Advertisement

ஆயுள் கைதி 7.2

நாட்கள் அதன்வேகத்தில் சென்றன. உறவை வளர்க்க வேண்டியவர்கள் மாய்ந்து மாய்ந்து தொழிலை வளர்த்துக் கொண்டிருந்தார்கள். இந்நிலையில் சஞ்சனாவிற்கும் ஹோட்டலின் ஓட்டம் கொஞ்சமாய் பிடிபட, அவள் இப்போது கௌசிக்கோடு அவனுக்கு உதவியாளராய் மீட்டிங்கில் எல்லாம் கலந்து கொள்ள ஆரம்பித்திருந்தாள். அன்றும் ஒரு மீட்டிங் இருக்க, சனிக்கிழமை என்பதால் இலகுவான அடர்நீல ஷிபான் சேலையில் ஈரக்கூந்தலை தோகையாய் முதுகில் படரவிட்டு நடுவில் மட்டும் கிளிப்பில் அடக்கி சாகித்தியா கிளம்பி வந்திருக்க,அதே அடர்நீல சட்டையில் வந்திருந்தான் ஈஸ்வர். அடிக்கடி இது நடக்கும்! எப்படி ஒரே நிறம் என்பது அவர்களுக்கே தெரியாத விஷயம் தான்! அவர்களுக்கு பழக்கப்பட்ட விஷயமும் கூட! ஆனால் முதன்முறையாக பார்க்கும் சஞ்சனாவிற்கு எரிந்தது. அதுதான் போகிறது என விட்டுத்தொலைத்தால் ,மீட்டிங் நடக்கும்பொழுதும் சரி, மற்றவர்களை விட இவர்கள் குரல்தான் ஓங்கி ஒலித்தது. அதுவும் இருவருக்கும் பெரும்பாலான இடங்களில் ஒரே கருத்து. ஒரே எண்ணவோட்டம் தான்! இது அவர்களுக்கு புரிந்ததோ இல்லையோ, சஞ்சனாவிற்கு புரிய, விஷயத்தின் வீரியம் நமக்கு புரியாமல் மேலோட்டமாக விளையாட்டாய் கவனித்து உள்ளிறங்கி இருக்கிறோமோ, இன்னும் ஊன்றி கவனிக்க வேண்டுமோ என்ற எண்ணம் முதன்முதலாய் மனதில் விழுந்தது! மீட்டிங் முடிந்து அனைவரும் சென்றபின்னும் இதே யோசனையில் அமர்ந்து இருந்தவளை கௌசிக் தான் தட்டி அழைத்து சென்றான்.

மந்தகாசமான ஞாயிறு மாலை…பால்கனியில் காப்பியோடு புத்தகத்தில் ஆழ்ந்திருந்த சாகித்தியாவை அழைத்தது கைபேசி, எடுத்துக் காதுக்கு கொடுத்தாள்.

“என்ன ஸ்ரீ அம்மா இருக்கிறதே மறந்துட்ட இல்ல…” ஆதங்கத்தோடு வந்த கேள்விக்கு ,

“ப்ச்.. அம்மா காரணம் இல்லாம நீ போன் பண்ணியிருக்க மாட்ட, எதுக்கு கூப்பிட்டியோ அதை சொல்லு…” என்று அதட்டியிருந்தாள் மகள்.

“என்னடி இப்படி பேசுற…”

“எனக்கு இப்படித்தான் பேசவரும், என்ன விஷயம்னு சொல்லபோறியா, இல்ல சும்மாதான் கூப்பிட்டினா வச்சிடு, எனக்கு வேலையிருக்கு நான் அப்புறம் பேசறேன்…”எனவும்,

“அப்படியே அப்பா மாதிரியே பிடிவாதம் பண்ற ஸ்ரீ, உங்க ரெண்டு பேர் கிட்ட மாட்டிக்கிட்டு  நான்தான் முழிக்கிறேன்…” என்று அவர் கூறவும்,

“யார் அப்பா மாதிரி?, உன் அப்பா மாதிரியா, என் அப்பா மாதிரியா…” என்றாள் கேலியாய்,

“சாகித்தியா….” என்று அழைப்பு கண்டிப்புடன் வரவும்,

“இப்போ நீ என்னன்னு சொல்றியா, நான் வைக்கட்டுமா..” என்றாள் அவளும் அதே தொனியில்,

“சரிசரி இந்த மாசம் பதினைந்தாம் தேதி கோவில்ல பூஜை ஒன்னு இருக்கு, பொண்ணுங்க பண்ற மாதிரி, நீ அதுல கண்டிப்பா கலந்துக்கணும், நானும் வரேன், முடியாது சொல்லாத. எனக்காக வா…,அப்போ நீ எதுவும் வேலை இருக்கு சொல்வனு தான் இப்போவே சொல்லிட்டேன்…” என்று சரளா கூற,

