Advertisement

ஆயுள் கைதி 10

மறுநாள் ஹோட்டலில் வேலையின் ஊடே அவ்வப்பொழுது சாகித்தியா ஈஸ்வரின் முகம் பார்க்க, அவனோ வழக்கம்போல வேலை ஒன்றே கடமை என முழுமூச்சாய் வேலையில் ஈடுபட்டிருந்தான்.
அவளுக்கே சந்தேகமாக போயிற்று!
“நான் ரூம்ல தான் தூங்கினேனோ…?!ஒருவேளை கனவா எதுவும் இருக்குமோ…” என யோசித்தவள், இல்ல நம்ம நேத்து ரூம்க்கு போகவே இல்லையே.. என தலையை உலுக்கி கொண்டாள்.

“என்னாச்சு ஸ்ரீ..” என்று கேட்டபடி அருகில் இருந்தான் கார்த்திக். நிதானமாக கையில் இருந்த பைலை மூடி வைத்து விட்டு அவன் பக்கம் திரும்பியவள்,

“உனக்கு என்னை கவனிக்கிறது தான் வேலையா…”என்றாள்.

ஒரு நிமிடம் விழித்தவன், உடனே
“அஃப்கோர்ஸ்…” என்றான் இருகைகளையும் விரித்தபடி. அவன் சொன்ன பாவனையில் அவளுக்கு சிரிப்பு வந்து விட அந்த சிரிப்பு கார்த்திக்கையும் தொற்றி கொண்டது.

சிரிப்புடன் நிமிர்ந்தவனை ஈஸ்வர் ஒரு பார்வை பார்க்க, இதழில் இருந்த சிரிப்பை அப்படியே விழுங்கியவன், மெல்ல குனிந்து சாகித்தியாவிடம்,

“நம்மளை நோக்கி ஒரு பேராபத்து வரப்போகுது ஸ்ரீ…” என்றான் கிசுகிசுப்பாய்..

“என்ன சொல்ற கார்த்திக்…” என்றாள் அவள் புரியாமல்.

“ம்..உன் ஆள் நம்மளை..இல்ல என்னை பார்த்து முறைக்கிறான்…” என்றதும்,

இப்பொழுது அவனை விட பலமாய் முறைத்தாள் சாகித்தியா.

“இப்போ எதுக்கு நீ முறைக்கிற ? உன் வீட்டுக்காரனை ஆபத்துனு சொன்னதுக்கா..” என்று கார்த்திக் பாவனையுடன் கேட்க, சுற்றி முற்றி பார்த்தவள் யாருடைய கவனத்தையும் கவராவண்ணம் நங்கென்று செருப்பு காலால் கார்த்திக்கின் சூவை மிதித்திருந்தாள்.

“ஸ்…” என்ற சத்தத்துடன் அடங்கி போனான் அவன்.

“இப்படியே நீ பண்ணிக்கிட்டு இருந்த, நம்ம ரெண்டு பேரும் வெளியே போயிடுவோம்…” என்றாள் நமட்டு சிரிப்புடன்,

“இதென்ன ஸ்கூலா..? வெளியே அனுப்புறதுக்கு…” என்றான் கார்த்திக் கிசுகிசுப்பான குரலில்

அவ்வளவு தைரியமா உனக்கு என்ற பார்வையை சாகித்தியா பார்க்க, சரியாய் அந்நேரம் கார்த்திக் என்று அழைத்திருந்தான் ஈஸ்வர்.
சாகித்தியா விரிந்த சிரிப்பை மறைப்பதற்காக குனிந்து கொண்டாள்.

ஆடிட் முடிவதற்குள் ஒரு வாரமாக ஓயாத உழைப்பாகிப் போனது அனைவருக்கும். மேலிருந்து கடைநிலை ஊழியர் வரை நேரம் தாண்டி உழைத்து முடித்திருந்தனர். அனைவருக்குமே ஒரு மாற்றம் தேவை என்பதற்காக ஆடிட் முடிந்தவுடன் அவ்வார இறுதியில் ஹோட்டலில் பணிபுரிபவர்களுக்கு ‘ஈஸ்வர் ரிசார்டில்’ ஒருநாள் ஓய்வெடுக்க ஏற்பாடு செய்திருந்தான் ஈஸ்வரன்.

