“ஹ்ம்ம்… ஆரம்பிச்சிட்டேன்தான், முடிக்க விடு. நான் இருந்தப்ப இப்படி போடவும் இல்ல, எப்பவும் ட்ரெஸ் போட்டுட்டு வேற இருந்தாளேன்னு நினைச்சேன். அதுதான் கண்ல தெரிஞ்சிருக்கும்” என்றான்.

“வர வர வரம்பு மீறி பேசுற நீ?”

“இப்படி பேசுறது பத்த மாட்டேங்குது வாணி. நீ சமாளிப்பியானு பயந்திட்டு இருந்தேன், ஆனா என்னால சத்தியமா சமாளிக்க முடியலை. நீ இல்லாம நான்… நான் ரொம்ப திணறுறேன்” என உடல் தளர சோகமாக சொன்னான்.

“நீ என்ன என்னை மிஸ் பண்றியா?”

“உனக்கு எப்படி தெரியுது? இதோ இப்ப கூட டயர்டா இருக்கு, நீ இருந்தா சூடா ஏதாவது போட்டு தருவ. எதுவும் செய்யலைன்னா கூட உன் முகம் பார்த்து இதமா இருக்கும். எவ்ளோ பெரிய வீடா இருந்தாலும் அவன் எவ்ளோ பெரிய ஆளா இருந்தாலும் தானா கதவு திறந்திட்டு உள்ள வந்து சுவரை பார்க்கிறதுக்கும் யாராவது நமக்காக  உள்ளேர்ந்து கதவு திறந்து விட அந்த கதவுக்கு பின்னால அவங்க சிரிப்பை பார்க்கிறதுக்கும் வித்தியாசம் இருக்கும்தானே?” ஆகாஷ் கேட்ட விதத்தில் வாணி உருகி விட்டாள்.

“நான் சரியா முடிவெடுக்கிறேன்னு ரொம்ப சொதப்புறேன். நிஜமா நீ இல்லாம என்னால இருக்க முடியலை. உன்கிட்ட சொன்னா நீ ஃபீல் பண்ணுவியோன்னு உள்ளேயே வச்சு வச்சு… போ நீ தைரியமாதானே இருக்க… நான் சொல்றதை கேட்டுக்க, உள்ள வச்சு புழுங்க முடியலை. ரொம்ப ரொம்ப மிஸ் பண்றேன் உன்னை” மனம் விட்டு சொல்லி விட்டான்.

“இதென்ன குழந்தைங்க டாக்டர் இப்ப குழந்தை ஆகிட்டாரா? இன்னும் ஆறு மாசம்தானே… அப்புறம் சேர்ந்து இருக்க போறோம்தானே. வேணும்னா உனக்குத்தான் இன்னும் ஒரு மாசம் ஆனுவல் லீவ் இருக்கே… எடுத்திட்டு வாயேன்” என்றாள்.

“ம்ஹூம், வாசுதேவன் சார் அடுத்த மாசம் டெம்பரரி டியூடி போறார், இப்போதைக்கு எடுக்க முடியாது”

“போன்ல பேசுறோம்தானே… தைரியமா இருப்பா”

வாணி தனக்கு தைரியம் சொல்ல ஆகாஷுக்கு அவளை நினைத்து பெருமையாக இருந்தது.

இப்படியே பேசிக் கொண்டிருக்க அப்படியே உறங்கி விட்டாள் வாணி. கொஞ்ச நேரம் சும்மா இல்லாமல் ஏதாவது செய்து கொண்டே இருக்கிறாளே… அத்தனை அசதி.

“லைட் போட்டுட்டே தூங்குறதை பாரு…” என முணு முணுத்தவன் உறங்கும் அவன் வாணியை சற்று நேரம் ரசித்து பார்த்திருந்து விட்டு அவனே கைபேசியை அணைத்து வைத்தான்.

மனம் முழுதும் ஒரே தவிப்பு, வாணிக்கான ஏக்கம் தன்னை பைத்தியமாக்கி  விடுமோ என நினைத்தவன் மெல்ல சிரித்துக்கொண்டான். ஏதாவது செய்து விரைவாகவே அவளை பார்க்க செல்ல வேண்டும் என முடிவெடுத்து கொண்ட பின்னரே உறங்க ஆரம்பித்தான்.

