Advertisement

அத்தியாயம் 16

கரும்பச்சை வண்ணத்தில் அழகிய கல் வேலைப்பாடுகள் கொண்ட டிஸைனர் சேலை அணிந்து, அதற்குப் பொருத்தமான நகைகளுடன், அழகாய் தலை முடியைச் சீவி, அழகு மயிலாய் அவளைத் தயாராக்கி வைத்திருந்தாள் நிகிதா.

பொதுவாகவே நிகிதாவுக்கு அழகுக் கலையில் ஈடுபாடு அதிகம். பியூட்டிஷியன் கோர்ஸ் படிக்க விரும்பியவளைப் பத்மா தான் சம்மதிக்கவில்லை. அதனால் அவளுக்குப் பிடித்த இன்னொரு விஷயமான பாஷன் டிஸைனிங் படிப்பில் சேர்ந்து படித்தாள்.

கிராமத்து அழகியான மந்தாகினியை தனது கைங்கர்யத்தால் நாகரிக யுவதியாய் மாற்றி இருந்தாள் நிகிதா. மகனின் பார்வை மருமகளின் மீதே நிலைத்திருப்பதைக் கண்ட பத்மாவுக்குக் கடுப்பானது.

“ஹூம், எப்படியோ கண்ட பெயின்ட் எல்லாம் பூசி, மூஞ்சில எண்ணெய் வழிய நிக்கற உன் அண்ணியைப் பார்க்கற அளவுக்கு மாத்திட்டியே” என மகளைப் புகழ்ந்தார்.

“அதெல்லாம் ஒண்ணும் இல்லமா. அண்ணி நாச்சுரல் பியூட்டி. என்ன? அவங்களுக்குத் தன்னை அழகாய் காட்டிக்கிறதுல எல்லாம் பெரிய ஈடுபாடு இல்லை. நான் சும்மா லைட்டாதான் மேக்கப் பண்ணினேன். அதுக்கே இப்படி ஏஞ்சல் போல ஜொலிக்கிறாங்க” எனச் சிரிப்புடன் மனதில் உள்ளதைச் சொன்னாள் நிகிதா.

“ஹூக்கும், எனக்கொண்ணும் அப்படி பிரமாதமாய் தெரியலியே” என பத்மா சொல்ல விக்ரமின் பார்வை தேவியின் மீதே நிலைத்திருந்தது.

அவர்கள் தன்னைப் பற்றிப் பேசினாலும் எதையும் காதில் வாங்கிக் கொள்ளாமல் அமைதியாய் நின்றாள் தேவி.

இந்த வேஷம் கட்டுவதில் எல்லாம் அவளுக்கு விருப்பமில்லை.

‘ஏன், சாதாரணமா இருந்தா இந்த லகுட குசல பாண்டியருக்குப் பிடிக்காதோ? ஊருல மஞ்சக்கிளி, மஞ்சக்கிளின்னு உருகுனாரு. இப்ப இங்க வந்ததும் நாகரீகமா பொறப்பட்டா தான் கூட அழைச்சிட்டுப் போவாரோ? இந்த அத்தை என்னைக் கலாய்ச்சிட்டு இருக்கு. அமுக்குனி மாதிரி என்னை சைட் அடிச்சிட்டு நிக்கறதைப் பாரு’ எனக் கணவனின் பார்வை தன்னை ரசனையுடன் பார்ப்பதைக் கண்டு மனதுக்குள்ளேயே கவுன்ட்டர் கொடுத்துக் கொண்டிருந்தாள் தேவி.

“என்னண்ணா? அண்ணிக்கு இப்படி ஓகே தானே?” என விக்ரமிடம் கேட்கப் பார்வையைத் தங்கை மேல் பதித்தவன் அவளும் எங்கோ செல்வதற்குத் தயாராய் புறப்பட்டிருப்பதை அப்போது தான் கண்டான்.

“ம்ம்… நீயும் எங்கயோ புறப்பட்டுட்ட போலருக்கே நிகி?”

