ஆள வந்தாள் -11

 

அத்தியாயம் -11

 

சேரன் கட்டிலில் படுத்திருக்க அறைக்குள் வந்த மதுரா தரையில் பாய் விரித்தாள்.

 

“என்னடி பண்ற?” என அதட்டலாக கேட்டான்.

 

‘சுள்’ என கணவனை பார்த்தவள் பாயில் படுத்து விட, “நீ உங்கம்மாவோட போய் பேசினதால இப்ப என்ன பிரச்சனை வந்திருக்கு? பாவம் மதன் பய, என்னால… ம்ஹூம்…  உன்னால அவனுக்கு அடி, அவன் அப்பா வேற கண்டபடி பேசிப்புட்டாரு. நீ என்னடான்னா எங்கிட்ட கோச்சுக்குற” என்றான்.

 

இப்பொழுதும் என்ன என விசாரிக்காமல் அவனாக ஊகம் செய்து பேசுவது எரிச்சலை கொடுத்தாலும் நாமே விஷயத்தை சொல்லலாம் என நினைத்தவள் அவன் புறம் திரும்பிப் படுத்தாள்.

 

“நான் அம்மாட்ட பேசினதால ஒன்னும் மதன் அத்தானை என் அண்ணன் அடிக்கல…”

 

“உன் அண்ணனா? ஹாஹான்… இருக்கட்டும் இருக்கட்டும்… ஒரு நாள் இல்ல ஒரு நாள் உன் அண்ணன் இடுப்பு எலும்ப முறிச்சு வுட்டு படுக்கைல போடுறேனா இல்லயா பாரு”

 

“நடந்தத முழுசா தெரிஞ்சுக்காம பேசாதீங்க. அர்ச்சனா இருக்கால்ல…”

 

“யாரு?”

 

“அதாங்க… சிதம்பரம் பெரியப்பா பொண்ணு…”

 

“நிறுத்துடி! எரிச்சல் படுத்தாம நீ அங்குட்டே படுத்து தூங்கு” என்றவன் அவளுக்கு முதுகு காட்டி படுத்துக் கொண்டான்.

 

“யாருன்னு உங்களுக்கு தெரியலைன்னா எப்படி நான் சொல்றது? சும்மா எல்லாத்துக்கும் குத்தம் கண்டுபிடிச்சா நான் என்னதான் செய்வேன்?” என ஆதங்கமாக மதுரா கேட்டதற்கு பதில் தரவில்லை அவன்.

 

“புத்தி பிசகி போனவங்கதான் இப்படி நடப்பாங்க. என்ன சண்டை வம்பா இருந்தாலும் யாரோட உறவு முறையும் மாறிப் போயிடாது” அவனுக்கு புரிய வைத்து விட வேண்டும் என்ற நோக்கத்துடன் பேசினாள்.

 

“விஷயத்த சொல்லு” என்றான்.

 

“அர்ச்சனாவை உங்க ஃப்ரெண்ட் விரும்புறார். ரெண்டு பேரும் அங்க நின்னு பேசிட்டு இருக்கிறத பார்த்திட்டுத்தான் அண்ணன் உங்க ஃப்ரெண்ட்டை அடிச்சிட்டார்” என அவள் சொல்லி விட, “என்னடி உளறிட்டு இருக்க?” எனக் கேட்டுக் கொண்டே எழுந்தமர்ந்தான்.

 

அவளும் அமர்ந்து கொண்டவள் இன்னொரு முறை விஷயத்தை சொல்லி, அர்ச்சனாவின் பெயரை இழுக்க வேண்டாம் என்பதால்தான் தான் இதை வேறு யாரிடமும் சொல்லவில்லை என்றாள்.

 

“அப்படி எதுவும்னா எனக்கு சொல்லாம இருப்பானா? நீயா தப்பா புரிஞ்சுக்கிட்டியோ என்னவோ” என்றான்.

 

அவனை முறைப்பாக பார்த்தவள், “ஆமாம் நான்தான் தப்பா புரிஞ்சுக்கிட்டேன்” என கோவமாக சொல்லி படுத்து விட்டாள்.

 

யோசித்துப் பார்க்கும் போது காலையில் அர்ச்சனா பீதியுடன் மதுராவின் அருகில் நின்றிருந்தது அவனுக்கு நினைவு வந்தது. அவளை எப்போதாவது பார்த்திருக்கிறான், பெயர்தான் சட்டென நினைவு வரவில்லை.

