Advertisement

ஆயுள் கைதி 14

இரண்டாவது மாடியின் ஒரறையில் தலையணையில் சாய்ந்து சன்னலின் வழியே வெளியில் வெறித்து கொண்டிருந்தான் ஈஸ்வரன். முகத்தில் அப்படியொரு அமைதி. எப்போதும் இருப்பதை விட கூடுதல் நிதானம். முகத்தில் தவழ்ந்த சாந்தம் நான் தெளிந்து விட்டேன் என்று சொல்லாமல் சொல்ல, இப்பொழுது அவன் மனதில் இருந்த சிறு உறுத்தல் எல்லாம் தான் செய்துவிட்டிருந்த இந்த முட்டாள்தனத்தில் தான். மற்றபடி அடுத்து என்னென்ன செய்ய வேண்டும் என்பதை அவன் மனம் ஏற்கனவே திட்டமிட்டு முடித்திருந்தது.
வேகமாக உள்ளே வந்து கொண்டிருந்தான் கார்த்திக். எதிரில் காரிடாரில் டாக்டரோடு பேசியவாறே நடந்து வந்து கொண்டிருந்தாள் கவிமொழி. கார்த்திக்கின் பிரிந்து போன மனைவி! நெடுநாள் கழித்து திடீரென பார்த்ததில் அவளுக்கு தான் அதிர்ச்சி. கார்த்திக் அப்படியொரு ஜீவன் எதிரிலேயே இல்லாதது போல நேர்பார்வையுடன் அவளை கடந்து சென்று விட்டான். ஈஸ்வரின் அறையை அடைந்தவன் அவன் தூங்குவானோ என்ற யோசனையுடன் மெதுவாக கதவை திறந்தான்.

அங்கே நெற்றியில், கையில் கட்டு, கலைந்த தலையென வெளியே பார்வையை பதித்திருந்தவனை பார்க்கவே சகிக்கவில்லை அவனுக்கு. மௌனமாய் அவனருகில் சென்றவனுக்கு கண்கள் கலங்கியது. ஆள் அரவம் கேட்டு திரும்பி பார்த்த ஈஸ்வர் இவனை கண்டதும் மெலிதாய் புன்னகைக்க அதில் அவ்வளவு சோர்வு. அவ்வளவு தான் கார்த்திக்கின் கண்ணில் இருந்து பெரிய நீர் மணி உடைந்து சிதறியது.

“ஹேய் நான் நல்லா தான் இருக்கேன், என்ன இது கார்த்திக், சின்ன குழந்தை மாதிரி…” என செல்லமாய் கடிந்தான் ஈஸ்வரன். ஒருவாரமாய் உறக்கத்திலேயே கழித்தவன் எழுந்தமர்ந்து இவ்வளவு பேசவுமே கார்த்திக்கின் மனம் தெம்படைய முறுவலுடன் கண்களை துடைத்து கொண்டான்.

பின் மெதுவாய் ஈஸ்வர் ஹோட்டல்ஸின் வேலை விவரங்களை கார்த்திக் சொல்ல கேட்டு கொண்டவன் அதில் சில ஆலோசனைகளையும் வழங்கினான். பேசி முடித்ததும்
“ஈஸ்வர்…” என்றான் மெதுவாய்,

“சொல்லு கார்த்திக்…” எனவும்,

“ஸ்ரீயோட போன், பேங்க் சம்பந்தப்பட்ட விபரம் எல்லாமே வீட்டுல தான் இருக்கு…” என்றான் தயங்கியபடி,

“அவளை தேடாத கார்த்திக்…” நிதானமாய் வந்தன வார்த்தைகள்!

என்ன என முதலில் திகைத்தவன் ஏன் என்றான் குழப்பத்துடன்,

“ அவளுக்கு அவளை பத்திரமா பார்த்துக்க தெரியும், பத்திரமா தான் இருப்பா, அதனால நீ ஹோட்டல் வேலைய பாரு, அவளை தேட வேண்டாம்…” என்றான் தீர்மானமாய்,

இன்னும் குழப்பத்துடன் அமர்ந்திருந்தவனிடம், ஈஸ்வர் சில விஷயங்களை சொல்ல, கார்த்திக்கின் விழிகள் விரிந்தன.