“ஆமாண்ணா, என் பிரண்டு ஒருத்திக்கு நாளைக்கு மேரேஜ், விடியக் காலைல முகூர்த்தம், அவ்ளோ சீக்கிரம் ஸ்ரீபெரும்புதூர் போறது கஷ்டம். அதான் பிரண்ட்ஸ் எல்லாரையும் இன்னைக்கே கிளம்பி வரச் சொல்லி இருந்தா. எங்களுக்குத் தங்கறதுக்கு எல்லா ஏற்பாடும் அவ வீட்டுல பண்ணித் தந்திடுவாங்க. நாளைக்கு ஈவனிங் ரிசப்ஷன் முடிச்சிட்டு நாளான்னிக்கு காலைல வந்திடுவோம்…”

“ஹூம், இதெல்லாம் என்ன பழக்கமோ? ராத்திரில வெளி ஆளுங்க வீட்டுல தங்குறது. அப்படி அந்தக் கல்யாணத்துக்குப் போகலைனா தான் என்ன?” எனச் சலித்துக் கொண்டார் பத்மா.

“விடுங்கமா, இந்தக் காலத்துல இதெல்லாம் சகஜம். நம்ம பொண்ணுங்களை எங்கயும் அனுப்பாம வீட்டுல பூட்டி வச்சுக்க முடியுமா? வெளீயூர்ல தான ஹாஸ்டல்ல போயி தனியா இருக்கா. பிரண்ட்ஸோட போறது ஒரு ஜாலிதான், போயிட்டு வரட்டும்” என்றான் விக்ரம் தங்கைக்குப் பரிந்து.
“தேங்க் யூ அண்ணா… கரக்ட்டா சொன்னிங்க” என அவன் கையைப் பிடித்து நிகிதா நன்றி சொல்ல,

“கிளம்பறதுலாம் ஓகே. போற இடத்துல கவனமா இருக்கணும். நிறையப் பேர் வந்து போகற இடம், பாதுகாப்பா இருக்கணும், சரியா?”

“சரிண்ணா, அதெல்லாம் நான் பார்த்துக்கறேன்…”

‘ஹூக்கும், நம்மகிட்ட மட்டும் நம்பியார் முகத்தைக் காட்டிட்டு, அவரு தங்கச்சிகிட்ட மட்டும் சிவாஜி முகத்தைக் காட்டுறதப் பாரு’ என மனதுள் நினைத்தபடி அமைதியாய் நின்றிருந்தாள் தேவி.

“ம்ம்… எப்படி கிளம்பற? டாக்ஸிலயா?”

“இல்லண்ணா, பிரண்ட்ஸ் வந்து என்னைப் பிக்கப் பண்ணிக்கறேன்னு சொல்லிருக்காங்க…” எனவும் தலையசைத்தான் விக்ரம்.

“சரிம்மா, பார்த்துப் போயிட்டு வா. நாங்களும் கிளம்பறோம் மா, குப்தா சார் வெயிட் பண்ணிட்டு இருப்பாரு…” என்றவன் தேவியைப் பார்க்க, “கிளம்பறேன் அத்த, போயிட்டு வர்றேன் நிகி…” எனச் சொல்லிவிட்டு அவசரமாய் அவளது மொபைலைக் கூட எடுக்காமல் விக்ரமைப் பின் தொடர்ந்தாள் தேவி.

மகளுடன் பத்மாவும் அவர்களை வழியனுப்ப வாசலுக்கு வந்தார். விக்ரம் சைடு பார்க்கிங்கில் காரை எடுக்கச் செல்ல நிகிதா அவன் ரிவர்ஸ் எடுக்கும்போது உதவுவதற்காய் உடன் சென்றாள்.

அந்தக் கேப்பில் பத்மா தேவியிடம்,

“என் புள்ள உன்னை ஜோடியா வெளிய கூட்டிட்டுக் கிளம்புறானேன்னு ரொம்பச் சந்தோஷப்படாத. அவனோட ரொம்ப ஒட்டி உறவாடாம கொஞ்சம் எட்டியே நில்லு. போன முறை பார்ட்டில நடந்தது நினைவிருக்கு தான?” என்றவர், அவள் மௌனமாய் ஏறிடவும்,

“அவனுக்கு உன்னைக் கண்டாலே சுத்தமாப் பிடிக்கல, வேற வழியில்லாம தான் கூட்டிட்டுப் போறான். அதனால முன்னாடி அவன் பக்கத்துல ஓடிப் போய் காருல ஏறாம பின்னாடி உக்காரு” என்றார்.

