Advertisement

ஆயுள் கைதி 18

தன்னைத்தான் அழைக்கிறான் என திடுக்கிட்டு நிமிர்ந்தவளுக்கு விஷயம் உரைக்கவே ஓரிரு நொடிகள் பிடிபட்டது. தெரிந்த பின்போ அங்கு நிற்பது பெரும் அவஸ்தையாய் போனது. அவளால் இயல்பாய் இருக்கவே முடியவில்லை. அவனை கட்டிக்கொள்ளும் ஆவலை கஷ்டப்பட்டு அடக்கியவள், அதை திசை திருப்பும் விதமாய், மாணிக்கவேலிடம்,

“கடைவீதிக்கு போய் சரக்கு இறக்கிட்டு பணம் வாங்கிட்டு வந்திரவா அங்கிள்…”என்றாள்.

“ம்…சரிமா, போய்ட்டு இருட்டுக்குள்ள திரும்புங்க, சார் நீங்களும் போய் கடைவீதியை பார்த்துட்டு வர்றீங்களா ….” என ஈஸ்வரிடம் கேட்க,

“கண்டிப்பா சார்…” என்றான்.

அவளது ஸ்கூட்டியை தொடர்ந்து அவனது காரையும் மாணிக்கவேலின் வீட்டிலேயே நிறுத்திய பின்  ஜீப்பில் பின்னால் மூட்டைகளை போட்டுக்கொண்டு குமரன், சூப்ரவைசர் ஏறிக்கொள்ள ஈஸ்வர் கேள்வியாய் சாகித்தியாவை பார்த்தான்.

“நீங்களும் ஜீப்பிலேயே அங்க வந்திடுங்க… நான் பஸ்ல வந்திருவேன்…” என்று விட்டு சிறிது தூரம் நடந்து அந்த வளைவு ரோட்டின் முடிவில் நின்று கொண்டாள் சாகித்தியா.

அவர்களது ஜீப் சென்று பத்து நிமிடத்திற்குப் பிறகு அந்த மினிபஸ் மெதுவாய் வந்து நின்றது. அவளை பார்த்ததும் ஈஸ்வர் அவள்பக்கம் சென்று அருகில் நடக்க, அவர்கள் வழக்கமாய் சரக்கு போடும் கடைகளுக்கு மூட்டையை இறக்கிவிட்டு அவர்களிடம் பணம் வாங்கிக்கொண்டு நடந்தாள் அவள்.

“சரக்கு இறக்குறதுன்னு சொன்னதும் கொஞ்சம் கொஞ்சமா ‘ரீடையில்’ விற்பனைக்குன்னு நினைச்சேன்.இதென்ன இங்கேயும் மூட்டையா இறக்கிறீங்க…” என அவன் கேட்க,

“இந்த ஊர்ல உள்ளவங்க எல்லாம் நேரடியா எஸ்டேட்லேயே வாங்கிப்பாங்க, யாருக்கும் கடையில உதிரியா வாங்குற பழக்கம் இல்லை, இங்க வந்து மூட்டையா போடுறது , இங்க உள்ள கடைகளுக்கு சின்னதா வாடிக்கை மாதிரிதான். அதான் இப்படி தேவைனா குடுத்துட்டு உடனே பணம் வாங்கிடறது. தொழிலையும் தாண்டி நம்மளை விட்டுட்டு வேற ஊர்ல வாங்க கூடாதுனு ஒரு தொழில் முறை உறவு வச்சுக்கோங்களே. அதுக்கு தான் பணம் வாங்க நேரடியா வரதும்….”என்று நீளமாய் விளக்கம் கொடுத்து கொண்டு அந்த வீதியில் அவனோடு நடந்தாள். அவனோடு பேசிக்கொண்டு நடப்பது தேனாய் இனித்தது.

ஒருவாறாய் வேலை முடிந்ததும்,
“சரி அப்போ நான் கிளம்புறேன்…” என்றவள் சொல்ல, நடந்து கொண்டே ஜீப் அருகில் வந்திருந்தனர். அங்கே ஜீப்பில் ஏறாமல் நிற்பவர்களை கண்டு என்னவென கேட்க,

“வண்டி டயறு காத்து போய் இருக்கும்மா…” என்றார் ஒரு கணக்காளர்.

“எப்படி இப்போதானே நிறுத்திட்டு வந்தீங்க, அதுக்குள்ள எப்படி…” என்றாள் அவள் யோசனையுடன்,

“அதான் தெரியலமா…”என்றார் அவர்,

“சரி அதைவிடுங்க, இப்போ எப்படி எஸ்டேட்க்கு போறது, எனக்கு இப்போவே குளிர ஆரம்பிச்சுருச்சு…” என்றான் கார்த்திக்,

“நான் போய் மெக்கானிக்கை பார்த்து கூட்டிட்டு வரேன்…” என்று அவர் சொல்ல,

“ஐயோ, அதுவரை இந்த காத்துல நிக்கனுமா…” என்றான் கார்த்திக் சிறு அலறலுடன்,

“சரி அப்போ நாமளும் மேடம் கூட பஸ்ல போகலாம் கார்த்திக்…” என்றான் ஈஸ்வர்

வண்டி பஞ்சரான காரணம் புலப்பட்டாற் போல இருந்தது சாகித்தியாவிற்கு, உதட்டை மடித்து புன்னகையை வாய்க்குள்ளேயே அடைத்தவள், முகத்தை சாதாரணமாய் வைத்து கொண்டு,

“ அண்ணா நீங்க மெக்கானிக் கூட்டி வந்து வண்டியை சரி பண்ணிக்கிட்டு வாங்க….” என்றவள் ஈஸ்வரை ஒருமுறை பார்த்து விட்டு பேருந்து நிறுத்தத்தை நோக்கி நடந்தாள்.

