Advertisement

அத்தியாயம் – 12

கண்ணில் கண்ட காட்சியில் வெலவெலத்துப் போய் அதைக் காண முடியாமல் அதிர்ச்சியில் திரும்பி நின்றாள் நந்தினி. அந்தப் பெரிய குளியலறையின் வெளியே இருந்த வராண்டாவில் தரையில் தேவி மல்லாந்து படுத்திருக்க அவள் மீது கவிழ்ந்து படுத்திருந்தான் விக்ரம்.

தேவியின் உடலில் பொட்டுத் துணியின்றி இருக்க, விக்ரம் இடுப்பில் வெறும் டவலுடன் அவள் இதழில் தனது இதழைப் பதித்திருந்தான். ஒரு நொடி என்ன நடக்கிறது எனப் புரிந்து சுதாரித்துக் கொண்டு நந்தினி திரும்பிப் பார்ப்பதற்குள் விக்ரம் தேவியைக் கன்னத்தில் தட்டி குழறலுடன் அழைத்துக் கொண்டிருந்தான்.

“ஏ..ய்…! தேவி, எழு…ந்திருடி…” என அவளைத் தட்டிப் பார்த்துவிட்டு போதையுடன் அவள் மீதே சரிந்து விட்டான். அதற்கு மேல் பார்த்து நிற்காமல் ஓடினாள் நந்தினி.

வேகமாய் விக்ரமை விலக்கி அங்கிருந்த டவலை எடுத்து தேவியின் உடலில் சுற்றியவள், அவள் பெரிதாய் மூச்செடுக்க, மெல்ல உடல் அசைவதைக் கண்டு தாங்கலாய் எழுப்பி அருகே இருந்த அறைக்கு அழைத்துச் சென்றாள். அவளைக் கட்டிலில் படுக்க வைத்து கை, கால்களைத் தேய்த்து விட்டவளுக்கு அவளது நனைந்த தேகம் நடந்ததைப் புரிய வைத்திருந்தது.

நந்தினி அசந்து உறங்கிய நேரத்தில் இங்கே குளிக்க வந்த தேவி குளியலறைக்குச் சென்று ஹீட்டரை ஆன் செய்திருக்க வேண்டும். தேவிக்கு ஷவரில் குளிக்க விருப்பம் என்பதால் தலைக்கு சீயக்காய் தேய்த்துக் குளிக்கையில் அவ்வப்போது இங்கே வந்து குளிப்பவள் தான். ஷாக்கடித்து விழுந்தவளை சத்தம் கேட்டு விக்ரம் காப்பாற்றப் போயிருக்க வேண்டும். ஆனால் விக்ரம் எப்போது இங்கு வந்தான்…? இப்படி மூக்கு முட்டக் குடித்து போதையில் வந்தவன் அவளை ஏதாவது செய்திருப்பானா…? அவள் காணும்போதே முத்தமிட்டுக் கொண்டிருந்தவன் அதற்கு முன் என்ன செய்தானோ என நந்தினியால் யோசிக்காமல் இருக்க முடியவில்லை.

“தேவியை விக்ரம் இப்படிக் கண்டதை அறிந்தால் தேவி என்ன செய்வாள்…? ச்சே… எல்லாத்துக்கும் தான் உறங்கிப் போனது தான் காரணம்…” என வருந்தியவள் தவித்தாள். தேவிக்கு முழுமையாய் உணர்வு வந்திருக்கவில்லை. ஒரு நைட்டியை அவளுக்கு அணிவித்து விட்டு விக்ரமைக் காண வந்தாள் நந்தினி.

அவன் அதே இடத்தில் ஏதேதோ குழறியபடி, “மஞ்சக்..கிளி… உனக்கு என்னா..ச்சு, எழுந்திரு…” என அருகே வெறும் கையை காற்றில் வீசியபடி தேவியை எழுப்பிக் கொண்டிருக்க, டவல் விலகி அவன் சற்றே அலங்கோலமாய் கிடப்பதைக் கண்டு கடுப்புடன் அங்கே வந்த நந்தினி ஒரு மக்கில் தண்ணி எடுத்து அவன் மீது ஊற்றிவிட்டு அறைக்கு சென்று விட்டாள்.

சட்டென்று மேலே தண்ணீர் விழவும், சற்றே உணர்வு வந்து “ம..ழ வரு…தா…?” என கண்ணைத் திறந்து பார்த்த விக்ரம், தள்ளாடியபடி எழுந்து அவனது அறை நோக்கி நடந்தான்.