‘ஹூக்கும், நான் என்னவோ முன்னாடி தான் உக்காருவேன்னு அடம் பிடிக்கிற போல. இந்த அத்தை ரொம்பதான் ஓவராய் பேசுது’ என மனதில் நினைத்தாலும் உதடுகள் பூட்டிட்டுக் கொண்டிருந்தது.

விக்ரம் காரை வாசலில் கொண்டு வந்து நிறுத்த பின் கதவைத் திறந்து ஏறப் போனவளை முறைத்தான் விக்ரம்.

“அம்மா, நான் ஒண்ணும் டிரைவர் இல்லை…” என்றான் அன்னையிடம். அதைக் கேட்டு பத்மா திகைக்க, அவரைக் கேள்வியாய் ஒரு பார்வை பார்த்தாள் தேவி.

‘அவளைப் பார்க்கவே பிடிக்கல, என் பொண்டாட்டின்னு கூடச் சொல்லக் கூடாதுன்னு எல்லாம் சொல்லிட்டு இவன் என்ன இப்படிச் சொல்லறான்’ என அவர் யோசித்தபடி நிற்க,

“அண்ணி, முன்னாடி அண்ணன் பக்கத்துல வந்து உக்காருங்க…” என்றாள் நிகிதா.

“இல்ல, நான் பக்கத்துல உக்கார்ந்தா அவருக்குப் பிடிக்காது, இங்கயே உக்கார்ந்துக்கறேன்…” தேவியும் பிகு செய்ய முறைப்புடன் திரும்பினான் விக்ரம பாண்டியன்.

“நான் ஒண்ணும் உன் வீட்டு டிரைவர் இல்லை. உனக்குக் காரோட்டிச் சேவகம் பண்ண… ஒழுங்கா முன்னாடி வந்து உக்காரு…” என்றான் கடுப்புடன். அடுத்த நிமிடம் தேவி முன்னில் அமர்ந்திருந்தாள்.
விக்ரம் காரை எடுக்க அவளது அழகிய முகம் கடுப்பில் கடுகடுவென்று இருந்தது.

கடைக்கண்ணில் அவளைப் பார்த்துவிட்டு சாலையில் பார்வையைப் பதித்தவன், “இப்பதான் உன் மூஞ்சி பேருக்குப் பொருத்தமா இருக்கு” எனக் கிண்டலாய் சொல்ல அவள் எதுவும் சொல்லாமல் முறைத்தாள்.

“ஹா, அதேதான்… அப்படியே மங்கி தேவி மாதிரியே இருக்கு…” என்றவனை ஆத்திரத்துடன் பார்க்கக் கிண்டலாய் சிரித்தவன்,

“இப்படி மூஞ்சிய வச்சிட்டு வந்தா உன்னைக் கட்டிட்டு வந்தேன்னு யாரும் சொல்ல மாட்டாங்க. உன்னைக் கடத்திட்டு வந்தேன்னு தான் நினைப்பாங்க… ஒழுங்கா அங்க போயிட்டு வர்ற வரைக்கும் மூஞ்சியை சிரிச்ச போலவே அழகா வச்சுக்கணும்…” என்றான் அதிகாரமாய்.

அதைக் கேட்டு ஆத்திரமாய் வந்தாலும் அடக்கிக் கொண்டு, “ஈஈஈ… போதுமா?” என்றாள் உதட்டைச் சிரித்தபடி காண்பித்து.

அவளது செய்கையை மனதில் ரசித்தாலும் காட்டிக் கொள்ளாமல், “தட்ஸ் குட்…” என்றவன் மியூஸிக் பிளேயரில் பாட்டைத் தட்டினான். அவனது பிளே லிஸ்ட்டில் பாதியில் நிறுத்தி இருந்த பாடல் தொடர்ந்து ஒலித்தது.

