Advertisement

அத்தியாயம் – 10

அந்தப் பெரிய ஹோட்டலின் முன் ஆட்டோவில் வந்திறங்கிய தேவிக்கு சற்று படபடப்பாய் இருந்தது. அத்தை பத்மா, அவளிடம் உள்ள சேலைகளைப் பார்த்து முகம் சுளித்து, நிகிதாவின் சேலை ஒன்றைக் கொடுத்து உடுத்துக் கொள்ள சொல்லி இருந்தாள். ராமர் பச்சையும், கருநீலமும் கலந்திருந்த அந்த சில்க் சேலையை உடுத்ததும் அவளுக்கே சற்று வியப்பாகத்தான் இருந்தது. ஆள் பாதி, ஆடை பாதி என்று சும்மாவா சொல்லி இருக்கிறார்கள்… அந்த சேலை உடுத்ததும் அழகு கூடியது போல் தோன்றியது.

நண்பர்களின் முன் மகனுக்கு குறைச்சலாய் இருந்துவிடக் கூடாதென்று மகள் நிகிதாவுக்கு வாங்கி வைத்திருந்த சேலைகளில் ஒன்றை மருமகளுக்கு கொடுத்திருந்தாள் பத்மா. இருவருக்கும் ஒரே உடல்வாகு என்பதால் அவளது டிசைனர் பிளவுசும் கச்சிதமாய் தேவிக்குப் பொருந்தியது.

முதன்முறை அதிக இறக்கம் வைத்து வேலைப்பாடுகளுடன் கூடிய பிளவுஸ் அணிவதால் தேவிக்கு சற்றே கூச்சமாய் இருந்தாலும் கண்ணாடி காட்டிய அவளது உருவம் மெச்சுதலாய் இருக்க கவனமாய், அளவாய் தன்னை அலங்கரித்துக் கொண்டாள்.

விஜயா கட்டிக் கொடுத்த மல்லிகைச் சரத்தை தலையில் வைத்துக் கொள்ளவும் அவள் அழகு கண்ணைப் பறிக்க பத்மாவே சற்று அசந்து தான் போனாள்.

பாவாடை தாவணியில், எண்ணை வழியும் தலையோடு, மஞ்சள் அப்பிய அழுது வழியும் முகத்துடன் நிற்பவள் இப்போது தலைக்கு ஷாம்பூ இட்டு முகத்தில் பவுடர் பூசி நாகரிக யுவதியாகவே நின்றாள். அதற்குக் காரணம் நந்தினி தான்… அவளிடம் விக்ரம் மாலை ஹோட்டலில் பார்ட்டிக்கு வர சொன்னதை தேவி சொல்லவும் இப்படி எல்லாம் புறப்பட்டுச் செல்லும்படி அவள் தான் சொல்லியிருந்தாள்,

ஆட்டோவில் இருந்து இறங்கும்போதே சேலையை சரி செய்து கொண்டவள், டிரைவர் சொன்ன தொகையைக் கொடுத்துவிட்டு ஹோட்டலைத் திகைப்புடன் நோக்கினாள். இத்தனை பெரிய ஹோட்டலில் விக்ரம் எங்கிருப்பான், எப்படி அவனிடம் செல்வது எனத் தோன்ற, தயக்கத்துடன் உள்ளே நுழைந்தாள்.

ரிஷப்ஷனில் புன்னகையுடன் அமர்ந்திருந்த பெண் இவளைக் கண்டதும் சிநேஹமாய் சிரித்து, “மிசஸ் விக்ரம்…?” எனக் கேட்க இவள் திகைப்புடன் தலையாட்டினாள்.

“பர்ஸ்ட் புளோர், பார்ட்டி ஹால்ல விக்ரம் சார் இருப்பார்…” எனக் கூற அவளுக்கு வியப்பாய் இருந்தது. அது விக்ரம் ரெகுலராய் வந்து செல்லும் ஹோட்டல் என்பதால் தேவியின் போட்டோவைக் காட்டி முன்பே ரிசப்ஷனில் சொல்லி வைத்திருந்தான் விக்ரம்.

