Advertisement

ஆயுள் கைதி 20.1

அதன்பின் முழுவதுமாய் சகி ஜெபமே!

சிணுங்களுடன் ஈஸ்வரிடமிருந்து விலகினாள் சாகித்தியா. அவனுக்கு அவளை விட மனமே இல்லை. கிளம்பியிருந்தவளை விட்டு விலகாமல் கைவளைவிலேயே வைத்திருந்தான். ஒருவழியாக கிளம்பி வெளியே வந்து அவள் முன்னே நடக்க,

பளிச்சென்ற முறுவலுடன் அவள் பின்னலை பிடித்து இழுத்திருந்தான் ஈஸ்வரன்!
“ஸ்….” என்று பின்னே வந்தவள், இந்த எதிர்பாரா நிகழ்வில் விழிக்க,

“அன்னைக்கு எஸ்டேட் சுத்தி காட்டும் போதே தோணுச்சு….” என்று கண்சிமிட்ட,

பே என்று தான் பார்த்திருந்தாள் சாகித்தியா.

“என்னாச்சு…” என்று அவன் கைத்தொட, நடப்பிற்கு வந்தவளாய்,

“உண்மையாவே இது விஷ்வேஸ்வரன் தானா…” என்றாள் சிரிப்புடன்,

“சந்தேகத்தை தீர்க்கட்டுமா…” என்று அவன் நெருங்கி வர,

அழகாய் சிவந்தவள்,
“போகலாம் வாங்க…” என்று முணுமுணுத்து விட்டு ஜீப்பில் ஓடி ஏறிக்கொண்டாள்.

“எனக்கும் தான் சந்தேகமா இருக்கு , என்னைய ஹோட்டல்ல லெப்ட் ரைட் வாங்குற சாகித்தியா வா இதுன்னு…” என்றவன் ரசனையுடன் கூற,

“ம்ஹூம்… இது உங்க வீட்டுக்காரம்மா சார்….” என்றாள் அவனை விட ரசித்து…

அவள் பாவனையில் மொத்தமாய் தன்னை தொலைத்தவன்,
“நல்லாருக்கே….” என்று பேச்சை வளர்க்க,அவனை ஒருவழியாய் சமாளித்து வண்டியை எடுக்க வைத்திருந்தாள்.

மாணிக்கவேலின் வீட்டின் முன் ஜீப்பை நிறுத்திவிட்டு இறங்கியவன் முன்னே நடக்க, அங்கு அவனுக்காக காத்திருந்த கார்த்திக் அவனிடம் ஒரு பைலை கொடுத்ததும் வாங்கிக் கொண்டான், நேராய் மாணிக்கவேலிடம் சென்று

“சார் நான் இப்போ ஊருக்கு கிளம்பனும், அதுனால சுருக்கமா விஷயத்தை சொல்லிடுறேன், இந்தாங்க நம்ம பிசினஸ் ஒப்பந்தம், நான் சைன் பண்ணிட்டேன், நீங்க படிச்சிட்டு பண்ணிடுங்க, நான் அங்கே போனதும் இங்க வேலையாட்களை அனுப்புறேன், கார்த்திக் நேரா வந்து பார்த்துக்குவான், அப்புறம் என் ஓய்ப்பையும் கூட்டிட்டு கிளம்பறேன்…” என்று சாகித்தியாவை பார்க்க,

அவள் மாணிக்கவேலை நோக்கி ,
“எல்லாத்துக்கும் ரொம்ப நன்றி அங்கிள், என்னைய உங்க பொண்ணு மாதிரி பாதுகாப்பா பார்த்துகிட்டிங்க, நான் இதப்பத்தி சொல்லலையேனு தப்பா எடுத்துக்காதீங்க அங்கிள் , சூழ்நிலை அப்படி….” என்று தயக்கத்துடன் கூற,

“அட விடுடாமா, எனக்கு இப்போ எவ்வளவு சந்தோஷமா இருக்கு தெரியுமா…எனக்கு முன்னாடியே தோனிட்டே இருக்கும் தெரியுமா, உன்னைய பார்த்ததுமே பெரிய இடத்து பொண்ணா தெரிஞ்சுது, ஏதோ பிரச்சினைனு புரிஞ்சுது, அப்புறம் இவரையும் உன்னையும் பார்த்தப்புறம் ஒரு யூகம் வந்துச்சு, நான் நினைச்ச மாதிரி தான்னு ரொம்ப சந்தோஷமா இருக்கு… என்ன பிரச்சனையா இருந்தாலும் அவர் கூடவே இருமா,பாவம் இப்படி மனுஷனை அலைய விடாத…” என்று அவர் சொல்ல, சங்கடமாய் அவள் புன்னகைக்க, ஈஸ்வரோ மென்னகையுடன் அவளை பார்த்து கொண்டிருந்தான்.

