Advertisement


ஆயுள் கைதி 4

“மிஸஸ்.விஷ்வேஸ்வரன்…” வாய்க்குள்ளே ஒருதடவை சொல்லிப் பார்த்தாள் சாகித்தியா. கூடவே அன்று “மிஸ்.சாகித்தியா…” என்ற ஈஸ்வரின் அழைப்பு ஞாபகம் வர கேலிபுன்னகை அவள் இதழ்களில்…

பேசாமல் உள்ளே சென்று வட்டவட்ட மேஜையை சுற்றி போடப்பட்டிருந்த ஒரு நாற்காலியில் அமர்ந்து கொண்டாள். அதற்கு பிறகு தான் இயல்பாய் மூச்சு வந்தது கார்த்திக்கிற்கு! என்னதான் சாதாரணமாய் காட்டிக் கொண்டாலும் இவர்கள் இரண்டு பேரையும் வைத்துக் கொண்டு எப்போது என்ன பண்ணுவார்கள் என்று உள்ளுக்குள் உதறலுடன் சுற்றுவது அவனுக்கு தானே தெரியும்.

“ஒரு விக்கெட்டை சமாளிச்சாச்சு, இன்னும் அவன் வந்து என்ன சொல்ல போறானோ…” என்ற எண்ணத்தோடயே சுற்றிக் கொண்டிருந்தான் கார்த்திக். ஆனால் அவன் பயந்த மாதிரி எதுவுமே நடக்கவில்லை. விஷ்வேஸ்வரன் அதை கவனித்ததாக கூட காட்டிக் கொள்ளவில்லை. அவன் உள்ளே நுழைந்ததும் சலசலப்புகள் எழ, அவனிடம் வேகமாய் வந்தார் அந்த பாரீன் கம்பெனி முதலாளி.

“ஹலோ விஷ்வேஸ்வரன், உங்களை திரும்ப பார்க்கிறதுல ரொம்ப சந்தோஷம்…” என அவர் ஆங்கிலத்தில் உரையாட ஆரம்பிக்க, அங்கே பரஸ்பர முகஸ்துதிகள் நடந்தன. இடையில் சாகித்தியாவை பார்த்தான் ஈஸ்வர்.

அவன் பார்வையில் என்ன புரிந்ததோ, எழுந்து சென்று அவனருகில் நின்றாள் அவள்.அவள்தான் டிசைனர் வேலைகளின் பொறுப்பாளர் என அவரது பி.ஏ கூற,

“ஓ…உங்களை சந்திச்சதில் ரொம்ப சந்தோஷம். உங்க அலங்காரங்களை பார்க்கும் பொழுது ஒவ்வொரு இடத்துலையும் உங்க திறமை தான் தெரிஞ்சுது. உங்களை இன்னைக்கு தான் பார்க்க முடிஞ்சிருக்கு பாருங்க, நான் முக்கியமா வந்ததே உங்களை பார்த்து பாராட்டனும்னு தான்…” என்று அவர் பேச,

இதமான புன்னகையுடன் நின்று கொண்டிருந்தான் ஈஸ்வர்.

“உங்க பேரு மிஸ்..?” என அவர் கேட்க,

அவள் பதில் சொல்லுமுன் கார்த்திக் முந்தியிருந்தான். அதை கேட்டதும் எக்ஸ்ட்ரா பிரகாசம் அவரிடம்,

“ஓ.. மிஸஸ்.விஷ்வேஸ்வரன், வாட் அ சர்ப்ரைஸ்… நீங்க சொல்லவே இல்லையே! சார் தான் திறமையானவர் நினைச்சேன். பட் நீங்க ஒருத்தவங்களுக்கு ஒருத்தர் சளைச்சவங்க இல்லை போலயே, சேர்ந்து பார்க்க ரொம்ப அழகா இருக்கீங்க…” என அவர் சிலாகிக்க,

