வழமையாக கவின் கருணை அங்கு விட்டு விட்டு சென்றால் வீடு முழுதும் ஒருவர் கூட விடாமல் புலம்பி திரிவான்.ஏன் லக்ஷ்மியிடம் கூட சென்று
“அத்தை உங்க மகன் என்ன தைரியத்துல என்னை இங்க விட்டுட்டு போறான்.இங்க இருக்கிறதெல்லாம் ஒரு ஆபிஸா? ஒரு ஃபிகர் கூட பார்க்கிற மாதிரி இல்லை” என்று கூறி அவரிடம் செல்லமாக அடியை வாங்கி விட்டு தான் அகல்வான்.
அப்பொழுது தான் மாலை சிற்றுண்டியோடு வந்த கருணின் அன்னை சுமதியும் இதைக்கேட்டு ஆச்சர்யமாகி லக்ஷ்மியை பார்த்து கண்களால் என்ன இது என்று கேட்கவும் அவரும் தெரியாது என்ற பாவனையில் உதட்டை பிதுக்கி காட்டினார்.
நிலைமையை தன் கையில் எடுத்த கவின்
“போதும்மா இந்த கதை..அப்புறமா பேசலாம்..ஆமா..டேய் கருண் சிந்து எங்க” என்று கேட்கவும் அவன் பதில் கூறும் முன் வாசலில் அப்பொழுது தான் நுழைந்து கொண்டிருந்த சிந்து
“கவின்ணா” என்ற படி ஓடிவந்து அவன் அருகில் அமர்ந்து தோள் சாய்ந்தாள். அவளை தோளோடு அணைத்து கொண்ட கவினும்
“சிந்து குட்டி..அண்ணாவை மிஸ் பண்ணியா?” எனவும் கண்களை விரித்து
“ம்ம்..ரொம்ப “என்று சிரித்தவளை பார்த்து கருண் தலையில் அடித்து கொண்டான்.
“கொக்கமக்கா..பெரிய வேலாயுதம் விஜயும் சரண்யாவும்..உங்க பாசத்தை பார்த்து நாங்க புல்லரிச்சு போய்டோம்பா..” என்று கிண்டலாக சொன்னாலும் அவன் முகத்தில் அதில் மகிழ்வு தான் என்பதை அவன் உதட்டோர புன்னகையே சொல்லும்..
இது தான் சக்கரவர்த்தி குடும்பம்.தொன்று தொட்டு சக்கரவர்த்தி குடும்பம் என்ற பரம்பரை பெயருடன் வலம் வரும் வம்சாவளி.அந்த பெயரை அவர்களின் ஊரில் பிரபலமாக்கி தம் பரம்பரையையே கௌரவப்படுத்திய குடும்பம்
சக்கரவர்த்தி குடும்பத்தில் இருந்து இந்த ஊருக்கு மனைவியுடன் வந்த இவர்களது பாட்டனார் சிபி சக்கரவர்த்தியின் சொந்த முயற்சியால் ஆரம்பிக்கப்பட்ட சிறிய வியாபாரம் அவரது மகன் மனோகரால் இன்னும் ஓங்கி வளர்ந்தது. அவரது மகள் சுமதிக்கு தனது தங்கையின் மகன் மகாதேவனை திருமணம் முடித்துவைத்து தமது வியாபாரத்தினுள்ளே சேர்த்துக்கொண்டார். பின் மகாதேவன் மனோகரால் பராமரிக்க பட்ட வியாபாரம் என்று கவின் கருண் கைகளுக்கு சென்றதோ அன்றிலிருந்து அது அசுர வேகம் தான்..
மனோகர் லக்ஷ்மியின் புதல்வன் தான் கவின். மகாதேவன் சுமதியின் மகன் தான் கருண். கவினைவிட இரு மாதங்களே இளையவன். கருணுக்கு அடுத்து சிந்துபைரவி.அந்த வீட்டின் கடைக்குட்டி.கவினை அண்ணாஎன்று தான் அழைப்பாள்..கருணிலும் பார்க்க அதிக அக்கறையுடன் சிந்துவை பார்த்துக்கொண்டவன் கவின் தான்.அவள் அருகில் மட்டும் மென்மையாகவே நடந்து கொள்வான். இது தான் நம் கதையில் வலம் வர போகும் சக்கரவர்த்தி குடும்பம் பற்றிய விளக்கம்..