சஞ்சய் குளித்து ஆடையை போட்டு கண்ணாடியை பார்த்து தலைகோதிக் கொண்டிருந்தான்..
பிரியசகியை கண்ணாடியில் கண்டு புன்னகைக்க, அவள் எந்த உணர்வையும் காட்டாமல் பிரசாத்தும் ஜாவும் வந்திருக்காங்க…என்று சொல்லி விட்டு அவள் நகர, பெருமூச்சுடன் அவன் வெளியே வந்தான்.
பிரியசகி இருவருக்கும் காஃபி போட அடுக்கலைக்குள் செல்ல, அவர்களை அமர சொல்லி தன் பெற்றோரையும் அமர சொன்னான். நவீனோ கண் சிமிட்டாது தன் மாமாவை பார்த்தான்.
“சகி….” சஞ்சய் உரக்க அழைக்க, கையில் காஃபியுடன் இருவருக்கும் கொடுத்து அங்கேயே நின்றாள். அவளை தன் பக்கம் அமர வைத்து பேச்சை தொடங்கினான்.
பிரசாத், இத பாரேன். இந்த பொண்ணு யாருன்னு உனக்கு தெரியுதா? சஞ்சய் கேட்க, பெரியவர்களுக்கும், நவீன், பிரியசகிக்கும் புரிந்தது. ஏற்கனவே பிரசாத்திற்கும் பொண்ணு பார்ப்பதாக கூறி இருந்தான்..
எங்கோ பார்த்தது போல இருக்கு மாமா? எதுக்கு கேக்குறீங்க? எதுவும் பிரச்சனையா?
இல்ல பிரசாத், நம்ம ரக்சனோட சித்தப்பா பொண்ணு தான் இந்த தனலட்சுமி. ரக்சி திருமணத்தோட பார்த்திருப்பன்னு நினைக்கிறேன்..
இருக்கலாம் மாமா…
உனக்கு பொண்ணு புடிச்சிருக்கான்னு சொல்லு. நம்ம இந்து திருமணத்தோட உன்னோட திருமணத்தையும் ஒரே மேடையில வச்சுக்கலாம்னு நினைக்கிறேன்..
மாமா…எழுந்தான்.
அண்ணா, அந்த பொண்ணு நல்ல பொண்ணு தான? நவீன் தன் அண்ணனிடம் கேட்க, ஜா மேரேஜோட நான் அவளுக்காக எல்லாமே செய்வேன்னு கேசவன் அங்கிளுக்கு பிராமிஸ் செய்திருக்கேன். எனக்கு இப்பொழுது மேரேஜ் வேண்டாம்.
நான் சொல்ல வேண்டியதை சொல்லிக்கிறேன். அப்புறம் முடிவெடு கடுமையை முகத்தில் காட்டினான் சஞ்சய். அனைவரும் அவனை அதிர்ந்து பார்த்தனர்.
சித்தப்பா உன்னிடம் பொறுப்பை ஒப்படைத்தாங்க தான். நான் இல்லைன்னு சொல்லவில்லை. சிறு வயதிலிருந்தே நீ ரொம்ப கஷ்டப்பட்டுட்ட பிரசாத்.
மாமா…அவன் இடையிட…
பல்லை கடித்து, “நான் பேசிக்கிறேன்” சத்தமிட்டான்.
எல்லாவற்றையும் நீ இன்முகமாக செய்தாலும் உன் மனதின் வெறுமை இன்னும் உன்னுள் தேங்கி கிடக்கு. அதான் தனியாகவே இருக்க? ஏன் பிரசாத் உன்னோட வொர்க் பண்ற யாரும் பேமிலியோட தங்கவில்லையா? சஞ்சய் கேட்க, பிரசாத் விழிகள் கலங்க தலை கவிழ்ந்தான்.
ஆமா, இதுவரை நானும் உடன் இருக்கிறேன். சிந்திக்கவில்லையே! இந்துஜா அவனை பார்த்தாள்.
உன்னை நீயே தனிமைப்படுத்திட்டு இருக்க..இது சரியில்லை. அதான் எங்களுடன் இருக்க சொன்னேன். நீ விலகிய காரணமும் எனக்கு நன்றாக தெரியும்..
மாமா…அதிர்ந்தான். நவீன் புருவம் சுருக்கி இருவரையும் பார்த்தான்.