மஞ்சரி திறந்த வாய் மூடாமல் இருவரையும் பார்த்து கொண்டிருந்தாள். அவளை பார்த்து கிளம்பும் விதமாய் தலையசைத்தவள், மாணிக்கவேலிடம்,

“சரி அங்கிள் போயிட்டு வரேன்….” என்றாள்.

“சும்மா பேச்சுக்காக சொல்லக்கூடாது, கண்டிப்பா பார்க்க வரனும்…” என்றவர் சொல்ல,

“கண்டிப்பா வருவோம் சார்…” என்றிருந்தான் ஈஸ்வர்.

அதன்பின் இருவரும் சொல்லிக்கொண்டு வெளியே வர, கார்த்திக் முன்னே நடக்கவும், சாகித்தியாவிற்கு பின்னே நடந்து வந்த ஈஸ்வர் வேகமாய் வந்து அவளை தோளோடு இடித்தபடி முன்னே நடக்க,

“ என்னமோ ஆகிடுச்சு விஷ்வா உங்களுக்கு…” என்று சீரியஸாக முகத்தை வைத்து சொன்னவள், சட்டென்று அவனை மாதிரியே இடித்துவிட்டு முன்னே வந்திருந்தாள். அவன் சத்தமாய் சிரிக்க,

“இதுக்கெல்லாம் உங்க ஓய்ப் ஒன்னும் சொல்ல மாட்டாங்களா சார்…”என்று சிரித்துக்கொண்டே விளையாட்டாய் கேட்பது போல் கேட்டு விட்டிருந்தான் எதிரே வந்த குமரன்.

குமரனின் நல்ல நேரம் ஈஸ்வரின் மனநிலை அற்புதமாய் இருந்தது! அவனை பார்த்தவன், பின் சாகித்தியாவிடம் நெருங்கி,

“ ஏதாவது சொல்லுவியாமா…” என்றான் சிரிப்புடன், அவனை புரிந்தவளாய் அவள் முறுவலுடன் தலையாட்ட,

“ ஒன்னும் சொல்ல மாட்டாங்களாம் குமரன்…” என்று விட்டு அவனை தாண்டி முன்னே நடந்திருந்தான். அங்கே என்ன நடந்தது என்று புரியவே சில நொடிகள் பிடித்தது குமரனுக்கு! விஷயம் புரிந்ததும்,

“என்ன சார் சொல்றீங்க…, என்றான் விழிகள் விரிய,

“பை குமரன்…” என்று காரில் ஏறியிருந்தான் ஈஸ்வரன். சாகித்தியா அவனை நிமிர்ந்து கூட பார்க்கவில்லை. கார்த்திக் பின்னால் வருவதாக இருக்க, இருவர் மட்டுமே காரில்…

வழிமுழுக்க அமைதியான பயணம். இடையில் ஆங்காங்கே நிறுத்தினாலும் கார் சீரான வேகத்தில் சென்று கொண்டிருந்தது. லேசான உறக்கத்தில் இருந்தவளை எழுப்பினான் ஈஸ்வரன்.

தூக்கத்தில் இருந்து விழித்தவள் அங்குமிங்கும் பார்க்க,

“கிட்ட வந்துட்டோம், வா ஏதாவது சாப்பிடு…” என ஹோட்டலுக்கு அழைத்து போனான் அவன்.

உண்டபின் லேசாய் முகம் கழுவி தலையை மட்டும் ஒதுக்கி கொண்டாள், அவன் காரை விசாலாட்சியின் வீட்டின் முன் நிறுத்திவிட்டு அவளை பார்த்தபோதும் எதுவும் கேட்கவில்லை! அவள் கைபிடித்து வீட்டிற்குள் அழைத்து செல்லும்போது அமைதியாய் பின் தொடர்ந்தாள்.

அங்கே இருவரையும் கண்ட ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு விதமான மனநிலை! சாகித்தியாவின் கையை விடாமலேயே அவன் முன்னே வர, பார்வதிக்கு ஆனந்த கண்ணீரே வந்திருந்தது.

