பிருத்விக்கும் அஞ்சனாவுக்கும் நாட்கள் ஒன்று போல் நகர்ந்து கொண்டிருந்தது. காலையில் எழுந்தவுடன் பிருத்வி தன் நண்பர்களுடன் உடற்பயிற்சி செய்யக் கிளம்ப, அஞ்சனாவோ வீட்டிலே யோகா செய்துவிட்டு மாதவி மற்றும் நித்யாவுக்கு சிறிது உதவி செய்வாள். பின் இருவரும் கிளம்பிச் சாப்பிட்டு விட்டு கல்லூரிக்கும் அலுவலகத்திற்கும் சென்று விடுவர். பிறகு மாலை அஞ்சனாவை கல்லூரியில் இருந்து அழைத்து வந்து வீட்டில் விட்டுவிட்டு அவனது அலுவலகம் சென்று விடுவான். அஞ்சனாவும் முகம் கை கழுவி விட்டுச் சிறிது நேரம் நித்யாவின் பையன் தர்ஷனுடனும் பாட்டியுடன் சில நேரம் செலவழித்து விட்டு அவளது அசைன்மென்ட் எழுதச் சென்றுவிடுவாள். பின் இரவு பிருத்வி வர, சாப்பிட்டு விட்டு இருவரும் அன்றைய தினம் என்ன நடந்தது என்று பேசிவிட்டுத் தூங்கச் செல்வர்.
இதற்கு நடுவில் ஒரு நாள் ராஜேஷ் தன் அம்மா மற்றும் அப்பாவுடன் அஞ்சனாவை சந்திக்க அவளது வீட்டிற்கு அதாவது பிருத்வியின் வீட்டிற்கு வந்தனர். அவர்களை அங்குப் பார்த்த அஞ்சனா அமைதியாக வாங்க என்று அழைக்க, அவர்களுக்கு ஆச்சரியம் தான். சந்தோஷமாக அவர்களும் உள்ளே வந்து அமர்ந்தனர்.
“உங்களுக்கு தெரிஞ்சுருக்கும்னு நினைக்கிறேன். நாங்க அஞ்சனாவோட பாட்டி தாத்தா. கீதா எங்களோட மகள் தான். அவளைப் புரிஞ்சுக்காமல் நாங்க பண்ணத் தப்புனால இத்தனை வருஷத்தை வீணாக்கிட்டோம். இனிமேல் அப்படி இருக்கக் கூடாதுனு தான் எங்கப் பேத்தியோட புகுந்த வீட்டையும் வீட்டு ஆட்களையும் பார்த்துட்டு போகலாம்னு வந்தோம்.” என்று ராஜேஷின் தந்தைக் கூற,
“ரொம்ப சந்தோஷம்ங்க. பிருத்வி எல்லாத்தையும் சொன்னான். எப்படியோ உங்க ஒரு பேத்தி உங்க குடும்பத்துக்கே மருமகளா வந்துட்டா. நம்ம பிள்ளைங்க சந்தோஷம் தான் முக்கியம்.” என்று பார்வதி பாட்டிக் கூற, ராஜேஷும் அவரது பெற்றோரும் தலையை ஆட்டினர்.
அதே நேரம் அஞ்சனா அவர்களுக்குக் குடிக்க ஜூஸ் எடுத்து வர, ராஜேஷிற்கு அன்று அவள் செய்த குறும்பு ஞாபகம் வர, சிரிப்பு வந்தாலும் அடக்கிக் கொண்டு அமர்ந்திருந்தார். அவரைப் பார்த்துக் கொண்டிருந்த அஞ்சனாவுக்கும் அவரது முக பாவம் புரிய அவளுக்கு அன்றைய தினம் கோபத்தைத் தந்தாலும் சூழ்நிலை கருதி அமைதியாக இருந்தாள்.
சிறிது நேரம் பேசிவிட்டு அவர்கள் செல்ல, சரியாக அந்த நேரம் வந்த பிருத்வி அவர்கள் வந்து சென்றது தெரிந்து அஞ்சனாவிடம்,”என்ன அஞ்சனா உன்னோட மாமா, பாட்டி, தாத்தா எல்லாரும் வந்தாங்க போல.”
“ப்ச் ஆமா, புதுசா அக்கறை வந்து என்னோட புகுந்த வீட்டைப் பார்க்க வந்தாங்களாம்.” சலிப்பாக அஞ்சனா கூற,
“விடு அஞ்சனா அவங்க தப்பைப் புரிஞ்சு சரி செய்ய நினைக்கிறாங்க, அதனால நீயும் கொஞ்சம் உன்னோட கோபத்தைக் குறைச்சுக்கோ.”
