Advertisement

ஆயுள் கைதி 12

இந்த எதிர்பாராத தாக்குதலில் இருந்து அவள் மீளாமல் இருக்கும் போதே மென்முறுவலுடன் அவளை நோக்கி தலையை எம்பியவன் அவள் கன்னத்தில் அழுத்தமாய் இதழ் பதிக்க சாகித்தியாவிற்கு மயக்கம் வராத குறைதான். நாணத்துடன் அவனது கழுத்து வளைவில் முகம் புதைத்து அவன் நெஞ்சில் கைவைத்து கொண்டாள். ஈஸ்வரின் கைகள் அவளை சீண்ட சிலிர்த்தவள் குறும்பு புன்னகையுடன் அவன் கழுத்தை தன் பற்களால் பதம் பார்த்திருந்தாள். அவ்வளவு தான்! அங்கே சீண்டலும் சிலிர்ப்புமாய் இருவரும் தங்களுக்கு தெரிந்த மௌன மொழியில் பேசிக்கொண்டிருக்க , அவளது மெல்லிய கொலுசொலியும் மெட்டி ஒலியும் மட்டுமே தங்கள் இருப்பை பலமாய் பறைசாற்றி கொண்டு இருந்தன.

மறுநாள் காலை எங்கோ தொலைவில் அடித்ததை போல கூவிய அலாரத்தில் எழுந்தார்கள். எழுந்ததும் தான் சாகித்தியாவிற்கு பசி தெரிந்தது. கையால் வயிற்றை அழுத்தியபடி ,

“இவனால நைட் சாப்பாடெல்லாம் சாப்பிடவே முடியாம போகுது…” என்ற பார்வையை பார்க்க,

அவளை புரிந்தவனாய் ,
ரசனையாய் ஒரு பார்வை பார்த்துவிட்டு கிளம்ப சென்றவன் மறக்காமல் கழுத்தை நன்றாய் ஏற்றி மூடியிருக்கும் காலர் உள்ள சட்டையை அணிந்து கொண்டான்.

சாகித்தியா காலையிலேயே ஒரு ப்ரசென்டேஷன் செய்ய வேண்டியிருந்தது. அதனால் வேகமாக கிளம்பியவள் ஈஸ்வருக்கு முன்னே ஹோட்டலுக்கு சென்றிருந்தாள்.

அவளை முதலில் எதிர்கொண்டது கார்த்திக் தான். முதல் நாள் மதியம் சரியாய் வழியனுப்பவில்லையே என்ற வருத்தம் தோன்ற ,

“சாரி கார்த்திக்…” எனவும்,
வாய்விட்டு சிரித்தவன்,

“தேவையில்லாம சாரி எல்லாம் வேஸ்ட் பண்ணாத, உனக்கு தெரியுமா ஸ்ரீ, நேத்து என் மனசு எவ்வளவு நிறைவா இருந்துச்சுன்னு… ஒன்னு உங்க ரெண்டு பேரையும் சந்தோசமா பார்த்தது, இன்னொன்னு ரொம்ப வருஷம் கழிச்சு பார்த்து பார்த்து பரிமாறி சாப்பிட்டதுல…” என்றவனுக்கு குரல் கரகரக்க,

சற்று செறுமி விட்டு,
“ அப்புறம் ஒரு முக்கியமான விஷயம்…” என்றான் தீவிரமான குரலில்,

என்னவென்று பார்த்தவளிடம்,
“ என் மச்சானை கண்கலங்காம காப்பாத்து ஸ்ரீ…” என்று சிரிக்கும் கண்களோடு சொல்ல,

“ப்ச்…” என்று முறைக்க முடியாமல் சிரிப்புடன் தோற்றாள் அவள்.

முன்பகலில் அனைவரும் அந்த மீட்டிங் ஹாலில் கூடினர். சாகித்தியா ஸ்லைடை சரிபார்த்து கொண்டிருந்தாள். கடைசியாக உள்ளே நுழைந்த ஈஸ்வரன் அந்த நீள்வட்ட மேஜையின் கடைசியில் சாகித்தியாவிற்கு நேர் எதிரில் அமர்ந்தான்.

