Advertisement

ஆர்ப்பரிக்கும் அலைகடலாய்

                             அத்தியாயம்  –  3

 

நிரஞ்சனா மயக்கம் தெளிந்து எழ அவள் குடும்பமே ஹாஸ்பிட்டலில்தான்.. அவள் விழிக்கும்போது அனைவரும் அவளைச்சுற்றி கவலையாய் அமர்ந்திருக்க பேச்சி மகளுக்காக வேண்டாத தெய்வமில்லை.. நிரஞ்சனா கண்விழித்ததும் தாயை கட்டிக்கொண்டு ஓவென கதறி தீர்த்துவிட்டாள் அவள் கண்முன் தீபாவே நிழலாட அவள் இழப்பை நினைத்து கூட பார்க்க முடியவில்லை.. அவளின் அழுகையை நிறுத்தி சமாதானப் படுத்துவதற்குள் போதும் போதுமென்றாயி  ற்று..

 

தீபாவும் இவர்கள் ஊர்பெண்தான்.. ஒன்றாம் வகுப்பிலிருந்து இருவரும் நெருங்கிய தோழிகள் வீடுகளும் அருகருகேதான்.. தீபா பாதி நேரம் இங்கே பொழுதை கழிப்பதும் நிரஞ்சனா ஓய்வு நேரத்தில் அங்கு இருப்பதும் வாடிக்கை..

 

கதவை திறந்துகொண்டு சேதுபதி உள்ளே நுழைய கூடவே கௌதம்.. போலிஸ் உடையில் இருந்தான்.. தந்தையை பார்க்கவும் மீண்டும் அழுகை வர.. அருகில் கௌதமை பார்க்கவும் அடக்க முயன்றாள் … ஆனாலும் முதுகு அழுகையில் குலுங்கியது..

 

சேதுபதி மகளை உணர்ந்தாற்போல் அவள் முதுகை தட்டிக்கொடுத்து இதுக்குத்தான் படிச்சு படிச்சு சொன்னேன்… சூதானமா இருங்க இருங்கன்னு..!! எங்க கேட்டாத்தான…?? எல்லாத்துலயும விளையாட்டுத்தனம்.. இப்ப ஒரு உசிர காவு வாங்கிருச்சு.. உன்னை விடமாட்டேன்னு சொன்னப்போ அவதான் உனக்காக அவ்வளவு பேசினா..!! பத்திரமா கூட்டிப்போயிட்டு கூட்டி வர்றேன்னு… இப்ப அவளே உசிரோட இல்ல… அந்த பச்ச மண்ண கொல்ல எப்படிதான் மனசு வந்துச்சோ…??” அவருக்கும் கண்கலங்கியது.. நிரஞ்சனாவை போல அவளையும் அவர்கள் வீட்டு பெண்ணாகத்தான் பார்த்தார்கள்..

 

சற்று நேரம் அமைதியாக இருந்தவர்.. மகள் அழுகையை நிறுத்தி சற்று ஆசுவாசம் அடைந்திருக்க, ஆத்தா காளியம்மை தம்பி யாருன்னு தெரியுதுதானே…??”

 

ம்ம்ம்.. தலையை ஆட்டியவள் தெரியும்ப்பு அண்ணியோட அண்ணேதானே.. அண்ணி அவங்க போன்ல  காட்டியிருக்காங்க..!!”

 

ஹாஸ்பிட்டலில் வளவனை பார்க்கும் வரை தன் தங்கைக்கு வரப்போகும் மாப்பிள்ளையின் தங்கைதான் நிரஞ்சனா என கௌதமிற்கு தெரியவில்லை.. அவன் பார்வை அவளை அங்குலம் அங்குலமாய்  துளைக்க வாடிய கொடிபோல் அழுதழுது முகம் சிவப்பாய் மாறி தலையெல்லாம் கலைந்து  ஏதோ மங்கிய தோற்றம்..

 

நேற்று தன்னிடம் அவ்வளவு வாய் பேசிய பொண்ணா இது..?? இது யாருக்கு போட்ட ஸ்கெட்ச்..?? வேற யாருக்கும் போட்டதுல அந்த பொண்ணு போய் மாட்டிருச்சா.. நேற்று முழுவதும் அவன் அங்குதான் ஸ்டேஷனுக்கு தகவல் தெரிவித்தவன் நிரஞ்சனா, தர்ஷினி இருவரையும் அவன் பொறுப்பிலேயே ஹாஸ்பிட்டலில் சேர்த்திருக்க காவலுக்கு இரண்டு கான்ஸ்டபிள்களை நியமித்திருந்தான்..