என்ன காரணம்? இந்துஜா இருவரையும் பார்த்து கேட்க, சஞ்சய் அவளுக்கு பதிலளிக்காமல் பேசினான்.
உன்னோட மனநிலை எனக்கு நன்றாக புரியுது. தனாவை பற்றி எனக்கு நன்றாக தெரியும். நல்ல பொண்ணு. கொஞ்சம் சுட்டி தான். அவளுக்கு உன்னை ரொம்ப பிடிச்சிருக்கு. வந்த வரனெல்லாம் தட்டி கழிச்சிட்டு இருந்திருக்கா. அவங்க பணக்காரவங்க தான். ஆனால் உனக்கு கண்டிப்பாக மரியாதை கிடைக்கும். உனக்கே உனக்காக பெரிய குடும்பமும் கிடைக்கும்..அவங்க பாட்டியும் தாத்தாவும் கமிஷ்னர் சார் மூலமாக என்னிடம் கேட்டாங்க. உன்னிடம் கேட்டு சொல்றேன்னு சொல்லி இருக்கேன்..நீ என்ன சொல்ற?
எனக்கு அந்த பொண்ணை சரியாக நினைவில் கூட இல்லையே மாமா?
அதனால என்னடா? பேசி பழகிக்கோ. இரண்டு நாட்கள் பேசினால் போதும் அவளை பற்றி முழுசா தெரிஞ்சுப்ப. அவ்வளவு பேசுவா…உனக்கும் பொருத்தமா இருப்பான்னு தான் எனக்கும் தோணுது..சஞ்சய் பிரசாத் முகம் பார்த்தான்.
அண்ணா…இந்துஜா அழைக்க,
என்ன இந்து?
நானும் அந்த பொண்ணுக்கிட்ட பேசணும்..
வெயிட் இந்து. முதல்ல கட்டிக்கப் போறவன் தான் எதுவும் சொல்லணும்..
அங்கிள், ஆன்ட்டி…நீங்க என்ன சொல்றீங்க? பிரசாத் பெரியவர்களை கேட்க, மனம் நிறைந்தது அவர்களுக்கு அவன் கேட்டதில்.
புகைப்படத்தை பார்த்த சுவர்ணலதா, நானும் பார்த்திருக்கேன் பிரசாத். உனக்கு பொருத்தமா இருக்கும்பா. கமிஷ்னர் சார் தம்பி பொண்ணு சொல்லவா வேண்டும் அவர் புன்னகைக்க, நாகேந்திரன் சிந்தனையுடன் எதற்கும் விசாரிக்கவா? தன் மகனை பார்த்தார்.
அப்பா, உங்களிடம் முன்பே சொல்லலைன்னு யோசிக்கிறீங்களா? நேற்று மாலை தான் இதை பற்றி சாரும் அவரோட பெற்றோரும் பேசினாங்க. நானும் விசாரித்தேன். நீங்களும் தாராளமாக விசாரிக்கலாம். பிரசாத் யாரோ இல்லை. அவனும் உங்களுக்கு மகன் தான்…என்றான் சஞ்சய்.
வாஞ்சையுடன் மகனை பார்த்த நாகேந்திரன், எப்ப சொல்ல சொன்னாங்க சஞ்சய்?
நாளை திருமணம்னா கூட அவங்களுக்கு ஓகே வாம்?
வாட்? நவீன் எழுந்தான்.
உட்காருடா. ரதிக்கு தான் பிரசாத்தை சார் கேட்டார். அவள் திருமண எண்ணத்தில் இல்லைன்னு அவ ஸ்ட்ரிட்டா சொல்லீட்டா. தனா அவளாகவே பிரசாத்தை தான் திருமணம் செய்வேன் இல்லைன்னா திருமணமே வேண்டாம்னு சொல்லீட்டாளாம்..
நானா? ஒரு பொண்ணு உன்னை இவ்வளவு லவ் பண்ணி இருக்கு. இது கூட தெரியாம இருந்திருக்க? அவன் தலையில் குட்டினாள் இந்துஜா.
ம்ச்ச்…அவன் இதழ் சுளிக்க, “உனக்கு நம்பிக்கை இல்லையா அண்ணா?” நவீன் கேட்டான்.