பூமாலைகள் கொஞ்சும் பாமாலைகள் கெஞ்சும்
உனை மனதால் நினைத்தால் அணைத்தால் அது இனிமை…
தோள் சேர்ந்திடும் கங்கை செவ்வாழையின் தங்கை
எனை ஒருநாள் பலநாள் தொடர்ந்தால் அது புதுமை…

கோவிலுக்குள் ஏற்றி வைத்த தீபமல்லவா
காதலுக்குக் காத்திருந்து காட்சி தந்ததோ
இனி வருவாய் தருவாய் மலர்வாய்…
எனை உயிராய் உறவாய் தொடர்வாய்…
இறுதி வரிகளை அவனும் உடன் சேர்ந்து பாடிக் கொண்டே அடிக் கண்ணால் அருகிலிருந்த மனையாளைப் பார்த்தான் விக்ரம்.

அவளோ, குனிந்து கை விரல்களில் நிகிதா போட்டு விட்டிருந்த நெயில் பாலீஷைப் பார்த்தபடி அமர்ந்திருந்தாள். ஆனாலும், விக்ரமும் அப்பாடலைச் சேர்ந்து பாடியதைக் கவனிக்காமல் இல்லை. முகம் மட்டும் சிரிப்பைத் தொலைத்திருந்தது.

மனதில் நந்தினியின் நினைவு வந்தது. ‘அடுத்த வாரம் அவளுக்குப் பெண் பார்க்க வருகிறார்கள். இந்த முசுட்டு லகுட குசல பாண்டியரு நம்மை ஊருக்கு அழைச்சிட்டுப் போகுமா? இப்படி ஒரு விசேஷம் நடக்கும் போது நான் போகாம எப்படி. எனக்காக அவங்க எல்லாரும் எத்தனை செய்திருக்காங்க, இவருகிட்ட எப்படிக் கேக்கறது?’ என யோசனையுடன் அமர்ந்திருந்தாள்.

அதைக் கவனித்தவன் வேண்டுமென்றே வம்பிழுத்தான்.

“என்ன” அடுத்து யார் வாழ்க்கையைக் கெடுக்கலாம்னு தீவிர யோசனையோ?” நக்கலாய் உதட்டைச் சுளித்துக் கேட்டவனைத் தீயாய் முறைத்தாள் தேவி.

அவளது முகமே கோபத்தில் சிவந்துவிட, அதை ரசித்துக் கொண்டே, “நைஸ், நீ வெக்கப்பட்டு உன் முகம் சிவந்து பார்க்கலைன்னாலும், கோபத்தில சிவக்கற உன் முகம் கூட நல்லாதான் இருக்கு…” என்றவனைக் கடுப்புடன் நோக்கினாள் அவனது சகதர்மினி.

“உங்களுக்கெல்லாம் கொஞ்சம் கூட மனசுல நல்லதே தோணாதா? அடுத்தவங்க குடியைக் கெடுக்கறது எல்லாம் எங்க பழக்கம் இல்ல. அதெல்லாம் மெத்தப் படிச்சுட்டு, உதட்டளவுல மட்டும் பாசமாப் பேசிட்டு வேசம் போட்டுட்டு இருக்கறவங்க பழக்கம். என்னைப் போலக் கிராமத்து ஆளுங்களுக்கு மனசுல உள்ளதை அப்படியே பேசித்தான் பழக்கம். யாரையும் கெடுத்திட்டு, ஒண்ணும் தெரியாத மாதிரி வேற ஒரு பொண்ணைக் கல்யாணம் கட்டிக்கவெல்லாம் உங்களைப் போல டவுனுக்காரங்களுக்கு தான் வரும்.” சாட்டையாய் சொடுக்கினாள் தேவி.

ஒரு நிமிடம் விக்ரமின் முகமே கோபத்தில் மாறிப் போனது.

