Advertisement

அத்தியாயம் – 14

நந்தினி வந்திருந்த உறவினர்களுடன் அமர்ந்து பேசிக் கொண்டிருக்க, சுபாஷினி அடுக்களையில் எல்லாருக்கும் மதிய உணவு தயாரிக்கும் மும்முரத்தில் இருந்தார். நந்தகுமார் வீட்டுக்குப் பந்தலிட வந்தவர்களை வாசலில் நின்று விரட்டிக் கொண்டிருந்தார்.

“என்ன நந்தா, கல்யாணத்துக்கு நாலு நாள் முன்னாடியே பந்தல் போட்டாச்சு, போலருக்கு…” பெரியவர் ஒருவர் கேட்க,

“ஆமா சித்தப்பு, எல்லாரும் வரப் போக இருக்கும்போது வாசல்ல பந்தல் இருந்தா வீட்டுக்குக் கொஞ்சம் குளிர்மையா இருக்கும்ல, அதான் இன்னைக்கே போட சொல்லிட்டேன், நீங்க உள்ள வந்து உக்காருங்க… சித்தி வரலியா..?” என அவரை விசாரித்தபடி உள்ளே வந்தார். சுபாஷினி மோர் கொண்டு வந்து கொடுக்க கல்யாண விஷயமாய் நந்துவிடம் பேசிக் கொண்டிருந்தார் சித்தப்பு.

சிறிது நேரம் உறவுகளுடன் பேசிக் கொண்டிருந்த நந்தினியின் விழிகள் வாசலையே அடிக்கடி பார்த்தன.

“இந்த தேவி எங்க, போன் எடுக்கப் போனவளை இன்னும் காணோம்…” யோசித்தபடி அடுக்களைக்கு வந்தவள், “அம்மா, இந்த தேவிய இன்னும் காணமே, உன் போனைக் கொடு…” என்று அவரது மொபைலில் இருந்து தேவியை அழைக்க அது அடித்து ஓயவும் நந்தினிக்கு குழப்பமானது.

“தேவி சோர்வா இருந்தாளே, உடம்புக்கு முடியாம வீட்டுக்குப் போனதும் படுத்துட்டாளோ…?” யோசிக்கையில் மனம் பதற அன்னையிடம் தேவி வீட்டுக்கு செல்வதாய் சொல்லவும் சுபாஷினி முறைத்தார்.

“என்ன..? ரெண்டு பேரும், அங்கயும் இங்கயும் மாறி மாறிப் போயிட்டு விளையாடிட்டு இருக்கிங்களா…? அவ வருவா இரு…” என மகளைத் திட்டிவிட்டு வேலையை கவனித்தார்.

அன்னை சொன்னதற்காய் சிறிது நேரம் பார்த்த நந்தினி, மீண்டும் அவளைக் காணாமல் சுபாவிடம் நச்சரித்து சம்மதம் வாங்கிக் கொண்டு முன் வாசல் வழியே செல்லாமல் பின் பக்க வழியாய் தேவியின் வீட்டுக்கு கிளம்பினாள்.

வாசல் கதவு திறந்து கிடக்க உள்ளே நுழைந்தவள் காதில் தேவியின் விசும்பல், அறையிலிருந்து கேட்க பதட்டமாய் உள்ளே சென்றவள் தேவி அழுது கொண்டிருப்பதைக் கண்டதும் அதிர்ந்து அருகே சென்றாள். அவள் வருவதை உணர்ந்து நிமிர்ந்த தேவியின் விழிகளில் அழுகையோடு கோபமும் சேர்ந்து கொள்ள வேகமாய் எழுந்தாள்.

“தேவி, என்னாச்சுடி…? எதுக்கு அழுவற…?” பதட்டமாய் கேட்ட தோழியிடம் கையிலிருந்த அவள் போனைக் கொடுத்தவள் கோபத்துடன் கேட்டாள்.

“இதென்ன…?” புரியாமல் அதைப் பார்த்த நந்தினி அதிர்ந்தாள்.