காதலில் பெரிதாக எனக்கு விருப்பம் இல்லைடா…
பிரியசகி தன் கணவனை பார்க்க, அவன் இதழ்கள் பிரசாத்தை கண்டு வளைந்தது. ஏதோ புரிய பிரசாத்தை பார்த்தாள்.
மாமா, ஜா மேரேஜ் முடிந்த பின்…
நோ…நான் இதை முன்பே அவர்களிடம் சொல்லீட்டேன். இரு திருமணமும் ஒன்றாக நடக்கணும்னு…
ஏன் மாமா?
நீ எனக்கு பதில் மட்டும் சொல்லு..
அப்புறம் இந்து நீ இன்றிலிருந்து இங்கே தான் தங்கணும். நாளை குழலி அத்தை மகன்கள் மற்றும் சில சொந்தங்களுடன் உன்னை பார்த்து உறுதி படுத்த வாராங்க..
மறு வாரம் உனக்கு நிச்சயவிழா உறுதி செய்யப்படும். சொல்லுங்கப்பா..என்றான்.
ஆமாடா இந்தும்மா, நம்ம வீட்ல கொஞ்ச நாள் இருடா. இந்த மாதமே உங்களது திருமணம் நடக்கணும்.
இந்த மாதமாகவே வா? எதுக்கு அவசரம் மாமா? பிரசாத் கேட்டான்.
அவசரம் தான்.. அப்பா நாளைக்குள் விசாரித்து சொல்றீங்களா? நாமும் பிரசாத்துடன் பெண் பார்க்க செல்லணும்..
சஞ்சயின் அவசரம் தான் என்ற விசயத்தில் திகைத்து, விசயத்தை உணர்ந்தார் நாகேந்திரன். அப்படியென்றால் பிரசாத்திற்கு இப்பொழுதும் பிரியா மீது காதல் உள்ளதா? அதனால் தான் சஞ்சய் அவளிடம் விலகி இருக்கிறானோ? என்ற சந்தேகம் வலுப்பெற்று உறுதியானது.
நான் மாலைக்குள் கூறுகிறேன். நாளை இந்துவை காண மாப்பிள்ளை வீட்ல இருந்து வரட்டும். பிரசாத்திற்கு பொண்ணு பார்க்க ஓகேன்னா அடுத்து இரு நாட்களில் நாம அவனுக்கு பொண்ணு பார்க்க போகலாம்..
சரிப்பா..என்றவன் வந்த வேலை முடிந்தது போல பிரியசகியை ஒரு பார்வை பார்த்து விட்டு ஹரிஹரனுடன் அமர்ந்தான்.
என்ன டாட்? எல்லாம் பாஸ்டா நடக்குது? விட்டா எனக்கும் மேரேஜ் பண்ணி வச்சிருவீங்க போல…
நவீன் சிரிப்புடன், ஏன்டா நம்ம ராக்கிக்கு கல்யாணம் பண்ணிடலாமே! கேலியுடன் பேச, பிரியசகி இருவரையும் முறைத்து நவீன் தலையில் அடித்து நகர்ந்தாள்.
பிரியா, உனக்கு வர வர கை ரொம்ப நீளுது. என்னன்னு கேட்க மாட்டீங்களா மாமா? சஞ்சயிடம் அவன் கேட்க,
நான் என்ன கேட்க? அவன் கேள்வியில் பிரசாத் திகைத்து அவனை பார்த்தான்.
“என்ன கேள்வி இது?” என்று பிரியசகியை காண அவளுக்கு கண்கள் கலங்கி விட்டது. அடுக்கலைக்குள் சென்று விட்டாள்.
நவீனை தனியே அழைத்து பிரசாத் பேச, அவனும் இருவரிடம் சரியாக பேச்சு இல்லை என்றான்.
ஏன்டா?
உனக்கு இன்னுமா புரியல இல்ல புரியாத மாதிரி நடிக்கிறீயா?
நிஜமா புரியலடா..
இந்த திருமணம் நீ செய்தால் தான் அனைத்தும் சரியாகும்..
இல்லை…இருவரும் பேசிக்கிறதில்லை. ஆனால் இருவரும் ஒருவரை ஒருவர் கவனிச்சுக்கிறாங்க.பட்..
நிறுத்தினான்.
இல்லடா..
