Advertisement

ஆயுள் கைதி 17

மறுநாள் அலாரம் அடிக்கும் முன்பே விழித்துவிட்டாள் சாகித்தியா! பொதுவாய் அந்த குளிருக்கு கதகதப்பான போர்வைக்குள் முடங்கிவிடத்தான் தோன்றும். ஆனால் அவளுக்கோ எப்போது வெளியே கிளம்புவோம் என்றிருந்தது. கடைசியாய் பள்ளி ஆண்டுவிழாக்களின் போது இப்படி பரபரப்பாய் தூக்கம் வராமல் கிளம்ப காத்திருந்த ஞாபகம்….

அதற்குமேல் யோசிக்காமல் வேகமாக குளித்து வந்தவள் கருப்பு நிறத்தில் மஞ்சள் முத்துக்கள் சிதறி இருந்த காட்டன் புடவை ஒன்றை உடுத்திக் கொண்டாள். கண்மை, சந்தனக்கீற்று என கணவனை விழத்தட்டும் வேலைகளை செவ்வனே செய்து விட்டு வெளியே வந்தவளுக்கு தொட்டியில் இருந்த அந்த மஞ்சள் ரோஜா கண்ணில் பட்டது. குறும்பு புன்னகையுடன் அதை பறித்து தளரப் பிண்ணியிருந்த கூந்தலில் வைத்து கொண்டாள்.

மாணிக்கவேல் சொல்லியிருந்த நேரத்திற்கு சரியாக அவர் வீட்டின் முன் ஸ்கூட்டியை நிறுத்தி விட்டு நிமிரும்பொழுது ஈஸ்வர், கார்த்திக், மாணிக்கவேல் கூடவே மஞ்சரியும் நின்று புன்னகை முகமாய் பேசிக்கொண்டிருப்பது தெரிந்தது. வியப்பாய் ஒரு நொடி மஞ்சரியை பார்த்தவள், பின் கவனத்தை மொத்தமும் தன் கணவன் மேல் திருப்பிக் கொண்டாள். அவனை பார்த்தபடியே நடந்து வந்தவளை மாணிக்கவேலின் குரல் கலைக்க, அவரை பார்த்து

“குட் மார்னிங் அங்கிள், …” என்றாள் புன்னகையுடன்,

“வாம்மா… இப்போ தலைவலி எப்படி இருக்கு…” என்றதும்,

“இப்போ சரி ஆகிடுச்சு அங்கிள், நீங்க எல்லாம் வந்து ரொம்ப நேரம் ஆச்சா…” என்றாள் ஈஸ்வரை ஒருமுறை பார்த்து விட்டு,

“அதெல்லாம் இல்லமா, இப்போதான் வந்தாங்க , இன்னைக்கு ஈஸ்வர் சாருக்கு நம்ம தோட்டத்தை சுத்தி காட்டுறியாமா…

அப்படியே மதியத்துக்கு மேல நம்ம வழக்கமா சரக்குமூட்டை போடுற கடைகளுக்கு இன்னைக்கு கொடுக்கணும், அதையும் பார்த்திரு…” என்றார்.

“சரி அங்கிள்,நான் பார்த்துகிறேன்…” என்றுவிட்டு
“மிஸ்டர் கார்த்திக்…” என்று அவனை பார்க்க, கார்த்திக்கின் முகத்தில் பளிச்சென்ற புன்னகை! ஹோட்டலில் அழைக்கும் அதே தோரணை! எங்கு இருந்தாலும் இவள் ராணி தான் என்று தோன்ற, வாய் வழக்கம்போல

“எஸ் மேம்…” என்றது தானாய்,

“ இங்க எஸ்டேட்டில பாதி தூரம் வரை தான் கார்ல போகமுடியும், அதுக்கு மேல பாதை சரியா இருக்காது.நீங்க காரை இங்க வச்சிட்டு எஸ்டேட் ஜீப்பில வரீங்களா… ஜீப்னா அந்த இடத்திற்கு கொஞ்சம் பரவாயில்லை. இன்னும் கொஞ்ச தூரம் உள்ள போகும்…” என அவள் கேட்க,

“ நீங்க ….” என்று கேட்டிருந்தான் ஈஸ்வரன்.

“நான் என் ஸ்கூட்டியில வருவேன்…” என்றாள் ஈஸ்வரை பார்த்து மிடுக்குடன்,

நேற்று திடீரென பார்த்ததில் முளைத்த தாக்கம் மறைந்திருக்க, சுணக்கம் ஏதும் இல்லாமல் தடையற்ற நேசம் மட்டுமே இருக்க, இயல்புக்கு திரும்பியிருந்தாள் அவள்.