அவளை முறைத்தவன், “செய்யாத தப்புக்கு ஆராயாம தண்டனை கொடுக்கிறது தான உங்கப் படிக்காத கிராமத்து வழக்கம். இங்கெல்லாம் எல்லாத்தையும் விசாரிச்சிட்டு தான் முடிவுக்கு வருவோம்…”

“ஆமா, ஆராய்ஞ்சு முடிச்சு முடிவுக்கு வரதுக்குள்ள அந்தப் பொண்ணு கைலயே குழந்தையோட நிப்பா. அப்பக்கூட ஆராய்ச்சியை முடிச்சுத் தீர்ப்புச் சொல்ல மாட்டாங்க. நாங்களும் எத்தனை நியூஸ்ல பார்க்கறோம்…” என்றாள் அவளும் விடாமல்.

கிளம்பும்போது இருந்த லகுவான மனநிலை மெல்ல மாறுவதை உணர்ந்த விக்ரம், அவளைக் கோபமாய் முறைத்துவிட்டு, “ஆமா, நீ ரொம்பப் பார்த்துக் கிழிச்ச… உங்கிட்ட எனக்கென்ன பேச்சு?” என முகத்தைத் திருப்ப அவளும் கோபத்துடனே அமைதியானாள்.

தேவிக்கே தன்னை எண்ணிச் சற்று ஆச்சரியமாய் தான் இருந்தது. இத்தனை நாளாய் மனதுக்குள் குற்றவுணர்ச்சியில் மருகிக் கொண்டு, தன்னைத் தானே குற்றப்படுத்திக் கொண்டு இருந்தவளுக்கு, முந்தினம் விக்ரம் பேசியதும், மனதிலுள்ளதைக் கொட்டி விடவே பாரம் குறைந்தது போல் தோன்றியது.

அதோடு விக்ரம் அவளிடம் அத்து மீறியதால் தான், இப்போது நாம் கர்ப்பமாய் இருக்கிறோம் என நினைத்தவளுக்குத் தனது கல்யாணம் அவசரத்தில் நடந்தாலும் அவசியத்தோடுதான் நடந்திருக்கிறது என மனது உறுதி கொள்ள, ‘தப்பு செய்த இவனே கம்பீரமாய் இருக்கும்போது எந்தத் தப்பும் செய்யாத நான் ஏன் அடங்கிப் போக வேண்டும்’ என அவளது இயல்பான துடுத்துத் தனம் மெல்ல எட்டிப் பார்க்கத் தொடங்கியது.

அதன்பின் இருவரும் மௌனமாகவே பயணத்தைத் தொடர, எஸ்பிபி மட்டும் கணீரென்று பாடிக் கொண்டிருந்தார்.

முக்கால் மணி நேரப் பயணத்தில் குப்தாவின் வீடு இருந்த ஏரியாவுக்குள் கார் நுழைந்தது.

“சரி, குப்தா சார் வீடு வந்திருச்சு. அங்கயும் இப்படி மூஞ்சியத் தூக்கிட்டு உக்காராம கொஞ்சம் இயல்பா சிரிச்சுப் பேசு. இல்லன்னா, அவங்க என்னைதான் இப்படி ஒரு சிரிக்கா மூஞ்சியைக் கல்யாணம் பண்ணி இருக்கேன்னு தப்பா நினைப்பாங்க…” எனச் சொல்ல அதற்கும் முறைத்தவள்,

“ஹூக்கும், திட்டறதெல்லாம் திட்டிட்டு இப்பச் சிரிச்சிட்டு நடிக்கச் சொன்னா, எனக்கு அதெல்லாம் வராது…” என உதட்டைச் சுளித்தவளை ஒரு பார்வை பார்த்தவன், அந்த ஈரம் பளபளக்கும் உதட்டிலிருந்து கண்ணைக் கஷ்டப்பட்டு விலக்கி, சாலையைப் பார்த்தவன் சட்டென அவளை நெருங்கி அவள் இதழில் இதழ் பதித்து விலகினான்.