இருந்தாலும் அவளை அலைக்கழிக்க விடாமல் அவன் முன்பே யோசித்து செய்தது அவனிடம் ஒரு நெகிழ்வை உண்டாக்க மலர்ந்த முகத்துடனே மாடிப்படி ஏறி பார்ட்டி ஹாலுக்கு வந்தாள். ஏசி அறை என்பதால் கண்ணாடிக் கதவு மூடியிருக்க தயக்கத்துடன் தள்ளித் திறந்தவள் மீது பூமழை பொழிந்து மேலும் அவளை வியப்புக்குள்ளாக்கியது.

“வெல்கம் மிசஸ் விக்ரம பாண்டியன்…” ஹாலில் ஆணும், பெண்ணுமாய் நிறைந்திருந்த அனைவரும் கை தட்டி உற்சாகமாய் வரவேற்க அதை எதிர்பாராமல் திகைத்து நின்றவளின் முன்னே வந்தான் விக்ரம். அவன் முகத்தில் விரிந்திருந்த புன்னகையை அவள் வியந்து நோக்கும்போதே, கையைப் பற்றி அவளை அழைத்துச் செல்ல நடப்பதெல்லாம் கனவோ என்பது போல் திகைத்து விழித்தாள் தேவி.

மேஜை மீது ஒரு கேக் மெழுகுவர்த்தியுடன் காத்திருக்க தேவியின் கை பிடித்து கட் செய்தான் விக்ரம்.

வியப்பில் விரிந்த விழிகளுடன் நடப்பதை நம்ப முடியாமல் பார்த்திருந்தவளின் உதட்டில் கேக் துண்டை விக்ரம் வைக்க மெல்ல இதழ் பிரித்து வாங்கிக் கொண்டாள்.

“ஹே…! நீங்க விக்ரம் சார்க்கு ஊட்டி விடுங்க மேடம்…” யாரோ உற்சாகக் குரல் கொடுக்க, தேவி தயங்கி அவனைப் பார்க்க, தலையசைத்து ஊட்ட சொன்னான் விக்ரம். கேக்கை எடுத்து அவனுக்கு ஊட்டியவளுக்கு, “இந்தக் கனவு கலையவே கூடாது கடவுளே…” எனத் தோன்றியது.

“கல்யாணம் முடிஞ்சு இவ்ளோ நாள் கழிச்சு இப்ப தான் விக்ரம் சார் உங்களை எங்க கண்ணுலயே காட்டுறார்… யூ ஆர் லுக்கிங் வெரி ஹோம்லி அண்ட் கார்ஜியஸ் மேம்…” ஒரு பெண் சொல்ல, “ஒயிப் இவ்ளோ அழகா இருந்தா வெளிய யாருக்கும் காமிக்கத் தோணாது போலருக்கு, அப்படித்தான விக்ரம் சார்…” என இன்னொருத்தி சொல்ல சுற்றி நின்ற அனைவரும் சிரித்தனர்.

அனைவருக்கும் கேக் பரிமாறப்பட சாப்பிட்டுக் கொண்டே தேவியின் தந்தை பற்றி விசாரித்தவர்களுக்கு, அவள் தோளை ஆறுதலாய் அணைத்தபடி விக்ரம் பதில் சொல்ல அந்த நிமிடம் அப்படியே உறைந்து போய்விடக் கூடாதா என தேவியின் மனம் ஏங்கியது.

“நெத்தியில ஏதோ காயம் போலருக்கே மேடம், என்னாச்சு…?” ஒரு நண்பரின் மனைவி அவள் முகத்தை நன்றாய் கவனித்துவிட்டு அந்த சின்ன காயத்தைப் பற்றிக் கேட்க விக்ரமும் நிமிர்ந்து அவள் முகம் பார்த்தான். அவளது விழிகள் அவனைக் கண்டுவிட்டு சட்டென்று குனிந்து கொள்ள, “அ..அது எங்கயோ இடிச்சுட்டேன் போலருக்கு…” என்று சொல்ல அவன் திரும்பிக் கொண்டான்.

அவளிடம் ஒரு வார்த்தை கூட விக்ரம் பேசாவிட்டாலும் அவனது அருகாமை, வேதனையில் சுருங்கியிருந்த அவள் மனதுக்கு ஆறுதலாய் இதமாய் இருந்தது.