“என்ன பூஜை, திடீர்னு என்ன விசேஷம்…” என்றாள் கேள்வியாய்,

“சும்மாதான் வரலட்சுமி பூஜை மாதிரி, இது ஒரு டைப்னு வைச்சுக்கோயேன், உனக்கு தான் இந்த நம்பிக்கையெல்லாம்  இல்லை, எனக்காக வாயேன்…”என்றார் கொஞ்சும் குரலில்

“சரி சரி உறுதியெல்லாம்  கொடுக்க முடியாது, வர முயற்சி பண்றேன்…” என்றுவிட்டு வைத்துவிட்டாள்.

அவளுக்கு அன்னையை நினைத்து பாவமாய் தான் இருந்தது. சூழ்நிலைக்கைதி! அப்பாவா, கணவனா என்ற கேள்விக்கு துணிந்து முடிவு எடுக்க முடிந்தவருக்கு இப்பொழுது கணவன், மகளில் யார்பக்கம் நிற்பதென்று தெரியவில்லை. ஆனாலும் இதற்கு அவள் ஒன்றுமே செய்ய முடியாது தான். அன்னையை தன்னிடம் நெருங்கவிட்டால் அவள் இந்த ரெசிடென்ஸியில் இருக்கிறாள் என்று மட்டும் தெரிந்தவருக்கு யாரோடு இருக்கிறாள் என்று தெரிய நேரும். அவளுக்கே இந்த பிணைப்பு புதிராய் இருக்கும்போது மற்றவருக்கு என்னவென்று விளக்குவாள். அதற்கு இதுவே மேல் என்ற எண்ணத்தோடு மீண்டும் புத்தகத்தில் கவனத்தை திருப்பினாள்.

அன்று காலையில் இருந்து சரியான வேலை ஈஸ்வரனுக்கு. முதலில் கிளைன்ட் மீட், பிறகு ஒரு வாடிக்கையாளரோடு சந்திப்பு, அதன்பின் வெளியே ஹோட்டல் தொடர்பான வேலை என மதியம்வரை நிற்க கூட நேரமில்லாமல் ஓடிக்கொண்டிருந்தான். முன்னிரவில் இருந்து ஜலதோஷத்தின் அறிகுறி இருக்க, காலையில் இருந்து இடைவிடாது அலைந்ததில் தலைவலியும் சேர்ந்து கொள்ள, நேரம் ஆக ஆக தலையில் பாரம் கூடியதை போல உணர்ந்தவன். அதற்குமேல் முடியாமல் ,தன் அறையை ஒட்டிய ஓய்வறைக்கு சென்று தலையை பிடித்துக்கொண்டு அமர்ந்துவிட்டான்.

வேகமாய் அழைத்த கார்த்திக்கின் அழைப்பை ஏற்றவள், என்னவென்று கேட்க,

“ஸ்ரீ காய்ச்சல் ,தலைவலி மாத்திரை எதுவும் வைச்சிருக்கியா…” என்றதும்,

“யாருக்கு என்னாச்சு…”

“ஈஸ்வருக்கு தான் ஸ்ரீ, காய்ச்சல் அடிக்குது ,நான் வேற வேலை விஷயமா உடனே வெளியில போகணும், மாத்திரை வெளியில போய் வாங்கிட்டு வந்தா லேட் ஆகுமேன்னு தான் உன்கிட்ட கேட்கிறேன், இருக்கா…”

“ நான் என்ன டாக்டரா, என்கிட்ட கேக்குற… காய்ச்சல் அடிச்சா டாக்டர்கிட்ட கூட்டிகிட்டு போ…” என்று வேகமாய் பேசியவளின் குரலில் என்ன இருந்தது என அவனால் கண்டறிய முடியவில்லை.

“ப்ச்… நீ வேற ஸ்ரீ, உன் ஆளு அவரே பார்த்துப்பாராம்,மாத்திரை கூட வேணாம், நீ போன்னு தான் சொன்னான், இதில எங்க டாக்டரை பார்க்கிறது…” என்று அவன் சலிக்க,

சுறுசுறுவென கோபம் பொங்கியது சாகித்தியாவிற்கு,

“என்கிட்ட இருக்கு, வந்து வாங்கிட்டு போ…” என்றுவிட்டு பட்டென போனை வைத்தாள்.

