Advertisement

ஆயுள் கைதி 9

அங்கே பார்வதி நின்றிருந்தார். அவர் அவளது பதிலை எதிர்பார்த்து நிற்க, அவரையே அங்கே எதிர்பார்க்காதவளுக்கு அவரது கேள்வியை உள்வாங்கி பதிலளிக்க சிறிது அவகாசம் தேவைப்பட்டது. விஷயம் புலப்பட்டதும், அவரை பார்த்து மென்மையாய் தலையாட்டினாள்.

அவரது முகபாவனையை வைத்து அடுத்த கேள்வியை அவள் கிரகிக்க முற்பட்டு கொண்டிருக்கும் பொழுதே,

“ஏன் ஈஸ்வர் இன்னைக்கு வரலைன்னு உனக்குத் தெரியுமா…” என்ற கேள்வி வந்தது.

இதற்கு என்னவென்று பதில் சொல்லுவாள்! முன்கேள்விக்கு உண்மை என்பதால் தலை அசைத்தலில் பிரச்சனை இருக்கவில்லை.  என்ன  சொல்வது என்று அவள் யோசித்து நிற்க, நல்லவேளையாக பார்வதி மேலும் அதைப்பற்றி தூண்டி துருவாமல் வேறு பேச ஆரம்பித்திருந்தார்.

“உனக்கோ இல்லை மத்தவங்களுக்கோ தெரியுமா எனக்கு தெரியலை. ஆனா என் பையனை எனக்கு தெரிஞ்ச வர, அவனுக்கு உன்கூட நடந்தது தான் முதலும் கடைசியுமான கல்யாணம் சாகித்தியா. அதேமாதிரி அவனுக்கு மனைவி, குடும்பம்னு ஒன்னு அமைஞ்சா அது உன்னால மட்டும் தான் இருக்க முடியும்.

இதெல்லாம் உன்கிட்ட சொல்லணும்னு தோணுச்சு அதனால சொல்றேன். வேற எந்த எண்ணமும் இல்லை. உன்னைய எதுக்கும் கட்டயப்படுத்தவும் இல்லை…” என்று விட்டு அவர் புன்னகைக்க,

தன் மகன்மேல் அவருக்கு இருக்கும் புரிதலை கண்டு மனதிற்குள் மெச்சியவளுக்கு வெளியில் இயல்பாகவே புன்னகை பூத்தது.

“உட்காருங்க, ஜுஸ் கொண்டு வர சொல்றேன்…” என்று சாகித்தியா அங்கிருந்த சோபாவை காட்டிவிட்டு நகர போக,

“ நீ என்னைய அத்தைனே கூப்பிடலாம் சாகித்தியா. என் பையனை கல்யாணம் பண்ணிக்கலைனாலும் நான் உனக்கு அத்தை தான் வேணும்…” என்றார் பார்வதி.

சன்னமான புன்னகையுடன் தலையாட்டினாள் அவள்.

அதன்பின் ஜுஸ் வர குடித்து விட்டு,

“நீங்க இங்க கொஞ்ச நேரம் இருக்கிறதுனா இருங்க , நான் போய் கீழே கொஞ்சம் பார்த்துட்டு வரணும்…” என்று சாகித்தியா சொல்ல,

“  இல்லம்மா… நானும் வீட்டுக்கு கிளம்ப வேண்டியது தான். “ என்று அவள் கூடவே எழுந்து கிளம்பினார் பார்வதி. இருவரும் படி வழியவே இறங்கினர். பார்வதியின் இயல்பான பேச்சிற்க்கு பதில் சொல்லியபடியே கூட நடந்தாள் சாகித்தியா.

சத்தியமூர்த்தி முதல் சஞ்சனா வரை இருக்கும் இடத்தில் கொஞ்சமும் அலட்டாமல் தன் உரிமையை இயல்பாய் காட்டியவாறே கூடவரும் சாகித்தியாவை அதிகமாய் பிடிக்க ஆரம்பித்தது பார்வதிக்கு! தன் மகனுக்கு சரியான ஆள்தான் என்ற எண்ணத்துடனே அவளை பார்த்தார்.

