Advertisement

அத்தியாயம் 15

தேவி கண்மூடிப் படுத்திருக்க, சட்டென்று அவள் கழுத்தில் ஒரு குறுகுறுப்புத் தோன்றியது.

என்னவோ ஏதோவென்று கண்ணைத் திறந்தவளின் முகத்தருகே, மிக அருகில் தெரிந்த விக்ரமின் முகத்தைக் கண்டு அதிர்ச்சியில் கத்தப் போக, குரல் வெளியே வரவே இல்லை. அதற்குள் அவளது இதழ்கள் அவன் இதழால் சிறை செய்யப்பட்டிருந்தன.

அவனைத் தன்னிடமிருந்து விலக்க முயன்றவள், தள்ளி விட நினைக்க அவனது நெருக்கமும், இதழ் அணைப்பும் இன்னும் கூடியது. கைகளால் அவன் முதுகில் அடிக்க அவனது இரும்புக் கைகள் சட்டென்று அவளது மெலிந்த வளைக் கைகளைப் பற்றிக் கொண்டன.

எதுவும் செய்ய முடியாமல் திணறியவள் அவனது ஆழ்ந்த முத்தத்தை ஏற்கவும் முடியாமல், விலக்கவும் முடியாமல் கண்ணை இறுக்க மூடிக் கொண்டாள். என்னதான் அவளுக்கு மனதில், அவனது செயலில் விருப்பம் இல்லாமல் இருந்தாலும், வெக்கம் கெட்ட உடம்பு என்னவோ அந்த முத்தத்தின் இன்பத்தில் திளைக்கத் தொடங்கியது.

உடலெங்கும் ஹார்மோன்களின் சுகமான நர்த்தனங்கள். மெல்ல தன் கட்டுப்பாட்டை இழக்கத் தொடங்கியவள், அந்த முத்தத்தில் மூழ்கத் தொடங்குகையில் மூச்சு முட்டித் தவித்தாள்.

மெல்ல அவள் இதழில் இருந்து விலகியவன் அவள் முகம் பார்க்க, உணர்ச்சியின் போராட்டத்தில் கண்ணை மூடிக் கிடந்தவளுக்கோ, கண்ணைத் திறந்து அவன் முகத்தைப் பார்க்கவே கூசியது.

மூச்சை இழுத்து விட்டவள், வலித்த இதழை மெல்ல நாவால் வருட, ரத்தம் பொடிந்திருக்க வேண்டும். ஆனாலும், அதுவும் ஒரு வகை போதை வஸ்து போல இனிக்கவே செய்தது.
தன் அருகில் மல்லாந்து கிடந்தவனின் மூச்சுக் காற்று அவள் கழுத்தை உரச, அந்தத் தீண்டலுக்கே அவளது பெண்மை தீப்பற்றிக் கொள்ளும் போலத் தோன்றியது. தன்னையே கட்டுப்படுத்த முடியாத அந்தச் சூழ்நிலையை, மனம் விரும்பவும் முடியாமல், வெறுக்கவும் முடியாமல் கண்ணோரம் உப்புக் கரித்தது.

கண்ணை மட்டும் இறுக மூடியே கிடந்தாள் பெண்ணவள். அந்த மூச்சுக் காற்று இன்னும் நெருங்கி அவள் நாசியை வருடிக் கண்ணோரம் துளிர்த்த கண்ணீரில் இதழ்களைப் பதித்தது.

“சாரிடி மஞ்சக்கிளி…” கிசுகிசுப்பாய் அவள் செவிகளை உரசியவாறு ஒலித்த அவனது குரல், அவள் உறுதியைக் குலைக்க கண்கள் கரகரவென்று கண்ணீரை வெளியேற்றியது.

“ஹேய், நான் வேணும்னு எதுவும் பண்ணல, அன்னைக்கு இருந்த சூழ்நிலைல உன்னைக் காப்பாத்தப் போயி, என்னை அறியாமலே உன் மேல உள்ள லவ்வுல ஏதேதோ நடந்திருச்சு. உனக்கும் என்னைப் பிடிக்கும் தான?” காதலுடன் மென்மையாய் ஒலித்தது விக்ரமின் குரல்.