அதை அறிந்து கொண்ட முறுவலுடன் அவன் தலையாட்ட,

“கார்த்திக்….உங்க சாரை கூட்டிட்டு ஜீப்ல வாங்க, நான் முன்னாடி போறேன்…” என்று சீரியசாய் சொல்லிவிட்டு அவள் முன்னே நடக்க,

“ இது ரெண்டும் இடையில கல்யாணம் நடந்ததையே மறந்துட்டு முதலில இருந்து ஆரம்பிச்சு நம்மளையும் படுத்துதுங்களே….” என வாய்க்குள்ளே முனகியபடி ஜீப்பை எடுத்தான் கார்த்திக்.

அவள் சொன்னதுபோல கால்வாசி தூரம் மட்டுமே ஜீப்பில் கடக்க முடிந்தது. அதன்பின் சாலையில் இருந்து
கிளைப்பாதை சறுக்கலாய் இருக்க,அவள் காட்டிய இடத்தில் ஜீப்பை நிறுத்தி விட்டு இருபக்கமும் பயிர்கள் அரணாய் வீற்றிருந்த அந்த குறுகிய பாதையில் நடந்தனர் இருவரும். அவர்களின் நடையின் வேகத்திற்கு நிதானமாக வண்டியை ஓட்டியவள் தன் அலுவலகத்தை வந்தடைந்தாள். அங்கு தின்ணையில் அமர்ந்திருந்தவர்களை பார்த்து கொஞ்சமாய் ஏதோ பேசியவள், இவர்களிடம் திரும்பி,

“இன்னைக்கு முந்திரி தோட்டத்தில அறுவடை செய்ய போறாங்க, அதை பார்த்துட்டு மத்த இடத்தை பார்க்க போகலாமா…” எனக் கேட்க,

“ஓ போகலாமே…” எனக் கார்த்திக் முன்னே நடக்க,

“ நீங்க எங்க கூட்டிட்டு போனாலும் ஓகே தான்…” என்றான் ஈஸ்வர் அவளுக்கு மட்டும் கேட்கும் குரலில்,

சன்னமாய் அவனை திரும்பி முறைத்தவள், இரண்டடி வேகமாய் வைத்து முன்னே நடக்க ஆரம்பித்தாள். அவளையே பார்திருந்தவனுக்கு திடீரென்று அந்த ஆசை தோன்ற, சுற்றுப்புறத்தை ஒருமுறை பார்த்து விட்டு பேசாமல் புன்னகையோடு நடந்தான்.

உச்சிவெயில் வரும்வரை முந்திரி தோட்டத்திலேயே நேரம் கழிந்தது. அறுவடை செய்பவர்களின் கைவேலையையே பார்த்தபடி இருந்தான் ஈஸ்வரன். அதன்பின் மற்ற இடங்களை பார்த்து விட்டு மாலைக்கு மேல் தான் கடைவீதிக்கு செல்லவேண்டும் என்பதால் எஸ்டேட் வீட்டிற்கு திரும்பினர்.

அங்கே அவர்களை எதிர்கொண்ட மாணிக்கவேல்,
“வாங்க சார், எல்லா இடத்தையும் சுற்றி பார்த்தீங்களா…” என ஈஸ்வரிடம் கேட்க,

“ ஆமா சார், எஸ்டேட் ரொம்ப அழகா இருக்கு, கரெக்ட்டா பிளான் பண்ணி பயிர் பண்ணி இருக்கீங்க… பார்க்கவே நல்லா இருக்கு…” என்று ஈஸ்வர் சொன்னதும், மாணிக்கவேல் மகிழ்ச்சியுடன் நன்றி உரைத்தார். அப்படியே பேச்சு சென்று ஈஸ்வரின் தொழிலில் வந்து நின்றது. என்னென்ன பொருட்கள் எப்படி விற்பது என்பதில் ஆரம்பித்து அப்படியே தொடர்ந்து பேசிக் கொண்டு இருக்கையில்,

“சார் இதை ஒரு “ப்ரான்ட் நேம்” ல உங்க ஹோட்டல்லையும் வெளிலையும் விற்க போறதா சொன்னீங்க, பிராண்ட் பெயர் என்ன சார்..” என்று அவர் கேட்க,

“ சகி….” என்றான் விஷ்வேஸ்வரன் குரலில் எல்லையில்லா மென்மையுடன்!

Advertisement