சூரியன் 28

மறுநாள் காலை விடியலில் உடல் பாரமாக இருப்பது போல பிரியசகிக்கு தோன்றியது. விழிக்க முடியாமல் விழித்த அவளை அணைத்து படுத்திருந்தான் சஞ்சய்.

“சஞ்சய்…” கண்ணை கசக்கி அவனிடமிருந்து நகர முற்பட்டாள்.

ப்ளீஸ் சகி. கொஞ்ச நேரம் தூங்கலாமே!

நேரத்தை பார்த்தவள், அச்சோ! ஏற்கனவே நேரமாகிடுச்சு. நவீன் தயாராகி வந்துருவான் சஞ்சய். பிரேக்பாஸ்ட் ரெடி பண்ணனும்..

அம்மா பார்த்துப்பாங்க சகி. நீ இரு..

சஞ்சய்..ப்ளீஸ்.. அவங்க நவீனை திட்டுனா அவன் சாப்பிடாமல் போயிடுவான்.. பிரசாத்தும் இருக்கான். கோபப்படுவானுக..

கைபேசியை எடு…..

“சஞ்சய்…” சிணுங்கினாள் பிரியசகி.

எடு சகி. எனக்கு நீ பக்கத்துல மட்டும் இரு. எனக்காக இருக்க மாட்டாயா?

சஞ்சயின் கைபேசியை எடுத்து அவனிடம் நீட்டினாள்.

அம்மா, சமையல் செய்து எல்லாரையும் பார்த்துக்கோங்க. நான் தூங்கணும். சகி பக்கத்துல இருக்கணும். யாரையும் எதுவும் சொல்லாமல் பார்த்துக்கோங்க. முடியாதுன்னா அதையும் சொல்லீடுங்க என்றான்.

என்னடா கண்ணா, அம்மா மேல கோபம் குறையலையா? ஏற்கனவே தேனீர் தயார் செய்துட்டேன். பசங்க குடிச்சிட்டு இருக்காங்க. நான் பார்த்துக்கிறேன். நீ ஓய்வெடு. விழித்தவுடன் சொல்லு இந்துகிட்ட உணவை உங்க அறைக்கே இருவருக்கும் கொடுத்து விடுகிறேன் என்றார் சுவர்ணலதா.

சஞ்சய் சிந்தனையுடன் அமைதியாகி விட,

சரிங்க அத்தை. இவர் விழிக்கவும் நானே வந்து உணவை எடுத்துக்கிறேன் என்று கைபேசியை அணைத்து, ஆன்ட்டிகிட்ட பேசாமல் ஏன் சஞ்சய்?

அவங்கள நம்ப முடியாது சகி…

“இல்ல சஞ்சய், ஆன்ட்டி ஒன்றும் வேண்டுமென்றே எதையும் செய்யவில்லை. அவங்க ஆசை நிறைவேறாது தானே! அதான் அவங்களுக்கு கவலை. அதை என்னிடம் கோபமா காட்டி இருக்காங்க. வேற ஒன்றுமில்லை…” சஞ்சயை சமாதானப்படுத்தினாள். அவன் அவளையே பார்த்தான்.

“இப்பொழுதே கேட்டு விடுவோமா?” பிரியசகி தயக்கமுடன் கணவனை பார்த்தாள்.

புருவம் உயர்த்தி, “என்ன?” கேட்டான்.

மென்று விழுங்கி எப்படியோ சஞ்சயிடம் வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்றெடுப்பது பற்றி கேட்டு விட்டாள்.

பதிலே பேசாது சஞ்சய் எழுந்து அவன் ஆடையை போட்டான்.

“சஞ்சய்…” பிரியசகி அழைப்பு காற்றில் தான் கரைந்தது.

உர்ரென முகத்தை வைத்து சஞ்சய் வெளியே வர, “ஓய்வெடுக்கணும்னு சொன்ன?” சுவர்ணலதா கேட்க, பதட்டமுடன் அவன் பின் ஓடி வந்தாள் பிரியசகி.