கார்த்திக்கும் அந்நேரம் அவர்களின் பொருத்தத்தை தான் ரசித்துக் கொண்டிருந்தான். இப்படி அருகில் நிற்பதெல்லாம் அரிதிலும் அரிதான தருணம் அல்லவா! அதுவும் அவளது புடவைக்கு ஏற்றாற்போல் சாம்பல் நிற சூட்டில் அவன்! ஆச்சர்யப்பட வேண்டாம். வேறு ஒன்றும் இல்லை. இருவருக்குமே ‘சென்ஸ் ஆப் ட்ரெசிங்’ கொஞ்சம் அதிகம். வெள்ளை சாம்பல் நிற அறை அலங்காரத்திற்கு பொருத்தமாய் யோசித்து உடையணிந்து இருந்தார்கள் அவ்வளவே.

பேச்சுக்கள் இவ்வாறாய் முடிந்ததும் ஈஸ்வர் மற்றவர்களை பார்க்க சென்றுவிட, சாகித்தியா அவரிடம் இருந்து விடைபெற்று கொண்டு வந்து ஓரமாய் ஒரு இருக்கையில் அமர்ந்தாள்.

அலட்டலில்லாத மெல்லிசை, நாகரீகமான மனிதர்கள் இருந்தாலும் கூட ஏனோ சாகித்தியாவிற்கு இந்த பார்ட்டி என்ற விஷயமே ஆவதில்லை. கலவையான செண்ட் மணம், பளிச் ஒளி இதெல்லாம் அவளை ஏதோ செய்யும். வந்து அமர்ந்த ஐந்து நிமிடத்திலேயே இரண்டு முறை கையை திருப்பி மணி பார்த்தாயிற்று. அரைமணி நேரத்திற்கு மேல் தாங்காது என யோசித்தவாறே சுற்றி பார்வையை சுழல விட்டுக் கொண்டிருந்தவளின் பக்கத்து நாற்காலியில் வந்தமர்ந்தான் ஒருவன். வெளிறிய தேகம், அரக்கு முடி, பழுப்பு கண்கள் என மேற்கத்திய வாடையில் இருந்தவன், இவளை பார்த்து இலகுவாய்,

“ஹாய் ஐ யம் லிவின்…” என்று கைநீட்டினான்.

ஏற்கனவே சிறிதாய் தலை தூக்கிய எரிச்சலுடன் இருந்தவளுக்கு கைக்குலுக்கவெல்லாம் மனமில்லை. அவன் கைநீட்டியதையே கவனிக்காதவள் போல சம்பிரதாயமாய் இழுத்து வைத்த புன்னகையுடன் ஹாய் சொன்னாள்.

அவன் விடுவதாக இல்லை.

“ யுவர் ஸ்வீட் நேம்..” என்றான்.

“சாகித்தியா…” என்றாள்.

“ஓ.. ரொம்ப நல்லாயிருக்கு…”என்றான் ஆங்கிலத்தில்.,

அவளது விழிகள் சுற்றத்தை பார்த்தது. எல்லோரும் அவரவர் வட்டத்தில் மூழ்கியிருந்தனர். ஈஸ்வரை சுற்றி பிசினஸ் மக்கள். அவனை பார்க்கவே முடியவில்லை. இந்த கார்த்திக் வேறு எங்கு சென்றான் என்று தெரியவில்லை. இந்த அறுவையிடம் இருந்து எப்படி தப்பிப்பது என்று பார்த்தவள் ஒருவழியும் கிட்டாததால் சலிப்புடன் தலை குனிந்து கொண்டாள்.

அவன் பாட்டிற்கு பேசினான். பேசிக்கொண்டே… இருந்தான். சாகித்தியாவிற்கு நெற்றிப் பொட்டு விண்விண் என தெறிக்க ஆரம்பித்து இருந்தது. ஒவ்வொரு பார்ட்டியிலும் இதுமாதிரி பேர்வழிகள் இருக்கத் தான் செய்யும். இதுவே வேறொரு இடமாய் இருந்திருந்தால் எதையும் யோசியாமல் முகத்தைக்காட்டி விட்டு எழுந்து சென்றிருப்பாள். இங்கே அப்படியில்லையே. அவள் இருக்கும் கம்பெனி, அவள் விருந்தினராக இருக்கும் இடத்தில் தன்னால் சலசலப்பு உண்டாவதை அவள் விரும்பவில்லை. தவிப்புடன் கண்கள் கார்த்திக்கை தேடின. ஏசியின் குளுமை வேறு தலைவலியை ஏற்ற, சூடாய் ஏதாவது குடித்தால் தேவலாம் என்றிருந்தது.

