மன்னிச்சிருங்க… எங்க மருமகப் பொண்ணை நல்லாப் பார்த்துக்க வேண்டியது என் பொறுப்பு…” பத்மாவதி  புன்னகையுடன் அதை ஆமோதிக்க, அவர்களின் மனமாற்றத்துக்குக் காரணம் என்னவென்று தெரியுமாதலால் நந்தினியும், சுபாஷினியும் அமைதியாய் இருக்க மந்தாகினி மெல்ல நிமிர்ந்து நம்ப முடியாமல் பார்த்தாள்.

“அப்புறம் என்ன, உறவுக்காரங்க ராசியாகிட்டா எங்களுக்கும் சந்தோஷம் தான்…” என்றார் ஊர்ப் பெரியவர்.

“மச்சான், இந்த சீர்வரிசை எல்லாம் எங்க வைக்கனும்னு சொல்லிட்டா, ஆளுங்க இறக்கி வச்சிருவாங்க…”

“எல்லாத்தையும் கீழே இருக்க ரூம்லயே வச்சிருங்க…” என்றவர் அவர்களுக்கு உணவுக்கு ஏற்பாடு செய்யும்படி பத்மாவிடம் சொல்ல அவள் போனிலேயே ஹோட்டலில் ஆர்டர் கொடுத்து விட்டாள்.

சாதனங்களைக் கீழ் அறையில் எடுத்து வைத்த பணியாள், மந்தாகினியின் உடைப் பெட்டியைக் கொண்டு வந்து, “இதை எங்கம்மா வைக்கணும்…?” எனக் கேட்க பத்மாவதியை யோசிக்க விடாமல் உடனே  நந்தினி, “அதை விக்ரம் ரூம்ல தான் வைக்கணும், இல்லத்தை…” எனக் கேட்க,

“ஹா… ஆமா, மேல மாடில முதல் ரூம் தான் விக்கியோடது, அங்க வச்சிரு…” என்றார்.

“அத்தை, நான் மகியை, விக்ரம் ரூமுக்கு அழைச்சிட்டுப் போகட்டா…?” நந்தினி கேட்க, பொங்கி வந்த ஆத்திரத்தை மறைத்துக் கொண்ட பத்மா, “தாராளமா அழைச்சிட்டுப் போ, அதான இனி உன் பிரண்டு ரூமும்…” என்றாள்.

தயக்கத்துடன் நின்ற மந்தாகினியை பிடித்து இழுத்துக் கொண்டு மாடிக்கு விக்ரமின் அறைக்கு அழைத்துச் சென்றாள் நந்தினி. அந்த பெரிய அறைக்குள் நுழைந்த மந்தாகினி அதன் நேர்த்தியான அழகைக் கண்டு கண்களை பிரமிப்புடன் விரித்தாள். கட்டிலின் அருகே இருந்த மர மேசை மீது அழகாய் பிரேமுக்குள் சிரித்துக் கொண்டிருந்த விக்ரமின் போட்டோவை ஆவலுடன் நோக்கினாள்.

அழுது முடித்து

அழுந்தத் துடைத்து

அமைதி கொள்வது போல்

அல்லாமல்…

நிரந்தரத் தடம் பதித்து

நித்தியமாய் இதயத்தில்

நிரம்பி விடுகின்றன

நித்தமும் சில கவலைகள்…

 

Advertisement