தன்னவள் தனக்கு கொடுத்த முதல் முத்தம். அவன் காதல் அவளுக்கு தெரியும் என்று அவன் பெற்றோரிடம் யாரும் கூறவில்லை.
மனம் மகிழ்ந்தாலும் தன் தாயின் பேச்சில் அவள் மனம் எந்த அளவு காயப்பட்டிருக்கும் என்று அவனுக்கு தெரியும் தானே! இந்துவை வைத்து சமாதானப்படுத்தலாம் என இந்துஜா அருகே வந்தான்.
கண்டுகொள்ளாதது போல அவள் செல்ல, “இந்து…” அழைத்துக் கொண்டே சஞ்சய் அவள் பின் வந்தான். அறைக்குள் சென்று படாரென அறைக்கதவை சாற்றினாள்.
மனம் வேதனையடைய நவீனை பார்த்தான்.
அவனும் வேகமாக அறைக்கு செல்ல, “நவீன் நில்லு..” சஞ்சய் அவன் பின்னே ஓடினான். அவனும் கதவடைத்து விட்டான். நாகேந்திரனுக்கும் தன் மனைவி மீது கோபம் வந்தது.
சினமுடன் வந்த சஞ்சய் ஏதும் பேசாமல் வெளியே செல்ல, “மாப்பிள்ள…” அழைத்தார் நாகேந்திரன் ராகவனை..
“நான் பார்த்துக்கிறேன் மாமா” அவர் சஞ்சய் பின்னே சென்று அவனை நிறுத்த, ராகவனை கட்டிக் கொண்டு அவனது சினம் தணித்துக் கொண்டான் சஞ்சய்.
ஏங்க…சுவர்ணலதா அழைக்க, காதில் கேளாதவாறு சென்று படுத்தார் நாகேந்திரன்.
மாமா..அவர் அழைக்க,
“நம்ம புள்ள கஷ்டப்படுறான்னு புரியலையா உனக்கு? அந்த பொண்ணு வேண்டுமென்றே செய்தான்னு உனக்கு தோணுதா?” கைபேசியை வாங்க முயன்றாள். இவன் தானே விளையாட்டு காட்டினான். உன் மகனை விட்டு அந்த பொண்ணை மட்டும் பேசுற… அடிக்கிற..நம்ம சஞ்சய் புன்னகைத்தே எத்தனை வருசமாச்சு. இன்று அவ்வளவு அழகாக சிரித்தான். உனக்கு அது பொறுக்கலைல்ல? என்னை விட்டு தள்ளியே இரு. உன் மகன் மாதிரி என்னால பொறுமை காக்க முடியாது” சீறியவர் படுத்து விட்டார்.
“க்ஹூம்…நானும் எத்தனை நாள்னு பார்க்கிறேன்” கணவனிடம் சவாலாக அவர் பேச, சுவர்ணலதாவின் உதாசினத்தில் காயப்பட்டு போன மனதுடன் பாய் விரித்து கீழே படுத்தார் நாகேந்திரன்..
மறுநாள் சரியாகி விடுவார் என்ற எண்ணத்தில் சுவர்ணலதா நிம்மதியாக உறங்க, யார் தடுத்தாலும் தன் மகனுக்கு அவனது சகியையே முடித்து வைக்கலாம் என எண்ணினார் நாகேந்திரன்.
அனைவர் தூக்கமும் தூரச் சென்றது. பிரசாத்தை அழைத்து பேசிய நவீன் உறங்காமல் கைபேசியை பார்த்து நேரத்தை கழித்தான்.
காலை விடியலின் பின் எழுந்த இந்துஜா ராக்கியும் பிரியசகியும் இல்லாததை கண்டு பதறி அறைக்கதவை திறந்து வெளியே வந்தாள்.
சஞ்சய் இவர்களின் சமையலறை நோக்கி சென்று கொண்டிருந்தான். நவீன் சினமுடன் அவன் பின்னாலே சென்றான். இந்துஜா பதறி அவ்விடம் விரைந்தாள்.