அதற்கு மேல் அவளால் முடியவில்லை.

“எக்ஸ்க்யூஸ்மி…” என்றுவிட்டு எழ எத்தனிக்க, என்ன என்று விடாமல் கேட்டான் அவன்.

“காபி குடிக்கனும், தலைவலிக்குது…” என்று விட்டு அவள் செல்ல பார்க்க,

“நான் போய் எடுத்துட்டு வரேன்…”என்று அவளை வற்புறுத்தி அமர வைத்துவிட்டு சென்றான்.

சென்றவரை சரி, காபியாவது குடிக்கலாம் என அவள் கையை தலையில் வைத்தவாறு அமர்ந்திருக்க, அவன் கொண்டு வந்து நீட்டிய ஹாட் ட்ரிங்க்ஸ்ஐ பார்த்தவள் இருக்கையில் இருந்து எழுந்தே விட்டாள்.

“சாரி! எனக்கு பிடிக்காது, இதெல்லாம் வேண்டாம்..” என்றுவிட்டு அவள் அவசரமாய் நகர, லிவின் இலகுவாய் அவள் கைபிடித்து அமரவைக்க போக, சட்டென்று கையை உதறியவள்,

“ எனக்கு இதெல்லாம் பிடிக்காது, என்னை தொடாதீங்க…” என்று முகத்தில் அடித்தமாதிரி அடிக்குரலில் சீறினாள். ஆனால் அவனுக்கு இதெல்லாம் இலகுவாய் இருந்ததோ அல்லது சுவாரஸ்யமாய் இருந்ததோ  சுற்றுப்புறத்தை சட்டை செய்யாமல் அவளை சமாதானம் செய்து கொண்டிருந்தான். எதுவும் அவள் காதில் விழவில்லை.வேகமாய் தேடிய கண்கள் ஈஸ்வரை பார்த்ததும் நின்றன. அவனும் அவளை பார்த்தபடி அவளிருந்த இடம் நோக்கி தான் வந்து கொண்டிருந்தான். ஆசுவாசமாய் ஒரு பெருமூச்சு விட்டவள்,இருகைகளையும் மேஜையில் ஊன்றி தலையை கவிழ்த்தவாறு அப்படியே அமர்ந்துவிட்டாள்.

“ஹாய்…நான் ஈஸ்வர், உங்க பெயர்…”ஈஸ்வரே வந்து பேசவும் சாகித்தியாவை மறந்து விட்டிருந்தான் லிவின்.

ஈஸ்வரின் கேள்விகளுக்கு ஆரவாரமாய் பதிலளித்தவன். பேச்சுமுடிந்து ஒருவழியாய் அங்கிருந்து கிளம்பி ஈஸ்வரை கடந்த நேரம், ‘தடால்’ என்ற சத்தத்துடன் மொத்தமாய் கீழே விழுந்திருந்தான். விழுந்த வேகத்தில் பக்கத்து மேஜையில் தாடை மோதி இரத்தம் வேறு  கசிந்தது. மொத்த இடமுமே ஒருநொடி ஸ்தம்பித்து போக முதலில் சுதாரித்தது ஈஸ்வர் தான். பதறிப்போய் லிவினை தூக்கி விட்டவன், அவன் கை பிடிக்க அவனது முகம் வலியை காட்டியது. அவனால் அந்த கையை தூக்கவே முடியவில்லை. நிலைமையை பார்த்த ஈஸ்வர் தன் பணியாளர்களை அழைத்து லிவினை ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்ல சொன்னான்.