மெல்லியதாக தங்க ஜரிகையிட்ட கருப்பு நிற ப்ளைன் காட்டன் புடவையை ஒற்றையாய் விரித்து கட்டியிருந்தாள். அதே ஜரிகையுடன் புடவைக்கு எடுப்பாய் ரோஜாநிற சட்டை, இரு பக்கமும் எடுத்து கிளிப் மாட்டிய கூந்தலை விரித்து விட்டிருக்க, முகத்தில் இருந்த குட்டி மரூன் பொட்டும், சந்தன கீற்றும் இன்னும் ஈர்த்தது. அப்பொழுது தான் கவனித்தார். வகிட்டில் லேசாய் வீற்றிருந்த குங்குமத்தை! அவளை பார்க்கும் முன் இருந்த  இறுக்கம் கொஞ்ச கொஞ்சமாக குறைந்து போய் அந்த நொடியில் மொத்தமாய் கரைந்து போனது!

வாசல் வரை கூடவே வந்தவள், அவர் சொல்லிக்கொண்டு கிளம்ப போகையில்,

“அத்தை ஒருநிமிஷம்…” என்று நிறுத்தினாள். என்னவென்று பார்த்தவரிடம்,

“உங்க பையனை கல்யாணம் பண்ணிகிட்டதால உங்களை அத்தைன்னு கூப்பிடறதுல எனக்கு எந்த பிரச்சினையும் இல்லை அத்தை…” என்று மொத்தமாய்  வீழ்த்திவிட்டு  புன்னகையுடன் திரும்பி நடந்தாள்.முழுதாய் விரிந்த புன்னகையுடன் கிளம்பி சென்றார் பார்வதி.

உள்ளே சென்று அவள் வேலையில் மூழ்கி போக, சிறிது நேரத்தில் மீட்டிங் என்ற அழைப்பு வர, எழுந்து சென்றாள்.

ஈஸ்வர் வந்திருந்தான்! அனைவரும் கூடியதும் வரவிருக்கும் வருடாந்திர ஆடிட் பற்றியும் அதற்காக செய்ய வேண்டியவை பற்றியும் கலந்தாலோசிக்கப்பட்டன. காலம் குறைவாய் இருக்கவே அப்பொழுதே வேலைகள் ஆரம்பிக்கபட அதன்பின் நேரம் போனதே தெரியவில்லை.

மறுநாள் வேலை முடிந்தபின் வழக்கமாய் செல்லும் அந்த ஷாப்பிங் மாலிற்குள் வண்டியை நுழைத்து விட்டு இறங்கினாள் சாகித்தியா. எதிரே அவளுக்காகவே காத்திருந்தார் பாக்கியவதி. நேற்று பார்வதியோடு ஹோட்டலில் சேர்ந்து நடந்துவிட்டு திரும்பியபோது சஞ்சனாவை பார்த்தபின் இப்படி எதையாவதொன்றை எதிர்பார்த்து தான் காத்திருந்தாள் அவள். அதற்கேற்றாற் போல எடுத்த எடுப்பிலேயே,

“ என்ன யாரையாவது ஒருத்தரை கைக்குள்ள போட்டுக்கிட்டு எப்படியாவது எங்க குடும்பத்துக்குள்ள நுழையலாம் பார்க்கிறியா…” என்று ரௌத்திரத்தோடு கேட்க,

சுள்ளென்று கோபம் வந்தது சாகித்தியாவிற்கு,

“எனக்கு யாரையும் கைக்குள்ள போட்டுக்கனும்னு அவசியம் இல்லை…” என்றாள் சீரலாய்,

“ அப்புறம் எதுக்குடி எங்க வீட்டுல உள்ளவங்க கூட ஒட்டிக்கிட்டு திரியுற, நீ நினைக்கிறது என்னைக்கும் நடக்காது. அதான் எதுவும் வேணாம்னு ஓடி போனாளே உன் அம்மா, இப்ப மட்டும் என்ன, சொத்து இழுக்குதோ… நீ நினைச்சிட்டு இருக்கியா ஈஸ்வர் உன்கூட சேர்ந்து வாழ போறான்னு!  அவன் உன்னைய திரும்பி கூட பார்க்க மாட்டான். பேசாம அவனுக்கு டைவர்ஸ் குடு! அவனை நிம்மதியா விடு…” என்று பேசிக்கொண்டே போக,