ராக்கியை அமர வைத்து அவனுக்கு பால் ஆற்றிக் கொண்டிருந்தாள் பிரியசகி.
அதிரடியாக உள்ளே வந்த சஞ்சயை கண்டு அதிர்ந்தாள்..
“மாமா…” நவீன் அழைக்க,
ஷ்ஷ்…என்று அவன் பக்கம் திரும்பி விரலை இதழில் வைத்து காட்டிய சஞ்சய், “சகி எனக்கு டீ வேண்டும். சீக்கிரம் நான் கிளம்பணும்” என்றான்.
விழிகளை மட்டும் உயர்த்தி அவனை கண்டு பாலை ஆற்ற, சஞ்சய் அவளிடமிருந்து பால் கோப்பையை வாங்கி, ராக்கியை தூக்கி அறைக்கு எதிரே இருந்த நாற்காலியில் அமர்ந்தான்.
மாமா..யம்மி மில்க்..ராக்கி கூற, ராக்கிக்கு சஞ்சய் பால் புகட்டிக் கொண்டிருந்தான்.
“சஞ்சய், டீ போட்டுட்டேன். வா குடிச்சிட்டு உன்னோட வேலையை கவனி” சுவர்ணலதா சத்தம் கொடுத்துக் கொண்டே வந்தார். அவன் திரும்பவேயில்லை.
தன் மகனையே கவனித்துக் கொண்டிருந்த நாகேந்திரன் தன் மனைவியின் கரத்திலிருந்த தேனீர் கோப்பையை தட்டி விட்டார்.
“உங்களுக்கு தான் வேண்டாம்னு சொல்லீட்டீங்கல்ல? அப்புறம் எதுக்கு தட்டி விட்டீங்க?” அவரிடம் சத்தமிட்டார்.
நவீன் சமையலறையிலிருந்து அவர்களை எட்டிப் பார்த்தான். சம்பந்தப்பட்ட சஞ்சயோ கண்டு கொள்ளாமல் ராக்கியை பார்த்தான். ராக்கியும் தாத்தா பாட்டியை தான் பார்த்தான்.
“நான் கேட்டுக்கிட்டே இருக்கேன்” சுவர்ணலதா நாகேந்திரன் தோளை பற்ற, மனைவியின் கரத்தை தட்டி விட்ட நாகேந்திரன் தேனீருடன் வரும் பிரியசகியை கண்டார்.
நவீனும் இந்துஜாவும் அவர்களின் கோப்பையை எடுத்துக் கொள்ள, சஞ்சயிடம் நீட்டினாள். அவன் அவள் முகம் பார்த்து எடுத்தான்.
“சஞ்சய்…” சினமுடன் சுவர்ணலதா சத்தமிட, பிரியசகி நேராக நாகேந்திரனிடம் சென்று, “கேட்டீங்கள அங்கிள் எடுத்துக்கோங்க” என்றாள்.
அனைவரும் அதிர்ந்து பார்க்க, சஞ்சயும் அவர்களை கவனித்தான்.
“என்னடி பண்ணீட்டு இருக்க? எம் புருசனுக்கும் புள்ளைக்கும் எனக்கு போட்டு கொடுக்க தெரியும்” நாகேந்திரன் கையிலிருந்த தேனீரை பறிக்க வந்தார்.
மனைவியிடமிருந்து விலகி, “பிரியாம்மா….ப்ரேக் ஃபாஸ்ட் என்னம்மா பண்ணப் போற? இனி எனக்கும் சேர்த்து தயார் செய்திடும்மா” என்றார்.
சுவர்ணலதா மட்டுமல்ல அனைவரும் அதிர, இடியாப்பம் அங்கிள் சாப்பிடுவீங்களா?
புன்னகைத்து, சாப்பிடுவேன்மா. ஆட்டுக்கால் பாயாவோடு தயார் செய்றீயாம்மா?
