Advertisement

6  ‘அச்சச்சோ..அந்த குரங்கும் இன்றைக்கு வருமோ?’ என்று உள்ளே எண்ணினாலும் மனோகரிற்கு புன்னகையுடனே தலை அசைத்தாள்..அப்பொழுது மனோகர் பாவனாவை கேள்வியாக நோக்கவும்

“இது தான் என் நாத்தனார் பாவனா” என்று அவள் அறிமுகப்படுத்தும் போதே பாதியில் ஃபோனை காதிற்கு கொடுத்தவாறு அங்கிருந்து அகன்றான்..அதை யாரும் கணக்கில் எடுக்காவிடினும் கூட பாவனாவின் மனம் சட்டென்று சுருங்கி தான் போனது..

கருண் ஆதிராவின் அருகில் வந்து அமர்ந்து கதைக்கும் போதே ஸ்ரீயுடன் சேட்டை விட்டுக்கொண்டு இருந்த பாவனா அவன் குரலில் ஈர்க்கப்பட்டு அவனை நோக்கியவளின் மனதில் அவனின் உருவம் பதிந்து போனது..ஆனால் அவனோ தன்னை கணக்கிலேயே எடுக்காமல் அமர்ந்திருப்பதை கண்டவுடன் சர்ர்ர் என்று கோவம் தலைக்கு ஏற அவனை முறைத்தபடி அமர்ந்திருந்தவள் அவளை ஆதிரா அறிமுகப்படுத்தும் போது அவன் எழுந்து போனதை கண்டவுடன் சோர்ந்து தான் போனாள்.

‘பாவனா..அவன் யாரு? எவனோ ஒருத்தன் அவன் பார்த்தா நமக்கென்ன பார்க்காட்டி நமக்கென்ன’ என்று மனதுக்குள் ஒலித்த குரலுக்கு

“அதானே” என்று வெளியில் சத்தமாக கூறியவளின் தோளை தட்டி ஆதிரா

“என்ன அதானே?” என்று கேட்ட்கவும் வேகமாக மண்டையை ஆட்டியவள்

“ஹூஹூம்..ஒன்றும் இல்லை அண்ணி” என்று கூறியவாறு அங்கு வந்த சிந்துவுடன் ஸ்ரீயையும் தூக்கி கொண்டு தோட்டத்தை பார்க்க சென்றாள்..

அவர்கள் அந்த பக்கம் போகவும் தனலக்ஷ்மி வந்து ஆதிராவின் அருகில் அமர்ந்து அவள் கைகளை பற்றிய படி கதைத்தவாறு இருக்க சுமதியும் மகாதேவனும் வந்த மற்றைய விருந்தினர்களை கவனித்தவாறு இருந்தார்கள்.

சிறிது நேரத்தில் உணவு உண்ண அனைவரையும் வரும் படி அழைக்கவும் தோட்டத்தில் நின்ற பாவனாவையும் ஸ்ரீயையும் அழைத்து வர வாசலை நோக்கி ஆதிரா விரைய சிந்து பின்னால் நின்று

“அக்கா ஸ்ரீ என்கிட்ட இருக்கிறா” என்று கத்தவும் பின்னால் திரும்பி பார்த்தவாறே

“அப்போ நான் பாவனா வை கூட்டி வரேன் சிந்து” என்று கொண்டே முன்னேறியவள் எதிரில் வந்த கவின் மேல் மோதி நின்றாள்.

யாருடனோ மோதியவாறு தானே சமாளித்து நின்ற ஆதிரா அவள் நெற்றியில் கவின் ஷர்ட்டில் செருகி இருந்த கூலிங்கிளாஸ் படவும் நெற்றியை தேய்த்தபடியே நிமிர்ந்தவள் அங்கே மீண்டும் கவினை கண்டதும் சிரிப்பு பொங்கி வந்தாலும் அவன் முறைத்தபடி நின்றதை கண்டவுடன் தானும் அவனை பார்த்து முறைத்தாள்.