அதில் விக்ரம் உடையில்லாத தேவியின் மீது கவிழ்ந்து அவள் இதழில் தனது இதழைப் பதித்த போட்டோ இருக்க, அதைக் கண்டதும் நந்தினியின் முகம் அதிர்ச்சிக்குப் போனது. அன்று கையிலிருந்து மொபைல் நழுவ, அமர்த்திப் பிடித்ததில் போட்டோ கிளிக் ஆகிருக்க வேண்டுமென்று புரிய தன்னையே கனல் கக்கும் விழிகளில் கண்ணீருடன் பார்த்த தோழிக்கு பதில் சொல்ல முடியாமல் விழித்தாள்.

“தே..தேவி, அது..வந்து…” அதுவரை கோபமாய் முறைத்துக் கொண்டிருந்த தேவி பெரும் குரலில் அழத் தொடங்கினாள்.

“போச்சு, எல்லாம் போச்சு… ஐயோ, நான் இப்ப என்ன பண்ணுவேன்… மானத்தை இழந்துட்டு இனி நான் எதுக்கு உயிரோட இருக்கணும்..?” முகத்தில் அறைந்து கொண்டு கதறத் தொடங்கியவளை விக்கித்து நோக்கினாள் நந்தினி. அந்த போட்டோ நந்தினி வீட்டின் குளியலறை அருகே எடுக்கப்பட்டிருக்க நடந்ததை அவளும் யூகிக்க முடிந்தது.

“ஏண்டி… ஏன், இவ்ளோ நாளா இதை என்கிட்ட மறைச்ச…? அந்த மனுஷன் என் உடம்புல ஒட்டுத் துணி இல்லாமப் பார்த்ததை சொன்னா செத்துப் போயிடுவேன்னு நினைச்சு சொல்லாம மறைச்சுட்டியா..? அவர் என் உதட்டுல உதடு வச்சு, ச்சீ… கட்டிக்கிறவனைத் தவிர வேறொருத்தன் சுண்டு விரல் பட்டாலும் இந்த ஊருப் புள்ளைங்க உசுர விட்டிருவாங்களே… அந்தாளு என்னை அந்தக் கோலத்துல பார்த்து என்னல்லாம் நினைச்சிருப்பார்… என்னை வேற என்னல்லாம் பண்ணினாரோ…? ஐயோ…! இது தெரிஞ்சா என் அப்பன் உசுரையே விட்டுடுமே…? எல்லாம் தெரிஞ்சும் ஏன் இவ்ளோ நாளா சொல்லாம மறைச்ச…?” எனப் புலம்பியபடி அழுதவளைக் கண்டு நந்தினியின் கண்களும் கலங்கின.

“தேவி இங்க பாரு, நடந்தது ஒரு விபத்து… நீ எதுவும் தப்பா நினைச்சுக்காத, விக்ரம் அன்னைக்கு உன்னைக் காப்பாத்த முயற்சி பண்ணினாரே ஒழிய எதுவும் பண்ணல…”

“பார்த்துட்டாரே… காக்கா, குருவி கூடப் பார்த்துடக் கூடாதுன்னு பொத்திப் பொத்தி மூடி வச்ச உடம்பை சம்மந்தமே இல்லாத ஒருத்தன் பார்த்துட்டானே… அவன் எதுவும் பண்ணலேன்னு உனக்கு நிச்சயமாத் தெரியுமா…? அப்புறம் எதுக்கு பரியக்கா கிட்ட குழந்தை உண்டாகறதைப் பத்தி போன்ல விவரம் கேட்டுட்டு இருந்த…? அ..அப்படின்னா, அது எனக்காகத் தான் கேட்டியா…? ஐயோ…! மானத்தை இழந்து நான் உசுரோடவே இருக்க மாட்டேன்…” என்றவள் தலையிலடித்துக் கொண்டு அழ நந்தினி திகைத்து நின்றாள்.

