Advertisement

ஆதியும் நீயே..அந்தமும் நீயே

“அம்மு..அம்முக்குட்டி..ஓடாத நில்லு..அம்மா சொன்னா கேட்கனும்” தூக்கிசெருகிய சேலையும் வியர்வை படிந்த முகமுமாக காலையிலேயே மூன்றரை வயதே நிரம்பிய தன் குட்டி மகள் ஸ்ரீஜாவின் பின்னே ஓடிக்கொண்டு இருந்த அண்ணியை பார்த்து எழுந்த சிரிப்பை வாய்க்குள்ளேயே புதைத்த பாவனா அண்ணிக்கு உதவி செய்கிறேன் என்ற பெயரில் தன் செல்ல மருமகளுடன் ஓடிபிடித்து விளையாடிக்கொண்டிருந்தாள்.

அவளின் சேஷ்டைகளை அறியாதவளா ஆதிரா? கடிகாரத்தில் தன் நயனவிழிகளை ஒரு நிமிடம் கலந்தவள் நேரமாவாதை உணர்ந்து ஓடுவதை நிறுத்திவிட்டு ஒருகையில் தட்டும் ஒருகையை இடுப்பிலும் வைத்து விளையாட்டில் மும்முரமாக இருந்த இருவரையும் பார்த்து

“பாவனா! அம்மு! ” என்று அழுத்தி அழைத்தாள்.ஆதிராவின் அழுத்தமான குரலில் இருவரும் ஒரு நிமிடம் விழித்துவிட்டு ஒரே நேரத்தில்

“சாரி அண்ணி” “சாதி ம்மா” என்று கூறவும் புன்னகைத்தவள்

“நேரமாயிட்டுதுடா போதும் விளையாட்டு..பாவனா காலேஜ் போகனும்..ம்ம்..ஓடு கிளம்பு..அம்முக்குட்டி இங்க வாங்க..கொஞ்சமா சாப்பிட்டா தானே நந்து,அனி கூடலாம் விளையாடலாம்..ம்ம்?”

எனவும் நாடியை தட்டி யோசித்த அம்மு தன் பிஞ்சுவிரலை பாவனாவிடம் நீட்டி

“பானா நீ போ, நான் சாப்பிதனும்” என்று அத்தைக்கு ஆடர் ஒன்றை போட்டுவிட்டு தத்தக்கபித்தக்க என்று தன் அன்னை ஆதிராவிடம் ஓடி சென்றாள்.

அவளின் அந்த செயலில் தன்னை மறந்து ஒரு நிமிடம் லயித்து நின்ற பாவனாவும் தனக்கு நேரமாவதை உணர்ந்து தனது அறையில் அமைந்து இருந்த குளியலறையினுள் நுழைந்துகொண்டாள். அவள் தயாராகி வெளியில் வர அம்முவும் தயாராகி தன் தாயுடன் இணைந்து பூஜை அறையில் ஸ்லோகம் ஒன்றை ஒப்புவித்து கொண்டு இருந்தாள் புன்னகையுடன் அவர்களை நெருங்கிய பாவனா விழிகளை மூடி

“என் அண்ணிக்கு பூரண சௌகர்யத்தை கொடு” என்று இறைவனிடம் நிதமும் வைக்கும் கோரிக்கையை முன்வைத்தாள்.ஆதிரா இல்லாவிடில் தங்கள் உலகம் இல்லை என்ற உண்மை உணர்ந்தவள் அல்லவா?

பின் பாவனாவிற்கு அன்றைய செலவிற்கான பணத்தை வழங்கிய ஆதிரா அவளின் மதிய உணவுபெட்டியையும் கொடுத்துவிட்டு ஸ்ரீஜாவை தன் கைகளில் தூக்கியவள் மறுகையில் தனது ஹேண்ட்பாக்கை போட்டு கொண்டு இருவரையும் வெளியேற்றி வீட்டை பூட்டி வர நேரம் எட்டை காட்டியது. கையில் இருந்த கறுப்பு பட்டி கடிகாரத்தின் ஓட்டத்தை கண்டு பெருமூச்சொன்றை புன்னகையுடன் வெளியேறியவளை பார்த்து கிண்டலாக சிரித்த பாவனா