தன்னை அவள் முறைக்கவும் இன்னும் கடுப்பானவன்

“ஏய் என்ன கண்ணை பிடரியிலயா வைச்சுட்டு வர?” என்று அவளுக்கு கேட்கும் படி உறுமினான்.

அவனின் கேள்விக்கு நக்கலாக சிரித்தவள் கைகள் இரண்டையும் முன்னுக்கு கட்டிக்கொண்டு

“ஏன் நீங்களும் அங்க தான் கண்ணை வைச்சுருக்கிறிங்களா? என்ன ஒரு ஒற்றுமை பாருங்கவன்” எனவும்

“அன்றைக்கு குழந்தையை ஒழுங்காக பார்த்து கொள்ள தெரியாமல் அவள என்னில மோத விட்ட இன்றைக்கு நீயே வந்து மோதுற”

“ஆமாமா.. ஆனா ரெண்டு தடவையும் நீங்க என்ன நிலம் பார்த்து வந்தீங்களோ? அதான் முன்னுக்கு வாறங்க என்று தெரியுதில்ல? விலகி போறத்துக்கு என்ன? அத விட்டுட்டு இப்பிடி தூண் போல வந்து முன்னுக்கு நின்றா? மோதாம?” என்று கூறி வாயை சுழிக்கவும் இன்னும் கோவம்  ஏற

“ஏய்” என்று ஏதோ கூற வந்தவன் அவர்கள் அருகில் சிந்து வரவும் ஆழ மூச்சை எடுத்து விட்டு சிந்துவை பார்த்து புன்னகைத்தான்..

அவன் புன்னகைத்த முகத்தையே ஏதோ விசித்திரத்தை பார்ப்பது போல பார்த்தவளை சிந்து தோளில் தட்டவும்

“ஆங்..என்ன சிந்து?” என்றவளை பார்த்து சிரித்த சிந்து

“இல்லை அக்கா..இது தான் கவின் அண்ணா..முறைப்படி எனக்கு மாமா மகன் தான்..ஆனா எனக்கு அண்ணா தான்..அண்ணா இது ஆதிரா அக்கா..நான் சொல்லுவேனே பாவனா அக்கா என்று அவங்களோட அண்ணி” என்று பரஸ்பரம் அறிமுகப்படுத்தி வைத்தவுடன் இருவரின் முகங்களிளும் சற்று அதிர்வு வந்ததே ஒழிய ஒரு முறைக்கேனும் புன்னகைக்காமல் முறைத்தபடி நின்றனர்.

அவர்களின் முகபாவனைகளை கவனிக்காத சிந்து

“அக்கா கேக் வெட்டிட்டு அப்புறம் சாப்பிடலாம்.கருண் அண்ணாவும் தோட்டத்தில தான் நிற்கிறார் என்று அம்மா சொன்னா.. ஸோ அண்ணாவை பாவனா அக்காவையும் கூட்டிட்டு வர சொல்லியாச்சு.. நீங்க ரெண்டு பேரும் உள்ள வாங்க..ஸ்ரீ உங்களை தேட போறா அக்கா..அம்மா கிட்ட இருக்கிறா” என்று கூறிய படி சிந்து முன்னேறி செல்லவும்

சற்று பின்னே நடந்து வந்த ஆதிராவின் காதருகில் குனிந்த கவின்

“ஏய்..ஏன் நான் சிரிக்கிறதை அப்பிடி பார்த்த?” என்று மெல்லிய குரலில் வினவவும் அவன் பக்கம் தானும் சற்று சாய்ந்தவள்

“பின்ன குரங்கெல்லாம் சிரிச்சு நான் கண்டதே இல்லை தெரியுமா? அது தான் பார்த்தேன்” என்றவுடன்

“ஏன் உன் மூஞ்சிய நீ கண்ணாடியில பார்த்ததே இல்லையா?”

“பார்த்திருக்கேனே..ஆனா அங்க நான் தான் தெரிவேன்..குரங்கு இல்ல”

“அது குரங்கை விட கேவலமா இருக்குமே” என்று கிண்டலாக கூறவும் அவனை நன்கு திரும்பி பார்த்து முறைத்தாள்..

