Advertisement

ஆர்பரிக்கும் அலைகடலாய்
                            அத்தியாயம்  –  1
               ஏய் என்னடா இது சப்ப பீட்டு

                       கொளுத்துங்கடா

               ஆ…. .. மஜாப்பா மஜாப்பா
                        ஏய் அடி வாங்கடா

               வாத்தி கமிங் ஒத்து ஒத்து

                       டும்பா டும்பா
              அண்ணா வந்தா ஆட்டம் பாம்

                       டும்மு

             பிலு பிலு பிலு பிலாமி
                        பிலு பிலு பிலு ஏய் ….

 
பாட்டு சத்தம் அந்த பேருந்தில் காதை பிளக்க… பேருந்தின் முன்னால் வந்து ஓட்டுனரை முறைத்த அந்த கல்லூரியின் பிரின்ஸ்பால்..
 
பாட்ட நிப்பாட்டு…?? இன்னும் டூரே ஆரம்பிக்கல.. இந்தா ஆரம்பிச்சிட்டாளுக இவளுக வேலைய..?? இந்த பாட்டுத்தான் போடனுமா..?? ஏன் வேற சாமி பாட்டு ஏதும் கிடைக்கலையா.. ??”
 
இல்லம்மா நிரஞ்சனா பொண்ணுதான் கொடுத்திச்சு..
 
அவள…!! இந்த ரெண்டுநாளும் எனக்கு ஏழரைதான்..?? அதுக்கு ஆரம்பம்தான் இப்ப… ??” இப்பொழுதே அவருக்கு கண்ணை கட்டுவது போலிருந்தது.. தன் கோபத்தை டிரைவர் மேல் காட்டி இன்னும் தன் நெற்றிக்கண்ணை திறக்க கப்பென்று வாயை மூடியவர்..
 
ஏனாம் என்னவாம் இந்த பாட்டுக்கு..?? ஊரே ஆடுது.. ஏன் நான்கூடத்தான் நல்லா ஆடுவேன்.??. ஆடத்துடித்த தன் தோள்களை அடக்கியவர் ச்சே இந்தம்மா வராம இருக்கலாம் .. தானும் அனுபவிக்காது.. அந்த பொண்ணுகளையும் அனுபவிக்க விடாது..!! அந்த சீடியை எடுத்துவிட்டு பக்தி பாடல் ஒன்றை போட்டுவிட்டார்..
 
இரண்டு பஸ்கள் தயாராக இருக்க எஸ். கே கலை அறிவியல் கல்லூரி என்ற பேனர் இரண்டு பஸ்ஸிலும்..
 
டேய் என்னடா சொல்றிங்க பாய்ஸ் தனி பஸ்லயா,..???” மாணவர்களில் ஒருவன் கவலையாய் கேட்க..
 
ப்ப்ச் இப்படின்னு தெரிஞ்சிருந்தா நான் டூருக்கே வந்திருக்க மாட்டேன்.. அவனுக்கு அவன் கவலை…
 
பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை பஸ் ஏற்றிவிட வந்திருக்க நம் கதையின் நாயகி நிரஞ்சனாவைச் சுற்றி அவள் குடும்ப உறுப்பினர்கள்.. அந்த குடும்பத்தின் தலைவர் ..
 
ஆத்தா காளியம்மை.. உன் வால்தனத்தை எல்லாம் இந்த ரெண்டுநாளு மூட்டை கட்டி வைச்சிரனும் .. உன்னைப்பத்தி ஏதாச்சும் கோளாறுன்னு  வாத்தியாருக சொன்னாக அப்புறம் இருக்கு சேதி..??” சேதுபதி தன் வளர்ந்த மீசையை நீவியபடி மகளை அதட்ட தன் அப்பாவிற்காக காட்டும் பவ்ய முகத்திற்கு வேகமாக மாறியவள்,
 
இல்லப்பு இல்லப்பு ஒழுங்கா போயிட்டு ஒழுங்கா வந்திருவேன்..
 
