Advertisement

அத்தியாயம் – 1

 

மகிழ்ச்சியும், உற்சாகமும் நிறைந்திருந்த அந்த கல்யாண மண்டபத்தில் சட்டென்று ஊசி விழுந்தால் கேட்கும் அளவுக்கு நிசப்தம் நிறைந்தது.

 

அனைவரின் பார்வையும் மணப்பெண்ணின் “ஒரு நிமிஷம்…” என்ற உரத்த குரலில் குழப்பத்துடன் மேடையில் பதிய, அருகே பட்டு, வேட்டி சட்டையுடன் மாப்பிள்ளைக் கோலத்தில் கம்பீரமாய் அமர்ந்திருந்த விக்ரம பாண்டியனின் புருவங்கள் குழப்பத்தில் முடிச்சிட்டுக் கொண்டன.

 

விக்ரம் அவளைத் திகைப்புடன் நோக்க, “உங்ககிட்ட கொஞ்சம் பேசணும்…” நந்தினி கூற அவன் விழிகள் வியப்பில் விரிந்தன. இன்னும் சற்று நேரத்தில் கழுத்தில் தாலி ஏறப் போகும் நேரத்தில் இவள் என்ன தனியே சொல்லப் போகிறாள் எனக் குழப்பத்துடன் விக்ரம் அவளைப் பார்க்க எழுந்தவள், “மாமா, அத்தை, நீங்களும் வாங்க…” என புரியாமல் நின்றிருந்த அவன் பெற்றோரையும் அழைத்துக் கொண்டு மணமகள் அறைக்குள் நுழைந்தாள்.

 

அவர்கள் பின்னே இருண்ட முகத்துடன் உள்ளே சென்றனர் நந்தினியின் பெற்றோர் நந்தகுமாரும், சுபாஷினியும். சிறிது நேரம் உள்ளே என்ன பேசினார்களோ, வெளியே வரும்போது ஒருவரின் முகமும் சரியில்லை. அறையின் உள்ளே முன்னமே இருந்த மந்தாகினியும், அவளது தந்தை சரவணனும் அவர்களுடன் கலக்கத்துடன் வெளியே வந்தனர்.

 

மண்டபத்தில் அனைவரும் சலசலவென்று ஏதேதோ ஊகத்தில் பேசிக் கொண்டிருக்க பல வதந்திகள் கை, கால் முகம் முளைத்து காற்றில் பறந்து கொண்டிருந்தன. மந்தாகினியை அழைத்து வந்த நந்தினி மேடையில் அமர்த்தவும் உறவினர்கள் சிலர் குழப்பத்துடன் நந்தினியின் பெற்றோரிடம் சென்று விசாரித்தனர்.

 

“நான் அப்பவே நினைச்சேன், இந்த மெட்ராஸ்காரன் அந்த தேவிப் பொண்ணுகிட்ட ஏதோ விளையாடிட்டான் போல…”

 

“ஆமா, நல்லா பளபளன்னு சினிமா ஸ்டாராட்டம் இருக்கான்ல, அதான் முறைப் பொண்ணு பத்தாம அவ கூட்டாளி மேலயும் கண்ணு வச்சுட்டான் போலருக்கு…”

 

“இருக்கும், அந்த தேவிப் புள்ளையைப் பார்க்கறப்ப அவனோட பார்வையே சரியில்ல, நான் நிறைய முறை பார்த்திருக்கேன்…” என்றார் மற்றொருவர்.

 

“அந்த தேவியும் ஊமச்சி மாதிரி இருக்காளேன்னு நினைக்க வேண்டாம், அவதான் அந்தப் பையனைக் கண்ணைக் காட்டி மயக்கினாளோ என்னவோ சொல்ல முடியாது…”

 

“அட, நம்ம தேவியை நமக்குத் தெரியாதா, அது சரியான வெள்ளந்தி. அதுக்கு இந்த கள்ளத்தனம் எல்லாம் தெரியாது, அந்தப் பையன் தான் அவளை ஏதாச்சும் சொல்லி மயக்கிப் போட்டிருக்கணும்… அப்பப்ப அவளை சீண்டிகிட்டு வம்பு பண்ணிட்டு இருக்கும்போதே நினைச்சேன்…”

 

“ம்ம்… அந்தப் பய பணத்துக்கு நந்தினியைக் கட்டிக்கிட்டு ஆசைக்கு தேவியை வச்சுக்கலாம்னு நினைச்சிருப்பான் போல, நந்தினிப் பொண்ணு விவரமான பொண்ணில்ல, அதான் சுதாரிச்சு விஷயத்தைக் கண்டு பிடிச்சிருச்சு…”