இருவருமே தமது குண இயல்பில் இருந்து மாறி ஏன் ஒருவருடன் ஒருவர் சண்டை போடுகிறோம் என்று அறியாமலே சண்டை போட்டுக்கொண்டிருந்தனர்.

சுமதியின் கையில் இருந்த ஸ்ரீ ஆதிராவை கண்டதும் அவர் கைகளில் இருந்து நழுவியவாறு

“அம்மா” என்ற படி தனது பிஞ்சு கால்களால் ஓடி வரவும் “அம்முக்குட்டி” என்று அழைத்த படி இரு கரம் விரித்து அவளை ஏந்திக்கொண்டவள் தன் ஒரு கையில் அவளை தாங்கி மறுகையால் அவளின் கலைந்த தலைமுடியை கோதிவிட்டவள்

“எங்க அம்முக்குட்டி போனிங்க” என்று என்று குழந்தையுடன் உரையாட தொடங்கவும் அவளை போல பெண்குரலில் மெலிதாக ‘அம்முக்குட்டி எங்க போனிங்க’ என்று கூறி பழிப்பு காட்டியபடி அப்பால் சென்றவனை அதற்கு அருகில் அமர்ந்து இருந்த மனோகர் வியப்பாக பார்த்து விட்டு அருகில் இருந்த மகாதேவனை பார்க்கவும் அவரும் உதட்டை பிதுக்கினார்..

தோட்டத்தில் பாவனாவை பற்றி சிந்தித்த படியே உலவிக்கொண்டிருந்தான் கருண்.

“நான் பண்ணது  வேர்க் அவுட் ஆகுமா? பாவனா என்னை நோட் பண்ணி இருப்பாளா?” என்று சிந்தித்து கொண்டிருந்தவனின் செல்ஃபோன் இசைக்கவும் அதை எடுத்து காதிற்கு கொடுத்தவன்

“ஆஹ்..சொல்லு சிந்து”

“எங்க நிற்கிற? வீட்ட வந்தவங்கள கவனிக்காம மகாராஜா ஏன் இப்போ தோட்டத்துல உலவுறிங்க?” என்று கிண்டலடிக்கவும்

“பச்..ஒன்றும் இல்ல..ஒரு கால் பண்ண வந்தேன்..என்ன சொல்லு..டைம் ஆயிட்டுதா?”

“ஆமா..சீக்கிரம் வா..அங்க தான் பாவனா அக்காவும் நிற்கிறாங்க,அவங்களையும் கூட்டிட்டு வா” என்றவுடன் சரி என்பதாக கூறி அழைப்பை துண்டித்தவனது கண்கள் தோட்டத்தை அங்குல அங்குலமாக அலசியது

அங்கு தோட்டத்தை பிரித்திருந்த நடைபாதையில் கவின் நின்றதற்கு எதிர்ப்புறம் அமைந்திருந்த தோட்டத்தில் வெண்ணிற ரோஜாவை வருடியவாறு தேவதையாய் நின்றவளை ஆர்வமாக நெருங்கி அவளுக்கு பின்னே சற்று நெருங்கி மெல்லிய குரலில்

“பாவனா” என்று அழைக்கவும், காதருகில் கேட்ட துள்ளி திரும்பியவள் தடுமாறி பின்னே சரிய பார்க்க அவள் தோள்களை பற்றி நிமிர்த்தி “ஸாரி..பயந்துட்டியா?” என்று வினவ ஏதோ வேற்றுகிரக மொழியை கேட்டது போல விழித்தவளை பார்த்து பதறியவன் அவளை பற்றி நிறுத்தியபடி அவள் தோளில் வைத்திருந்த கையால் அவளை சற்று உலுக்கி

“பாவனா..ஆர் யு ஆல்ரைட்?” என்று வினவவும்

“ஆங்..யா..அம் ஓகே’ என்று மண்டையை உருட்டினாள்..

“ஹ்ம்ம்ம்.” என்றபடி அவள் தோளில் இருந்த கையை தன் பான்ட் பாக்கெட்டில் வைத்தவன்..