“பார்க்கலாம் பிருத்வி.” என்று கூறிவிட்டு அவள் சென்றுவிட, பிருத்வியும் அவனது வேலையைப் பார்க்கச் சென்று விட்டான்.
அஞ்சனா சாதாரணமாகவே பிருத்வியுடன் பேசினாலும் அவனால் முன்பு போல் அவளிடம் சாதாரணமாகப் பேச முடியவில்லை. ஏதோ கள்ளத்தனம் அவனுள் வந்திருந்தது. காரணம் அவன் அஞ்சனாவின் மேல் காதல் வயப்பட்டிருந்ததால் அவனால் இயல்பாகவே அவளிடம் பேச முடியவில்லை. அவளிடம் சொல்லவும் முடியாமல் தவித்துக் கொண்டிருந்தான்.
அன்றைய தினம் எப்பொழுதும் போல் அன்று நடந்ததைப் பேசிவிட்டுத் தூங்கச் செல்ல, பிருத்வி இதற்கு மேல் தாங்காது என்று முடிவெடுத்து நாளையே தன் காதலை அஞ்சனாவிடம் சொல்ல வேண்டும் என்று உறுதி எடுத்துக் கொண்டு அவனும் தூங்கிவிட்டான்.
அடுத்த நாள் எப்பொழுதும் போலே காலை எழுந்த அஞ்சனா யோகா செய்ய, பிருத்வியோ படுக்கையை விட்டு எழாமலே இருந்தான். அவள் முடிக்கும் வரையிலும் பிருத்வி எழாமல் போக, எங்கே அவனுக்கு உடம்பு சரியில்லையோ என்று அஞ்சனா அவன் அருகில் சென்று அவனது நெற்றியைத் தொட்டுப் பார்க்க, பிருத்வி கண் விழித்து விட்டான்.
“என்ன பண்ற?”
“காச்சலோனு பார்த்தேன். ஏன் இன்னைக்கு வெளில போகாம இருக்க?”
“ப்ச் இன்னைக்கு போகத் தோனலை. அதான்.”என்று கூறிவிட்டு மீண்டும் கண்ணை மூடி விட்டான்.
அவனைப் பார்த்த அஞ்சனா அவனுக்கு ஏதோ ஆகிவிட்டது என்று தோளைக் குலுக்கிவிட்டு அவள் குளிக்கச் செல்ல, பிருத்வி கண்ணைத் திறந்து அவள் போவதைப் பார்க்க,’இவ என்ன இப்படி இருக்கா! ஒரு வேளை நமக்குத் தோன்ற மாதிரி இவளுக்குத் தோனலையோ! அய்யோ அப்போ நாம சொன்னா அவள் எப்படி எடுத்துக்குவா? ஒரு வேளை ரிஜெக்ட் பண்ணிடுவாளா! வேண்டாம் அப்படி நினைக்க வேண்டாம். நமக்கு என்ன தோணுதோ அதைச் சொல்லுவோம். அவள் ரிஜெக்ட் பண்ணா அப்புறம் பார்த்துக்கலாம். பண்ணிடுவாளோ! அய்யோ இவளால இப்படித் தனியா புலம்புற நிலைமைக்கு கொண்டு வந்து விட்டாளே! டேய் பிருத்வி உன் நிலைமை ரொம்ப மோசம் டா.’ தனக்குத் தானே பேசிக் கொண்டு மீண்டும் கண்ணை மூடித் தூங்கிவிட்டான்.
அன்று மாலை அஞ்சனாவை கல்லூரியில் இருந்து வீட்டிற்கு அழைத்துச் செல்லாமல் வேற எங்கோ அழைத்துச் செல்ல, அதைப் பார்த்த அஞ்சனா பிருத்வியிடம்,”எங்க போற பிருத்வி? வீட்டுக்குப் போகலையா?”
“நாம வேற ஒரு இடத்துக்குப் போறோம் அஞ்சனா. நாளைக்கு உனக்கு லீவ் தான. சும்மா வா.” என்று கூற, அவள் எதுவும் பேசாமல் வேடிக்கை பார்த்துக் கொண்டு வந்தாள். பிருத்வியும் அவளை ஒரு முறைத் திரும்பப் பார்த்து விட்டு வண்டி ஓட்டுவதில் கவனம் செலுத்தினான்.