சஞ்சய் ஏதும் கூறாமல் நகர, “என்ன மாமா குழந்தையை பத்தி கேட்டாளா?” நவீன் தேனீரை பருகியவாறு விழிகளை உயர்த்தி கேட்டான்.

சஞ்சய் நின்று அவனை பார்க்க, பிரியசகி அதிர்ந்தாள்.

இவனுக்கு எப்படி தெரியும்?அவள் மனதில் நினைப்பது வெளியே தெரிய, எனக்கு எப்படி தெரியும்னு பாக்குறியா? நவீன் இருவரிடமும் எழுந்து வந்தான்.

பிரியசகி திருதிருவென விழித்து இருவரையும் பார்த்தாள்.

“மாமா, பிரியா அவளாக இதை யோசிச்சிருப்பானு நீங்க நினைக்கிறீங்க?” நவீன் கேட்க, புருவம் சுருக்கி பிரியசகியை பார்த்தான் சஞ்சய். அவள் விழிகளில் பயம் அப்பட்டமாக தெரிந்தது.

சஞ்சய் பிரியசகியை நெருங்கி, “யாரு இதை பத்தி ஆரம்பிச்சது?” பிரியசகி விழிகளை ஊடுருவினான்.

இல்ல…தலையசைத்து, நா..நான் தான்…தடுமாறினாள்.

“என்ன விசயம்? பிரியா நேற்று குழந்தையை எண்ணி தான் அழுதுட்டு இருந்தீயா?” பிரசாத் கேட்க, “அழுதாளா?” சஞ்சய் அவனை பார்த்தான்.

ஆமா மாமா என்ற பிரசாத், நேற்று பிரியசகி கூறியதை கூறினான்.

“உனக்கு தெரியுமா நவீன்?” சஞ்சய் கேட்க, மாமா…அவன் தயங்கி அவனது பெற்றோரை பார்த்தான்.

“என்ன விசயம் அண்ணா? என்ன பேசிட்டு இருக்கீங்க? எனக்கு ஒண்ணுமே புரியல” இந்துஜா கேட்க,

“உன்னோட பிரியா என்னை வேறொருத்தியோட படுக்க சொல் றா?” பச்சையாக சொல்லி விட்டான் சஞ்சய்.

“வாட்?” மற்றவர்கள் அதிர, பிரியசகி விழிகளிலிருந்து கண்ணீர் வந்து விட்டது.

பிரியா, அண்ணா…என்ன நீ? இந்துஜா திக்கி கேட்க,

“அப்படி நான் சொல்லலை…” பிரியசகி தொண்டை அடைக்க கண்ணீருடன் கூற, அவளது கஷ்டம் புரிந்து சஞ்சய் அவளை கட்டிக் கொள்ள, அழுகை அதிகமானது பிரியசகிக்கு.

“சகி அழுறத நிறுத்துறீயா?” சஞ்சய் அதட்டினான்.

சோர்வுடன் மனைவியுடன் அமர்ந்தான் சஞ்சய்.

நாகேந்திரனுக்கு விசயம் பிடிபட்டது. தன் மனைவியை முறைத்து, “சஞ்சய்…அம்மா தான் இதை பத்தி என்னிடம் பேசினா..” தயங்கி சொல்லி முடித்தார்.

ஏன்பா?

இல்லடா..

“சஞ்சய், எப்படியும் நமக்கு ஒரு குழந்தை வேணும். ஐவிஎஃப் ட்ரீட்மென்ட் எடுத்துக்கலாமா?” விழிகளை உயர்த்தினாள் பிரியசகி.

அவளை நகர்த்தி, சகி நமக்கு திருமணமாகி இன்னும் ஒரு மாதம் கூட முழுதாக ஆகவில்லை. அதற்குள் என்ன இந்த பேச்சு? நான் உன் கழுத்தில் தாலி கட்டியதில் இருந்து வீட்டில் இதே பிரச்சனை தான். என்னால எந்த ட்ரீட்மென்டும் செய்துக்க முடியாது..