“ஆமா..இங்க என்ன பண்ணிக்கிட்டிருக்க?” என்று வினவவும்

“ஒன்றுமில்லை என்பதாக தலை அசைத்தவள்

“சும்மா தான் சுத்தி பார்த்துக்கொண்டு இருந்தேன்” என்று கூறியவளை பார்த்து புன்னகைத்தபடி வீட்டினுள் செல்லும் நடைபாதையை கைகாட்டியவன்

“வா..அப்பிடியே நடந்து கொண்டே பேசுவோம்..டைமுக்கு உன்னை கூட்டிட்டு போகலனா சிந்து என்னை கொன்றே போட்டுடுவா” என்றவுடன் மௌனமாகவே அவனுடன் நடந்து சென்றாள்.

“ஆமா நீ என்ன அநியாயத்துக்கு அமைதியா இருக்கிற?”

“ஆங்..ஒன்..ஒன்றும் இல்ல..” என்றவள் மீண்டும் அமைதியாக

“ஏன் பாவனா? உனக்கு இந்த இடம் பிடிக்கலையா?”

“ஒரு இடத்தோட தன்மையை தீர்மானிக்கிறது அங்க இருக்கிற மனிதர் தான் என்று அண்ணி அடிக்கடி சொல்லுவாங்க” என்றவுடன் நின்று திரும்பி அவளை அழுத்தமாக பார்த்தவன்

“அப்போ நாங்க சரி இல்லை என்றியா?”

“நான் எல்லாரையும் சொல்லல”

“அப்போ என்னை சொல்றியா” என்றவுடன் பதில் கூறாது அமைதியானாள் பாவனா.

“அப்போ என்னை தான் சொல்லி இருக்க..சொல்லு அப்படி என்ன பண்ணேன்”

“ஒருத்தங்கள அறிமுகப்படுத்துறப்போ பட்டென்று எழுந்து போற நேரம் அவங்க வரவு அங்க தேவை இல்லை என்று தான் பொருள் படுது”என்று அவள் கூறிய பதிலை கேட்டவுடன் கருணின் உள்ளம் குத்தாட்டம் போட்டது..பின்னே அவன் எய்த அம்பு சரியான இடத்தில் தாக்கி இருக்கிறதே?

பேசியபடியே வீட்டின் வாயிலுக்கு வந்துவிட்டதால் வாசலடியிலே அவளை மறித்து அவளை நேராக நோக்கியவன்

“தெரியாதவங்கள அறிமுகப்படுத்தினா தான் நான் அதை கேட்கனும் பாவனா.. நமக்கு ரொம்ப நெருக்கமானவங்க ரொம்ப பிடிச்சவங்கள பத்தின அறிமுகம் மற்றவங்க சொல்லி தான் நமக்கு தெரியனும் என்று இல்லை.எனக்கு நீ அப்பிடி தான் பாவனா” என்று கூறிவிட்டு பட்டென்று உள்ளே சென்றான்..

அவன் கூறியதை கேட்டு சற்று நேரம் சிலையென நின்றவள் பின்னர் இருக்கும் இடம் உணர்ந்து உள்ளே சென்று சிந்து கேக் வெட்டும் இடத்தில் ஆதிராவின் அருகில் நின்று கொண்டாள்..

அருகில் வந்து நின்ற பாவனாவை திரும்பி பார்த்து ஆதிரா புன்னகைக்கவும் பாவனாவும் பதிலுக்கு புன்னகைத்தாள்..ஆனால் அந்த புன்னகையில் உயிரில்லாததை அவதானித்தவள் அதை கேட்பதற்கான இடம் இது இல்லை என்று எண்ணி அமைதியாக இருந்தாள்.

ஆனால் பாவனாவின் கண்கள் மட்டும் அடிக்கடி கருணின் புறம் பதிந்து பதிந்து மீண்டது. பின்னர் உணவுக்கான அழைப்பு விடப்படவும் கவின் ஆடை மாற்றி வருவதாக கூறி மாடியிலுள்ள அவன் அறைக்கு விரைந்தான்..அப்படியே அனைவரும் கலைந்து சென்றாலும் கருணும் பாவனாவும் அசையாமல் நின்று ஒருவரை ஒருவர் பார்த்தவாறு நின்று கொண்டிருந்தனர்.