 

அவர்களின் தோழிகள் அனைவரும் தீபாவின் உடலை பார்த்து கதற ஆசிரியர்களை அழைத்து மாணவ மாணவியர்களை பத்திரமாக வீட்டில் சேர்க்க  உத்தரவிட்டு சில ஆண் ஆசிரியர்களை மட்டும் இருக்க சொல்லி தீபா, நிரஞ்சனா, தர்ஷினி குடும்பத்திற்கு தகவல் சொல்ல சொல்லியிருந்தான்..

 

வளவனையும் அவன் குடும்பம் மொத்தத்தையும் பார்க்கவும் என்ன இவ்வளவு பதட்டம் என்றுதான் தோன்றியதே தவிர நிரஞ்சனா இவர்கள் குடும்பத்தை சேர்ந்தவள் என்று நினைக்கத் தோன்றவில்லை..

 

கதவை திறந்துகொண்டு வளவன் உள்ளே வர பாய்ந்து அண்ணனிடம் சென்றவள் அண்ணே…தீபா..!!” மீண்டும் அழுகை.. அவனுக்கு தீபாவும் ஒரு தங்கை போலத்தானே.. எப்படி தங்கையை தேற்றுவது தெரியவில்லை.. சற்று நேரம் அவள் முதுகை தட்டி ஆறுதல்படுத்த காந்திமதியும் பேச்சியும் இன்னும் அழுதபடிதான்…

 

சரி விடுத்தா எம்புட்டு நேரம்தான் அழுவ..??” சேதுபதி மகளை சமாதானப்படுத்தியபடியே பில் எல்லாம் கட்டிட்டியா வளவா..?? கிளம்பலாமா..??”

 

போகலாம்பா … எல்லாம் செட்டில் பண்ணிட்டேன்…

 

நிரஞ்சனாவை சமாதானப்படுத்தி முகம் கழுவி வரச்சொல்ல அண்ணே தர்ஷினி…!!”

 

அவ குடும்பமும் இங்கதான்.. இங்க அவ பெரியம்மா வீடு இருக்காம் அங்க போறதா சொன்னாங்க..??”

 

 தீபாவ யார்ண்ணே இப்படி செஞ்சிருப்பா…?? கரப்பான் பூச்சிய பார்த்தாலே அவளோ பயப்படுவா.. அவ எப்படிண்ணே இப்படி..?? அவளா தூக்கு போட்டிருக்க மாட்டா..?? எல்லாத்துக்கும் காரணம் நான்தான்..!! வரமாட்டேன்னு சொன்னவள நான்தான் பிடிச்சு இழுத்துட்டு போனேன் என்னாலதான் அவ செத்துப்போனா..!!” மீண்டும் தலையிலடித்துக் கொண்டு அழ,

 

சேதுபதி மகளை அதட்டியவர் அட கிறுக்குகழுதை ஏன் இப்ப மறுபடி ஆரம்பிக்கிற..?? நம்ம ஊர்ல இருந்து இம்புட்டு தூரம் வந்து இப்படி நடந்திருக்குனா எந்த கொலைகாரனோ உங்க பின்னாடியே வந்திருக்கான்.. நீங்க எப்ப தனிதனியா போறிங்க பார்த்திருக்கான்.. அவ்வளவு பேர் வந்திங்கதானே ஏன் நீங்க மூனு பேரு மட்டும் தனியா வரனும்..?? எவ்வளவு சொல்லிவிட்டோம்… தனியா போகாதிங்க போகாதிங்கன்னு..??

 

 ஊர் நிலவரம் தெரிஞ்சும் உங்கள அனுப்பியிருக்க கூடாது.. பாவம் சின்னப்புள்ளைக ஏமாந்து போவிகன்னு நினைச்சோம்.. என்னத்த சொல்ல..?? அங்கன தீபா பொண்ணு அப்பனும் ஆத்தாளும் அழறத கண்கொண்டு பார்க்க சகிக்கல… எல்லாம் விதி.. சரி விடுத்தா அதான் இந்த தம்பி பார்த்துக்கிறேன் சொல்லியிருக்குல… அழாத..!! பேச்சி என்ன பார்த்துட்டு   இருக்க ..?? நீயும் அழுதா அவள யாரு சமாதானப்படுத்த…?? புள்ளைக்கு சூடா ஏதாச்சும் குடிக்க கொடு.. கிளம்ப வேணாமா…!!”