பிருத்வி செல்லும் வழியைப் பார்த்த அஞ்சனா,”ஏய் பிருத்வி என்ன ஏர்போர்ட் ரோட்ல போயிட்டு இருக்க?” ஆச்சரியமாக அவள் கேட்க,
“ஊருக்குப் போகனும்னா ஏர்போர்ட் வந்து தான ஆகனும்.” சிரித்துக் கொண்டே பிருத்வி கூற,
“அதலாம் போகப் போக நீயே தெரிஞ்சுக்குவே.” கூறிவிட்டு அமைதியாகி விட, அஞ்சனா தான் புரியாமல் அவனைப் பார்க்க, பிருத்வி எதுவும் கூறாமல் வண்டியை வண்டி நிறுத்தும் இடம் சென்று நிப்பாட்டி விட்டு பின் பக்கமிருந்து ஒரு பையை எடுத்துக் கதவை மூட, அஞ்சனா அதுவரையிலுமே கீழே இறங்காமல் அமர்ந்திருந்தாள்.
“இறங்கு அஞ்சனா. உன்னோட பேக் கார்லயே இருக்கட்டும். உனக்குத் தேவையானதை மட்டும் எடுத்துக்குட்டு மத்ததை பேக்ல வைச்சுடு.” என்று பிருத்வி கூற, அஞ்சனாவும் எதுவும் கூறாமல் அவனைப் பார்த்தப் படியே அவன் சொன்னதை எல்லாம் செய்தாள்.
பிருத்வியும் அவளைப் பார்த்து மனதில் சிரித்துக் கொண்டே அவளுடன் நடந்து உள்ளே வந்தான். இருவரும் செல்லும் விமானம் பற்றி அறிவிப்பு வர, பிருத்வி அஞ்சனாவை அழைத்துக் கொண்டு விமானம் ஏறினான். அவர்கள் ஏறி உட்கார்ந்ததும் அஞ்சனா பிருத்வியின் பக்கம் திரும்பி,”இப்போ நாம எதுக்கு மதுரை போறோம்?” என்று கேட்க,
“நாம மதுரை போகலை. நாம போற இடத்துக்கு ஃப்லைட் இல்லை. ஸோ மதுரை போயிட்டு அங்கிருந்து நாம போக வேண்டிய இடத்துக்குப் போகப் போறோம்.” புதிராக பிருத்வி கூற,
“அது தான் எங்கனு சொல்லு.”
“ம்ஹூம். சொல்ல மாட்டேன்.”
“ப்ச் எப்படியிருந்தாலும் போற வழில எங்கப் போறோம்னு தெரியத் தான் போகுது.” என்றவாறு அஞ்சனா முகத்தைத் திருப்பிக் கொள்ள, பிருத்விக்கு சிரிப்பு மட்டும் தான் வந்தது அன்று.
மதுரை விமான நிலையம் வந்ததும் வெளியே வர, அவர்களுக்காக ஒரு மகிழுந்து ஓட்டுநருடன் காத்துக் கொண்டிருந்தது. அதில் ஏறி அவர்களது பயணம் தொடர, இரண்டு மணி நேரத்திலே அவர்கள் கொடைக்கானல் மலை ஏற, அஞ்சானவுக்கு சந்தோஷமாக இருந்தது.
“ஹேய் பிருத்வி நாம கோடை போறோமா?” மகிழ்ச்சியாக அவள் கேட்க,
“எஸ் பேபி கொடைக்கானல் தான் போறோம்.” பேச்சு வாக்கில் பிருத்வி தன்னை மறந்து பேபி என்று கூற,
“ஏய் என்ன சொன்ன பேபியா?”
“ஆமா, சின்னக் குழந்தை மாதிரி எக்ஸைட்மென்ட் ஆன, அதான் அப்படிச் சொன்னேன்.” என்று பிருத்வி சமாளிக்க, அஞ்சனா அவனைச் சந்தேகமாகப் பார்க்க, பிருத்வி வெளியே வேடிக்கைப் பார்ப்பது போல் திரும்பிக் கொண்டான்.
சிறிது நேரத்தில் அவர்கள் கொடைக்கானல் பகுதியில் உள்ள வட்டக்கனல் என்னும் பகுதிக்கு வர, சுற்றிப் பார்த்துக் கொண்டே அஞ்சனா இறங்க, பிருத்வி இறங்கி ஓட்டுநரிடம் பேசிவிட்டு பையை எடுத்துக் கொண்டு முன்னே நடக்க, அஞ்சனாவும் அவனோடு சென்றாள்.
சிறிது தூரம் சென்றவுடன் அங்கு மரக்கட்டையால் ஆன வீடுகள் போன்ற அமைப்புடன் ஆங்காங்கே சில இருக்க, அதை ஆச்சரியத்துடன் பார்த்துக் கொண்டே வந்தாள் அஞ்சனா.
