Advertisement

ஆயுள் கைதி 11

 

விழி விரித்து பார்த்தவளை நோக்கி என்னவென அவன் ஒற்றை புருவம் உயர்த்த, பதட்டத்துடன் தலையசைத்து விட்டு குனிந்து கொண்டாள். மேலும் அவன் இரண்டு அடி வைத்ததில் பிடிமானம் இல்லாமல் தடுமாறியவள் அவன் கழுத்தில் கைகோர்த்து பிடித்து கொண்டாள்.

ஒவ்வொரு அடியையும் மெதுவாய் வைத்து குடிலை அடைந்தவன், உள்ளே சென்றதும் பின்னங்காலால் கதவை அடைக்க, ஆட்டோமெட்டிக் லாக் அடைத்து கொண்டது. முன்னை விட மெதுவாய் அடி எடுத்து வைத்து முன்னேறியவன் கட்டிலில் அவளை விட்டுவிட்டு முகம் பார்க்க, கண்களை இறுக்கி மூடி இருந்தாள்! மென்மையாய் அவள் இரு கன்னத்தையும் கைகளால் ஏந்த
, விழி திறந்து பார்த்தவளிடம், கண்களால் அவன் சம்மதம் கேட்க, அந்த ஒரு நொடி
அவன் செயலில் மொத்தமாய் அவனிடம் வீழ்ந்து விட்டாள் சாகித்தியா. வெட்கம் வந்தாலும் சமாளித்தவளாய் அவன் கண்களை நேராய் பார்த்து சம்மதமாய் தலையாட்டினாள்.

அதன்பின் அவளது சிந்தனையை தடை செய்து மொத்தமாய் அவள் சிந்தையை நிறைத்தான் அவள் கணவன்! விருப்பத்துடன் தன்னை அவளிடம் இழந்தவன் அவளை தன்னவளாய் ஆக்கிக் கொண்டான்.

கண்கள் கூச மெதுவாய் கண்விழித்தாள் சாகித்தியா. காற்றாடி ஓடும் சத்தம் மட்டுமே அவ்வறையில்! கண்களை மெதுவாய் தேய்த்தபடி அறையை சுற்றி பார்வையை சுழல விட்டாள். அங்கிருந்த சோபாவில் அமர்ந்து எதிரே இருந்த டீபாயில் காலை வைத்தபடி ஒரு புத்தகத்தில் ஆழ்ந்திருந்தான் ஈஸ்வரன். அவன் அமர்ந்திருந்த தோரணை சிக்கென்று மனதில் ஒட்டிக்கொண்டது. அவனை ரசித்தவாறே சிறிது நேரம் படுத்திருந்தவள் மெல்ல எழுந்தாள். அரவம் கேட்டு நிமிர்ந்தவனும் அவள் விழிகளை சந்திக்க, உயிர் வரை ஊடுருவிய பார்வையில் உடல் சிலிர்க்க மனதிற்குள் செல்ல சிணுங்கலுடன் பார்வையை விலக்கி கொண்டவள் எழுந்து தன் உடையை எடுத்து கொண்டு குளிக்க சென்றாள்.

அவள் கிளம்பி வரும்பொழுது குடிலுக்கு வந்திருந்த உணவை தட்டுகளில் பரிமாறியபடி இருந்தான் ஈஸ்வரன். பழக்கப்பட்ட மௌனம் இருவரிடத்திலும்! அமைதியாய் உண்டு முடித்ததும் அவனுக்கு இங்கே வேலையிருக்கும் என்பது அவளுக்கு தெரியும் கூடவே அவள் இங்கிருந்து ஒன்றும் செய்யப் போவதில்லை. எனவே,

“நான் வீட்டுக்கு கிளம்பறேன்…” என்றாள் உண்டு முடித்ததும்..

