Advertisement

ஆயுள் கைதி 5

 

அவன் படத்தையே பார்த்தபடி அமர்ந்திருந்தாள் சாகித்தியா. லேசாய் சோர்வு மிச்சமிருந்தது. தன்னை பார்த்தாள். நேற்றிருந்த புடவை அப்படியே இருக்க, கூந்தல் மட்டும் கிளிப்கள் அகற்றி கலைத்து விடப் பட்டிருந்தது. கூந்தல் ஒதுக்கி கொண்டை போட்டவள், எழுந்து குளியலறை சென்றுவிட்டு முகத்தில் தண்ணீருடன் வெளியே வந்தாள். வந்தவள் தன் கைபேசியை தேட அது தன் வழக்கமான இடமான ட்ரெசிங் டேபிளில் இருந்தது. அருகில் இருந்த துண்டை எடுத்து முகத்தை துடைத்தவாறு கட்டிலில் அமர்ந்து கார்த்திக்கிற்கு அழைத்தாள்.

 

போனை எடுத்தவன், “ சொல்லு ஸ்ரீ…” என்றதும் போன் வழியே அவன் பயணத்தில் இருப்பதை உணர்ந்தவள்,

வெளியில இருக்கியா…” என்றாள்.

 

ஆமா ஸ்ரீ, திடீர்னு ஈஸ்வர் ஹோட்டல்ல ஒரு முக்கியமான வேலை வந்திடுச்சு, அதான் நேற்று பார்ட்டியில இருந்து கூட பாதியிலேயே கிளம்பிட்டேன். உன்கிட்ட சொல்லிட்டு வர முடியல, மிட்நைட்ல பெங்களூர் கிளம்பி இப்போ ஹோட்டல் கிட்ட வந்துட்டேன் ஸ்ரீ…” என்றவன்.

 

சரி சொல்லு நேத்து தலைவலி வந்துச்சாவீட்டிற்கு சீக்கிரம் கிளம்பிட்டியா, தலைவலியா இருந்தா ரெஸ்ட் எடுப்ப, அதான் நீயா கூப்பிடட்டும், தொந்தரவு பண்ண வேண்டாம்னு நான் கூப்பிடல…” என்றவன் குரலில் நிஜமான அக்கறை!

 

ம்தலைவலி வந்துச்சு,இப்போதான் எழுந்தேன்..”என்றவளால் அதற்குமேல் சொல்லமுடியவில்லை.

 

அவனுக்கும் அலுவல் இணைப்பு ஒன்று வர, இயல்பாகவே பேசி போனை வைத்துவிட்டாள்.

 

குளித்துவிட்டு காட்டன் புடவை ஒன்றில் ஈரமுடியை கோதியவாறே மாடியில் இருந்து கீழ் இறங்கி வந்தவளை பார்த்து சமையல் பாத்திரங்களை டைனிங் டேபிளில் அடுக்கிக் கொண்டிருந்த வள்ளி இதழ்விரித்து  புன்னகைக்க,

 

என்ன வள்ளிமா…” என்றவாறே டைனிங் டேபிளின் நாற்காலியில் அமர்ந்தாள்.

 

எப்பவும் நான் வர்ற நேரத்துக்கு முன்னாடியே எழுந்திருப்பீங்களே, இன்னைக்கு லேட் ஆனதும் வீட்டில இருக்க போறீங்க நினைச்சேன்மா…” என்று அவர் கூற,

நேத்து கொஞ்சம் தலைவலி வள்ளிமா, அதான் அசந்து தூங்கிட்டேன், கிளம்பனும்.” என்றாள் அவள்.

 

நான் நீங்க எழுந்ததும் சூடா இட்லி ஊத்திக்கலாம் நினைச்சேன், இப்போ ஊத்தவாமா…” என்று அவர் கேட்க,

 

இல்ல வள்ளிமா.. கொஞ்ச நேரம் ஆகட்டும்..” என்றவள் டீ மட்டும் வாங்கிக்கொண்டு ஹால் சோபாவில் அமர்ந்தாள்.