“சஞ்சய்…” அவள் பேசும் முன், “இந்து…” அழைத்தான் சஞ்சய்.

அண்ணா,..

“ஹரியையும் ராக்கியையும் நாங்க தத்து எடுத்துக்கிறோம்” என்றான் சஞ்சய். இந்துஜா முகம் வாடியது.

சஞ்சய்…அதிர்ந்த பிரியசகி, ராக்கி பிறந்ததிலிருந்து ஜா தான் அவனை வளர்த்துட்டு இருக்கா. இப்ப நாம…நோ…இதெல்லாம் தப்பு…

சகி, உன்னிடம் நான் பேசவில்லை. நான் என் தங்கையிடம் பேசுகிறேன்.

இந்து, நான்கு மாதத்திற்குள் உனக்கும் இனியவாவிற்கும் நாங்க திருமணம் செய்திடுவோம். ராக்கியை அவர்கள் நன்றாக பார்த்துக் கொள்வார்கள் தான் இல்லைனு நான் சொல்ல மாட்டேன். அந்த வீட்ல விச்சுவும் இருக்கான். அவன் கட்டிக்கப் போகும் பொண்ணு வந்த பின் ராக்கியை ஏதாவது பேசி குடும்பத்தில் பிரச்சனை வர வாய்ப்புள்ளது. அதனால….என்று நிறுத்தி இந்துஜாவை பார்த்தான்.

ராக்கி அறையிலிருந்து அப்பொழுது தான் வெளியே வந்தான்.

சித்து…அவன் அழைக்க, எல்லாரும் அவனையும் இந்துஜாவையும் பார்த்தனர்.

ராக்கியை தூக்கி மடியில் வைத்து, “சரி அண்ணா..” என்றாள்.

நீ எப்பொழுது ராக்கியை பார்க்கணும்னாலும் பார்க்கலாம்..

“சஞ்சய், புள்ள இந்துவை விட்டு இருப்பானா?” நாகேந்திரன் கேட்க, சுவர்ணலதா முகம் அப்பொழுதும் தெளிச்சியாக இல்லை.

“ராக்கி சகியோட முழு பொறுப்பு. அவ தான் பார்த்துக்கணும்..” என்ற சஞ்சய், “இன்னும் உங்களுக்கு பிரச்சனையாம்மா?” சுவர்ணலதாவை ஏறிட்டான்.

என்ன இருந்தாலும் அவர் தொடங்க, “என்னால சிகிச்சை ஏதும் செய்து கொள்ள முடியாது. சகி தான் என்றும் எனக்கு. இதுக்கு மேல நான் என்ன செய்யணும்?” கனிவாகவே கேட்டான்.

சுவர்ணலதா வாயை மூடிக் கொண்டார்.

“அண்ணா…நான் இன்றே நானாவோட தங்கிக்கிறேன்” என்றாள் இந்துஜா ராக்கியை பார்த்துக் கொண்டே..

ஏம்மா? நாகேந்திரன் வினவ, திடீர்னு ராக்கியை விட்டு விலகினால் அவன் ரொம்ப அழுவான் பெரிப்பா. அதான் கொஞ்ச நாள் ராக்கி பிரியாவுடன் இருக்கட்டும்..

“அந்த காட்டுக்குள்ள உனக்கு கஷ்டமா இருக்கும் ஜா…” பிரசாத் கூற, அதான் நீ இருக்கேல்ல என்றாள்.

பிரியசகி இந்துஜாவிடம், ஜா அவசரப்படாத. நேரம் எடுத்து முடிவெடு..

இல்ல பிரியா என்று ராக்கியை பார்த்து, “ராக்கி இனி மேல் நீ பிரியா கூட தான் இருக்கணும். சித்து ஊருக்கு போறேன்” என்று ராக்கியை இறக்கி விட்டு அவளறைக்கு ஓடினாள்.