அந்த வார இறுதியில் அதிகாலை வேளையில் யாராக இருக்கும் என யோசித்துக் கொண்டே அழைப்பு மணியின் சத்தத்தில் எழுந்த ஆகாஷ் கதவை திறக்க இன்பமாக அதிர்ந்தான்.

தோளில் மாட்டியிருந்த பையை இறக்கி வைத்து விட்டு சோம்பல் முறித்த வாணி ஆகாஷை பார்த்து விட்டு புன்னகைத்தாள்.

அரை சதவீதம் கூட அவளை எதிர்பார்த்திராத ஆகாஷ் உணர்ச்சி பெருக்கிலிருந்து தன்னை சமாளிக்க கைகளை குவித்து பாதி முகத்தை மூடி மூச்சிழுத்துக் கொண்டான். இடது கண்ணிலிருந்து நீர் வடிய வலது கண்ணிலும் நீர் திரண்டிருந்தது.

கைகளை எடுத்தவன், “ஹ ஹ…” சிரித்து மகிழ்வை வெளிப்படுத்தினான்.

உள்ளே நுழைந்த வாணி ஆகாஷை  மென்மையாக அணைத்து பின் விலகிக் கொள்ள அவளை இழுத்து தன்னோடு இறுக்கமாக அணைத்துக் கொண்டான்  ஆகாஷ்.

வாணி விலக நினைக்க விடவில்லை ஆகாஷ்.

“இன்னும் கொஞ்ச நேரம், ப்ளீஸ்” கர கரப்பாக ஆகாஷ் சொல்ல, “ச்சீ லூஸு மாமா, மூணு நாள் இங்கதான் உன்கூடதான் இருக்க போறேன், கதவு  வேற திறந்திருக்கு” என்றாள் வாணி.

அப்படி வாணி சொல்லவும்தான் விலகினான்.

வாணியின் தோள்கள் இரண்டையும் பற்றி இருந்தவன் அவளை கண்களுக்குள் நிறைத்தான்.

பயணக் களைப்பு தெரிந்தாலும் இவனை கண்டதில் அவள் கண்களிலும் பள பளப்பு. மெருகேறியிருந்த அவளது கன்னங்களை பிடித்துக் கொண்டவன் அவள் நெற்றி மீது நெற்றி வைத்து, “தேங்க்ஸ் டி வாணி, தேங்க்ஸ். நீ வரலைன்னாலும் உன்னை தேடி வந்திருப்பேன். மிஸ்ட் யூ லாட்” என்றான்.

ஆகாஷின் மூக்கோடு மூக்குரசிய வாணி, “நீ எப்பவுமே எல்லாமே லேட்டாதான் பண்ணுவேன்னு தெரியும், அதுதான் நானே வந்திட்டேன். இன்னும் வெளிச்சம் வரலை பாரு, கதவை லாக் பண்ணிட்டு வா” என சொல்லி உள்ளே சென்றாள்.

வாணி ஓய்வறை எங்கே என  பார்த்து செல்ல வெளியில் இருந்த அவளது உடைமைகளை உள்ளே எடுத்து வைத்து கதவடைத்தான் ஆகாஷ்.

ஏசி ஓடிக் கொண்டிருக்க அறை குளுமையாக இருந்தது. தன்னை சுத்த படுத்திக் கொண்டு வந்த வாணி படுக்கையில் படுத்துக் கொள்ள, “எப்படி வந்த என்ன ஏதுன்னு எதுவும் சொல்லாம தூங்க பார்க்கிறியா?” கேட்டுக் கொண்டே அவளருகில் வந்து படுத்துக் கொண்டான்  ஆகாஷ்.

“நீதான் என்னை பார்க்கணும் பார்க்கணும்னு அழுது வடிஞ்சியே…  ஒரு ஊர்ல  ஒரே தெருவுல இருந்தப்பவே நான்தான் உன்னை பார்க்க சுவர் ஏறி குதிச்சு வந்தேன், இப்ப மட்டும் வரவா போற? அதனால என் அழு மூஞ்சு ஆகாஷ் மாமாவை பார்க்க நானே புறப்பட்டு வந்திட்டேன்” என்றாள்.

