Advertisement

அத்தியாயம் – 13

அன்றைய உறக்கத்தைத் தொலைத்தது நந்தினியின் விழிகள் மட்டுமல்ல, அவளோடு மேலும் நான்கு விழிகளும் உறங்காமல் பழையதை அசை போட்டபடி விழித்திருந்தன. அவ்விழிகளின் சொந்தக்காரர்கள் விக்ரமும், தேவியும்.

விக்ரமின் மனதில் கல்யாணத்தன்று நடந்த காட்சிகள் ஓடிக் கொண்டிருந்தன. அன்று தேவியின் உயிரைக் காப்பாற்ற மயக்கமாகிக் கிடந்தவளின் உதட்டில் தன் உதட்டைப் பதித்து சுவாசம் கொடுத்ததையே ஆதாரமாய் காட்டி தேவியைத் தான் கெடுத்துவிட்டது போல் கதை கட்டிய நந்தினியின் மீது அப்போது தோன்றிய கோபம், இப்போதும் குறையாமல் இருந்தாலும் தேவி சொன்னது நினைவில் வந்து அவன் மனதை உலுக்கியது. என்னதான் போதையில் இருந்தாலும் அவளை முழுமையாய் கண்டு விட்டது மனதில் பதிந்து தான் போயிருந்தது. அதுவும் போதையில் கூட அவள் இதழில் ஆக்சிஜன் கொடுத்ததோடு அல்லாமல் தன்னை மீறி முத்தமிட்டு, அந்த இதழின் மென்மையை ரசித்தது அவ்வப்போது அவன் மனதில் எழுந்து அவஸ்தையை மூட்டி, குற்றவுணர்ச்சியைத் தூண்டி தேவியின் மீது அடக்கி வைத்திருந்த காதலைக் கிளறிக் கொண்டிருக்க, இவன் அதில் நந்தினியின் பெயர் சொல்லி தண்ணீர் ஊற்றி அணைத்துக் கொண்டிருந்தது என்னவோ உண்மைதான்.

இப்போதும் கூட தேவியின் மீது கோபம் இருந்தாலும் எங்கேயோ ஒரு மூலையில், அவன் மனதில் முதன்முதலாய் அவள் மீது தோன்றிய முதல் காதலும் கிளர்ந்தெழத்தான் செய்தது. அதற்கு கல்யாணத்தன்று அனைவர் முன்பும் அவனை அவமானப் படுத்தியதை, செய்யாததை செய்ததாய் சொன்னதை எண்ணி அவர்கள் மேல் கோபத்தை வளர்த்துக் கொண்டாலும் ஒரு பக்கம் அவள் மீது தோன்றும் பரிவை அவனால் ஒதுக்கவும் முடியவில்லை. அந்த அளவு அவனையறியாமலே அவனுக்குள் வேரூன்றிப் போயிருந்தாள் தேவி.

அதை ஏற்றுக் கொள்ளவும் முடியாமல், ஒத்துக் கொள்ளவும் முடியாமல் அவனே போலியாய் ஒரு முகமூடி அணிந்து அவளிடம் வெறுப்பைக் காட்டிக் கொண்டிருக்கிறான். அது மட்டுமல்ல, இவன் மட்டும் பலமாய் மறுத்திருந்தால் அந்தக் கல்யாணத்தையே நிறுத்தி இருக்கவும் முடியுமே… ஊர் கூடிய சபையில் நந்தினி அந்தப் பிரச்சனையைக் கொண்டு வந்த பிறகு தேவிக்குத் தன்னால் ஒரு களங்கம் வந்து விடக் கூடாது என்று நினைத்தல்லவா உறுதியாய் மறுக்காமல் விட்டிருந்தான். அவனது கோபம் எல்லாம் இதை முன்பே அவர்கள் அவனிடம் பேசியிருக்கலாம் என்பது தான். அவள் இதழில் மூச்சு கொடுக்க மட்டும் தான் செய்தேன், அவளை எதுவும் செய்யவில்லை என்பதை வேறு வழியில் நிரூபித்திருக்கக் கூட அவனால் முடியும்… ஆனால் சபை நடுவே இந்தப் பிரச்சனை வந்த பிறகு அதிகம் மறுத்து அனைவருக்கும் காட்சியை விளக்க முடியவில்லை.