சரி என்றவன் அவள் கிளம்ப தயாரான பொழுது மேஜையில் இருந்த அவளது கார் சாவியை எடுத்து கொள்ள,
கேள்வியாய் பார்த்தவளிடம்,

“வீட்டில ஒரு பைல் எடுக்கணும்…” என்று விட்டு முன்னே நடந்தான்.

வீட்டுவாசலில் கார் நின்றதும் இறங்கியவள், விடைபெறும் விதமாய் தலையசைக்க, ஈஸ்வரின் கண்கள் சரியென மூடித் திறந்தன. இரண்டடி முன்னே வைத்தவள் சட்டென்று திரும்பி,
“பைல்….” என்றாள் அவன் மறந்துவிட்டானோ என்ற நினைப்பில்,

அவளது விழிகளை நேராய் ஒரு நொடிக்கும் மேலாய் பார்த்தவன், ஒன்றும் பேசாமல் கூலர்ஸை கண்ணில் மாட்டிக்கொண்டு கிளம்பிவிட்டான்.

கார் கண்ணில் இருந்து மறையும் வரை பார்த்து நின்றவள், வீட்டின் உள் வந்ததும் நேராய் அறைக்கு சென்றாள். கதவை சாத்திவிட்டு நிமிர்ந்தவளுக்கு அதற்கு மேல் இயல்பாக இருப்பதை போல காட்ட முடியவில்லை. முகம் முழுவதும் வெக்கமும் புன்னகையும் போட்டி போட ஓடிச்சென்று கட்டிலில் அவன் தலையணையை இறுக்கி கட்டிக்கொண்டு அதில் முகம் புதைத்து கொண்டாள்.

ஈஸ்வரன் மாலை வீடு திரும்பி தன்னிடம் இருந்த சாவியில் கதவை திறந்து கொண்டு உள்ளே செல்லும் பொழுது வீடு மொத்தமும் இருளில் மூழ்கி இருந்தது. ஹாலின் லைட்டை போட்டவன் மேலே பார்க்க, அவர்களது அறையிலும் விளக்கு எரியவில்லை. யோசனையுடன் படியேறியவன் ஓரளவிற்கு நிலைமையை யூகித்தவனாய் அறையின் விடிவிளக்கை போட்டான். அங்கே அவன் படுக்கும் பக்கம் அவனது தலையனையை நெஞ்சோடு அணைத்தபடி தூங்கி கொண்டிருந்தாள் அவன் மனைவி! அந்த விடிவிளக்கில் அவளை சரியாக காண முடியவில்லை என்று நினைத்தானோ! பெரிய விளக்கையே போட்டவன் அவளையே பார்த்தபடி நின்றிருந்தான். சிறிது நேரம் சென்ற பிறகே அவள் இருக்கும் நிலை பார்த்தால் மதியமும் சாப்பிட்டிருக்க மாட்டாள் என்று தோன்ற, வேகமாய் கீழே சென்றவன் ஒருமுட்டையை உடைத்து மஞ்சள், மிளகு தூள்,உப்பு மட்டும் போட்டு எளிய ஆம்லெட் ஆக்கினான்.பின் பாலையும் சூடு பண்ணி ஒரு பெரிய கிளாசில் ஊற்றிக்கொண்டு அறைக்கு எடுத்து வந்தான். அவள் தூக்கத்திற்கு அழைத்தாள் எழுந்துகொள்ள மாட்டாள் என்று புரிய, தட்டை மேஜையில் வைத்து விட்டு அருகில் வந்து  தட்டி எழுப்ப, அசையவே இல்லை அவள். அருகில் அமர்ந்து கன்னத்தை தட்டியவாறே,

“சகி…..”என்று அழைக்க பயங்கர தூக்க கலக்கத்தோடு கஷ்டப்பட்டு இமைகளை பிரிக்க முயன்று தோற்றாள்.