நேரம் ஆக ஆண்களுக்கு பொன் திரவியம் நிறைந்த மதுக் கோப்பையும், பெண்களுக்கு ஜூஸூம் பரிமாறப்பட்டது. கலகலவென்று பேசியபடி, ஒருவரை ஒருவர் கலாய்த்துக் கொண்டு உணவருந்த விக்ரம் தேவி அருகேயே இருந்தான். எல்லாம் முடிந்து ஒவ்வொருவராய் கிளம்ப தொடங்கினர்.

“தேங்க்ஸ் விக்ரம் சார், நைஸ் பார்ட்டி… பை மேடம்… ரெண்டுபேரும் வீட்டுக்கு வாங்க…” என சொன்னபடி எல்லாரும் விடைபெறத் தொடங்க இறுதியில் விக்ரமும், தேவியும் மட்டுமே அங்கு எஞ்சினர். அதுவரை இனிமையாய் கழிந்த பொழுது இப்போது இருவர் மட்டும் ஆனதும் மௌனத்தின் வெம்மை சூழத் தொடங்கியது.

தேவிக்கு, விக்ரம் அவளைத் தன்னுடன் வீட்டுக்கு அழைத்துச் செல்வானா, அல்லது ஆட்டோவில் செல்வதா எனக் குழப்பமாய் இருக்க, ஏதாவது சொல்லுவானென்று பார்த்தாள். எதுவும் பேசாமல் அவன் கிளம்ப, அவள் பின்னிலேயே செல்ல கார் பார்க்கிங்கிற்கு சென்றவன் அவளை அங்கேயே விட்டுவிட்டு காரெடுத்துச் சென்றான்.

அதுவரை மனதுக்குள் சந்தோஷ ஸ்வரங்கள் மீட்டிக் கொண்டிருந்த இளையராஜா சட்டென்று சோக கீதம் வாசிக்கத் தொடங்கினார். மனது கணவனின் செய்கையில் கனத்துப் போக சோர்வுடன் 11 மணிக்கு ஆட்டோ ஸ்டான்ட் நோக்கி நடந்தவளுக்கு கண்கள் கலங்கியது.

ஆட்டோவில் வீடு வந்து சேர்கையில் போர்ட்டிகோவில் நின்ற கார் விக்ரம் வந்துவிட்டதைச் சொன்னது. வீடு உறங்கத் தொடங்கி இருக்க விஜயா மட்டும் இவளுக்காய் முன்னிலேயே காத்திருந்தாள்.

“என்னாச்சு மா, எதுவும் பிரச்சனை இல்லையே… தம்பி மட்டும் வரவும் கொஞ்சம் பயந்துட்டேன்…” என்ற விஜயாவிடம் என்ன சொல்லுவதென்று தெரியவில்லை.

“சாப்டிங்களா க்கா, சோர்வா இருக்கு… நான் படுக்கறேன்…” என்றவள் சோர்வுடன் அவளது அறைக்கு (ஸ்டோர் ரூமுக்கு) செல்ல விஜயா பாவமாய் பார்த்து நின்றாள்.

உடை மாற்றி படுக்கையில் கிடந்தவளுக்கு பார்ட்டியில் விக்ரம் அன்போடு நடந்து கொண்டதும், இறுதியில் அம்போவென்று வீதியில் விட்டுச் சென்றதும் மனதில் வந்து வலிக்க வைத்தது.

“அவர் அங்க எல்லார் முன்னாடியும் நடந்துகிட்டது நடிப்பா…? எத்தனை அன்பா பக்கத்துலயே இருந்து பார்த்துகிட்டார்… அது மட்டும் உண்மையா இருந்தா எவ்ளோ சந்தோஷமா இருக்கும்…” யோசிக்கவும் மனது வலிக்க களைப்புடன் கண்ணை மூடிக் கொண்டாலும் கரகரவென்று கண்ணீர் சூடாய் வழிந்து படுக்கையை நனைத்தது. தந்தையின் நினைவு வர, பாசமான அவரது தேவிமா, என்ற அழைப்பிற்கும் தலை கோதலுக்கும் மனம் ஏங்கியது.

“அப்பா…! என்னால தான, என் வாழ்க்கை எப்படி இருக்குமோன்னு பயந்து தான நீங்க இந்த உலகத்தை விட்டே போயிட்டிங்க, நான் பாவிப்பா… பாவி…!” மனம் அரற்ற சிறிது நேரம் அழுதவள் உறங்கிப் போனாள்.