“இவளுக்கு எப்படித் தெரிந்தது…? எதற்காகவோ மொபைலை எடுத்தவள் போட்டோவைக் கண்டதோடு கால் ஹிஸ்டரியில் இருந்த பரிமளாவின் பெயரையும் கண்டு ஒன்றுக்கொன்று முடிச்சிட்டுப் பார்த்திருக்க வேண்டும்… ச்சே…! காணாமல் போன மொபைல் கிடைக்காமலே இருந்திருக்கலாமோ…? அந்த போட்டோ என் கண்ணில் பட்டிருந்தால் டெலிட் செய்திருப்பேன்… இவள் கண்ணில் தானா பட வேண்டும், எப்படி சமாளிக்கப் போகிறேன்…?”

நந்தினி கலக்கமாய் யோசித்துக் கொண்டிருக்க தேவி சட்டென்று எழுந்து எங்கோ வேகமாய் சென்றாள்.

“ஏய்..! எங்கடி போற…?” பின்னிலேயே நந்தினி ஓட பின்பக்கம் ஸ்டோர் ரூம் போன்ற அறைக்கு சென்ற தேவி அங்கிருந்த செடிக்கு அடிக்கும் பூச்சி மருந்தை எடுத்து குடிக்கப் போக நந்தினி பதறிப் போய் கையைப் பிடித்து வைத்தாள்.

“நந்து, எதுக்குத் தடுக்கற…? இனி இந்த கறையான உடம்பை வச்சுட்டு நான் உசுரோட இருக்க மாட்டேன், செத்துத் தொலையறேன் விடு…” அவள் ஆவேசமாய் சொல்ல,

“என்ன, அறிவுகெட்ட தனமான வேலையைப் பண்ணுற தேவி…? எல்லாப் பிரச்சனைக்கும் சாவு தான் தீர்வா…?”

“இல்ல, எல்லாப் பிரச்சனைக்கும் சாவு தீர்வில்ல, ஆனா மானம் போனா சாவறது ஒண்ணு தான் தீர்வு…” தேவியும் பிடிவாதமாய் அந்த பாட்டிலை விடாமல் போராட ஒருவழியாய் நந்தினி அதைப் பறித்து தூர எறிந்தாள்.

“இதை வாங்கி எறிஞ்சுட்டா, சாகறதுக்கு எனக்கு வேற வழியா இல்ல…” சொன்னவள் அங்கிருந்த கத்தி ஒன்றைக் கையில் எடுத்துக் கொண்டு கையில் அறுக்கப் போக, கோபத்துடன் அதைப் பறித்து எறிந்த நந்தினி, அவள் கன்னத்தில் ஓங்கி அறைந்தாள். உணர்ச்சி வசப்பட்டு என்ன செய்கிறோம் எனத் தெரியாமல் குழம்பிப் போயிருந்த தேவி அந்த அடியில் திகைத்து அப்படியே நின்றாள்.

ஒரு நிமிடம் கலங்கிப் போய் நந்தினியைப் பார்த்தவள் அங்கேயே மடிந்து அமர்ந்து மீண்டும் அழத் தொடங்க நந்தினியின் மனம் கலங்கிப் போனது.

இதற்காகத்தானே…! தேவியின் குணம் தெரிந்து தானே நந்தினி எதையும் சொல்லாமல் மறைத்தாள். மறந்து கடக்க நினைத்த ஒரு விஷயம் இப்போது பூதாகரமாய் எழுந்திருக்க யாருக்குத் தெரியக் கூடாதென்று நினைத்தாளோ, அவளுக்கே தெரிந்து விட்டதோடு இப்போது புதிதாய் ஒரு சந்தேகமும் நந்தினியின் மனதில் முளைக்கத் தொடங்கியிருக்க அடுத்து என்ன செய்வதென்று புரியாமல் குழம்பி நின்றவள் தேவியின் அருகே அமர்ந்து தோளில் கை வைக்க அவள் நெஞ்சிலேயே சாய்ந்து அழத் தொடங்கினாள் தேவி. நந்தனியும் அவள் முதுகைத் தட்டிக் கொடுத்து சிறிது நேரம் அழ விட்டவள் சமாதானப்படுத்த முயன்றாள். அது ஒரு விபத்து என மனதில் பதிய வைக்க முயன்றாள்.