அதற்கும் அவளிடம் அழுகை மட்டுமே பதிலாய் வந்தது.

“இப்படி அழுதிட்டே இருந்தா என்ன பண்ணறது? ஏதாவது சொல்லு”

“ந..நந்து பாவம்… அவ எ..எனக்காக தான், அப்படி…” என மேலே சொல்ல முடியாமல் தேம்பினாள்.

கண்ணிலிருந்து சூடாய் இறங்கிய கண்ணீர் தேவியின் கன்னத்தை நனைக்க, முகத்தில் ஏதோ ஈரமாய் உணர்ந்தவள் சட்டென்று கண்ணை விழித்தாள். உடலெங்கும் வியர்த்து ஊற்றப் படுக்கையில் இருந்து திடுக்கிட்டு எழுந்து அமர்ந்தவள் திருதிருவென்று விழித்துச் சுற்றிலும் நோக்க, இத்தனை நேரம் கண்டதெல்லாம் கனவென்று புரிய மனம் சொல்லவொனா வேதனையில் துடித்தது.

திரும்பி விக்ரமின் கட்டிலை நோக்க, அவனோ இரவெல்லாம் உறக்கம் தொலைத்து, ஏதேதோ யோசித்தபடி தேவியைப் பார்த்துக் கொண்டே படுத்திருந்தவன் சற்று முன்பு தான் உறங்கி இருந்தான்.

சுவர் கடிகாரம் மணி ஐந்தாகி விட்டதைச் சொல்ல, கண்ட கனவே தேவியின் கண்ணுக்குள் நின்றது. அவிழ்ந்திருந்த கூந்தலை முடிந்து கொண்டவள், ஒரு பெருமூச்சுடன் எழுந்து படுக்கையை மடக்கி வைக்கப் போகச் சட்டென்று தலை சுற்றுவது போல் தோன்றியது.

அப்படியே தலையைப் பிடித்துக் கொண்டு அமர்ந்தவளுக்கு ஒரு மாதிரி சோர்வாய் இருந்தது. சில நிமிடங்களில் தன்னை நிதானப்படுத்தி எழுந்தாள். மாற்று உடையை எடுத்துக் கொண்டு குளியலறைக்குள் நுழைந்தாள். மனதின் வெப்பத்தைப் பூந்தூறலாய் தேகம் தழுவிய ஷவரின் தண்ணீரால் தணிக்கவே முடியவில்லை.

மனம் தள்ளிப் போன நாள் கணக்கை யோசித்தது.

அவள் விலக்காக வேண்டிய நாளிலிருந்து ஒரு மாதத்திற்கு மேல் ஆகியிருந்தது. சோப்பை எடுத்து உடலில் தேய்த்தவளுக்கு உடலெங்கும் முன்னை விடச் சற்று மென்மையானது போல் தோன்றியது.

மார்பகங்களில் கூட முன்பை விட ஒரு மென்மையை உணர்ந்தாள் தேவி. தன் உடல் மாற்றங்களை யோசித்துக் கொண்டிருந்தவளுக்கு சட்டென்று குமட்டியது. வாந்தி வருவது போல் தோன்ற வயிற்றைப் பிடித்துக் கொண்டாள்.

‘இ..இதென்ன, என் உடம்புல ஏதேதோ மாற்றம் தெரியுது. அப்ப அந்தக் கிட்ல வந்த ரிஸல்ட் சரிதானா? நான் கர்ப்பமாய் தான் இருக்கேனா? அன்னைக்கு என்னை எதுவுமே பண்ணலன்னு அவர் சொன்னதெல்லாம் பொய்யா?’ அவள் மனம் கோபத்திலும், வேதனையிலும் துடித்தது.

‘அன்று நந்தினி மட்டும் ஒரு முடிவுக்கு வந்து என்னை இவருக்குக் கல்யாணம் செய்து வைக்காமல் இருந்திருந்தா இப்ப என் நிலமை என்னாகியிருக்கும்? கல்யாணத்துக்கு முன்னயே கர்ப்பமாகி, குழந்தையைச் சுமக்கறேன்னு ஊரு உலகம் என்னை எத்தனை அசிங்கப் படுத்திப் பேசி இருக்கும்? செய்யறதெல்லாம் செய்துட்டு, நான் உன்னைக் காப்பாத்த தான் அப்படி செஞ்சேன்னு எந்த மூஞ்சியை வச்சிட்டு இந்த மனுஷன் சொல்லுறாரோ?’ யோசிக்க, யோசிக்கக் கோபமும், ஆதங்கமும் அவள் நெஞ்சை வாட்டியது.