“சாப்பிட்டு படுக்கலாம் சகி…” என்றபடி அவளை மேலும் தூங்க விடாமல் எழுப்பியவன், அவளிடம் தட்டை கொடுக்க முற்பட, அவளோ தூங்கி வழிந்தாள். இது சரிப்படாது என உணர்ந்தவனாய் அவனே ஊட்ட ஆரம்பித்திருந்தான். தூக்கத்திலேயே வாங்கி கொண்டவள் கடைசியில் பாலையும் அப்படியே குடித்து முடித்தாள். தட்டையும் கிளாசையும் வைத்து விட்டு திரும்பி பார்க்க, மெத்தையில் பாதி சாய்ந்து சொருகிய விழிகளோடு அமர்ந்திருந்தவளின் இதழ்களில் பாலின் அடையாளம்.

மென்முறுவலுடன் அவழிதல்களை விரல்களால் துடைத்தான். அவ்வளவு தான் அப்படியே தூக்க கலக்கத்தில் அவன் நெஞ்சில் சரிந்தாள் சாகித்தியா. ஈஸ்வரின் இதழ்கள் விரிய  அவளை குனிந்து பார்த்தவன், முகத்தில் விழுந்த முடிகற்றைகளை ஒதுக்கி விட்டு நிமிர்ந்து அவளை சுற்றி கைகளை போட்டு அணைத்தவாறு விழிகளை மூடியபடி அமர்ந்து கொண்டான்.

 

மறுநாள் ஈஸ்வர் கிளம்பி சென்ற பின்னரும் கூட சாகித்தியாவின் உறக்கம் கலையவில்லை. இத்தனை நாள் இருந்த மனச்சோர்வு தீர நல்ல உறக்கம். சூரியன் மேல்
எழும்பும் பொழுது வயிறு பசியில் கத்தி எழுப்பிவிட எழுந்தவள் மணியை பார்க்க, பத்திற்கும் மேலாகி இருந்தது. பல் துலக்கி விட்டு ப்ரிட்ஜில் இருக்கும் பழங்களை கருத்தில் கொண்டு பசியில் இரைந்த வயிற்றுக்கு ஈய வேகமாய் அடுப்படிக்குள் விரைந்தவளை டைனிங் டேபிளில் இருந்த பாத்திரங்கள் ஆச்சர்யமூட்ட அதனருகே சென்று திறந்து பார்த்தாள்.

பால், அவித்த முட்டை, கொண்டைக்கடலை சாலட், வெஜ் ரோல்!  புரோட்டின், நார்ச்சத்து என நியூட்டிரிஷியன் ரேஞ்சிற்கு கடை பரப்பி விட்டு போயிருப்பவனை நினைத்தால் மனமெல்லாம் மத்தாப்பு வெடித்தது. கூடவே நேற்றிரவு தான் பசியில் தூங்கவில்லை என்ற அளவிற்கு நினைவிருக்க அவனது தாயுணர்வில் கண்கள் பணிக்க அதற்குமேலும் தாமதிக்காமல் அமர்ந்து பொறுமையாய் ரசித்து உண்டாள். இருக்கும் மனநிலையில் ஹோட்டல் போய் வேலை பார்க்க சத்தியமாய் மனமில்லை. கூடவே அவன் சமைத்த உணவை சாப்பிடும் பொழுது இன்னோரு எண்ணமும் வலுப்பெற உதட்டில் புன்னகையுடன் போனை எடுத்து அன்றைக்கு தாமதமாக வருவதாய் சொல்லியிருக்கும் வள்ளிக்கு விடுப்பு அளித்தாள்.

ஹோட்டலில் ஈஸ்வரனும் கார்த்திக்கும் வேலையில் மூழ்கி இருந்தனர். அப்பொழுது கார்த்திக்கின் போன் அழைக்க, வேலை இடையில் இருந்தவன் போனை பார்த்து விட்டு யோசனையுடன் எடுத்து லவுட் ஸ்பீக்கரில் போட்டு விட்டு,

“சொல்லு ஸ்ரீ…” 

“எங்க இருக்க கார்த்திக்…” என்றாள்.