 

“ஹூம், இப்ப நந்தினி வாழ்க்கை தான் நட்டாத்துல போயிருச்சு…”

 

“ஏன் அதுக்கென்ன, படிப்பில்லையா, பணமில்லையா…? இவன் இல்லேன்னா இன்னொருத்தன் கட்டிக்க கிடைக்காமலா போயிருவான். அந்தப் புள்ள நல்ல மனசுக்கு நல்லவனா ஒருத்தன் வருவான்…”

 

அதற்குள் மேடையில் நின்ற நந்தினி, “எல்லாரும் மன்னிக்கணும், இப்ப கல்யாணம் நடக்கப் போறது நம்ம தேவிக்கும், இவருக்கும் தான்… எல்லாரும் மனமார வாழ்த்தணும்னு கேட்டுக்கறேன்…” அவள் சொல்லவும் மந்தாகினியின் கண்கள் கரகரவென்று கண்ணீரைப் பொழிய அவளது தந்தை சரவணன் கண்ணீருடன் நந்தினியைக் கையெடுத்துக் கும்பிட வேகமாய் அவர் கையைத் தாழ்த்தியவள், “என்னப்பா, எனக்குப் போயி நன்றி சொல்லிட்டு…” என செல்லமாய் கடிந்தாள்.

 

அனைவரின் ஆசி பெற்று மணமகளின் கழுத்தில் ஏறுவதற்காய் தட்டில் காத்திருந்த மாங்கல்யத்தை எடுத்து விக்ரமின் கையில் திணித்தாள் நந்தினி. அவனது கோபத்தில் சிவந்த விழிகளோ கையிலிருந்த தாலிச் சரடை வெறுப்புடன் வெறித்துக் கொண்டிருந்தன.

 

அவன் விழிகளுக்கு மட்டும் சக்தி இருந்தால் அருகே தலை குனிந்து கலைந்த தலையும், அழுதழுது வீங்கிய முகமும், கசங்கிய உடையுமாய் மணப்பெண் கோலத்துக்கு சற்றும் சம்மந்தமில்லாமல் நின்றிருந்த மந்தாகினி தேவியை ஒரே பார்வையில் எரித்திருப்பான். அந்தளவுக்கு அவன் மனம் கோபத்தில் எரிமலையாய்ப் பொங்கிக் கொண்டிருந்தது. ஆனால் அவளோ நடக்கும் எதற்கும் சம்மந்தம் இல்லாதது போல் அழுவது ஒன்றே குறிக்கோளாய் கொண்டிருந்தாள்.

 

விக்ரம் அருகே நின்றிருந்த அவனது பெற்றோர் கணேச பாண்டியன், பத்மாவதி முகத்திலும் கோபமும், வெறுப்பும் குறைவில்லாமல் நிறைந்திருந்தன.

 

“என்ன பார்க்கறிங்க..? தாலியைக் கட்டுங்க…” அவர்கள் எதிரே மணப்பெண் கோலத்தில் சர்வ அலங்காரத்துடன் நின்ற நந்தினி அதிகாரமாய் சொல்ல கோபத்துடன் அவளைப் பார்த்தான் விக்ரம்.

 

“வேண்டாம் நந்தினி, நடந்தது என்னன்னு முழுசாப் புரிஞ்சுக்காம என் மேல தேவையில்லாத வீண் பலியை சுமத்தி என் வாழ்க்கையை வீணாக்கப் பார்க்காத, நான் எந்தத் தப்பும் பண்ணல…” கடைசி முயற்சியாய் மீண்டும் ஒரு முறை தன்னை நிரூபிக்க முயன்ற விக்ரமை கடுப்புடன் நோக்கியவளின் இதழ்கள் இகழ்ச்சியில் சுளிந்தன.

 

“அப்ப கண்ணால பார்த்த நான் முட்டாளா..? இதுக்கு மேல உங்க எந்த விளக்கமும் தேவையில்லை. இருக்கற கொஞ்ச நஞ்ச மரியாதையும் காத்துல பறக்கறதுக்கு முன்னாடி தேவி கழுத்துல தாலியைக் கட்டுங்க, இல்லன்னா அசிங்கப்பட்டுப் போயிருவிங்க…” உறுமலாய் வந்தது அவளது குரல்.

