Advertisement

  • ஆயுள் கைதி 1

 

நேரம் காலை ஒன்பது பதினைந்து. அந்த இ-கிளாஸ்  கருப்பு நிற மெர்ஸிடஸ் பென்ஸ்  பல ஏக்கர்களை அடக்கி வேலியிட்ட கான்க்ரீட் காட்டிற்குள் நுழைந்தது. பார்க்கிங்கில் காரை நிறுத்திவிட்டு தன் கூலர்ஸை கழட்டியபடி இறங்கியவள் கதவை மூடிவிட்டு காரிலேயே சாய்ந்து நின்று சுற்றிலும் சாவகாசமாய் தன் பார்வையை சுழலவிட்டாள்.

 

காலை நேர பரபரப்பு காற்றையும் தொற்றிக் கொண்டு பரபரப்பாய் வீச, அதற்கும் தனக்கும் சம்பந்தமில்லாததைப் போல மெதுவாய் நடந்தவள், ஐந்து நிமிடத்தில் கடக்க வேண்டிய இடத்தை பதினைந்து நிமிடத்தில் கடந்து வந்து நின்றாள் அந்த பளபளக்கும் கட்டிடத்தின் முன்!

 

அண்ணாந்து பார்க்கும் உயரம் தான்! பெருமை தலை தூக்கும்பொழுதே ஏளனப் புன்னகை ஒன்றும் தோன்றிவிட ,இதுவரை இருந்த இயல்பு மாறி உணர்வில்லா முகமூடி ஒன்றை முகத்தில் அணிந்து கொண்டு, தன்னையழைத்த கைபேசியை காதிற்கு கொடுத்து,

 

“யெஸ் சுந்தர்… ரீச்சுடு…” என்றவாறே எதிர்ப்பட்ட காலை வணக்கத்திற்கெல்லாம் தலை அசைத்து நடையில் வேகத்தை கூட்டினாள்.

 

இளமஞ்சள் காட்டன் புடவை, மெல்லிய வைரத்தோடு, சின்ன சிவப்பு பொட்டு, தூக்கி கட்டிய குதிரை வால் மொத்தத்தில் கண்களை உறுத்தாத நேர்த்தியான அழகு.

 

நேராக தன் கேபினுக்கு சென்றவள் நிதானமாக தன் இருக்கையில் அமர்ந்து தண்ணீரை பருகினாள். சில நிமிடங்களில் கதவை தட்டிவிட்டு வந்த சுந்தருக்கு இருந்த பரபரப்பு கூட அவளுக்கு இருந்ததாய் தெரியவில்லை. கடிகாரத்தை பார்த்தவன் என்ன சொல்வதென்று தெரியாமல் நின்றுவிட,

 

லேசான சிரிப்புடன் “கமான் சுந்தர்…. டைம் இருக்கு…”  என்றாள்.

 

“மேம்…” என்றவன் மேலும் தயங்க , அதற்குமேலும் சோதிக்காமல் எழுந்தவள், தேவையான பைலை அவனிடம் கொடுத்துவிட்டு முன்னே நடந்து மீட்டிங்  ஹாலை அடைந்தாள்.

 

ஹீல் சத்தம் கேட்க அவள் உள்ளே நுழைகையில் இரு முக்கிய நாற்காலிகள் மட்டுமே காலியாய் இருந்தன. ஒன்று முதல் வரிசையில் இரண்டாவதாய், அவளுடையது! மற்றொன்று அனைவருக்கும் முன், நடுநாயகமாய் !

 

மற்றவர்களின் பார்வையில் இருந்த உணர்வுகளை கண்டுகொள்ளாமல் நேராய் சென்று அவள் இருக்கையில் அமர்ந்ததும்,சுந்தர் அவளுக்கு பின் வரிசையில் அமர்ந்து கொண்டான்.

 

அதற்கடுத்த நொடி கதவு திறக்க, அடர்நீல சூட்டில் முழுதாய் வளர்ந்த அரேபியக் குதிரை ஒன்று கம்பீரமான சிலுப்பலுடன் வந்து விஸ்தாரமாய் போட்டிருந்த முன்னிருக்கையில் அமர்ந்தது.

