Advertisement

ஆயுள் கைதி 8

ஆரம்பிக்கும் பொழுது தான் தயக்கமெல்லாம்! போக போக அந்த புருவச்சுழிப்பு ஒன்றே குறிக்கோளாய் இருக்க, அதை மிருதுவாய் நீவி விடுவதிலேயே கவனமாய் இருந்தவளுக்கு வேறெதுவும் கருத்தில் பதியவில்லை. மெதுவாய் இருபக்கமும்  விரலால் பிடித்துவிட்டவள் எதேச்சையாக கீழே பார்க்க, விழிகளை சிமிட்டாமல் அவளையே பார்த்துக் கொண்டிருந்தான் விஷ்வேஸ்வரன்.

மூச்சடைத்தது சாகித்தியாவிற்கு…! கைவிரல் அவன் நெற்றியில் இருப்பதை உணராமல் , என்ன சொல்வதென்று தெரியாமல் அவள் விழித்து தடுமாற, அதுவரை அவளையே பார்த்து கொண்டிருந்தவன் மெதுவாய் கண்களை மூடிக்கொண்டான்! சாகித்தியாவிற்கு ஒருநிமிடம் ஒன்றும் புரியவில்லை. மறுநொடி இதழ்களில் மௌனமாய் ஒரு புன்னகை! விட்ட இடத்தில் இருந்து மீண்டும் தொடங்கினாள். புருவமுடிச்சு இளகி அவன் அசந்து உறங்கும் வரை அவள் தலையை பிடித்து விடுவதை நிறுத்தவில்லை அவள். அவன் உறக்கத்தில் சரிந்து படுக்க மெதுவாக கைகளை எடுத்தவள்,  எழுந்து விளக்கை அணைத்துவிட்டு அவன் அறைக்கு வந்தாள்.

கைபேசியை எடுத்து கார்த்திக்கிற்கு அழைத்தாள். போனை எடுத்த நொடி,

“எங்க இருக்க கார்த்திக்….” என்று கிட்டத்தட்ட சீற,

அவள் குரலை உணர்ந்தவனாய்,

“வேலை முடிஞ்சுது ஸ்ரீ, வந்துட்டே இருக்கேன், என்னாச்சு போய் பார்த்தியா….” என்று கேட்க,

“சீக்கிரமா வா…” என்றுவிட்டு பட்டென போனை வைத்தாள்.

அவன் வரும்போது ஈஸ்வரின் அறையில் கண்ணாடி தடுப்பின் வழியில் வெளியே வெறித்துக் கொண்டிருந்தாள். சட்டென்று உள்ளே வந்த கார்திக்கிற்கு அதே இடத்தில் ஈஸ்வர் அடிக்கடி நிற்கும் தோற்றம் கண்முன் வந்து போக, அதை தனக்குள்ளேயே ஒளித்துவிட்டு,

“ஸ்ரீ, என்னாச்சு…” என்றான் சாதாரண குரலில்,  திரும்பியவள் கோபமாய் முறைக்க,

“அட என்னம்மா, முக்கியமான வேலை, நான் வேற ஆளை அனுப்புறேன் தான் சொன்னேன், ஈஸ்வர் தான் என்னைய போக சொன்னான்..” என்றான் அவளது மனதை படித்தவனாய்,

அதற்கும் அவள் முறைக்க,

“சரி நான் போய் பார்க்கிறேன்…” என்றுவிட்டு லேசாய் நழுவ பார்த்தான்.

“நீ போய் எழுப்பி விட்டுட வேணாம், தூங்கி எழுந்ததும் கூட்டிட்டு வா…” என்றுவிட்டு வெளியே நடந்துவிட்டாள்.

நல்ல தூக்கம் ஈஸ்வரனுக்கு. காய்ச்சல் மாத்திரையின் உபயோகத்தில் அலுப்பும் சேர்ந்து கொள்ள அசதி தீர உறங்கி எழுந்தான். எழுந்தவன், எதிரில் சோபாவில் அமர்ந்து தன்னையே பார்த்து கொண்டிருந்த கார்த்திக்கை  பார்த்து,

“ நீ எப்போடா வந்த, ஏன் இப்படி உட்கார்ந்திருக்க…” என்றபடி எழுந்தமர்ந்தான்.