‘பாவம் நந்தினி, இந்தக் கல்யாணம் நடந்திருந்தா அவ வாழ்க்கையும் தான பாதிக்கப்பட்டிருக்கும். இத்தனை பெரிய துரோகத்தைப் பண்ணிட்டு, எங்க ரெண்டு பேரையும் குத்தம் சொல்ல எப்படிதான் மனசு வந்துச்சோ? என்னதான் குடி போதையா இருந்தாலும், இப்படி ஒரு பொண்ணுகிட்ட நடந்துக்கறவன் எப்படி நல்லவனா இருப்பான்? இவனையா என் மனசு விரும்பத் தொடங்குச்சு?’

மாறி மாறிக் கேள்விகள் அவள் மனதைத் துளைக்க விக்ரம் மேல் இருந்த கோபம் வெறுப்பாய் மாறத் தொடங்கியது. வெகுநேரம் ஷவர் அடியில் நின்றதில் தேகம் குளிரத் தொடங்கக் குளியலை முடித்து வெளியே வந்தாள் தேவி.

விக்ரம் அப்போதும் உறக்கத்திலிருக்க அவனை ஒரு வெற்றுப் பார்வை பார்த்துவிட்டு, சேலையை உடுத்துக் கொண்டவள் கண்ணாடி முன் நின்றாள்.

இங்கே வந்தபின் கண்ணாடியில் அவள் முகத்தை நின்று சரியாய் பார்க்கக் கூட முடியவில்லை. தலையிலிருந்த டவலை எடுத்துவிட்டு முடியைத் துவட்டத் தொடங்கினாள்.

அதிலிருந்த தண்ணீர்த் துளிகள் சில பன்னீர்த் துளிகளாய் மாறி உறங்கிக் கொண்டிருந்த விக்ரமின் முகத்தில் விழ, அதில் உணர்ந்தவன் கண் விழித்தான்.

அவனது மஞ்சக்கிளி, பச்சைக்கிளியாய் சேலையில் நின்றிருக்க, அவன் மனதில் சட்டென்று ஒரு இதம் பரவியது. இரவெல்லாம் யோசித்ததன் விளைவாக, தேவியின் மீதிருந்த கோபம் சற்றே குறைந்திருந்தது.

என்னதான் இருந்தாலும் தனியே பேச வேண்டிய ஒரு விஷயத்தை ஊர் கூடிய சபையில் சொல்லி, தன்னைக் குற்றவாளி போல் ஒரு காட்சிப் பொருளாய் நிறுத்திய நந்தினியை அவன் மன்னிக்கத் தயாரில்லை. ஆனால், அதே நேரத்தில் தான் தேவியின் இதழில் முத்தமிட்டதைத் தவிர வேறு எந்த அத்து மீறலும் செய்யவில்லை என்றே நம்பினான்.

தனக்கு முதுகு காட்டி நின்று தலை துவட்டிக் கொண்டிருந்த தனது மனையாளின் மீது, முதன்முதலாய் உரிமையுடன் படிந்தது அவனது ரசனைப் பார்வை. பச்சை நிறக் காட்டன் புடவையில் சின்னச் சின்னப் பூக்கள் சிதறி இருக்க அதை நேர்த்தியாய் உடுக்காமல் ஏனோ தானென்று சுத்தியிருந்தாள் தேவி.

விக்ரமுக்கு எப்போதும் உடுக்கும் உடையில் ஒரு நேர்த்தி இருக்க வேண்டும். அவனிடம் சில குற்றம், குறைவுகள் சுபாவத்தில் இருந்தாலும் நிறைய நல்ல விஷயங்களும் இருந்தன.