“ ஹோட்டலில் தான்
ஸ்ரீ, என்ன விஷயம் ஆமா நீ ஏன் வரலை…” எனவும்,

“ அது ஒன்னுமில்லை சும்மாதான், சரி மதியம் எதுவும் மீட்டிங் இருக்கா…?” என்ற கேள்விக்கு
இல்லை என சொல்லிவிட்டு அவன் மேற்கொண்டு பேசும் முன்னரே,

குறிப்பிட்ட வேலையை சொல்லி அது சம்பந்தமான பைல் எல்லாம் சரிபார்த்து கையெழுத்து போட்டு முடிச்சாச்சா என்றாள்.

இவள் ஏன் இப்பொழுது சம்பந்தமில்லாமல் பேசிக்கொண்டு இருக்கிறாள் என்ற எண்ணத்தோடு போனை பார்த்தவன்,

“ம்…இப்போதான் சரிபார்த்து சைன் பண்ண வச்சிருக்கேன்…”என்றான்.

“இப்போ அந்த வேலையை பார்த்துகிட்டு இருக்கியா…” எனவும்,

“ஆமா ஸ்ரீ, என்னாச்சு…” என்றான்.

“ஒன்னுமில்லை ஸ்பெஷலா லஞ்ச் ரெடி பண்ணிட்டு இருக்கேன். அதான் உன்னைய கூப்பிடலாம்னு தோணுச்சு, மதியம் சாப்பிட வா கார்த்திக்…” என்றாள் சாகித்தியா.

இது அவள் தானா என்ற எண்ணத்துடன், புரியாதவனாய், “என்ன ஸ்ரீ சொல்ற, …” என்றான்.

“ என்னாச்சு கார்த்திக் கேட்கலையா, எனக்கும் சரியா கேட்கலை…” என்றாள்.

“எனக்கு கேட்குது…” என்றவனை காதிலேயே வாங்காமல் ஹலோ என இருமுறை கூப்பிட்டிருந்தாள்.

“சரியா கேட்கலை கார்த்திக், சத்தமா இல்லை, போனை லவுட் ஸ்பீக்கரில் போடு…” என்றாள்.

ஈஸ்வர் இருக்கும்பொழுது கார்த்திக்கால் அவளை திட்ட கூட முடியவில்லை, தன்னை அடக்கிக்கொண்டு,

“லவுட் ஸ்பீக்கர்ல போட்டா எப்படி ஸ்ரீ கேட்கும்…” என்றான் பல்லை கடித்தபடி,

“ப்ச்…நீ போடு அதெல்லாம் கேட்கும்…” என்றாள் அதட்டலாய்,

ஈஸ்வர் உதட்டை மடித்து கொண்டு பைலில் கவனமாய் குனிந்தான்.

“ஏற்கனவே லவுட் ஸ்பீக்கர்ல தான் ஸ்ரீ இருக்கு…” என்றான் பொறுமையாய்,

“எப்போயிருந்து…” என்றாள் மெதுவாய்,

“முதலில் இருந்தே…” எனவும்,

ஒருநொடி அமைதியானவள்,
“அப்படினா நான் முதலில் சொன்னதெல்லாம் கேட்டுச்சா…” என்றாள் கவனமாய்,

ம் கொட்டினான் அவன் அழுத்தமாய்,

“அப்படினா வந்துரு…” என்றுவிட்டு போனை கட் பண்ணியிருந்தாள் சாகித்தியா. ஒன்றும் செய்ய இயலாதவனாய் பெரிதாய் மூச்சை இழுத்து வெளியிட்டு விட்டு ஈஸ்வரை பார்த்தான். அவன் பைலை விட்டு பார்வையை விலக்கவே இல்லை. எதுவும் பேசாமல் அவனும் வேலையை பார்க்க ஆரம்பித்தான்.

