Advertisement

ஆயுள் கைதி 6

இதுவரை அவன் செய்யமாட்டான் என்று நினைத்து அனைவரும் பார்க்க, அவன் சட்டென்று தாலி கட்டியிருந்ததை யாராலும் நம்ப முடியவில்லை. அப்படியே உறைந்து போயிருந்தனர். இருவர் கைகளையும் தன் கைக்குள் சேர்த்து வைத்துக் கொண்ட விஸ்வநாதன் சாகித்தியாவைப் பார்த்து ,

“இந்த கையை எப்பவும் விட்டுடாத சாகித்தியாமா…” என்றுவிட்டு மெதுவாய் எழுந்து வெளியே நடந்தார். ஈஸ்வர் அவரை யோசனையுடன் திரும்பி பார்க்க, சாகித்தியாவோ அருகில் இருந்த திண்டில் அமைதியாய் அமர்ந்தாள்.

யாரையும் கண்டுகொள்ளாமல் திரும்பி பார்க்காமல் நடந்தவர் காரை எடுத்துக் கொண்டு கிளம்பிவிட்டார். அவர் இருந்த வரையில் அவருக்கு எதிராய் பேசமுடியாமல் நடப்பதை வேறுவழியின்றி வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தவர்கள், ஒவ்வொருவராய் எகிற ஆரம்பித்தனர். ஈஸ்வரின் குடும்பத்தினர் சரளாதான்  நிம்மதியாய் இருந்த குடும்பத்திற்குள் குழப்பம் செய்து விட்டதாக பேச, இதுநாள் வரை சரளாவையே மறந்து , சாகித்தியா இருப்பதே தெரியாமல் சஞ்சனாவை ஈஸ்வருக்கு முடித்து சொத்தை ஆளலாம் என கனவு கண்டு வைத்திருந்த பாக்கியவதி ஆடித் தீர்த்து விட்டார். மதிவாணன் அவர் பங்கிற்கு சரளாவை ஒருவழியாக்க அந்த இடமே களேபரம் ஆனது.

வீட்டிற்க்கு வந்ததும் கோபத்தின் உச்சியில் இருந்த விசாலாட்சி கணவரைத் தேடி போக , அவர் எதிர்கொண்டது மெத்தையில் நிர்மலமாய் கண்மூடி சாய்ந்திருந்த விஸ்வநாதனை தான்! அவர் இருந்த விதமே அபாயமணி எழுப்ப, மெல்ல சென்று கைகளை தொட்டார், உடல் சில்லிட்டிருந்தது.

ஆயிற்று! விஸ்வநாதன் இறந்து ஒரு மாதம் ஆகியிருந்தது. அனைத்தும் இயல்பிற்கு திரும்பி…. திரும்பி இருப்பது போலிருந்தது. வழக்கம்போல குடும்பத்தினரின் பொறுப்பில் ஹோட்டல் நடந்தது. மேலோட்டமாக பார்த்தால் எல்லாம் சரியாய் இருந்தது போலிருந்தது. ஆனால் இல்லை! விஷ்வேஸ்வரன் வீட்டை விட்டு வெளியே சென்று விட்டிருந்தான்! விஸ்வநாதன் இறந்தநாள் அன்று…. செய்தி தெரிந்த உடனேயே சரளா வந்துவிட்டார். உற்றார் உறவினர் இருக்க, சுற்றம் உணர்ந்து அனைவரும் பல்லைகடித்து பொறுத்தார்களே தவிர வாய் திறந்து எதையும் சொல்லிவிடவில்லை.அதன் பின்னும்  அந்த விசாலமான வீட்டில் ஆளாளுக்கு ஒவ்வொரு மூலையில் அடைந்து கொள்ள, விஸ்வநாதன் எழுதி வைத்த உயிலோடு அவர்களின் குடும்ப வக்கீல் வந்தபொழுது தான் பூகம்பம் வெடித்தது. அனைவரையும் அமர வைத்து உயிலை படித்தார் அவர். விஸ்வநாதன் தன் மனைவி, மக்களுக்கு மட்டுமின்றி அவர்களது மக்களான தன் பேத்தி பேரனுக்கும் சரியாய் சமமாய் தான் பிரித்திருந்தார். அதுவரை எந்த சலனமும் இல்லாமல் சுமூகமாகவே சென்றது. சொல்லப்போனால் சரளாவின் பெயரில் எந்த சொத்தும் எழுதப்படவில்லை. அங்கே இருந்த பாதி பேருக்கு அப்போது தான் மூச்சே வந்தது. ஆச்சரியம் கலந்த மகிழ்ச்சியுடன் அவர்கள் இருக்க, விசாலாட்சிக்கு  தன் கணவனை பற்றி தெரியும் ஆதலால் அவர் வெளிவர இருக்கும் பூதத்தை எதிர்நோக்கி படபடப்புடன் காத்திருந்தார்.