இந்த சம்பவம் முடிந்த பிறகு தேவியோ, நந்தினியோ யாருமே இதைப் பற்றி அவனிடம் எதுவும் பேசாததால், யாருக்கும் தெரியாத விஷயம் அப்படியே முடிந்துவிடும் என்றுதான் விக்ரமும் நினைத்திருந்தான்.

தேவியை அப்படியே மறக்க நினைத்து நந்தினியை ஏற்றுக் கொள்ளவும் தயாராகி இருந்தான். அந்த நிமிடத்தில்  யாருக்கும் தெரியாதென்று நினைத்த விஷயத்தை சபை நடுவே எழுப்பி, தன்னை அசிங்கப்படுத்தி, தேவியின் வாழ்க்கையையும் கேள்விக்குறியாய் மாற்ற முயன்ற நந்தினியின் மீதுதான் அவனது முழுக் கோபமும் இருந்தது.

இப்போது தேவியின் நியாயமான கோபமும், ஆண் ஒருவன் முழுமையாய் அவளைக் கண்டு விட்ட ஆதங்கமும், அவளால் இவர்கள் கல்யாணம் நின்று போன காரணத்தால் எழுந்த குற்றவுணர்ச்சியும் தான் அவளை அமைதியாய் இருக்க வைத்தது என்ற உண்மையும் புரிந்துவிட அவள் மேல் போட்டு வைத்திருந்த வெறுப்பு முகமூடி மெல்ல ஆட்டம் கொள்ள அவளை நெகிழ்வுடன் நினைத்துக் கொண்டான் விக்ரம்.

எழுந்தவன் தேவியிடம் செல்ல அவள் குத்த வைத்து அமர்ந்து கைகளைக் கட்டிக் கொண்டு அதற்குள் தலையைக் கொடுத்தபடி குனிந்திருந்தாள். ஒரு நொடி அவளை சற்று அனுதாபத்துடன் பார்த்தவன், “ஹூக்கும்…” எனத் தொண்டையைக் கனைக்க நிமிர்ந்தவள் விழிகள் கண்ணீரில் நிறைந்திருந்தாலும் முறைத்தன.

“தூங்காம என்ன பண்ணிட்டிருக்க…” அதட்டலாய் சொல்ல முயன்றாலும் மென்மையாகவே வெளிவந்தது குரல். அவள் பதில் சொல்லாமல் அமைதியாய் இருக்க, “போய் படுத்துத் தூங்கு…” என அதிகாரமாய் சொல்ல முறைப்புடன் எழுந்தவள் பாயை அங்கேயே விரிக்க, “ஏய்…! இங்கெல்லாம் படுக்கக் கூடாது…” என்றான் அவன்.

பாயை எடுத்து வந்து கட்டில் அருகே விரித்தவள், படுத்துக் கொள்ள அதற்கு மேல் அவளை எதுவும் வற்புறுத்தாமல் லைட்டை அணைத்துவிட்டு கட்டிலில் சென்று அமர்ந்தான் விக்ரம். முதுகைக் காட்டிப் படுத்திருந்தவளைப் பார்த்தபடி படுத்தவன் மனது ஏனோ சற்றே லேசாகியிருந்தது. அவள் மேல் தனக்கு மட்டுமல்ல, அவளுக்கும் தன்மேல் ஒரு விருப்பம் இருந்ததை அவளது பார்வையிலும், சிரிப்பிலுமே கண்டு கொண்டவன் அவன். குடும்ப சூழ்நிலை கருதி அவன் அதை எல்லாம் தூக்கிப் போட்டு நந்தினியை மணக்க நினைத்தாலும் மனதில் உதித்த முதல் காதல் அத்தனை சீக்கிரம் கருகி விடாமல் மணத்துக் கொண்டு தானிருந்தது.