இருவரும் நெடுநேரமாக வேலையில் மூழ்கி இருக்க, ஈஸ்வரன் நிமிர்ந்து மணி பார்த்தான். பின் பைலை மூடி வைத்து விட்டு ,

“ வா கார்த்திக் போகலாம்…” என்று விட்டு எழுந்தான்.

“எங்கே ஈஸ்வர்…” என்று புரியாமல் கேட்டவனிடம்,

“ நீ லஞ்ச்க்கு போகணும்ல நான் ட்ராப் பண்றேன்…” என்று சொல்லிவிட்டு முன்னே நடக்க, கார்த்திக்கின் மூளைக்கு ஏதோ புரிந்த மாதிரி இருந்தது. சுவாரஸ்யத்துடன் அவனை பின் தொடர்ந்தான்.

அங்கே காரைவிட்டு இறங்கி வீட்டிற்குள் நுழைந்தவனை,

“வா கார்த்திக்…” என்று அழைத்து விட்டு அமரவைத்து தண்ணீர் கொண்டு வந்து கொடுத்து விட்டு வாசலை பார்த்தாள்.

வந்தவனை பார்த்ததும் அவள் அப்படியே நிற்க, அவனாலும் பார்வையை விலக்க முடியவில்லை.
சத்தமாய் இருந்த கார்த்திக்கின் தும்மலில் திடுகிட்டவள்,

“வா…வாங்க சாப்பிடலாம்…” என்று
விட்டு டைனிங் டேபிளை நோக்கி நடந்தாள்.
இருவரும் வந்து அமர  தட்டை வைத்தவள் 
சாதம் சாம்பார், அப்பளம், மசால் வடை, வெண்டைக்காய் வறுவல், கீரை கடையல், சேனைக்கிழங்கு ரோஸ்ட், பருப்பு பாயசம் என முழு விருந்தே ஏற்பாடு பண்ணியிருந்தாள். பார்த்தவுடனேயே தெரிந்து விட்டது ஈஸ்வருக்கு எல்லாமே அவனுக்கு விருப்பமான உணவுகள்!

கார்த்திக் , “ ஹே நீ தனியாவா எல்லாத்தையும் சமைச்ச, சூப்பர் ஸ்ரீ….” என்றான் ஆச்சர்யத்துடன்,

புன்னகையுடன் அவனுக்கு பரிமாறியவள் சாப்பிட சொன்னாள்.

ஈஸ்வர் காதலுடன் உணவை பார்த்து உண்ண, சாகித்தியாவின் பார்வை ஈஸ்வரை விட்டு அசையவில்லை. அதே நேரம் கார்த்திக்கின் தட்டில் வேண்டியதை பார்த்து வைத்து கொண்டே இருந்தாள். மனம் நிறைந்து போனது கார்த்திக்கிற்கு!

சரியாய் கார்த்திக் உண்டு முடித்து கைகழுவும் நேரத்தில் போன் வந்து விட சமையல் அறை வாயிலில் நின்று பேச ஆரம்பித்தான்.

கார்த்திக்கை ஒரு பார்வை பார்த்து விட்டு, சாகித்தியாவின் கையை சட்டென்று இழுத்து தன் அருகில் இருந்த நாற்காலியில் அமர வைத்திருந்தான் ஈஸ்வரன். திடுக்கிட்டு விழித்தவளை சட்டை செய்யாது ஒரு தட்டை அவள் பக்கம் நகர்த்தி அதில் பரிமாறி விட்டு தன் சாப்பாடை அவன் தொடர, அவனை பார்த்தவாறே சாப்பிட ஆரம்பித்தாள் சாகித்தியா.

