அத்தியாயம் – 13 -1

தொண்டை ஒரு மாதிரி கரகரவென்று இருந்ததால் சாதாரண தேநீருக்குப் பதிலாக இஞ்சி போட்ட தேநீரோடு சோபாவில் விஜயா அமர்ந்த போது பக்கவாட்டு மேஜையில் இருந்த அவரது கைப்பேசி ஒலித்தது. அழைத்தது அவருடைய அக்கா மகாலக்ஷ்மி. 

காணொளி அழைப்பை ஏற்றவுடன்,“விஜி, டீ குடிக்கறேயா?” என்று அவர் கையிலிருந்த தேநீர் கோப்பையப் பார்த்து விசாரிக்க, 

“ஆமாம் க்கா..தொண்டை ஒரு மாதிரி இருக்கு..அதான் கொஞ்சம் இஞ்சி டீ போட்டேன்.” என்றார் விஜயா.

“ஒரு வாரமா எனக்கு உடம்பே முடியலை டீ..ஆனாலும் எல்லா வேலையையும் நான் தான் செய்திட்டு இருக்கேன்..உன் மாமாக்கு வெண்டக்காயை வெட்டினா கூட விரல் வலிக்கு தாம்..சிந்துக்கு படுக்கையை விட்டு எழ முடியலை..இங்கே வலிக்குது அங்கே வலிக்குதுன்னு ஒரே புலம்பல்..ஒரு பிள்ளையை இவ பெத்து எடுக்கறத்துக்குள்ளே இத்தனை பாடு…இரட்டை பிள்ளைங்களுக்கு நான் எத்தனை பாடுபட்டிருப்பேன்..அதெல்லாம் சொன்னா மாப்பிள்ளை விக்னேஷ் முன்னாடியே ‘உன்னோட பிரதாபத்தை நிறுத்துன்னு’ கத்தறா டீ.” என்றார் மகா.

சிந்துவின் குணம் கிட்டதட்ட அவருடைய அக்காவின் குணம் தான். சின்ன உடல் சோர்வை கூட பெரிதுபடுத்தி சுற்றி இருப்பவர்களைப் பாடுபடுத்தி விடுவார்கள். அவருடைய அக்காவின் சரித்திரத்தை மீண்டுமொருமுறை கேட்க அவருக்கும் இஷ்டமில்லாததால்,”மாப்பிள்ளை சௌக்கியமா?” என்று பேச்சை திசை திருப்பினார் விஜயா.

“ம்ம்..தினமும் சிந்துவோட வாக்கிங் போகறது தான் அவரோட ஓரே வேலை..ஆனா நேரமில்லைன்னு அதையும் உன் மாமா தலைலே கட்டறார்..சமையல் வேலை, வீட்டு வேலைன்னு ஓய்வில்லாம நான் ஓடிட்டு இருக்கேன்..’குழந்தை பெத்துக்க நம்ம வீட்டுக்கு வந்திருக்கணும் நீ..அங்கே விஜயாவும் ஒத்தாசைக்கு இருக்கா.’ நு சொன்னதுக்கு ‘அப்போ ஒரு கோடி ரூபாயை என் பெயர்லே போட்டு வைங்க..அப்போ தான் அங்கே பிறந்த பிள்ளையை இங்கே நான் நல்லபடியா வளர்க்க முடியும்.’ நு நறுக்குன்னு பேசறா டீ.” என்றார் மகா.

இதையெல்லாம் பலமுறை பேசியாகி விட்டது. சிந்துவிடமிருந்து நல்ல செய்தி வந்தவுடனேயே மசக்கை, வளைகாப்பு, சீமந்தம். பெயர் சூட்டு விழா வரை அனைத்தையும் அலசியாகி விட்டது. அங்கே பிள்ளைப்பேறு வைத்துக் கொள்வது தான் நல்லது என்று மாப்பிள்ளை விக்னேஷும் பல தடவை விளக்கிச் சொல்லி விட்டான். இப்போது எதற்காக முடிந்து போனதை அக்கா பேசுகிறார் என்று விஜயாவிற்குப் புரிந்து போனது. தனியாக அவரால் வீட்டு வேலைகளைச் செய்ய முடியவில்லை. சிந்துவைப் பார்த்துக் கொள்ள முடியவில்லை. அவரால் முடியாதென்று அவருக்கு மட்டுமில்லை குடும்பத்தினர் அனைவர்க்கும் தெரியும். அவருக்குப் பதிலாக விஜயாவை வெளி நாட்டிற்கு அனுப்பி வைக்க முடியாதென்பதும் அனைவருக்கும் தெரியும். அதனால் தான் எந்தக் காரணத்தையும் சொல்லி தப்பித்துக் கொள்ள முடியாமல் வசமாக சின்னவளிடம் அகப்பட்டுக் கொண்டு விட்டார்.