“செய்துடுலாம் அங்கிள்” அவள் நகர்ந்தாள்.
“பிரியா எனக்கு டீ?” பிரசாத் சுவர்ணலதாவை முறைத்துக் கொண்டே வந்தான்.
ம்ம்! என்று ஏற்கனவே அவன் வருவேன் என கூறியதால் அவனுக்கும் சேர்த்து தயார் செய்திருந்தாள். அவனும் வாங்கி பருக,
“சஞ்சய் வரப் போறீயா? இல்லையா?” சத்தமிட்டார்.
அப்பா, நான் தேனீர் குடிச்சிட்டேன். எனக்கு வேலை இருக்கு. கிளம்புகிறேன். முடிச்சிட்டு சாப்பிட வாரேன் என்று ராக்கியை இறக்கி விட்டான்.
தனக்கான கோப்பையை எடுத்து பிரியசகி அவளறைக்குள் சென்று கதவை தாழிட்டாள். அழ வேண்டும் என்று தோன்ற கைபேசியை பார்த்தாள்.
“செங்காந்தளே…
உனை அள்ளவா!…
செல்ல தென்றலே…
உனை ஏந்தவா…!
அழைத்தேன்…
உன்னை என்னோடு
இருப்பேன்
என்றும் உன்னோடு…!”
பாடலை சத்தமாக ஒலிக்க விட்டு படுத்துக் கொண்டாள். தன் அன்னை இருந்திருந்தால் தனக்கு இவ்வாறு நேர விட்டிருப்பாளா? இப்படி இவர்கள் பேசி இருக்க மாட்டார்களே! என்ற எண்ணமும் தன் குழந்தைகளை தன்னால் காப்பாற்ற முடியவில்லையே! என்ற வலியும் அவளை உருக்குலைத்து இருந்தது.
பாடல் சத்தம் வெளியே கேட்க அனைவர் விழிகளும் கலங்கி விட்டது. அவள் தன் குழந்தையை எண்ணி அழுகிறாள் என்று அனைவருக்கும் தெரிந்தது. அதே போல படுத்திருந்த பிரியசகிக்கு ஸ்கேனில் பார்த்த தன் முதல் குழந்தை விழிகளுக்குள் ஊடுருவி என்னை காப்பாற்றும்மா என்று அது அழிவது போல பிம்பம் தோன்ற தலையணையில் முகம் புதைத்து கதறி அழுதாள். பாடல் சத்ததில் அவளின் கதறல் யாருக்கும் கேட்கவில்லை. ஆனால் அனைவராலும் உணர முடிந்தது.
இந்துஜா கதவருகே சென்று கண்ணீருடன் கதவை தட்ட, அவளது கரத்தை விலக்கினான் சஞ்சய்.
“அழட்டும். விடு…” அவன் கூற, அவனை வெறித்து மீண்டும் கதவை தட்டினாள்.
பிரியசகி தெளிவில்லாமல் தன் தாய்மை உணர்வுடன் போராடிக் கொண்டிருந்தாள். அவள் முயன்றும் அழுகையை நிறுத்த முடியவில்லை. பாடல் முடிந்து அவளின் அழுகை வெளியே கேட்க, சுவர்ணலதாவும் பதறி தான் போனார்.
சஞ்சயும் பொறுக்க முடியாமல் கதவை தட்டினான். யார் அழைத்தும் கதவை தட்டியும் கேளாதிருந்த பிரியசகியை சூழ்ந்திருந்தது அவளின் இறந்த கரு.. அவளது அழுகை சத்தம் குறையவும் கதவை திறப்பாள் என அனைவரும் காத்திருக்க, அவளோ அவள் குழந்தையின் எண்ணத்தில் ஆழ்மனதினுள் துவண்டு மயக்க நிலைக்கு சென்று விட்டாள்.
சற்று நேரம் பொறுத்திருந்த பிரசாத், “மாமா எனக்கு சரியா படலை” என்றான்.