எதேச்சையாக திரும்பிய கார்த்திக்கின் கண்களில் அத்தனையும் பட்டுவிட, அவ்வளவு சந்தோசம் அவனுக்கு. அவர்கள் இப்படியே இருக்க வேண்டும் என திடீர் பிரார்த்தனை வைத்தவன், அவர்களை கலைக்க எண்ணம் இல்லாமல் கணத்தில் முடிவெடுத்து அருகில் வந்து,

சாகித்தியா எழப் பார்த்ததும், பதறி
“உட்காரு சாகித்தியா சாப்பிடறப்போ எதுக்கு எழுற,…” என்றான் வேகமாய்,

அவனது வேகத்தில் அப்படியே அமர்ந்து விட்டவள், உனக்கு மோர் எடுத்துட்டு வரேன் கார்த்திக் என்றாள்

“இல்லை எனக்கு வயிறு நிறைஞ்சுடுச்சு… நீ சாப்பிடு…” என்றவன்
ஈஸ்வரிடம் திரும்பி,
“நம்ம ஹோட்டலுக்கு தேவையான பொருட்கள் கொஞ்சம் வாங்கனும் நான் உன் காரை எடுத்துட்டு போறேன், திரும்பும் போது உன்னைய பிக் அப் பண்ணிக்கிறேன்..” என்றுவிட்டு அவன் கிளம்ப,

வழியனுப்புகிறேன் என்று எழப்போனவளை,

“உட்காரு ஸ்ரீ…” என அதட்டிவிட்டு சென்றான் அவன். சென்றவனையே பார்த்து கொண்டிருந்த ஈஸ்வரின் இதழ்களில் புன்னகை.

ஆனால் அதுவரை நிமிர்ந்து அமர்ந்து சாப்பிட்டு கொண்டிருந்தவள் தட்டை கவனமாய் பார்த்தபடி சாப்பிட ஆரம்பித்தாள். ஒரு படபடப்பு வந்து அமர்ந்து கொண்டது. பாத்திரங்களை எடுத்து கொண்டு சமயலறைக்குச் சென்றவள் சிங்கில் போட்டுவிட்டு கழுவ ஆரம்பித்தாள். ஹாலில் டீவி சத்தம் கேட்டுக்கொண்டிருக்க அவன் இருப்பு என்றுமில்லா நாளாய் புதிதாக படபடப்பை தர வெகு ப்ரயர்த்தனப்பட்டு வேலை செய்து கொண்டிருந்தவளின் கழுத்தில் பட்ட சீரான சுவாசத்தில் பதட்டத்துடன் அவள் திரும்ப எத்தனிக்க, திரும்ப விடாமல் அப்படியே கைகளை முன்னே கொண்டு வந்து அவளை லேசாய் கட்டிக்கொண்டவன், விழிகளை மூடியபடி அவள் தோளில் தலை சாய்த்து கண்களை மூடிக்கொண்டான். அதுவரை இருந்த அலைப்புறுதல் நீங்கி ஆசுவாசம் தோன்ற புன் முறுவல் வந்து ஒட்டி கொண்டது சாகித்தியாவின் இதழ்களில்! அவன் அப்படியே இருக்க , வேலைகளை முடித்தவள் திரும்பி அவன் முகம் பார்க்க, விழிகளை திறந்தவன் அவள் முகத்தை பார்த்து கொண்டே அவளை விட்டு விலகி வெளியே சென்று படியேறினான்.

அவன் சென்ற ஓரிரு நிமிடங்கள் கழித்து அறைக்கு சென்று பார்த்தாள். கட்டிலில் அவள் பக்கம் படுத்திருந்தபடி கண்களை மூடியிருந்தான். நேற்று அவன் இடத்தில் தான் படுத்திருந்தது நினைவில் வர, லேசாய் முகம் சிவக்க, மெல்லிய முறுவலுடன், மெதுவாய் அடிமேல் அடிவைத்து கட்டில் அருகில் சென்றவள், அவன் கவனத்தை கலைக்காமல் அருகில் படுக்க முயன்றாள். முயன்றாள் மட்டுமே! ஏனனில் அடுத்த வினாடி சட்டென்று அவளை இழுத்து தன்மேல் போட்டுக்கொண்டான் விஷ்வேஸ்வரன்!

Advertisement