அவர்களுக்கு என்று கொடுத்த அறைக்கு வந்தனர் பிருத்வியும் அஞ்சனாவும். கதவைத் திறந்தவுடன் இடது பக்கம் பாத்ரூம் இருந்தது. வாசல் பக்கமிருந்து நேராகச் சென்றால் ஒரு அறை இருந்தது. அதில் ஒரு படுக்கை போட்டிருந்தனர். அந்தப் படுக்கைக்கு நேராக இருந்த சுவரில் தொலைக்காட்சி இருந்தது. படுக்கைக்கு இடது புறம் கொஞ்சம் தள்ளி ஒரு கதவு இருக்க, அதைத் திறந்து பார்க்க, அது பால்கனி. அங்கே சென்று பார்த்த காட்சியில் அஞ்சனா அசந்து நின்றுவிட்டாள். இரவு நேரமாக இருந்தாலும் ஆங்காங்கே விளக்கால் ஒளிரச் செய்திருந்தனர்.
“சரி வா நாம சாப்பிட்டு வந்துடலாம். காலையில இன்னும் அழகா இருக்கும் வ்யூ.” என்று பிருத்வி கூற, மனசே இல்லாமல் அஞ்சனா உள்ளே வந்தாள்.
அப்படியே பக்கத்தில் இருக்கும் உணவகத்திற்குச் சென்று இரவு உணவை எடுத்துக் கொண்டு அவர்களது அறையில் பயணக் களைப்பில் படுத்துத் தூங்கி விட்டனர்.
அடுத்த இரண்டு நாளும் அவர்கள் பக்கத்தில் இருந்த இடத்தைச் சுற்றிப் பார்க்க, ஞாயிறன்று மாலை வெளியே சென்றுவிட்ட முதலில் அஞ்சனாவை உள்ளே செல்ல சொல்ல, அவளும் சரியென்று உள்ளே செல்ல, கதவைத் திறந்தவள் ஆச்சரியத்தில் ஆழ்ந்துவிட்டாள்.
அறை முழுவதும் பலூன்களால் அலங்காரம் செய்திருந்தது. கட்டிலின் மேல் ஒரு கரடி பொம்மை இருக்க, வேகமாக அதைச் சென்று அஞ்சனா எடுக்க,
“எப்படி இருக்கு?” என்று பிருத்வியின் குரல் கேட்க, அஞ்சனா திரும்பிப் பார்த்து,”ஹேய் செமயா இருக்கு பிருத்வி. என்ன தீடிர்னு இந்த டெக்கரேஷன் கிப்ட்லாம்?”
“உன்கிட்ட ஒன்னு சொல்லனும் அஞ்சனா.”
“எஸ் சொல்லு பிருத்வி.”
“நமக்குக் கல்யாணம் ஆன போது எனக்கு இந்தக் கல்யாணத்துல விருப்பமில்லைனு தான் நினைச்சேன். ஆனால் என்னையே அறியாமல் நீ எனக்குள்ள வந்துட்ட. நாள் போகப் போக உன்னை லவ் பண்ண ஆர்மபிச்சுட்டேன் அஞ்சனா. இந்த ட்ரிப் கூட என்னோட காதல்லை உன்கிட்ட சொல்ல தான். நீ உன்னோட பதில்லை உடனே சொல்லனும்னு இல்லை. யோசிச்சு நிதானமாவே சொல்லு. இப்போ ட்ரைவர் வந்துடுவார். பேக்லாம் ரெடியா தான் இருக்கு. நாம கிளம்பலாம்.” என்று கூறிவிட்டு பிருத்வி திரும்ப நடக்க, அஞ்சனாவுக்கு பிருத்வி நிஜமாகவே காதலைச் சொன்னானா என்று யோசிக்க ஆரம்பித்து விட்டாள்.
அஞ்சனா அசையாமல் நிற்பதைப் பார்த்த பிருத்வி சிரித்துக் கொண்டே அவளிடம் வந்து அவளின் முன் சொடக்கிட, அஞ்சனா முழித்துக் கொண்டு நின்றிருந்தாள்.
“ஏய் இப்போ நீ என்ன சொன்ன?”
“நான் என்ன சொன்னேன்?”
“ப்ச் பிருத்வி விளையாடாத, என்ன சொன்ன நீ?” அஞ்சனா கேட்க, பிருத்வி அவளின் தோளின் மேல் கையை வைத்துக் கொண்டு,”பாப்பா நான் உன்னை லவ் பண்றேன்னு சொன்னேன். இப்போ தெளிவாகிடுச்சா?” என்று கேட்க, அவள் தான் கேட்டது உண்மை என்ற அதிர்ச்சியில் அப்படியே நின்றிருந்தாள்.