 

“நோ…! என்னால முடியாது. எனக்கு எந்த விதத்துலயும் பொருத்தமில்லாத இவளை எப்படி என் மனைவியா ஏத்துக்க முடியும்…?” அவன் கடுப்புடன் கேட்டான்.

 

“என்ன பெரிய தகுதி…? அவளோட குணத்துக்கு ஈடாகுமா உங்க படிப்பும், பகட்டும். என்ன மாமா, எதுவும் சொல்லாம வேடிக்கை பார்த்துட்டு இருக்கிங்க, உங்க புள்ளைக்கு எடுத்து சொல்ல மாட்டிங்களா…?” கணேச பாண்டியனை நோக்கிக் கேட்க அவருக்கு உள்ளே பதறியது.

 

இந்தக் கல்யாணத்திற்காய் நந்தினியின் பெற்றோரிடம் முன்னமே இருபது லட்சம் வரதட்சணையாய் வாங்கி இருந்தனர் விக்ரமின் வீட்டார். கல்யாணத்திற்கு சம்மதிக்காவிட்டால் பணத்தை உடனே திருப்பித் தர வேண்டுமென்றால் எப்படி முடியும். பணம் கையில் கிடைத்த உடனே அதை பிசினஸ் பிரச்சனைகளை சமாளிக்க கணேஷ் உபயோகப்படுத்தி இருந்தார். முன்னமே நட்டத்தில் இருந்த அவர்களின் கம்பெனி வரதட்சணையாய் கிடைத்த இந்தத் தொகையால் தான் சிறிது நாட்களாய் ஆசுவாசமாய் மூச்சு விட்டுக் கொண்டிருந்தது. இப்படி ஒரு இக்கட்டில் நிற்க வேண்டி வருமென்று அவர்கள் எதிர்பார்த்திருக்கவில்லை.

 

கையைப் பிசைந்த கணேஷ் வேதனையுடன் மகனைப் பார்த்தார். வீட்டுக்கு ஒரே வாரிசான நந்தினியைக் கல்யாணம் செய்தால் அந்த சொத்து முழுவதும் இவர்களுக்குக் கிடைக்கும், அதை வைத்து வியாபாரத்தைப் பெருக்கி நஷ்டத்தை சரியாக்கி பழைய நிலைக்கு வந்து விட வேண்டுமென்று அவர்கள் கஷ்டப்பட்டு போட்டு வைத்த கணக்கெல்லாம் இப்படி பாழாய் போகிறதே… என்ற வேதனை அவர் முகத்தில் தெரிந்தது. மெல்லவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல் அவஸ்தையுடன் நின்றிருந்தார்.

 

பத்மாவதியின் முகமோ எள்ளும், கொள்ளும் வெடித்தது.

 

“அதெல்லாம் முடியாது, உனக்கு என் பிள்ளையைக் கட்டிக்க விருப்பம் இல்லேன்னா நாங்க வேற இடத்துல பெண் எடுத்துக்கறோம்… அதுக்காக ஒரு அன்னக்காவடியை என் வீட்டு மருமகளா நான் ஏத்துக்க மாட்டேன்…” பத்மாவதி கோபத்துடன் பொரிய ஏளனமாய் சிரித்தாள் நந்தினி.

 

“ஓ…! அப்படின்னா நாங்க கொடுத்த வரதட்சணைப் பணத்தை இப்பவே இங்கயே எண்ணி வைக்கறிங்களா, அத்தை…?” நந்தினியின் கிண்டல் குரலில் மேலும் முகம் சிவந்த பத்மாவதி கோபத்துடன் கணவனைப் பார்க்க அவர் கையாலாகாத் தனத்துடன் அவரது ஒன்றுவிட்ட தங்கை சுபாஷினியைப் பார்க்க அவர் அண்ணனை கவனிக்கவே இல்லை.

 

“யோசிக்க நேரமில்லை, நல்ல நேரம் போயிட்டே இருக்கு… இப்ப உங்க மகனைத் தாலி கட்ட சொல்லப் போறீங்களா இல்லையா…?” நந்தினி மீண்டும் மிரட்டலாய் கேட்க கணேஷ் மகனைக் கெஞ்சுதலாய் நோக்கினார்.