“ஒருவிதத்தில் இந்தக் கல்யாணம் நடந்ததும் நல்லதுக்குத் தானோ..? அதனால் தானே என் மனதுக்குள் நுழைந்தவளே வாழ்க்கையிலும் நுழைந்திருக்கிறாள்…” என ஒரு நிமிடம் மனது சந்தோஷிக்க, “நுழைந்தது எல்லாம் சரிதான், வந்த வழிதான் சரியில்லை…” என அதே மனம் இடித்துரைத்தது. ஒரு நீண்ட பெருமூச்சுடன் அவளையே பார்த்தபடி படுத்திருந்தான் விக்ரம். உறங்கா விட்டாலும் அந்த இரவில் மனதில் ஒரு இதத்தை உணர்ந்தான்.

தேவியின் விழிகள் மூடி இருந்தாலும் உள்ளம் விழித்துக் கிடந்து தனக்குள் பொருமிக் கொண்டிருந்தது.

“ஏதோ இவங்க ஆசைப்பட்ட கல்யாணம் நம்மால நின்னு போச்சேன்னு வருத்தப்பட்டா, வாய்க்கு வந்தபடி எல்லாம் பேசுதே இந்தப் பாண்டியரு… இவுக அப்படியே பேரழகன், இவங்களை மயக்கி இவங்க சொத்துக்கு ஆசைப்பட்டு இந்தக் கல்யாணத்தை நிறுத்தறதுக்கு… அதும் என்ன வார்த்தை சொல்லிட்டாரு, எவனோ யூஸ் பண்ண என்னை இவர் தலைல கட்டி வைக்க பிளான் போட்டாங்களாம்… ச்சீ, என்னைப் பத்தி தெரிஞ்சிருந்தும் எப்படி இப்படிலாம் யோசிக்க முடியுது…?” அந்த வார்த்தையை நினைக்கும் போதே மனதின் வலி கண்ணீராய் வெளிப்பட்டது.

“நாங்க என்ன வேணும்னா இப்படி சொன்னோம்… என்னோட அழுகையும், நான் ஏதாவது பண்ணிப்பனோங்கிற பயமும் சேர்ந்து தான நந்தினிய இந்த முடிவு எடுக்க வச்சுது… கல்யாணத்துக்கு முன்னாடி இதைப் பத்தி இவருகிட்ட கேட்டா, உயிரைக் காப்பாத்த தான் இப்படிப் பண்ணேன்… இதுல என் தப்பு இல்லைன்னு சொல்லி தப்பிச்சிடுவார்னு தான கல்யாணத்தன்னிக்கு, நந்தினி இதை சபைல சொல்லி தாலி கட்ட வச்சா… இப்ப அவ நினைச்சது சரிங்கற மாதிரிதான இவரும் பேசறாரு… முன்னமே சொல்லிருந்தா இந்தக் கல்யாணமே நடந்திருக்காதோ…? ஒருவேளை, என் அப்பாக்கு பதிலா நான் செத்திருப்பனோ…” யோசிக்கும்போது மனம் மிகவும் வலித்தது.

“ச்சே… ஏன் என் வாழ்க்கைல இப்படிலாம் நடக்குது…? அன்னைக்கு அந்த சம்பவம் மட்டும் நடக்காம இருந்திருந்தா இவர் நந்துவைக் கல்யாணம் பண்ணிட்டு சந்தோஷமா இருந்திருப்பார்… பிடிக்காத பொண்டாட்டி பார்த்தாக் குத்தம், கை பட்டாக் குத்தம்னு இப்படி என்னைக் குத்தம் சொல்ல வேண்டி வந்திருக்காது…” விழிகள் கரகரவென்று உருக தலையணை கண்ணீரால் நனைந்து கொண்டிருந்தது. மனது அந்த நாள் நினைவுகளுக்குப் பறந்து சென்றது.