“ஆமா அண்ணா, உனக்கு இன்னும் பிரியாவை பிடிக்கும் தானே! நீ திருமணம் செய்தால் தான் அவர்கள் நிம்மதியாக வாழ்வாங்க” சொல்லி அவனறையை விட்டு நவீன் விறுவிறுவென வெளியேறினான்.
என் உடல்நிலை மட்டும் காரணமில்லை. பிரசாத் என்னை இன்னும் காதலிக்கிறானா? மனம் துவள பிரியசகி அவளறைக்கு சென்றாள்.
“சகி…” சஞ்சய் அழைக்க, கண்ணீர் வந்து விட்டது அவளுக்கு.
சஞ்சய் அவளை நெருங்கி கண்ணீரை துடைத்து, கொஞ்ச நாட்கள் மட்டும் காத்திருப்பேல்ல சகி..
சஞ்சய்…பிரசாத் என்னை…
அமைதியாக இருந்தான்.
எனக்கு தெரியாது..
அதெல்லாம் ஒன்றுமில்லை சகி. அவன் வாழ்க்கை இப்படியே நின்று விடக் கூடாதில்லையா? அவன் வாழ்க்கையை அவன் சந்தோசமாக வாழ்ந்ததில்லை. தனா கண்டிப்பாக அவனை நன்றாக பார்த்துக் கொள்வாள். நாளை காலை அவளை தனியே மீட் பண்ணப் போறேன். என்னோட வருவீயா? நம்ம பசங்களுக்கு பள்ளி விடும் முன் பேசிட்டு வந்துறலாம்.
கண்டிப்பா வாரேன் சஞ்சய்..
உன்னை போல தான் அவன் வாழ்க்கையும்..
தெரியும் சஞ்சய்..
“தேங்க்ஸ்” அவனை அணைத்துக் கொண்டாள். வெகு நாட்களுக்கு பின் மனைவியின் அணைப்பு சஞ்சய்கு ஓர் இதத்தை தந்தது.
சற்று நாட்களில் இரு ஜோடிகளுக்கும் திருமணம் முடிவு செய்யப்பட்டது. நிச்சயம் நடந்ததன் பின் தனாவும் பிரசாத்தும் அடிக்கடி பேசிக் கொண்டனர். அவனுக்கு அவளை பிடிக்க ஆரம்பித்து இருந்தது. இதுவரை கனவுலகில் வலம் வந்த இனியவன் இந்துஜா நடப்பில் அனைவர் முன்னும் வலம் வந்தனர்.
திருமண நாளும் வந்தது. திருமணத்திற்கு ரதியும் அவளது பெற்றோருடன் வந்திருந்தாள். சஞ்சய் அனைவருக்கும் அழைப்பு விடுத்திருந்தான்.
திருமண வேலைகள் இழுத்துக் கொள்ள யாருக்கும் அமர கூட நேரமில்லை. மகிழ்வுடன் ஓடி ஆடிக் கொண்டிருந்தார்கள்.
பிரியசகியை கண்ட ஒரு பெண்மணியோ, “பாரேன்டி புள்ள பெத்துக்க முடியாதுனாலும் ரெண்டு புள்ளைய தத்து எடுத்திருக்கா..” தாடையை முகத்தில் இடித்து பேச,
ஏடி, என்ன இருந்தாலும் பெத்த பிள்ளை போல வருமா? மற்றவர் ஒத்து ஊத, அத சொல்லுக்கா…பேசிக் கொண்டிருக்க, நவீன் முகம் இருள…ஹரியோ அவர்களை நோக்கி வந்தான்.
ரக்சன் அவனை கண்டு, “என்னாச்சு?” என்று விரைய..ரதி ஹரிஹரனின் கரம் பற்றி தரதரவென தனியே இழுத்து சென்றாள்.
என்ன விடு என்ன விடு…விடுன்னு சொல்றேன்ல கத்திக் கொண்டே ரதியின் கையை உதறினான்.
யார் என்ன பேசினா என்ன? எல்லாரிடம் போய் பதில் சொல்லிட்டு இருக்க போறீயா? ரதி சத்தமிட்டாள்.
அதுக்கு என்ன பண்றதுடா..இது அவங்க இயல்பு. நம்மால் மாற்ற முடியாது என அவனை சமாதானப்படுத்தி அழைத்து வந்தாள். ரக்சன் அவளையே பார்த்துக் கொண்டிருந்தான்.