நாகேந்திரன் சிந்தனையை அகற்றி, பிரியசகி அறைக்கு சென்று அழைத்து பார்த்தார்.
“மாமா…” பிரசாத் அழைக்க, மற்ற அறைச்சாவி ஒன்றை எடுத்து வந்த நாகேந்திரன் கதவை திறந்தார்.
மயங்கி இருந்த பிரியசகியை கண்டு அனைவரும் திகைத்தனர்.
வாயிலே கண்கலங்க நின்று விட்டான் சஞ்சய்..
“மாமா, தண்ணீர் எடுத்துட்டு வாங்க” பிரசாத் சஞ்சயை பார்க்க, அவன் கலங்கிய விழிகளுடன் துவண்டிருந்த அவன் சகியை தான் பார்த்துக் கொண்டிருந்தான். அவனை பார்த்து விட்டு நவீன் சமையலறை சென்று நீர் எடுத்து வந்து பிரியசகி முகத்தில் தெளிக்க, அவள் விழித்தாள்.
இமைகளை பிரித்த பிரியசகி வாயிலை தான் முதலில் பார்த்தாள். வழியும் கண்ணீரை கூட துடைக்க மனமின்றி சஞ்சய் அவளை வேதனையுடன் பார்க்கும் பார்வையில் பிரியசகி மனதில் பாரம் ஏறியது போல இருந்தது…
“ஏன்டி இப்படி பண்ண? மற்ற பெண்களுக்கு நியாயம் கிடைக்கணும்னு உன்னோட வாழ்க்கையையே இழந்துட்டு நிக்கிற? உன்னை பற்றி ஏதும் தெரியாமல் நானும் இருந்துட்டேன். மன்னிச்சிருடி” என கோபத்தில் அழுது கொண்டே பேசியவள் மன்னிப்பு வேண்டி முடித்தாள்.
பிரியசகி கண்ணீர் வடிய, “அத்த…எதுக்கு அழுற?” ராக்கி இருவரிடமும் வந்தான்.
இந்துஜாவை நகர்த்தி, ஏதும் கூறாமல் பிரியசகி அவனை தூக்கினாள்.
“வலிக்குதா அத்த?” அவளது வயிற்றில் கரம் பதித்தான் ராக்கி.
பிரியசகி இமை பிரித்து விழிகள் வாயிலை நோக்கி இருந்தாலும் அவளின் கரங்கள் தானாக அவளது வயிற்றில் பதிந்து இருந்தது. அதனால் தான் ராக்கி அவளது வயிற்றில் கரம் பதித்தான்.
“இல்லை” தலையசைத்த பிரியசகியின் விழிகளில் மீண்டும் குழந்தை எண்ணம் உருப்பெற கண்ணீர் தானாக வழிந்தோடியது…
சஞ்சயை தனியே அழைத்த எதிர்வீட்டு காமாட்சி, நம்ம தெருல பிரியசகி பற்றிய தவறான கருத்து இருக்கு. உங்க அம்மாவுக்கு அது கூட கோபமா இருக்கலாம்..
“என்ன?” விழிகள் சுருக்கி அவரை பார்த்தான் சஞ்சய்.
ஊர்க்காரப் பொண்ணு சொல்றீங்க? ஊருக்கு அனுப்பாம இப்படி கூடவே வச்சிட்டு இருக்கீங்க? அந்த பொண்ணால குழந்தையும் பெத்துக்க முடியாது. சீக்கிரம் அனுப்பீடுங்க. உங்க பையன் அந்த பொண்ணுக்காக வீட்டையே பிரிச்சு வச்சிருக்கான். பார்த்து அவளுக்காக அவன் உங்களை வெளியே அனுப்பீடாமல் என்று உங்க அம்மா கிட்ட மீனா பேசுனா…
மனதில் சினத்தை தக்க வைத்து, ம்ம்! நான் பார்த்துக்கிறேன் என்றான்.