தன்னுடன் பாவனா வராததை உணர்ந்து திரும்பி பார்த்த ஆதிரா பாவனா அப்படியே நிற்பதை கண்டு யோசனையாக அவளின் பார்வை சென்ற இடத்தை நோக்கினாள்.அங்கு கருணும் அவளை பார்த்துக்கொண்டிருப்பதை கண்டதும் புருவம் உயர்த்தியவள் ஸ்ரீயை விட்டு பாவனாவை கூட்டி வர சொன்னாள்.ஸ்ரீயும் பாவனாவின் அருகில் போய் அவள் கையை பற்றி உலுக்கியபடி

“பானா..ம்மா வதத்தாம்” என்று கூறவும் தன்னிலை உணர்ந்தவள் ஸ்ரீயை தூக்கிகொண்டு கிட்டத்தட்ட ஆதிராவை நோக்கி ஓடினாள்.

அங்கே பஃபே முறையில் உணவு வழங்கப்படவும் ஆதிராவும் பாவனாவும் ஸ்ரீயுடன் ஒரு மேஜையை பார்த்து அமர்ந்தாள்..அப்பொழுது ஒரு பெண்கள் குழுவும் அந்த இடத்தில் வந்து அமர அவரகளை கணக்கெடுக்காமல் இவர்கள் தம் பாட்டில் கதைத்தும் புன்னகைத்துக்கொண்டும் இருந்தனர்..அதை முறைத்தபடி பார்த்துக்கொண்டு இருந்தாள் அங்கு இருந்த பெண்ணொருத்தி..

அவள் கவின் கருண் கம்பனியில் ஒரு முக்கிய பதவியில் இருப்பவள்..ஒருவகையில் அவர்களது உறவினளும் கூட.. கவினை வளைத்து போட்டால் அவர்களின் சொத்துக்கெல்லாம் அதிபதியாகி விடலாம் என்ற முட்டாள் தனத்துடன் செயற்படுபவள்.ஆனால் அன்று அந்த பிறந்தநாளையொட்டி அவர்கள் வீட்டிற்கு வந்த அவளிற்கு அங்கே ஆதிரா பாவனாவிற்கு தரப்பட்ட முக்கியத்துவம் உறுத்திக்கொண்டே இருந்தது..

எனவே அவர்களை எப்படியாவது நோகடித்துவிட வேண்டும் என்று சந்தர்ப்பம் பார்த்து கொண்டிருந்தவள் ஆதிராவின் குடும்பம் தனித்துவிடப்படவும் அங்கு அன்று வந்திருந்த தன் இரண்டு மூன்று தோழிகளுடன் ஆதிராவின் அருகில் அமர்ந்தாள்..

பாவனா போகும் இடமெல்லாம் பின்னாலே சுற்றிக்கொண்டிருந்த கருணும் அவர்களின் மேஜைக்கு அருகில் தான் அமர்ந்து இருந்தான்..அப்பொழுது அந்த பெண் ஆதிராவை பார்த்து

“ஹாய்” என்று புன்னகைக்கவும் தானும் புன்னகைத்தவள்

“ஹல்லோ” என்று கூறி தலை அசைத்தாள்..அவள் மடியில் இருந்த ஸ்ரீயை காட்டி

“இது உங்க குழந்தையா?” எனவும் ஸ்ரீயின் கன்னத்தோடு கன்னம் வைத்து புன்னகைத்த ஆதிரா

“ஆமாங்க” எனவும்

“ஓ..அப்போ இவங்களோட அப்பா?” என்று வெறும் நெற்றியுடன் அமர்ந்து இருந்த ஆதிராவை நோக்கி குதர்க்கமாக கேட்கவும் ஏதோ கோவமாக பதில் சொல்ல வந்த பாவனாவின் கையை பற்றீ அழுத்தினாள்.பின் அந்த பெண்ணை பார்த்து