ஹரி நீ போ. யார்கிட்டயும் வம்பு பண்ணாத சிறுபிள்ளைக்கு கூறுவது போல சொல்லி அவனை போக செய்து அவள் வேலையை கவனிக்க சென்றாள். ரக்சன் பார்வை அவளையே தொடர்ந்தது.
நேரம் கூட திருமணஜோடிகள் மணவறையில் அமர்த்தப்பட்டனர். இந்துவின் வெட்க முகத்தை பார்க்கவும் விஷ்ணுவிற்கு சிரிப்பாக வந்தது. இனியவன் முன்னே இந்துஜாவை கேலி செய்து கொண்டிருந்தான்.
கண்குளிர தன் அண்ணனை பார்த்துக் கொண்டிருந்தான் நவீன். மனதால் இந்துவிற்கு நன்றி நவிழ்ந்து கொண்டிருந்தான். அவள் மட்டும் இவர்களை அவள் வீட்டிற்கு அழைத்து செல்லவில்லை எனில் இருவரும் உயர் நிலைக்கு வந்திருக்க முடியாதே!
மங்கல வாத்தியங்கள் முழங்க இரு மணமகன்களும் மணமகளுக்கு திருமாங்கல்யத்தை பூட்டினர். பின்னர் மெட்டி அணிவித்து அனைவரின் ஆசிர்வாதத்தையும் பெற்றனர்.
ரக்சன் ரதி பின்னே செல்வதை கண்ட சஞ்சய் புன்னகையுடன், அடுத்து இவர்களுக்கு திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று எண்ணினான். ரதியின் கடந்த கால காதல் ரக்சன் என்பதை சஞ்சய் அறிவான்..
அன்றிரவு இரு ஜோடிகளுக்கும் முதலிரவு நடைபெற, சஞ்சய் அவன் முதலிரவுக்காக அவனே தயார் செய்து கொண்டிருந்தான். வீட்டில் யாருமில்லை. அனைவரும் சஞ்சயின் சித்தப்பா வீட்டில் தங்க ஏற்பாடு செய்யப்பட்டது. பிரியசகிக்கு மட்டும் விசயம் தெரியாது.
இரவு உணவை முடித்து அனைவரும் படுக்க செல்ல, சுவர்ணலதாவோ அவளை கண்டு கொள்ளாமல் இருக்க, பிரியசகியை வால் பிடித்து திரிந்தனர் ஹரியும் ராக்கியும்.
நவீனோ ஏதோ காரணம் கூறி அவர்களை தன்னருகே படுக்க வைக்க மூவரும் அசதியில் உடனே உறங்கி விட்டனர். பிரியசகி சஞ்சயை காணாமல் தேட, நாகேந்திரன் தம்பி அவளை கண்டு அவளருகே அமர்ந்தார்.
என்னம்மா தனியா வந்துட்ட?
மாமா அவரை இன்னும் காணோம். அதான்…அவரிடம் பேசினாலும் விழிகள் வாசலில் தான் பதிந்திருந்தன.
உங்களுக்குள்ள எதுவும் பிரச்சனையாம்மா?
இல்ல மாமா…
சஞ்சய் உன்னை பார்க்கும் பார்வையிலே தெரியுது தாயி. அவன் எப்போதும் மற்றவர்களுக்கு ஏற்றவாறு தன்னை மாத்திப்பான். அவன் ஏதும் செய்தால் காரணம் இல்லாமல் இருக்காது. அறிவுள்ள புள்ள புரிஞ்சப்பன்னு நினைக்கிறேன்மா..
தெரியும் மாமா…கோபம் தான்..கொஞ்சமே கொஞ்சம் தான்..
புன்னகைத்த அவர், எம் மவன் இப்ப வருவான். வீட்டுக்கு கிளம்பும்மா. பசங்கள நாங்க பார்த்துக்கிறோம் சொல்லி அவர் நகர, மாமா..அவள் அழைப்பு காற்றில் கரைந்தது.