சிரித்த ஆகாஷ், “உன் அளவுக்கு என்னால சுவர் ஏறிக் குதிக்க முடியுமாடி? என் கை கால் உடைஞ்சாலும் நீதான் வருத்தப்படுவ, அதனாலதான் நான் வரலை. சந்தடி  சாக்குல எனக்கு அழுமூஞ்சி பட்டம் வேற… ஹ்ம்ம்… இருக்கட்டும் இருக்கட்டும். சொல்லு எப்படி வந்த?” என விசாரித்தான்.

“ட்ரெயின்தான். வாணி அவ அப்பாகிட்ட சொல்லியிருப்பா போல, வாசுதேவன் சாரே இங்க ஸ்டேஷன் வந்தார்” என்றாள்.

“என்ன அவரா? எங்க அவர்?” பதறிப் போய் எழுந்தான்.

“என்ஜாய் யுவர் வீக் எண்ட் னு சொல்லிட்டு அப்பவே போய்ட்டார்” என சொல்லி அவன் கையை பிடித்திழுத்து மீண்டும் படுக்க வைத்தாள்.

“நீ வந்தது  எனக்கு செம சர்ப்ரைஸ்  தெரியுமாடி. நான் நினைச்சே பார்க்கல. அசத்துற நீ” வாணியின் மூக்கை செல்லமாக பிடித்துக்கொண்டு சொன்னான்.

வாணியிடம் நிறைய மாற்றங்கள், மெலிந்த தோற்றம் மாறிப் போய் பொலிவாக களையாக  ஆகாஷின் பார்வைக்கு பேரழகியாக தெரிந்தாள். பார்வையால் அவளை விழுங்கிக் கொண்டே  ஆகாஷ் சிரித்தான்.

“எப்படி இருக்க?” எனக் கேட்டாள்.

“நேத்து வரை ரொம்ப ரொம்ப மோசமா இருந்தேன், இப்ப சந்தோஷமா இருக்கேன்” மனமார கூறினான்.

“எப்ப ஹாஸ்பிடல் கிளம்பனும் நீ? நான் சமைக்க  ஆரம்பிக்கவா?”

“குக் வருவார்”

“அவருக்கு லீவ் கொடுத்திடு. மூணு நாளும் என் கை சாப்பாடுதான் உனக்கு” என்றாள்.

“ம்ம்…” என்றவன் அவளை நெருங்கி வந்து அணைத்துக் கொண்டான்.

“என்ன,  என்னாச்சு?”

“ஒண்ணுமில்ல போடி, ஏன் தனியா இருக்க ஒத்துகிட்ட? சண்டை போட்டு ஏதாவது பண்ணி என்கூட வந்திருக்க வேண்டியதுதானே?”

“நல்லா ஏதாவது சொல்லிடுவேன். லூஸு, எப்பலேர்ந்து இப்படி ஆன? நீ வேணா என்னை மாதிரி செய்யலாம், எனக்கெல்லாம் உன்னை மாதிரி பொறுமையா  எடுத்து சொல்றது ஒத்து வராது. ஒழுங்கா இரு” அதிகாரமாக சொன்னாள்.

“சரி விடு, எனக்கு கிளம்ப நேரம் இருக்கு. கொஞ்ச நேரம் என் வைஃபை எனக்கு கொடு”

“எவ அவ?”

“இப்ப ஏதாவது பண்ணினா பட படப்பா வராதே உனக்கு?” என தீவிரமான குரலில் ஆகாஷ் கேட்க, வாணி அதிர்ந்து அமைதியாகி விட்டாள்.

“வாய திறந்த… அப்புறம் பாவம் பார்க்க மாட்டேன்” மிரட்டலாக சொன்னவன் அவளுக்குள் புதைந்து கொண்டான்.

ஆகாஷுக்கு என்ன ஒரு ஆசுவாசமான மன நிலை. என் மனைவி எனக்காக என்னை தேடி வந்து விட்டாள் என்பதில் பலமான பெருமை வேறு. விட்டால் நாள் முழுதும் அவள் அணைப்பில் கிடப்பான், ஆனால் வாணி விடவில்லை.