சாகித்தியா மும்முரமாக ப்ரசென்டேஷனை ஆரம்பித்திருக்க ஈஸ்வரின் கண்கள் மொத்தமாய் அவள்மேல்! பீச் நிற சேலை, குங்கும நிற கழுத்தை ஒட்டிய போட்நெக் பிளவுஸ், தூக்கி கட்டிய குதிரைவால், ஒரு கையில் வாட்ச், மறுகையில் ப்ரெஸ்லெட் என பிசிரற்ற அழகுடன் கணீர் குரலால் அந்த அறையை நிறைத்திருந்தவளை இமை தட்டாமல் அவனுக்குள் பதித்து கொண்டிருந்தான். சாகித்தியாவின் பார்வை கவனமாய் அவனை தவிர்த்து மற்ற எல்லா பக்கமும் சிதறி கொண்டிருந்தது. அவனது லேசர் பார்வை பார்க்காமலே புரிய பார்வையை அவன் பக்கம் திருப்பாமல் கஷ்டப்பட்டு போராடி கொண்டிருந்தவள் கடைசியில் தோற்று அவன் கண்களை பார்த்துவிட்டாள். அவ்வளவு தான்! சட்டென்று வார்த்தை திக்க ,

“எக்ஸ்க்யூஸ்மி…” என்று விட்டு தன் முன்னால் இருந்த தண்ணீரை அருந்தினாள். அந்த இடைவெளியில் தன்னை சமாதானம் படுத்தியிருந்தவள் யாரையும் கவராமல் கண்ணை சுருக்கி அவனை முறைத்துவிட்டு மீண்டும் தொடர்ந்தாள். பார்த்திருந்த ஈஸ்வரனுக்கு புன்னகை வரும்போல் இருக்க, தலையை லேசாய் சாய்த்து ஒருகையால் முடியை கோதியவன், நிமிர்ந்து அமர்ந்தான். அதன்பின் அவன் கேட்ட கேள்விகள் அந்த ப்ரசென்டேஷனை குடைய அங்கே கணவன் மனைவி உறவு மறைந்து போயிருந்தது.

ஒருவழியாய் எல்லாம் முடிந்து அவரவர் வேலையை பார்க்க சென்றிருக்க ப்ரசென்டேஷன் குறித்த பைலில் கையொப்பம் வாங்குவதற்காக சாகித்தியா ஈஸ்வரின் அறையை நோக்கி நடந்தாள். சுந்தரையே அனுப்பி இருக்கலாம் தான், அனுப்ப தோன்றவில்லை. கதவை தட்டி ‘எஸ் கம் இன்’ என்றதற்கு பின் நுழைந்தவள் பைலை அவன் முன் நீட்டி சைன் எனவும்,

வாங்கி பிரித்து எங்கே என்றான் கேள்வியாய்,

அவனையே பார்த்தபடி அருகில் சென்றவள், ஒவ்வொரு பக்கமாய் அவன் கையெழுத்து போட திருப்பிக் கொண்டே வந்தாள். வாங்கி முடித்து திரும்பியது தான் தெரியும், என்ன ஏதென்று புரியும் முன் அவன்மேல் சரிந்திருந்தவள், புரிந்த நொடி அவனை நிமிர்ந்து பார்க்க, சலனமில்லாமல் அவள் பார்வையை நேராய் தாங்கினான் அவன். முயன்று நிதானித்தவள் அவனிடமிருந்து எழுந்து கொள்ள பார்க்க, திரும்பவும் அவளது காலை வாரிவிட மறுபடியும் அவன்மீதே சரிந்தாள். இப்பொழுது ஈஸ்வரின் முகத்தில் லேசாய் புன்னகை எட்டிப் பார்த்தது. சாகித்தியாவிற்கோ இனம்புரியா அவஸ்தை. சிவந்த முகத்தை மறைத்தபடி முறைத்து கொண்டே அவள் எழும்போது சரியாய் கார்த்திக் கதவை திறந்து, திறந்த வேகத்தில் மூடிவிட்டு திரும்பியிருந்தான். வேறு உலகத்தில் சஞ்சரித்த இருவரும் இதை கவனிக்கவில்லை. இங்கே கார்த்திக்கிற்கு தான் மொத்த படபடப்பும்!

“டேய் பச்சப்புள்ளைய வச்சிட்டு, ஓவரா போறீங்கடா…” என புலம்பியவாறே நடந்தவன், எதிரே வந்த சுந்தரை பார்க்க, அவனோ ஈஸ்வரின் அறையை நோக்கி நடந்து கொண்டிருந்தான் . பதறிப்போய் என்னவென்று கேட்க,

அவன் ஈஸ்வரை பார்க்க செல்வதாய் சொல்லவும்,சமாளித்து திருப்பி அனுப்பி வைத்தான். பின் அவனுக்கே அவர்களை பார்த்தபின் அதிர்ச்சி! இவன் பார்த்தால் மயக்கமே போட்டுவிடுவான் என்று நினைத்தவனுக்கு அவர்களின் அன்னியோன்யத்தை நினைத்து பார்த்து மனம் நிறைந்த புன்னகை.