“அவங்க இப்போ உயிரோட இல்ல” என்று மெல்லிய குரலில் பகிரவும்

“உண்மையா அப்பிடி தானா? இல்லனா யாரும் ஏமாத்தி.” என்று இழுக்கவும் அவளை அழுத்தமாக பார்த்த ஆதிரா

“ஸ்ரீயோட அப்பா இப்போ உயிரோட இல்ல மேம்..இதோ இவளோட அண்ணா தான் ஸ்ரீயோட அப்பா..அப்படி ஏமாத்தி போய் இருந்தா யாரும் நாத்தனாரோட தான் சுத்திக்கொண்டு இருப்பாங்களா?” என்று நக்கலாக கேட்கவும் தோளை குலுக்கிய அந்த பெண்

“யார் கண்டா..ஏன் சொல்லுறேன் என்றால் இப்போலாம் இப்படி குடும்பம் போல வெளியில காட்டிக்கொண்டு வேற தொழில் ல ஈடுபடுறவங்க இருக்காங்களே” என்று நாக்கை சாட்டையாக சுழற்றவும் விழிவிரித்து அவளின் பதிலை கிரகிக்க முடியாமல் ஆதிரா உறைய பாவனா

“ஏய்” என்று ஒரு விரலை முன்னே நீட்டி மிரட்ட அதையெல்லாம் தாண்டி பளார் என்று ஒரு அறை அந்த பெண்ணின் கன்னத்தில் விழ கதிரையை விட்டு தரையில் விழுந்து கிடந்தாள்.

அங்கு கண்களில் கனல் பறக்க ருத்ரமூர்த்தியாக நின்ற கவினை கண்டவுடன் கண்கள் இருட்டிக்கொண்டு வந்தது ஆதிராவிற்கு..தன்னை சுற்றி நடப்பவை தன் கட்டுக்குள் இல்லை என்று புரிந்து கொண்டவள் அருகில் நின்ற பாவனாவின் கையை ஒரு கையால் பற்றி மறுகையால் ஸ்ரீயை அழுத்தமாக அணைத்து பிடித்துக் கொண்டாள்.வீழ்ந்து கிடந்த அந்த பெண்ணை துச்சமாக பார்த்த கவின் ஒரு விரலை அவள்  முன் நீட்டி ஆட்டியவாறே

“இதுக்குமேல ஒரு வார்த்தை உன் வாயில இருந்து வந்துது..தொலைஞ்ச..” என்றான்..பின் அவளுக்கு முதுகு காட்டி திரும்பியவன் கதவை நோக்கி கையை நீட்டியவாறே

“கெட் அவுட்” என்று உறுமி விட்டு ஆதிராவின் அருகில் விரைந்து சென்றான்.தன்னெதிரில் கவின் வந்து நிற்கவும் மலங்க மலங்க விழித்த ஆதிரா இன்னும் இறுக்கமாக ஸ்ரீயை பற்றிக்கொண்டாள்..அவளின் கைகள் நடுங்குவதில் இருந்து அவள் உணர்வு ரீதியாக பாதிக்கப்பட்டிருப்பதை அறிந்தவன் அவள் மடியில் பயந்து நடுங்கியபடி இருந்த ஸ்ரீயை அள்ளிகைகளில் தூக்கினான்..

கவின் ஒரு குழந்தையை தூக்கவும் ஆதிராவின் குடும்பம் தவிர ஏனையோர் அனைவரும் அதை அதிசயமாக பார்த்துக்கொண்டனர்..கையில் அவன் ஸ்ரீயை எடுத்தவுடனும் விறைத்து போய் விழிகள் நிலைகுத்த அப்படியே அமர்ந்திருந்தாள் ஆதிரா.. அவர்களை சுற்றி இருந்த கூட்டத்தை பார்த்து கவின் தன் தந்தையை பார்க்கவும் அவரும் மகனின் உத்தரவு அறிந்து அவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தினார்..

Advertisement