அங்கே உறக்கம் வராமல் படுக்கையில் புரண்டு கொண்டிருந்தான் விக்ரம். மனதுக்குள் தேவியின் சிரித்த அழகிய முகமே ஒட்டிக் கொண்டிருந்தது. பார்ட்டி ஹாலில் தேவிக்காய் காத்திருக்கையில் அவள் வருவதை கண்ணாடி அறைக்குள் இருந்து பார்த்தவனின் முகம் அவளைக் கண்டதும் அசந்து தான் போனது.

அவனது மஞ்சக்கிளி பச்சைக் கிளியாய் சேலையில் உள்ளே நுழைய அவள் மேல் விரும்பிப் படியும் கண்களை விலக்க முடியாமல் தவித்துத் தான் போனான். மூளை வேண்டாம் என்று சொல்வதை இந்தக் கண்கள் எங்கே புரிந்து கொள்கின்றன. அவற்றுக்குப் பிடித்தமானதை கள்ளத் தனமாகவேனும் ரசிக்க அடம் பிடிக்கிறதே… என்னதான் ரசித்தாலும் இறுதியில் தனிமையில் இனிய நினைவுகள் விலக மீண்டும் அவன் இதயம் இறுகிக் கொண்டது.

அவள் கஷ்டப்படட்டும்… என்ற தீர்மானத்துடன் வேகமாய் காரை எடுத்துக் கொண்டு கிளம்பி விட்டவனுக்கு சிறிது சென்றதும் மனம் கேட்காமல் வண்டியைத் திருப்பி வர தேவி ஆட்டோவில் ஏறுவது கண்டதும், மீண்டும் வந்த வழியே வேகமாய் வீட்டுக்கு சென்று விட்டான்.

ஒருத்தி தேவியை ‘வெரி ஹோம்லி அண்ட் கார்ஜியஸ்…’ என்றது நினைவில் வர, “ஹூம், இந்த குடும்பப் பாங்கான அழகு தானே என்னையும் அவகிட்ட இழுத்துச்சு… என்னோட காதல் அவளையோ, என் குடும்பத்தையோ பாதிச்சிடக் கூடாதுன்னு தானே, நந்தினியைக் கல்யாணம் பண்ண முழு மனசா அவளை விட்டு விலகத் தொடங்கினேன்… ஆனா மறுபடி விதி அவளோடவே என்னை ஏன் சேர்த்துச்சு… என் மேல நம்பிக்கை இல்லாம என்னைக் குற்றவாளி ஆக்கினவளை என்னால எப்படி நேசிக்க முடியும்…?”

அவன் மனதில் கேள்விகளாய் குடைந்து கொண்டிருக்க, சிறிது மது இல்லாமல் உறங்க முடியாதென்று தோன்றியது. இப்போதெல்லாம் வீட்டிலேயே ஸ்டாக் வைத்திருப்பதால் நினைக்கும் பொழுதெல்லாம் உள்ளே ஊற்றிக் கொள்கிறான். செல்பில் இருந்த மதுக்குப்பியை எடுத்தவன் தண்ணீர் எடுப்பதற்காய் கீழே வந்தான்.

தேவி சோபாவில் படுத்திருக்கிறாளா என்று தன்னை மீறித் தேடிய விழிகளை காறித் துப்பிக் கொண்டு அவள் அங்கே இல்லாதது கண்டு திகைத்தான். பிரிட்ஜைத் திறந்து குப்பியை எடுத்துக் கொண்டவன் பார்வை தேவி எங்கே என்று தெரிந்து கொள்ள அங்கே தேடி காணாமல் சற்றே பயந்து போனது.

“எங்க போனா, ஒருவேளை இன்னும் வீட்டுக்கு வரலியோ…?” என்ற எண்ணம் தோன்றவும் மனம் சற்றே பதைத்தது. கடிகாரத்தை நோக்கியவன் மணி 12.30 தாண்டியதைக் கண்டு யோசனையுடன் விஜயாவைக் காண சென்றான்.

விஜயா அடுக்களையில் நல்ல உறக்கத்திலிருக்க சற்று நிம்மதியானவன், “தேவி வராதிருந்தால் விஜயா அம்மாகிட்ட சொல்லி விஷயம் என் காதுக்கு வந்திருக்குமே… அப்ப இவ எங்கிருக்கா…?” என யோசித்தபடி கீழே இருந்த தங்கையின் அறைக்கதவைத் திறந்து பார்த்துவிட்டு அங்கு யாரையும் காணாமல் ஸ்டோர் ரூம் முன் வந்து நின்றான்.