அதில் அதிர்ந்து போனவளின் கண்கள் அகல விரிந்து கொள்ள, நடந்ததை நம்ப முடியாமல் ஸ்லோ மோஷனில் அவனை நோக்கித் திரும்பியவளிடம், “அங்க வந்து சிரிக்காம இருந்தின்னா, பப்ளிக்கா எல்லார் முன்னாடியும் கிஸ் அடிப்பேன், மைண்ட் இட்…” என ஒற்றைப் புருவத்தை மேலேற்றிச் சொல்ல, அவனையே அதிர்ச்சி விலகாமல் பார்த்தவள் சரியென்று வேகமாய் தலையாட்டினாள்.

மாலை வீட்டுக்கு வரும்போதே நிறைய ஸ்வீட்ஸ், பழங்கள் என வாங்கிக் காரில் வைத்திருந்தான் விக்ரம். ஒரு பெரிய பங்களாவின் கேட் முன்பு வண்டியை நிறுத்தி ஹாரன் அடிக்க, அவனை முன்பே பரிச்சயமிருந்த செக்யூரிட்டி ஓடி வந்து கேட்டைத் திறந்தார்.

போர்ட்டிகோவில் காரை நிறுத்தியவன், “இறங்கிக்கோ பேபி…” எனச் சொல்ல அவளுக்கு அடுத்த ஷாக். அதற்குள் கார் சத்தம் கேட்டு குப்தாவும் அவர் மனைவியும் வாசலுக்கே வந்து அவர்களை வரவேற்றனர்.

“அரே மை டியர் பாய், ஆவோ பேட்டா… ஆவோ… ஆவோ பேட்டீ” என வாய் நிறையப் புன்னகையுடன் பலமாய் வரவேற்றார் குப்தா சேட்.

வடக்கத்திய முறையில் சேலை கட்டி, தலையில் முந்தானையால் முக்காடு போட்டிருந்த அவரது மனைவி சுண்டினால் ரத்தம் வரும் ரோஸ் நிறத்தில் இருந்தார். அடர் ரோஜா நிறத்தில் அவரது இதழில் போட்டிருந்த லிப்ஸ்டிக், பார்ப்பதற்குக் கண்ணை உறுத்தினாலும் அவருக்கு அழகாகவே இருந்தது.

அவரும் அன்போடு “ஆவோ பேட்டி” எனக் காரிலிருந்து இறங்கிய தேவியை அழைக்க, அவர்களைக் கண்டதும் இயல்பாய் கை குவித்து, “வணக்கம் சார், மேடம்…” என்றாள் தேவி.

“ஹேய், நமஸ்கார் பேட்டீ… விக்ரம், உன் போண்டாடீக்கு நல்ல மர்யாதை” எனப் புகழ்ந்தவர் அவனை அணைத்துக் கொண்டார்.

“நிங்கிள் நம்ம வீட்டு மேலே வந்ததில் நம்க்கீ ரொம்ப சந்தோஷம்” என்றவர் இருவரையும் அழைத்துச் சென்று ஹாலில் அமர வைத்தார். ஹாலே பெரிய வீடு அளவுக்குப் பெரிதாய் இருந்தது. சோஃபாவில் அமர்ந்ததும் குஷன் அவர்களை உள்வாங்கிக் கொண்டது.

மேலே குலை குலையாய் தொங்கிய சாண்ட்லியர் விளக்குகளையும், ஹாலை அலங்கரித்திருந்த அழகான ஓவியங்களையும் பிரமிப்புடன் பார்த்தாள் தேவி. வெள்ளைப் பளிங்குச் சுவர்கள் பளபளத்தன. இதுவரை இப்படி ஒரு வீட்டை அவள் நேரில் கண்டதில்லை. சினிமாவில் மட்டுமே பார்த்திருக்கிறாள். அவர்களையும், அவர்கள் பேசிய டமிலையும் முதலில் வியந்து பார்த்த தேவி பிறகு புரிந்து கொண்டாள். இருவருக்கும் குப்தாவின் மனைவி சுஷ்மிதா ஜூஸ் கொண்டு வந்து கொடுக்க வாங்கிக் குடித்தனர்.