குட்டி குட்டியாய் குடில்கள் ஏற்பாடு செய்ய பட்டிருக்க, அவரவர்கள் மதிய உணவை முடித்துக்கொண்டு அவர்களின் குடில்களில் இருந்துவிட்டு மாலையில் ஒன்றாய் கூடினர். சாகித்தியாவிற்கு பயங்கர களைப்பு . மதியமே வந்தவள் உண்டுவிட்டு காட்டேஜிற்கு சென்று படுத்து உறங்கிவிட்டாள். பொழுது மங்கி இருள் பரவிய வரை நல்ல உறக்கம். அதன்பின் எழுந்து முகம் கழுவி ஒரு முழு வெள்ளை நிற காட்டன் அனார்கலியை உடுத்தி கொண்டு வெளியே வந்தாள்.

ஆங்காங்கே பாட்டு அது இதுவென உற்சாகமாக இருக்க, சுற்றிலும் பார்வையை பதித்தவாறே எதிர்ப்பட்டவர்களிடம் பேசியபடி நடந்து வந்தவள், அழகுகாய் அமைக்க பட்டிருந்த செயற்கை குளத்தின் அருகே புல்வெளி தரையில் அமர்ந்தாள்.

ஒன்றிரண்டு பேர் அவளருகில் அமர்ந்து பேசவென வர அப்படியே கொஞ்சமாய் கூட்டம் சேர்ந்து விட்டது. கேம்ப்பையர் நடுவே இருக்க சுற்றி ஆட்கள் என அந்த இடமே உற்சாகமாய் மாறி இருந்தது.

அப்பொழுது வந்த ஈஸ்வரனையும் கார்த்திக்கையும் இவர்கள் அழைக்க, அலட்டாமல் வந்து அந்த வட்டத்தில் அமர்ந்து கொண்டான் ஈஸ்வரன்.

நேர் எதிரே சாகித்தியா! பளிச்சென்று கழுவிய ஒப்பனையற்ற முகம். உச்சியில் மட்டும் குங்குமம். விரிந்த கூந்தல் ஒரு தோள் பக்கமாய் வழிந்திருக்க, எதிரில் இருந்த ஜூவாலையின் ஒளியில் ஜொலித்து கொண்டிருந்தாள்.

அருகில் பேசிக்கொண்டிருந்தவள் ஏதோ உள்ளுணர்வில் திரும்பி பார்க்க, நிதானமாய் சாகித்தியாவின் மீது பார்வையை பதித்திருந்தான் ஈஸ்வரன்.

எப்பொழுதுமில்லாத பார்வை! அவள் நோக்கிய பின்னும் அவன் விழிகளை விலக்கவில்லை. ஓரிரு நொடி யோசனையுடன் பார்த்தவளுக்கு அதற்குமேல் அதன் வீச்சை தாங்க முடியவில்லை. வேறுபக்கம் திரும்பி கொண்டாள். அதன்பின்னும் அவ்வப்போது தன்பக்கம் வந்த அவனது விழிகளை உணர்ந்தே இருந்தாள். அதனால் மறந்தும் அவன்புறம் பார்வையை திருப்பவில்லை.

இவர்களது கண்ணாமூச்சி ஆட்டத்தை கவனியாமல் அங்கிருந்தவர்கள் குதுகலமாய் விளையாட ஆரம்பித்திருந்தனர். எங்கெங்கோ சுற்றி கடைசியில் ‘ட்ரூத் ஆர் டேர்’ ல் வந்து நிற்க கண்ணாடி பாட்டில் நடுவில் சூழல ஆரம்பித்தது.

ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு விதமாய் செயல்களும் கேள்விகளும் வர , அதற்கேற்ப செய்து கொண்டிருந்தனர். பாட்டில் இம்முறை ஈஸ்வரின் முன் சுழன்று நின்றது.

“சொல்லுங்க பாஸ் ட்ரூத்தா டேர் ஆ…” என கார்த்திக் கேட்க,

“டேர்…” என்றிருந்தான் ஈஸ்வர்.

சட்டென்று என்ன கேட்பதென்று பலருக்கும் தெரியவில்லை. சில நொடி சலசலப்புக்கு பின் ஒரு குரல் வந்தது.

“ நீங்க நல்லா பாடுவீங்கன்னு தெரியும், ஒரு பாட்டு பாடுங்களேன் சார்..”என்று

“இப்படியெல்லாம் வதந்தியை யார் பரப்பி விடறது…” என்றான் இயல்பாகவே,

அதன்பின் வேண்டுகோள் வலிமையாக ஈஸ்வரனும் ஒத்துக்கொள்ளும்படி ஆயிற்று.
சரியென்றவன் என்ன பாட்டு பாடட்டும் என அவர்களையே கேட்க,

“காற்றே என் வாசல் வந்தாய் பாடுங்க சார்…” என்றது ஒரு ஏ.ஆர் ரகுமானின் விசிறி

“அதை எப்படி தனியா பாடுறது…” என ஈஸ்வரன் யோசிக்க,

“நல்லா பாடுறவங்க யாராவது சார் கூட சேர்ந்து பாடுங்கப்பா..” என்றான் வட்டத்தில் ஒருவன்.

சட்டென்று சாகித்தியாவை பார்த்தான் கார்த்திக். அவளோ அவனை கண்களாலேயே மிரட்டினாள்.

அதை கண்டுவிட்ட ஈஸ்வரன்,
“என்னாச்சு கார்த்திக்…” என்றான்.

அவளது மௌன மிரட்டல்களை சட்டை செய்யாமல் நிதானமாய் சாகித்தியாவை பார்த்தவாறே ,

“சாகித்தியா மேடம் நல்லா பாடுவாங்க சார்…”என்றிருந்தான் கார்த்திக்

அவளுக்கு மட்டும் இப்பொழுது சக்தியிருந்திருந்தால் பார்வையாலேயே எரித்திருப்பாள் அவனை! அவனை முறைத்தவாறே 

“இல்லை எனக்கு பாட தெரியாது…” என்றிருந்தாள்.

கார்த்திக் பதில் சொல்லும்முன்பே,
“ விடு கார்த்திக்…தெரியாதவங்களை ஏன் கஷ்டப்படுத்துற பாவம்…” என்றான் ஈஸ்வர், ஆனால் கண்கள் வேறு சொல்ல,

இன்னைக்கு பார்வையும் சரியில்லை பேச்சும் சரியில்லை என மனதிற்குள் அர்ச்சித்தாலும் அவன் காட்டிய கேலிபாவத்தில் சிலிர்த்து கொண்டு வரிகளை போனில் தேடி எடுத்திருந்தாள் சாகித்தியா.
அவளது செய்கையை பார்த்தவனும் பாடுவதற்கு தயாரானான். கார்த்திக் போனில் அப்பாடலின் கரோக்கியை ஓடவிட,

காற்றே என் வாசல் வந்தாய்…
மெதுவாக கதவு திறந்தாய், காற்றே உன் பேரைக் கேட்டேன் காதல் என்றாய்……
என்று மென்மையாய் ஆரம்பித்திருந்தான் ஈஸ்வர்.