“இதை போய் உங்க ஈஸ்வர் கிட்ட சொல்ல வேண்டியது தானே…” என்றாள் எரிச்சலுடன்,

“ அவன் என்ன பண்ணான் பாவம், அவன் சும்மா தானே இருக்கான். நீதாண்டி! உங்க குடும்பம் தான் சாகசம் செய்யிற குடும்பம். ஒரு நாடகம் நடிச்சு வீட்டில இருந்து போனா உன் அம்மா, திரும்ப என்னமோ பண்ணி எங்க அப்பா மனச களைச்சு உள்ள வந்துட்டா, இப்போ நீயும் அப்படி ஏதாவது செஞ்சு ஈஸ்வரை மயக்கிட்டீனா…”

“ஷட் அப்…” என்று கத்தியிருந்தாள் சாகித்தியா. அவளின் சத்தத்திற்கு ஒன்றிரண்டு பேர் திரும்பி பார்த்திருந்தனர். அதுவரை மடைத்திறந்த வெள்ளமாக பேசிக்கொண்டு இருந்த பாக்கியவதி திடுக்கிட்டு பார்க்க,

கண்கள் இரத்தமாய் சிவந்திருக்க, ஒரு விரல் நீட்டி,

“இன்னொரு வார்த்தை வந்துச்சு, அப்புறம் நான் என்ன பண்ணுவேன் எனக்கே தெரியாது…”என்று கர்ஜித்து விட்டு, காரில் ஏறி கிளம்பிவிட்டாள்.

ஒரு அமைதியான காபி ஷாப்பிற்கு சென்று அமர்ந்தவள் தான். ஆர்டர் கேட்க வந்தவனிடம் சொல்லி வந்த காபி தொடப் படாமல் இருந்தது. மனதில் பேரிரைச்சல். என்ன என்ன பேச்சுக்கள்! இப்பொழுது வரை அவள் செய்வதில் அவளுக்கு தப்பாய் எதுவும் தெரியவில்லை. அவள் இந்த முடிவுகளை எடுக்காவிட்டால் தொடர்ச்சியாய் என்னென்ன விளைவுகள் வந்திருக்கும் என அவளுக்கு தெரியும் ! குடும்பங்கள் உடைந்து குளறுபடி ஆகியிருந்தாலும் கடைசியில் இது ஒரு பெரிய மனிதரின் கடைசி ஆசை என்பதையும் தாண்டி இது நடக்கவேண்டும் என்பதற்காகவே நடந்து இருக்கிறது என்று அடிமனதில் ஆழ பதித்து கொண்டாள். இப்போது வரை அவள் செய்யும் ஒவ்வொரு செயல்களும் அவளது உரிமை என்றே தயங்காமல் செய்து கொண்டிருக்கிறாள். ஆனால் அதை எப்படி பேசுகிறார்கள் ! அவனை அவள் மயக்குகிறாளாம். அவளை பேசியதை பற்றி கூட அவளுக்கு அதிகமாக கவலை இல்லை. அவள் அன்னையை ! அதுவும் கூட பிறந்தவளை எப்படி இப்படியெல்லாம் பேச மனது வருகிறது என்று தான் அவளுக்கு புரியவில்லை. அவர்களுக்கு சொத்து மேல் ஆசையாம்! கசப்பான புன்னகை உதிக்க, பேசாமல் எழுந்து வெளியே சென்று காரை கிளப்பி வீட்டை நோக்கி விட்டாள்.

