Advertisement

ஆயுள் கைதி 15

குன்னூரின் சீதோஷ்ண நிலைக்கும் வாழ்க்கை முறைக்கும் கிட்டத்தட்ட பழகிவிட்டிருந்தாள் சாகித்தியா. எந்நேரமும் ஊசியாய் குத்தும் ஓர் ஆறடி மனிதனின் நினைப்பு தவிர அனைத்தும் பழகியிருந்தது. வழக்கம்போல இந்நேரம் என்ன செய்து கொண்டிருப்பான் என்ற எண்ணம் தலைதூக்க ‘ப்ச்’ என்ற பெருமூச்சுடன் அதை ஒதுக்கி தள்ளிவிட்டு காலை வேலைகளில் கவனத்தை திருப்பினாள்.

வேலைகளை முடித்துக்கொண்டு அவள் கிளம்பி எஸ்டேட் வீட்டிற்குள் சென்றபொழுது மாணிக்கவேல் வழக்கமான இடத்தில் அமர்ந்து டீ அருந்தி கொண்டிருந்தார். கூடவே பக்கவாட்டில் சோபாவில் புது விஜயமாக ஒரு பெண் மாகசீனை புரட்டி கொண்டிருந்தாள். அந்த இடத்திற்கு ஒவ்வாத பளிச் மேக்கப்பும், சிலுப்பலுமாய்! முதல் பார்வையிலேயே மாணிக்கவேலின் சாயல் என்று புரிந்தது. அவளது நினைப்பிற்கு ஏற்றவாறு தன் பெண் என்றார் அவர். முகமன்காக திரும்பினால் அப்பொழுதும் அவள் சாகித்தியா பக்கம் திரும்பவில்லை. அந்த நொடி ஏனோ சாகித்தியாவிற்கு சாதனாவின் ஞாபகம் வந்தது. அவளும் இதேபோல அலட்டல் பேர்வழி தான். அதற்கு நேரெதிராய் உடையில் மேல் தட்டுத்தனம் தெரியும், தோற்றமும் அவ்வளவு பாந்தமாய் இருக்கும். மற்றபடி இந்த மாதிரி பளிச் மேக்கப் எல்லாம் போட்டு ஆளை பயமுறுத்த மாட்டாள். குப்பென்று நாசியை துளைக்கும் ‘செண்ட்’ டை தவிர ! அந்த நினைவில் புன்னகை வர, அதை தொடர்ந்து வந்த நினைவுகளில் தானாய் முகம் இறுகியது.

அப்பொழுது தான் மாணிக்கவேல் தன்னிடம் ஏதோ கூறிக்கொண்டிருப்பது புரிய அரைகுறையாய் காதை கொடுத்து கேட்டுக்கொண்டு வந்தாள். அதில் அவளுக்கு புரிந்தது இதுதான். படித்து முடித்து விட்டு வந்திருக்கும் மஞ்சரிக்கு இனி இந்த எஸ்டேட் விஷயமெல்லாம் தெரிய வேண்டும். எனவே சாகித்தியா எஸ்டேட்டை சுற்றி வரும்பொழுது , கணக்கு வழக்குகளை பார்க்கும்பொழுது எல்லாம் மஞ்சரியை உடன் அழைத்து விஷயங்களை சொல்லி கொடுக்க வேண்டும். ஆனால் அந்த மஞ்சரி தான் கண்ணில் படுவதாகவே இல்லை. என்றாவது மாணிக்கவேல் வரும்பொழுது கூட வருவதோடு சரி. இதில் வியப்பிற்கு உள்ளாக்கிய விஷயம் என்னவென்றால் பொதுவாக யாராவது வந்தால் ஆர்வமாக பார்க்கும் குமரன் கூட மஞ்சரியிடம் இருந்து ஒதுங்கியே இருந்தான். அடிக்கும் மேக்கப்பும் அவளது அதிநாகரீக உடையும் அப்படியொரு தாக்கத்தை ஏற்படுத்தி இருந்தது.

இந்நிலையில் தான் முந்திரி, திராட்சையின் அறுவடை வர, காலை முதல் இரவு வரை வேலை சரியாய் இருந்தது சாகித்தியாவிற்கு.