“ஒருவேளை, இங்க தான் படுத்திருக்காளோ…?” யோசித்தவன் மெல்ல கதவைத் திறந்தான். அறை முழுதும் பொருட்கள் நிறைந்திருக்க மின்விசிறி கூட இல்லாத அறையில் மெல்ல அடி வைத்து நடந்தவன் எதையோ மிதித்துவிட, “ஆ…” என தேவியின் சத்தம் கேட்டது. அவள் காலைத் தான் இவன்  மிதித்திருந்தான்.

சத்தம் கேட்டதும் சுதாரித்தவன் வேகமாய் வெளியே சென்றுவிட எழுந்து அமர்ந்த தேவி யாரையும் காணாமல் திகைத்தபடி காலைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

“கனவு எதுவும் கண்டேனா…? கால்ல யாரோ மிதிச்ச போல வலிச்சுதே…” யோசித்தவள் மீண்டும் படுத்துக் கொண்டாள்.

அறைக்கு சென்றவன், “பேன் கூட இல்லாம அத்தனை பொருளுக்கு நடுவுல இவ எப்படிப் படுத்திருக்கா… அம்மா இவளை நிகிதா ரூம்ல படுக்க வச்சிருக்கலாமே… ச்ச்சே…! நான் ஏன் இப்படி இருக்கேன்… ஒண்ணா வேண்டாம்னு விலகிடனும், இல்ல வேணும்னு ஏத்துக்கணும்… ரெண்டும் இல்லாம திரிசங்கு போல எதுக்கு இப்படிக் கிடந்தது அல்லாடறேன்…” தன்னைத் தானே கடிந்து கொண்டவன் சிறிது மது மட்டும் எடுத்துக் கொண்டு படுத்தான்.

“இல்ல, அவளை அப்படிலாம் மன்னிச்சிடக் கூடாது… என் வாழ்க்கையை தாறுமாறு, தக்காளிச் சோறுன்னு ஆக்கிட்டு அந்த ஸ்டோர் ரூம்லயும் நிம்மதியாத் தூங்கறா… நான் தான் தூக்கமில்லாம முழிச்சிட்டு இருக்கேன்…” மீண்டும் மனதை இழுத்துப் போர்த்திக் கொண்டான் விக்ரம்.

மறுநாள் காலை மகனிடம் தயங்கியபடியே விஷயத்தைக் கூறினார் பத்மாவதி.

“விக்ரம், ஒரு விஷயம் சொல்லணும், கோபப்படாம கேளு…”

“என்னமா, பீடிகை எல்லாம்… சொல்லுங்க…”

“அது..வந்து… இன்னைக்கு ஊருல இருந்து நந்து அண்ணனும், சுபாவும் வர்றாங்களாம்… நேத்து நைட் கால் பண்ணாங்க…” அதைக் கேட்டதும் அவன் முகம் இறுகியது.

“எதுக்கு…?”

“இ..இன்னைக்கு நைட்டு உனக்கு சாந்தி முகூர்த்தத்துக்கு நாள் குறிச்சிருக்காங்க… நீ ஒண்ணும் வருத்தப்படாத, இதெல்லாம் வெறும் சாங்கியம் தான்… அவங்க முன்னாடி ஒரு கண் துடைப்புக்கு இந்த ஏற்பாடெல்லாம்…”

“ஓ..! எங்களுக்குள்ள எல்லாம் முடிஞ்சிருச்சுன்னு சொல்லி தான அவளை எனக்கு கட்டி வச்சாங்க, இப்ப எதுக்கு இந்த எழவு முகூர்த்தம் எல்லாம்…” சிடுசிடுத்தான்.

“அதில்லப்பா விக்ரம், இதெல்லாம் ஒரு சம்பிரதாயம் தான… கல்யாணம் முடிஞ்சிருச்சு, நாம எதிர்பார்த்த அளவுக்கு கிடைக்கலைனாலும் ஓரளவுக்கு இந்தப் பொண்ணுக்கும் சீர், வரதட்சணை எல்லாம் மாப்பிள கொடுத்துட்டார்… அப்புறம், நாம எல்லாத்தையும் முறையா செய்யறது தான சரி…” கணேசன் மகனுக்கு எடுத்துச் சொல்ல முறைத்தான் விக்ரம்.