 

எதிரிலிருப்பவரை கட்டிப்போடும் மேனரிசம், கத்தியினும் கூரிய பார்வை, முகத்தில் குடியிருக்கும் அலட்சியபாவம், அதையும் தாண்டிய இறுக்கம்.

 

“வி வி ஹோட்டல்ஸ்” குடும்பத்தினரின் வாரிசு. “ஈஸ்வர் ஹோட்டல்ஸ், ரெஸ்டாரெண்ட்ஸ், ரெசிடென்ஸிஸ்” சாம்ராஜ்யத்தின் அரசன்! அவன் விஸ்வேஸ்வரன்!

 

அனைவரின் பார்வையும் பயத்தோடும், பயபக்தியோடும் அவனை பார்க்க, அவனுக்கு சளைக்கா அலட்சியப் பார்வையோடு அவனையே பார்த்திருந்தாள் பெண்ணவள்.

 

வினாடிக்கும் குறைவான நேரத்தில் அவளது பார்வையை தொட்டு மீண்ட அவனது கண்கள்,தன் அருகில் நின்ற கம்பெனி செகரிட்டரியை பார்க்க,

 

“விரிவாக்கத்தை ஆரம்பிக்கலாம்…” என்று ஆங்கிலத்தில் கூறிவிட்டு சுந்தருக்கு இரு இருக்கை தள்ளி அமர்ந்து கொண்டான் கார்த்திக்.

 

அவர்களது ஹோட்டலில் “சானிட்டரிவேர்ஸ்” ( பாத்ரூம் தொடர்பான சாதனங்கள்) புதுப்பிப்பதற்கான முடிவு எடுத்தபொழுது அதற்கான கம்பெனிகள், அதன் தரம் அவர்கள் தரும் சலுகைகள் அதை ஆராய்ந்து அதில் ஒரு கம்பெனியை தேர்வு செய்யவே இந்த கூட்டம்!

 

அதற்கான பொறுப்பை ஒப்படைக்க பட்டிருந்த கௌசிக், முன்வந்து தன் ப்ரசன்டேஷனில் ஒவ்வொரு கம்பெனியின் நிறை, குறைகள் , அவர்களின் பொருட்களையும் சலுகைகளையும் விளக்கி, கடைசியாக ஒரு கம்பெனியின் பெயரை சொல்லி அதை பரிந்துரை செய்வதாக கூறினான்.

 

விஷயங்கள் அடங்கிய பைலை ஈஸ்வரின் முன் வைத்துவிட்டு,

“கேள்விகள்…?” இருக்கிறதா என சாதாரணமாக கேட்டுவிட்டு அவன் பாட்டிற்கு கீழே இறங்க ஆயத்தமானான். யாரும் கேள்வி கேட்பார்கள் என நினைக்கவில்லை போலும்! அவ்வளவு நம்பிக்கை அவனுக்கு.

 

“யெஸ் மிஸ்டர். கௌசிக்…” என்றபடி அவள் சற்று நிமிர்ந்து அமர, சுந்தர் பதட்டத்தோடு அவளை பார்த்தான்.

 

ஆரம்பித்தது மட்டும் தான் தெரியும், கேள்விகடலில் கௌசிக்கை முக்கி எடுத்தவள், கிட்டத்தட்ட முக்கால் மணி நேரம் பிழிந்து எடுத்துவிட்டாள். அதற்குமேல் அவன் தாங்கமாட்டான் என தோன்றியதோ!

 

“தட்ஸ் ஆல்…” என்று தன் சந்தேகங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்தாள். அப்பாடி என மூச்சுவிட்டு ஆசுவாசப்படுத்திக் கொண்ட கௌசிக்கின் நிம்மதிக்கு அந்தோ பரிதாபம், ஒரு நிமிடம் கூட ஆயுள் இல்லை.