“விபத்தா இருந்தாலும் என் மானம் போனது போனது தானே…” என அதற்கும் தேவி அழுதாள்.

“நமக்கு உடம்பு சரியில்லைனா ஆண் டாக்டர்கிட்ட உடம்பைக் காட்ட மாட்டோமா, ஆண் டாக்டர் பெண்ணுக்குப் பிரசவம் பார்க்கறதில்லையா…? ஆப்பரேஷன் பண்ணறது இல்லியா..? இதை எதுக்கு நீ தப்பா நினைச்சுப் பார்க்கற, விக்ரம் உன்னைக் காப்பாத்த தான் செய்தார்…” அதைக் கேட்டதும் கண்ணைத் துடைத்துக் கொண்டு சில நொடிகள் அமைதியாய் இருந்த தேவி, “அன்னைக்கு நடந்தது என்னன்னு உனக்கு முழுசாத் தெரியுமா…?” என்றாள்.

“ம்ம்…”

“அப்படியே மறைக்காம சொல்லு…” என்றவள் நந்தினி சொல்லவும் பொறுமையாய் கேட்டிருந்து விட்டு, “அப்ப கடைசில தான் நீயும் பார்த்திருக்க, உனக்கும் முழுசா எதுவும் தெரியல, ஒருவேளை அ..அவர் என்னை…” என்றவள் அதற்கு மேல் சொல்லாமல் நிறுத்த, கண்ணீர் வழிந்தோட நந்தினியும் பதில் சொல்லாமல் பார்த்தாள். அவளுக்கும் அந்தக் குழப்பம் இப்போது வரத்தானே செய்திருக்கிறது. ஆனாலும் நந்தினி அவளைத் தேற்ற ஏதேதோ சொல்லிப் பார்த்தும் தேவி அமைதியானாளே ஒழிய சமாதானம் ஆனது போல் நந்துவுக்கு தோன்றவில்லை. எனவே இறுதியில் ஒரு முடிவுக்கு வந்தவள் தேவியிடம் சொன்னாள்.

“தேவி…! நான் இவ்ளோ சொல்லியும் நீ சமாதானம் ஆகாம அழுதுட்டே இருந்தா எனக்கு என்ன பண்ணறதுன்னு தெரியல, பேசாம இந்தக் கல்யாணத்தை நிறுத்திடலாம்… நீ மாம்ஸைக் கல்யாணம் பண்ணிக்க, அது ஒண்ணுதான் வழி…” நந்தினி இப்படி சொல்லவும் அதிர்ந்து நோக்கினாள்.

“ஐயோ..! அதெப்படி…? ஊரெல்லாம் பத்திரிக்கை வச்சு, வீட்டுல எல்லாரும் உங்க கல்யாணத்தை எதிர்பார்த்திருக்கும் போது, நிறுத்துறது எல்லாம் சரியா வராது… நீ அவரைக் கல்யாணம் பண்ணிட்டு சந்தோஷமா இரு… என்னைப் பத்திக் கவலைப்படாத…” என்ற தேவியை நெகிழ்வுடன் நோக்கிய நந்தினிக்குத் தெரியும். அப்படி எல்லாம் அவள் சமாதானம் ஆகி இதை மறந்துவிட மாட்டாள் என்று. அழுதழுது சோர்ந்து போய் அங்கேயே ஓரமாய் படுத்துவிட்டாள் தேவி. தலை சுற்றுவது போல் தோன்ற வயிற்றுக்குள் ஒரு இம்சை உருண்டு தொண்டைக்கு வர, வாயை மூடியபடி எழுந்து கொல்லைப்பக்கம் ஓடியவள் வாந்தி எடுத்தாள்.

அவளை முகம் கழுவ வைத்து ஆசுவாசப்படுத்திக் கூட்டி வந்த நந்தினியிடம் தேவி, “எனக்கு என்னமோ ஆயிருச்சு, அதான் இப்படி தலைசுத்தல், வாந்தி எல்லாம் வருது… நாளும் தள்ளிப் போயிருச்சு… நா..நான் கெட்டுப் போயிட்டனா…? என் வயித்துல புள்ள வளருதா…? ஐயோ, என்ன பண்ணுவேன்…” என மீண்டும் அழத் தொடங்க,

நந்தினியின் மனதிலும் இப்போது இந்தக் கவலை சேர்ந்து கொள்ள, எதற்கும் பரிமளா சொன்னதை செய்து பார்த்து விடுவது நல்லதென்ற முடிவுக்கு வந்திருந்தாள்.