 

“நீ ஏன் முன்னாடியே என்கிட்ட சொல்லலை?” என அவன் கேட்க, வேகமாக எழுந்து அவனிடம் சென்றவள் அவனது கழுத்தை இறுக்கி பிடிக்க போனாள். அவளின் செயலை கணித்தவன் சட்டென கைகளை பிடித்து தன் மீது அவளை போட்டுக் கொண்டான்.

 

அவள் விலக முற்பட, விடாமல் அணைத்துக் கொண்டவன், “முன்னாடியே சொல்லியிருந்தா மதனுக்கு புத்திமதி சொல்லியிருப்பன்ன? அதுக்கு சொன்னா எதுக்குடி இவ்ளோ கோவம் உனக்கு?” எனக் கேட்டான்.

 

“அறிவிருக்கா உங்களுக்கு? எனக்கே காலைலதான் சேதி தெரியும்? முன்னாடியே எப்படி சொல்வேன் உங்ககிட்ட? ஏன் சொல்லலைன்னு உங்க ஃப்ரெண்ட்டை போய் கேளுங்க. இப்ப என்னை ஆள விடுங்க” என்றவள் வலிந்து அவனிடமிருந்து விடுபட்டாள்.

 

“உனக்கெப்படி தெரியும்?”

 

“அவளே சொன்னா”

 

“ஏது அத்தனை கலவரத்திலேயும் காதல் கதை சொன்னாளா அவள்?”

 

“ஆமாம் நீங்க ஆம்பளைங்க எல்லாம் பொழுது போகாமா குஸ்தி போட்டுக்கிட்டு இருந்தீங்க, பொம்பளைங்க நாங்க பொழுது போக என்னத்த செய்றது? அதான் சண்டையை வேடிக்கை பார்த்துகிட்டே கதை பேசிட்டு இருந்தோம்” என நொடிப்பாக சொன்னாள்.

 

புன்னகைத்தவன், “சரி வா, என்கிட்ட இருந்திட்டு நல்லா விவரமா சொல்லு” என கை நீட்டி அவளை அழைத்தான்.

 

“வாய்க்கு வந்தது எல்லாம் பேசிட்டு கட்டி புடிப்பராம்! நானும் இளிச்சுக்கிட்டு இவரு கொடங்கையில கெடப்பேன்னு நினைப்பு போல… இன்னும் என்ன விவரம் சொல்லணும் நான்? உங்ககிட்டலாம் பேச முடியாது போங்க. காலைலேருந்து மண்டை குத்துது, ரெஸ்ட் எடுக்க விடாம ஏதாவது சீண்டுனீங்க…” மூச்சிரைக்க பேசியவளை வைத்த கண் எடுக்காமல் பார்த்தான்.

 

அவனுக்கு முதுகு காண்பித்து திரும்பியவள் புடவை முந்தானையின் பட்டைகளை அவிழ்த்து ஒற்றையில் போட்டுக் கொண்டு, இடுப்பு பகுதியிலும் புடவையை தளர்த்தி விட்டு, மீண்டும் பாயில் படுத்து விட்டாள்.

 

காலையில் குளித்தது, சமையல் செய்தது வேறு கச கச என இருந்தது அவளுக்கு. காற்று போதாமல் அனிச்சையாக முந்தானை கொண்டு விசிறி விட்டுக் கொண்டவள் கணவனும் அங்குதான் இருக்கிறான் என்ற நினைவு வந்து பட்டென முந்தானையை சரியாக போட்டுக் கொண்டு ஓரக் கண்ணால் அவனை பார்த்தாள்.

 

அவள் எதிர் பார்த்தது போல உறங்கியிருக்காமல் அவளை பார்ப்பதற்கு வாகாக படுத்திருந்தவன் இதழ்களில் அடக்கப் பட்ட குறும்பு சிரிப்பு.

 

‘உன்னால் சிரிக்க மட்டும்தான் முடியும், அருகில் வந்து பார், அப்போது நான் யாரென காட்டுகிறேன்’ என நினைத்தவள் திரும்பிப் படுத்து முந்தானைக்கு மட்டும் விடுதலை கொடுத்து விட்டாள். அவளுக்கு முன் இருந்த மர பீரோவில் பதித்திருந்த கண்ணாடி அவள் மறைக்க நினைத்ததை அவனுக்கு காண்பித்து கொண்டிருந்தது.