ம்ம்ம் இந்தா..!!!” பணத்தை மகளிடம் கொடுத்தவர் நம்ம ஊர் நிலவரம் தெரியும்தானே.. தனியா அனுப்ப வேணாம்னு சொன்னேன்.. உன் சினேகிதபிள்ளைக ரொம்ப சொல்லவும்தான் அனுப்புறேன்.. தனியா எங்கயும் போக கூடாது.. குரங்கு சேட்டை எதுவும் பண்ணாம பொண்ணா அடக்க ஒடுக்கமா இருக்கனும்.. எந்த பயலுக கிட்டயும் சினேகிதம் வைச்சுக்க கூடாது… நா அப்பப்ப உன் வாத்தியார் அம்மாக்கிட்ட போன்ல கேப்பேன் ஏதாச்சும் கோளாறுன்னு சொன்னாக உன் அண்ணன அனுப்பி கூட்டி வரச்சொல்லிருவேன் பார்த்துக்க..!!”
 
தூரத்தில் பிரின்ஸ்பாலை பார்த்தவர் இரு எதுக்கும் அவுககிட்ட இன்னொருக்கா நியாபக படுத்திட்டு வர்றேன்..!!”
 
க்கும் சும்மாவே இந்த பிரின்ஸிக்கும் எனக்கும் ஏழாம் பொருத்தம் இதுல அப்பாரு வேற..??”
 
இந்தாரு தங்கம் அப்பாரு சொன்னது நியாபகத்துல வைச்சுக்கோ சும்மா தங்கு தங்குன்னு குதிக்கப்பிடாது..
 
அச்சோ ஆத்தா நீ வேற ஆரம்பிக்காத…?? வேணுன்னா நான் டூருக்கே போகல.. போங்க சும்மா நொய் நொய்ன்னு..!!” தன் முகத்தை திருப்பிக் கொள்ள..
 
இந்த கோபத்துக்கொன்னும் குறைச்சல் இல்ல.. ஆத்தா காடேரி பெத்தபெருமா..  என் மக கூடவே போயிட்டு கூடவே வா..” தன் கையிலிருந்த சிவப்பு திருஷ்டி கயிற்றை தன் மகளின் காலுக்கு கட்டிவிட..
 
நிரஞ்சனா ஓயாம சொல்றோம்னு நினைக்கப்பிடாது.. ரொம்ப கவனம்தா..
 
ச்சு என்னண்ணே நீயும்…” தன் அண்ணன் வளவனிடம் சென்று கையை நீட்ட தன் பர்ஸிலிருந்து 2000 தாள் ஐந்தை தங்கையின் கையில் வைத்தான்..
 
சரி நான் இல்லைன்னு அண்ணிக்கிட்ட ஓவரா போன்ல கடலப்போடாத..??”
 
ஐயோ.. சொல்லாத சொல்லாத சொல்லிட்டாளே….!!! சங்கடமாக தன் அருகில் நின்றிருந்த தன் அப்பா வேலப்பனை பார்க்க .. டேய்… மருமகக்கிட்ட போன்ல பேசிட்டு இருக்கியா..?? பேசித்தான் முடிச்சிருக்கு கல்யாணத்துக்கு இன்னும் நாள்கிடக்கு தெரியும்ல.. தன் நெற்றிக்கண்ணை திறந்திருந்தார்..
 
ஆமா அந்த தத்திக்கிட்ட பேசிட்டாலும் இவரு வேற காமெடி பண்றார்… அதெல்லாம் நான் போன் பேசல தங்கச்சி சும்மா சொல்லுது..??” தங்கையை முறைத்தவன் அவளை அடிப்பது போல அருகில் வர
 
அப்பு பாருங்க..?? தன் சித்தப்பாவிடம் ஓடி ஒளிந்து கொண்டவள்.. அப்பத்தா உனக்கு வரும்போது என்ன வாங்கிட்டு வர..!!” தன் அப்பத்தாவின் தோளில் கைப்போட்டு அவரிடம் வம்பிழுக்க.. அவர் காந்திமதி வயது என்பதை தாண்டியிருக்க வெள்ளை சட்டை, வெள்ளை சேலை.. கழுத்தில் முத்துமாலை.. காதில் வைரத்தோடு கையில் பவள மோதிரம்.. நெற்றியில் விபூதி பட்டை என பார்க்க பழமையாய் தெரிந்தாலும் பேரன் பேத்திகளோடு சேர்ந்துவிட்டால்  இவர்களுக்கு இணையாக மாறிவிடுவார்.. இரு மகன்கள்.. மகன்கள் சிறுவயதாய் இருக்கும்போதே கணவனை இழந்தவர்..
 
