Advertisement

ஆயுள் கைதி 7.1

 

வீட்டிற்கு வந்ததும் மதிவாணன் பேசியது இந்த திருமணத்தை முறிப்பது பற்றிதான். ஏனோ சாகித்தியாவிற்கு விஸ்வநாதனின் கடைசி வார்த்தைகள் காதிற்குள் ஒலிப்பதை போலவே இருக்க, அவளும் ஆணித்தரமாய் மறுத்தாள். பிரச்சினை முற்றிப் போய் என் பேச்சு கேட்காதவள் என் மகள் இல்லை என சொல்லிவிட , அதற்குமேல் சாகித்தியா ஒருநிமிடம் தங்கவில்லை மூட்டையை கட்டிவிட்டாள்.

 

சரளாதான் பதறினார்,

“வீட்டை விட்டு போகப்போறியா…என்ன பண்ற ஸ்ரீ, எங்க போவ, எப்படி இருப்ப, அப்பாவோட மல்லுகட்டாம சொல்றத கேளு ஸ்ரீ…” என்று அவர் பதட்டத்துடன் கூற,

 

“அப்பா பேச்சை கேட்க அதான் நீ இருக்கியேமா, கவலைப்படாத உன் குடும்ப ரத்தமோ என்னவோ, எங்க இருந்தாலும் எப்படி இருந்தாலும் என்னைய பார்த்துகிற தைரியம் எனக்கிருக்கு, நான் பார்த்துப்பேன்…” என்றுவிட்டு கிளம்ப எத்தனிக்க,

 

“முந்தாநேத்து வந்தவன் முக்கியமா போயிட்டான். என்னைவிட! நான்கூட என்னவோ நினைச்சேன்…”என்று மதிவாணன், வெறுப்புடன் மொழிய, சிறிதும் கண்டுகொள்ளவில்லை அவள்,

 

“தப்பு பண்ற ஸ்ரீ..” என்றார் சரளா சிறிது கண்டிப்புடன்,

 

“நீ பண்ண தப்ப தான் சரி பண்ண பார்க்கிறேன்மா…” என்றுவிட்டு வெளியே நடந்துவிட்டாள்.

 

வெளியே வந்தவள் முதலில் போய் பார்த்தது கார்த்திக்கைதான். விட்ட குறையோ என்னவோ பார்த்த முதல் தடவையில் இருந்து ஆரம்பித்த பிணைப்பு போக போக இறுகியது தான். அதுவும் தனக்கு நடந்த நிகழ்வுகளில் துவளாமல் நிமிர்வுடன் அடுத்து என்ன என்று தன் முன் நிற்கும் சாகித்தியாவை மிகவும் பிடித்து போனது கார்திக்கிற்கு!

 

அதன்பின் மற்றதெல்லாம் எப்படி நடந்தது என்றே தெரியாமல் தங்குதடையின்றி நடந்து முடிந்திருந்தது! விஷ்வேஸ்வரனின் வெளிநடப்பை அறிந்து கொண்டவள், தற்போதைய இருப்பிடத்திற்கு கார்த்திக்கை அழைத்து போக சொன்னாள். பல பணக்கார வீடுகளை அடக்கிய குட்டி கிராமம் அது. கேட்டட் கம்யூனிட்டி என்று சொல்லலாம். திண்ணமாய் எழுப்பப்பட்ட மதில்சுவரை கடக்கும் முன் மூன்று நான்கு காவலாளிகளை எதிர்நோக்க வேண்டும். அதுவும் வீட்டின் உரிமையாளர்களும் அவர்களால் ஒத்துக்கொள்ளப்பட்ட குறிப்பிட்ட நபர்கள் மட்டுமே கடக்க முடியும். மதில்சுவர் வாயிலில் இருந்து இருமைல் தூரம் தார்சாலை , இருபக்கமும் செடிக்கொடிகளோடு ஓடி அதன்பின் வீடு எனும் பெயரில் மாளிகைகள். இரண்டு வீட்டின் நடுவில் ஒரு வீடு இருக்கும் அளவிற்கு இடைவெளி, அந்தவீடுகளில் வேலைப் பார்ப்பவர்களுக்கு அங்கேயே மதில்சுவரின் ஓரமாய் வீடுகள். மொத்தத்தில் வெளியுலக தொடர்புகள் தேவைக்கு மட்டுமே இருக்கும் தனி உலகமது!

 

கார்த்திக் கொண்டு போய் சாகித்தியாவை கேட்டின் வெளியே விட்டவன், ஈஸ்வருக்கு அழைத்து வர சொல்ல, அவன் வந்து என்னவென்று காரில் இறங்கியபொழுது, அவன் வந்ததும் காரில் பின் சீட்டில் ஏறி அமர்ந்து கொண்டாள் சாகித்தியா. கார்த்திக் தன் காரில் ஏறி கிளம்பிவிட, ஈஸ்வர் காரைக் கிளம்பி உள்ளே சென்றான்.

எந்த விளக்கங்களும் இல்லை! அன்று முதல் அவள் வாசம் அவ்வீட்டில்தான். இருவரும் உள்ளேஒரு வார்த்தை இதுவரை பேசியதில்லை. நிமிர்ந்து முகம் பார்த்ததில்லை. ஆனால் வந்ததில் இருந்து ஒரே படுக்கையறை, ஒரே மெத்தை தான்! கண்ணுக்குத் தெரியா கோடு நடுவில் இருப்பதை போலவே விரல்நுனிகூட தாண்டாது அவரவர் பக்கத்தை! இதுவும் அங்கே எழுதப்படாத விதியே!.

Advertisement