 

இன்னும் அசதியாய் இருக்கையில் ஹோட்டல் செல்ல விருப்பமில்லை தான். ஆனால் தான் செல்லாவிட்டால் சில வேலைகள் தடைபடும் என்பதால் சுந்தரிடம் முக்கியமான வேலைகளை மட்டும் இன்று வைத்துக்கொள்ள ஏற்பாடு செய்யும்படி அழைத்து சொல்லிவிட்டு மெதுவாகவே கிளம்பினாள்.

 

அன்று அவள் நேரமோ என்னவோ, ஹோட்டல் உள்ளே நுழையும்பொழுதே அவள் பார்த்த முதல் ஆள் சஞ்சனா! கண்டுகொள்ளாமல் கடந்து விடத்தான் நினைத்தாள் சாகித்தியா. ஆனால் சஞ்சனாவிற்கும் அந்த எண்ணம் வேண்டுமே!

 

இவளை பார்த்ததும்,

நினைச்ச நேரத்திற்கு வந்திட்டு போறதுக்கு இதென்ன உன் ஹோட்டலா…” என்றாள் இகழ்ச்சியாய்,

 

அதை கேட்க நீ யார் என்ற பார்வை பார்த்தவாறே அவள் நகர போக,

சாகித்தியா…” என்று சத்தமாகவே அழைத்திருந்தாள் சஞ்சனா, இவள் இன்று வாங்கிக் கட்டிக்கொண்டு போகாமல் விடமாட்டாள் என்ற நினைப்புடன் சஞ்சனாவை தீர்க்கமாக பார்த்தவள்,

 

மிஸ். சஞ்சனாஎன் அப்பாயின்ட்மெண்ட்க்கும், வேலைகளுக்கும் ஏற்றமாதிரி வருவதுக்கு சுதந்திரம் எனக்கிருக்கு. வேலைகள் இருந்தா, காலை ஆறு மணியா இருந்தாலும் சரி, நைட் பன்னிரெண்டு மணியா இருந்தாலும் சரி நான் வந்து வேலை பார்ப்பேன். ஆனா இதெல்லாம் உங்ககிட்ட சொல்ல அவசியம் இருக்கிற மாதிரி என்னைய கேள்வி கேட்கறீங்கஎன்னைய கேள்வி கேட்கிற அதிகாரத்தை யார் உங்களுக்கு குடுத்தா, முதல்ல யார் நீங்க, கஷ்டமரா, இல்லை இங்க வேலை பார்க்கிறீங்களா…” என அவளைவிட சாகித்தியா சத்தமாய் கேட்க, சஞ்சனாவிற்கு முகம் விழுந்து விட்டது. மூக்குநுனி சிவக்க ஏதோ சொல்லவந்தவள். எது சொன்னாலும் இன்னும் திருப்பியடிப்பாள் என்று உணர்ந்தவளாக விடுவிடுவென வெளியே சென்றுவிட்டாள்.

 

சென்றவள் நேரே சென்று பார்த்தது சத்தியமூர்த்தியை தான்.பாக்கியவதியோடு சென்று நடந்ததை அவளுக்கு ஏற்றமாதிரி கதைபிணைத்து தனக்கும் ஹோட்டலில் ஓர் அங்கீகாரம் வேண்டும். தன்னை யாரென்று கேட்டவள் முகத்தில் கரியை பூசவேண்டும் என ஒருவாறாக மூச்சுமுட்ட பேசி முடித்துவிட்டு, அவரை பார்க்க,அவரோ சற்று யோசித்துவிட்டு,

 

சரி கௌசிக்கிற்கு அசிஸ்டெண்ட்டா சேர்ந்துக்கோ…” என்று சொல்லியிருந்தார்.

 

என்ன அவனுக்கா…! அவனே சதாசிவம் சொல்வதை செய்து கொண்டு ஹோட்டலின் ஒரு குட்டி டிப்பார்ட்மெண்ட்டை நிர்வகித்து கொண்டிருக்கிறான். அவனுக்கும் உதவி என்றால் சாகித்தியாவிற்கு பலபடிகள் கீழே! சொல்லப்போனால் காததூரம்…! அவளால் அதை ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை.