அன்று விக்ரமுக்கு, மேஸ்திரி பாண்டியன் வெறும் கள்ளைக் கொடுக்காமல் அதில் ஏதோ போதை வஸ்துவைக் கலந்து குடிக்கக் கொடுத்திருந்தான். முதலில் வீட்டுக்கு போதையுடன் செல்ல வேண்டுமே என யோசித்து தயங்கிய விக்ரம், அத்தையும், மாமாவும் பெரிய காரியத்துக்குப் போனால் திரும்ப லேட்டாகும் எனத் தெரிய, நந்தினியும் லைப்ரரிக்கு சென்று விடுவாள் என நினைத்து அந்த போதைக் கள்ளை ருசிக்கும் ஆசையில் வாங்கிக் குடித்துவிட்டான். பாண்டியன் அவனை வீட்டு முன் இறக்கி விட்டுச் செல்ல, வெறுமனே சாத்தியிருந்த கதவைத் திறந்து அறைக்கு வந்தவன், உடை மாற்றிக் கொண்டிருக்கையில் தான் தேவியின் அலறல் கேட்டது. லுங்கியைத் தேட நேரமின்றி கிடைத்த டவலை சுற்றிக் கொண்டு அந்த போதையிலும் அவள் சத்தம் கேட்டு சென்றிருந்தான் விக்ரம். கல்யாணத்துக்கு இன்னும் மூன்று வாரமே இருக்கும் நிலையில் விக்ரமின் இந்த தரிசனம் நந்தினிக்கு அதிர்ச்சி கொடுக்கும் ஒன்றாய் இருந்தது. நந்தகுமாரும், சுபாவும், குடும்பத்தில் முக்கியமானவர் என்பதால் தான் தவிர்க்க முடியாமல் அந்தப் பெரியவரின் காரியத்துக்கு சென்றிருந்தனர். அந்த நேரத்தில் இப்படியெல்லாம் நடந்திருக்க நந்தினிக்கு என்ன செய்வது என்றே புரியவில்லை.

தேவியின் மூடியிருந்த கண்கள் மெல்ல அங்குமிங்கும் அசைய, அவளையே பார்த்துக் கொண்டிருந்த நந்தினி மெல்ல தட்டி அழைத்தாள்.

“தேவி…! எழுந்திருடி…” அவளது கண்கள் மெல்லத் திறக்க, பாரமாய் கனத்த தலையைப் பிடித்துக் கொண்டாள்.

“தேவி, இந்தா இந்தத் தண்ணியைக் கொஞ்சம் குடி…” என குடிக்கக் கொடுத்தாள் நந்தினி.

“ந..நந்து, எ..எனக்கு என்னாச்சு…” தலையைக் கையில் தாங்கியபடி எழுந்து அமர்ந்த தேவிக்கு உடம்பெல்லாம் அடித்துப் போட்டது போல் பயங்கரமாய் வலிக்க மெல்ல நடந்தது நினைவு வந்தது.

மாற்று உடையுடன் நந்தினியின் வீட்டுக்கு வந்தவள் மாடியில் அவள் உறங்கிக் கொண்டிருப்பதைக் கண்டு, எழுப்பாமலே கீழே இருந்த குளியலறைக்கு சென்றிருந்தாள். உடையை அவிழ்த்து ஷவரை ஆன் செய்தவள் தண்ணி ஜில்லென்று இருக்கவே ஹீட்டர் சுவிட்சை ஆன் செய்தது தான் நினைவில் இருந்தது, அதன் பின் நடந்தவை எதுவும் அவளுக்குத் தெரியவில்லை.

“எனக்கு என்னாச்சுடி நந்து, ஷாக் அடிச்சிருச்சா…? நீதான் வந்து எழுப்பி விட்டியா…?” எனக் கேட்டபடி அவள் அணிந்திருந்த நந்தினியின் நைட்டியைக் கண்டவள், “நீயா எனக்கு டிரஸ் மாத்தி விட்ட…?” எனக் கேட்க நந்தினிக்கு ஒரு நொடி என்ன சொல்வதென்றே தெரியவில்லை.

விக்ரம் செய்ததை சொன்னால் இவளால் நிச்சயம் தாங்கிக் கொள்ள முடியாது எனத் தோன்ற சட்டென்று ‘ஆம்’ என்பது போல் தலையாட்டினாள்.

