Advertisement

ஆயுள் கைதி 2

அவன் எதைக் கேட்கிறான் என்று அவளுக்கு புரியாமலில்லை! ஒரு நொடி மௌனமாய் இருந்தவள் மறுநொடி நிமிர்ந்து,

“சார் ரொம்ப சூடா இருந்தீங்களா…அதான் காபியில கொஞ்சம் ஐஸ்க்யூப்ஸ் போட சொன்னேன்…” என்றாள் புன்னகையுடன்,

“நான் எதைக் கேட்கிறேன்னு உனக்கு தெரியும்…” பட்டென்று வந்தது பதில்.

புன்னகை மறைய மூச்சுக்காற்றை

“உஃப்..” என்று வாய்வழியே ஊதி தள்ளியவள்,

“ நான் ஏதாவது தப்பு பண்ணினேனா…” என்றாள் அவனை பார்த்து,

“நீ தப்பு பண்ணினனு நான் சொல்லலையே… ஆனால் இவ்வளவு கடுமை தேவையா ஸ்ரீ….” என்றான் அவள் முகம் பார்த்து,

கடுமை! கசப்பான புன்னகை தோன்றியது அவள் இதழ்களில். காபியின் கசப்பை ஒரே மூச்சில் விழுங்கியவள், இதழ்களை அழுந்த துடைத்து கொண்டு கடலை திரும்பி வெறித்தாள்.

அவளது நிலை பார்த்து வருந்தியவன், “ஸ்ரீ….” என்றான் மென்மையாய்…

“ஐ யம் ஓகே கார்த்திக்….” நிர்மலமாய் வந்தது அவள் குரல்,

எந்த நிலையில் அவள் தன்னை பெயர் சொல்லி அழைப்பாள் என்று உணர்ந்தவனும் அடுத்து எதுவும் சொல்லாமல் மௌனமாகி விட்டான். சில நிமிடங்கள் அமைதியாய் கரைய,

“ சுந்தர் பாவம் ஸ்ரீ…” சட்டென்று வந்த குரலில் கேள்வியாய் திரும்பி பார்த்தாள்.

“ரொம்ப பதட்டப் படுத்துற அவனை..” சிரிப்புடன் அவன் கூற,

அவனது முயற்சி புரிந்தாலும் உண்மையாகவே சிரிப்பு வர,

“பழகிடும்….” என்று சொன்னதோடு

“சரி சரி கிளம்பு, நீ பாட்டிற்கு இவ்வளவு நேரம் இங்க இருக்க, உன் ஆள் கிட்டயிருந்து அழைப்பு வர போகுது…” என்றவள் சொல்ல,

“என் ஆளா…” டேபிளில் வைத்திருந்த முழங்கையில் கன்னத்தை வைத்து கொண்டு பாவனையாய் அவன் கேட்ட அடுத்த நொடி,

“ ஈஸ்வர் காலிங்…” எழுத்துக்கள் ஒளிர சட்டென்று சிரித்து விட்டாள் சாகித்தியா… கார்த்திக்கின் இதழ்களும் புன்னகையை பூசிக் கொண்டன.

அந்த பெரிய வீட்டிற்குள் ஈஸ்வரும் கார்த்திக்கும் நுழையும் பொழுது ஹாலில் அந்த வரவை எதிர்பார்த்த வகையில் விசாலாட்சி, அவரது மூத்தமகன் சத்தியமூர்த்தி அவரது மனைவி பைரவி, அடுத்து ஈஸ்வரின் பெற்றோர் சிவானந்தன், பார்வதி,, சித்தப்பா சதாசிவம் அவர் குடும்பம் மகன் கௌசிக். அத்தை பாக்கியவதி அவர் கணவன் என மொத்த குடும்பமும் ஆஜராகி இருந்தனர்.

யாரையும் நிமிர்ந்து பார்க்கவில்லை அவன். நேராய் நடந்து சென்று காலியாய் இருந்த சோபாவில் அமர்ந்தவன், கார்த்திக்கை பார்க்க அவனும் அருகில் அமர்ந்து கொண்டான்.

