Advertisement

ஆயுள் கைதி 13.1

பலவித பறவைகளின் கீச்சுகுரலால் அதிகாலையிலேயே விழிப்பு தட்டியது சாகித்தியாவிற்கு. கண்ணை கசக்கி விழித்தவள் சன்னலருகே சென்று கதவை திறந்து வெளியே பார்த்தாள். தோட்டத்து மரக்கிளைகளில் கூட்டகூட்டமாய் பறவைகள் தங்களது குடும்பத்தோடு உறவாடி கொண்டிருந்தை சிறிதுநேரம் பார்த்துக் கொண்டிருந்தவள். வெளியிலிருந்து வந்த குளிர் காற்று எலும்பை துளைக்க சன்னலை சாத்திவிட்டு உள்ளே வந்தாள். அதன்பின் மடமடவென சுடுநீரில் குளித்து கனமான ஜார்ஜெட் புடவை ஒன்றை அணிந்து அதன்மேல் ஸ்வெட்டர் அணிந்து கொண்டு சமையல் அறைக்கு சென்றாள். இட்லி ஊற்றி தக்காளி சட்னி அரைத்து சாதம் வடித்தவள், முன்னிரவு செய்த புளிக்காய்ச்சலை சாதத்தில் ஊற்றி கிளறி விட்டு உருளைக்கிழங்கு மசியலோடு சமையலை முடித்து கையோடு காலை உணவை முடித்தவள் மதிய உணவிற்கு இன்று வீட்டிற்கு வர முடியாது என்பதால் அதை டப்பாவில் அடைத்து கொண்டு தன் ஸ்கூட்டியை எடுத்து கொண்டு கிளம்பி விட்டாள்.

அவள் அந்த பெரிய வீட்டை அடையும் பொழுது அந்த வீட்டின் போர்டிகோவில் டீயை அருந்தியபடி பேப்பரை படித்துக்கொண்டு இருந்த மனிதர் அவளை பார்த்ததும் புன்னகையுடன்,

“வாம்மா சாகித்தியா டீ சாப்பிடு..” என்றார்.

முறுவலுடன் ,” டிபனே முடிஞ்சுருச்சு அங்கிள்…” எனவும்,

“ இந்த குளிர்ல எப்படி தான் உன்னால மட்டும் இப்படி நடமாட முடியுதோ தெரியல…” என்றார் சிரிப்புடன்,

பதிலுக்கு மென்மையாய் புன்னகைத்துவிட்டு,
“ அங்கிள் குடோன் சாவி…” என்று கேட்க,அவர் எடுத்து வந்து தந்தபின், வாங்கிக்கொண்டு தோட்டத்து சாலையில் வண்டியை ஒட்டியபடி அந்த குட்டி கட்டிடத்திற்கு வந்து சேர்ந்தாள். அது தான் அவள் அதிகநேரம் இருக்கும் இடம். அவளது அலுவல் நடக்கும் இடம்! சுற்றி தாழ்வாரமிட்டு ஒரு பழமையான கிராமத்தில் இருக்கும் அலுவலகத்தை போல இருக்கும் . வெளியே வந்தால் சுற்றி இருக்கும் எஸ்டேட்டை பார்த்து கொண்டே இருக்கலாம். உள்ளே சென்று தன் சாப்பாட்டை வைத்தவள், கணக்கு நோட்டை எடுத்துக்கொண்டு வெளியில் வந்து எஸ்டேட்டின் மறுகோடிக்கு ஸ்கூட்டியில் சென்றாள்.

அங்கே லோடு வண்டிகள் தயாராய் நின்றன. அவள் சென்று பெட்டிகளின் எண்ணிக்கையை குறித்து கொண்டு வேலையை பணிக்க, மடமடவென ஏலக்காய், முந்திரியோடு பலவிதமான உலர் பழங்களும் தனி தனியாய் லாரிகளில் ஏற்றப் பட்டன. அந்த வேலை முடியவுமே மதியத்தை தொட்டு விட, தன் அலுவல் அறைக்கு வந்து மதிய உணவை முடித்து கொண்டு லோடு ஏற்றிய கணக்கு விவரம் அதன் கூலி, பணத்தொகை என அனைத்தையும் சரி பார்த்து எழுதி முடித்து விட்டு நெட்டி முறிக்கையில் குளிர் காற்று தாக்க ஆரம்பித்து இருந்தது!
மணியை பார்த்தாள். ஐந்தாகி பத்து நிமிடத்தை கடந்திருந்தது. இன்னும் சற்று நேரத்தில் இங்கு இருட்டிவிடும். அதன்பின் அந்த மலைவழி பாதையை கடந்து வீட்டினை அடைய பெரும்பாடாகி விடும்! வேகமாய் எழுந்தவள் மீண்டும் அந்த பெரிய வீட்டை நோக்கி பயணமானாள்.
அங்கே ஹாலில் அமர்ந்தவள், எதிர்ப்பட்ட சமயலம்மாவிடம் ஐயாவிற்கு தன் வரவை தெரிவிக்க சொல்ல, அவர் சரியென்று சென்றுவிட்டு டீயோடு வந்தார். நன்றியோடு வாங்கி கொண்டாள். அவள் குடித்து முடித்திருக்கையில் மாணிக்கவேல் வந்திருக்க அன்றைய கணக்கு வழக்குகளை அவரிடம் ஒப்படைத்து பணத்தையும் கொடுத்து விட்டு தன் வீட்டை நோக்கி கிளம்பிவிட்டாள்.

மாணிக்கவேல் அந்த எஸ்டேட்டிற்கு உரிமையாளர். பழம், உயர்ரக பருப்பு வகைகள் என பயிரிட்டுள்ள அவரது தோட்டத்தில் தான் தினமும் ஊரில் பாதிப்பேர் வேலை பார்த்து கொண்டிருக்கின்றனர். எஸ்டேட்டை ஒட்டியே அவர்களின் வீடுகள் இருக்க, அவரிடம் அலுவல் பணிபுரிவர்களுக்கும் அங்கேயே தங்கும்படி வீடுகள் ஏற்பாடு பண்ணியிருக்கிறார். அதில் ஒன்றில்தான் சாகித்தியா தங்கியிருப்பது. அந்த எஸ்டேட்டியில் வேலை பார்ப்பவர்களுக்கு அது குவார்ட்ரஸ் போல. அங்கு உள்ளவர்கள் அனைவரையுமே தெரியும் என்பதால் தனித்து தங்குவதில் பிரச்சினை ஒன்றும் இருக்கவில்லை அவளுக்கு. சொல்லபோனால் அவளை போலவே வெளியூரில் இருந்து வேலைக்கு வந்த பெண்கள் அந்த வட்டத்தில் தான் வீடுகளில் தங்கி இருந்தனர்.

இருட்டுவதற்குள் வீட்டிற்குள் நுழைந்தவள் அந்த நேரத்தில் குளிக்க முடியாதென லேசாய் தண்ணீரில் கைகால்களை நனைத்து விட்டு உடையை மாற்றிக்கொண்டு சமயலறைக்கு வந்தாள்.

ஹாட்பாக்கில் வைத்துவிட்டு சென்ற இட்லிகளை தண்ணீரில் நனைத்து விட்டு உதிர்த்து, வெங்காயம் தாளித்து அதில் சேர்த்து உப்புமாவாக கிளரியவள் சர்க்கரையோடு சேர்த்து விழுங்கிவிட்டு படுக்கையில் விழுந்தாள்.

Advertisement