‘ப்ச். அந்தச் சேலையைக் கொஞ்சம் ஒழுங்கா கட்டினாதான் என்ன? முக்காக் காலுக்குத் தூக்கிக் கட்டிட்டு ஒழுங்கா மடிப்பெடுக்காம சும்மா போர்வை போலச் சுத்தினா? மஞ்சக்கிளி அழகுதான். ஆனா, அவளோட டிரஸ்ஸிங் சென்ஸ் தான் அழகைக் குறைச்சுக் காட்டுது. அன்னைக்குப் பார்ட்டிக்கு வரும்போது எவ்ளோ அழகா டிரஸ் பண்ணி இருந்தா. அதே போல எப்பவும் பண்ணறதுக்கு என்னவாம்?’ என யோசித்தபடி அவளைப் பார்க்க, திரும்பியவள் விக்ரம் தன்னையே பார்த்தபடி கிடப்பதை உணர்ந்து காண்டானாள்.

‘ச்சே, பார்க்கற பார்வையைப் பாரு. கண்ணால பார்த்தே கர்ப்பம் ஆக்கிருவார் போல. ஆனா, சொல்லறதெல்லாம் நாந்தான் அடுத்த ஸ்ரீராமன்ங்கற ரேஞ்சுக்கு தான்’ என நினைத்தவள் அங்கிருந்து நகரப் போக அவளை நிறுத்தினான் விக்ரம்.

“டீ, எனக்கு ஸ்ட்ராங்கா ஒரு டீ கொண்டு வா…” என்னவோ அவளிடம் சாதாரணமாய் இன்னும் பேச முடியவில்லை அவனால்.

“ம்ம்…” என்றவள் நகர்ந்தாள்.

இவள் அடுக்களைக்குள் செல்கையில் விஜயாக்கா பாலைக் காய்ச்ச அடுப்பில் வைத்திருந்தார்.

“தேவிம்மா, கொஞ்சம் அடுப்பைப் பார்த்துக்கறிங்களா? நான் பெரிய மேடம் எழுந்து வரதுக்குள்ள வாசலைப் பெருக்கிட்டு வந்திடறேன். காய்கறி வாங்க மார்க்கெட் வேற போகணூம்.”

“சரிக்கா, நீங்க போங்க. நான் பார்த்துக்கறேன்…” என்றவள் விஜயா செல்லவும் விக்ரமுக்கு டீ தயாரிக்கத் தொடங்கினாள்.

‘பாண்டியருக்கு டீ ஸ்ட்ராங்கா வேணுமாம்ல, ஸ்ட்ராங்கா?’ என யோசித்துக் கொண்டே நாங்கு மடங்கு டீத்தூளைப் போட்டு டீ தயாரித்து எடுத்துக் கொண்டாள்.

பாத்ரூமிலிருந்து டவலால் முகம் துடைத்தபடி வந்தவனிடம் டீயை நீட்ட வாங்கிக் கொள்ளவும் அங்கிருந்து நகரப் போனாள்.

“நில்லு, கப்பை வாங்கிட்டுப் போ” என்றான்.

அவள் கடுப்புடன் அங்கேயே நிற்க, டீயை வாயில் வைத்தவன் அடுத்த நொடி முகத்தைச் சுளித்தான்.

“ச்சீ, இதென்ன டீயா?”

“நீங்கதான ஸ்ட்ராங்கா கேட்டிங்க?”

“அதுக்காக இருக்கற டீத்தூள் பூராவும் இதுல கொட்டிட்டியா?” என்றான் கடுப்புடன்.

அவள் பதில் பேசாமல் நிற்க, அவள் கையில் அந்த டீ கோப்பையைக் கொடுத்தவன், “எனக்கு எதையும் வேஸ்ட் பண்ணா பிடிக்காது. குடி” என்றான்.

அதில் திகைத்தவள், “எ..எனக்கு டீ பிடிக்காது” என்றாள்.

“எனக்குப் பிடிக்கறதெல்லாம் இனி உனக்கும் பிடிக்கணும். ம்ம்… குடி”

“இ..இல்ல வேண்டாம். நான் டீ குடிக்க மாட்டேன்…”

“எனக்கு அதெல்லாம் தெரிய வேண்டாம். நீ போட்ட டீ எப்படி இருக்குன்னு நீயே குடிச்சுத் தெரிஞ்சுக்க. ம்ம், குடி” எனக் கோபமாய் சொல்ல, அவள் முழித்தாள்.