“நல்லவேளை, நீ வந்த…? சத்தம் கேட்டு வேற ஆம்பளைங்க யாராச்சும் வந்திருந்தா என்னாயிருக்கும்…?” என்றவள் கை கால் எல்லாம் வலிக்க, “உடம்பெல்லாம் அடிச்சுப் போட்ட போல அசதியா இருக்கு நந்து… நான் கொஞ்சம் படுக்கறேன்…” எனக் கூற,

“சரி ரெஸ்ட் எடு, உனக்கு குடிக்க ஏதாச்சும் எடுத்திட்டு வரேன்…” என்ற நந்தினி அடுக்களைக்கு சென்றாள். அவளுக்கு மனதுக்குள் ஒருவித அச்சமாகவே இருந்தது.

“கடவுளே…! தப்பா எதுவும் நடந்திருக்கக் கூடாது… நடந்த எதுவும் இவளுக்குத் தெரியல, மாம்ஸ்க்கு போதை தெளிஞ்சு நினைவு வந்ததும் இதைப் பத்தி எதுவும் இவகிட்ட உளறிட்டா என்ன பண்ணறது…? நடந்த விஷயம் தெரிஞ்சா இவளால தாங்கிக்க முடியாதே… இதை அப்பாகிட்ட சொல்லலாமா, வேண்டாமா…? ப்ச்…! என்ன சோதனை இது…” எனத் தனக்குள் அல்லாடியபடி பாலைச் சுட வைத்து தேவிக்குக் கொண்டு சென்றாள்.

அதற்குள் தேவி களைப்புடன் உறங்கி இருந்தாள். சோர்ந்த அவள் முகத்தை யோசனையுடன் பார்த்த நந்தினி அருகே அமர்ந்து கலைந்திருந்த தலையைக் கோதிவிட்டாள். மனதுக்குள் குழப்பமும், பயமும் ஏறியிருக்க, மீண்டும் கண்ட சம்பவத்தை நினைத்துப் பார்த்தவளுக்கு, விக்ரம் அவளுக்கு மூச்சு கொடுக்க தான் இதழில் இதழ் வைத்திருக்க வேண்டும்… மற்றபடி அவன் எதுவும் செய்திருக்க மாட்டான் எனத் தோன்ற சற்றே ஆசுவாசமாய் மூச்சு விட்டாள்.

“ஆ..ஆனாலும், தேவியை அவன் இப்படிப் பார்த்ததை அறிந்தால் இ..இவள் எப்படி எடுத்துக் கொள்வாள்..? துடித்துப் போய்விடுவாளே…? பாவாடை தாவணி அணிவதற்கே உடல் தெரியாமல் இருக்க அங்கங்கே பின் குத்தி வைக்கும் பேதைப் பெண், அந்நிய ஆடவன் ஒருவன் தன்னை முழுமையாய் கண்டுவிட்டான் எனத் தெரிந்தால்…” அதை நினைத்துப் பார்க்கவே நந்தினிக்கு அதிர்ச்சியாய் இருந்தது.

“இந்த விக்ரம் இப்படிக் குடித்து போதையில் வந்திருக்கிறாரே, எழுந்தால் நடந்தது நினைவிருக்குமா…? மறந்திருக்குமா…?” அவளால் ஒரு முடிவுக்கு வர முடியவில்லை.

மாலை வரை நல்ல உறக்கத்தில் இருந்த விக்ரம் எழுந்தபோது தலை பயங்கரமாய் வலித்தது. பாத்ரூம் செல்ல எழுந்தவன் தலை சுற்றுவது போல் தோன்ற அப்படியே கட்டிலில் அமர்ந்து விட்டான்.,

“ச்சே…! என்ன கருமத்தை அந்தக் கள்ளுல கலந்து கொடுத்தானோ…? இப்பவும் ஒரு மாதிரி கிறக்கமா இருக்கு…” எனத் தலையைப் பிடித்தபடி அமர்ந்தவனுக்கு, “எப்படி வீட்டுக்கு வந்தோம்…? மாமா, அத்தை வந்துட்டாங்களா..? என்னைப் பார்த்திருப்பாங்களா…?” என யோசித்தவனுக்கு பாண்டியன் வண்டியில் வந்தது முதல் தெளிவின்றி அங்கொன்றும், இங்கொன்றுமாய் நினைவு வந்தது.