தேவிக்கு இரண்டு நாட்களாகவே தலை சுற்றலும், வாந்தி வருவது போலவும் தோன்றியது. உடம்பில் எப்போதும் ஒரு அசதி சேர்ந்து கொள்ள சோர்வுடன் வீட்டிலேயே படுத்துக் கிடந்தவளைத் தேடி நந்தினியே வந்துவிட்டாள்.

“தேவி, எவ்ளோ தடவ கூப்பிட்டேன்… அங்க கல்யாணத்துக்கு சொந்தக்காரங்க எல்லாம் வந்து போகத் தொடங்கிடாங்க, நீ இங்கயே படுத்துக் கிடக்கற… என்னாச்சுடி, உடம்பு முடியலைன்னா டாக்டர் பார்த்துட்டு வரலாமா…?” பரிவுடன் கேட்டாள் நந்தினி.

அவள் வந்ததும் எழுந்து அமர்ந்து அவிழ்ந்த கூந்தலை அள்ளிக் கொண்டையாய் போட்டுக் கொண்ட தேவி தோழியிடம் சலிப்புடன் கூறினாள்.

“நந்து, என்னத்த தின்னேன்னு தெரியல, ஒருமாதிரி தலை சுத்தலா வாந்தி வர போல இருக்கு…”

“ம்ம்… பரி அக்காகிட்ட வேணும்னா போயிப் பார்ப்பமா…? எதாச்சும் மாத்திரை தரும், வாங்கிப் போடலாம்…”

“ப்ச், இல்லடி இஞ்சி கஷாயம் வச்சுக் குடிச்சேன், கொஞ்ச நேரத்துல சரியாகுமான்னு பார்க்கலாம்…”

“ம்ம்… சரி, நீ ஏன் இங்க தனியா கிடக்க, அங்க வீட்டுக்கு வந்தா நானாச்சும் பார்த்துப்பன்ல…” அன்போடு கேட்டவளை நெகிழ்வுடன் நோக்கியவள்,

“அங்க உறவுக்காரங்க வரவும், போகவுமா இருப்பாங்க… நீ இவ்ளோ நேரம் இங்க வந்து உக்கார்ந்திருக்க, அம்மா தேட மாட்டாங்களா…?” என்றவளின் கலைந்த தலையை ஒதுக்கி விட்ட நந்தினி, “அம்மாட்ட சொல்லிட்டு தான் வந்தேன்… இங்கன்னு தான் விட்டாங்க, இனி கல்யாணம் முடியற வரை வெளிய போகக் கூடாதுன்னு சொல்லிட்டாங்க… நீ கிளம்பி என்னோட வா, போகலாம்…” என்றாள்.

தேவி இல்லாவிட்டால் நந்தினிக்கு ஒரு கை இல்லாதது போல் தோன்றும் என்பது தேவிக்கும் தெரியுமாதலால் மேலே எதுவும் சொல்லாமல் எழுந்தவள், “சரி நீ உக்காரு… நான் மேலுக்கு ஊத்திட்டு வந்திடறேன்…” என்று மாற்று உடையுடன் குளியலறைக்கு செல்ல நந்தினி யோசனையுடன் அமர்ந்திருந்தாள். சிறிது நேரத்துக்குப் பிறகு ஒரு முடிவுக்கு வந்தவள் மொபைலுடன் வெளியே வந்தாள்.

அவள் மனதில் தேவி சொன்னது உறுத்தலாகவே இருக்க, எப்படி தெளிவுபடுத்திக் கொள்வதென்று யோசித்தவளுக்கு பரிமளா நினைவில் வர அழைத்தாள். எதிர்ப்புறம் அலைபேசி எடுக்கப்பட பரிமளாவின் குரல் கேட்டது.

“என்னம்மா கல்யாணப் பொண்ணு, கல்யாண பிஸில இருப்பேன்னு நினைச்சா எனக்கு கால் பண்ணிருக்க…?”