“என்ன அண்ணி இன்றைக்கும் கரக்ட் டைமுக்கு வீட்டிலிருந்து வெளியேறிவிட்டோமா?” எனவும் அவள் தலையில் செல்லமாக கொட்டியவள்

“வாயாடி..அம்முவ விட என்னை படுத்துறது நீ தான்.சில சமயம் அவளா, நீயா குழந்தை என்றே கண்டு பிடிக்க முடியல. உனக்கு வர வர வாலு கூடிட்டுது. .சரி..சரி.. நேரம் சரி பாவனா குட்டி காலேஜ் பஸ் வந்துடும்.நேரத்துக்கு சாப்பிடு.. ஏதும்னா கால் பண்ணு. லெசர்ஸ் ல தூங்காத..அப்புறம் அண்ணி இதுல என்ன சொல்லி இருக்காங்க புரியல என்று சொல்லு..அப்போ இருக்கு..என்ன சரியா?”

அனைத்துக்கும் மண்டையை உருட்டியவள் கைமறைவில் ஒரு கொட்டாவியை வெளியேற்றி பாவமாக முகத்தை வைத்து கொண்டு

“ஏன் அண்ணி உங்களுக்கு லெக்சர்ஸ் அடிக்க வேற டைமே கிடைக்கலையா?அதுவும் வாசல்ல வச்சு..தேவையா? ஏய் ஸ்ரீ உன் அம்மா சுத்த மோசம்”எனவும்

“ஆமா பானா” என்று மண்டையை உருட்டினாள்..அவளை நோக்கி

“ம்ம்?” என்று ஆதிரா கேள்வியாக இழுக்கவும் சட்டென்று தாயின் கழுத்தை சுற்றி தன் பிஞ்சுக்கைகளை சுற்றி போட்டவள்

“இத்த மா..பானா தா மோதம்” என்றாள்.

 அவளின் பாஷையில் வாய்விட்டு சிரித்த பாவனா “குட்டிபிசாசு..”என்று கூறி அழுத்தி அவள் கன்னத்தில் முத்தம் கொடுத்துவிட்டு அண்ணியின் கன்னத்திலும் முத்தம் ஒன்றைவைத்து அவர்கள் மீண்டும் தன் பெயரை ஏலம் போடும் முன்

“பாய்” என்று கத்தியவாறே வாசலை திறந்துகொண்டு பஸ்நிலையத்தை நோக்கி ஓடினாள்.

அவளை பார்த்து சிரித்த ஆதிராவும் வாசலை தாண்டி வீதியில் இறங்கி பாடசாலையை நோக்கி நடக்க ஆரம்பித்தாள்.வீதியில் இறங்கியவுடன் காணும் வாகனங்கள் விலங்குகள் கடைகள் என்று தன்னை கவரும் விதத்தில் அமைந்திருந்த அனைத்தை பற்றியும் தன்னிடம் வினவிய மகளுக்கு பொருத்தமான பதில் அளித்தாலும் அவள் விழிகளில் கூடுதலாக ஒரு கவனமும் ஒட்டிக்கொண்டது.

இப்பொழுது அவர்களை பற்றிய விபரங்களை சிறிது காண்போம்

ஆதிரா இருபத்து ஐந்து வயது நிரம்பிய அழகிற்கே சிம்மசொப்பனமாக விளங்குபவள்.அழகிய விழிகளும் எப்பொழுதும் சிரிக்கும் உதடுகளும் அசாத்தியமான உயரமும் நிமிர்வும் அன்னநடையும் என ஒரு நடமாடும் தேவதை அவள்.அமைதிக்கு அடிபணிந்து ஆளுமையின் திறம்படைத்த ஒரு குடும்பத்தை நிர்வகிக்கும் தலைவி.எதையும் நின்று நிதானமாக யோசித்து நேர்மையின் வழி நடப்பவள்.இவளை எந்த ஒருவிடயத்தின் போதும் பதறிய முகத்துடன் காண்பது அரிது..