காலம் இப்படியாக செல்ல, ஈஸ்வரன் சாகித்தியாவின் பிணைப்பு இறுகி கொண்டே சென்றது. அலட்டலில்லாத அமைதியான அழகான உறவை இருவரும் மௌனத்தாலேயே அலங்கரித்து கொண்டிருந்தனர். இச்சமயம் தான் சரளா சொன்ன கோவில் பூஜை நாளும் வர முதல்நாளே சரளாவும் போன் செய்து அழைத்திருக்க, பூஜைக்காக இல்லாவிடினும் தன் அன்னையை பார்த்து வெகு நாளாகி இருந்ததால் அவருக்காக ஹோட்டலில் இருந்து பிற்பகலில் கிளம்பி கோவிலுக்கு சென்றாள். காரை நிறுத்திவிட்டு சந்தன நிற புடவையில் படபடவென படியேறும் மகளை வாஞ்சையுடன் பார்த்தவாறு நின்றிருந்தார் சரளா.
அருகில் சென்றதும்,
“என்னமா ஆரம்பிச்சாச்சா.. ரொம்ப லேட் ஆகிடாதே? எப்போ முடியும்…” எனக் கேட்க,

“ என்ன சாகித்தியா வந்தவுடனேயே போகிறது பத்தி பேசுற..” என்றார் சலிப்புடன்,

“ அம்மா எனக்கு வேலை இருக்கு…”என்றவள் பூஜை பற்றி கேட்டுக்கொண்டே உள்ளே சென்று பார்த்தால் அது அவளுக்காகவே தயார் செய்த பூஜை மாதிரி இருந்தது. அதுதான் போகிறது என்று அன்னையை முறைத்துவிட்டு பல்லைகடித்து கொண்டு உட்கார்ந்தால் அடுத்து ஐயர் சொன்னதெல்லாம் கேட்டவள் சட்டென்று எழுந்தே விட்டாள்! அது சுமங்கலி செய்ய தேவையில்லாத கன்னிகள் செய்யும் பூஜை . அவள் செய்து நல்ல மண வாழ்க்கையை, நல்ல கணவனை அமைத்து கொள்ள வேண்டுமாம். பட்டென்று எழுந்தவள் அவள் அன்னையை இழுத்து கொண்டு வெளியே வந்தாள்.

“என்னமா பண்ணி வச்சிருக்க…” என்றாள் அடிக்குரலில் சீறலாய்,

“ஏண்டி கோபப்படுற, இப்படியே கேள்விக்குறியா இருக்க உன் வாழ்க்கைக்கு என்னதான் பதில். உன் அப்பாவும் கண்டுக்கல, நீயும் ஒன்னுமே நடக்காத மாதிரி இருக்க, அப்போ நான்தானே ஏதாவது செய்யணும்…” என்றார் தீவிரமாய்,

“அதுக்கு இப்படியொரு பூஜையை ஏற்பாடு பண்ணுவியா? அந்த ஆளு சொல்றான், எனக்கு நல்ல கணவன் அமையனும்னு நீயும் சும்மா இருக்க கேட்டுகிட்டு.., “ என்றவளின் மனம் சட்டென்று லிவினின் நிலைமையை நினைத்து பார்த்தது.

“ ஏன் அதுக்கென்ன, என்னமோ கல்யாணம் பண்ணி சேர்ந்து வாழ்ந்துகிட்டு இருக்க மாதிரி பேசிட்டு இருக்க…” என்றதும்,

“ நான் சேர்ந்து வாழலனு யார் உன்கிட்ட சொன்னா…” என்றாள் பட்டென்று,

“சாகித்தியா…” என்று அவர் அதிர்ந்து விழிக்க,

அதை சட்டை செய்யாமல்,
“இங்க பாரு இனிமேல் இதுமாதிரி எதுவும் செய்யுற வேலை வச்சுக்காத, என் புருஷனுக்கு தெரிஞ்சுது அப்புறம் மாமியார்னு கூட பார்க்கமாட்டார். ஏதாவது பேசிட்டா நான் பொறுப்பில்லை. “ என்று விட்டு கோவில் உள்ளே சென்றவள், தீபாராதனை தட்டை தொட்டு கும்பிட்டுவிட்டு அழுத்தமாய் உச்சியில் குங்குமத்தை வைத்துகொண்டு வெளியே வந்த நேரம் சரியாய் ஒரு கார்வர அதிலிருந்து இறங்கியவன் அந்த காரை செல்லுமாறு சைகை செய்து விட்டு சாகித்தியாவின் காரில் சாய்ந்து நிற்க, அவள் தாயை அழுத்தமாய் ஒரு தடவை பார்த்து விட்டு நிதானமாய் படியிறங்கினாள் அவனருகில் சென்றதும் அவன் கைநீட்ட கார்சாவியை அவனிடம் கொடுத்து விட்டு காரை எடுத்ததும் ஏறியமர்ந்து கண்களை மூடிக்கொண்டாள்.

Advertisement