‘நாம அவனைக் கடுப்பேத்த நினைத்தா அந்த ஆப்பு எனக்கே திரும்ப வருதே கடவுளே’ என நொந்தபடி அந்த டீயை வாயில் வைத்தாள்.

அவளால் அதை தொண்டையில் இறக்கக் கூட முடியவில்லை. அவ்வளவு கேவலமாய் இருந்தது அந்த டீயின் சுவை. அவன் அவளையே முறைத்தபடி நிற்க அந்தச் சுவையில் நாக்கு பதறிப் போக, தொண்டை கசக்க அடுத்த மிடறு குடித்தவளுக்கு அப்படியே வயித்தைப் பிரட்டிக் கொண்டு வந்தது.
“இப்பத் தெரியுதா? எவ்ளோ கேவலமா இருக்குன்னு… என்ன? நேத்து நான் பேசினதுக்குப் பழி வாங்கப் பார்க்கறியா? ஒழுங்கு மரியாதையா போயி நல்லதா ஒரு டீ போட்டுட்டு வா. எங்கிட்ட வாலாட்ட நினைச்ச, ஒட்ட வெட்டிருவேன்.” என்றவன் மொபைலை எடுத்துக் கொண்டு அமர தேவி தான் நொந்து போனாள்.

வாய் வேறு கசக்க, “ச்சே, ஒரு கர்ப்பிணி பொண்ணை எப்படில்லாம் கொடுமைப் படுத்தறான் கல் நெஞ்சக் கார, லகுட குசல பாண்டியன்” என முணுமுணுத்துக் கொண்டே செல்ல, அந்த இறுதி வார்த்தைகள் மட்டும் விக்ரமின் காதில் விழுந்து முகத்தில் ஒரு மென்னகையை வரவழைக்க, அடுத்த நொடியே அதைக் காட்டாமல் இறுக்கமாய் வைத்துக் கொண்டான்.

மீண்டும் டீ கோப்பையுடன் வந்தவளை ஒரு பார்வை பார்த்துவிட்டு வாங்கிக் கொண்டான். உண்மையிலேயே டீ அருமையாய் இருக்க, காலிக் கோப்பையை நீட்டியவன், “ம்ம்… நாட் பேட்” எனக் கூற, அவள் உதட்டைச் சுளித்துக் கொண்டாள்.

அவள் செய்கையை மனதில் ரசித்தாலும் காட்டிக் கொள்ளாமல் “நான் குளிக்கணும், டவல் எடுத்து வை…” என்றான்.

“ஏன், இத்தனை நாளா டவல் இல்லாம தான் குளிச்சீங்களா?”

“ஆமா, நீ வேணும்னா நான் குளிக்கும்போது வந்து பார்க்கறியா?” எனக் கேட்க அதிர்ந்தவள் முறைத்தாள்.

“என்ன முறைப்பு? என்னைக் கல்யாணம் பண்ண ஆசைப்பட்டா மட்டும் போதாது. எனக்குப் பொண்டாட்டியா எல்லாத்தையும் செய்து கவனிச்சுக்கணும்…” என்றான் அழுத்தமான குரலில்.

பதில் சொல்ல முடியாமல் நின்றவள், அமைதியாய் டவலை எடுத்துக் குளியலறையில் வைத்துவிட்டுச் செல்லப் போக,
“நில்லு. எனக்கு முதுகு தேய்க்க என்ன, என் மாமன் மகளா வருவா? இருந்து தேச்சு விட்டுட்டுப் போ…” எனச் சொல்லக் கோபத்தில் தேவியின் முகம் சிவந்து போனது.