ஈஸ்வர் கொஞ்சம் கூட அலட்டாமல் அவளருகில் சென்று நின்று கொண்டான். சாகித்தியாவும் நகர முற்பட வில்லை. அவளுக்கேற்ற கருப்பு நிற சட்டையில் அவன்! பொன்னிற கதிர்கள் மறைந்து வெள்ளிநிறம் அந்த தெருவில் பரவ ஆரம்பித்திருக்க, அந்த அந்தி புலரும் வெளிச்சத்தில் அவர்களின் அருகாமை பார்க்க அவ்வளவு ரம்மியமாய் இருந்தது. குமரனின் பார்வை ஒரு குறுகுறுப்புடன் இருவரையும் தொட்டு மீண்டது.

மினிபஸ் அந்த சாலையில் அழகாய் மிதந்து வந்து நின்றது. பேருந்தில் முன்பக்கமாய் ஏறிய குமரனும் கார்த்திக்கும் கிடைத்த இடத்தில் அமர, சாகித்தியா நடுவில் வயதான மூதாட்டியின் அருகில் இருந்த இடத்தில் அமர்ந்து கொண்டாள். அதற்குமேல் யாருக்கும் அமர இடம் இருக்கவில்லை. சாகித்தியாவிற்கு சற்று தள்ளி ஈஸ்வர் நின்றுகொள்ள, அழைத்தாலும் இங்கே வந்து அமரமாட்டான் என்பதால் கார்த்திக் பேசாமல் இருந்து விட்டான். இரண்டு நிறுத்தத்திற்கு பிறகு அந்த பாட்டி இறங்கி கொள்ள சாகித்தியா சன்னலோரமாய் தள்ளி அமர்ந்து வெளியே பார்வையை பதித்து கொண்டாள். ஓரிரு நொடிகள் கழித்து தோள் உரசும் ஸ்பரிசத்தில் தானாய் கண்கள் மூடிக் கொண்டன.

“இன்னும் எவ்வளவு நேரம் ஆகும் எஸ்டேட் போக…” என்ற ஈஸ்வரின் கேள்விக்கு,

“அரைமணி நேரம் கிட்ட ஆகும்…” திரும்பாமலேயே பதில் வந்தது.

தன் சுண்டுவிரலால் அவள் மடியில் கோர்த்திருந்த கையிலிருந்து அவளது சுண்டுவிரலை தேடி கோர்த்து கொண்டான்!

“இவ்வளவு மெனக்கெடலுக்கு அவசியமே இல்லை, ஏற்கனவே இங்க மொத்தமா பிளாட் தான்…” என்றான் கிசுகிசுப்பாய்,

ஜிவ்வென்று காதுமடல் சூடாக ஜன்னல் பக்கம் இன்னும் நன்றாய் திரும்பி கொண்டாள் அவள்.

“டீன் ஏஜ் பையன் மாதிரி என்னைய உன் பின்னாடி சுத்த வைக்கிற இல்ல….” என்றான் இன்னும் அவள் பக்கம் நெருங்கி,

சட்டென்று அவன் புறம் திரும்பி அவனை பார்த்தவள், அவனது பார்வைக்கு பதில் சொல்ல முடியாதவளாய்,
“இன்னைக்கு நிறைய பேசுறீங்க….” என்றாள் சலிப்புடன்,

அதில் ஒளிந்திருந்த மெல்லிய சிணுங்கலை அறிந்து கொண்டவன்,
“இதெல்லாம் பார்வையால சொன்னா புரியுமா என்ன….” என்றான் ஒரு புருவம் உயர்த்தி,

அதன் அழகை பார்த்தவாறே அவளிருக்க, அவனும் பார்வையை விலக்கவில்லை. ஓரிரு நிமிடத்திற்கு பின் உதட்டில் தோன்றிய புன்னகையுடன் அவள் ஜன்னல் புறம் திரும்பி கொண்டாள்.

ஓரளவிற்கு பேருந்தில் கூட்டம் குறைந்திருந்தது. முந்தைய நிறுத்தத்தில் குமரனும், கணக்காளரும் இறங்கியிருக்க, கார்த்திக் அமைதியாய் கண்ணை மூடி அமர்ந்திருந்தான்.

தன் உலகத்தை சுண்டுவிரலில் கோர்த்திருந்தவனுக்கோ இத்தனை நாள் இருந்த மொத்த மனக்கனமும் குறைய, கூடவே மலைக்காற்றும் ஏகாந்த வேலையும் தாலாட்டு இசைக்க, தன்னையும் அறியாமல் கண்ணயர்ந்தான் ஈஸ்வரன்! தன் தோள்மேல் மெத்தென்று விழுந்த கனத்தில் திரும்பியவளுக்கு இதழ்கள் விரிந்தன. இன்னும் அவனுக்கு வாகாய் தளர்ந்து அமர்ந்து கொண்டாள்.

வீட்டிற்கு வந்தபின் சமைக்க கூட தோன்றவில்லை. முகத்தில் இதமான புன்னகையுடன் சென்று சன்னலோரமாய் இருந்த நாற்காலியில் அமர்ந்து கொண்டாள். விரல்கள் தானாய் இடக்கையில் இருந்த மோதிரத்தை வருடின. அது விஷ்வேஸ்வரனின் மோதிரம்! இந்நாள் வரை அவளுக்கு துணையாய் இருந்த மோதிரம்!

அந்த நாள்! அவன் ‘சகி’… என கைபிடித்த பொழுது அவன் கையில் இருந்து தன் கையோடு அவன் மோதிரத்தையும் உருவிக்கொண்டு வெளியேறிய நாள் மீண்டும் நினைவடுக்கில் விரிந்தது அவளுக்கு!

Advertisement