 

அப்போதுதான் உள்ளே வந்த சாரதா… எங்கண்ணே கிளம்புறேன்னு சொல்றிங்க..?? இம்புட்டு தூரம் வந்திட்டு நம்ம வீட்டுக்கு வராம போகலாமா..??”

 

தங்கச்சி.. நல்ல விசயமா நடந்திருக்கு..?? அங்க வந்து சந்தோசமா இருந்துட்டு போக…?? அதோட விசயம் கேள்விப்பட்டு போட்டது போட்டபடி வந்துட்டோம்  புள்ளைய பத்திரமா வீட்டுக்கு கூட்டிட்டு போயிடுறோம்தா அப்புறமா… இன்னொரு நாளைக்கு சாகவாசமா வந்து விருந்து சாப்டா போச்சு..

“அண்ணே அந்த பேச்சுக்கே இடமில்ல… இம்புட்டு தூரம் வந்திட்டு அங்க வீட்டுக்கு

வராம போனா எனக்கு மனசே ஆறாது!! ஒருநாளாச்சும் வந்து தங்கிட்டுதான் போகனும்.. அதோட உங்க மருமகளோட பிறந்த நாளு இன்னைக்கு…!!  வீட்டுக்கு வந்து திருநீறு பூசிட்டு போங்க.. ஏய் ராஜி என்ன.. என் வாயப்பார்த்துட்டு இருக்க..?? எல்லாரையும் கூப்பிடு ..??”

 

வரவும் நிரஞ்சனாவிடம் சென்று நின்றிருந்த ராஜிக்கு எப்படி பேசுவது என தயக்கம் அதிலும் பெரிய மீசையில் இருக்கும் சேதுபதியை எப்போது பார்த்தாலும் பயம்தான்… திருமணமென்று பேசிய இத்தனை நாட்களில் இப்போதுதான் வளவனிடம் தன் கூச்சம்விட்டு சரளமாக பேச ஆரம்பித்திருந்தாள்.. அதற்கே அவன் தலையால் தண்ணீர் குடிக்க வேண்டியதாக இருக்கிறது..

 

எல்லாரும் வீ..வீட்டுக்கு வாங்க மாமா..??” சேதுபதியை பயத்துடனே பார்வையிட வளவனை நிமிர்ந்து கூட பார்க்கவில்லை..

 

ஓஓஓஓ நம்மாளுக்கு பிறந்தநாளா…!! சொல்லவே இல்ல..??. இந்த பக்கி..

 

வேலப்பனையும் மற்றவர்களையும் பார்த்து மா… மாமா அத்தை எல்லாரும் வீட்டுக்கு வந்திட்டு 2 நாள் இருந்துட்டு அப்புறமா போகலாம்.. தைரியத்தை வரவழைத்து சொல்லிவிட்டாள்..

 

சாரதாவும் அவர்களை மீண்டும் மீண்டும் வற்புறுத்த தம்பியை அழைத்த சேதுபதி வேலா நீ எல்லாரையும் கூட்டிட்டு மருமக வீட்டுக்கு போ..?? நானும் உன் அத்தாச்சியும் ஊருக்கு கிளம்புறோம்.. அங்க போட்டது போட்டபடி வந்துட்டோம்.. ஒரு நாள் நாம இல்லாட்டாலும் நமக்குதான் நட்டம் அதோட தீபா பொண்ணோட உடம்ப இன்னைக்குத்தான் போஸ்மாட்டம் பண்ணி தரப்போறாங்களாம்…

 

 ஊருக்குத்தான் கொண்டு வருவாங்க .. இவ அங்கன இருந்தா சினேகித பிள்ளைய நினைச்சு அழுதுட்டுத்தான் கிடப்பா ..?? இங்கன ரெண்டு நாளைக்கு இருக்கட்டும் பொறவு வீட்டுக்கு வரலாம்.. அதோட நம்ம வீட்டுக்கு வரப்போற பொண்ணுக்கு பொறந்த நாளு … நீ எதாச்சும் நல்ல நகையா வாங்கி கொடுத்திட்டு இங்க இருந்துட்டு வாங்க..!!”