 

பைலில் தலை குனிந்திருந்தவனை ஒருநொடி பார்த்து விட்டு நேராக கௌசிக்கை பார்த்தவள்,

 

“எனக்கு இந்த ப்ராஜெக்ட் முடிவு அவ்வளவு திருப்தியாய் இல்லை. நீங்க சொன்ன கம்பெனி விவரங்கள் சரி, ஆனால் என்னை பொறுத்தவரைக்கும் ஒரு பொருளை திரும்ப வாங்க காரணம் அதோட தரமா இருக்கணுமே தவிர அவங்க கொடுக்கிற சலுகையா இருக்க கூடாது. நீங்க சொன்ன கம்பெனி தேவைக்கு அதிகமாக டிஸ்கவுண்ட்ஸ் கொடுக்கிற மாதிரி எனக்கு தோணுது. நமக்கு வருகிற பொருட்கள் அதை தயாரிக்கிற கம்பெனியின் வேர்வரை தெரிந்து அவர்கள் ஏற்கனவே செய்து கொடுத்த வேலைகள் பற்றிய அலசல் இருந்தால் நல்லாயிருக்கும் தோணுது. சோ மிஸ்டர் கௌசிக் அண்ட் குரூப் எடுத்த முடிவை மறுபரிசீலனை பண்ணிட்டு இன்னொரு மீட்டிங் வைச்சா நல்லாயிருக்கும்னு நினைக்கிறேன்…”என்று நீளமாக பேசியவள் நிதானாமாய் நாற்காலியில் சாய்ந்து அமர்ந்து கொண்டாள்.

 

பைலில் இருந்து பார்வையை விளக்கியவன் நேராய் அவளை பார்த்தான்.அதற்குள் இருக்கையை விட்டு வேகமாய்  எழுந்திருந்திருந்தார் சதாசிவம். விஸ்வேஸ்வரனின் சித்தப்பா!

 

“இன்டீரியர் டிசைன் பண்றவங்களுக்கும் இதற்கும் என்ன சம்பந்தம்? தேவையில்லாத   விஷயத்தில் எல்லாம் தேவையில்லாமல் பேசறது சரியில்லை…” என்று அவர் சீற,

 

“ சாரி மிஸ்டர் சதாசிவம்,  தேவை இருக்கே! தேவையில்லாமயா “போர்ட் ஆப் டைரக்டர்ஸ்” ல உக்கார வச்சிருக்காங்க… அதற்கு ஏதாவது செய்ய வேணாமா…” கிட்டத்தட்ட நக்கலாகவே ஒலித்தது அவளது குரல். பின்னே அவரைவிட அதிக ஷேரை வைத்திருப்பவள் ஆயிற்றே!

 

அவளது ஏளனம் உசுப்பிவிட, “ உங்க கருத்தை யாரும் இங்க கேட்கலை….” குரலை உயர்த்தியிருந்தார் சதாசிவம்.

 

மெதுவாக இருக்கையில் இருந்து எழுந்தவள் நிதானமாய் நடந்தாள் கதவை நோக்கி!

 

கார்த்திக் சட்டென்று எழுந்து ,

“ மீட்டிங் இன்னும் முடியலை மேம், ப்ளீஸ் இருங்க…” என்றான்.

 

அவனை நோக்கி திரும்பியவள் ஒரு பார்வை பார்த்து விட்டு மீண்டும் முன்னேறினாள்.

அனைவரும் பதட்டமாய் பார்க்க,

“ மிஸ். சாகித்தியா….” கனமாய் ஓங்கி ஒலித்தது ஈஸ்வரின் குரல்!

 

நின்றவள் அழகாய் திரும்பி நின்று அவனது பார்வையை நேராய் சந்தித்தாள். மெதுவாய் அவளை நோக்கி அடியெடுத்து வைத்து அவளருகே வந்தவன் வெட்டும் பார்வை பார்க்க சளைக்காமல் பதில் பார்வை பார்த்தாள்.