அவன் சொன்ன விஷயங்களை வைத்து யூகித்தவன்,
“ அப்போ அன்னைக்கு ஸ்ரீ சொன்னதுக்கும், உன்னைய கடைசியா பார்த்ததுக்கு இதுதான் அர்த்தமா ஈஸ்வர்…” என்றான் பிரமிப்புடன்,
ஈஸ்வரின் முகத்தில் புன்னகை.

“ அப்பா அவன் அவன் இங்க வாயால பேசுறதையே மத்தவங்களுக்கு புரிய வைக்க போராடுறான். நீங்க எப்படித்தான் பார்வையிலேயே குடும்பம் நடத்துறீங்களோ…” என்று மகிழ்வுடன் பேசியவன், சட்டென்று நிறுத்தி,

“ ஆனாலும் இந்த பிரிவு தேவைதானா ஈஸ்வர்…” என்றான் வாட்டத்துடன்,

“இல்லனா அன்னைக்கு நடந்தது தான் மறுபடியும் நடக்கும் கார்த்திக்…” என்றவனின் குரலுடன் முகமும் இறுகியது. சரியாய் அந்நேரம் கவிமொழி கதவை திறந்து உள்ளே வர, கார்த்திக் அமர்ந்த வாக்கில் யாரென்று திரும்பி பார்த்தான். அவளைக் கண்டதும் இயல்பாய் எழுந்து,

“ அப்போ நான் ஹோட்டலுக்கு கிளம்புறேன் ஈஸ்வர்,நைட் வரேன்…” என்றுவிட்டு கிளம்பியிருந்தான். ஈஸ்வர் எதுவும் மறுக்கவில்லை சரியென தலை யசைத்தான். அவன் சென்றதும் அவளை பார்த்து புன்னகைக்க, அவள் வந்து ஈஸ்வரின் கட்டிலுக்கு அருகில் கிடந்த நாற்காலியில் அமர்ந்து,

“இப்போ எப்படியிருக்கு அண்ணா…” என்றாள் அவனை ஆராய்ந்தவாறே, அவளை வாஞ்சையுடன் பார்த்தவன்,

“சாரிடா நீ ஊரில இருந்து வந்ததும் என்னால தான் ஹாஸ்பிட்டல்ல இருக்க மாதிரி ஆகிடுச்சு…” எனவும்,

“ என்னன்னா பேசுற, உன்னைய இப்படி இருக்கப்போ கண்டுக்காம இருக்க தான் நான் டாக்டருக்கு படிச்சேனா…” என்று கோவப்பட்டவள் , சிறிது நேரத்திற்கு பின்,

“அண்ணா…அண்ணி …” என்றாள் தயங்கியவாறு,

“ அவளுக்கு என்ன…” என்றான் ஈஸ்வர்.

அது என தயங்கியவள்,
“உங்களுக்கு இப்படி ஆனது, அண்ணிக்கு தெரியாதுல, அவங்களால தான்…அன்னைக்கு தான் இப்படி ஆச்சுன்னு தெரிஞ்சா உடனே வந்திருவாங்க இல்லன்னா, நீங்க நினைச்சா அவங்கள இப்பவே கண்டுபிடிச்சிறலாம்…” என ஆர்வத்துடன் பேசிக்கொண்டே போனவள் சட்டென்று நிறுத்தினாள் அவனது பார்வையில்,

“கவி நான் அடிபட்டது என்னோட சம்பந்தப்பட்டது. அதுக்கும் அவளுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை, அதேமாதிரி அவ இப்போ என் கூட இல்லாதது எங்க ரெண்டு பேரும் சம்பந்தப்பட்ட விஷயம், நாங்க அதை பார்த்துகிறோம். நான் எப்படி உன் வாழ்க்கைகுள்ள வரம்பு மீறி வராம இருக்கேனோ, அதேமாதிரி நீயும் இருந்தா நல்லது….”என்றான் அழுத்தமாய்,

அதற்குமேல் அவள் என்ன பேசுவாள்! மௌனமாய் தலையசைத்துவிட்டு அறையை விட்டு வெளியேறினாள். வெளியே இருள் சூழ்ந்திருக்க ஈஸ்வரின் பார்வை மீண்டும் சன்னல்புறம் ஒட்டிக்கொண்டது.

அதேநேரம் அவ்வளவு பெரிய வீட்டில் பார்வதியின் குரல் மட்டும் ஓங்கி ஒலித்து கொண்டிருந்தது. மனைவியின் கூற்றில் இருந்த உண்மை சிவானந்தனின் வாயை அடைத்திருக்க , நியாயவாதியான சத்தியமூர்த்திக்கும் விசாலாட்சி குழு நடந்து கொண்ட விதம் பிடிக்காததால் பார்வதியை எதுவும் சொல்லாமல் அமர்ந்திருந்தார்.