 

“விக்ரம், தாலியைக் கட்டிடுப்பா…”

 

“அப்பா…” அவன் அதிர்ச்சியாய் கூவ, “நமக்கு இப்ப வேற வழி இல்லை… வாங்கின பணத்தை திருப்பிக் கொடுக்கற நிலமைல நாம இல்லை, அதுவுமில்லாம இங்க நடந்தது வெளிய தெரிஞ்சா நம்ம குடும்பத்துக்கே அசிங்கமாப் போயிரும். அப்புறம் உன் தங்கை நிகிதாவுக்கு கல்யாணம் நடக்கறதே சந்தேகம் தான், ப்ளீஸ் ஒத்துக்கப்பா…”

 

மகனின் காதருக்கே கிசுகிசுப்பாய் கெஞ்சல் குரலில் கணேஷ் கேட்க வெறுப்புடன் மந்தாகினியைப் பார்த்தான் விக்ரம். அவள் தலையைக் குனிந்தபடி இப்போதும் கண்ணீர் விட்டுக் கொண்டிருந்தாள்.

 

ஒரு நொடி தனது விதியை நொந்துகொண்டு உலகத்தில் உள்ள வெறுப்பு முழுவதையும் மனதில் தேக்கி அருகே நின்றவளின் கழுத்தில் மூன்று முடிச்சைப் போட்டான். தாலி கட்டியதும் வில்லிலிருந்து புறப்பட்ட அம்பு போல் மாலையைக் கழற்றி வைத்துவிட்டு விருட்டென்று விக்ரம் கிளம்ப அவனைத் தடுத்தாள் நந்தினி.

 

“மாம்ஸ், அதுக்குள்ள கிளம்பினா எப்படி…? மத்த சம்பிரதாயம் எல்லாம் செய்ய வேண்டாமா…?”

 

அவள் மீது தீக்கனலாய் பார்வை ஒன்றை செலுத்தியவன், “இதுக்கெல்லாம் நிச்சயம் நீ அனுபவிப்ப டி…” என உறுமும் குரலில் சொல்லிவிட்டு வெளியேறினான். அவனுடனே அவனது குடும்பத்தாரும் கிளம்பிவிட மீதி சம்பிரதாயங்கள் எதுவும் நடக்காமல் அனைவரும் குழப்பத்துடன் நின்று கொண்டிருந்தனர்.

 

ஒரு நீண்ட பெருமூச்சை வெளியேற்றிய நந்தினி மந்தாகினியின் கையை ஆறுதலாய் பற்றிக் கொள்ள அவள் கண்ணீருடன் அவள் தோளில் சாய்ந்து விம்மினாள்.

 

“நந்தினி, நாம கொஞ்சம் அவசரப் பட்டுட்டமோ…? இன்னும் கொஞ்சம் பொறுமையா இந்த விஷயத்தை ஹாண்டில் பண்ணிருக்கலாமோன்னு தோணுது மா…” நந்தினியின் தந்தை நந்தகுமார் சொல்ல மறுப்பாய் தலையாட்டினாள் நந்தினி.

 

“இல்லப்பா, இந்த விஷயத்துல இனி பொறுமையா இருந்து பிரயோசனம் இல்ல… சரி, அடுத்து செய்ய வேண்டியதைப் பார்ப்போம்…” அவள் தெளிவாய் சொல்ல தனது மனைவி சுபாஷினியை நோக்கினார் நந்தகுமார்.

 

“சுபா, இந்தப் பிரச்சனையால உனக்கொண்ணும் வருத்தம் இல்லையே…?”

 

“என்னங்க கேக்கறிங்க…? எனக்கு நம்ம நந்தினி வேற, மந்தாகினி வேறயா…? என் பொண்ணு வாழ்க்கையை சரி பண்ண என் அண்ணன் குடும்பமா இருந்தாலும் எதிர்த்து நிக்கத்தான வேணும்… நீங்க சரவணன் அண்ணாவை முதல்ல சமாதானப் படுத்துங்க, அவர் தான் ரொம்ப நொந்து போயிட்டார், நந்து, நீ மந்தாகினியைப் பார்த்துக்க… நான் கல்யாணத்துக்கு வந்தவங்களை எல்லாம் கவனிக்கறேன்…” சொன்னவள் நகர்ந்துவிட மனைவியைப் பெருமையுடன் நோக்கினார் நந்தகுமார்.

 

சரவணன் தோளில் கிடந்த துண்டை வாயில் வைத்து துக்கத்தை அடக்கியபடி கண்ணீருடன் மகளையே பார்த்திருந்தார். பிறந்தவுடனே அன்னையை இழந்திருந்த மந்தாகினியை கண்ணுக்குள் வைத்து பார்த்துக் கொண்டவர் இப்போதைய அவளது நிலையை எண்ணி, அவளது எதிர்காலம் என்னாகுமோ எனப் பயத்துடன் நின்றிருந்தார்.