ஜா…பிரியசகி அவள் பின் செல்ல முனைய, அவள் கரம் பற்றி தடுத்தான் சஞ்சய்.

சஞ்சய், ஜாவுக்கு கஷ்டமா இருக்கும்.

பழகிப்பாங்க என்றான் ஹரிஹரன்..

ஹரி நீ அமைதியா இரு..

“நான் பார்த்துக்கிறேன் பிரியா” என்று பிரசாத் இந்துஜா அறைக்கு செல்ல, நாகேந்திரன் சுவர்ணலதாவும் சென்றனர்.

“சித்து…” ராக்கி படிப்பக்கம் செல்ல, ராக்கியை தூக்கிய ஹரிஹரன்..அம்மா அப்பா சொல்லு என்று இருவரையும் கைகாட்ட, டென்சன் ஏறியது பிரியசகிக்கு.

ஹரி, அழப் போறான்.

“அத்த..சித்து” பிரியசகியிடம் தாவினான் ராக்கி.

“ராக்கி நீ அத்த, மாமா கூடவே இருக்கியா?” நவீன் கேட்க,

சித்து…

சித்து ஊருக்கு போகப் போறா…

அப்பா..

பெருமூச்சுடன் அப்பா சாமிட்ட போயிட்டாங்க ராக்கி..

ராக்கி அழ, “சும்மா இருங்கடா” என்று ராக்கியை சமாதானப்படுத்த வீட்டிற்கு வெளியே சென்றாள் பிரியசகி.

மாமா, இது சரியா வருமா?

வரும் நவீன். இதை தவிர வேற வழியில்லை. இந்து வாழ்க்கையும் பிரச்சனையில்லாமல் போகணும். அதுக்காகவும் தான் இம்முடிவை எடுத்தேன். சகி ராக்கியை நன்றாக பார்த்துக் கொள்வாள்.

இந்துவும் அவளறையில் பிரசாத்திடம் இதை தான் சொல்லிக் கொண்டிருந்தாள். பிரியாவிற்கு குழந்தையாக ராக்கி இருப்பதை நான் ஒத்துக் கொண்டதன் காரணம்..பிரியா தான். அவ ராக்கியை நன்றாக பார்த்துக் கொள்வாள் பட் ஹரி…சிந்தனையுடன் பிரசாத்தை பார்த்தாள்.

“நாங்கபார்த்துக்கிறோம்டா.

அவனையும் அவங்க தத்து எடுக்கட்டும். பெரிய பையன் தானே புரிஞ்சுப்பான்” நாகேந்திரன் கூற, ராக்கியை வந்து பார்த்துக்கலாமா பெரிப்பா?

“அம்மாடி, இது உன்னோட வீடு. எப்பொழுது வேண்டுமானாலும் உன் வீட்டாரிடம் சொல்லீட்டு வரலாம். உனக்கு இங்கே முழு உரிமையும் இருக்கு” ஆதரவாக இந்துஜா தலையை வருடினார்.

தேங்க்ஸ் பெரிப்பா…நான் பேக் செய்றேன். நானா வெயிட் பண்றீயா?

ம்ம்! என்று அவன் நகர, ஹாலில் அமைதி நிலவியது. அவனும் வந்து அமர்ந்தான்.

சுவர்ணலதா காலை உணவு தயார் செய்ய, அதனை உண்டு இந்துஜா பிரசாத்துடன் கிளம்பினாள்.

பிரியசகிக்கு தான் இந்துஜாவை அனுப்ப மனமேயில்லை. அவ்வப்போது சஞ்சயையே பார்த்தாள். அவனோ ஏதும் அறியாதவன் போல இருந்து கொண்டான்.

பிரியசகி உடல்நிலை சரியாகவும் ராக்கி உறங்கும் நேரம் தவிர மற்ற நேரம் முழுவதும் பிரியசகியுடன் இருக்கவும் அவனும் அவளுடன் இருந்தான். ஆனால் அவ்வப்போது ராகவனையும் இந்துஜாவையும் தேடினான்.