மொத்தத்தில் ஒரு பெண் எவ்வாறு இருக்கவேண்டும் என்பதை நிதம் நிதம் பாவனாக்கும் ஸ்ரீஜாக்கும் தனது வாழ்க்கை முறைமூலம் கற்பிக்கும் ஆசிரியை.அவரகளுக்கு மட்டும் அல்ல.வீட்டின் அருகில் உள்ள நற்பெயர் பெற்ற பாடசாலை ஒன்றில் தரம் ஒன்றிலிருந்து ஐந்து வரையிலான மாணவர்களுக்கு ஆசிரியையும் கூட..அவளின் திறமைக்கு கல்லூரி ஒன்றில் விரிவுரையாளர் பணி கிடைத்தும் கூட அவள் இந்த தொழிலை தேர்வு செய்தமைக்கு காரணம் ஒன்று ஸ்ரீஜா.இரண்டாவது அவளது மனமைதி..

பாவனா அண்ணியின் வழிநடத்தலில் கல்வியிலும் குணத்திலும் உயர்ந்து விளங்குபவள்.கொஞ்சம் துறுதுறுவென இருக்கும் இவள் கல்லூரி மாணவி தான் என்பதை நொடிக்கொருமுறை நிரூபிப்பவள்..அண்ணி இருப்பதனாலோ என்னவோ தனது வாழ்க்கை பற்றி எள்ளளவும் சுயமுடிவுகளை எடுத்தது இல்லை.ஆதிராவே கூறினாலும் கூட அவளை கொஞ்சி கெஞ்சி சமாளிக்கும் திறமை உள்ளவள்.பெரியவர்களிடம் மரியாதையுடன் நடந்துகொள்ளும் இவளை யாராலும் எளிதில் வெறுக்க முடியாது..மொத்தத்தில்  பக்குவபட்ட மனதுடன் அதை வெளியில் காட்டாமல் வலம்வரும் பட்டாம் பூச்சி..

ஸ்ரீஜா தான் தாயினதும் அத்தையினதும் வாழ்வில் இருக்கும் ஒளிவிளக்கு..மூன்றரை வயது குழந்தைக்கே உரிய சுறுசுறுப்புடன் துறு துறு என வலம் வரும் அம்மு ஒரு போதும் தாயை மீறியதில்லை.ஆதிராவின் அழுத்தமான பார்வையே அவளை கட்டுப்படுத்தும்.ஆனால் குழந்தை, குழந்தை என்ற வரமுறைக்குள் நடமாடும் மட்டும் ஆதிராவும் அவளை முடக்கி வைத்தது இல்லை.ஆதிராவின் பாடசாலையிலேயே மூன்று வயது தொடங்கி ஐந்து வயது குழந்தைகளுக்கென நர்ஸரி போன்ற அமைப்பு இயங்குவதால் ஸ்ரீஜாவை தன்னருகிலேயே வைத்திருக்க தான் பாடசாலை செல்லும் பொழுது அங்கே விட்டு செல்வாள்..

இவர்கள் மூவரும் ஒரு குடியிருப்பு பகுதி ஒன்றில் உள்ள அழகான அழகிய கூண்டில் வசிக்கின்றனர்.

தெருவில் இறங்கி மகளுடன் பள்ளிக்கு நடைபோட்டு கொண்டிருந்தவள்

“ஆதி..ஆதி.” என்ற அழைப்பில் நின்று திரும்பினாள்,அவள் கடந்து வந்த ஒரு வீட்டின் வாசலில் இருந்து கரண்டியுடன் ஓடி வந்த தோழியை பார்த்து வாய்விட்டு சிரித்தவள் அருகில் வந்து அவள் முறைக்கவும் தான் சிரிப்பை முயன்று கட்டுப்படுத்தினாள்.

“ஹா..ஹா..சாரி சுதா..ஹி..ஹி..இது என்னடி கோலம்..அதுவும் ரோட்டுக்கு இப்பிடியே யாரும் ஓடி வருவாங்களா?”