 

அவளை பார்த்தவாறே “ கார்த்திக்….” என்று அழைத்து, அருகில் வந்தவனிடம்,

 

“ இந்த ப்ராஜெக்ட் டீடைல்ஸ் இன்னும் ஆழமா அனாலிசிஸ் பண்ணி இந்த வெள்ளிக்கிழமை என் டேபிளுக்கு ரிப்போர்ட் வந்திருக்கணும்.அதற்கு முன்னாடி டேவிட் ரிப்போர்ட் செக் பண்ணியிருக்கணும்….” என்று அவன் சொல்லி முடிக்க,

 

தனக்கும் அதற்கும் எந்த சம்பந்தமும் இல்லாததைப் போல் தோள்களை குலுக்கிவிட்டு விடுவிடுவென வெளியே சென்றுவிட்டாள்.

 

அறைக்கு வந்தவளை பதட்டத்துடன் பின் தொடர்ந்தான் சுந்தர். அவனது தடுமாற்றத்தை சட்டை செய்யாமல்

 

சுந்தர் இன்னைக்கு என்னென்ன வேலை…” என்றதும் மற்றதை ஒதுக்கி,

 

“பன்னிரெண்டு மணிக்கு ஒரு பிசினஸ் மீட் மேம், அப்புறம் நான்கு மணிக்கு ஹால் டெக்கரெஷன் சம்பந்தமா ஒரு கஸ்டமரை பார்க்கணும்…” என்றான்.

 

கைக்கடிகாரத்தை  திருப்பி பார்த்தாள். பதினொன்றாகி ஐந்து நிமிடங்கள் கரைந்திருக்க,

 

“ போகலாம் சுந்தர், இப்போ போனா கரெக்டா இருக்கும்…” என்றவாறு எழுந்து சென்றவளை,

 

காலையில் கடைசி நொடியில் மீட்டிங் சென்றவள் தானா என்ற விசித்திர பார்வையோடு பின் தொடர்ந்தான் அவன்.

 

ஒருவழியாக வேலையெல்லாம் முடிந்து அந்த கடற்கரை ஓரமாய் இருந்த காபி ஷாப்பிற்குள் அவள் நுழையும் பொழுது சூரியன் தன் செந்நிறத்தை நீலகடலிற்குள் முக்கால்வாசி கரைத்திருந்தான்.

 

கண்ணாடி சாளரம் வழியே கடல் தெரியுமாறு போடப்பட்டிருந்த டேபிளில் அமர்ந்தவள், ஆர்டர் எடுக்க வந்தவனிடம்,

 

“ஒரு எக்ஸ்பிரசோ, ஒரு ஐஸ்டு எஸ்கிமோ…” என்று விட்டு பக்கவாட்டில் திரும்பி கடலை

பார்த்தவாறு அமர்ந்து விட்டாள்.

 

அருகில் ஆள் அரவம் தெரிந்தும் திரும்பவில்லை. மேம் என்ற குரலில் திரும்பியவள், தன் எக்ஸ்பிரசோவை கையில் எடுத்துக்கொண்டு இன்னொரு கோப்பையை அவன்புறம் நகர்த்தி வைத்தாள். அதை சட்டை செய்யாமல் அவளையே முறைத்து கொண்டிருந்தவனை கண்டுகொள்ளாமல் அவள் பாட்டிற்கு காபியை கலக்கி கொண்டிருக்க, கடுப்பானவன்,

 

கோபமாய் காபி கோப்பையை அவள் புறமே தள்ளி வைத்தான்.

“ப்ச்…” என்ற சலிப்புடன் நிமிர்ந்தவளது கண்கள் அப்பொழுதும் அவனை மதிக்கவில்லை. கண்களை சுழல விட்டவள் பேரரை பார்த்து கையசைக்க,அருகில் வந்தவனிடம்

“ சாருக்கு இதில கொஞ்சம் ஐஸ் க்யூப்ஸ் போடுங்க…” என்றாள் அவனது கோப்பையை காட்டி!எதிரிலிருந்தவன் திருதிருவென விழிக்க,

 

“ நீங்க போங்க,ஒன்னுமில்லை…” என்றுவிட்டு ,

 

“ என்ன பண்ணிட்டு இருக்க ஸ்ரீ…” என்று அடிக்குரலில் சீறினான் அவன்.

 

 

 

 

Advertisement