அப்போதே பரிமளாவுக்கு அழைத்து அந்த பிரக்னன்சி கிட்டை வாங்கிவரச் சொன்னவள் தேவியின் வீட்டிலேயே இருந்தாள். சுபாவும், நந்தகுமாரும் அவளை போனில் அழைத்த போது தேவிக்கு உடம்பு சரியில்லையென்று துணைக்கு இருப்பதாய் சொல்ல அவளை வீட்டுக்கு அழைத்து வரும்படி சொன்னார் சுபா.

“வயிறு வலில முடியாம தூங்கிட்டு இருக்கா மா, அவ எழுந்ததும் அழைச்சிட்டு வரேன்…” என்று சமாளித்தவள் பரிமளாவின் அழைப்புக்காய் காத்திருக்கத் தொடங்கினாள்.

பரிமளா வந்து கொண்டிருப்பதாய் சொல்லவும், தெரு முனைக்கே சென்று அதை வாங்கி வந்தவள் தேவியிடம், “இது ஒரு விபத்துதான்னு நான் எவ்ளோ சொல்லியும் நீ நம்ப மாட்டேங்கற, அதான் உன் மனசு தெளியறதுக்காக ஒரு விஷயம் பண்ண முடிவெடுத்தேன் தேவி…” என இதைப் பற்றிச் சொல்ல தேவி அழுகையுடன் சம்மதித்தாள்.

ஆனால் அதில் வந்த ‘பாஸிடிவ் ரிசல்ட்’ இருவர் வயிற்றிலும் புளியைக் கரைக்க, தேவி கதறி அழத் தொடங்கினாள்.

“ஐயோ…! இனி நான் எப்படி உயிரோட இருப்பேன்… எனக்கு இப்படி ஆனது தெரிஞ்சா என் அப்பாவும் தூக்குல தொங்கிருவாரே… கடவுளே..! உனக்குக் கண்ணில்லையா…?” எனக் கதறத் தொடங்க நந்தினியும் அதிர்ச்சியுடன் பரிமளாவிடம் போன் செய்து விசாரித்தாள்.

“நூத்துக்கு தொண்ணூறு சதவீதம் அதுல வர்ற ரிசல்ட் சரியாத்தான் காமிக்கும் நந்து… அதுக்கும் மேல கன்பர்ம் பண்ணனும்னா கொஞ்ச நாள் கழிச்சு டாக்டர் கிட்ட தான் போய் செக் பண்ணிப் பார்க்கணும்… நீ எந்த பிரண்டுக்கு ஒசரம் இவ்ளோ தூரம் மெனக்கெட்டு விசாரிக்குற… அந்தப் புள்ள ஏதாச்சும் தப்புத் தண்டா எதுவும் பண்ணிடுச்சா…?” பரிமளா விசாரணையில் இறங்கவும் நந்தினி சுதாரித்துக் கொண்டு அவளை சமாளித்து வைத்து விட்டாள்.

“ஐயோ..! என் மானம் போச்சே, எந்த தப்புமே செய்யாம இப்படி ஒரு தண்டனையை எதுக்கு அந்த கடவுள் எனக்குக் கொடுத்தான்… உன் மாமன் போதைல இப்படி ஒரு காரியம் பண்ணிட்டு இப்ப கமுக்கமா உன்னைக் கல்யாணம் பண்ண ரெடி ஆகிட்டு இருக்கானே, இவன்லாம் மனுஷன் தானா…?” அவள் புலம்பி அழுது கொண்டிருக்க நந்தினி யோசித்தாள்.