வீட்டுக்கா? அத்தை மாமா இங்க இருக்கும் போது எதுக்கு? எழுந்து அவர்களை காண செல்ல, நாகேந்திரன் பசங்களுடன் படுத்து தூங்கி இருந்தார். சுவர்ணலதாவை காண செல்ல, அவர் தன் தங்கையுடன் கதவடைத்து பேசிக் கொண்டிருந்தார்.
பெருமூச்சுடன் அவள் பழைய இடத்திலே வந்து அமர்ந்தாள்.
சற்று நேரத்திலே சஞ்சய் பைக் சத்தம் கேட்டு வெளியே வந்தாள். அவன் இன்னும் பட்டு வேஷ்டி சட்டையுடன் இருப்பதை பார்த்தாள். ஆடையை இன்னும் மாற்றவில்லையா இவர்..
சஞ்சயின் ஆள் மயக்கும் புன்னகையும் அவன் முகத்தில் இருந்த தேஜஸூம் குறும்புடனான அவனது ஒற்றை கண்ணடித்தலிலும் பிரியசகிக்கு விசயம் புரிபட்டது. மனதில் மகிழ்ந்தாலும் அதை காட்டிக் கொள்ளாது அவனுடன் பைக்கில் வீட்டிற்கு கிளம்பினாள்.
வீட்டிற்கு செல்லவும் பிரியசகி கதவை நோக்கி செல்ல, பைக்கை நிறுத்தி வீட்டை பூட்டி உள்ளே வந்தவன் விழிகள் பிரியசகியை காண அலைபாய்ந்தது.
தண்ணீர் அருந்தி அடுக்கலையிலிருந்து அவர்கள் அறையையும் அவன் விழிகள் அலைபாய்ந்ததையும் கண்டு வேகமாக படிகளில் ஏறினாள்.
“சகி நில்லு…” சஞ்சயும் அவளை விரட்ட, அறையினுள் செல்லும் முன் அவளை தன் கரங்களில் ஏந்தி இருந்தான் சஞ்சய்.
சஞ்சய் இறக்கி விடுங்க…
“முடியாது” தலையசைத்த சஞ்சய், இன்று முழுவதும் நமக்கு சிவராத்திரி தான்..
விடுறீங்களா சஞ்சய். எனக்கு விருப்பமில்லை..
ஆழ்ந்து அவளை பார்த்து ஏதும் பேசாமல் அவர்களறைக் கதவை திறந்து காலால் அடித்து சாத்தி அவளோடு படுக்கையில் விழுந்தான்.
விடுங்க சஞ்சய்…அவள் குரல் ஓங்க,
அன்று நான் மறுத்தது தவறு தான். எனக்கு பிரசாத், நவீனிற்கும் செய்ய வேண்டிய கடமைகள் இருக்கிறதே! அதை விட உண்மையிலே அன்று உன் உடல்நிலை எண்ணி பயந்ததும் உண்மைதான் அவள் தலையில் கை வைக்க, அதனை எடுத்து விட்ட பிரியசகி…
புரியுது சஞ்சய். உங்களுக்கு பிரசாத் மீது கோபம் இல்லையா?
அவன் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கணும் சகி. அவனுக்கென ஒரு துணை இருந்தால் தான் சரியாக இருக்குமென்று தோன்றியது. இந்து திருமணத்திற்காக அவன் எல்லாம் செய்தால் அவனுக்கென யாருமில்லாமல் இருப்பதாக கண்டிப்பாக எண்ணம் தோன்றும். அதனால் தான் இருவருக்கும் ஒரே நேரத்தில் திருமண ஏற்பாடு செய்தேன்..
இந்து அவனருகே இல்லைன்னா மேலும் வெறுமையை உணர்வான். நம்மை காண கூடாது என்று தான் தள்ளியே இருந்து அவனை தனிமைப்படுத்திக் கொண்டான். அவன் எண்ணம் தெரியவும் தான் உன்னிடம் விலக்கம் காட்டினேன்.. சாரி சகி..
காற்று புகாதவாறு சஞ்சயை இறுக தழுவி, “லவ் யூ வெரி மச் சஞ்சய்” என்றாள். பின் இருவரும் ஒருவரில் ஒருவர் தன் தேடலை தொடங்கினார்கள். அதிகாலை நேரத்தில் கண்ணயர்ந்தனர்.