காலையில் அறுவடை செய்வதை பார்க்க வேண்டும், மதியத்திற்கு மேல் திராட்சை காயவைக்கும் இடத்திற்கும் முந்திரி கொட்டைகளை பிரித்தெடுக்கும் இடத்திற்கும் போய் விட்டு இருட்டி தான் வீட்டிற்கு வருவாள். ஒருவாறாக அறுவடை வேலைகள் முடிந்து முந்திரி பருப்புகள், திராட்சைகள் எல்லாம் தரம் பிரித்து மூட்டைகளாக்கியபின் அதை கணக்கு எடுத்து விட்டு மாணிக்கவேலை போய் பார்த்து கொள்முதலுக்கு ஆளை வர சொல்லலாம் என்று சொன்னால் அவர் வேறு சொன்னார்.

“நானே உன்கிட்ட இதை சொல்ல வரசொல்லனும் இருந்தேன்மா நீயே வந்துட்ட, இந்த தடவை மொத்தமா ஏற்றி அனுப்ப போறதில்லை. ஒரு பெரிய கம்பெனியிலிருந்து பேசினாங்க. அவங்க நம்மள மாதிரியே நிறைய பேர்கிட்ட இருந்து ட்ரை ப்ரூட்ஸ், நட்ஸ் எல்லாம் கொள்முதல் பண்ணி பாக்கெட் போட்டு விற்க போறாங்கலாம். அவங்களோட இப்போ இருக்கிற பிசினஸ்க்கும் இது உபயோகபடுமாம். அதனால நேர்ல வந்து நம்ம பயிர் செய்றது, பொருட்களோட தரம் எல்லாம் பார்த்துட்டு அவங்க ஆளுங்களை அனுப்பி இங்க இருந்தே தேவையான அளவில  பாக்கெட் போட்டு எடுத்துட்டு போயிருவாங்கலாம். அதற்கு அப்புறம் கொள்முதலுக்கு ஆளுங்களை வர சொன்னா போதும்மா…” என்றார்.

இது உண்மையிலேயே நல்ல விஷயம் தான். இப்படி தேர்ந்தெடுத்து பல இடத்தில் கொள்முதல் செய்து ப்ராண்ட் பேரில் விற்கிறவர்களிடம் கொடுப்பது நல்லதே. மொத்தமாய் வாங்குபவர்கள் கொடுப்பதை விட அதிக லாபம் வரும். இவர் சொல்வதை பார்த்தால் இவ்வளவு தரமாய் ஆர்கானிக் பொருட்களை தேடி வந்து வாங்குவதை பார்த்தால் ‘ப்ரான்ட் வேல்யூ’ அதிகமாய் இருக்கும் போல தான் தெரிகிறது. அதனால் பாக்கெட்டின் விலை கொள்முதல் விலையிலிருந்து லாபத்தை தந்து விடும். இருபக்கமும் நன்மையே!

“இது ரொம்பவே நல்ல விஷயம் அங்கிள். நம்ம பாக்கெட் போட்டு விக்கிறதுனா தனியா அதுக்குன்னு ஆள், மெஷின் செலவு எல்லாம் ஆகும், இதில அது எல்லாம் இல்லாமையே அதுபோல லாபம் வரும்…” என்று மகிழ்ச்சியுடன் சொன்னாள்.

“ ஆமாம்மா…எனக்கும் அந்த எண்ணம் தான், அப்புறம் சாகித்தியா இந்த மேற்பார்வை வேலையெல்லாம் மத்தவங்க பார்த்துக்கட்டும். நீதான் இந்த புது வேலையில கொஞ்சம் சிரமம் பார்க்காம நின்னு பார்த்துக்கணும். உனக்கு உதவிக்கு எத்தனை ஆளு வேணா போட்டுக்க.எனக்கு உன்னைய தவிர யார்கிட்டயும் இதை ஒப்படைக்க மனசில்ல, நீதான் திருத்தமா செய்வ ஒன்னும் பிரச்னையில்லேயே…” என்று கரிசனத்துடன் கேட்க,