தன் கையிலிருந்த பைலை பிரித்தவன், உள்ளிருந்து சில பேப்பர்களை எடுத்து அங்கிருந்த டீபாயில் வைத்தான்.

“இனி விவி ஹோட்டல்ஸ்க்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை, என்னோட இடத்தில் இருந்து நான் ரிசைன் பண்றேன்… அதுக்கான பேப்பர் இது…” என்றான் . சத்தியமூர்த்தி ஏதோ பேச வர,

“பெரியப்பா…நான் முடிச்சிடுறேன்…” என்று விட்டு,

“இது ஈஸ்வர் ஹோட்டல்ஸ்க்கும் விவி ஹோட்டால்ஸ்க்கும் எந்த சம்பந்தமும் இல்லைன்னு, தெளிவா சொல்லியிருக்க பேப்பர், இது மிஸ்டர் விஸ்வநாதன் எனக்கு எழுதிவச்சது, அப்புறம் என் மனைவியோட சொத்துக்கு என்னை கார்டியனா போட்டது, ரெண்டும் எனக்கு வேணாம்னு இருக்க பேப்பர்….” என்றவன்

ஒரு பாண்ட் பேப்பரை எடுத்து சாகித்தியாவிடம் நீட்ட, அதில் முழுவதும் பார்வையை ஓட்டியவள்,பேப்பரின் கடைசியில் கையெழுத்திட்டாள்.
அதை வாங்கியவன்,
“இது விஷ்வநாதன் சாகித்தியாவிற்கு எழுதி வச்ச சொத்துக்கள் எதுவும் வேண்டாம்னு எழுதி இருக்க பேப்பர்…” என்று அடுத்தடுத்து பாண்ட் பேப்பர்களை அடுக்கி விட்டு,

பார்வதியிடம் திரும்பி,
“அம்மா, அப்பாவை கூட்டிட்டு எப்போ வேணாலும் நீ என்னைய வந்து பார்த்துட்டு போகலாம், முதல்ல இருந்த வீடு தெரியும் தானே, அதே வீடு தான்…சாகித்தியா இல்லம்னு இருக்கும் முன்னாடி…” என்றுவிட்டு, விசாலட்சியை ஒரு பார்வை பார்த்தவன்,

“என்கிட்ட பேசனும், பார்க்கனும்னா சொல்லுங்க பெரியப்பா…என் நம்பர் அதேதான்…” என்று விட்டு சாகித்தியாவின் கையை பிடித்தவாறு விடுவிடுவென வெளியே வந்து காரை எடுத்திருந்தான்.

நேர்சாலையில் சென்று கொண்டிருந்தவன் வண்டியை நிறுத்திவிட்டு சாகித்தியாவிடம் திரும்பி,

“நான் செஞ்சதுல உனக்கு ஏதாவது பிடிக்கலையா…” என்றான்.

“அவங்க பேசுனது எல்லாத்துக்கும் திரும்பி பேசாம, குத்தி காட்டாம,
இதை கொடுத்து வந்தது ரொம்ப பிடிச்சிருக்கு…. இது எல்லாருக்கும் வராது…” என்று புன்னகையுடன் பேசியவள், அவன் கையை தன் கைக்குள் கோர்த்து கொண்டாள்.

சற்று தொலைவில் இருந்த குல்பி ஐஸ் வண்டி கண்ணில் பட,

“வாங்கி தாங்க…” என்றாள் கைநீட்டி, வண்டியில் இருந்து இறங்கி சென்றவன், கையில் ஒரேயொரு குல்பியோடு திரும்பி வந்தான்.

“உங்களுக்கு வேணாமா…” என்றதும்,

“இந்த பனில எதுக்கு…நீ சாப்பிடு…” என்று கொடுத்தவன் அவள் ஒன்றிரண்டு வாய் ரசித்து உண்பதை பார்த்து விட்டு அவளதையே வாங்கி கடித்தான்.

அவன் ஐஸை பல்லால் கடித்ததில் இவளுக்கு பல் கூச,
“ஸ்….” என்றவள்,

“பல் கூசலையா…” என்றாள்.