தன் அறைக்கு சென்று வார்ட்ரோபை திறந்து மாற்று உடையை எடுத்து கொண்டு பாத்ரூமிற்குள் புகுந்தாள். வெளியே வந்து ஒரு குடுவை நீரை முழுவதும் குடித்து விட்டு தலைமுதல் கால்வரை போர்த்திக்கொண்டு படுத்து விட்டாள்.

அங்கே சோபாவில் மடிக்கணினியை வைத்து கொண்டு உட்கார்ந்து இருந்தவனை இருந்ததாகவே கருத்தில் கொள்ளவில்லை. அவள் படுத்ததும் ஒருநொடி திரும்பி பார்த்தவன் மீண்டும் பார்வையை திருப்பி கொண்டு வேலையில் ஆழ்ந்தான்.

காலையில் எழுந்து அமைதியாய் கிளம்பியவள், பேருக்கு கொறித்து விட்டு கிளம்பிவிட்டாள்.  முன்பகலில் முக்கியமான பைல்களை சரிபார்த்து முடிக்கவேன முக்கியமானவர்கள் கூடியிருக்க,

கார்த்திக் யார் யார் என்னென்ன கோப்புகளை பார்த்து கையெழுத்து போடவேண்டும் என்பதை பார்த்து கொண்டிருந்தான்.

எல்லோரும் வேலையில் மூழ்கியிருக்க, அத்தனை பேர் இருந்தும் நிசப்தமாய் இருந்தது அந்த அறை.  சாகித்தியாவின் கைகள்  தன் பாட்டிற்கு வேலையை செய்தன, மனதோ அங்கு இல்லை. அவளிடம் கையெழுத்து வாங்க வேண்டிய பைல்களை எடுத்து வந்து கொடுத்தான் கார்த்திக். ஒவ்வொன்றாய் சரிபார்த்து கையொப்பமிட்டு கொண்டே வந்தவளுக்கு, ஒரு பைல் ஈஸ்வர் பார்க்க வேண்டியது என்று தெரிய, கார்த்திக்கிடம்,

“இதில விஷ்வா ஷைன் பண்ணனும் …”என்று நிமிராமலே கொடுத்து விட்டு அடுத்த பைலை பார்க்க ஆரம்பித்திருந்தாள்!

எதையோ எழுதி கொண்டிருந்த ஈஸ்வரின் கைகள் அந்தரத்தில் அப்படியே நின்றது. கார்த்திக் சட்டென்று சாகித்தியாவின் முகம் பார்க்க அவளோ பைலில் ஆழ்ந்திருந்தாள். அவளுக்கு அவள் செயல் மூளையை எட்டவே இல்லை. அவள் பாட்டிற்கு வேலையில் கவனமாயிருக்க வேகமாய் கார்த்திக் திரும்பி ஈஸ்வரை பார்த்தான். அதற்குள் இயல்பாகி இருந்த அவனோ வழக்கமான முகபாவத்துடன் வேலையில் கவனத்தை பதித்திருந்தான்.

பெருமூச்சோடு கார்த்திக் திரும்ப,  ஈஸ்வரின் பார்வை நிதானமாய் சாகித்தியாவின் மேல் படிந்தது. லேசாய் வியர்த்திருக்க  சோர்வான விழிகளை அங்குமிங்கும் பைலில் அலைய விட்டபடி இருந்தவளை யோசனையுடன் பார்த்தவன், சிறிதுநேரத்தில் கார்த்திக்கை அழைத்து டீ பிரேக் சொல்ல, கார்த்திக் கஃப்டேரியாவிற்கு சொல்லிவிட்டான். கொண்டு வந்ததும் டீயோடு சாகித்தியாவின் அருகில் அமர்ந்தான்.