நாகேந்திரன் பிரியசகி கரம் பற்றி இருந்தார்.
லதா பேசுறான்னு எதுவும் நினைச்சுக்காதம்மா. அவ அப்படி தான். முடிந்ததை பற்றி சிந்திக்காமல் அடுத்து என்ன செய்யலாம்னு பாரும்மா. நாங்க எப்பொழுதும் உனக்காக இருக்கோம் என்றார் ஆறுதலுடன்.
“சரி” தலையை மட்டும் அசைத்தாள்.
காலையில் உணவு வெளிய வாங்கிக்கலாம். நீ ஓய்வெடும்மா..
அங்கிள், உங்களுக்கு பிடித்த பாயா. நான் தயார் செய்கிறேன்..
அதெல்லாம் இன்னொரு நாள் செய்து தாம்மா. இப்ப ஓய்வெடு…
“தேங்க்ஸ் அங்கிள், நான் தயார் செய்திடுவேன். எனக்கு எல்லாம் பழக்கம் தான்”
அமைதியாக வெளியே சென்றார். அவர் செல்லவும் சஞ்சய் அங்கே வந்தான்.
அவனுக்கு காமாட்சி கூறிய செய்தி தான் எண்ணத்தில் வந்து மீண்டு கொண்டிருந்தது. “தெருவில் வசிப்பவர்கள் தன் அம்மாவிடம் கூறியது…”
“மாமா, வெளிய வாங்க” பிரசாத் அவனை அழைக்க, “பிரசாத்” அழைத்தாள் பிரியசகி..
என்ன?
சார் பேச வேண்டியதையும் பேசிறட்டும்.
சஞ்சய் சந்தேகமுடன் அவளை பார்த்தான்.
சொல்லுங்க சார்.
“எதையும் சிந்திக்காமல் அமைதியாக மட்டும் இரு” என்ற சஞ்சய் தங்கையை பார்த்தான். அவள் ராக்கியின் விளையாட்டுப் பொருட்களை அவனுடன் சேர்ந்து அடுக்கி விளையாடும் பாவனை செய்தாள்.
“இந்து, ஈவ்னிங் வெளிய போகணும் எல்லாரும்…” அழுத்தி கூறி சஞ்சய் பிரியசகியை பார்த்தான்.
எங்க மாமா?
“எனக்கு பைத்தியம் பிடிச்சிருக்குன்னு ஹாஸ்பிட்டலுக்கு அழைச்சிட்டு போக போறீங்களா சார்?” பிரியசகி கேட்க, திகைத்து அவளை கவனித்தனர் மற்றவர்கள்.
“ரக்சனா மேரேஜூக்கு ஒரு வாரம் தான் இருக்கு. நம்ம எல்லாருக்கும் ஆடை எடுக்கணும்” பிரியசகியை பார்த்துக் கொண்டே கூறினான்.
“சார் பேச வேண்டியதை பேசிறட்டும் என்றால் என்ன அர்த்தம்? இவள் என்ன எண்ணுகிறாள்? நான் இவளை பைத்தியம்னு சொல்வேனா?” விரக்தி பார்வையை பிரியசகி மீது செலுத்தி அவன் வெளியேறினான்.
பிரியசகியும் இந்துஜாவும் அடுக்கலை சென்று காலை உணவை தயார் செய்ய தொடங்கினார்கள்.
அனைவரும் உணவுண்டு கிளம்பினார்கள். சஞ்சய் மட்டும் உணவுண்ண வரவில்லை. காத்திருந்து பார்த்தாள் பிரியசகி.
“பிரியா நான் குளிச்சிட்டு வாரேன்” இந்துஜா குளியலறைக்குள் சென்றாள். வெளியே எட்டிப் பார்த்தாள் பிரியசகி.