“அக்கா, நீ எங்கிருக்க…? உன்கிட்ட ஒரு முக்கியமான விஷயம் பேசணும், தனியா இருக்கியா…?”

“ஆமா ஆஸ்பத்திரில தனியா இருக்கேன், என்ன நந்து…”

“அ..அதுவந்து, இது கொஞ்சம் ரகசியமானது, வெளிய யாருகிட்டயும் சொல்லிடாத…”

“என்னடி பீடிகை பலமாருக்கு, அப்படியென்ன ரகசியம்…?”

“அ..க்கா வந்து, இந்த மாசமாறது எவ்ளோ நாள்ல தெரியும்…?”

“மாசமாறதுன்னா..? என்ன மாசமாகறது…?”

“ஐயோ அக்கா, அதை எப்படி கேக்கறது…?” திணறியவள் யோசித்துவிட்டு, “கல்யாணமாகி ஒண்ணு சேர்ந்தா எவ்ளோ நாள்ல குழந்தை உண்டானது தெரியும்…?” நந்துவின் கேள்வியைக் கேட்டு பரிமளா சிரித்தாள்.

“என்னடி, நாலு நாள்ல கல்யாணத்தை வச்சிட்டு இப்பவே இதெல்லாம் கேக்கற…?”

“ப்ச்… சொல்லுக்கா…”

“எவ்ளோ நாள்லன்னா, ரெண்டு வாரத்துல கூட அதுக்கான அறிகுறி சிலருக்கு தெரியத் தொடங்கும்… மசக்கை, நாள் தள்ளிப் போறது, காலைல எழுந்திருச்சா குமட்டறது இப்படில்லாம் இருந்தா யூரின் டெஸ்ட் பண்ணிப் பார்க்கலாம், ஆனாலும் பாதிக்குப் பாதி தான் அந்த நாள்ல கன்பர்ம் பண்ணற வாய்ப்பு இருக்கும்… எதுக்குக் கேக்கற…?”

“என் பிரண்டு ஒருத்திக்கு இப்படில்லாம் அறிகுறி இருக்குன்னு சொன்னா, அதான் தெரிஞ்சுக்க கேட்டேன்…”

“ஓ… பிரக்னன்ஸி கிட் வாங்கி யூரின் டெஸ்ட் பண்ணிப் பார்த்துட வேண்டியது தான…”

“ம்ம்… அக்கா, இர்ரெகுலர் பீரியட்ஸ் இருக்கவங்களுக்கும் இப்படி ஆகறது சாத்தியமா…?”

“கண்டிப்பா சாத்தியம் தான்… ரெகுலர் பீரியட்ஸ் இருக்கறவங்களுக்கு இந்தக் கணக்கு வைக்கிறது சுலபம்… ஆனா இர்ரெகுலர் இருக்கறவங்களுக்கு டெஸ்ட் பண்ணிக்கறது தான் நல்லது…”

“ம்ம்… சரிக்கா, அந்த யூரின் டெஸ்ட் பண்ணற கிட் எங்க கிடைக்கும்…?”

“அது எல்லா மெடிக்கல் ஷாப்புலயும் கிடைக்குமே…?”

“ஓ..! எனக்கு ஒரு ஹெல்ப் பண்ண முடியுமாக்கா…? நீயே ஒரு கிட் வாங்கித் தர்றியா…?”

“என்ன நந்து..? எதுவும் வில்லங்கமா, நீ பேசறதைப் பார்த்தா ஒண்ணும் சரியில்லையே…” பரிமளா ஒரு அக்கா இடத்தில் இருந்து அக்கறையும் சந்தேகமுமாய் கேட்க நந்துவுக்கு சற்றே தயக்கமாய் இருந்தது.