“பிருத்வி எனக்கு என்ன சொல்றதுனு தெரியலை. நீ இப்படி திடீர்னு சொல்லுவனு நான் எக்ஸ்பெக்ட் பண்ணவே இல்லை பிருத்வி.” ஏதோ சிறு குழந்தைத் தப்பு செய்ததைப் போல் தயங்கித் தயங்கிக் கூற, அவளின் பக்கத்தில் வந்து அவளின் தோளில் கைபோட்டு,”அஞ்சனா நான் என் மனசுல இருக்கிறதைச் சொன்னேன். நீ உடனே பதில் சொல்லனும்னு இல்லை. எப்படி இருந்தாலும் நமக்குக் கல்யாணமாகிடுச்சு. ஸோ உனக்கு என்னைத் தவிர வேற ஆப்ஷனும் இல்லை.” சூழ்நிலையை இலகுவாக்க பிருத்வி அவ்வாறு கூற, அஞ்சனா அவனை முறைத்துப் பார்த்தாள்.
“ஹா ஹா கூல் பேபி. அந்த அளவுக்கு சாடிஸ்ட்லாம் இல்லை நான். உனக்கு என்னைப் பிடிக்காட்டி கண்டிப்பா உன்னை என் கூடவே இருனு ஃபோர்ஸ் பண்ண மாட்டேன். இந்த நம்பிக்கையை உனக்கு நான் தரேன். என்னை நீ முழுசா நம்பலாம். இப்போ நாம கிளம்பலாம். ” தீவிரமாக பிருத்வி கூறிவிட்டு நடக்க,
அஞ்சனா போகும் பிருத்வியின் கையைப் பிடித்துக் கொண்டு,”எனக்கும் உன்னைப் பிடிக்கும் பிருத்வி. அது காதல்லானு கேட்டா எனக்குச் சொல்ல தெரியலை. நம்ம கல்யாணம் பேசி முடிக்கிறதுக்கு முன்னாடி அப்பா உன்னோட ஜாதகத்தோட இன்னும் மூணு வரன் கொண்டு வந்தார். என்னைத் தான் செலக்ட் பண்ணச் சொன்னார். உன்னை விட வசதியா, அழகா இன்னொருத்தன் இருந்தான். ஆனால் நாம பார்க்கும் போதும்லாம் நம்ம இரண்டு பேருக்குள்ள ஒரு க்ளாஷ் வந்தாலும் என்னமோ நான் உன்னைத் தான் சூஸ் பண்ணேன். அதுக்கு காரணம்னு கேட்டா எனக்குத் தெரியலை. இப்போ யோசிக்கும் போது உன் மேல ஏதோ உணர்வு வந்ததால தான் நான் அப்படிப் பண்ணிருக்கேன் தோனுது. நமக்குக் கல்யாணம் ஆன புதுசல கூட உன்னை வேற ஒரு ஆளா என்னால நினைக்க முடியலை. ஏதோ ரொம்ப நாள் பழகுனு மாதிரி தான் எனக்குத் தோனுச்சு. இதுக்கு என்ன பேர்னு எனக்குத் தெரியலை.”
“அஞ்சனா சரி சொல்லு. நீ என்னை அஜ்ஜூ, விகாஷ் மாதிரி பீல் பண்றியா?” என்ற பிருத்வியின் கேள்விக்கு வேகமாக இல்லை என்று அவள் தலையசைக்க,
“இது போதும். நீ டைம் எடுத்து யோசி சரியா.” என்று சிரித்துக் கொண்டே பிருத்வி கூற, அஞ்சனா எதுவும் கூறாமல் அமைதியாக இருக்க,
“ரொம்ப யோசிக்காத அஞ்சனா. என்னால என் மனசுல உன் மேல வந்த காதலை சொல்லாம இருக்க முடியலை. அதுனால தான் நான் உன்கிட்ட சொல்லிட்டேன். இல்லாட்டி கொஞ்ச நாள் கழிச்சு சொல்லிருப்பேன். ஸோ நீ உன் படிப்புல மட்டும் கானசன்ட்ரேட் பண்ணு. உனக்கு கண்டிப்பா ஒரு நாள் தோனும் அப்போ என்கிட்ட சொல்லு.” என்று பிருத்வி கூற, அஞ்சனா மெதுவாகத் தலையசைத்தாள்.
இருவரும் கிளம்பி சென்னை வந்து அவர்கள் வேலை மற்றும் படிப்பில் கவனம் செலுத்த ஆரம்பித்து விட்டனர்.
மூன்று வருடங்களுக்குப் பிறகு,
காதலின் நகரம் என்று அழைக்கப்படும் பாரீஸ் நகரத்தின் ஏழாவது ஆரான்டிஸ்மென்ட் (arrondissement) என்னும் பகுதியில் அமைந்துள்ள உணவகத்தின் ஆறாவது மாடியில் உள்ள அறையின் பால்கனியில் இருந்த ஊஞ்சலில் அமர்ந்திருந்தான் பிருத்வி. அவனது மடியில் அவனின் கழுத்தைக் கட்டிக் கொண்டு அமர்ந்திருந்தாள் அஞ்சனா.