இவ்வளவு மென்மையை சாகித்தியா நிச்சயம் எதிர்பார்க்கவில்லை. அவளது விழிகள் ஆச்சர்யத்தில் விரிந்தன.
விஷ்வேஸ்வரன் கண்ணை மூடி இதமாய் வரிகளுக்கு வெண்ணெய் தடவி குரல்வழியே வழுக்கவிட, சாகித்தியா தான் கூட சேர்ந்து பாட வேண்டும் என்பதையே சில கணங்களுக்கு மறந்துவிட்டாள்.
சட்டென்று சுதாரித்தவள் , தான் பாடவேண்டிய நேரத்தில் பிடித்து கொள்ள , அவள் குரலில் மற்றவர்களுக்கு ஆச்சரியமே! இருவரும் மொத்தமாய் அந்த இடத்தை ஆட்கொள்ள, சுற்றியிருந்த கூட்டம் மொத்தமும் அமைதியாய் அவர்கள் பாடுவதை ரசிக்க ஆரம்பித்திருந்தனர்.

கார்காலம் அழைக்கும்போது ஒளிந்து கொள்ள நீ வேண்டும், தாவணி குடை பிடிப்பாயா….. என்றவன் கண்களை மூடியபடி பாட

அன்பே நான் உறங்கவேண்டும் அழகான இடம் வேண்டும் கண்களில் இடம் கொடுப்பாயா… என்றவளின் விழிகள் மொத்தம் அவன் மீது மட்டும்!

பின்,
நான் சிறுகுழந்தை என்றே நினைத்தேன்.. உன் வருகையினால் வயதறிந்தேன் என்னை மறுபடியும் சிறுப்பிள்ளையாய் செய்வாயா….. என்றபொழுது தான் விழிகளை மூடினாள் அவள்.

கட்டிலிடும் வயதில் தொட்டிலிட சொன்னால் சரியா சரியா……
என்று அவன் பாட சட்டென்று விழிகளை திறந்தாள் அவள், அவன் முகத்தில் இருந்த புன்னகை கலந்த குறும்பு , மூச்சடைக்க வைக்க தட்டுத்தடுமாறி சொதப்பாமல் அடுத்த வரிகளை பெரும்பாடு பட்டு பாடி முடித்தாள். அதன் பின் பாட்டு முடியும் வரை கண்களை திறக்கவே இல்லை.

முடிந்த நொடியில் ஆர்பாட்டமான கைதட்டல் அங்கே! அனைவரது பாராட்டும் முடிந்தபின் அவர்களை உணவிற்கு செல்ல பணித்து விட்டு எழுந்து சென்றான் ஈஸ்வரன்.
அவனுக்கு முன்பே வேகமாய் சென்றிருந்தாள் சாகித்தியா. சென்ற வேகத்திலேயே உண்டுவிட்டு வெளியே திரும்பியிருந்தாள். உள்ளுக்குள் ஏதோ ஒரு தடுமாற்றம், படபடப்பு! அதை அவள் மனது ரசிப்பது வேறு புரிந்தது.

“இன்னைக்கு என்னென்னமோ பண்றான்…” என்ற முணுமுணுப்புடன் கவனத்தை திருப்பி சுற்றத்தில் பதித்தபடி நடந்தாள். மழைமேகம் சூழ மொத்த இடமும் ஆங்காங்கே மின்னி கொண்டிருந்தது.
நடந்து சிறிது தூரத்தை கடந்திருப்பாள். அங்கே சிறுவர் விளையாட பூங்கா போல அமைந்திருக்க, அதை தாண்டி நீச்சல் குளம் இருந்தது. அதை நோக்கி நடந்து வந்தவள் கண்ணில் பட்டது அந்த ஐஸ்க்ரீம் வெண்டிங் மிஷின்! டோக்கனை உள்ளே செலுத்தி விருப்பப்படி ஐஸ்க்ரீம் தேர்ந்தெடுத்து கொள்ளும்படி இருந்தது. டோக்கன் வாங்க பூங்காவின் கடைசியை நோக்கி சிறிது தூரம் நடக்க வேண்டும். வெறுங்கையோடு வேறு அப்படியே நடந்து வந்திருந்தாள். சிறிதாய் இருந்த ஐஸ்க்ரீம் சாப்பிடும் ஆசை கரைந்து போய்விட பேசாமல் திரும்பி நடக்க எத்தணிக்கையில்,

“மேம் சார் கொடுக்க சொன்னாங்க…” என்றபடி டோக்கன் ஒன்றை கொடுத்து விட்டு சென்றான் டோக்கன் கொடுப்பவர்களில் ஒருவன்!