அந்த கிட்டில் வந்த ரிசல்ட்டை அவளால் முழுமையாய் நம்பவும் முடியவில்லை, நம்பாமல் விட்டு விடவும் முடியவில்லை… தேவியின் நிலையும், அவள் எதிர்கால வாழ்க்கையும் மனதில் பயத்தைக் கொடுக்க, நிதானமாய் யோசித்தவள் தீர்க்கமாய் ஒரு முடிவுக்கு வந்தாள்.

“நடந்ததை இப்போது பெரியவர்களிடம் சொல்லுவதோ, கல்யாணத்தை நிறுத்துவதோ இந்தப் பிரச்சனைக்குத் தீர்வாகாது… விக்ரம் இவளை ஏற்றுக் கொள்ள மறுத்துவிட்டால் பிரச்சனை வேறு மாதிரி ஆகிவிடும், அதனால் இந்தக் கல்யாணத்தை நிறுத்தப் போவதில்லை… ஆனால் கல்யாணப் பெண்ணாக நந்தினிக்குப் பதிலாக தேவியை நிறுத்தி இருவருக்கும் கல்யாணத்தை முடித்து வைப்பது…” என முடிவுக்கு வந்தாள்.

தேவியின் அழுகையை நிறுத்தி இந்த விஷயத்தை சொல்ல அவள் முதலில் நந்தினியை எண்ணி மறுத்தாலும், அவளது நிலை இறுதியில் சம்மதிக்க வைத்தது. அவன் அவளை ஏதாவது செய்திருப்பானோ இல்லையோ, அந்த கிட்டில் வந்த ரிசல்ட் உண்மையோ, பொய்யோ… அதெல்லாம் இரண்டாவது விஷயம். ஆனால் அவளை காணக் கூடாத நிலையில் கண்டு விட்டவனைத் தவிர வேறு ஒருவரையும் தேவியின் மனம் இனி ஏற்றுக் கொள்ளாது… என்னதான் நந்தினி ஆயிரம் சமாதானம் சொன்னாலும், கல்யாணம் முடிந்த கையோடு தன் வாழ்க்கையை முடித்துக் கொள்வதென்று தேவியின் மனம் தீர்மானம் செய்திருக்கையில் தான் நந்தினி இப்படி ஒரு யோசனையை சொன்னாள்.

“நந்து…! உன் கல்யாணத்தை எப்படில்லாம் பண்ணனும்னு அம்மாவும், அப்பாவும் நினைச்சாங்க… நீயும் உன் மாம்ஸ் மேல ஆசையை வளர்த்திருப்ப… உன் கல்யாணத்தை நிறுத்தி என் வாழ்க்கையை காப்பாத்த எனக்குப் பிடிக்கல… அது தீர்மானிச்ச போலவே நடக்கட்டும், என்னைப் பத்தி அப்புறம் யோசிக்கலாம்…” என தேவி சொல்ல நந்தினி அவளைக் கனிவுடன் நோக்கினாள்.

“எனக்கு அப்படிலாம் மாம்ஸ் மேல எந்த ஆசையும் இல்ல தேவி… வீட்டுல பார்த்தாங்க, சம்மதிச்சேன் அவ்ளோ தான்… அம்மா, அப்பாக்கு இந்த விஷயம் தெரிஞ்சா அவங்களும் நான் எடுத்த முடிவுதான் சரின்னு சொல்லுவாங்க… எனக்கு மாம்ஸ் இல்லேன்னாலும் வேற மாப்பிள்ளையைக் கல்யாணம் பண்ணிப்பேன், ஆனா நீ பண்ணிப்பியா…? உன் வாழ்க்கையை அம்போன்னு விட்டுட்டு, நான் மட்டும் சந்தோஷமா இருந்திட முடியுமா…? அதனால, சரியோ தப்போ உனக்கும், மாம்சுக்கும் தான் கல்யாணம் நடக்கணும்னு நான் முடிவு பண்ணிட்டேன்… நீயும் இதுக்கு சம்மதிச்சு தான் ஆகணும்…” என தேவியை ஏதேதோ சமாதானம் செய்து சம்மதிக்கவும் வைத்தாள்.