சற்று நேரத்தில் அந்த இடம் சகஜமானது. ஆனால் அந்த களேபரங்கள் ஆரம்பித்ததில் இருந்து சாகித்தியாவின் விழிகள் ஈஸ்வரை விட்டு அகலவில்லை. அவன் வந்தது, லிவினிடம் பேசியது எல்லாம் தெரிந்தும் தலைகவிழ்ந்து தான் இருந்தாள். லிவின் விழும் சத்தம் கேட்கும் பொழுது கூட தலைபாரத்தால் மெதுவாய் தான் நிமிர்ந்து பார்க்க முடிந்தது.

அவன் தாடை கிழிந்து இரத்தம் சொட்டிய பொழுது, அவன் கை மொத்தமாய் அவன் உடம்பிற்கு கீழ் மடங்கி, அந்த கையை அவன் தூக்க முடியாமல் தவித்தபொழுது ! சரேலென்று ஈஸ்வரின் முகத்தை பார்த்தாள் அவள். நிர்மலமாய் இருந்தது அவன் முகம்.  அதற்குப்பின் பார்வையை அவனைவிட்டு விலக்கவே இல்லை அவள். லிவினை அனுப்பிவிட்டு அவளை பார்க்க, பார்வையை விலக்கியவள், பழையபடியே தலையை கவிழ்த்துக் கொண்டாள்.

சில நொடிகளில் “மேம்…” என்ற சத்தத்தில் நிமிர,

பணியாள் மூலமாய் வந்திருந்தது ஆவி பறக்கும் காபி. சுற்றத்தை பார்த்தவாறே மெல்லமெல்ல காபியை அருந்தினாள். சூடான காபி இதமாய் இருந்தது. ஆனால் தலைபாரம் மட்டும் குறைவதாய் இல்லை. ஆட்கள் ஓரளவுக்கு குறைந்திருக்க கிளம்பிவிடலாம் என்ற நினைப்புடன் எழுந்தவளுக்கு தலை சுற்றுவது போலிருக்க சட்டென்று அமர்ந்து கொண்டாள்.

தலைவலியுடன் இன்னும் அதிகமாய் சுற்றி இருந்த செண்ட் மணமும் தாக்க, குடலை பிரட்டுவது போலிருக்க வேக எட்டுகளுடன் வாஷ்ரூமிற்கு சென்றாள். அவளுக்கு இது ஒரு பிரச்சனை. தலைவலி வரும்போதெல்லாம் குடலே வெளிவரும் அளவிற்கு வாந்தி எடுத்துவிடுவாள். இன்றும் மொத்தமாய் எடுத்து முடித்தவளுக்கு கால்கள் தள்ளாட கண்கள் இருட்டியது.

திரையிடப்பட்ட திரைச்சீலைகளும் ஏசியின் குளுமையுமாய் ஏகந்தமாய் இருந்தது அந்த அறை! மெதுவாய் திரும்பியவள் அருகிலிருந்த தலையணையில் சொகுசாய் புதைந்து கொண்டாள். அந்த சாட்டின் போர்வையை வாகாய் இழுத்து போர்த்திக் கொண்டவளுக்கு கொஞ்சமாய் சுரணை வர மெல்ல கண்விழித்து பார்த்தாள். பாதிமங்கிய இருளிலிருந்த அந்த அறையில் சரியாய் எதுவும் தெரியவில்லை. கண்களை லேசாய் தேய்த்து விட்டு டேபிளில் இருந்த கடிகாரத்தை பார்த்தால் மணி எட்டு. இரவா, காலையா என புரியவில்லை. யோசித்து பார்த்தாள், கடைசியாய் பாத்ரூமில் கண்கள் இருட்டியதே! யோசனையில் புருவம் சுருங்க, சட்டென்று எழுந்து அமர்ந்தாள். எதிரில் இருந்த சுவரில் புன்னகைத்தபடி புகைப்படமாய் நின்றிருந்தான் விஷ்வேஸ்வரன்!.

Advertisement