பூதமும் வெளிவந்தது! சரளாவின் பங்கு, விஸ்வநாதனின் பெயரில் அவருக்கென மட்டும் அவர் பெயரில் இருக்கும் பரம்பரை சொத்தில் சரிபாதி பங்கு, “வி வி” ஹோட்டலின் இரண்டாவது அதிகமான ஷேர்கள் அனைத்தும் சாகித்தியாவிற்கு!

விஸ்வநாதனின் மீதி பங்கு , அவனுக்கென வரவேண்டிய சொத்து, மனைவியாகிய சாகித்தியாவிற்கு சேர வேண்டிய பங்கின் பராமரிப்பு உரிமை எல்லாம் விஷ்வேஸ்வரனுக்கு.

கூடவே விவி ஹோட்டலின் அதிகபட்ச ஷேரோடு , ஹோட்டலின் தலைமை பொறுப்பு! அதாவது ஹோட்டல் சம்பந்தமாய் கடைசியாய் முடிவெடுக்கும் அதிகாரம் என்றும் விஷ்வேஸ்வரனுக்கு! அவனுக்கு பிறகு அவனது மனைவியாகவே சாகித்தியா இருக்கும் பட்சத்தில், சாகித்தியாவிற்கு. அதற்கடுத்து அவர்களது வாரிசுக்கு!

உயிலை படித்து முடித்தபொழுது மயான நிசப்தம் அந்த ஹாலில்! ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமான அதிர்ச்சியில் இருக்க, அவ்வளவு எளிதில் யாராலும் மீள முடியவில்லை.

விசாலாட்சிக்கு தன் கணவன் இவ்வளவு விஷயங்களை தனக்கு தெரியாமல் செய்திருப்பதை கொஞ்சமும் தாங்கி கொள்ள முடியவில்லை. முதலில் ஆரம்பித்தவர் அவர்தான். விஷ்வேஸ்வரனுக்கு விஸ்வநாதன் எழுதி வைத்திருப்பவைகளை  பற்றி விசாலாட்சிக்கு ஒரு வருத்தமும் இல்லை. அதெல்லாம் சரியே என்ற எண்ணம் தான். ஆனால் தன் குடும்ப கௌரவத்தை புதைத்து விட்டு யாரோ ஒருவன் முக்கியமென சென்றவளின் மகளுக்கு இவ்வளவு அங்கீகாரம் தேவையில்லை என அவர் நினைக்க, அதை அப்படியே அச்சு பிசகாமல் சொல்லியும் விட்டார். கூடவே சேர்ந்து கொண்டனர் அவர் மக்கள். இப்படியாக ஆரம்பித்த பேச்சில் சரளாதான் சொத்துக்காக விஸ்வநாதனின் மனதை மாற்றி இந்த திருமணத்தையே நடத்த திட்டமிட்டார் என்றவரை பேசிவிட்டனர்.