 கார்த்திக் வந்து மாத்திரை வாங்கிக்கொண்டு சென்று ஒருமணிநேரம் ஆகியிருந்தது. வேலைகள் அதுபாட்டிற்கு நடந்தாலும் மனதின் ஒரு மூலை அதையே நினைத்து கொண்டிருக்க கூப்பிடலாமா வேண்டாமா என்ற யோசனையுடன் கைபேசியை எடுத்தவள், மீண்டும் அதே இடத்திலேயே வைக்க போக, அதற்குள் கார்த்திக்கே அழைத்திருந்தான்.

சட்டென்று எடுத்தவளுக்கு என்ன பேசுவது என்று தெரியவில்லை. நல்லவேளையாக அவனே பேசினான்,

“ஸ்ரீ நான் வெளியே வந்துட்டேன், நீ கொடுத்த மாத்திரையை கொடுத்துட்டேன்,நான் பார்த்துக்கிறேன் நீ போன்னு என்னைய அனுப்பிட்டான், இப்போ போன் பண்ணினா எடுக்கலை, நீ போய் பார்க்கிறியா கொஞ்சம், ப்ளீஸ்…எனக்கு வேலையிருக்கு ,நான் அப்புறமா கூப்பிடுறேன்..போய் பாரு ஸ்ரீ…” என்று ஒப்பித்தவன் அவள் பதில் பேசுவதற்கு முன் போனை அணைத்து விட்டு,

“ஸ்…அப்பா…” என்று வராத வியர்வையை நெற்றியில் இருந்து துடைத்து எறிந்துவிட்டு தன் வேலையை பார்க்க போனான் கார்த்திக்.

ஒரு பத்துநிமிடம் வேலை பார்த்தவள் மூடிவைத்து விட்டு எழுந்தாள். கார்த்திக் மீது கோபமாய் வந்தது. இப்படியா பொறுப்பில்லாமல் இருப்பது என மனதில் அவனை  அர்ச்சித்துக் கொண்டே ஈஸ்வரின் அறைவரை வந்துவிட்டாள். அதற்குப்பின் முன்னேறுவதற்கு தயக்கம் வந்து உட்கார்ந்து கொண்டது.

இதுவரை செல்லாத இடம்! அவன் என்ன மனநிலையில் இருக்கிறான் என்று வேறு தெரியவில்லை. உள்ளே போய் ஏதேனும் கேட்டால் என்னவென்று சொல்லுவது. பேசாமல் திரும்பி விடலாமா என யோசித்தவள் மறுநொடி சட்டென்று கதவை திறந்து கொண்டு உள்ளே சென்றாள். ஆள் அரவமற்று நிசப்தமாய் இருந்தது அறை!

ஓய்வறையில் இருக்கிறான் என்று கார்த்திக் சொன்னானே! மெல்லமாய் அடிவைத்து பக்கவாட்டில் இருந்த அறைக்குள் சென்றாள். ஒரு ஆபிஸ் டேபிள், சோபா, சோபா போன்ற குட்டி மெத்தை, அறையை ஒட்டிய பாத்ரூம் என பாந்தமாய் இருந்த அறையில் அந்த சோபா போன்ற மெத்தையில் கண்மூடி சாய்ந்திருந்தான் ஈஸ்வர்.

அசந்து தூங்குபவன் போல தெரியவில்லை. ஆனால் கண்ணயர்ந்திருந்தான். போய் விடலாம் என நினைத்தவளுக்கு ஏதோ தோன்ற, மெதுவாய் அருகில் சென்று அவன் நெற்றியில் கைவைத்து பார்த்தாள். காய்ச்சல் மிச்சமிருந்தது. நல்ல தலைவலி போல நெற்றியில் சுருக்கம் விழ, புருவமத்தியில் வலியின் சுழிப்பு, அருகில் டேபிளில் இருந்த தைலம் கண்ணில் பட, ஒரு நொடி தயங்கியவள்அதை எடுத்தாள்.

கண்ணைமூடி பெருமூச்சை வெளியிட்டவள், இரு விரலில் தைலத்தை தொட்டு மெது மெதுவாய் அவன் நெற்றியில் தேய்த்து விட ஆரம்பித்தாள்.

Advertisement