ராக்கியுடன் சஞ்சயின் தாய் விளையாடும் சத்தம் கேட்டது. நாகேந்திரன் வெளியே சென்றிருந்தார். யாருமில்லை என பார்க்கவும் அறையிலிருந்த பையுடன் அவளது கைபேசியை எடுத்து வேகமாக ஓடி வந்தாள்.
“இந்து வந்து விடுவாளோ!” எண்ணத்துடன் பின்னே திரும்பி பார்த்துக் கொண்டே முன் வந்த சஞ்சயை இடித்தாள்.
கையில் பையுடன் அவளை பார்க்கவும் அவனுக்கு சினம் மேலிட்டது.
ஜா, நான் இங்கே இருக்க முடியாதுடி. உன்னோட அண்ணாக்கும், பெரியம்மாவுக்கும் எதுக்கு என்னால தேவையில்லாத பிரச்சனை..
“யாருமில்லாத எனக்கு என் உயிரை காப்பாற்றி கொடுத்திருக்கார் உங்க அண்ணா. எனக்கு இதுவே போதும். இதற்கு மேல் நான் இங்கு தங்க எந்த உரிமையும் இல்லை. என்னால இருக்கவும் முடியல” கண்ணீருடன் வெளியே ஓடினாள்.
சஞ்சய் வெளியே வர, நாகேந்திரன் எதிர்பட்டார்.
சஞ்சய்…
“அப்பா வாரேன்” அவன் பிரியசகி பின் ஓடினான்.
பிரியசகி கரத்தில் பையுடன் ஓடுவதை கண்டு, “இந்தும்மா” அவர் அழைக்க, துவாலையால் முகத்தை அழுந்த துடைத்து அதனை வீசி விட்டு, “பெரியப்பா பிரியா என்னன்னமோ பேசுறா? நானும் போறேன்” அவளும் ஓடினாள். தெருவே இவர்களை வேடிக்கை பார்த்தனர்.
சஞ்சய் பிரியசகியை தவற விட்டு நின்று பெருமூச்சுடன் அனைத்து திசைகளையும் நோட்டமிட்டான். அவன் நிற்பதற்கு அருகே இருக்கும் மரத்தின் பக்கமிருக்கும் அம்மன் சிலைக்கு பின்னே மறைந்திருந்தாள் பிரியசகி..
“அண்ணா, பிரியா எங்க?” இந்துஜா கேட்க, அம்மன் சிலை நோக்கி சென்றவன் பின் மறைந்திருந்த பிரியசகியை வெளியே இழுத்தான்.
சார், என்னை விடுங்க. நான் போகணும்…
“எங்க போக போற?” சீற்றமுடன் கேட்டான்.
“எதுக்கு தொந்தரவு பண்றீங்க? எனக்கும் உங்க யாருக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. விட்ருங்க” அழுதாள்.
“சம்பந்தமில்லையா பிரியா. நான் யாரு உனக்கு?” இந்துஜா சினமுடன் கேட்டாள்.
நான் பார்த்துக்கிறேன் அங்கிள். என்னால நீங்க ஆன்டிய ஹர்ட் பண்றீங்க..
இல்லம்மா…
அவளை இழுத்து சஞ்சய் அம்மன் முன் அவளை நிறுத்தி, சரியா சொன்ன சகி. உனக்கும் எங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை தான் என்று அம்மனின் சூழாயுதத்தில் இருந்த மஞ்சள் கயிற்றை எடுத்து யாரும் எதிர்பாராத நேரத்தில் பிரியசகி கழுத்தில் கட்டினான்.
“அண்ணா….” இந்துஜா கத்தினாள்.
கட்டிக் கொண்டே தன் தாயை பார்த்தான் சஞ்சய். அவர் பார்க்கக்கூடாததை பார்த்தது போல உறைந்திருந்தார். நான் எண்ணியதை மகன் நிறைவேற்றி விட்டான் நிம்மதியடைந்தார் நாகேந்திரன்..