“என்னால அசைய கூட முடியலை, பசிக்க வேற செய்து. விடு ப்ளீஸ்” என வாணியே கெஞ்சவும்தான் மனது வைத்து அவளை விட்டான்.

“தனியாவே வந்திருக்க. இனிமே இப்படி ரிஸ்க் எடுக்காத வாணி” கண்டிப்புடன் கூறினான் ஆகாஷ்.

“என்னை விட சின்ன பொண்ணுங்க எல்லாம் தனியா வர்றாங்க. எனக்கு எப்படி இருந்தது தெரியுமா? தனியா என்னோட ஃபர்ஸ்ட் லாங் டிராவல்… அதுவும் உன்னை பார்க்க. இது தெரியாமதானே ஆறு வருஷம் வேஸ்ட் பண்ணினேன் நான்? இப்ப கூட தோணுது முன்னாடியே இப்படி வந்திருந்தா இந்நேரம் நம்ம பசங்க ஸ்கூல் படிக்கும்ல?”

“சும்மா பசங்க பசங்கனு என்னை காண்டாக்காத” என்றான்.

“நீதான் ஸ்லோனு சொல்லிட்டேனே…”

“வாயாடி! நீ வெறும் மூணு நாளைக்கு வந்திருக்க”

“அதனால?” புருவம் உயர்த்தி மிடுக்காக கேட்டாள்.

“நான் வரலை இந்த விளையாட்டுக்கு” படுக்கையிலிருந்து எழப் போனவன் கையை பிடித்து வாணி இழுக்க மீண்டும் படுக்கையிலேயே விழுந்தான்.

“என்னடி?”

“பதில் சொல்லிட்டு போ” என்றாள்.

“இப்ப இண்டிமேட்டா ஏதாவது நமக்குள்ள நடந்தா என்னால சத்தியமா உன்னை விட்டுட்டு இருக்க முடியாது. யாருக்கு தெரியும் உன்னாலேயும் முடியாம போகலாம்” என்றான்.

ஆகாஷின் கன்னத்தில் இடித்தவள், “ஆனாலும் இவ்ளோ நல்லவனா இருக்க கூடாது நீ, போ போய் கிளம்பு. நான் ஏதாவது செய்றேன்” என எழுந்து கொண்டாள்.

சமைக்க வருபவருக்கு கைபேசி வாயிலாக மூன்று நாட்கள் விடுமுறை அளித்து விட்டான் ஆகாஷ். வாணி காபி கலந்து எடுத்து வர வெளியில் தோட்டத்தில் நின்று பேசிக் கொண்டே பருகினார்கள்.

பல மலர்களின் சீசன் முடிந்திருக்க அங்கு இருந்த சில மலர்கள் குறித்து பேசிக் கொண்டனர். செய்தி தாள் வர வாணி எடுத்து மேலோட்டமாக பார்த்து விட்டு ஆகாஷிடம் கொடுக்க, “யாருக்குடி வேணும் இது?” என சொல்லி வைத்தவன் வாணியையே சுற்றி சுற்றி வந்தான்.

வாணி காலை சமையல் செய்ய ஆரம்பிக்க ஆகாஷும் அவளுடனேயே.

“கிளம்பற ஐடியா இல்லையா உனக்கு?” எனக் கேட்டாள் வாணி.

“பதினஞ்சு நிமிஷத்துல கிளம்பிடுவேன். சும்மா விரட்டாத” என சொல்ல பின் வாணி எதுவும் சொல்லவில்லை. எப்போதும் வாணி செய்யும் வேலையை இவன் செய்தான். நன்றாக லொட லொடத்துக் கொண்டிருந்தான்.

இன்று மட்டும் நேரம் அதி விரைவாக செல்வது போல உணர்ந்தான் ஆகாஷ். சலித்துக் கொண்டே குளித்து  சீருடை அணிந்து தயாராகி வந்தான்.

வாணி செய்திருந்த பூரி கிழங்கை அவளுடன் சேர்ந்து பேசிக் கொண்டே சாப்பிட்டு முடித்து மனமே இல்லாமல் கிளம்பினான்.