இவர்கள் குடும்ப இளவரசி நிரஞ்சனா .. பார்க்கவும் இளவரசிதான் பால்வண்ணம் பளிங்கு கன்னம் என 21 வயது அழகு பதுமை.. சேட்டைக்கு குறைவில்லாதவள்.. தன் நீள கூந்தலை குதிரை வாலாய் போட்டிருக்க நெற்றியில் கருப்பு பொட்டு , காதில் சிறு வளையம், கழுத்தில் நீள சங்கிலி அதில் என் என்ற பெயர் பொறித்த டாலர்.. கருப்பும் மஞ்சளுமாய் கட்டம் போட்ட காட்டன் சுடி இன்னும் அவள் அழகை மெறுகேற்ற அவளின் பளீர் சிரிப்பு இன்னும் அவள் அழகுக்கு ப்ளஸ்…
 
 மூத்தவர் சேதுபதி, பேச்சி தம்பதியினருக்கு வெகுநாள் குழந்தையில்லாமல்  கோவில், விரதம், பரிகாரம் என பல வேண்டுதலுக்கு பிறகு பிறந்தவள்.. சேதுபதியின் தம்பி வேலப்பன் அவர் மனைவி ராஜம் இவர்களுக்கு ஒரே மகன் வளவன்.. அவனுக்கு எட்டு ஆண்டுகளுக்கு இளையவள் நிரஞ்சனா.. தங்கைக்கு நிரஞ்சனா என பேர் சூட்டியவனே அவன்தான் இருவரும் உடன் பிறந்தவர்களையும் தாண்டி நல்ல நண்பர்கள், தங்கைக்கு ஆசான் , வழிகாட்டி அண்ணன் எவ்வழியோ தங்கையும் அவ்வழி..
 
அப்பத்தா உனக்கு வரும்போது என்ன வாங்கிட்டு வர..??”
 
நான் என்னத்த கேட்கப் போறேன் அந்த பீஸா.. கொஞ்சம் பர்க்கர்.. அப்புறம் அந்த டீவி விளம்பரத்துல வந்த சுங்குடி சேலை காங்கு கலர்ல.. மை ஊதா பார்டர் வைச்சது.. சரவணா ஸ்டோர்ல வாங்கிரு.. உங்க ஆத்தா ரெண்டு பேத்துக்கும்.. அதோட பாக்கு உரல் ஒன்னு பித்தளைல..அப்புறம் கொடைக்கானலுக்கு போனா நல்ல ஸ்வெட்டர்… இப்ப உள்ளது மாடல் நல்லாயில்ல.. வேற….!!” அவர் இன்னும் யோசிக்க..
 
அப்பத்தாவோடு நின்று செல்பி எடுத்தவள்… ஐயோ… கடவுளே யாராச்சும் ஏதாச்சும் வாங்கிட்டு வரவான்னு கேட்டா அதெல்லாம் வேணா எல்லாம் என்கிட்ட இருக்குன்னு சொல்லனும்.. அதான் மரியாதை.. அத விட்டுட்டு இப்படி லிஸ்ட் போடக்கூடாது அதுலயும் இந்த காங்கு கலர்னா என்ன..?? உள்ளுருல எந்த சேலைக்காரருக்கும் தெரியலதானே.. என்ன சென்னைல போய் அசிங்கப்பட சொல்ற.. உன்னலாம் போ அப்பத்தா…
 
சரித்தா சரித்தா கோவிச்சுக்காத.. ஆனா நான் சொன்னத மட்டும் மறந்திறாத..!!” பேத்தியிடம் வம்பிழுத்தபடியே தன் சுருக்கு பையிலிருந்து பணத்தை பேத்தியிடம் கொடுத்து இதுக்குத்தான என்னைவைச்சு செல்பி எடுத்த..??”
 