பிரியசகிக்கு அவனையும் ஹரியையும் சமாளிக்கவே போதும் போதுமாகி விடும்.  இரவு நேரம் தான் சஞ்சயுடனான அவர்களுக்கான நேரம்…அதுவரை தூரமிருந்து தன் மனைவியை கண்டு ரசித்து வந்தான் சஞ்சய்.

அன்றிரவு அனைத்து வேலையையும் முடித்து ராக்கியுடன் அறைக்கு வந்த பிரியசகி, அவர்களது அறையில் போடப்பட்டிருந்த ராக்கிக்கான குட்டிப்படுக்கையில் அவனை படுக்க வைத்து அருகே அமர்ந்து அவனுக்கு தட்டிக் கொடுத்தாள்.

அத்த, பிரின்ஸ் ஸ்டோரி அவன் கேட்க, அவளும் அவனோடு ஒன்றி கதை கூறிக் கொண்டிருந்தாள்.

அலைபேசியில் மூழ்கியிருந்த சஞ்சய் அதனை படுக்கையின் அருகேயிருந்த மேசையில் வைத்து தன் மனைவியை அங்குலம் அங்குலமாக ரசித்தான்..

பிரியசகிக்கு குறுகுறுப்பு தோன்ற திரும்பி சஞ்சயை காண, அவன் பார்வையில் காணாதது போல முகம் திருப்பி ராக்கியை உறங்க வைத்து சஞ்சயிடம் வந்தாள். அவளுக்காக காத்திருந்த சஞ்சய் தனது சர்ட் பட்டனை கழற்றினான்.

சஞ்சய்…

சகி ரொம்ப பெயினா இருக்கு அவனின் காயம்பட்ட மார்பினை காட்ட, எப்போதும் போல அவன் மார்பில் முத்தமிட்டு அவனருகே படுத்தாள்.

கைகளை அணைவாய் போட்டு அவன் இருக்க, சஞ்சய்..

ம்ம்!

சஞ்சய்..

சொல்லு சகி?

நம்ம ஹரியை பள்ளியில் சேர்க்கலாமா? ராக்கியை தூக்கி வைத்திருந்தால் ஹரி கோபப்படுறான். அவனுக்கு ஊட்டி விட்டால் ராக்கி அழுறான்…

சஞ்சய் சிரித்தான்.

“சிரிக்காதீங்க சஞ்சய். ஹரியும் எத்தனை நாள் தான் வீட்டில் இருப்பான்? அவனை பள்ளியில் சேர்த்தே ஆகணும். என்னை வேலையே பார்க்க விட மாட்டேங்கிறான். நீங்களும் வேடிக்கை தான் பாக்குறீங்க?” குறைபட்டாள்.

“எந்த பள்ளியில் சேர்க்கலாம்?” சஞ்சய் கேட்க,

எஸ்.கே.பி

ஓ.கே..சேர்த்திடலாம்..

சஞ்சய் இனியவன் ஜாவை பார்க்க போயிருக்கார்..

தெரியும். அவ சரியா பேசலையாம். ராக்கி நினைப்புல இருக்கா. சரியாகும் சகி.

இல்ல சஞ்சய், அவ இங்க நம்முடன்…

நோ சகி, இந்துவை பிரசாத்தும் இனியவனும் சரி பண்ணிப்பாங்க…

சஞ்சய் அவ கூட யாருமில்லாமல்..

இருந்து பழகணும் சகி. அவளுக்கு எல்லா நேரமும் எல்லாரும் உடன் இருக்கவும் அவளால அவளுக்காக என எதையும் யோசிக்க முடியல. இனி அவள பார்த்துப்பா. நீ தூங்கு..

சஞ்சய் உங்களுக்கு எப்பொழுது சரியாகும்?

ஏன் சகி..ரொமான்ஸ் பண்ணவா?