 

மாமாகௌசிக்கிற்கு அசிஸ்டெண்ட்டா…” என்றாள் அதிர்ச்சியான குரலில்,

 

அவளது எண்ணவோட்டதை கணித்தவராய்,

இப்போதான் படிச்சி முடிச்சிட்டு இருக்க உனக்கு, அந்த பதவியே அதிகம் தான். முதல்ல விஷயங்களை கத்துக்கணும். அப்புறம் தான் அடுத்த இடத்துக்கு போகணும். உனக்கு வெளி அனுபவமும் பத்தாது. ஹோட்டல் விஷயங்களை முதல்ல கத்துக்கோ.கொஞ்சம் நாள் போகட்டும், பார்க்கலாம்…” என்றவர் பேச்சு முடிந்ததாய் எழுந்து விட,விசாலாட்சிக்கும் பெரிய மகனின் இந்த முடிவு சரியெனவே பட பேசாமல் சென்றுவிட்டார். பல்லைக்கடித்துக் தன்னை சமன்படுத்திக் கொண்டாள் சஞ்சனா.

 

ஆனால் மனது மறுநாள் வேறுவிதமாய் யோசித்தது. இவ்வளவு நாள் வரை ஹோட்டலில் நடக்கும் விஷயங்களை கௌசிக்கை துளைத்து வாங்கி கொள்வதும் சதாசிவம் வாயிலிருந்து எப்போதடா விஷயங்கள் வரும் என காத்திருப்பதும் பெரிய கொடுமை. அதற்கு இது பரவாயில்லை என்றே இப்பொழுது தோன்றியது. ஈஸ்வரை அடிக்கடி பார்க்க போவதை நினைத்து தித்திப்பாய் வேறு இருக்க, சந்தோசமாகவே கிளம்பி  சென்றாள்.

 

அன்றுநாள் முழுவதும் கௌசிக் பின்னேயே சுற்றிக் கொண்டிருந்தாள். ஈஸ்வரின் அறைக்கு அவன் கூடவே சென்றவள் ஆவலாய் அவனை நோக்க,  அவனோ அவள் பக்கம் திரும்பியும் பார்க்கவில்லை. மனது நீர்ப்பட்ட புஸ்வானமாய்   போக, அதைக்காட்டிக் கொள்ளாமல் கௌசிக்கோடு சேர்ந்து வேலையில் கவனமாய் இருப்பதாய் காட்டிக் கொண்டாள். சில சந்தேகங்கள் கூட கேட்டாள். ஆனால் ஈஸ்வர் கௌசிக்கையே வேலையாள் என்ற வட்டத்தில் வைத்து தான் பேசிக்கொண்டிருந்தான். இதில் சஞ்சனா எம்மாத்திரம். கடைசியில் அவள் சந்தேகங்களுக்கெல்லாம் கௌசிக் தான் பதில் சொல்லும்படி ஆயிற்று.

 

கடுப்புடன் வெளியேவந்தவள் தனியாய் போய் கஃபேடேரியாவில் அமர்ந்து கொண்டாள். சிறிது நேரம் யோசித்தவளுக்கு கோபத்தை விடுத்து நிதானமாக அடிவைத்து ஈஸ்வரை நெருங்க வேண்டும் என்று புரிய, என்ன செய்யலாம் என்று சிந்தித்தாள். அவளுக்கு ஈஸ்வரின் ஆளுமையில், அவன் தொழிலை பார்க்கும் திறனில் ஒரு ஈர்ப்பு. ஆனாலும் அவனது வாழ்க்கைமுறை, கட்டுப்பாடு, ஒழுக்கவழக்கங்கள் எல்லாம் தனக்கு ஒத்துவராது என்று பேசாமல் தான் இருந்தாள். ஆனால் திடிரென்று எங்கிருந்தோ முளைத்தவளுக்கு ஈஸ்வர் தாலி கட்டியதை தான் அவளால் ஜீரணிக்கவே முடியாமல் போயிற்று.