“இப்ப சொல்லு? உனக்கும் எங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லையா?” சஞ்சய் கேட்ட நொடி அவனை பளாரென அறைந்தாள் பிரியசகி.
“பிரியா…” இந்துஜா சத்தமிட, “பிரியாம்மா…” நாகேந்திரனும் சத்தமிட்டார். சுவர்ணலதா சினமுடன் அவளை தான் வெறித்தார்.
சஞ்சய் அவள் அடித்ததையோ, இவர்களின் அதிர்ச்சி, தாயின் கோபம் எதையும் கண்டுகொள்ளாமல், “இப்பொழுதிலிருந்து நீ என்னோட மனைவி. இப்ப எனக்கு உரிமை இருக்கு வா” அவளது பையை வாங்கி தரதரவென இழுத்து சென்றான்.
காமாட்சி புன்னகையுடன் வீட்டிற்குள் ஓடினாள்.
“அண்ணா…நில்லு நில்லு…” என்று இருவர் முன்னும் வந்த இந்துஜா, வீட்டின் வெளியே நிற்க வைத்து வீடு பக்கம் திரும்பினாள்.
“இந்து…” காமாட்சி ஆலம் கரைத்து எடுத்து வந்து இந்துஜா கரத்தில் திணித்தாள்.
சுணக்கமுடன் சஞ்சயை பார்த்தாள் பிரியசகி. அவன் அவளை முறைத்து பார்த்தான்.
“நான் தான கோபப்படணும்? இவர் முறைக்கிறார்? ஒரு வேலை கண்டுபுடிச்சிட்டாரோ?” அவன் கரத்தில் இருந்த பையை பார்த்தாள்.
“பிரியா என்னை பாரு” இந்துஜா பிரியசகி தாடையை பிடித்து அவள் பக்கம் கவனிக்க வைத்து ஆராத்தி சுற்றினாள். பிரியசகியை எண்ணி வருத்தமாக இருந்தாலும் தன் தோழியின் வாழ்வு மலர்ந்த துள்ளலுடன் இந்துஜா முகமும் மலர்ந்தது. சஞ்சய் சிடுசிடுவென நின்றிருந்தான்.
ஆராத்தி தட்டை பறக்க விட்டார் சுவர்ணலதா..
“அதான பார்த்தேன்…” வெளியே வந்த குரலில் சஞ்சய் திரும்பி வெறிக்க, “பாக்குறான் பாக்குறான்” உள்ளே ஓடினர் அக்கம் பக்கத்து வீட்டினர்…
“பெரிம்மா…” இந்துஜா சத்தமிட, “இந்து நீ பேசாத” சுவர்ணலதா சத்தமிட்டார்.
“இங்க யாரும் எதுவும் பேச தேவையில்லை. வா சஞ்சய். வாம்மா மருமகளே!” குரலை ஏகத்திற்கும் உயர்த்தி சுவர்ணலதா வாயை மூட வைத்தார் நாகேந்திரன்.
வெள்ளைக் கோட்டின் முன் பிரியசகி நிற்க, ஒரு வாளித்தண்ணீரை எடுத்து வந்த நாகேந்திரன் அதில் ஊற்றி கோட்டை அழித்தார்.
“அப்பா…” சஞ்சய் சத்தமிட, உன்னோட அம்மாவுக்கு பிடிக்கலைன்னா அவ அப்படியே இருந்துட்டு போகட்டும். “எனக்கு எம் புள்ளை, மருமக சந்தோசம் தான் முக்கியம்” என்றார் மனைவியை முறைத்தவாறு.
“நான் தேவையில்லைன்னு சொல்றீங்களா?” சுவர்ணலதா கேட்க, அவர் பதிலளிக்காமல் “இந்து உன்னோட அண்ணீயை பூஜை அறைக்கு அழைச்சிட்டு போ..”
பூஜை அறையில் விளக்கேற்றி வழிபாட்டை முடிக்கவும் சஞ்சய் வீட்டுக் கதவை தாழிட்டான்.