எல்லார் முகத்தையும் பார்த்த கார்த்திக்கிற்கு “ம்…கிளப்புங்கள்…” என்ற வடிவேல் குரல் உள்ளிருந்து கேட்க வாய்வரை வந்த புன்னகையை கஷ்டப்பட்டு விழுங்கிவிட்டு நிமிர்ந்து கொண்டான்.

அவன் நினைத்த மாதிரியே ஆரம்பித்தார் விசாலாட்சி,

“என்னப்பா நடந்துச்சு இன்னைக்கு ஹோட்டல்ல…” என்று அவர் ஆரம்பித்த பொழுதே,

“கேட்க வந்ததை கேளுங்க பாட்டி…” தெளிவாய் வந்தது ஈஸ்வரின் குரல்.

“சரி நேரடியாவே கேட்கிறேன், நம்ம கௌசிக்கை இன்னைக்கு அவ நிக்க வைச்சு கேள்வி கேட்டாளாமே, உன்னையும் மதிக்கலையாமே…” என்று அவர் கோபமாய் கேட்க,

“ அங்க தப்பாவோ, இல்லை யாரையும் பழிவாங்கவோ எதுவும் அவங்க பேசலை ,ஹோட்டல் நல்லதுக்காக ப்ராஜெக்ட் இன்னும் நல்லா செய்றதுக்காக தான் சொன்னாங்க…” என்று பதில் கூறியிருந்தான் கார்த்திக்.

அவனை முறைத்த விசாலாட்சி வேறெதுவும் சொல்லாமல் காரியத்தில் கண்ணாய் ஈஸ்வரிடம், “இதுக்கு தான் அவளை ஹோட்டல் உள்ள விட்டதே தப்பு தம்பி…” என்று மேலும் பேச,

“அவங்க உண்மையாவே கம்பெனிக்காக மட்டும் தான் பேசினாங்க, ப்ரசன்டேஷன் முடிவு அவ்வளவு ஆழமா இல்லை, மத்தவங்க பேசாமா இருந்தபோது அவங்க வெளிப்படையா சொன்னாங்க அவ்வளவு தான்..” என்று கார்த்திக் அழுத்தமாய் கூற,

அதற்குமேல் பொறுக்காமல் சிவானந்தன் ,

“என்ன ஈஸ்வர் , நீ எதுவுமே சொல்லாம இருக்கியே…, என கேட்க,

“கம்பெனி விஷயம் தானே பேசறீங்க அதுக்கு கம்பெனி செகரட்டரி தானே பதில் சொல்லணும்…” என்று இலகுவாய் பதில் சொன்னவன் பேச்சு முடிந்ததென எழுந்து கொள்ள,

சட்டென்று மற்றதெல்லாம் மறந்தவராய்,

“சாப்பிடு தம்பி…” என்றார் விசாலாட்சி.  ‘இரு’ என்ற வார்த்தையை ஏதோவொன்று உள்ளுக்குள்ளேயே பிடித்திழுத்து கொண்டது.

கூர்மையாய் அவரை பார்த்தவன்,

“அன்னைக்கு இருந்த காரணங்கள் எதுவும் மாறலை பாட்டி, அப்படியே தான் இருக்கு…” என்று விட்டு விடுவிடுவென வெளியெ நடந்து விட்டான்.

“ஒரு ப்ரசென்டேஷனை ஒழுங்கா பண்ண முடியலை, இங்க வந்து எல்லார்கிட்டையும் கோர்த்து விட்டுட்டு ஸ்கூல் பையன் மாதிரி அப்பா பக்கத்திலையா நிக்கிற..” என்று மனதிற்குள் ஏகத்திற்கும் அர்ச்சித்தபடி ஏளனமாய் கௌசிக்கை ஒரு பார்வை பார்த்த கார்த்திக் ஈஸ்வரின் பின் நடந்து சென்று காரை எடுத்தான்.