 

விஸ்வநாதன், குடும்பத்தின் தலைவர்!  “வி வி ஹோட்டல்ஸ் க்கு அடிக்கல் நாட்டியவர். விஷ்வேஸ்வரனின் ஆளுமை எல்லாம் இவரைக் கொண்டே வந்தது என விஸ்வநாதனை நேரில் பார்த்தவர்கள் சொல்லி விடுவார்கள். அப்படி ஒரு ஆளுமையோடு தொழில், குடும்பம் என அனைத்தையும் கட்டிக் காத்து வந்தவர், சறுக்கியது அவரது செல்லமகள் சரளா காதல் என்று வந்து நின்றபொழுது தான் . குடும்ப கௌரவம் அது இதுவென வழக்கமான தடைகள் தலைதூக்க யாருடைய நேரமோ! விஸ்வநாதனுக்கும் சரி, சரளாவின் காதலனான மதிவாணனுக்கும் சரி பொறுமை இருக்கவில்லை. இருவரும் அவர்கள் பங்கிற்கு எகிற, இதில் விசாலாட்சி முதல் தன் தமையன்,தமக்கை வரை தன்னை ஒதுக்கி விஸ்வநாதன் பின் நின்றது சரளாவை மிகவும் பாதித்தது. அதிலும் விஸ்வநாதன் சரளாவின் காதலை துச்சமென மதித்து பேசிவிட, தன் காதலுக்காக போராடும் மதிவாணனை கைப்பிடிக்க துணிந்து முடிவெடுத்து விட்டார்.எவ்வளவு சொல்லியும் கேட்காததால் விஸ்வநாதன் அவரை தலைமுழுகும் நிலையில் இருக்க, சரளாவும் மதிவாணன் தான் முக்கியம் என கிளம்பிவிட்டார். அன்று ஏற்பட்ட பிளவு! விஸ்வநாதன் அதன்பின் தனக்கு சரளா என்றொரு மகள் இருந்ததே இல்லை போலதான் நடந்து கொண்டார். வீட்டிலும் யார் யாருக்கு என்னனென்ன  எண்ணமோ! அவர்கள் மனதே அறியும். யாருமே விஸ்வநாதனை எதிர்க்கவில்லை. இப்படியாக சரளாவின் தொடர்பு அந்த குடும்பத்தோடு மொத்தமாய் உடைந்து போயிற்று. ஆனால் தான் சீராட்டி வளர்த்த செல்லமகளின் பிரிவு அந்த பெரியவரை உள்ளிருந்தே கொஞ்சம் கொஞ்சமாய் சிதைத்ததோ! கம்பீரமாய் இருந்தவர்எழுபதின் முடிவிலேயே தளர்ந்து விட்டார். ஆனால் இதில் சஞ்சனாவிற்கு இன்னும் புரியாத விஷயம் ! தகவலே தெரியாமல், தொடர்பே இல்லாமலிருந்த சரளாவை எப்படி கண்டுபிடித்தார் விஸ்வநாதன் என்பதே! இப்பொழுது யோசித்தால் அதற்காகவே நிறைய மெனக்கெட்டு இருப்பார் என்று தோன்றியது. ஒரு கட்டத்திற்கு மேல் எப்பொழுதும் ஆழ்ந்த யோசனையிலேயே இருந்தவர், யாருடனும் பேசாமல் விடியும் வரை கூட  அமர்ந்து வெறித்துக் கொண்டிருப்பார்.

 

திடீரென ஒருநாள் விசாலாட்சிக்கு போன் போட்டு, “ நான் முருகன் கோவில்ல இருக்கேன், வீட்டில் உள்ள எல்லாரையும் கூட்டிட்டு உடனே வா…” என்று விட்டு போனை வைக்க,

 

என்னவோ ஏதோவென அனைவரும் பதறிவர ,அமைதியாய் அங்கே சன்னிதியில் அமர்ந்திருந்தார்.

 

குழப்பத்துடன் நின்றவர்களை பார்த்தவர் அமரும்படி சொல்ல, விசாலாட்சி தான் கேட்டார், என்ன விஷயம் என்று, பதில் பேசாமல் அவர் வாசலை பார்க்க,

சற்று நேரத்தில் அதே வேகத்தில் வந்தனர், சரளா,மதிவாணன் குடும்பத்தினர்.

சாகித்தியாவிற்கு இவர்களையெல்லாம் யார் என்ன உறவென்று கூட முழுதாய் தெரியவில்லை. சிலரை அன்னை காட்டிய போட்டோவில் பார்த்தது மட்டுமே. யோசனையுடன் குழப்பமாய் பார்த்து கொண்டிருந்தவளை அழைத்தார் விஸ்வநாதன். போய் நின்றாள். ஈஸ்வரை அழைத்தார். அப்பொழுது ஈஸ்வர் அவர்களின் தொழிலுக்கு வந்து மூன்றாண்டுகள் ஆகியிருந்தது. விஸ்வநாதனின் பெயரை கொண்டு விஷ்வேஸ்வரன் என்று வைத்திருந்ததால் அவன் ஈஸ்வர் ஆகி போனான்.