 

 

அண்ணே எல்லாஞ்சரி அதுக்கு ஏன் நீங்க ஊருக்கு போகனும் .. நானும் ராஜமும் போறோம்.. நீங்க இருந்துட்டு வாங்க துணைக்கு வளவன வைச்சுக்கோங்க… நானும் அவளும் மருமக வீட்டுக்கு வந்து பேருக்கு தலைய காட்டிட்டு கிளம்புறோம்.. காளியம்மை பக்கத்துல அத்தாச்சி இப்ப இருக்கனும்ணே…!! பாருங்க ஒருநாளைக்குள்ளையே புள்ளை ஓஓஓஓ ன்னு போச்சு… அதோட ஊரு கன்னிப்பொண்ணு சாவு.. தீபா அப்பனும் நம்ம ஜாதிசனம் .. நாட்டாமைகார வகையறா..?? நீங்க போனா எல்லாத்துக்கும் அலைய முடியாது நாங்க கிளம்புறோம்.. நான் வேலையை பார்த்துக்கிட்டாலும் இவ அங்க போயிட்டு வருவா.. என்ன நான் சொல்றது..??   

 

அதோட எனக்கு ஒரு யோசனை தோனுதுண்ணே..?? தன் அண்ணனிடம் யோசனையை சொல்ல… அந்த மினிஸ்டர் நம்ம ஜாதி சனம்தான… நீங்க இங்கன இருந்தா ரெண்டே நாளுல வேலையை முடிச்சிருவிங்க.. இத சாதாரணமா விடக்கூடாதுண்ணே.. நம்ம வீட்லயும் வயசுப்புள்ள இருக்கு.. பாருங்க இதோட எத்தனை கன்னிப்பொண்ணுக இப்படி அபாண்டமா செத்துப்போச்சுன்னு..!!”

 

அண்ணன் யோசனையில் மூழ்குவதை கண்டவர் தன் மகனிடம் அனைவரையும் பத்திரமாக கூட்டிவரச்சொல்லி தான் ஊருக்கு கிளம்பும் வேலையை துவக்கினார்…

 

ராஜிக்கும் வளவனுக்கும் திருமணம் நிச்சயம் ஆன போது கௌதம் 3 மாத டிரைனிங்கில் டெல்லியில் இருந்தான்.. அப்போது கௌதமின் தந்தை உயிரோடு இருக்க அவர் பார்த்து முடித்த சம்பந்தம்தான் இது.. வீட்டிற்கு ஒரே பையன் என்று சொல்லியிருக்க வளவன் விவசாயத்தில் இருக்கவும் தன் நண்பர்களை வைத்து குடும்பத்தை விசாரித்து நல்ல குடும்பம் என தெரியவும் தந்தைக்கு பச்சைக் கொடி காட்டியிருந்தான்..

 

இதில் நிச்சயம் முடிந்து ஒரு மாதத்தில் கௌதமின் தந்தை திடிரென இறந்திருக்க நிரஞ்சனாவை தவிர அனைவரும் அவன் தந்தை இறப்பிற்கு வந்திருந்தார்கள்.. அவர்களே குடும்ப உறுப்பினர் போலமுன் நின்று அனைத்தையும் செய்திருக்க கௌதமிற்கு இவர்களை மிகவும் பிடித்துவிட்டது.. சேதுபதி திருமணத்தை ஒருவருடம் தள்ளி வைத்துக் கொள்ளலாம் என்று சொல்லியிருந்தார்..

 

 தங்கை வாழப்போகும் வீட்டையும் அவர்கள் குடும்பத்தையும் பார்ப்பதற்க்காக   கௌதம் அவர்கள் வீட்டிற்கே வந்திருக்க அன்று பார்த்து நிரஞ்சனா கல்லூரி சென்றிருந்தாள்.. வீட்டிற்குள் சென்றிருந்தால் வீடு முழுக்க மாட்டப்பட்டிக்கும் அவளுடைய போட்டோக்களை பார்த்திருப்பான்..

 

வீட்டு ஆண்கள் யாரும் இல்லாததால் வீட்டுக்குள் செல்லாமல் தாழ்வாரத்திலேயே அமர்ந்திருந்தவன் வளவன் தோப்பில் இருக்கிறான் தெரியவும் அங்கு சென்று மாலை வரை அவனுடனேயே பொழுதை போக்கி மாலை ஊர் திரும்பியிருந்தான்.. இவர்கள் கூட்டுகுடும்பமாக இருக்கிறார்கள் வளவனுக்கு பெரியப்பா பெண் ஒருத்தி இருக்கிறாள் அதை மட்டுமே தெரிந்துகொண்டவனுக்கு அதற்கு மேல் ஆர்வம் இல்லை…

 

Advertisement