அவனை ஏறிட்டு, முதல்ல பசங்களுக்கு பார்க்கணும். மத்ததெல்லாம் அப்புறம் தான்..

“என்னை பார்த்தால் உனக்கு பாவமா தெரியலயா சகி?” முகம் சுருக்கி சஞ்சய் கேட்க, பக்கென சிரித்து விட்டாள் பிரியசகி.

சஞ்சய் முகம் மாறாமல் வைத்திருக்க அவன் கன்னத்தில் முத்தமிட்டு “இன்று அவ்வளவு தான்” என்று அவனுக்கு முதுகு காட்டி படுத்து விட்டாள்.

பெருமூச்சுடன் சஞ்சய் இமை மூடி தூங்கலானான்.

விடிந்தும் விடியாத காலைப்பொழுது கைபேசியின் அழைப்பில் எழுந்தான் சஞ்சய். பிரியசகியும் ராக்கியும் அவனருகே இல்லை.

“எழுந்துட்டாங்களா?” எண்ணமுடன் அழைப்பை ஏற்றான்.

சஞ்சயின் உதவியாளன் வேந்தன் அழைத்திருந்தான்.

சார்…நம்ம சேது பாரினுக்கு போனான்ல. அவனை கான்டாக்ட் பண்ணவே முடியல. நேற்று நன்றாக தான் பேசினான். இரவிலிருந்து அழைப்பை ஏற்கவில்லை…ஏதும் பிரச்சனையாக இருக்குமோன்னு தோணுது சார்..

இரு..இன்னும் இருவரையும் அனுப்பி இருக்கிறேன். விசாரிக்கலாம் என்று அழைப்பை சஞ்சய் துண்டிக்க, ஜானி என்ற அழைப்பில் விரைந்து எடுத்தான்.

ஏதும் பிரச்சனையா?

எஸ் சார், ராஜன் போல அவர் மகன் இல்லை சார். அந்த ஹர்சா ரொம்ப க்ளவரா இருக்கான். அவன் சேதுவை கண்டறிந்து தூக்கிட்டான்..

தலையை பிடித்த சஞ்சய், இதுக்கு தான் அவனை தனியே போகாதன்னு சொல்லி உங்களை அனுப்பினேன். வேடிக்கை பார்த்து நின்னீங்களா ஜானி, எங்க அந்த சமரனை?

சமரன் அவங்கள பின் தொடர்ந்து போய்ட்டு இருக்கான்.

“நீ என்ன பண்ற?” சீறினான் சஞ்சய்.

கூல் சார்..நான் சமரனோட கார் டிக்கில தான் இருக்கேன். நான் பார்த்துக்கிறேன்.

என்ன பார்ப்ப?

ஆதாரத்தோட மூவரும் உங்களிடம் வந்து சேர்வோம் சார்..

எதுக்கு இந்த அவசரம் ஜானி?

அவசரம் தான் சார்…ஒரு கன்டய்னர் புல்லா பொண்ணுங்க சார். நம்ம நாட்டு பொண்ணுங்க. சோர்ந்து இருக்காங்க. அதெல்லாம் வீடியோ எடுத்துட்டோம். குற்றம் செய்பவனை பிடிக்கணுமே சார். நீங்க ஓய்வெடுங்க சார். என்னை நம்புங்க. யாரும் சேது மீது கை வைக்க முடியாது..

ம்ம்! பார்த்து பத்திரம்….கவனமா இருங்க..பிரச்சனைன்னா உடனே கால் பண்ணுங்க என்று அழைப்பை அணைத்து ரக்சனை அழைத்து, அவன் மருத்துவமனையும் அங்கிருப்பதை கேட்டு அவன் ஆட்களை உதவிக்கு கேட்டான்..

சஞ்சய்..அவங்க எல்லாரும் டாக்டர்ஸ்…போலீஸ் இல்லை..

நம்ம நாட்டு பொண்ணுங்க நிறைய பேரை தூக்கி இருக்கானுக..