 

சேரனின் மனநிலையே மொத்தமாக மாறி விட்டது. உணர்வுகளின் பிடியில் காதோரங்களும் அடி வயிறும் திடீரென வெப்பமடைவதை உணர்ந்தவன் ஏக்கமாக கண்ணாடியில் தெரிந்த அவளது முகத்தை பார்த்தான். அழகிய  முகத்தில் எரிச்சலும் கோவமும் எக்கச்சக்கமாக மண்டிக் கிடந்தன.

 

அருகில் சென்றால் நிச்சயம் இன்னும் கோவம் கொள்வாள் என தெரிந்து தன்னை கட்டுப்படுத்திக் கொள்ள பார்த்தான். அவள் புரண்டு புரண்டு படுத்து இவனை வெகுவாக சோதனை செய்தாள்.

 

உலர்ந்து போன தொண்டையை உமிழ்நீரால் நனைத்துக் கொண்டவன் போர்வையை அவள் மீது தூக்கி போட்டு, “போத்திக்கிட்டு படுத்துக்க” என்றான்.

 

தன் மீது விழுந்த வேகத்தில் அந்த போர்வையை மீண்டும் அவனிடமே வீசி எறிந்தவள், “வேணும்னா உங்க மூஞ்சையும் கண்ணையும் மூடிகிட்டு தூங்குங்க. கோடையில எரியுற எரிச்சல் போதாதுன்னு போத்திக்கணுமாமுல்ல” என கடுப்படித்தாள்.

 

“இதெல்லாம் சரியில்லடி, ஒன்னு என்கிட்ட வா, இல்ல என்னை உங்கிட்ட கூப்பிடு. ரெண்டும் இல்லையா இந்தா போர்வை, வாங்கிக்க” என்றான்.

 

“கொஞ்ச நேரம் முன்னாடி நான் யார்கிட்ட பேசணும் பேசக்கூடாதுன்னு ஏதோ உங்கம்மாகிட்ட சொன்னீங்களே… எங்க… திரும்ப சொல்லுங்க” கோவத்தோடு சொன்னாள்.

 

சேரனின் முகம் உடனேயே மாறி விட்டது.

 

“ம்ம்… சொல்லுங்க” என்றாள்.

 

“அத அப்புறம் பேசலாம். ரெஸ்ட் எடுக்கணும்ன உனக்கு? தூங்கு” என்றவன் கண்களை புறங்கையால் மூடிக் கொண்டு விட்டான்.

 

பின் இருவரும் பேசிக் கொள்ளவில்லை. மாலையில் சேரன் விழிக்கும் போது மதுரா நல்ல உறக்கத்தில் இருந்தாள். ஆடையெல்லாம் தாறுமாறாக கலைந்து விலகி கிடந்தது.

 

“ஒரு நாள் ராத்திரியில கூச்சமெல்லாம் வுட்டு போச்சு போல இவளுக்கு, கொலையா கொல்றா” என்றவன் அவளருகில் அவளை உரசாமல் சில நிமிடங்கள் படுத்து கிடந்தான்.

 

ஓரளவு அவளது புடவையை சரி செய்து விட்டவன் அவளை எழுப்பாமல் அவன் மட்டும் வெளியே சென்று கதவை அடைத்து விட்டான்.

 

 இன்னும் மதுரா வெளியில் வரவில்லை என குறை படிக்க ஆரம்பித்து விட்டார் கனகா.

 

தன்னை சுத்தப் படுத்திக் கொண்டு வந்த சேரன், “அவ எந்திரிச்சு வந்துதான் உனக்கு ஆகணுங்கிற வேலை என்ன இருக்கு இப்போ?” எனக் கேட்டான்.

 

“என்னடா நீ, விளக்கு வைக்கிற நேரத்துல தூங்கலாமா டா? சாமி ரூம்ல விளக்கேத்த வருவாளா மாட்டாளா?”

 

“போதும் போதும், ஒரு நாள் விளக்கு வைக்கிற நேரத்துல அசந்து தூங்கினா எந்த பூகம்பமும் வந்திடாது. நீ இப்படி கத்திகிட்டே இருந்தா எல்லாரும் காதுல பஞ்சு வச்சு அடைச்சுக்கிட்டுதான் திரியணும். தெரியாமதான் கேட்குறேன், விளக்கு வைக்கிற நேரம் இப்படி காச் மூச்னு கத்தினா மட்டும் வீடு விளங்குமா? அடுப்படியில மட்டும் நீ பத்த வச்சாதான் அடுப்பு எரியும்னு உரிமை பேசுற, சாமி ரூம்ல நீ ஏத்துனா விளக்கு எரியாதா?” என  பொரிந்து தள்ளினான்.