“என்னாச்சு ஸ்ரீ…” என்றான் சமோசாவை அவள் பக்கம் நகர்த்திக் கொண்டே,

“ டயர்ட்டா இருக்கு கார்த்திக் என்றாள் அவளும் இயல்பாய்,

“காலையில சாப்பிடலையா…” என்றான்

“ம்.. சாப்பிட்டேனே…எனக்கு ஒன்னும் இல்லை…நல்லா தான் இருக்கேன்…” எனவும்,

“முடியலைன்னா கிளம்பு ஸ்ரீ, நாளைக்கு பார்த்துக்கலாம்…” என்று அவன் சொல்ல,

“இல்ல கார்த்திக், கொஞ்சமா டயர்ட் அவ்வளவு தான், நான் பார்த்துகிறேன், முடியலைன்னா கிளம்பிடறேன்…” என்றுவிட்டு வேலை பார்க்க ஆரம்பித்தவள் மதிய உணவிற்கு கூட எழவில்லை. மொத்தமாய் மூழ்கிப்போனாள். கொஞ்ச கொஞ்சமாய் மற்றவர்கள் கிளம்பிவிட , ஈஸ்வரும் வேறு வேலையாக வெளியே சென்றுவிட்டான். மாலையானதும் கார்த்திக் வந்து கிளம்ப சொன்னதற்கும் கொஞ்ச நேரம் கழித்து செல்கிறேன் என்றுவிட்டாள்.

ஒருவழியாய் இரண்டு நாள் முடிக்க வேண்டிய வேலையை ஒரே நாளில் முடித்துவிட்டு நிமிர்ந்தவள் , மணி பார்த்தாள். ஏழு ஆகியிருந்தது. சோம்பல் முறித்துவிட்டு வெளியே வந்தாள். கார்த்திக் போன் பேசி கொண்டிருந்தான். அவளை பார்த்தவன் அருகில் வந்து,

“நான் கூட வந்து விடட்டுமா ஸ்ரீ…” என்று கேட்க,

“இல்ல நான் போயிடுவேன், நீ பார்த்து போ..” என்று விட்டு கிளம்பியிருந்தாள்.

வீட்டிற்குள் நுழையும் போது அவ்வளவு களைப்பாய் இருந்தது. பேசாமல் போய் படுத்து  விட தான் தோன்றியது. காலையில் இருந்து புடவையில் இருப்பது கசகசவென இருக்க கீழ் அறையிலேயே குளித்து உடை மாற்றி ஹாலுக்கு வந்தவள், தொப்பென்று சோபாவில் அமர்ந்தாள். பசி வயிற்றை கிள்ளியது. இருந்தும் எழுந்துபோய் சாப்பிட தெம்பிருப்பதாய் தெரியவில்லை. சாப்பிடவும் பிடிக்காத மாதிரி இருக்க, அப்படியே சோபாவிலேயே முடங்கினாள். நன்றாய் அசந்து கண் சொருகிய நேரத்தில் பட்டென்று விளக்கு எரிய ‘ப்ச்’ என்று நிமிர்ந்து பார்த்தாள். ஈஸ்வரன் நின்றிருந்தான். அவளையே பார்த்தபடி நிற்கவும் எழுந்து அமர்ந்தவள் என்னவென்று பார்க்க, வந்து அவளருகில் அமர்ந்தவன் வைத்திருந்த பாத்திரத்தை அவள் கையில் திணித்தான்.  இதமாய் இளம்சூட்டுடன் வெஜிடபிள் சூப்! யோசிக்கவே இல்லை சாகித்தியா.

மூச்சுவிடாமல் கடைசி சொட்டு வரை குடித்து முடித்தவள், அவனை தூக்க கலக்கத்தோடு ஒரு பார்வை பார்த்து விட்டு சோபாவில் அவன் அமர்ந்திருந்த பக்கத்துக்கு எதிர்புரமாய் பக்கவாட்டில் அப்படியே பாதி சாய்ந்து படுத்து கொண்டாள்.

அவளையே பார்த்திருந்தவன் அவள் அசந்து தூங்கியதும் எழுந்து கைகளில் அவளை அள்ளிக்கொண்டு மெல்லமாய் படியேறி அறைக்கு சென்று அவளை மெத்தையில் பூ போல கிடத்திவிட்டு, மென்மையாய் போர்வையை போர்த்தி விட்டவன், அவளையே பார்த்தவாறு படுத்து கொண்டான்.

Advertisement