“ஆந்தி..ஆந்தி..ஏன் ஓதி வந்தாங்கமா?அவங்க வீத்தயும் பூச்சாண்த்தி வந்துத்தா?”

எனவும் மறுபடியும் ஆதி சிரிக்க தொடங்க பாய்ந்து அவள் வாயை மூடிய சுதா

“வாயை மூடு கழுதை..அம்மாவும் பொண்ணும் காலங்காத்தால என்னை வந்து கலாய்க்குதுகள்” என்று அங்கலாய்க்கவும் தன் சிரிப்பை புன்னகையாக முகத்திலேயே தேங்க விட்டவள்

“சரி டி,, சொல்லு..ஏன் இன்னும் தயாராகல?”

“அடி ஆதி..மதனோட அப்பாக்கு உடம்புக்கு முடியலை என்று படுத்திருக்கிறார்.அவர் கூட இன்றைக்கு நிற்க யோசித்தேன்..அதான்” என்று இழுக்கவும்

“அண்ணாக்கு இப்போ எப்பிடி இருக்கு?என்ன ப்ரொப்ளம்?” என்று அவரின் உடல்நிலையை தெரிந்து கொண்டவள்

“சரி இப்போ நான் என்ன செய்யனும் சொல்லு”

“இல்லடி ஸ்கூல்ல எனக்கு லீவ் சொல்லிடு.அப்பிடியே இன்றைக்கு சக்கரவர்த்தி சார் என்னை மீட் பண்ண சொன்னார்..அதையும் ஒருதடவை விசாரிச்சுக்கோ..” எனவும்

“சரி டி..நீ அண்ணாவ பாத்துக்கோ..நான் எல்லாத்தையும் பாத்துக்குறேன். இப்போ நேரமாகுது டி..கிளம்புறேன்.”

என்றபடி விடைபெற்று சென்றவளை பார்த்தவளின் முகம் மெல்ல மெல்ல வேதனையாக மாறியது..தோழியை பற்றி சிந்தித்துகொண்டிருந்தவளுக்கு சிலர் தன்னை விசித்திரமாக பார்க்கவும் தான் நின்ற கோலம் உரைக்க அவர்களுக்கு ஒரு அசட்டு சிரிப்பை அளித்தவள் கையில் இருந்த கரண்டியால் தன் தலையில் தட்டியவாறே வீட்டிற்குள் சென்றாள்.

பஸ் நிறுத்தத்திற்கு வந்த பாவனாவை வரவேற்றனர் அவளது கல்லூரி நண்பிகள் கூட்டம்.அவள் கற்பது ஒரு மகளிர் கல்லூரியில் என்பதனால் ஆண்களுக்கு பதில் சேட்டைகளை இவர்களே செய்து கொள்வார்கள்.அதிலும் இந்த பாவனாவின் கூட்டம் அடிக்கும் கொட்டம் கொஞ்சநஞ்சம் அல்ல.தனது வால்தனம் யாருடைய மனதையும் காயப்படுத்திவிடக்கூடாது என்பதில் மட்டும் பாவனா மிகுந்த கவனமாக இருப்பாள். அவளின் அந்த குணத்தினாலேயே இதுவரை எந்த தண்டனைகளுக்கும் உள்ளாகாமல் தப்பித்து வருகிறாள்..

“ஹேய் பாவனா எப்பிடிடி எப்ப பார்த்தாலும் இப்பிடி சிரித்தமுகமாவே தரிசனம் தருகிற? என்னை பாரு,காலையிலேயே அடிச்ச அலாரத்த திரும்ப நான் அடிக்க,குழப்ப யாரும் இல்ல என்று திரும்பி படுக்க,என் தங்கை அதை அம்மாட்ட போட்டு குடுக்க,அம்மா வந்து கடைசியா என்னை அடிக்க என்று திருப்பள்ளி எழுச்சிக்கே இம்புட்டு பாடு..” என்று அங்கு இருந்தவள்களில் ஒருத்தி அங்கலாய்க்கவும்

“அடிப்போடி..இது கூட பரவால்ல..என்னை எழுப்பதான் யாரும் இல்லையேனு சொகுசா கண்ணமூடுனா போதும் நம்ம நர்மதா மேடம் வந்து கனவுல வெளுத்து வாங்குறமாதிரியே ஒரு பீலிங்கு” என்று அடுத்தவள் தன் நிலையை பகிர்ந்தாள்.