மகனின் நிலைமை, சாகித்தியாவின் பிரிவு என அனைத்தும் அந்த தாயை காயப்படுத்தி இருக்க, மகனின் அடிபட்ட செய்தி கேட்டு ஆஸ்பத்திரி சென்றவரிடம்,

“தப்பா எடுத்துக்காதீங்க அத்தை, ஈஸ்வர் அந்த வீட்டில இருந்து யாருமே பார்க்க வரக்கூடாதுன்னு தான் கண்விழிச்ச உடனே சொன்னான். அவனை கஷ்டப்படுத்த வேண்டாமே …” என்றான் கார்த்திக் கெஞ்சலாய்,

அந்த வார்த்தையை கேட்ட நொடி புரிந்தது. இவர்கள் அவனை எந்த அளவிற்கு புண்படுத்தி இருக்கிறார்கள் என்பது. இப்போதும் அவர் அங்கேயிருப்பதற்கான ஒரே நோக்கம் சிவானந்தன் மட்டுமே. இதையே வார்த்தைகளாக அவர் சொல்ல, வெகுண்டு எழுந்த பாக்கியவதி பேசும் முன் இருந்த ஆத்திரம் மொத்தத்தையும் சேர்த்து கன்னத்தில் ஓங்கி ஒரு அறை
விட்டிருந்தார்.

“இதை முன்னாடியே செஞ்சிருந்தா இவ்வளவு பிரச்சனை ஆகியிருக்காது. இதோ இவங்க இப்படியிருக்க நீயும் ஒரு காரணம். இனி ஏதாவது வாயை திறந்த நான் என்ன பண்ணுவேனு எனக்கே தெரியாது…” என விரல்
நீட்டி மிரட்டியவர், நேராய் விசாலாட்சியிடம் வந்து,

“என்ன தைரியத்தில நீங்க இப்படியெல்லாம் பண்ணிக்கிட்டு இருக்கீங்கன்னு எனக்கு தெரியல, இவங்கல்லாம் காரியம் ஆகுற வர தான் கூட இருப்பாங்க, அப்புறம் நீ யாருன்னு கேட்பாங்க…” என்று பாக்கியவதியையும், சதாசிவத்தையும் காட்டியவர்,

“இது ஏன் உங்களுக்கு புரியல, உங்க புருஷன் இருபத்திஏழு வருஷத்துக்கு முன்னாடி பண்ண தப்பு, அது தப்பு கூட இல்ல, அவருக்கு பிடிக்கலைனாலும் சேர்ந்து வாழறவங்களை தொந்தரவு பண்ணாம ஒதுங்கிட்டாரு. அதையே குற்ற உணர்ச்சி ஓட சாகுற முன்னாடி சரிபண்ண பார்த்தாரு. ஆனா நீங்க? மனசொத்து வாழ்ந்தவங்களை பிரிச்சிட்டு வந்துருக்கீங்க. அதுவும் உங்க புருஷன் மணமுடித்து வச்சவங்கள! இதை அவரு மன்னிக்கவே மாட்டாரு…” என்று விட்டு விடுவிடுவென அறைக்குள் சென்றுவிட்டார்.

ஈஸ்வரன் ஆஸ்பத்திரியில் இருந்து குணமாகி திரும்பும் வரை கவிமொழி , கார்த்திக்கை தவிர யாரையும் பார்க்க விடவில்லை. அதுவும் அந்த வீட்டில் இருந்து யாரும் தன்னை பார்க்க வரவேண்டாம் என்றதை கேட்டபின் பார்வதி கவிமொழிக்கு அழைத்து சொல்ல, ப்ளைட்டில் இருந்து இறங்கியதோடு நேராய் ஆஸ்பத்திரிக்கு வந்தவள் அன்றிலிருந்து பகலில் ஆஸ்பத்திரியிலும், இரவில் ஈஸ்வர் ஹோட்டலிலும் தங்கி கொண்டாள். கார்த்திக் பகலில் ஹோட்டலை பார்த்து கொண்டு இரவில் ஹாஸ்பிட்டலில் தங்கி கொண்டான்.