ஜெயந்தியின் பிள்ளைப்பேறு போது வீடு, ஆஸ்பத்திரி, விருந்தினர்கள் என்று அனைத்தையும் சமாளித்தது விஜயா தான். ‘கைலே வலி, கால்லே ரத்தம் கட்டியிருக்கு, தலை பாரமா இருக்குது’ என்று கர்ப்பினி ஜெயந்தியை விட உடல் நோவு பற்றி பெரிய பட்டியல் வாசித்தது அக்கா மகாலக்ஷ்மி தான். அந்த சமயத்தில் அவரின் அண்ணி மீனாவிற்கு உடல் நலக் கேடு ஏற்பட, ‘நாங்க மூணு பேரும். ஆபிஸ், காலேஜுன்னு போயிடறோம்..அவளுக்கு உடம்பு சரியாகற வரை துணைக்கு யாராவது இருக்கணும்..விஜயாவை அனுப்பி விடு.’ என்று விஜயாவின் அண்ணன் கிரி சொல்ல,’எப்படி முடியும்? இப்போவோ அப்போவோன்னு ஜெயந்தி இருக்கறா..என்னாலே எப்படித் தனியா சமாளிக்க முடியும்? நீ மீனாவை அவங்க அண்ணன் வீட்டுக்கு அனுப்பி வைச்சிடு.” என்று தாட்சண்யம் பார்க்காமல் மறுத்து விட்டார் மகாலக்ஷ்மி. 

இப்போதும் அதைப் பற்றி ஏதாவது பேச்சு வந்தால்,’எல்லாரோட சேவையும் மகா அண்ணிக்கு தான்னு எழுதி வைச்சிருக்கு..காய்ச்சல் வந்தாலும் என் கையாலே தான் வெந்நீர் காய்ச்சிக் குடிக்கணும்னு என் தலையெழுத்து போல.’ என்று மீனா சொல்லிக் காட்டத் தவறுவதில்லை. அதற்கு,’அப்படி இல்லை அண்ணி..ஜெயந்தியைப் பார்க்கணுமில்லே அதான் என்னாலே வரமுடியலை.’ என்ற விஜயாவின் தன்னிலை விளக்கத்திற்கு,’அக்கா, தங்கை என்னைக்கும் ஒண்ணுக்குள்ளே ஒண்ணு..நான் தான் வேற.’ என்று அவரது மனக்கசப்பை வெளியிடும் போது, விஜயாவிற்கு அதை மறுக்க தோன்றும் ஆனால் இன்று வரை மறுத்ததில்லை. அக்காவை விட்டுக் கொடுத்ததில்லை.

அக்கா மகாவின் குணத்தை, எண்ணப் போக்கை பற்றி விஜயாவினால் இப்போது வரை ஒரு முடிவிற்கு வர முடியவில்லை. குழந்தை வரம் வேண்டுமென்று அவர் மட்டுமில்லை அவர்கள் குடும்பமே அவருக்காக வேண்டுதல், பிரார்த்தனை, விரதம் என்று பலதும் செய்தனர். சிகிச்சைகள் பலன் அளிக்காததால் அந்த வரன் கிட்டப் போவதில்லை என்று அனைவரும் நம்பிக்கை இழந்திருந்திருந்த நேரத்தில் கடைசி முறையாக செய்த சிகிச்சையின் பலன் தான் இரட்டையர்கள், ஜெயந்தி, வசந்தி. அவர்கள் பிறக்கும் வரை அனைவர்க்கும் ஒரே போல் மனநிலை தான். அதாவது இரண்டு பிள்ளைகளும் தாயும் நல்லபடியாக மீண்டு வர வேண்டுமென்ற வேண்டுதல். 

இரட்டைப் பிள்ளைகள் பிறந்த பின் அந்த மனநிலை மாறி,’இத்தனை நாள் தவமா தவம் கிடந்தது இந்த மாதிரி இரண்டு பொட்டை பிள்ளைங்களுக்கு தானா?’ என்று ஆரம்பித்து,’ஒண்ணாவது பையனா பிறந்திருக்கலாம்..கொஞ்சம் கலரா பிறந்திருக்கலாம்..எப்படி இரண்டு பேருக்கும் மாப்பிள்ளை பார்த்து கல்யாணம் செய்து கொடுக்கப் போறேயோ? இதை நடத்திக் கொடுத்த கடவுள் தான் அதையும் நடத்திக் கொடுக்கணும்’ என்று பிறந்த சில மணி நேரத்திலேயே இருபது வருடங்கள் முன்னோக்கி சென்று ஆறுதல் என்ற பெயரில் உறவினர், தெரிந்தவர் என்று அனைவரும் ஒரே போல் அச்சத்தைக் கிளப்பி விட்டனர். அதன் விளைவாக இரண்டு குழந்தங்களின் எதிர்காலத்தை நினைத்து நிகழ்காலத்து சந்தோஷங்களை அனுபவிக்க மறந்தார் மகாலக்ஷ்மி.