“கல்யாணமாகி நாலு வருஷத்துக்கு அப்புறம் ஹனிமூன் வந்த ஓரே ஜோடி நாமளா தான் இருப்போம். அதுவும் ஒன்றரை வயசு பொண்ணோட.” என்று அஞ்சனா உள்ளே படுக்கையில் படுத்திருந்த குட்டிப் பூஞ்சிட்டைப் பார்த்துக் கூற,
“ஹா ஹா என்ன பண்றது ஸ்வீட்டி, நீ உன்னோட ஸ்டடிஸ்லயும் நான் அந்த ஹோட்டல் கன்ஸ்ட்ரக்ஷன்லயும் பிஸியா இருந்தேன். அதை விட மேடம் அவங்களோட காதல்லையே லேட்டா தான சொன்னீங்க.” பிருத்வி அவளது தோள்பட்டையில் அவனது முகத்தை வைத்துக் கொண்டு அவளிடம் சொல்ல,
“ப்ச் நான் ஸ்பெஷலா சொல்லனும்னு நினைச்சேன். உன் பெர்த்டே வரது தெரிஞ்சதும் சரி அன்னைக்கே சொல்லலாம்னு நினைச்சு தான் வெயிட் பண்ணேன். எங்க அதுக்கு முன்னாடி நீயே கண்டுபிடிச்சுடுவியோனு எவ்ளோ பயந்தேன் தெரியுமா. நல்ல வேளை நீ உன்னோட ஓர்க்ல பிஸியா இருந்ததால கண்டுபிடிக்கலை.” சிரித்துக் கொண்டே அஞ்சனா கூற,
பிருத்வி அவளது கண்ணத்தில் அழுத்தி ஒரு முத்தம் வைத்து விட்டு,”பட்டுக் குட்டி உண்மையிலே அந்த பெர்த்டே எனக்கு ரொம்ப ஸ்பெஷல் தான் தெரியுமா. என்னைக்கும் இல்லாத மாதிரி அன்னைக்கு நான் ரொம்பவே ஹாப்பியா இருந்தேன்.” என்ற பிருத்வி அன்றைய தினத்திற்கேச் சென்று விட்டான்.
கொடைக்கானல் சென்று வந்த ஒரு மாதத்திலே அஞ்சனா தன் காதலை உணர்ந்துவிட்டாள். ஆனால் அவனிடம் சொல்ல அவளுக்குப் பயங்கர தயக்கம். இருந்தாலும் சொல்லிவிட வேண்டும் என்று யோசித்துக் கொண்டிருந்த போது தான் பிருத்விக்கு இன்னும் நான்கு மாதம் கழித்து பிறந்தநாள் என்று தெரியவர, அன்றைய தினம் அவன் மறக்க முடியாதபடி இருக்க வேண்டும் என்று முடிவெடுத்து அன்றைய தினத்திலே தன் காதலைச் சொல்லலாம் என்று முடிவு செய்தாள் அஞ்சனா.
அன்று பிருத்வியின் பிறந்த நாள். அஞ்சனாவிடம் பேச்சுவாக்கில் முன்னதாகவே பிருத்வி அவனது பிறந்த நாள் என்று என்பதைக் கூறியிருந்தான். அதனால அன்று இரவு பண்ணிரெண்டு மணிக்கே அவள் தனக்கு வாழ்த்துச் சொல்லுவாள் என்று எதிர்பார்த்தான். ஆனால் அவள் சொல்லவே இல்லை. சரி மறந்திருப்பாள் காலையில் சொல்லுவாள் என்று நினைத்தான். ஆனால் காலையில் எப்போதும் போல் அவள் கல்லூரி கிளம்பிச் சென்றது வருத்தமாகவும் கோபமாகவும் வந்தது பிருத்விக்கு. எல்லோரும் அவனுக்கு வாழ்த்து சொல்ல, அவள் மட்டும் சொல்லாதது மிகுந்த ஏமாற்றமாக இருந்தது பிருத்விக்கு. சரியாக ஒரு மணிக்கு திலக் வந்து,”பிருத்வி நாம கொஞ்சம் வெளில போகனும் வா.” என்று அழைக்க,
“என்ன டா சர்ப்ரைஸ் எதாவது ப்ளான் பண்ணிருக்கியா? அதலாம் ஒரு மண்ணும் வேண்டாம்.” எரிச்சலாக பிருத்வி கூற,
“பிருத்வி என்னாச்சு உனக்கு? மறந்துட்டியா இந்த வருஷம் பிறந்த நாளுக்கு ஒரு ஹோம்ல சாப்பாடு குடுக்கிறது பத்திச் சொல்லிருந்தியே? இப்போ அங்கத் தான் டா போகக் கூப்பிடுறேன்.” என்று திலக் கூற,
“அய்யோ ஆமா சொல்லிருந்தேன். மறந்துட்டேன் டா, நாம அங்கப் போகனுமா என்ன? பணம் தான் கொடுத்தாச்சுல? அங்கப் போனோம்னா நம்மளை பார்த்து அந்தக் குழந்தைங்க ஏங்காத டா?”