ம்ஹீம்…என்றவன் மேலும் இரண்டுதடவை கடிக்க, செல்லமாய் முறைத்தவள்,

“இதுதான் பனியில ஐஸ்க்ரீம் சாப்பிடாம இருக்கதா… வேணும்னா போய் வாங்கிக்கோங்க… “என்று விட்டு திரும்ப வாங்கிக்கொள்ள,

“உனக்கு மட்டும் பனியில்லையா… முழுசா சாப்பிட்டா சளி பிடிக்கும்…எனக்கு போதும்…நீ சாப்பிடு…” என்று விட்டு அவள் சாப்பிட்டு முடிக்க காத்திருந்தவன், டாஸ்போர்டில் இருந்து டிஸ்யூ பேப்பரை எடுத்து நீட்டினான்.

முறுவலுடன் வாங்கிக்கொண்டவளிடம்,
“சகி நீ ஈஸ்வர் ஹோட்டல்ஸை பார்த்துக்கிறியா…” எனக் கேட்க,

“நீங்க…” என்றாள் உடனே,

“நானும் இருக்கேன் தான், நான் நம்ம புது பிசினஸை பார்ப்பேன், இதையும் பார்க்கலாம், அதான் நீயும் பார்த்துகிறியா…” எனக் கேட்க,

“உங்களுக்கு இரண்டையும் பார்க்க சிரமமா இருக்குமா…” என்றாள் மீண்டும், ஒட்டுமொத்த விவி ஹோட்டல்ஸ் சேர்த்து ஈஸ்வர் ஹோட்டல்ஸையும் பார்த்தவனிடம்,

“நன்றாய் அவள் புறம் திரும்பி அமர்ந்தவன்,
“நீ என்ன நினைக்கிற…” என்றான்.

“நான் கொஞ்ச நாள் வீட்டுல இருக்கட்டுமா…” என்றாள்.

“உனக்கு எது பிடிக்குமோ… அதுதான்டா…நீ சொல்றதுதான்… ஆனா வீட்டுல போர் அடிக்காத உனக்கு…”என்றவன் கேட்க,

“ம் இல்ல, எனக்கு கொஞ்சநாள் வீட்டில இருந்து என் ஹஸ்பண்ட்க்கு சமைச்சு கொடுத்து, பார்த்துகிட்டு வீட்டை பொறுப்பா பார்த்துக்கனும் தோணுது…” என்றாள்.

“ ஹஸ்பண்டை பார்த்துக்கனுமா…. நல்ல முடிவு தான்…” சிரித்தவன்,

“ஆனா எப்போ ஹோட்டல் வரனும் தோணுச்சுனாலும் வந்திரு, உன்னோட வேலையில நீ எவ்ளோ யூனிக் தெரியுமா… என்னையே கேள்வி கேட்டு திணறடிப்ப… அதைவிட உனக்கு உன்னோட கரியர் முக்கியம் சகி…எப்போ வேணாலும் சொல்லு… நம்ம சமையல்,வீடு பார்த்துக்க முதலில மாதிரி ஆள் வச்சுக்கலாம்…” என்றவனை
பார்த்து காதலுடன் தலையசைத்தாள்.

“சரி போகலாமா…எனக்கு இப்போதான் சீக்கிரமா வீட்டுக்கு போகனும் போல இருக்கு…” என்று அவன் சொன்னதும் ஏன் என்று பார்த்தவளிடம்,

“ நீ எப்படி ஹஸ்பண்டை பார்த்துகிறன்னு பார்க்கனும்ல…” என்று அவன் கிசுகிசுப்பாய் சொல்ல, சிவந்த முகத்துடன் அவன் தோளில் முகம் புதைத்தவள் பற்களால் அங்கே பதம்பார்த்து, அவன் இடுப்பிலும் நறுக்கென்று கிள்ளி வைத்திருக்க,

“ அடியேய் ராட்சசி….” என்று மெலிதாய் அலறினான். சத்தமாய் அவள் சிரிக்க, அவனுக்கும் சிரிப்பு வந்தது…

அவளோடு சேர்ந்து சிரித்தவாறு அவளை நிமிர்த்தி தலையில் முட்டியவன்,
“தேங்க்ஸ்….” என்றான்.
“எதுக்கு ….” என்றவள் கேட்க,

“எல்லாத்துக்கும்….” என்றான் உணர்ந்து,

அவள் முறைக்க,
“சரி இனிமே சொல்லமாட்டேன், இதை மட்டும் வச்சுக்கோ….” என்றுவிட்டு புன்னகையுடன் காரைக் கிளப்ப,

பேசாமல் விழிகளை மூடிக்கொண்டு அவன் தோள்களில் சாய்ந்து கொண்டாள் அவனது சகி….

முற்றும்….

Advertisement