யாருடா அவனுக? ஓய்வெடுக்கிறேனு சொல்லீட்டு என்ன செய்ற?

வந்துடா…அது…ராஜன் மகனை பிடிக்க..

மகனா? என்ன சொல்ற? அவருக்கு ஏது மகன்?

இருக்கான் ரக்சா. ஹர்சவர்தன். அவனோட தாய் வடநாட்டு பெண்மணி. ராஜனை கொல்ல வந்தவர்கள் அவங்கள கொன்னுட்டாங்க. அவன் இப்பொழுது கேடுகெட்ட எல்லா வேலையும் செய்துட்டு இருக்கான். அதில் ஒன்று தான் குழந்தை, பெண் கடத்தல்…

சரிடா…பேசுகிறேன்..

உடனே உதவி வேணும்டா. என்னோட ஆள் ஒருத்தனை தூக்கிட்டு போறானுக. மத்தவங்க பாலோ பண்ணீட்டு இருக்காங்க.

“இப்பவே எப்படி முடியும் சஞ்சய்? நேரத்தை பார்” திட்டினான் ரக்சன்.

“முடிந்தால் செய்” அழைப்பை துண்டித்து விட்டான் சஞ்சய். அவனால் இருப்பு கொள்ள முடியவில்லை. வெளியே வந்து அமர்ந்தான்.

தொலைக்காட்சியில் டாம் அன்ட் ஜெர்ரி ஓடிக் கொண்டிருந்தது. சிரித்து அதனை ரசித்து கைதட்டி பார்த்துக் கொண்டிருந்தான் ராக்கி. பிரியசகி சமையலறையில் வேலையாக இருந்தாள்.

சோர்வுடன் எழுந்த சஞ்சய் பிரியசகியை நெருங்கி பின்னிருந்து கட்டிக் கொண்டான்.

“சஞ்சய்” அவள் திரும்ப, அவன் அணைத்தவாறே அவளது தோளில் முகம் புதைத்துக் கொண்டான்.

“எனி பிராபிளம்? பெயின் அதிகமாகிடுச்சா?” வருத்தமுடன் கேட்டாள்.

“இல்லை” தலையை மட்டும் அசைத்தான்.

அடுப்பை குறைத்து வைத்து அமைதியாக நின்றாள். சற்று நேரத்தில் ஏதும் பேசாமல் அவனாகவே நகர்ந்து ராக்கியை தூக்கி அமர்ந்து கொண்டான்.

“என்னாச்சு இவருக்கு?” சஞ்சயை எட்டி பார்த்து அவள் வேலையை தொடர்ந்தாள்.

ஒவ்வொருவராய் எழுந்து வந்தனர்.

சஞ்சய் அலைபேசி அலறியது.

ஹலோ…

ஹாஹாஹாஹா..சிரிப்பு சத்தம் கேட்டது.

விரைந்து நகர்ந்து அறைக்கு சென்று கதவை தாழிட்டான். யார் அழைப்பும் அவன் காதில் ஏறவில்லை.

ஹர்சா…

“சஞ்சய்…என்னை பிடிக்க வந்த உன் ஆட்கள் இங்க தொங்கிட்டு இருக்கானுக. நீ வந்தால் அவங்களை விட்ருவேன் இல்லை இப்பவே முடிச்சி விட்ருவேன்…என்னை பிடிக்க நான் என்ன ராஜனா?” ஆத்திரமுடன் கத்தினான்.

ஏதும் கூறாமல் அலைபேசியை அணைத்து, அறைக்கதவை திறந்து சீற்றமான முகத்துடன் வெளியே வந்த சஞ்சய் ரக்சனை அழைத்து,… “ரக்சா யாரும் எதுவும் செய்யவேண்டாம். நான் கிளம்புகிறேன்..”

“சஞ்சய்..உன்னோட ஹெல்த்…” அவன் கூறிக் கொண்டிருக்கும் போதே சஞ்சய் அழைப்பை துண்டித்து விட்டான்.