“ப்ளீஸ் அக்கா, என் பிரண்டுக்கு ரொம்ப நாளா குழந்தை இல்லாம இருக்கு, இது தெரிஞ்சுகிட்டா சந்தோஷப் படுவா… அதுக்கு தான் கேக்கறேன்…” என பொய்யை கோர்த்து விட,

“ம்ம்… சரி நந்து, நான் வாங்கித் தர்றேன்… வச்சிடட்டுமா…?” என பரிமளா வைத்துவிட்டாள். அதே நேரம் குளித்து வந்து அறைக்குள் உடை மாற்றிக் கொண்டிருந்த தேவியின் காதில் வெளிப்பக்கம் நின்று பேசிக் கொண்டிருந்த நந்தினியின் வார்த்தைகள் பாதியிலிருந்து விழுந்திருக்க குழப்பத்துடன் தாவணியை சுற்றிக் கொண்டு வெளியே வர அவளைக் கண்ட நந்தினி சட்டென்று திகைத்தாள்.

“எ..என்னடி, அதுக்குள்ள குளிச்சுட்டியா…? எ..எப்ப வந்த…?”

“நீ ஏதோ யூரின் டெஸ்ட் பண்ணற கிட்னு சொல்லிட்டு இருந்தியே, அப்பவே வந்துட்டேன்… யாரு, பரிமளாக்கா கிட்ட பேசிட்டு இருந்தியா…?” என்றாள் யோசனையுடன்.

“ம்ம்… இ..ல்ல, என் பிரண்டு ஒருத்தி, அது… உனக்கு இப்படி இருக்குன்னு சொன்னனா, யூரின் இன்பெக்ஷனா இருந்தாலும் இருக்கும்னு சொன்னா, அதை டெஸ்ட் பண்ண ஒரு கிட் இருக்குன்னு சொல்லிட்டு இருந்தா…” என தோழியிடம் ஏதோ திணறலாய் சொல்லி சமாளித்தாள் நந்து.

“ஏய்…! இருடி, அதுக்கு எதுக்கு பதட்டப்படற…? யூரின் இன்பெக்ஷன்னா நிறைய தண்ணி குடிச்சா சரியாகிடும்… நீ என்னைப் பத்திக் கவலைப்படாம கல்யாணப் பொண்ணா சந்தோஷமா அதைப் பாரு…” என்றவள் தலை சீவ உள்ளே செல்ல நந்தினி பெருமூச்சுடன் உள்ளே வந்தாள்.

தேவி தலை சீவி, ஸ்டிக்கர் பொட்டு ஒன்றைத் தொட்டுக் கொண்டு, “நான் ரெடி, போலாமா…?” எனக் கேட்க நந்தினி பதில் சொல்லாமல் எதுவோ யோசித்துக் கொண்டிருந்தாள்.

“என்னடி ஏதோ, யோசிச்சிட்டு இருக்க…?”

“ஹூம், அ…அதெல்லாம் ஒண்ணுமில்ல, தண்ணி குடிச்சிட்டு வந்துடறேன்…” என்றவள் எழுந்து அடுக்களைக்கு செல்ல, தேவி மீண்டும் ஒருமுறை தன்னைக் கண்ணாடியில் பார்த்துக் கொண்டிருக்க தந்தை சரவணனின், “எம்மாடி தேவி…” என்ற குரலைக் கேட்டு வெளியே வந்தாள்.

அடுக்களையிலிருந்து நந்தினியும் வர, “அட, நந்தினிக் கண்ணு, நீயும் இங்கதான் இருக்கியா…? அப்பா உன் கல்யாணத்துக்கு பரிசு கொடுக்க ஒரு செயின் எடுத்திட்டு வந்தேன்… டிஸைன் பிடிச்சிருக்கானு பாரு…” என்றபடி ஒரு நகைக்கடை பர்ஸை எடுத்து நீட்ட நந்தினிக்கு முன்பு தேவி ஆவலுடன் வாங்கிக் கொண்டாள்.

“ம்ம்… சூப்பர்மா, எங்க பழைய மாடல் செயினை வாங்கிட்டு வருவியோன்னு நினைச்சேன்… டிஸைன் நல்லாருக்கு, நந்து உனக்குப் பிடிச்சிருக்காடி…” எனத் தோழியிடம் நீட்ட அவள் புன்னகையுடன் தலையாட்டினாள்.