இரட்டைப் பெண் குழந்தைகள் வளர, வளர குழந்தை இல்லாமல் இருந்த காலங்கள் அனைத்தும் மகா மனத்திலிருந்து மறைந்து போய்,’ஒரு பையனாவது கடவுள் கொடுத்திருக்கலாம்.’ என்ற எண்ணம் வேரூன்ற ஆரம்பித்தது. ஷண்முகவேல் பிறந்தவுடன் தங்கை விஜயா மீது அவருக்கு பொறாமை உண்டானது. ‘கல்யாணம் தான் தாமதமா நடந்திச்சு மற்றதெல்லாம் சரியா டயத்துக்கு உனக்கு நடக்குது..பத்து மாசத்திலே புருஷனைப் போல ஓர் ஆம்பிளைப் பிள்ளையைப் பெத்திட்ட.’ என்று வீடு, உறவு, அக்கம்பக்கத்தவர் என்று அனைவரும் விஜயாவின் அதிர்ஷடத்தைப் பார்த்து பொறாமை அடைந்தனர். அக்கா, தங்கை இருவருக்கும் இடையே ஒரு திரை எழுந்தது. 

அதன் பின் விஜயாவின் மண வாழ்க்கை பிறழண்டு போனது போது, விவாகரத்து செய்யக் கூடாதென்று அவரால் முடிந்தளவிற்கு அதைத் தடுத்து நிறுத்தப் பார்த்தார் மகாலக்ஷ்மி. ‘நான் கூட தான் பல வருஷமா குழந்தை இல்லாம இருந்தேன்..இரண்டு பேர்கிட்டேயும் குறை இல்லை ஆனாலும் ஏன் குழந்தை பிறக்கலைன்னு காரணம் தெரியலை..ஒரு குழந்தைக்காக ஆஸ்பத்திரி, கோவில், குளம்னு எத்தனை இடம் ஏறி இறங்கினோம்..அந்த நேரத்திலே என் மாமியார் அவருக்கு வேற கல்யாணம் செய்து வைக்க முடிவு செய்தாங்க..உன் மாமாவும் அதுக்கு சரின்னு தலை ஆட்டினார்..எனக்கும் தானே குறை இல்லை நானும் தானே வேற கல்யாணம் செய்திருக்கணும்..அப்படி யோசிச்சு யாராவது எனக்கு மாப்பிள்ளை பார்த்தாங்களா? பொம்பளையைப் பற்றி யாரும் யோசிக்க மாட்டாங்க..என்னோட நல்ல காலம் இந்த மனுஷருக்கு நல்ல வரன் அமையலை..இரட்டைக் குழந்தை வந்திடுச்சு..இல்லைன்னா எனக்கும் உன்னைப் போல நிலை தான் வந்திருக்கும்..ஆனா உன்னை மாதிரி விவாகரத்து கொடுத்திட்டு அப்பா வீட்டோட வந்திருக்க மாட்டேன்..கடைசி வரை அதே வீட்லே மூத்த தாரமா என் இடத்தை விட்டுக் கொடுக்காம இருந்திருப்பேன்..அது நமக்கு உரிமையான இடம்..இரண்டாம் தாரமா வரப் போறவ தான் உன்னை அனுசரிச்சுப் போகணும்..ஒதுங்கிப் போகணும்..

உன் புருஷனே விவாகரத்து வேணாம்னு சொல்ற போது நீ எதுக்கு அடம் பிடிக்கற..அப்பா, அம்மா இருக்கற வரை உன்னையும் ஷண்முகத்தையும் பார்த்துப்பாங்க..அதுக்கு அப்புறம் என்ன செய்யப் போற? அப்பா எங்கேன்னு உன் பையன் கேட்டா என்ன பதில் சொல்லுவ?’ என்று பயமுறுத்தும் கேள்விகள் கேட்க, ஏற்கனவே மன உளைச்சலில் இருந்த விஜயாவின் உடல், மனம் இரண்டும் மேலும் நலிவுற்றது. தன் மீது பாசம், காதல் இல்லையென்றாலும் பெற்ற மகன் மீது துளியாவது பாசம், அன்பு இருந்தால் இப்படி ஒரு காரியம் செய்ய துணிவாரா கணவர் என்ற கேள்வி விஜயாவை வாட்டி எடுத்துக் கொண்டிருந்தது. 