“ம..மஞ்சக் கிளிக்கு ஷாக் அடிச்சுது, சத்தம் கேட்டு ஓடிப் போயி பார்த்தா பாத்ரூம்ல மயங்கிக் கிடந்தா… ஐயோ..! மூச்சு விட முடியலியேன்னு நான் அவ வாய்ல வாய் வச்சு ஆக்சிஜன் கொடுத்தேன்… அப்..புறம் என்னாச்சு…? அவ எழுந்தாளா…?” யோசித்தவனுக்கு எதுவும் பிடிபடவில்லை.

“இதெல்லாம் நிஜமா நடந்துச்சா…? இல்ல கனவு எதுவும் கண்டேனா…?” கட்டிலிலிருந்து இறங்கி வெளியே வந்தவன் குழப்பத்துடன் யோசித்துக் கொண்டே அந்த குளியலறைப் பக்கம் சென்றான். யோசனையுடன் பார்த்து நின்றவன் பின்னில் நந்தினியின் குரல் கேட்டது.

“என்ன மாம்ஸ், போதை தெளிஞ்சிருச்சா…?” அவள் குரலில் ஒரு அழுத்தம் இருக்க திகைத்து திரும்பினான்.

“அ..அது வந்து.. நந்து, லேசா கள்ளு குடிச்சேன்… அ..அதுல எதையோ கலந்திருப்பாங்க போலருக்கு… ஒ..ஒரு மாதிரி ஆகிருச்சு, நீ ஒண்ணும் பீல் பண்ணாத… நான் குடிகாரன் எல்லாம் இல்ல. மாமா, அத்தை வந்துட்டாங்களா…? இதை அவங்ககிட்ட எதுவும் சொல்லிடாத…” என்றவன் அதற்கு மேல் அங்கு நிற்காமல் ஒரே ஓட்டமாய் அறைக்கு சென்று விட நந்தினி குழப்பமாய் பார்த்து நின்றாள்.

சிறிது நேரம் முன்பு தான் தேவி அவள் வீட்டுக்கு கிளம்பி இருந்தாள். நந்துவும், சுபாவும் சிறிது நேரத்தில் வந்து விடுவதாய் போனில் அழைத்துக் கூறி இருந்தனர். லைப்ரரியில் காத்திருந்த தோழி போனில் அழைக்கவும், மறுநாள் வருவதாய் சொல்லி வைத்துவிட்டாள். ஆனாலும் இந்த விஷயத்தை யாரிடமும் கூறாமல் மறைப்பதா, சொல்லி விடுவதா என்ற தயக்கம் அவள் மனதைப் பிராண்டிக் கொண்டே இருந்தது.

“சரி, நடந்தது ஒரு விபத்து… இதை யாரிடமும் சொல்ல வேண்டாம். தேவிக்கு தெரிந்தால் உயிரையே விட்டு விடுவாள்… மாம்சுக்கும் நினைவிருப்பது போல் தெரியலை, நாமும் அமைதியாய் இருந்துடுவோம்…” எனத் தற்காலிகமாய் அப்பிரச்சனைக்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்து பெற்றோர் வந்ததும் குளிக்க மாற்று உடை எடுத்து வைத்தவள் விக்ரம்க்கு காபி கொண்டு போய் கொடுக்க, அவன் எதுவும் பேசாமல் குனிந்தபடி வாங்கிக் கொண்டான். அவள் இருந்த மனநிலையில் அவளும் பேசாமல் சென்று விட்டாள். தான் குடித்து வந்ததுக்கு அவள் கோபமாய் இருக்கிறாளோ என விக்ரம் நினைத்துக் கொண்டான்.

தேவிக்கு உண்மையில் ஷாக் அடித்ததா, அல்லது கனவு எதுவும் கண்டோமா என்ற குழப்பத்தில் அமர்ந்தவனுக்கு சட்டென்று அவள் இதழின் மென்மை மனதில் வந்து உடல் எங்கும் ஒரு சுகமான உணர்வு பரவ, “மென்மையான தேவியின் உடையில்லா உடலும் சட்டென்று கண்ணுக்குள் வந்து போக திகைத்தவன் தலையை குலுக்கிக் கொண்டான்.