யாருக்குமே விஷ்வேஸ்வரனின் மனைவியாக இந்த குடும்பத்திற்குள் சாகித்தியா வருவதில் விருப்பமில்லை. இப்படி பேச்சுக்கள் நடக்க அதுவரை பொறுத்திருந்ததே பெரிய விஷயம் என்பது போல மதிவாணன் பொங்கி எழுந்து தனக்கும் இந்த குடும்பத்தில் ஒட்டிக்கொள்ள விருப்பமில்லை என்பதை பறைசாற்றி சரளாவையும் பேசியவர் தாயையும் மகளையும் இழுக்காத குறையாக கூட்டிக்கொண்டு போக,

வார்த்தைகள் தடித்து, கேட்க தகாத வார்த்தைகள் எல்லாம் வந்து விழுந்த பின், திரும்பவும் அமைதி அவ்விடத்தில். அதுவரை அமைதியாய் நடப்பதை கவனித்து கொண்டிருந்த ஈஸ்வரன் மெதுவாய் எழுந்து அறைபக்கம் திரும்பினான். அவனின் எண்ணவோட்டத்தின் விபரீதத்தை அறியாமல் தன் பேரன் தன் சொல் கேட்பான்.தன் குடும்பத்தின் ஆசைப் போலதான் நடப்பான் என்ற எண்ணத்துடன் விசாலாட்சி,

“தம்பி, இதை எதுவும் மனசில ஏத்திக்காதப்பா… உங்க தாத்தா கடைசி காலத்துல என்ன பண்றோம்னு தெரியாம பண்ணிட்டாரு, எங்களை விடு, உன்கிட்ட கூட ஒரு வார்த்தை கேட்காம….” என்று ஆதங்கமாய் ஆரம்பித்தவர், தன்னைதானே கட்டுப்படுத்திக் கொண்டு,

“போனதெல்லாம் போகட்டும், நீ பாட்டுக்கு உன் வேலையை பாரு தம்பி, ராஜவாட்டம் இருக்க உனக்கு, எவ்வளவு பேர் பொண்ணு கொடுப்பாங்க, ஏன் இருக்கவே இருக்கா நம்ம சஞ்சனா. அந்த ஓடிப்போனவ மகளை கட்டிக்கிட்டு அழனுமா என்ன…” எனவும்,

அந்த நொடி ஈஸ்வர் மனதில் ஓடியது தன் பெற்ற மகளையே எப்படி இப்படி பேச முடிகிறது என்றுதான். அவனுக்கு பிடிக்காதுதான்.  சின்ன வயதில் இருந்தே பார்த்து வளர்ந்த இடத்தில் சரளாவை பற்றிய பேச்சுக்கள், விஷயங்கள்.அவர் மீது அவனுக்கு எந்த பிடித்தத்தையும் ஏற்படுத்தவில்லை தான். ஆனாலும் விசாலாட்சி… சரளாவின் அன்னை அல்லவா…!

அவனது சிந்தனை இப்படியாக இருக்க, அவனது மௌனம் குடும்பத்தில் மற்றவர்களை முகத்தில் அடித்தது. அதுவும் இந்த மௌனத்தோடையே அவன் தாலிகட்டியது! அனைவருக்கும் பெருங்கோவத்தை கிளப்பியிருந்தது.

“ எல்லாத்துக்கும் அமைதியா இருந்துட்டு தாலியும் கட்டிட்டு வந்ததை பார்த்தா, ஈஸ்வரும் தாத்தா கூட கூட்டு தான் போல…” என்று சதாசிவம் பேசிவிட்டார்.

அவரை ஒரு பார்வை பார்த்தான் ஈஸ்வர்.அதற்குமேல் அவர் பேசவில்லை. சத்தியமூர்த்தி, சிவானந்தன் எல்லாம் நியாயவாதிகள் தான். ஆனாலும் இந்த கௌரவ வாடை லேசாய் அடிக்கப் பெற்றவர்கள். அதனால் சரளா விஷயம் அவர்களுக்கு உவக்கவில்லை. அமைதியாகவே இருந்தனர்.