“அதலாம் இல்லை பிருத்வி. அவங்க நம்மளைப் பார்க்க சந்தோஷம் தான் படுவாங்க. யாருமே இல்லாம இருக்கிறவங்க அவங்களை தேடி யாராவது வந்தா அது எவ்ளோ சந்தோஷமா இருக்கும் தெரியுமா? நீ எதுவும் பேசாம வா.” என்று அழைக்க, பிருத்வியும் அங்குச் சென்று வந்தால் தன் மனநிலை மாறும் என்று அவனுடன் கிளம்பிச் சென்றான்.
அந்த ஆஸ்ரமம் வந்தவுடன் திலக் அவனை அந்த ஆஸ்ரமத்தை நிர்வகிக்கும் நபரிடம் அழைத்துச் செல்ல, அவர் சந்தோஷத்துடன் இருவரையும் வரவேற்றார்.
“ரொம்ப சந்தோஷம். உங்களால இன்னைக்கு இந்த ஹோம்ல இருக்கிறவங்களாம் நல்ல சாப்பாடு சாப்பிடுவாங்க. ரொம்ப நன்றிங்க.”
“நன்றிலாம் சொல்லாதீங்க. இந்தக் குழந்தைகளுக்காக நீங்க தான் நிறைய கஷ்டப்படுறீங்க. இனிமே எங்களால முடிஞ்சதை நாங்க செய்றோம்.” என்று பிருத்வி கூற,
அவர் சிரித்துக் கொண்டே,”உங்களுக்காக தான் குழந்தைங்க காத்துட்டு இருக்காங்க வாங்க.” என்று அழைத்துச் சென்றார். பிருத்வியும் திலக்கும் அவர் பின்னோடு உணவு அருந்தும் இடத்துக்குச் சென்றனர்.
“நீங்க முன்னாடி போங்க. இதோ நான் வந்துடுறேன்.” என்று கூறி அவர் அந்தப் பக்கம் திரும்பி நகர, பிருத்வி முன்னால் செல்ல திலக் அவன் பின்னே வந்தான்.
பிருத்வி கதவைத் திறந்து கொண்டு உள்ளே நுழைய அதிர்ச்சியில் நின்று விட்டான். அஞ்சனா அங்கே நின்றிருந்தாள். அவளுக்குப் பின் எல்லா குழந்தைகளும் நின்றிருந்தனர்.
அஞ்சனாவின் கையில் ஒரு பூங்கொத்து இருந்தது. அவள் பிருத்வியின் முன்னே வந்து அந்தப் பூங்கொத்தை அவன் கையில் கொடுத்து,”நான் நேத்து நைட் விஷ் பண்ணுவேன்னு எக்ஸ்பெக்ட் பண்ணிருப்ப, பட் நீ மதியம் 1:50 க்கு தான் பிறந்த. அதனால தான் அந்த நேரத்துக்கு உனக்கு விஷ் பண்ணனும்னு தான் இவ்ளோ நேரம் விஷ் பண்ணவே இல்லை. மெனி மோர் ஹாப்பி ரிடன்ஸ் ஆஃப் த டே பிருத்வி.” என்று கூறிவிட்டு அந்தப் பூங்கொத்தை நீட்ட, பிருத்வி இருக்கும் சூழ்நிலையை மறந்து அஞ்சனா இறுக்கமாகக் கட்டிப் பிடித்தான்.
“பிருத்வி கன்ட்ரோல். இங்கப் பார் உனக்காக தான் எல்லாரும் வெயிட்டிங்.” என்று அஞ்சனா கூறியவுடன் தான் சுற்றுப்புறம் உணர்ந்து தன்னை மீட்டு அந்தக் குழந்தைகளைப் பார்த்தான். அவர்கள் எல்லாரும் இவனை நாணத்துடன் பார்க்க, பிருத்விக்கு வெக்கமாக வந்தது. அவனது முகம் ரோஜா போல் மாற அதைப் பார்த்த அஞ்சனாவுக்கும் திலக்குக்கும் சிரிப்பாக வந்தது.