இருவரும் அவர் முன் நிற்க,மெல்ல எழுந்தவர்,

உன்கிட்ட எந்த விளக்கமும் சொல்லப் போறதில்லை ஈஸ்வர். இதுனால நீ என்னை வெறுத்தாலும் சரி! நிறைய விஷயத்தில் நான் உன்கிட்ட என்னை பார்த்திருக்கேன். அதே நம்பிக்கையில்தான் இதுவும்.” என்று கம்பீரமாய் முடித்தவர்,

உன் பெயர் உன்னை மாதிரியே அழகு சாகித்தியாமா…” என்று அவள்  தலையில் கைவைத்து வருடினார்.

பின் சரளாவை பார்த்தவர்,

உனக்கு செஞ்சது நியாயம் இல்லை சரளா, என் கௌரவம் அப்போ ஏனோ இதுக்கு இடம் கொடுக்கல, ஆனா அதுக்கப்புறம் நியாயமா உனக்கு , உன் மகளுக்கு சேர வேண்டியதை எல்லாம் நான்தான்என்னால தான் இல்லாம போச்சுன்னு நினைக்கும்போது என்னால தாங்க முடியல..இதோ இந்த தங்கத்தை இத்தனை வருஷமாகண்ணால கூட பார்க்கலையேஇதெல்லாம் எவ்வளவு பெரிய தப்புஎன்னை மன்னிச்சிடுமா…” என்று அவர் குரல் கரகரக்க  பேச,

தன்னை பெற்ற தந்தை மன்னிப்பு கேட்பதெல்லாம் தாங்க முடியவில்லை சரளாவால்,

அப்பாநீங்க எதுக்குப்பா மன்னிப்பு கேட்கறீங்க, நானும் தான் ப்பா, இன்னும் கொஞ்சம் பொறுமையா இருந்திருக்கலாம், உங்களை கஷ்டப்படுத்தாம சொல்லி புரிய வச்சி கல்யாணம் பண்ணி இருக்கலாம்நானும் தானே ப்பா தப்பு பண்ணிட்டேன்…” என்று அவர் உடைய, அவரது கையை பிடித்து கொண்டார் விஸ்வநாதன். ஆனால் வேறு ஏதோ முடிவில் இருந்தவர் அதற்குமேல் சரளாவை பேச விடவில்லை.

 

எல்லோரையும் ஒரு பார்வை பார்த்தவர்,கோவில் பூசாரியை அழைக்க, அவர் தாம்பூல தட்டில் பூ, பழம் தேங்காயில் சுற்றிய மாங்கல்யத்தோடு வர, அப்பா என பாக்கியவதி முன்னே வர, ஒரு பார்வை பார்த்தவர், தட்டில் இருந்த மாங்கல்யத்தை எடுத்து ஈஸ்வரிடம் கொடுத்தார்.

அவன் கைகள் தயங்க, சாகித்தியாவோ நடப்பது கனவா நிஜமா என்று பிரித்தறிய முடியா நிலையில் இருந்தாள். அவரை அவன் தீர்க்கமாக பார்க்க, சளைக்காமல் அவன் பார்வையை எதிர்கொண்டவர்.

 

இதுவரை உன்கிட்ட எனக்குன்னு நான் எதுவும் கேட்டதில்லை. இதுவே முதலும் கடைசியுமா இருக்கும் ஈஸ்வர்…” என்றுவிட்டு தாலியை கையில் கொடுத்தவர்.

 

சாகித்தியாவை பார்த்தவர், “ நீ புத்திசாலியா இருப்பனு நான் நம்புறேன் சாகித்தியா…” என்றவர் அவள் தலையில் கைவைத்து புன்னகைத்தார்.

கை மெலிதாய் நடுங்கியது. அவர் முகத்தில் என்ன கண்டானோ , மறுநொடி அவரை பார்த்தபடியே தாலியை கட்டி முடித்திருந்தான் விஷ்வேஸ்வரன்.

 

 

 

Advertisement