எந்நேரமும் உடனிருந்து பார்க்க ஆள் இல்லை என்பதால் பதினோரு நாட்கள் ஆஸ்பத்திரி வாசம் தான் ஈஸ்வரனுக்கு. தலையில் சின்ன பேன்ட் எய்டும் கையில் கட்டுமாய் ஆஸ்பத்திரியில் இருந்து வந்தவன், நேராய் சென்றது ஈஸ்வர் ஹோட்டல்ஸில் இருக்கும் அந்த காட்டேஜிற்கு! கேள்வியாய் பார்த்த கார்த்திக்கிடம் என்னால் இனி அந்த வீட்டில் தங்க முடியாது என்று விட்டான்.

வந்தவன் முதல் நாளே ஓய்வு எடுக்காமல் வேலையை பார்க்க கிளம்பிவிட்டான். கார்த்திக் எவ்வளவு சொல்லியும் கேட்கவில்லை. உடம்பு ஓரளவிற்கு தேற முன்னிலும் அதிகமாய் இரவு பகல் பார்க்காமல் வேலையில் ஆழ்ந்தவன், சாகித்தியாவை தேட எந்த முயற்சியும் எடுப்பதாய் இல்லை. ஏன் அப்படி ஒருத்தி இருந்ததையே மறந்தவன் போல நடந்து கொண்டான். கார்த்திக்கிற்கோ ஈஸ்வரனது பேச்சை மீறி எதுவும் செய்ய தைரியமில்லை. மற்ற நேரமென்றால் பரவாயில்லை. இது கணவன் மனைவிக்கு இடையில்! இப்பொழுது நடுவில் செல்வது சரியில்லை என்றே தோன்றியது. அத்தோடு கவிமொழி எதிரே நடமாடி கொண்டிருக்கும் இந்நேரத்தில் தான் என்ன சொன்னாலும் கத்தி தன்னை நோக்கி திரும்பும் அபாயம் இருப்பதால் ஈஸ்வரின் போக்கிலேயே விட்டுவிட்டான்.

அங்கே சாகித்தியா ஆர்ப்பரிக்கும் இயற்கை, அன்பான மக்கள் என அமைதியான வாழ்கையை வாழ்ந்து கொண்டிருந்தாள். மலை, மரம்,செடி, கொடியென நாள் முழுவதும் அதன் கூடவே இருந்து தன் மனதை சமன்படுத்த முயற்சி செய்து கொண்டிருந்தாள்.

அங்கு இப்போதைக்கு அவளை எரிச்சல் படுத்தும் விஷயம் என்றால் சற்று நேரமுன்பு அமைதியாய் இருந்த சூழலைக் கெடுத்துகொண்டு வளவளவென பேசிவிட்டு அவளுக்கும் காபிஎடுத்து கொண்டு வருகிறேன் என்று கூறி சென்றிருக்கும் குமரன் தான். அவனின் செயல் எதுவுமே சுத்தமாய் ரசிப்பதில்லை அவளுக்கு. ஒன்றிரண்டு முறை நாசுக்காய் நகர்ந்தும் புரியாதது போலவே மீண்டும் வந்து வழிபவனை என்ன செய்வது என்று யோசித்துக் கொண்டிருந்தாள். அவனும் அங்கு மேற்பார்வை பார்க்கும் வேலை பார்ப்பவன் தான். மாணிக்கவேலிடம் சொல்லி அவர் வேலைக்கு வராதே என்று சொல்லிவிடக் கூடும் என்பதால் தான் அமைதி காத்தாள். தன்னிடமிருக்கும் மணமான அடையாளங்களை சட்டை செய்யாமல் அவனிருப்பது வேறு எரிச்சலை கொடுக்க, இப்பொழுதும் பேசாமல் எழுந்து,

தேயிலை தோட்டத்தின் ஒருவழிப் பாதையில் நடக்க ஆரம்பித்தாள். சில நிமிடங்களில் அவன் தன்னை அழைப்பது கேட்டாலும் திரும்பி பார்க்கவில்லை. சூரியன் இதமாய் இருக்க அதை ரசித்தவாறே நடந்து மெயின்ரோட்டை அடைந்தவளை ஒட்டியபடி வந்து நின்றது அந்த இருசக்கர வாகனம்.

“நான் காபி எடுத்து வர்றதுக்குள்ளே வந்துட்டீங்க..” என்றான் குமரன்.

“வெளிச்சமிருக்கும் போதே வீட்டுக்கு போகணும்..” என்றவள் நடையை தொடர,

அவள் நடைக்கு ஏற்றவாறே வண்டியை உருட்டியபடி,
“நான் கொண்டு வந்து வேணா விடவா…” என்றான்.