ஏன்டா கேட்கமாட்ட, அதான் காவலுக்கு உட்கார வச்சிட்டு போய் இருக்காங்களே உன் வீட்டுக்காரம்மா என்று மனதில் நினைத்தவன்,

“இப்போ எப்படி இருக்கு…” என்று விசாரித்து விட்டு அவனை ஒரு அலுவலும் பார்க்கவிடாமல் கூட்டிக்கொண்டு கிளம்பினான்.

வீட்டிற்க்கு வந்ததும் கார்த்திக் சாகித்தியாவை தேட, ஆள் தடயமே இல்லை. ஈஸ்வரன் அதையெல்லாம் கவனித்ததாக தெரியவில்லை. இல்லை அதை முகத்தில் காட்டும் பழக்கம் இல்லையோ என்னவோ, கீழிருந்த அறையில் முகம் கை, கால் கழுவி வந்தவன், கார்த்திக்கை சாப்பிட அழைத்து கொண்டே வந்து அமர,

அப்பொழுது தான் வள்ளி சாப்பாட்டை மேஜையில் கொண்டு வந்து வைக்க, தாங்களே பரிமாறிக் கொள்கிறோம் என அவரை கிளம்ப சொன்னான். சரியென்று விட்டு அவரும் கிளம்ப எத்தணிக்கையில் நினைவு வந்தவராய்,

இரு பாத்திரங்களை மட்டும் ஈஸ்வரின் பக்கம் நகர்த்திவைத்து  தம்பி இது உங்களுக்கு என்று விட்டு போனார்.

அதற்குள் கார்த்திக் மற்ற பாத்திரங்களையெல்லாம் திறந்து வைத்திருந்தான் . அதில் சப்பாத்தி,குருமா, தக்காளி தொக்கு என இருக்க, ஈஸ்வர் மெல்லமாய் அந்த இரண்டு பாத்திரங்களையும் திறந்தான்.

ரசம் சாதமும், பருப்பு துவையலும்! கார்த்திக் சட்டென்று திரும்பி ஈஸ்வரை பார்த்தான். அவனோ கருமமே கண்ணாய் சாப்பாட்டை தட்டில் வைத்து சாப்பிட ஆரம்பித்திருந்தான். பார்த்துக் கொண்டிருந்த கார்திக்கிற்கு தான் “இதுங்க  ரெண்டும் என்ன டிசைனோ..” என மண்டையை உடைத்து கொள்ளலாம் போலிருந்தது.

சாப்பாட்டில் இருந்து தலையை நிமிர்த்தாமல், “சாப்பிடு கார்த்திக்…”என்றான் ஈஸ்வர்.

ம்க்கும்… நொடிப்புடன் திரும்பியவன் சாப்பிட்டுவிட்டு பேச்சு கொடுத்து அவனை சோர்வாக்காமல் விரைவாய் கிளம்பியிருந்தான்.

உடைமாற்றி விட்டு அறைக்குள் நுழைந்தான் ஈஸ்வரன். மெல்லிய விளக்கொளியும் நிசப்தமும் மட்டுமே அறையை நிறைத்திருக்க, மெதுவாய் நடந்து வந்து கட்டில் அருகே இருந்த மேஜை விளக்கை தட்டினான். இவன்புறம் முகம் காட்டி படுத்திருந்தாள் சாகித்தியா. அயர்ந்த தூக்கம்! அவளையே சில நிமிடங்கள் பார்த்து கொண்டு நின்றிருந்தான் ஈஸ்வர். பின் மெதுவாய் விளக்கை அணைத்துவிட்டு அவள் புறம் பார்த்தவாறு படுத்துக்கொண்டான். மாலை தூங்கியதால் உறக்கம் வரவில்லை. ஆனால் உடல் அசதியாக இருக்க, அவளை பார்த்தப்படியே படுத்திருந்தவனது கண்கள் தானாய் மூடிகொண்டன.