கார்த்திக்காக இருக்குமோ என்ற யோசனையில் டோக்கனை வாங்கிக்கொண்டு நிமிர்ந்து பார்த்தாள். நீச்சல் குளம் அருகில் நின்றிந்தான் ஈஸ்வரன். ஐஸ்க்ரீம் ஒன்றை எடுத்து கொண்டு அவனருகில் சென்று அவனை போலவே தண்ணீரில் பார்வையை பதித்து நின்றவள் சட்டென்று ஞாபகம் வந்தவளாய் அவன் பக்கம் திரும்பி,

“உங்களுக்கு….” என்றாள்.

புன்னகையுடன்
“ ம்ஹும்…” என்று தலையசைத்தான் அவள் பக்கம் திரும்பியவாறே..

ம் என்றவள் கரையை ஒட்டி மெதுவாய் நடந்தவாறே ஐஸ்க்ரீமை காலியாக்கி கொண்டிருந்தாள்.
திடீரென சடசடவென பெரிதாய் மழைத்துளிகள்! மொத்தமாய் நனைத்து விடும் அளவிற்கு பெரிதாய் பொழிய, அவர்கள் இருந்த இடத்தில் ஒதுங்குவதற்கு இடமே இல்லை. சுற்றி முற்றி பார்த்ததில் ஸ்விமிங் பூல் ட்ரெசிங் ரூமை ஒட்டி மாடிக்கு ஏறும் படிகளுக்கு கீழே இருந்த சிறு இடம் தென்பட , இருவரும் ஓடிச்சென்று அங்கே நின்று கொண்டனர்.
ஒருவர் இருக்கமட்டுமே போதிய இடத்தில் இருவரும் இடித்து தான் நிற்க வேண்டியிருந்தது. வந்த வேகத்தில் நேரெதிராய் ஒருமுறை மோதி வேறு கொண்டனர். அவன்புறம் திரும்பிய பொழுது தான் சாகித்தியா பார்த்தாள் ஈஸ்வரின் வெள்ளை சட்டையில் நெஞ்சருகே அவள் நெற்றி குங்குமம் லேசாய் ஒட்டியிருந்ததை! சட்டென்று அதை தட்டி விட எழுந்த கையை அடக்கிக்கொண்டு அவனை பார்த்தாள்.

“என்னாச்சு…”என்றான் அவன்.

தன் உச்சியையும் அவன் சட்டையையும் ஒரு விரலால் சுட்டிக்காட்டி,
“அது…குங்குமம்…” என்றாள் மெதுவாய்…

அப்பொழுது தான் கவனித்தான் அவள் வகிட்டில் இட்டிருந்த குங்குமத்தை! ஏதோ ஒரு விவரிக்க முடியா உணர்வு மனதுக்குள்!

அதன்பின் நகரும் எண்ணம் சிறிதும் இல்லை அவனுக்கு! சாகித்தியா அவன் பார்வையை தவிர்த்துவிட்டு வெளியே பார்த்தாள்.

மழை வந்த வேகத்தில் போயிருந்தது. மெதுவாய் இறங்கி நடக்க ஆரம்பித்திருந்தாள். செயற்கை குளம் அருகில் வந்த பொழுது , திடீரென பெய்த மழையில் லேசாய் நீரும் மண்ணுமாய் கலந்து நிற்பது தெரிய, தன் உடையை பார்த்து விட்டு எப்படி கால் நனையாமல் போவது என யோசித்த வேளையில், பின்னிலிருந்து அவளை அலேக்காக தூக்கி இருந்தான் விஷ்வேஸ்வரன்!

Advertisement