அதன்படி கல்யாணத்தன்று பெரியவர்களிடம் விஷயத்தை சொல்லி, ஒருவேளை தேவி கர்ப்பமாகி இருந்தால் அவள் நிலை என்னாகுமென்றும் சந்தேகமாய் சொல்லி, விக்ரமை மறுக்க முடியாமல் போட்டோவைக் காட்டி சம்மதிக்க வைத்து கல்யாணத்தையும் நல்லபடியாய் முடித்து விட்டாள்.

நந்தினியின் தியாகத்தை நினைக்கையில் மீண்டும் தேவியின் கண்கள் உடைப்பெடுத்துக் கொண்டன. எப்படிப் பட்ட நட்பு…! தனது வாழ்க்கையையே தோழிக்காக விட்டுக் கொடுக்கும் மனசு யாருக்கு வரும்…? அப்பேர்ப்பட்ட நந்தினியின் மீது விக்ரம் கோபம் கொள்வதும், இவர்கள் ஏதோ நாடகம் போட்டு அவன் வாழ்க்கையை நாசம் செய்தது போலவும் சொல்லுவது எத்தனை பெரிய தவறு…? கண்களைத் துடைத்துக் கொண்டவள் மனம் வலித்தது.

விக்ரம் போதையில் நடந்தது எதுவும் நினைவில் இல்லாமல் தான் தவறே செய்யாதது போல் பேச இவள் குழம்பிப் போகவும் செய்தாள். நந்தினியைக் கல்யாணம் செய்ய விரும்பியவனைத் தான் நடுவில் புகுந்து அவன் ஆசையைக் கெடுத்தது சற்று குற்றவுணர்வைக் கொடுத்தாலும் அவள் மானத்தை விட எதுவும் பெரியதாய் தோன்றவில்லை.

இந்தக் கவலையிலும், கல்யாணம் முடிந்து நடந்த சம்பவங்களிலும் தேவி தனது அசதியையும், எப்போதாவது தலை சுற்றுவதையும் கண்டு கொள்ளாமல் விட்டிருந்தாள். ஆனாலும் நந்தினி தினமும் இவள் குளித்து விட்டாளா, என போனில் விடாமல் கேட்டுக் கொண்டு தானிருந்தாள்.

இந்த சம்பவம் முடிந்து ஒரு மாதத்திற்கும் மேலாகியும் இன்னும் அவள் மென்சஸ் ஆகாமல் இருப்பதால் அருகே யாராவது டாக்டரைக் கண்டு சோதனை செய்து கொள்ளும்படி ரெண்டு நாளாய் அவளை வற்புறுத்தத் தொடங்கியிருக்க இவளுக்கு கலக்கமாய் இருந்தது.

“கடவுளே…! அப்படி எதுவும் இருக்கக் கூடாது, இது எப்பவும் போல எனக்கு வரும் இர்ரெகுலர் பிரச்சனையாய் தான் இருக்க வேண்டும். சீக்கிரமே குளித்துவிட வேண்டும்… இவர் என்னை எதுவும் செய்யவில்லை என்று போதையில் நினைவில்லாமல் சொல்லுகிறாரோ இல்லை, உண்மையை சொல்லுகிறாரோ, அப்படி இருந்தால் எனக்கும் நிம்மதியே… எல்லாம் உனக்கே வெளிச்சம், எதுவாய் இருந்தாலும் என்னை சோதிக்காதே…” என மனதுக்குள் வேண்டிக் கொண்டபடி கண்களை மூடிக் கொண்டாள். ஆனாலும் உணர்வுகள் உறங்காமல் மனம் மட்டும் இரவெல்லாம் விழித்தே கிடந்தது.

மனம் ஏற்றுக்கொள்ள

மறுக்கும் ஒன்றையே

வாழ்க்கை திணிக்கிறது…

நம் விருப்பங்களை

இட்டு நிரப்புவதில்லை…

வளைந்து நெளியும் நாணலாய்

வாழ்க்கை – அதன்

விருப்பத்திற்கு நம்மை

வளைக்கும்போது

மனம் கசக்கிறது…

Advertisement