“முதல்ல உங்களைச் சொல்லனும்… இது எல்லாத்துக்கும் நீங்கதான காரணம், நீங்க மட்டும் உங்க குறுக்கு புத்தியை உபயோகிச்சு இப்படி ஒரு கல்யாண பிளான் போடாம இருந்திருந்தா நான் அந்த ஊருப்பக்கமே எட்டிப் பார்த்திருக்க மாட்டேன்… இப்ப எனக்கு வந்து அட்வைஸ் பண்ணறீங்களா, எல்லாம் என் நேரம்…” தந்தைக்கும் குட்டு வைத்தான் மகன்.

“ஏங்க நீங்க சும்மாருங்க, அவனைக் கடுப்பேத்திட்டு… நான் பேசிக்கறேன்…” என்ற பத்மாவதி தொடர்ந்தாள்.

“அதில்லப்பா, பிடிக்குதோ இல்லையோ சில விஷயங்களை ஏத்துகிட்டு தான ஆகணும்… இன்னைக்கு நைட்டு அவங்க நினைக்கற சம்பிரதாயத்தைப் பண்ணட்டும்… இல்லன்னா, அதுக்கு வேற கேள்வி வரும்… ரூமுக்குள்ள எப்படி நடந்துக்கணும்னு நீ முடிவு பண்ணுறது தான…” என நயமாய் மகனிடம் பேசி தலையாட்ட வைத்தாள் அன்னை.

“அவங்க வர்றதுனால அந்தப் புள்ளையோட பொருள் எல்லாம் உன் ரூமுல வைக்க சொல்லிடறேன்… மதியம் சீக்கிரம் வந்திடு…”

“ம்ம்… அவ வரல தான…?”

“யாருப்பா…? நந்தினியா…?”

“ம்ம்…” என்றவனின் முகக் கடுகடுப்பைக் கண்டவர், “இல்லப்பா, இவங்க ரெண்டு பேரும் வந்துட்டு நைட்டு டிரெயினுக்கு கிளம்பிருவோம்னு சொன்னாங்க…”

“ம்ம்… குளிச்சிட்டு வந்துடறேன்…” என மாடிக்கு செல்ல, பத்மா அடுக்களைக்கு சென்று எட்டிப் பார்த்தார்.

“ஏய் தேவி… இன்னைக்கு ஊருல இருந்து அண்ணனும், அண்ணியும் நைட்டு உனக்கு சாந்தி முகூர்த்தம் ஏற்பாடு பண்ண வாராங்களாம்… சீக்கிரம் சமையலை முடிச்சிட்டு உன் பொருள் எல்லாம் விக்ரம் ரூமுல கொண்டு போயி வச்சிரு…… அவங்ககிட்ட எதையாவது சொல்லி கண்ணைக் கசக்கிட்டு நிக்காத, புரிஞ்சுதா…?”

“ம்ம்… ச..சரியத்தை…” என்றவளுக்கு நந்துவும், சுபாவும் வருவதாய் சொன்ன சந்தோஷத்தை விட ‘சாந்தி முகூர்த்தம்’ என்ற வார்த்தை கலக்கத்தைக் கொடுத்தது.

காலை உணவு முடிந்து விக்ரம் கிளம்ப தேவி அவனது அறையில் தனது பொருட்களைக் கொண்டு வைத்தாள். முன்னேற்பாடாய் அந்த டிரஸ் மாற்றும் அறையிலேயே வைத்து விட்டாள். சிறிது நேரத்தில் நந்துவும், சுபாவும் பைகள் நிறைய பழம், பலகாரத்துடன் வந்து சேர்ந்தனர்.

உன்னுடைய சிறு பாராட்டுக்காய்

பெரும்பாடு படுகின்றேன்…

உனக்காக அல்லாடும் மனதை

அடக்கும் வகையறியாது

பேரவஸ்தைக்கு உள்ளாகிறேன்…

எனக்கான அங்கீகாரமாய்

உன் இதழோரப் புன்னகை போதும்…

அதற்காகவே என் ஜீவன் வாழும்…

Advertisement