ஆனால் விசாலாட்சி விடுவதாக இல்லை. அவருக்கு சாகித்தியா உள்ளே வருவதில் துளிக்கூட சம்மதமில்லை.

“ஈஸ்வர் உனக்கும் சஞ்சனாவிற்கும் கல்யாண ஏற்பாட்டை ஆரம்பிச்சிரலாம். உயில் எழுதி வைச்சிட்டா அதுப்படி நடக்கணுமா என்ன, நீ சஞ்சனாவை கல்யாணம் பண்ணிக்கிட்டு நம்ம ஹோட்டல நடத்தினா , அவ எப்படி உள்ளே வரமுடியும், கல்யாணம் என்ன லீகலாவா நடந்துச்சு, கோவில்ல கூட யாரும் இல்லை….” ஒன்னும் ஒன்னும் இரண்டு என வேகமாய் கணக்கு போட்டவர், ஈஸ்வரின் முகபாவத்தை பார்க்க தவறி பேசிக்கொண்டே போக,

“ அப்போ தாத்தாவின் கடைசி கோரிக்கை, அவரோட கடைசி ஆசை பாட்டி…?”  என்று அவன் நிதானமான குரலில் கேள்வியை இழுக்க,

“ அந்த மனுஷன் போற காலத்தில இனி நமக்கென்னனு எல்லாத்தையும் சிக்கலாக்கிட்டு போயிட்டாரு. அதுக்காக அந்த ஓடிபோனவளையும் அவமகளையும் சேர்த்துக்கணுமா…” என்று பட்டென பதில் வந்தது.

சுற்றி இருந்தவர்களை தன் விழிகளால் கூர்ந்து பார்த்தான். எல்லோருக்கும் அதே எண்ணம் தான் போல. அந்த கணம் ஈஸ்வர் முடிவெடுத்து இருந்தான். வேகமாய் தன் அறைக்கு சென்றவன் மிகவும் அத்தியாவசியமானதை மட்டும் எடுத்துக்கொண்டு வீட்டை விட்டு வெளியேறிவிட்டான். இன்றுவரை யாருக்கும் ஏன் என்று விளக்கம் கொடுத்தது இல்லை. வீட்டிலிருந்தும்,  வீட்டிலிருக்கும் மனிதர்களிடமிருந்தும் மொத்தமாய் ஒதுங்கிக்கொண்டு விவி ஹோட்டல்ஸ் தலைமையை மட்டும் தாங்கிக்கொண்டான். அவன் தாத்தாவின் விருப்பப்படி!

அன்றிலிருந்து தன் பெரியப்பா, அப்பாவிடம் கூட தொழில்முறை பேச்சுக்கள் மட்டுமே இருக்க,மற்றவர்களிடம் அதுவும் இல்லை. முன்னேயே அழுத்தமாய் திரிந்தவன், இந்த சம்பவங்களுக்கு பிறகு முற்றிலும் இறுகி போனான். அவன் இயல்பாய் பேசும் ஒரே நபர் கார்த்திக் மட்டுமே!

விஸ்வநாதனின் விருப்பத்தை எடுத்தெறிந்து பேசியதை தாங்காமல் வீட்டை விட்டு சென்றான், யாரையும் அண்டவிடாமல் தனியே இருக்கிறான் என்று தான் மொத்த குடும்பமும் இன்றுவரை நினைத்து கொண்டிருக்கிறது.

ஆனால் அவர்களுக்கு தெரியாதது. ஏன் கார்த்திக்கை தவிர வேறு யாருக்குமே தெரியாதது! விஷ்வேஸ்வரன் வீட்டை விட்டு வெளிவந்த நாள் முதல் இன்றுவரை அவனும் சாகித்தியாவும் ஒரே வீட்டில் தான் இருக்கிறார்கள் என்பது!

Advertisement