க்கும் எது நீ கொடுக்கிற இந்த 200 ரூபாய்க்கா.. போவியா..??”
 
சரி தாயி நம்ம ஊரு நிலவரம் தெரியும்தானே..?? உங்க அப்பன்கிட்ட கெஞ்சி கெதறி நீ டூருக்கு போக சம்மதம் வாங்கி கொடுத்திருக்கேன் பார்த்து சூதானமா போயிட்டு வா.. தன் பையிலிருந்து விபூதியை இட,
 
எங்கடா ஒரு டிக்கெட் குறையுதே.. எனக்கு அட்வைஸ் பண்ணன்னு நினைச்சேன் இந்தா பண்ணிட்ட….     
 
கேர்ள்ஸ் நேரமாச்சு எல்லாரும் போய் பஸ்ல ஏறுங்க..
 
ஏய் நிரஞ்சனா வாடி பிரின்சி கூப்பிடுது…??” அவள் தோழி தர்ஷினி அழைக்க….
 
கூப்பிடட்டும் நீ போ நான் வர்றேன்.. தன் குடும்பத்தினரிடம் சொல்லிக் கொண்டவள்.. அப்பத்தாவை முத்தமிட்டு மெதுவாய் தன் சூட்கேஸை தள்ளிக்கொண்டு பஸ்ஸை நோக்கி நடக்க ஆரம்பித்தாள்..
 
அவள் குடும்பத்தினருக்கு அவளை தனியாய் அனுப்ப பயமாய் இருந்தாலும் அவளின் ஆசையையும் கெடுக்க மனதில்லை..வழியாய் வழியாய் அவர்கள் குடும்பம்தான் இந்த ஊரின் நாட்டாமை குடும்பம்.. அவர்கள் ஊர் ஓக்கூர்… சிவகங்கை மாவட்டத்தில் இருக்க கிராமம்தான் ..விவசாயமே பிரதானம்.. அதில் பெரும் பகுதி இவர்களுடையது.. இப்போது வளவனும் விவசாயத்திலேயே முழுமூச்சாய் இறங்கிவிட தோப்புகளாய் நிறைய வாங்கியிருந்தான்..
 
அதிலேயே பண்ணை அமைத்து ஆடு, மாடு கோழி…என எல்லாம் வளர்த்து இப்போதும் மீன் பண்ணையும் துவங்கியிருக்க நிரஞ்சனாவின் கல்லூரி நேரம் போக மீதி பொழுதெல்லாம் இந்த மீன் பண்ணையில்தான் அதை வேடிக்கை பார்ப்பதில் அவளுக்கு அலாதி பிரியம்.. ஏனோ இப்போது அடுத்தடுத்து இறந்த இரண்டு.. மூன்று கன்னிப்பெண்களின் மர்மச் சாவு அந்த ஊரையே கதிகலங்க வைத்திருக்க இறந்த அனைத்து பெண்களும் நிரஞ்சனா வயதில் இருக்கும் பெரிய இடத்துப் பெண்கள்.. அதனாலேயே நிரஞ்சனாவுக்கு அதிக கட்டுப்பாடு எப்போதும் யாருடைய துணையாவது இருந்து கொண்டே இருக்க இந்த சுற்றுலா அவளுக்கு கட்டவிழ்த்த கன்றின் நிலையில் இருந்தது..
 
பஸ்ஸில் ஏறியதிலிருந்து இவர்களின் ஆட்டம் பாட்டம்தான்.. ஆசிரியர் அதட்டியபடி இருந்தாலும் அதை கேட்பார் யாருமில்லை.. சற்று நேரத்திலேயே அவர்கள் உறக்கத்திற்கு சென்றிருக்க இவர்கள் அனைவரும் அரட்டை கச்சேரி..!!
 