அவளின் தலையில் செல்லமாக கொட்டிய பாவனா

“நர்மதா மேம் எங்கட டிப்பார்ட்மன்டே இல்ல..அவங்க ஏன் ரம்ஸ் உன் கனவுல வாராங்க?” என்றவுடன்

“ஹி..ஹி..” என்று அசட்டு சிரிப்பை சிந்திய ரம்ஸ் என்பவள் பதில் சொல்ல முன் அவளுக்கு முன் தன் கையை நீட்டி தடுத்தவள்

“நீ சொல்லவே தேவை இல்லை..நர்மதா மேம இறக்க வார அவங்க பையன பார்த்து நீ விட்ட ஜொள்ளுல போன வாரம் இந்த ஊரே மூழ்க பார்த்ததை நாங்கள் மறந்தோம் என்று நினைத்தாயா நங்கையே?”

எனவும் மற்றைய அனைவரும் ஓஓ எனக்கூச்சல் போடவும் சிலிர்த்து எழுந்த ரம்யா

“நான் ஒன்றும் அந்த ரமேஷ பார்த்து ஜொள்ளு விடல,அந்த ரமேஷ் தான் என்னை..” என்று கூறிக்கொண்டு வந்தவள் சட்டென்று நிறுத்தி நாக்கை கடிக்கவும் அங்கு ஒரு சிரிப்பலை எழுந்து அடங்கியது..

நெளிந்து கொண்டிருந்த ரம்யாவின் அருகில் வந்த பாவனா அவளை தோளோடு அணைத்து விடுவித்தவள் தலைகுனிந்திருந்த ரம்யாவின் முகத்தை நிமிர்த்தி

“எங்கள்ட ஏன் ரம்ஸ் மறைக்க நினைக்கிற? இது மறைக்கிற அளவுக்கு தப்பான விஷயம் இல்லை..எனக்கு தெரியும் என் ஃப்ரெண்ட பத்தி..ஆனா ரம்ஸ் உன் அப்பா அம்மா உன்னோட இப்போ இல்லை.இறந்து போன அவங்கட பெயர் கெடாம நீ எது செய்தாலும் நான் உன் பக்கம் நிற்பேன்.அந்த ரமேஷ் நல்ல பையனாம்,.அண்ணிட்ட உன்னை பத்தி சொன்னபோ விசாரிச்சு சொன்னாங்க.. ஆனாலும் எதுனாலும் நல்லா யோசிச்சு செய் சரியா?”

எனவும் கலங்கிய கண்களுடன் தலையாட்டியவள்

“தேங்க்ஸ்டி.” எனவும்

ஒரு விரல் நீட்டி அடி என்றவள் தங்களை புன்னகையுடன் பார்த்து கொண்டிருந்த மற்றவர்களை பார்த்து “சரி கர்ள்ஸ்..அதோ காலேஜ் பஸ் வருது.. இன்றைக்கு ஜூனியர்ஸ் வாராங்க ல? ஸோ..விடு ஜூட்”

என்று அனைவரையும் வேறு சிந்தனைக்கு மாற்றியவள் காலேஜ் பஸ்ஸிற்குள் ஏறி அங்கு ஏற்கனவே இருந்தவர்களிடம் வம்பளக்க தொடங்கினாள்

ஆதிரா நர்ஸரிக்கு சென்று ஸ்ரீஜாவை விட்டுவிட்டு அவளருகே அவள் உயரத்துக்கு மண்டி இட்டு அமர்ந்தவள் அவளின் கன்னத்தை தடவியவாறு

“அம்முக்குட்டி” என்று தொடங்கவும்

“ம்மா அம்மு குத்தி சமத்தா இதுபா.யாதோடயும் சண்த போத மாத்தா..தெதியாதவங்க யாதோடயும் பேச மாத்தா..ஒதுங்கா சாப்பிதுவா” என்று அவள் கூற வந்ததை கூறி முடிக்கவும் புன்னகைத்தவள் அவள் கன்னத்தில் அழுந்த முத்தமிட்டுவிட்டு

