Advertisement

ஆயுள் கைதி 13.1

தன் அறையில் வார்ட்ரோபில் தலையை விட்டு துணிகளை அடுக்கி கொண்டிருந்த சாகித்தியாவின் கவனத்தை அலைபேசி கலைக்க வந்து பார்த்தாள். சரளா தான் அழைத்திருந்தார். அதைப் பார்த்து கொண்டே கையில் இருந்த துணியை மடித்தவள் இறுதிநொடியில் எடுத்து,

“என்ன…” என்றாள் ஒரு வார்த்தையில்,

“சாப்பிட்டியா சாகித்தியா…” என்ற கேள்விக்கு,

“இல்லை…” என்று மீண்டும் ஒரு வார்த்தை.

“மாப்பிள்ளை சாப்பிட்டாரா…” எனக் கேட்கவும்,

“அடேயப்பா .. மாப்பிள்ளையா.. இது எப்போதிருந்து… என்ன அக்கறை திடீர்னு..” என்றாள் கேள்வியாய்,

அதற்கு “ எப்பவுமே எனக்கு அவர் மாப்பிள்ளை தான் சாகித்தியா, ஆனா இன்னைக்கு மதியம் வரை நான் உனக்கு அம்மாவா மட்டும் தான் யோசிச்சேன், இப்பவும் எனக்கு எல்லாரையும் விட நீ தான் முக்கியம், உன் வாழ்க்கை நல்லாயிருக்கணும்ன்றது தான் முக்கியம், அதனால தான் அந்த பூஜையெல்லாம், கோச்சுக்காத ஸ்ரீ மா…”என்றதும்,

மற்றதையெல்லாம் புறந்தள்ளி விட்டு ,
“எல்லாரைவிடவும் நான் முக்கியமா? உன் வீட்டுக்காரரை விடவுமா…” என்றாள் சிரிப்புடன்,

“ வாயை மூடுடி , அவரை இழுக்கலைனா உனக்கு தூக்கம் வராதே..”என்றவர் ஒரு நொடி தயங்கி,

“சாகித்தியா…” என்றழைத்து

“ என்மேல் கோபம் இல்லையே…” எனவும்,

“அப்போ இருந்துச்சு , அப்புறம் நீ என் நல்லதுக்கு தான் பண்ணினனு புரிஞ்சுது, அதனால இப்போ கம்மியா தான் இருக்கு..” எனவும், அதன்பின்னும் அவர் எதுக்கோ தயங்குவது புரிய, என்னவென்று கேட்டாள்.

“ அது மாப்பிள்ளைகிட்ட இதையெல்லாம் சொல்லிடாத…” என தயங்கியபடி கூறவும், வாய்விட்டு சிரித்தாள் அவள்.

ம்… முயற்சி செய்றேன்..” என்றவாறே போனை வைத்தவள். புன்னகையுடன் எழுந்து ஈஸ்வரைத் தேடி போனாள். ஹாலில் ஆளைக் காணாமல் இருக்க எங்கே அவன் என்று யோசிக்கும் பொழுதே சமையலறையில் சத்தம் கேட்க சென்று பார்த்தாள்.

அங்கே ஏப்ரானை கட்டிக்கொண்டு மும்முரமாக காய்கறிகளை வெட்டிக்கொண்டிருந்த கணவனை பார்த்ததும் புன்னகை பெரிதாய் விரிய, அவனருகே சென்றவள் அவனை பின்னால் இருந்து கட்டிக்கொண்டு முதுகில் தலைவைத்து கொண்டாள். அவளை உணர்ந்ததன் அடையாளமாய் ஒரு நொடி தன் வேலையை நிறுத்தியவன் மீண்டும் தொடங்கினான். அதன்பின் சமையல் முடியும் வரை அவன் கூடவே நகரும் இடமெல்லாம் நகர்ந்தவள் அவன் முடித்து நிமிரும் பொழுது தான் விலகினாள். மேஜையில் அவன் பரப்பிவைத்த உணவு வகைகளை பார்த்து
அவளுக்கு ஆச்சர்யம் தாங்கவில்லை! 

நூடுல்ஸ்,  புலாவ், ப்ரைட் ரைஸ் என அனைத்தும் கச்சிதமாக இருவருக்கும் மட்டுமாய்! அதைவிட ஆச்சர்யம் அவனது கைப்பக்குவத்தில்! உணவை மட்டுமல்லாது மற்றவரின் அருகாமையையும் அணுஅணுவாய் ரசித்து கொண்டிருந்தனர் இருவரும். வாழ்க்கை இப்படியே சென்றிருந்தால் நன்றாய் தான் இருந்திருக்கும்… ஆனால்…! 

அந்த ஆள்நடமாட்டமில்லா தார்சாலையில் அசுர வேகத்தில் பறந்து கொண்டிருந்தது ஈஸ்வரின் கார்.வெளியே இடியும் மின்னலும் மாறி மாறி அடிக்க அதற்கு கொஞ்சமும் குறையாத சீற்றத்துடன் சீறி கொண்டிருந்தது அவன் மனம். அதை கொஞ்சமும் முகத்தில் காட்டாமல் இறுகி போய் இருந்த முகம் மேலும் பயமுறுத்தியது. மழை படபடவென பொழிந்து சூழ்நிலையில் சட்டென்று பரவிய குளுமை கூட அவனை தாக்கவில்லை. மனம் மொத்தமாய் சகி சகி என அரற்ற ஏன் இப்படி என்ற கோபத்துடன் ஒரு வித இயலாமையுடன் கண்மண் தெரியாத வேகத்தில் வண்டியை ஒட்டிக் கொண்டு இருந்தவன் அதேவேகத்தில் ஒரு திருப்பத்தில் திருப்ப, அங்கோ எதிரில் லோடு ஏற்றிய லாரி! வந்த வேகத்திற்கு சட்டென்று கட்டுப்படுத்த முடியாததால் கடைசியாய் அந்த லாரியில் மோதக்கூடாது என்பதே குறிக்கோளாய் இருக்க, அதே வேகத்தில் வண்டியை ஒடித்து திருப்பினான். லாரி தப்பித்தது! ஆனால் அவனது கார் கட்டுப்பாடு இழந்து பாலத்தின் கைசுவரில் உரசியாவறே சென்று பாலத்தின் முடிவில் இருந்த பெரிய மரத்தில் மோதி நின்றது.

Advertisement