 

நந்தினி தந்தைக்கு கண்ணைக் காட்ட தனது பால்ய நண்பன் சரவணனை ஆறுதலாய் நோக்கினார் நந்தகுமார். இருவரும் சிறு வயது முதலே நெருங்கிய நண்பர்கள். ஒன்றாய் பத்தாவது வரை அந்த கிராமத்தில் இருந்த பள்ளியில் படித்து கல்லூரிப் படிப்புக்காய் நந்தகுமார் அடுத்த ஊருக்கு செல்ல சரவணனின் படிப்பு பள்ளியோடு நின்று குடும்ப நிலை அவரை விவசாயத்தை கவனிக்கச் செய்தது. நந்தகுமார் நண்பனின் கல்லூரிப் படிப்புக்கான செலவை தான் ஏற்றுக் கொள்வதாக சொன்னாலும் சரவணன் தனது குடும்பத் தேவை உணர்ந்து மறுத்துவிட்டார். நந்தகுமாரின் பணமோ, படிப்போ, குடும்பமோ அவர்கள் நட்பை எந்த விதத்திலும் பாதிக்கவில்லை. இருவரும் அவரவர் குடும்பத் தேவைக்காய் உழைத்தாலும் இப்போதும் அவர்கள் நட்பு தொடர்ந்தது.

 

மந்தாகினியின் தாய் பிரசவத்தில் இறந்து போக, தாயின் பாலுக்காய் தொண்டை வற்றிக் கரையும் பிஞ்சுக் குழந்தையை எப்படி சமாளிப்பதென்று தெரியாமல் கதறி அழுதார் சரவணன். அப்போது தான் நந்தினி பிறந்து நான்கு மாதம் ஆகியிருக்க, அவர் கையிலிருந்து குழந்தையை வாங்கி அமுதூட்டி அவளையும் தன் மகளைப் போலத் தாங்கிக் கொண்டாள் நந்தகுமாரின் மனைவி சுபாஷினி. நந்தினியும், மந்தாகினியும் தந்தையரைப் போலவே நட்போடு ஒன்றாகவே வளர்ந்தனர். இரு வீட்டிலும் நந்தினியும், மந்தாகினியும் வேறல்ல, இருவரும் ஒரு போலவே.

 

“நந்தினி MBA முடித்திருக்க, மந்தாகினி வீட்டில் தந்தைக்கு உதவிக் கொண்டே கல்லூரிக்கு செல்லாமல் அவளுக்குப் பிடித்த தமிழ் இலக்கியத்தை தொலைதூரக் கல்வியில் முடித்திருந்தாள். நந்தினியின் பெரிய பண்ணை வீட்டின் அருகேதான் மந்தாகினியின் சின்ன ஓட்டு வீடும் இருந்தது.

 

“சரவணா… இப்படியே மலைச்சுப் போயி நின்னா எப்படிடா…? அடுத்து நடக்க வேண்டியதைப் பார்க்க வேண்டாமா…?” நண்பனின் குரலில் திரும்பிய சரவணன் விம்மினார்.

 

“அடுத்துன்னா, அடுத்து என்னடா நடக்கணும்..? இப்படி வலுக்கட்டாயமா தாலி கட்ட வச்சா மாப்பிள்ளை எப்படி நம்ம பொண்ணோட நல்லபடியா குடும்பம் நடத்துவார்…?”

 

“அதெல்லாம் நான் பார்த்துக்க மாட்டேனா…? நம்ம பொண்ணு வாழ்க்கையை சரி பண்ண வேண்டியது என் பொறுப்பு…”

 

“இருந்தாலும், கொஞ்சம் கூட விருப்பமில்லாம இவளை எப்படி ஏத்துக்குவார்…? ஐயோ…! இந்தப் பாவி மக வாழ்க்கை இப்படி கேள்விக்குறியாப் போயிருச்சே…!” வேதனையுடன் விம்மத் தொடங்கியவர் சட்டென்று நெஞ்சைப் பிடித்துக் கொள்ள, சட்டென்று அந்தக் கல்யாண மண்டபம் இழவு வீடாய் மாறியது.

 

உண்மைகளை

உரக்க சொன்னாலும்

யாரும் இங்கு

உணர்வதில்லை…

ஆனால் வதந்திகளுக்கு

வரையறை இல்லை…

இஷ்டப்படி கற்பனை

இட்டு நிரப்பப்படுகிறது…

 

 

Advertisement