“இங்க பாருங்க, ரொம்ப ஓவராப் பேசாதீங்க” எனக் குரலை உயர்த்த, உதட்டில் ஒரு விரல் வைத்த விக்ரம்,

“உஷ்ஷ், என்ன சத்தம் உயருது? ஏதோ உன் வளர்ப்பு அப்பாவும், அம்மாவும் என் காலைப் பிடிச்சிட்டு, உன்னைப் பொண்டாட்டியா ஏத்துக்கச் சொல்லிக் கெஞ்சினாங்களே, சரி தாலியைக் கட்டித் தொலைச்சிட்டமேனு தான் என் வேலையைப் பார்க்கற கடமையை எல்லாம் உங்கிட்டக் கொடுக்கலாம்னு நினைச்சேன். உனக்கு விருப்பம் இல்லன்னா பொட்டியைக் கட்டிட்டுக் கிளம்பு…” எனவும் திகைத்துப் போனாள்.

சட்டென்று நந்தினியின் தியாகமும், அவள் பெற்றோரின் தன் வாழ்க்கைக்கான முயற்சியும், இந்தக் கல்யாணத்துக்காகத் தன் உயிரையே விட்ட தந்தையின் நினைவும் வர, அதுவரை இருந்த தைரியமும், துடுக்குத் தனமும் காணாமல் போய் கண்ணில் சட்டென்று நீர் கோர்த்தது.

அதைக் கண்டதும் விக்ரமுக்கும் சற்று மனம் நெகிழ்ந்தாலும், அதைக் காட்டிக் கொள்ளாமல், “விருப்பமில்லாம யாரும் எனக்கு எதுவும் செய்ய வேண்டாம். நீ போ…” என்றான்.

போய் விடத்தான் மனம் நினைத்தது. ஆனாலும், தன்னை எப்படியாவது இந்த வாழ்க்கையில் நிலை நிறுத்திக் கொள்ள, நந்தினியும், அவள் குடும்பமும் படும் பாடும், இப்போது தன் கர்ப்பத்தில் வளரும் குழந்தைக்கு நிச்சயம் நாளை ஒரு முகவரி வேண்டும் எனவும் நினைத்தவள், தன் மனது நினைத்ததை விடுத்து மூளை சொன்னதைக் கேட்க முடிவு செய்தாள்.

“செய்யறேன்” தலை குனிந்தபடி சொன்னவளைக் கண்டு அவன் மனம் கனிந்தது.

“தட்ஸ் குட்” என்றவன், “நான் கூப்பிடும்போது வரணும். இங்கயே இரு…” எனக் குளியலறைக்குள் நுழைந்தான்.

கண்ணில் நிறைந்த கண்ணீரை உள்ளிழுத்துக் கொண்ட தேவி, ‘என்னையே என் அனுமதி இல்லாம எடுத்துகிட்டான். என் அனுமதி இல்லாமலே, சூழ்நிலைக் கைதியாக்கி கழுத்துல தாலியும் வாங்க வச்சிட்டான். இனி முதுகு தேச்சு விடறதால மட்டும் என்னாகிடப் போகுது. எருமை மாட்டுக்குத் தேச்சு விட்டதா நினைச்சுக்க வேண்டியதுதான்’ என மனதில் நினைக்க அவளை அறியாமலே இதழில் ஒரு புன்னகை மின்னியது.

“ஏய், உள்ள வா…” குளியலறையிலிருந்து விக்ரம் குரல் கொடுக்க, சேலையைத் தூக்கி இடுப்பில் சொருகிக் கொண்டவள், அவன் கதவைத் திறக்கவும் உள்ளே சென்றாள்.

வெற்றுடம்பில் இடுப்பில் மட்டும் டவலுடன் நின்றவனைக் காணக் கூச்சமாய் இருக்க, சோப்பை எடுத்துக் கொண்டு அவனை நெருங்கியவள், கண்ணை மூடிக் கொண்டு, அவன் முதுகில் பட்டும் படாமலும் சோப்பைப் போடத் திரும்பிப் பார்த்தவன்,

“பார்த்து, மெதுவா… சோப்புக்கு வலிச்சிடப் போகுது. அடச்சீ, கண்ணைத் திற” என்ற அவன் அதட்டலில் பதறியவள் கையிலிருந்த சோப்பை நழுவ விட்டு அவளும் வழுக்கி விழப் போக, சட்டென்று அவள் இடுப்பிக் கை கொடுத்து விழாமல் தாங்கிக் கொண்டான் விக்ரம்.