“அட என்ன அங்கிள், இவ்வளவு சொல்றீங்க…நான் பார்த்துகிறேன் .நீங்க கவலை படாதீங்க…” என்று விட்டு புன்னகையுடன் வண்டியை கிளப்பி கொண்டு சென்றவளையே பார்த்து கொண்டு நின்றிருந்தார் மாணிக்கவேல். அவருக்கு என்றைக்குமே சாகித்தியாவை அங்கு வேலைப் பார்ப்பவளாக நினைக்க தோன்றியதில்லை. வந்த நாளில் இருந்து அவளது நிமிர்வு, பாவனை அதையெல்லாம் தாண்டி அவள் வேலை செய்யும் பாங்கு அவளின் ஆளுமை இதையெல்லாம் பார்த்து கொண்டு தானே இருக்கிறார். ஏனோ அவருக்கு இது எல்லாம் அவளுக்கு தூசு என்ற எண்ணம் தான். அந்த அனுபவசாலிக்கு அவள் ஏதோ பெரிய இடத்து பெண் என்னவோ பிரச்சனையில் இங்கு வந்திருப்பதாகவே தோன்ற எதுவாயினும் அவள் மனசுக்கு சீக்கிரம் சரியாகி விடவேண்டும் என்ற பிரார்த்தனையுடன் வீட்டிற்குள் சென்றார்.

அன்று நாளே சரியில்லை சாகித்தியாவிற்கு. காலையில் எழுந்ததில் இருந்து அவசரம் தான். முன்னிரவு அளவிற்கு அதிகமாய் என்னென்னவோ நினைவுகள் வந்து அலைகழிக்க விடியற்காலையில் உறங்கி வழக்கமான நேரத்தை தாண்டியே விழிப்பு தட்டியது. அன்று மாணிக்கவேல் அவளை சீக்கிரமாக வேறு வர சொல்லியிருந்தார். இன்று அந்த புது ஆர்டர் தரும் கம்பெனி ஓனர் வருகிறாராம். தன்னிடம் பொறுப்பை ஒப்படைத்திருக்கையில் முதல்நாளே இப்படி என்றால் எரிச்சலாய் இருந்தது அவளுக்கு. இந்த ஏழு மாதங்களாக சரியாய் வேலை பார்த்ததற்கும் சேர்த்து இன்று சொதப்ப போகிறேன் என்ற எண்ணமே. இப்பொழுது அவர் சொல்லியிருந்த நேரத்திற்கு இருபது நிமிடங்கள் கூட இல்லை. என்றைக்குமே தோற்றத்தில் தெளிவு வேண்டும் அவளுக்கு. ஏனோ தானோ என்று கவனமில்லாமல் கிளம்ப முடியாது. இப்போது இப்படி கிளம்புவதே கடினம் இதில் எங்கே சமைப்பது. வேகமாய் குளியல் போட்டு வந்து ஆரஞ்சு நிற சில்க் காட்டனை உடுத்தி கொண்டாள். குளிர் பழகி இருந்ததால் இப்பொழுதெல்லாம் தேவையென்றால் மட்டுமே ஸ்வெட்டர் அணிவது. மடமடவென கிளம்பி சென்றாள்.

ஆங்காங்கே மேற்பார்வை பார்ப்பவர்களுக்கு, சில பல வேலையாட்களும் இருந்தனர். உள் ஹாலில் மாணிக்கவேல் அமர்ந்திருந்தார்.இவளை பார்த்ததும்,

“வாம்மா சாகித்தியா, டீ குடிமா… “ என்றார். அப்பொழுது தான் இன்னும் எதுவும் சாப்பிடவில்லை என்ற ஞாபகம் வந்தது. அதை விட வேலை முக்கியமாய் பட,

“ என்ன அங்கிள் இன்னும் அவங்க வரலையா…” கேட்டுக்கொண்டு இருக்கும் பொழுதே,

வாசல் பக்கமாய் சிறு சலசலப்பு, மாணிக்கவேலும் புன்னகையான தலையசைப்பை அவளிடம் உதிர்த்து விட்டு வெளியே நடக்க, வந்துவிட்டார்கள் போல என்ற எண்ணத்துடன் கையில் கொடுத்த குடோன் சாவியை கைப்பையில் வைத்துவிட்டு திரும்ப எத்தணிக்கையில் மாணிக்கவேலிடம் பேசிய அந்த ஆழ்ந்த குரல் கேட்டது! மின்சாரம் பாய்ந்தது போல் விறைத்து நின்றாள் சாகித்தியா!

Advertisement