பின் பிருத்வியை கேக் வெட்ட அழைத்துச் செல்ல அவனும் கேக் வெட்டி அங்குள்ள அனைத்து குழந்தைகளுக்கும் கொடுத்தான். பின் அஞ்சனாவுக்கு ஊட்டி விட, அஞ்சனாவும் அவனுக்கும் ஊட்டி விட்டாள். பின் திலக்கிற்கும் அந்த ஆஸ்ரம நிர்வாகிக்கும் கொடுத்தான். பின் அங்குள்ள குழந்தைகளுக்கு சாப்பாட்டை அஞ்சனா, திலக் மற்றும் பிருத்வியே பரிமாறினர். அவர்களும் இவர்களுடன் உட்கார்ந்து சாப்பிட்டனர்.
பின்னர் சிறது நேரம் அந்தக் குழந்தைகளுடன் நேரம் செலவழித்து விட்டு மூவரும் கிளம்பினர். திலக் அலுவலகத்திற்கும் அஞ்சனாவும் பிருத்வியும் வீட்டிற்குச் சென்றனர்.
அவர்கள் இருவரும் வீட்டிற்கு வர, விஸ்வநாதன், கீதா, ஆராதனா, ஷ்யாம், ராஜேஷ் குடும்பத்தினர் மற்றும் விகாஷ் குடும்பத்தினர் என எல்லாரும் இருந்தனர். அவர்களுடன் சேர்ந்து ஒரு முறை கேக் வெட்டினான். இப்பொழுது அஞ்சனா கொஞ்சமா கொஞ்சமாக ஆரா மற்றும் ராஜேஷ் குடும்பத்தினரிடம் பேசுகிறாள். ஆனால் ராஜேஷிடம் மட்டும் கொஞ்சம் தள்ளியே நிற்கிறாள்.
அன்றைய நாள் இரவில் பிருத்வி அவர்களது அறைக்கு வர, அஞ்சனா அவனுக்காக காத்துக்கொண்டிருந்தாள். பிருத்வி முகம் கழுவி உடை மாற்றிவிட்டு அஞ்சனாவின் அருகில் வந்து அவளது கையைப் பற்றிக் கொண்டு,”இன்னைக்கு நெஜமாவே நான் ரொம்ப சந்தோஷமா இருக்கேன் அஞ்சனா. தேங்க் யூ ஸோ மச் அஞ்சனா.” என்று கூறிவிட்டு அவளது நெற்றியில் முத்தம் வைத்தான் பிருத்வி.
“சரி எல்லாரும் கிஃப்ட் குடுத்துட்டாங்க. நீ எதுவும் எனக்குக் கொடுக்கலை?” என்று பிருத்வி கேட்க,
“கிஃப்ட் ரெடியா இருக்கு பிருத்வி.” என்று கூறிவிட்டு கண் இமைக்கும் நொடியில் பிருத்வியை இழுத்து அவனது உதட்டில் அவளது முதல் அச்சாரத்தைப் பதித்தாள் அஞ்சனா. பிருத்விக்கு அதிர்ச்சி தான் ஆனால் சந்தோஷமாக அவளுடன் இணைந்தான். பின்னே என்ன நடந்தது என்று நான் சொல்லத் தேவையில்லை. இருவரும் தங்கள் இல்லறத்தை அழகாகத் தொடங்கினர்.
இதை எல்லாம் நினைத்துப் பார்த்த பிருத்விக்கு தன்னால் சிரிப்பு வர, அஞ்சனாவை இன்னும் நெருக்கமாக அணைத்துக் கொண்டு அவளது உதட்டில் முத்தம் வைத்தான். அவர்களது மோன நிலையைக் கலைக்க பிருத்வியின் அலைப்பேசி ஒலி எழுப்ப அதை எடுத்துப் பார்த்தான்.
திலக் தான் இந்தியாவில் அழைத்திருந்தான். அன்றைய தினம் பிருத்வி மற்றும் அஞ்சனாவின் திருமண நாள். அதைக் கொண்டாடவே அவர்கள் பாரீஸ் வந்திருந்தனர். முதலில் திலக் வாழ்த்துக் கூற, பின்னர் மோனிகா கூறினாள். இருவருக்கும் திருமணமாகி இரண்டு ஆண்டுகள் ஆகின்றன. மோனிகா விடாப்பிடியாக இருந்து திலக்கை திருமணம் செய்துக் கொண்டாள்.
பேசி முடித்து வைத்ததும், பிருத்வி அஞ்சனாவை கட்டிக் கொள்ள, சரியாக அவர்களது பொண்ணரசி அழ, அஞ்சனா உள்ளேச் சென்று குழந்தையைத் தட்டிக் கொடுத்துத் தூங்க வைத்தாள். பிருத்வி உள்ளே வந்து அஞ்சனாவின் நெற்றியிலும் குழந்தையின் நெற்றியிலும் மகிழ்ச்சியாக முத்தம் வைத்தான்.