அவர்களது ஆடி மதில்சுவரை தாண்டிய ஓரிரு நொடிகளில் உள்ளுக்குள் நுழைந்தது இன்னொரு கார்.

காரிலிருந்து இறங்கியவள் ஈஸ்வரின் காரை பார்த்து விட்டு வேகமாய் உள்ளே செல்ல, அங்கிருந்தவர்களை பார்த்து விட்டு வேகத்தை குறைத்தாள்.

“என்ன சஞ்சனா போன வேலையெல்லாம் முடிஞ்சுதா…” விசாலாட்சி கேட்க,

“ம் பாட்டி முடிஞ்சுது…” என்றாள்

“சரி குளிச்சிட்டு வா சாப்பிடலாம்..” என்று விட்டு அவர் நகர, மற்றவர்களும் கலைய, மெதுவாய் அவள் அன்னை பாக்கியவதியிடம் வந்து நின்றவள்,

“அம்மா அத்தான் எதுக்கு வந்திட்டு போறாரு…” என்று கிசுகிசுக்க ,பேசாதே என்று சைகை செய்தவர் அறைபக்கம் கண் காட்டிவிட்டு முன் நடக்க, அவர் பின்னே நடந்தாள் அவள்.

மதியவேளை. சலசலப்பில்லாத அமைதியை கெடுத்தவாறு சட்டென்று கதவை திறந்து கொண்டு உள் நுழைந்தாள் சஞ்சனா. குப்பென்று வீசிய செண்ட் மணத்திலேயே யாரென்று தெரிந்து விட முன்னிருந்த கணினியில் இருந்து ஓரிரு நொடிகள் கழித்தே பார்வையை திருப்பியவள் என்னவென்று அவளை பார்க்க,

“நேத்து என் அத்தானை வம்பிழுத்தியாமே…என்ன நினைச்சிட்டு இருக்க உன் மனசில…” என்று சஞ்சனா கத்த,

சட்டென்று எழுந்த சாகித்தியா வேகமாக தன் முந்தானையை உதறி அச்சச்சோ எனவும்,

“என்ன…” என்றாள் சஞ்சனா கடுப்புடன்,

“அது…உன் அத்தானை இழுத்து இதில தான் முடிஞ்சு வைச்சிருந்தேன், காணோமே…” என்று பதட்டத்துடன் சொல்ல,

“ஏய்…..” என்று உறுமியிருந்தாள் சஞ்சனா

“ஷ்….” என்று வாய்மேல் விரல் வைத்து சொன்னவள், கால் மேல் கால் போட்டு தன்னிருக்கையில் சாய்ந்து அமர்ந்து, அவளை ஏளனமாய் பார்க்க, கொதிநிலைக்கே சென்றிருந்தாள் சஞ்சனா.

“முடிஞ்சு வச்சிருக்கேன்னு தானடி ஆடுற, எப்போ எதை எப்படி பறிக்கணும்னு எனக்கு தெரியும்…” என்று சஞ்சனா கத்த,

அதுவரை இருந்த இளக்கம் மாறி முகம் இறுக, “கெட் அவுட்…” என்றாள் சாகித்தியா.

அந்நேரம் சுந்தர் கதவை தட்டிவிட்டு உள்ளே வர,

“ஏன் சுந்தர், இந்த அப்பயின்ட்மெண்ட், பெர்மிஷன் இதற்கெல்லாம் அர்த்தம் தெரியுமா…” என்று அழுத்தமாய் கேட்டாள் அவள்.

அவன் திருதிருவென விழிக்க, அதை பொருட்படுத்தாமல்

“ என் டேபிளில் உள்ள ஐபி போன்ல செக்யூரிட்டிக்கு கனெக்ட் பண்ணலாம் இல்லையா சுந்தர்…” என்று அவள் அர்த்தபார்வை பார்க்க,

விஷயம் புரிந்தவனாய் “யெஸ் மேம்..” என்று முன் அடி எடுத்து வைத்தான்.