“அப்பா, நகையா வாங்கிக் கொடுத்தா தான் பரிசா…? எங்களுக்காக எல்லா வேலையும் ஓடியாடிப் பார்த்துட்டு நீங்க எவ்ளோ கஷ்டப் படறீங்க…? எதுக்குப்பா இதெல்லாம்…?” என நந்தினி கேட்க,

“அதுசரி… என் பொண்ணுக்கு இந்த அப்பா வகையா ஏதாச்சும் செய்யாம இருந்தா நல்லாருக்குமா…?” என்ற சரவணன், நந்தினியின் தலையை நேசத்துடன் தடவி, “எனக்கு நீயும், தேவியும் ஒண்ணு தானடா நந்து மா…” என்றார். அதைக் கேட்டு நெகிழ்வுடன் அவர் தோளில் நந்தினி சாய்ந்து கொள்ள இருவரையும் புன்னகையுடன் நோக்கினாள் தேவி.

“அதுசரி, ரெண்டு பேரும் உங்க அப்பா, பொண்ணு பாசத்துல என்னை மறந்துட்டிங்க…” எனச் சொல்ல சிரித்தனர்.

“செயின் உங்க மனசு போலவே ரொம்ப அழகாருக்குப்பா… சபைல கொடுங்க…” என அவரிடம் கொடுத்த நந்தினி, “நான் தேவியை வீட்டுக்கு கூட்டிட்டுப் போறேன் பா…” எனக் கூற அவர் தலையாட்டினார். தோழிகள் இருவரும் கை பிடித்து ஏதோ பேசிச் சிரித்தபடி செல்வதைக் கண் குளிர நோக்கி நின்றவர், “என் நந்து குடும்பம் மட்டும் இல்லேன்னா என் பொண்ணும், நானும் அனாதையாவே வாழ்ந்திருப்போம்…” என நினைத்தவர் நகையை அலமாரியில் பத்திரப் படுத்திவிட்டு வெளியே கிளம்பினார்.

தோழியர் இருவரும் வீட்டுக்குள் நுழையும்போதே சுபாஷினி, “நந்து, ஈரோடுல இருக்கற பெரியத்தை வந்திருக்காங்க, கல்யாணப் பொண்ணை, எதுக்கு வெளிய அனுப்புனன்னு ஒரே திட்டு, போயி பேசு… தேவி, நீ ஏன் வெளிறிப் போன போல இருக்க…? உடம்புக்கு எதுவும் சுகமில்லையா…?” எனக் கேட்டபடி தேவியின் கழுத்து, நெற்றியில் தொட்டுப் பார்க்க தேவிக்கு அந்த அன்னையின் நேசத்தில் மனம் குளிர்ந்தது. “இல்லம்மா, கொஞ்சம் சோர்வா இருக்கு அவ்ளோதான்…” தேவி சொல்லிக் கொண்டிருக்க அவசரமாய் வெளியே ஓடி வந்தாள் நந்தினி.

“தேவி, என் மொபைலை சரவணன் அப்பா வரவும் பேசிட்டு அங்கயே வச்சிட்டு வந்துட்டேன் போலருக்கு… நீ வீட்டுக்குப் போயி எடுத்திட்டு வந்துடறியா…?” என்றாள்.

“உனக்கு போனை அங்கயும், இங்கயும் வச்சிட்டு வர்றதே பொழப்பாப் போச்சு, இனி இந்தப் புள்ள மறுபடியும் அங்க போகணுமா…?” சுபாஷினி மகளைக் கடிய, “பரவால்லமா, நான் எடுத்திட்டு வரேன்…” என சென்றாள் தேவி.

மறத்தலும் மன்னித்தலும்

இல்லாத உறவில்

மகிழ்ச்சிகள் மலர்வதில்லை…

தன்னலங்களை

தவிர்க்கும் போது

பேரன்பின் பேரொளி

வாழ்க்கையை அழகாக்குகிறது….

Advertisement