…………………….
 
அங்கு சென்னையில் காலையிலேயே சன்மியூஸிக்கில் பாட்டு எதிரொலித்துக் கொண்டிருக்க மகன் தர்மனோடு சேர்ந்து சாரதாவும் பாட்டில் மூழ்கியிருந்தார்..
 
         கண்டா வர சொல்லுங்க
                கர்ணன கையோட கூட்டி வாருங்க
         அவன கண்டா வர சொல்லுங்க
                 கர்ணன கையோட கூட்டி வாருங்க…!!!”
 
டேய் தர்மா… தனுஷ் இதுல நல்லாயிருக்கான்ல…??”
 
ஆமாம்மா தனுஷ்க்கு சிட்டி கேரக்டரவிட இந்த மாதிரி வில்லேஜ் கேரக்டர் நல்லாயிருக்கு…
 
 ஷூ சத்தம் கேட்டு நிமிர்ந்து பார்க்க அவரின் மூத்த மகன் கௌதம் போலிஸ் உடையில் வந்து கொண்டிருந்தான்.. அவர்களின் சொந்த ஊர் தேனி.. கௌதமின் வேலைக்காக இந்த ஆறுமாதமாக சென்னையில் குடியிருந்தார்கள்..
 
காப்பி தரவாப்பா..??”
 
ம்ம்ம் தாங்கம்மா…. தம்பியின் அருகில் அமர்ந்தபடி  நியூஸ் பேப்பரை கையில் எடுக்க கௌதம் விவசாய குடும்பத்தில் பிறந்து அதிலேயே சாதிக்க வேண்டும் என்று அக்ரி படித்திருக்க தந்தையின் ஆசைக்காக போலிஸ் ஆனவன்..  காப்பியை ஆற்றிக்கொண்டே மகனை பார்த்தவருக்கு உயரத்திலும் முகச்சாயலிலும் தன் கணவனை போலிருப்பவனை பார்க்கும்போது எப்போதும் போல இப்போதும் பெருமை.. கௌதமின் தந்தை ஆறு மாதங்களுக்கு முன்னால் ஹார்ட் அட்டாக்கில் தவறியிருக்க… இப்போது குடும்பத்தை தேனியிலிருந்து சென்னைக்கு அழைத்து வந்திருந்தான்.. அவருக்கு இந்த சென்னை வாழ்க்கை பிடிக்காவிட்டாலும் மகனுக்காக அனைத்தையும் சகித்துக் கொண்டிருந்தார்..
 
ராஜி எங்க…தர்மா…??”
 
அவ இன்னும் தூங்கியே எழுந்து வரலண்ணே…??”
 
மா அவளை சீக்கிரமா எழுப்பிவிடுங்க இன்னும ஆறுமாசம்தான் அப்புறம் அவ புகுந்த வீட்ல இவ்வளவு நேரம் தூங்கினா நம்மளதான் தப்பா நினைப்பாங்க..
 
அவர் சிந்தனையில் இருப்பதை பார்த்தவன்… ம்மா என்ன சொல்றது கேட்டுச்சா..?? என்ன கனவு கண்டுட்டு இருக்கிங்களா..??”
 
இல்ல கௌதமு.. நம்ம எதிர்த்த வீட்ல யார் இருக்கான்னே தெரியாம இருந்திச்சுல்ல இன்னைக்கு காலையிலதான் பார்த்தேன் ஒரு பொண்ணு வெளியில வந்துச்சு.. என்னமா நீங்கதான் புதுசா குடி வந்திருக்கிங்களா..?? உன் பேர் என்னன்னுதான் கேட்டேன்..?? அதுக்கு என்னமோ கொரனா பேஷண்ட் மாதிரி அங்கயே நில்லுங்கன்னு சொல்லிட்டு கதவை படீருன்னு அடைச்சிட்டு போகுது… பேர் சொன்னா என்னவாம் நான் என்ன பண்ண போறேன்..??”
 