குப்தாவின் மகள் குஷி, தொடையை இறுக்கிப் பிடித்த ஷார்ட்ஸும், வயிறு தெரியும் படியான டாப்ஸூம் அணிந்து, மாடியிலிருந்து இறங்கி வந்தவள் விக்ரமைக் கண்டதும் மலர்ந்தாள். அழகாய் இருந்தாலும் அவளது அரைகுறை ஆடை தேவியை முகம் சுளிக்க வைக்க, முயன்று தன் முகத்தை இயல்பாக வைத்துக் கொண்டாள். ஆனால், அடுத்து குஷி செய்த செயலில் அவளது முகம் அஷ்ட கோணலாய் மாறிப் போகத் திகைப்பில் கண்களை அகல விரித்தாள்.

நேராய் அவர்களிடம் வந்த குஷி விக்ரமைக் கண்டதும், “ஹாய் விக்கி” என ஓடி வந்து அவன் அருகே சோஃபாவில் அமர்ந்து அவனை இடுப்போடு அணைத்துக் கொண்டாள்.

“ஹாய் குஷி, ஹவ் ஆர் யூ?”

“யா, ஐம் வெரி சூப்பர். இதான் உன் ஒயிஃபா?” என்றாள் தேவியைப் பார்த்துக் கேள்வியுடன்.

“எஸ், ஹவ் இஸ் ஷீ?” என்றான் விக்ரம் அவளிடம் சிரிப்புடன்.

“யா குட், வெரி ஹோம்லி லுக், நைஸ்…” என்றவள் தேவியிடம் கை நீட்டி, “ஹாய், ஐ ஆம் குஷி…” எனச் சொல்ல, அதுவரை குஷியின் செயலில் அதிர்ந்து அமர்ந்திருந்த தேவிக்கு என்ன சொல்லுவதென்றே ஒரு நிமிடம் புரியவில்லை.

“ம்ம், நா..நான்… தேவி…” என்றவள் தயக்கத்துடனே குஷியின் கையைப் பற்றிக் குலுக்க குஷி ஸ்நேகமாய் அவளிடம் சிரித்தாள்.

“ஷீ ஈஸ் வெரி ஷை…” என்றவளிடம், விக்ரம் ஆமோதிப்பாய் தலையாட்டினான்.
“தென் விக்ரம், ஹவ் ஈஸ் யுவர் பிஸ்னஸ்…” குப்தா கேட்க,

“கோயிங் வெல் சார்…” என்றவன் பிஸினஸ் ரீதியாய் அவரிடம் பேசத் தொடங்க தேவிக்கு அங்கே இருக்கவே மூச்சு முட்டியது.

“தேவி, கம்… வீட்டே சுட்டிக் காத்தறேன் வா…” எனக் குஷி சொல்ல, இப்படி அவள் தமிழைக் கொல்வதற்கு இங்கிலீஷே பேசலாம் எனத் தோன்றியது தேவிக்கு. இருந்தாலும் அவர்களின் பிஸினஸ் பேச்சைக் கேட்கப் பிடிக்காமல் குஷியுடன் சென்றாள். உண்மையிலேயே பிரம்மாண்ட வடிவமைப்புடன் பார்த்துப் பார்த்துக் கட்டியிருந்தனர்.

“ஸாரி, என்கு டமில் நல்லவே வராது. நானு மும்பைலே தான் தாதீ மா வீட்லே தங்கிப் படிச்சிட்டு இருந்தாச்சு. விக்கியே என்க்கி நல்லாத் தெர்யும். ஹீ ஈஸ் வெரி பிரண்ட்லி. நான் இங்கே வரும்போடு விக்கி கூடே தான் சுத்திட்டு இருப்பே… எங்க ரெண்டு பேரு ஃபாதரும் பிஸினஸ் பிரண்ட்ஸ் யூ நோ… விக்கிகிட்ட நிறியே டாலன்ட் இர்க்கி. என்க்கு அவனே ரெம்ப ரெம்பப் பிடிக்கும்…” என மனதில் உள்ளதை மறைக்காமல் சொல்ல தேவிக்கு அவளை ஏனோ பிடித்துப் போனது.