அவளது வெற்று இடுப்பில் பதிந்திருந்த அவனது கரங்களில், அவள் விதிர்விதிர்த்துப் போக அப்படியே கிகைத்து நின்றாள். அவள் தேகத்தின் மென்மை அவனை என்னவோ செய்ய, கையை எடுக்கத் தோன்றாமல் அழுத்தமாய் பதித்திருந்தான் விக்ரம்.
சட்டென்று தன்னைச் சுதாரித்துக் கொண்டவள், “கையை எடுங்க” என நெளியத் தொடங்க அவனும் மெல்லக் கையை விலக்கி, மனதில் பொங்கிய உணர்ச்சியைக் கட்டுப்படுத்தி தலையைக் கோதிக் கொண்டான்.

“ப்ச்… இதுக்குதான் என்னை சோப் போடச் சொன்னீங்களா?” என வேண்டுமென்றே அவன் செய்தது போல் சொல்ல முறைத்தவன்,

“நான் உன்னை என்னன்னமோ பண்ணிட்டேன்னு சொல்லி தான கல்யாணமே பண்ணி வச்சாங்க, இப்ப சோப்பு போடறதுக்கே இப்படித் தடுமாறினா எப்படி?” என்றான் கிண்டலாக.

அவனை முறைத்தவள் கையைக் கழுவிவிட்டு முந்தானையில் துடைத்தபடி வெளியே செல்ல, அவன் குளியல் முடித்துக் கீழே வந்தான். அங்கே அவனது அன்னை பத்மா மருமகளைத் திட்டிக் கொண்டிருந்தார்.

“காலைல நேரமா எழுந்து எனக்கு ஓட்ஸ் கலந்து கொடுக்கணும்னு தெரியாதா? இத்தன நேரம் கழிச்சு ஆடி அசைஞ்சு கீழே வர்ற…”

“இல்லத்தை… அதுவந்து…” எனப் பேச வந்தவளைப் பேச விடாமல்,

“இந்த விஜயாக்கும் அறிவே இல்ல. எங்களுக்கு வேண்டியதைச் செய்யாம அதுக்குள்ள காய் வாங்கக் கிளம்பிப் போகணுமா?”

“என்னம்மா, என்ன பிரச்சனை?” கேட்டுக் கொண்டே சோபாவில் அமர்ந்த விக்ரம் அன்னையிடம் கேட்க,

“எல்லாம் இந்த வீணாப் போனவளை தான் சொல்லறேன். காலைல எழுந்ததுல இருந்து ஒரு கிளாஸ் தண்ணி கூட எனக்குக் கொடுக்கல. இத்தனை நேரம் படுத்துத் தூங்கிட்டு ஆடி அசைஞ்சு இப்பதான் எஜமானியம்மா எந்திரிச்சு வராங்க” எனக் கிண்டலாய் சொல்ல,
அதற்குள் அங்கே வந்த நிகிதா, “அடடா, தண்ணி கொடுக்கலைன்னு தான் இவ்ளோ நேரம் தொண்டை வத்தக் கத்திட்டு இருக்கிங்களாம்மா. இந்தாங்க புடிங்க, தண்ணி குடிங்க” எனத் தண்ணி பாட்டிலை அன்னையின் கையில் கொடுக்க முறைத்தார்.

“என்னடி கிண்டலா? பாரு, இவ்ளோ நேரமா சொல்லிட்டு இருக்கேன். அப்பவும் எனக்கு ஓட்ஸ் கலக்கப் போறாளான்னு” என மருமகளைப் பற்றி மகனிடம் குற்றப் பத்திரிகை வாசிக்க, ‘அந்த லகுட குசல பாண்டியரு, இத்தன நேரம் என்னை ரூமுல பிடிச்சு வச்சிட்டு, ஏதாச்சும் வாயத் திறந்து சொல்லுதா பாரு’ என நினைத்தபடி தேவி ஓட்ஸ் கலக்கச் செல்ல, அவளைப் பாவமாய் பார்த்தாள் நிகிதா.

“மா, எதுக்கு இப்படி காலைல வரும்போதே திட்டிட்டு இருக்கிங்க, என்ன வேணும்னு சொன்னா, அண்ணி செய்து கொடுக்கப் போறாங்க” என அவளுக்குச் சப்போர்ட் செய்ய மகளை முறைத்தார்.