மறுநாள் மறுவீட்டிற்கான சடங்கிற்காக இந்துஜா சஞ்சய் வீட்டிற்கும் பிரசாத் தனாவின் வீட்டிற்கும் சென்றிருந்தனர். இந்துவிற்கோ என்றுமில்லா வெட்கம் அவளை சூழ பிரியசகியும் நவீனும் அவளை ஓட்டி தள்ளினார்கள்.
பிரசாத்திற்கு தனா வீட்டில் ஏக கவனிப்பு. மனம் நெகிழ்ந்து போனான். அவன் மனதில் தனக்கென குடும்பம் இருப்பதாக உணர்ந்து தன் மனைவியை காதலுடன் பார்த்தான்.
சுவிச்சர்லாந்தின் அதி குளிரில் நடுங்கியவாறு தன் கணவனின் சட்டையை தொடை வரை அணிந்து வெளியே வந்த சகியை இழுத்து அவளை தன்னுடன் போர்த்தி…
“ஆகாய சூரியனை ஒற்றை ஜடையில் கட்டியவள்
நின்றாடும் விண்மீனை நெற்றி சுட்டியில் ஒட்டியவள்
இவள்தானே எரிமலை அள்ளி மருதாணி போல் பூதியவள்
அடியே!என் தேகம் முற்றும் சுற்றி கொண்ட கொடியே!
உன் எண்ணம் என்னவோ!
சகியே! என்னை கொஞ்சம் கொஞ்சம் கொத்தி தின்னும் கிளியே!
என்னை கொல்லும் எண்ணமோ!”
பாடலை சஞ்சய் முணுமுணுக்க, அவள் மீதியை தொடர்ந்தாள். இருவரும் அன்றில் காதல் பறவைகளாய் ஒருவரில் ஒருவர் புதைந்திருந்தனர்.
ஒரு வருடத்தின் பின்..
காவல் தலைமை ஆணையகத்தில் சஞ்சய் உள்ளே நுழைய, அனைத்து காவலர்களும் அவனுக்கு சல்யூட் செய்து வரவேற்றனர். புது கமிஷ்னருக்காக மாலையுடன் அனைவரும் காத்திருக்க, சந்திரசேகர் சஞ்சய்கு புது கமிஷ்னர் மகேந்திரசிங்கை அறிமுகப்படுத்தி அவருக்கு சஞ்சயை பற்றி கூற, அவரோ அவனை பற்றி புட்டு புட்டு வைத்தார்.
என்ன யங் மேன்? விசாரணையில பயங்க எழுச்சிக்கரமா பேசுனீங்க போல? அவர் கேலி செய்ய, புன்னகைத்தான் சஞ்சய்..
புது கேஸ் வந்துருக்கு பார்க்கலாமா யங் மேன்?
“எஸ் சார்” என்று இருவரும் அவர்களின் கேஸ் டீடைல்ஸ் பார்க்க துவங்கினர். சந்திரசேகர் தன் வீட்டினரை கவனிக்க பணியிலிருந்து ஓய்வெடுத்து விட்டார்.
வீட்டிற்கு வந்த சஞ்சயிடம், டாட் நான் தான் கிளாஸ் பர்ஸ்ட் ஹரி அவனது ரிப்போர்ட் கார்டை காட்ட, ராக்கி அவனுடையதை மறைத்தான். அவன் இரண்டாமிடம் எல் கே ஜி படிக்கிறான்.
சுவர்ணலதா ராக்கியை தூக்கி முத்தமிட, நாகேந்திரன் ஹரியின் தோளை தட்ட, ஹரி சஞ்சயை கட்டிக் கொண்டான். பிரியசகி இருவரையும் முறைத்து அடுக்கலைக்கு நகர,
டேய், உங்க மாம் கோவிச்சிட்டு போறாடா. நான் என் பொண்டாட்டியை பார்க்க போறேன்பா என அவளை பின்னிருந்து அணைக்க,
சஞ்சய் டீ போடவா?
நோ…ஸ்வீட் வேணுமே என்று அவள் பேசும் முன் அவள் இதழ்களை அடைந்திருந்தான்.
சகிக்காகவே பிறந்து காத்திருந்து அவளை கரம் பிடித்து ஊடல் கூடல் முடித்து பொக்கிஷமாக காத்து குடும்பத்துடன் இனிதே அவர்களின் வாழ்க்கை சிறந்து கொண்டிருந்தது.