“ச்சே… இரண்டு வாரத்தில் நந்துவுடன் கல்யாணத்தை வைத்துக் கொண்டு, தேவியின் உயிரைக் காப்பாற்ற சென்றவன் இப்படி யோசிப்பதும் அநாகரீகம்… நடந்தது உண்மையோ, கனவோ எதுவாய் இருந்தாலும் அதைப் பற்றி யோசிக்கக் கூடாது… மஞ்சக்கிளி என் வாழ்வில் இல்லை. எனக்கு நந்தினி தான்…” என மனதில் ஆணித்தரமாய் பதிய வைத்துக் கொண்டான் விக்ரம். ஆனால் விதி ஏனோ மாற்றி நினைத்து விட்டது.

இரண்டு நாள் சென்றிருக்க நந்தினியும் அந்த நிகழ்வை மறந்து கல்யாண வேலையில் பிசியாகி இருந்தாள். சொந்த பந்தங்களுக்கு பத்திரிக்கை வைக்கும் வேலையில் அவள் பெற்றோர் மும்முரமாய் இருக்க விக்ரமின் பெற்றோர் கல்யாணத்துக்கு பத்து நாள் முன்னரே ஊருக்கு வருவதால் விக்ரமும் அவர்கள் வீட்டுக்குச் சென்று விட்டான். அதனால் தேவியைக் காணும் வாய்ப்பு அதிகம் அமையவில்லை.

எப்போதாவது மனதில் தேவியின் உருவம் தோன்றினாலும் அதை விரட்டி தனக்கு நந்தினி தான் எனத் தன்னைத் தெளிவாக்கிக் கொண்டான் விக்ரம். அந்த சம்பவத்தையும் அவர்கள் மறந்து போகத் தொடங்கி இருந்தனர்.

ஒருநாள் நந்தினியின் பெற்றோர் கல்யாண வேலையாக வெளியே கிளம்ப, தேவியை வீட்டுக்கு வரச் சொல்லி இருந்தாள் நந்தினி. இப்போதெல்லாம் தேவி ஏனோ அடிக்கடி வீட்டுக்கு வருவதில்லை என நினைக்கவும் செய்தாள். தேவியோ, விக்ரமைக் காண்பதைத் தவிர்ப்பதற்காய் நந்தினியின் வீட்டுக்கு வராமல் இருந்தாள்.

கல்யாண சேலைகளுக்கு தைத்து வந்திருந்த ஜாக்கெட்டைப் பார்த்துக் கொண்டிருந்த நந்தினி, தேவி வரவும் முறைத்தாள்.

“வாடிம்மா, இங்க எவ்ளோ வேலை கிடக்கு… எட்டிப்பார்க்காம நீ உன் பாட்டுக்கு அங்கயே உக்கார்ந்திருக்க… உன் சேலைக்கு பிளவுஸ் தச்சு வாங்கிட்டியா…?”

“ம்ம்…” என சுரத்தின்றி பதில் சொன்னவளை திகைப்புடன் நோக்கியவள், “என்னாச்சுடி…? ஒரு மாதிரி இருக்க, மாசப் பிரச்சனையா…?” எனப் பரிவுடன் கேட்டாள்.

“ப்ச்… இல்லடி, அது என்னவோ இன்னும் ஆகாம தள்ளிப் போயிட்டே இருக்கு, அதனால வந்த அசதியான்னு தெரியல, உடம்பு ஒரு மாதிரி சலிப்பாவே இருக்கு…” தேவி சொல்ல நந்தினியின் மனதில் ஏனோ அந்த சம்பவம் எட்டிப் பார்த்தது.

“ம்ம்… உனக்கு எப்ப சரியா வந்திருக்கு…? எப்பவும் முன்னப் பின்ன இர்ரெகுலரா தான ஆவ…” உதடுகள் உச்சரித்தாலும் மனம் அந்த நாளில் இருந்து கணக்குப் போட்டுப் பார்க்க சரியாய் இரண்டு வாரங்கள் முடிந்திருந்தது.

“சரி, உன் போனை எங்க வச்சேன்னு தெரியல, காணம்னு சொன்னியே… கிடைச்சுதா…?” தேவி கேட்க நந்தினி உதட்டைப் பிதுக்கினாள்.

“இன்னும் இல்லடி, நானும் பத்து நாளா எல்லா இடத்துலயும் தேடிப் பார்த்துட்டேன், அதுக்கு போன் பண்ணிப் பார்த்தாலும் சுவிட்ச் ஆப்னு வருது… சார்ஜ் இல்லாம ஆப் ஆயிருக்கும் போலருக்கு…” என்றாள் நந்தினி.