“ஆமா, அப்படியே உன் அண்ணி செய்து கிழிச்சுட்டாலும்.”

“ஏன்மா, இத்தனை நாள் அவ இல்லாம தானே இங்க எல்லாம் நடந்துச்சு. இப்ப என்ன புதுசா சொல்லிட்டு இருக்கீங்க. விஜயாக்கா காய் வாங்கக் கிளம்பினா நீங்க தான ஓட்ஸ் கலக்கிக் குடிப்பீங்க?” என்ற மகனைத் திருதிருவென்று பார்த்தார் பத்மா.

“அதானே, அப்படிக் கேளுண்ணா…” என்றாள் தங்கை. அதற்குள் அங்கே வெளியே கிளம்பத் தயாராய் வந்த கணேச பாண்டியன், “எம்மா மருமகளே, எனக்கு டிபன் எடுத்து வைமா.” எனச் சொல்ல ஓட்ஸ் கலக்கி எடுத்து வந்த தேவி முழித்தாள்.

“இ..இன்னும் டிஃபன் ரெடியாகல மாமா. ஒரு அஞ்சு நிமிஷம் வெயிட் பண்ணுங்க. சட்னி அரைச்சிட்டு தோசை ஊத்தித் தரேன்” என்றவளைக் கண்டு நிகிதாவுக்குப் பாவமாய் இருக்கவே, “அண்ணி, நான் சட்னி அரைக்கிறேன். நீங்க தோசை ஊத்துங்க” என்றாள்.

“என்னது? நீ தோசை ஊத்தறியா? ஆளை விடுமா தாயே. அந்த வேகாத தோசையைத் தின்னு வயித்துவலில துடிக்கிறதுக்கு நான் ஹோட்டல்லயே சாப்பிட்டுக்கறேன்.” என்றார் கணேசன்.

“அப்பா, அதான் அஞ்சு நிமிஷம் வெயிட் பண்ணா உங்க மருமகளே தோசை ஊத்தித் தரேன்னு சொன்னாளே. கொஞ்சம் வெயிட் பண்ணிச் சாப்பிட்டு போங்க.” என்றான் மகன்.

ஒவ்வொருத்தருக்கும் வேண்டியவைகளைப் பார்த்துச் செய்து அனுப்பி வைப்பதற்குள் நொந்து போனாள் தேவி.

மறுநாள் ஞாயிற்றுக் கிழமை.

காலையில் எழுந்தபோதே அன்று மாலை குப்தா சார் வீட்டுக்கு விருந்துக்குச் செல்ல வேண்டுமென்று சொல்லி விட்டான் விக்ரம்.

“நிகி, இவளைக் கொஞ்சம் பார்த்து நல்ல டிரஸ்ஸாப் போட்டு புறப்பட வை. பட்டிக்காடு மாதிரிப் புறப்பட்டு நிக்கப் போறா…” எனக் காலையில் வெளியே செல்கையிலேயே தங்கையிடம் பொறுப்பைக் கொடுத்து விட்டுச் சென்றான் விக்ரம்.

குப்தா பெரிய பிஸினஸ் சாம்ராஜ்யத்தின் அதிபதி. இவர்களுடன் பிஸினஸ் ரீதியாக மட்டுமில்லாமல் விக்ரமைச் சின்ன வயதிலிருந்தே அவருக்கு நல்ல பழக்கம் என்பதால் வீட்டுக்கு அழைத்திருந்தார்.

காலையில் வெளியே கிளம்பிய விக்ரம் மதிய உணவுக்கு வராமல் மாலை தான் வீட்டுக்கு வந்தான். அவன் தேவி கிளம்பி விட்டாளா என அன்னையிடம் விசாரிக்க, நிகிதாவின் அறையில் புறப்படுவதாகக் கூறினார். இவன் குளியல் முடித்துத் தயாராகிக் கீழே வரும்போது தேவியும் புறப்பட்டிருக்க, அறையிலிருந்து வெளியே வந்தவளைக் கண்டு அசந்து நின்றான் விக்ரம பாண்டியன்.

Advertisement