“சரிங்க மேடம்..அம்மாக்கு பாய் சொல்லுங்க பார்ப்போம்” எனவும் சற்றே எம்பி ஆதிராவின் கன்னத்தில் முத்தமிட்டு கிளுக்கி சிரித்தாள் அந்த குட்டி தேவதை

பின்னர் அவளை அங்கு வேலை செய்யும் பெண்மணி ஒருவரிடம் விட்டுவிட்டு அவள் பாடசாலைக்குள் சென்று வரவிற்கான ஒப்பம் இடவும் பெல் அடிக்கவும் சரியாக இருந்தது.

“அது எப்படித்தான் சரியா பெல் அடிக்க முதல் வாறீங்களோ தெரியல ஆதிரா..முன்னதாவும் வரமாட்டீங்க..தாமதமாவும் வரமாட்டிங்க” என்று மேஜையின் அப்புறத்தில் கனத்த சரீரத்துடன் மூக்குகண்ணாடிக்கு மேலாக தன்னை நோக்கி கேட்ட அட்டெண்டருக்கு ஒரு புன்சிரிப்பையே பதிலாக கொடுத்தவள் விரைந்து சென்று காலைக்கூட்டத்தில் கலந்துகொண்டாள்.

பின்னர் மதிய இடைவேளை வரை தனது வகுப்புகளை கவனித்தவள் இடைவேளையின் போது சுதா கூறியது போல் சக்கரவர்த்தி அவர்களை சந்திப்பதற்காக முன்னனுமதி கோரிவிட்டு இவ்வளவு நேரமும் மாணவர்களை அடக்க குரலை உயர்த்தியதும் காலையில் இருந்து உண்ணாததும் ஏற்படுத்திய சோர்வில் அங்கு முன்னே போடப்பட்டு இருந்த நாற்காலிகளில் ஒன்றில் அமர்ந்தாள்.

கதிரையின் கைப்பிடியில் கையை ஊன்றி அதில் தலைசாய்த்து அமர்ந்து இருந்தவள் சற்று அப்படியே அசந்து போனாள்.

“மேம்..மேம்” என்று பியூன் வந்து அழைக்கவும் பதறி எழுந்தவள் சங்கடமாக புன்னகைக்கவும்

“என்ன மேம்? என்ன பண்ணுது..சார் உங்களை கூப்பிட்டாங்க..பார்த்த நீங்க.”என்று இழுத்தார். புன்னகைத்தவள் தலையை மறுப்பாக ஆட்டியவாறு

“ஒன்றுமில்ல நம்பி அண்ணே..சும்மா லைட்டா தலைவலி அவ்வளோ தான்..நான் பார்த்துக்கிறேன்” என்ற படியே உள்ளே சென்றவளை பார்த்து கொண்டிருந்த நம்பியின் அருகில் வந்த ஆசிரியை ஒருவர்

“என்ன நம்பி அண்ணே..என்ன பார்க்கிறீங்க?” எனவும் புன்னகைத்தவர்

“இல்ல நம்ம ஆதி மேம் பத்தி தான் யோசிச்சுகிட்டு இருந்தேன்” எனவும் புருவம் சுருக்கி பார்த்தவரை பார்த்து

“ஆமா மேம்..அவங்களை நானும் இந்த மூன்று வருஷமா பார்த்துக்கிட்டுதான் இருக்கேன்..ஒருநாளூம் யாரிடமும் எரிஞ்சு விழல..கோவமா கூட பார்த்து நான் கண்டதில்லை..புன்னகையோடவே சுத்துறாங்க..வித்தியாசமானவங்க..நல்ல குணமான பொண்ணு ..இவங்க மனசுக்கு நல்லா இருப்பாங்க ” என்று ஆருடம் கூறியவரை அந்த ஆசிரியை வித்தியாசமாக நோக்குவதை உணராமலே அப்பால் சென்றார்.

Advertisement