“ம்ம்… எங்காவது கிடக்கும்… சரி, மதியத்துக்கு என்ன சமையல் செய்யட்டும்…?”

“சிம்பிளா தக்காளி சாதமும் உருளை பொரியலும் பண்ணிக்கலாம், நீ போயி ரெடி பண்ணிட்டு இரு… நான் இதை எடுத்து வச்சுட்டு வர்றேன்…”

“ம்ம்… சரிடி…” என்ற தேவி எழுந்து அடுக்களைக்கு சென்றாள். சமையலுக்குத் தேவையான பொருட்களை எடுத்து வைத்துக் கொண்டு அதை நறுக்கத் தொடங்கினாள். இருவருக்கு பெரிய குக்கர் தேவையில்லை எனத் தோன்ற செல்பின் மேல் தட்டில் இருந்த சின்ன குக்கரை எடுக்க ஸ்டூலை எடுத்தாள்.

அவள் தந்தை சரவணனும் நந்தினியின் கல்யாண விஷயமாய் ஏதோ பொருள் வாங்க டவுனுக்கு செல்வதால் மதிய உணவுக்கு வர மாட்டேனென்று கூறி இருந்தார்.

ஸ்டூலில் ஏறி மேலே இருந்த சின்ன குக்கரை எடுத்தவள் அதன் அருகே இருந்த நந்தினியின் போனைக் கண்டதும் திகைத்தாள். எதையோ எடுக்க போனுடன் ஏறிய நந்தினி இங்கேயே அதை மறந்து வைத்துவிட்டு வீடெல்லாம் தேடி இருக்கிறாள் எனப் புரிய, “அடப்பாவமே…” என நினைத்தபடி அதை எடுத்துக் கொண்டு கீழே இறங்கினாள்.

“நந்து, உன் போன் கிடைச்சிடுச்சு…” சந்தோஷமாய் கத்தியபடி தோழியிடம் சென்று கூற, “அட ஆமாம், அன்னைக்கு அம்மா எதையோ எடுக்க சொன்னாங்கன்னு மேலே ஏறினேன்…” என்றவள், “என்ன தான் அப்பா புதுபோன் வாங்கிக் கொடுத்தாலும் இது எனக்கு ரொம்பப் பிடிச்ச போன்… யூஸ் பண்ணவும் ஈசியா இருக்கும்…” என்றபடி அதை வாங்கி அது சார்ஜின்றி செத்துக் கிடப்பதைப் பார்த்தவள், புது மொபைலில் இருந்த புது சிம்மை எடுத்து அந்த மொபைலில் போட்டு, சார்ஜில் போட்டு வைத்தாள்.

அந்த ராத்திரி நேரத்தில் சட்டென்று நந்தினியின் அலைபேசி அலற, உறங்காமல் பழைய நினைவுகளை அசை போட்டிருந்தவள் அதிர்ந்து துள்ளினாள். நந்தகுமார் தான் அழைத்துக் கொண்டிருந்தார். வேகமாய் போனை எடுத்து காதுக்குக் கொடுத்தாள்.

“அ..அப்பா, வந்துட்டிங்களா…?”

“ஆமா டா, ரெண்டு முறை உனக்கு போன் பண்ணிட்டேன்… அசந்து தூங்கிட்டு இருந்தியா…?”

“ஆ..ஆமாம்பா, தூங்கிட்டேன். இதா வர்றேன்…” எனக் கூறியபடியே கதவைத் திறக்க செல்ல அதற்குள் பரிமளாவும் சத்தம் கேட்டு எழுந்து வந்திருந்தாள்.

“என்ன நந்து, வந்துட்டாங்களா…?”

“ஆமாக்கா, கேட்டு கிட்ட நிப்பாங்க போலருக்கு…” என்ற நந்தினி சாவியுடன் வெளியே செல்ல பரிமளாவும் தொடர்ந்தாள். கேட்டைத் திறக்கவும் நந்தகுமாரும், சுபாவும் உறக்கம் தேங்கிய விழிகளுடன் உள்ளே வந்தனர்.

என்னை மறந்த பொழுதும் நான்

உன்னை மறக்கவில்லையே…

தன்னிலை இழந்த போதும்

உன்னிலை காக்க வந்தேன்…

நினைவில்லாத போதும் நான்

நிலைதடுமாறவில்லை… நீ

அதை அறியாமல் போனது தான்

விதியின் சதியோ…

Advertisement