முகம் இரத்தமென சிவக்க, சட்டென்று வெளியே சென்றாள் சஞ்சனா. வேகமாய் வெளியே சென்றவள் எதிர்ப்பட்ட கார்த்திக்கிடம்,

“என் அத்தான் எங்க இருக்காங்க…” என்று கேட்க,

ஒரு பைலை குனிந்தபடி பார்த்து கொண்டு வந்தவன் ,

“அப்படி யாரும் இங்க இல்லை…” சட்டென்று கேட்ட கேள்விக்கு நிமிராமல் பதில் சொல்லிவிட்டு அவளை தாண்டி சென்றான்.

ஒரு நிமிடம் என்ன நடந்ததென்றே விளங்கவில்லை அவளுக்கு! புரிந்தபின்,

“ஏய் என்ன திமிரா…” என்று கத்த,

நின்று நிதானாமாய் திரும்பி அவளை பார்த்தான். பார்வையில் மருந்துக்கும் பணிவு இல்லை. அந்த அர்த்தம் பொதிந்த பார்வையில் இருந்து கவனத்தை திருப்பியவள், விஷயத்திற்கு வந்தாள்.

“ ஈஸ்வர் அத்தான் எங்க இருக்காங்க…” என்று

“அப்பாயின்ட்மெண்ட் இருக்கா…” அவனும் நேராய் கேட்டான்.

அதற்குமேல் அவளால் பொறுமையை கடைபிடிக்க முடியவில்லை.

“நீ இப்படி பேசிறதெல்லாம் ஒருநாள் கண்டிப்பா அத்தான் கிட்ட சொல்லி உன் சீட்டை கிழிக்க சொல்லுவேன் தெரியுமா…” என்று இயல்பை விட்டுவிட்டு அவள் கத்த

விஷ்வேஸ்வரனின் அறைபக்கம் கைகாட்டியவன்,

“தாராளமாய்…” என்றுவிட்டு திரும்ப,

அங்கே நடப்பதை கண்களை விரித்து பார்த்துக் கொண்டிருந்த சுந்தரை கண்டதும்,

“இவன் வேற…” என்று உள்ளுக்குள் சலித்துக் கொண்டு மெல்லிய சிரிப்புடன் கடந்து விட்டான்.

அவன் நகர்ந்த பின்னும் அதே இடத்தில் நின்றிருந்தவளுக்கு கோபத்தை கட்டு படுத்தவே முடியவில்லை.

“ரெண்டு பேரும் சேர்ந்துகிட்டு ஆட்டமா ஆடுறீங்க… சீக்கிரமே இதை எல்லாம் ஒரு முடிவுக்கு கொண்டு வரேன்…” என தனக்குள் பொறுமியவள் ஈஸ்வரின் அறைபக்கம் ஒரு தடவை பார்த்துவிட்டு பேசாமல் வெளியே நடந்துவிட்டாள். என்னதான் வாய் பேசினாலும் தைரியமெல்லாம் வீட்டினரோடு இருக்கும் பொழுது தான். சும்மாவே பார்வையாலேயே எரித்து விடுவான். இங்கே தனியே! அதுவும் அலுவலக நேரத்தில்! அவளாவது பேச்சோடு நிறுத்தினாள். இவன் கன்னம் பழுக்க அல்லவா வைத்து விடுவான்! 

சஞ்சனா வந்துவிட்டு போனதில் இருந்து மன இறுக்கத்துடனே வேலை பார்த்தவளுக்கு அதற்கு மேல் முடியவில்லை. கிளம்பலாம் என்று மூடிவைத்து விட்டு எழுந்தவள்,எழுந்த வேகத்திலேயே தொப்பென அமர்ந்தாள். எங்கே போவது…வீட்டிற்க்கா…! விரக்தியான சிரிப்பொன்று வந்து போனது இதழ்களில்…

“என்னை மதிக்கமா மத்தவங்க தான் முக்கியம்னு போனவளுக்கு இனிமேல் நான் அப்பாவும் இல்லை, அவள் எனக்கு மகளும் இல்லை…” காதில் ஒலித்தது அவள் தந்தையின் குரல்.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Advertisement