“எங்க போகப் போற சஞ்சய்?” நாகேந்திரன் கேட்க, இப்பவே நான் ஃபாரின் போகணும்பா. ரொம்ப முக்கியமான விசயம்..

பிரியசகி அலைபேசி சத்தம் கொடுக்க, அவள் சஞ்சய் பார்த்துக் கொண்டே அழைப்பை ஏற்றாள்.

பிரியா சஞ்சயை போக விடாத. அவன் இருக்கும் நிலையில் அவனால அவனுகள சமாளிக்க முடியாது. எனக்கு சரியா படல. கொஞ்ச நேரம் அவனை பிடிச்சு வை. நானும் டாடு அங்க தான் வந்துட்டு இருக்கோம் என்று ரக்சன் கூறி அழைப்பை வைத்தான்.

“ஃபாரினா? இந்த நிலையிலா?” சுவர்ணலதா சினமாக, “அம்மா முக்கிய வேலைன்னு சொல்றேன்ல?” சஞ்சய் சத்தமிட்டான்.

“சஞ்சய் நீங்க போகக்கூடாது” பிரியசகி அவனை நெருங்கினாள்.

சகி விசயம் தெரியாமல் பேசாத. சேதுவை பிடிச்சு வச்சிருக்கான். நான் போகலைன்னா கொன்றுவான். என்ன செஞ்சு வச்சிருக்கானுகளோ? அவனுக்கு குடும்பம் இருக்காங்க..

அப்ப நாங்க சஞ்சய்…விழிகள் கலங்கியது.

சகி புரிஞ்சுக்கோ. நீயும் அம்மா மாதிரி பேசிட்டு இருக்க?

“உங்களுக்கு உடம்பு சரியில்லை சஞ்சய். இந்த நிலையில் என்னால உங்களை எங்கும் அனுப்ப முடியாது…” சஞ்சய்கு சரிக்கு சமமாக சத்தமிட்டாள்.

என்ன பிரச்சனை? யார் பிடிச்சி வச்சிருக்காங்க? ஹரிஹரன் கேட்க,

“நீ உன்னோட வேலைய பாரு” என்ற சஞ்சய் பிரியசகியை நகர்த்தி வெளியேற, அவனை போக விடாமல் மீண்டும் அவனை தடுத்தாள் பிரியசகி.

ஹர்சனின் பேச்சில் சினம் ஏறி இருந்த சஞ்சய் பிரியசகியை பிடித்து தள்ளி அவன் வெளியே செல்ல, “பிரியா…” என்று நவீன் அவளிடம் ஓடி வந்தான். அவன் சத்தத்தில் நின்ற சஞ்சய் பிரியசகியை திரும்பி பார்த்தான்.

ராக்கி வீல்லென கத்தி அவளருகே வந்தான். அவள் சுவற்றில் முட்டி நிற்க தடுமாறினாள். அவளை தாங்கி பிடித்தான் நவீன்..

ஆர் யூ ஓ.கே பிரியா?

சஞ்சய் அவளிடம் ஓடி வந்தான்.

சகி..நான்…

பிரியசகி அவனை வெறித்து பார்த்தாள்.

சஞ்சய் பிரியசகி நெற்றியை தேய்த்து விட அவளை நெருங்கினான். அவள் நவீனிடமிருந்து நகர்ந்து சஞ்சயிடமிருந்து விலகினாள்.

சகி…

“போங்க…உங்களுக்கு உங்க வேலை தான முக்கியம்” சீற்றமுடன் சத்தமிட்டு ராக்கியை தூக்கி அறைக்குள் சென்று கதவை அடைத்துக் கொண்டாள்.

“சகி…” கதவை படபடவென அடித்துக் கொண்டிருந்தான் சஞ்சய்.

வீட்டிற்குள் நுழைந்தனர் ரக்சனும் சந்திரசேகரும்..