அவள் நன்றாய் அவன் பக்கம் திரும்பி அவனை கேள்வியாய் பார்க்க,
“இல்ல இருட்டிடும்ல அதான்…” என்றவனின் குரல் இறங்கியிருந்தது.

“ நான் போய்க்குவேன்…” என்றுவிட்டு விடுவிடுவென நடையில் வேகத்தை கூட்டி திரும்பி பார்க்காமல் நடந்து விட்டாள்.

மறுநாள் ஏலம் போட்டிருந்த தோட்டத்தில் ஆட்கள் களை பறிக்க அதை பார்த்தவாறே நடந்து கொண்டிருந்தாள். எதிரே வந்த குமரன் இவளை பார்த்ததும் ஆவலாய் அவள் அருகில் வர மெதுவாய் பக்கவாட்டில் திரும்பி களையெடுப்பவர்களை நோக்கி நடக்க ஆரம்பித்தாள். அதை புரிந்து கொள்ளாதவன் போலவே அவளை நோக்கி வந்தவன் வழக்கம்போல  கதையளக்க ஆரம்பித்திருந்தான். கொடுமையே என நடந்து கொண்டிருந்தவளுக்கு தரை புற்களில் இருந்த பனித்துளிகளின் ஈரம் புடவையில் படுவது தெரிய, கொஞ்சமாய் சேலையை தூக்கியவாறு நடந்தாள்.

அங்கிருந்தவர்களிடம் “மணியாச்சு டீ குடிச்சிட்டு வேலை பாருங்க…” என்று அவள் சொல்லவும்,

அப்பொழுது அங்கிருந்த வயதான பெண்மணி,
“ ஏன் தாயி வீட்டுல உன் ராஜ்ஜியம் தானா…” என சிரிப்புடன் கேட்க,

“ என்ன சொல்றீங்க ,புரியலையே…” என்றாள்.

அவளது கால்விரல்களை காட்டியபடி,
“ மிஞ்சி போட்டிருக்க விரலு கட்டைவிரலை விட நீளமா இருக்குதே, உன் புருஷனை அடக்கி வச்சிருக்க போலேயே..” என்று அந்த வயதான பெண்மணி வாய்மூடி சிரிக்க,

நெடுநாளைக்கு பின் கணவனை பற்றிய பேச்சில், முகம் விகசிக்க , முகம் கொள்ளா புன்னகையுடன் சிரித்தாள் சாகித்தியா. அதே முறுவலுடன் முன் நடந்தாள்.

“இவ்வளவு நாளில இன்னைக்கு தான் இந்த புள்ள இம்புட்டு சிரிச்சு பார்க்கிறேன், புருஷனை பத்தி பேசுனதும் சிரிப்ப பார்த்தியா… புருஷன்னா அம்புட்டு பிடிக்கும் போல…” என்று அந்த பெண்மணி பக்கத்தில் இருந்த பெண்ணிடம் சொல்ல, அதை கேட்டபடி நடந்த சாகித்தியாவின் முகத்தில் இதமான முறுவல். அவளை பின் தொடர்ந்து வேகமாய் வந்த குமரன்,

“ ஏங்க உங்க ஹஸ்பெண்ட் எங்க இருக்காங்க…” என்றான் யோசனையுடன்,

“ ஏன் கேட்கறீங்க…” என்று பதில் கேள்வி கேட்டாள் அவள்.

“இல்ல உங்களை இங்க விட்டுட்டு அவரு என்ன பண்றாரு…” என்றான் ஆராய்ச்சி பார்வையுடன்,

“ அதை தெரிஞ்சு நீங்க என்ன பண்ண போறீங்க..” என்றாள் அவள் நேரிடையாகவே, இதை அவன் எதிர்பார்க்கவில்லை போல,

“ என்னங்க சும்மா தெரிஞ்சுக்கலாம் கேட்டா, கோபப்படுறீங்க…” என்றான் அவளை சமாதானம் படுத்தும் விதமாக,

அவள் அவன் கேள்விக்கு பதிலே சொல்லாமல் அவனை கடந்து சென்றாள்.

அவளது உதாசீனம் கோபத்தை கிளறினாலும் என்னவோ சரியில்லை என்ற எண்ணம் வலுப்பெற அவளை யோசனையுடன் பார்த்தான் குமரன்.

Advertisement