மெதுவாய் கண்விழித்தாள் சாகித்தியா, எதிரே ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தான் ஈஸ்வர். என்றுமே அவள் விழிக்கும்பொழுது அவன் படுத்து இருந்ததில்லை. நேற்றைய காய்ச்சலின் ஞாபகம் வர அவன் முகத்தை கூர்ந்து பார்த்தவள் , மெதுவாய் அருகில் நகர்ந்து அவன் நெற்றியில் கைவைத்து பார்த்தாள். இளம் சூடு தான் இருந்தது. ஓசையில்லாமல் கையை எடுத்து கொண்டு கட்டிலைவிட்டு இறங்கியவள். உடையை எடுத்து கொண்டு அறையைவிட்டு வெளியேறினாள்.

கீழிருந்த அறையில் அவள் குளித்து கிளம்பி வரும்பொழுது வள்ளியம்மாவும் வந்திருக்க, கதவை திறந்து விட்டவாறே,

“வள்ளிமா…இன்னைக்கும் ரொம்ப மசாலா இல்லாம லைட்டாவே சமைச்சிடுங்க, அப்புறம் அவங்க மேலேதான் தூங்கறாங்க, சாப்பிட கூட கூப்பிட வேண்டாம், அவங்களே எழுந்து வரட்டும்…” என்று உத்தரவுகளை பிறப்பித்து விட்டு கிளம்ப போக,

“நீங்க சாப்பிடலையேமா…” என்றார் வள்ளி.

“நான் சீக்கிரம் போகனும் வள்ளிமா,அங்க பார்த்துகிறேன்..” என்றுவிட்டு ப்ரிட்ஜில் இருந்த உதிரி பழங்களை மட்டும் டப்பாவில் அடைத்து கொண்டு கிளம்பி விட்டாள்.

ஹோட்டலில் வேலை சரியாய் இருந்தது. போனதும் சுந்தருக்கு வேலைகளை பணித்தவள், முக்கியமாக செய்ய வேண்டிய வேலைகளை மற்றவர் கவனத்தை கவராத படி  கார்த்திக் மூலமாக ஆட்களை அனுப்பி செய்ய சொல்லி கவனித்து கொண்டு ரிசப்ஷன்  ஹாலில் கார்த்திக்கோடு பேசிக்கொண்டு இருக்கும்பொழுது அவ்விடத்தை கடந்த சிவானந்தனின் பார்வை தன்னை கூர்மையுடன் பார்ப்பதை உணர்ந்தாலும் அவள் கண்டுகொள்ளவில்லை. அவருக்கு தெரியாத அலுவல் இல்லை! ஈஸ்வர் பார்க்க வேண்டியது இதெல்லாம் என்று கண்டிப்பாக தெரியும்! அதற்காக என்ன செய்வது.  இந்த வேலைகள் இப்போது நடக்காவிட்டால் அவன் வந்து இழுத்து போட்டுக்கொண்டு செய்வான். எனவே அவளுக்கு இந்த வேலைகள் நடக்க வேண்டியிருந்தது. அதனால் அவள் அவரை கொஞ்சமும் சட்டை செய்யாமல்  தன் வேலைகளில் கவனமாகி போனாள்.

ஓரளவிற்கு வேலைகளை ஒழுங்கு படுத்தியிருந்தாள். கொஞ்சம் களைப்பாய் இருந்தது. காலையில் சாப்பிடாதது நினைவு வர, ஒரு காப்பியோடு சிலவற்றையும் கொறித்து விட்டு இரண்டாம் தளத்தில் இருந்த குட்டி நூலகத்திற்கு சென்றாள். புத்தகங்களை பராமரித்து அடுக்கும் பணி இன்று நடந்திருந்ததால் யாரும் உள் இல்லை. கதவை திறந்து கொண்டு உள்ளே சென்றவள், சிறிதுநேரம் இங்கிருக்கலாம் என்ற நினைப்புடன் அடுக்கி வைத்திருந்த புத்தகங்களை பார்த்து கொண்டே நடந்து கொண்டிருந்தாள். புதிதாக ஒரு புத்தகம் வித்தியாசமான பால்பச்சை நிறத்தில் கவனத்தை ஈர்க்க, அதை கையில் எடுத்து , பார்த்து கொண்டிருந்த நேரத்தில்,

“ஈஸ்வர் கூட நீ பேசமாட்டியா….” என்ற கேள்வியில் சட்டென்று நிமிர்ந்து திரும்பி பார்த்தாள்.

Advertisement