ம்மா பல்லை கடித்தவன் இதென்ன நம்ம ஊருன்னு நினைச்சிங்களா திண்ணையில கால்நீட்டி உட்கார்ந்து ஊர்கதை பேச …!! சென்னை மா இப்படித்தான் இருப்பாங்க.. நீங்க வீட்டுக்குள்ளயே இருங்க யார் வீட்டுக்கு யார் குடி வந்தாத்தான் என்ன..??”
 
ஆமா உன்கிட்ட வந்து சொல்ல வந்தேன் பாரு..??” பெரிய மகனிடம் முகத்தை தூக்கியவர் சின்ன மகனிடம் சென்று அமர்ந்து கொண்டார்…
 
கௌதமுக்கு தன் தாயை பார்த்தால் சிரிப்பாகத்தான் வரும் இங்கு வந்த நாளிலிருந்து  பார்த்துக்கொண்டுதானே இருக்கிறான்.. யாராவது தன்னிடம் பேசமாட்டார்களா என இந்த அப்பார்ட்மென்டில் ஒருவீடு பாக்கியில்லாமல் வலிய போய் பேச  இப்படி பல்ப் வாங்கிக் கொண்டுத்தான் இருக்கிறார்..
 
…………….
 
நிரஞ்சனா சரவணா ஸ்டோர்ஸையே திருப்பி போட்டு அப்பத்தா கேட்ட சேலையை தேடி எடுத்திருக்க டி இதெல்லாம் ஓவரோ ஓவர் எவ்வளவு நேரம்தான் வெயிட் பண்றது..??”
 
டி இருங்க அதான் திங்கிறதுக்கு இவ்ளோ ஸ்நாக்ஸ் வாங்கி கொடுத்திருக்கேன்ல சாப்பிடுங்க..
 
என்னடி உன்காசுல வாங்கி கொடுத்த மாதிரி சொல்ற.. பந்தயம் போட்டு ஜெயிச்சதுல வந்த காசுதானே…??”
 
பேசியபடி வர… தீபாவோ டி நிரஜ் லாஸ்ட் அன்ட் பைனல் பந்தயம்…???”
 
ஏஏஏஏ போதும்டி…??”
 
இல்ல இல்ல இப்ப நீ ஜெயிச்சா 1000 தோத்தா 500 கொடுத்தா போதும்…
 
சற்று யோசித்தவள் சரி என்ன…??”
 
இந்த எக்ஸ்லேட்டர்ல இப்ப இறங்க போறோம் ஆப்போசிட்ல யார் மிடில்ல ஏறி  வர்றாங்களோ அவங்க கன்னத்தை எட்டி கிஸ் பண்ணனும்.. இதான் பெட்.. அனைவரும் வாய்பிளந்து நிரஞ்சனாவை பார்க்க…
 
சற்று யோசித்தவள் ஓகே டன்…!!!”
 
அனைவரும் ஆவலாய் எக்ஸ்லேட்டரில் இறங்கும் வழிக்கு வந்திருக்க நிறைய சிறுகுழந்தைகளும் அவர்களின் பெற்றோர்களும்தான்… எதிர்புறத்தை ஆவலாய் பார்த்தபடி அதன் நடுப்பகுதிக்கு மெல்ல மெல்ல வர.. நிரஞ்சனாவுக்கு மகிழ்ச்சிதான் எதிர்புறத்தில் இவள் கணக்கு படி ஒரு குழந்தைதான் வரும்.. சிறு குழந்தையை அவள் தாய் தூக்கியபடி வர எட்டி முத்தமிட்டால் போதும் 1000 நம்கையில் குதூகலமாகவே முத்தத்திற்கு தயாராய் வர..
 
இவர்கள் இறங்க இறங்க தோழிகள் நம்பரை சொல்ல ஆரம்பித்துவிட்டார்கள்..
 
3……2…..1…. ரெடி… குடு……!!!!!”.தோழிகள் கத்த எட்டி முத்தமிட்டவள் நிமிர்ந்தால் அந்த குழந்தையின் கன்னம் இருக்க வேண்டிய இடத்தில் கௌதமின் கன்னம்…..!!
 
                                                           இனி………………??????

Advertisement