“இனி, நம்பளும் பிரண்ட்ஸ், ஓகே…” எனச் சிரித்தவளிடம் நட்புடன் சிரித்தாள். வீட்டைச் சுற்றிக் காண்பிக்க, ஒவ்வொரு அறையும் மிகப் பெரியதாகவும், அறைக்குள் இருந்த ஒவ்வொரு பொருளும் விலை மதிப்பாகவும் அவர்கள் செல்வச் செழிப்பைக் காட்டுவதாய் இருந்தது.

இறுதியில் இருவரும் மாடியில் இருந்த நீச்சல் குளத்திற்கு வர, அந்த நீலநிற வெள்ளம் நிறைந்த சின்னக் குளத்தை வியப்புடன் பார்த்தாள் தேவி. இயற்கையாய் ஓடும் ஆற்று நீரில் குளித்துப் பழகியவளுக்கு இந்தத் தேக்கி வைத்த நீரில், எப்படிக் குளிப்பார்களோ எனத்தான் தோன்றியது. நேரம் இருட்டத் தொடங்கியிருக்க, சிலுசிலுவென்ற காற்று இருவரையும் சுகமாய்த் தழுவ, குஷி இரு கைகளையும் மார்புக்குக் குறுக்கே கட்டிக் கொண்டு நின்றாள்.

“யூ ஆர் வெரி லக்கி தேவி. விக்ரம் ஈஸ் லவ்விங், நாலட்ஜபிள் அண்ட் கேரிங் பர்ஸன். ஆக்ச்சுவலி, என்க்கு அவன் மேலே பியார், பிரேம, லவ் எல்லாம் இருந்துச்சு. பட், எங்க ஃபாமிலி சிச்சுவேஷன், நீ கேட்டிருக்கியா ராஜ பரம்பரே… அதான் எங்கள்து… எங்க ராயல் ஃபாமிலி பாக்ரவுண்ட், ஸ்டேட்டஸ் எல்லாம் யோசிச்சு, இது சரி வராதுன்னு ஸ்டார்ட்டிங்லே அந்த லவ்வே தூக்கிப் போட்டுட்டேன்… சோ, இப்ப என் மன்சிலே பிரண்ட்ஷிப் மட்டும்தான் இர்க்கீ… இது விக்ரம்கீ தெர்யாது, யாருக்கும் தெர்யாது. என்னவோ, உன்கிட்டே ஷேர் பண்ணத் தோணுச்சு…” எனச் சொல்ல தேவி ஸ்தம்பித்து அவள் சொல்லுவதைக் கேட்டிருந்தாள்.

விக்ரம் போல ஒருத்தனை யாருக்குதான் பிடிக்காது. தேவியும் கூட இயல்பாய் அவனை நேசிக்கத் தொடங்கினவள் தானே. கரும்புக்குக் கணு தோஷம் என்பது போல், அவனிடம் உள்ள குடிப்பழக்கம் தானே அவனது தோஷமாய் போனது. அதுதானே அவர்கள் வாழ்க்கையை எதிரும், புதிருமாய் மாற்றி வைத்திருக்கிறது.

என்னவோ குஷி சொன்னதெல்லாம் கேட்டும் அவள் மீது கோபமோ, பொறாமையோ எந்த உணர்வுமே தேவிக்குத் தோன்றவில்லை. குஷியின் மனதில் எந்தக் கள்ளத்தனமும் இருப்பதாகவும் தெரியவில்லை. இயல்பாய் அவள் மனதைச் சொன்னது போலவே இருந்தது.

தேவி யோசனையுடன் நிற்பதைக் கண்டவள், அவள் கையைப் பற்றிக் கொண்டு, “ஸாரி தேவி, நீ என்னே தப்பா நினைக்க வேணாம். அது ஜஸ்ட் பாஸ்ட். ஐ அம் வெரி கிளியர் ஆஃப் மை பியூச்சர். ஓகே, இருட்டு ஆகிருச்சு. கீழே போலாமா?” எனக் கேட்க,

“நோ குஷி, நான் உன்னைத் தப்பா நினைக்கல…” எனவும் நிம்மதியுடன் அவள் படியில் இறங்கத் தொடங்க, தேவியும் ஒரு பெருமூச்சுடன் அவளைப் பின்தொடர்ந்தாள்.

Advertisement