வாழ்க்கையே வேண்டாமென்று வெறுத்துப் போனவர்க்கு உருவத்தில் கணவரை நினைவூட்டிய மகன் மீது ஏற்பட்ட பாசம், கணவரின் செயலால் எழுந்த வெறுப்பு இரண்டும் மாறி மாறி அவரைப் புரட்டிப் போட, ஒருபுறம் கந்தவேலின் மகனை அவரிடமிருந்து தள்ளி நிறுத்த முயற்சி எடுத்தவரின் மனது மறுபுறம் ஒரு தாயாக மகனைத் தன்னோடு அணைத்துக் கொள்ள விழைய, முடிவெடுக்க முடியாமல் தடுமாறினார் விஜயா. விஜயாவின் மனப்போராட்டத்தில் மனமுடைந்து போய், மூத்த மகள், மகன் இருவரின் கருத்துக்களையும் புறம் தள்ளி விட்டு, கணவன், மனைவி உறவு பொய்த்துப் போனாலும் அம்மா, மகன் உறவு பொய்த்துப் போகதென்ற நம்பிக்கையில் திருமணப் பந்தத்திலிருந்து விடுதலை வாங்கிக் கொடுத்து விஜயாவை மீட்டெடுத்து, ஷண்முகவலை முன்னிறுத்தி வாழ்க்கையில் ஒரு பிடிப்பு ஏற்படுத்திக் கொடுத்தார் அவரின் தந்தை. அவரது அந்த நம்பிக்கை மெய்யாக இத்தனை வருடங்களானது.

கடந்த காலத்தில் தொலைந்து போயிருந்த விஜயாவை,”ஷண்முகம் உனக்கு சுடிதார் வாங்கிக் கொடுத்திருக்கானா? வசந்தியும் ஜெயந்தியும் அந்தக் கதையை தான் வாய் ஓயாம சொல்லிட்டு இருக்காங்க.” என்று நிகழ்விற்குக் கொண்டு வந்தார் மகா.

அதைக் கேட்டு விஜயாவின் முகத்தில் ஒரு வெட்கச் சிரிப்பு தோன்ற,”என்ன டீ சிரிக்கற? நானா கேட்டா தான் இந்த விஷயமெல்லாம் சொல்லுவ போல? சுடிதார்லே எனக்கு ஒரு ஃபோட்டா அனுப்பணும்னு தோணலையா உனக்கு?” என்று லேசாகப் கோபப்பட்டார்.

உடனே,”இன்னும் தைச்சு வரலை க்கா..உனக்கு தான் முதல்லே ஃபோட்டோ.” என்று வாக்கு கொடுத்தார்.

“ஆமாம்..இப்படித் தான் சொல்லுவ ஆனா சொல்றது போல செய்யறது கிடையாது..சித்தி பேசறதே இல்லைன்னு இரண்டு பேரும் கம்ப்ளெண்ட் செய்யறாங்க.” என்று மகா சொல்ல,

‘உன்னைப் பற்றியும் இரண்டும் பேரும் அதே தான் சொன்னாங்க.’ என்று சொல்லி அந்த உரையாடலை முடிக்காமல்,’இந்த இடம் பழக நேரமெடுக்குது க்கா..வசந்திக்கு ஃபோன் செய்து பேச முடியாதுன்னு உனக்கே தெரியும்..ஜெயந்திகிட்டே இனிமேல் பேசறேன் க்கா..ஷண்முகத்தோட வேலை ஒரு மாதிரி இருக்கு க்கா..அவன் இங்கே இருக்கறதே இல்லை..வெளியூர் போயிடறான்..” என்றவரை இடைமறித்து,

“வெளியூருக்குப் போறானா? அப்போ எதுக்கு உன்னை அங்கே வரச் சொன்னான்..நீ எப்படி டீ தனியா சமாளிக்கற? எதாவது தேவைப்பட்ட என்ன செய்வ?” என்று மகா விசாரிக்க,

“எல்லாம் வாங்கிப் போட்டிடறான் க்கா..அப்படி ஏதாவது அவசரமா தேவைப்பட்டா ஷர்மான்னு ஒருத்தர் இருக்கார்..அவருக்கு ஃபோன் செய்தா போதும்..வாங்கிட்டு வந்து கொடுத்திடுவார்.” என்றார் விஜயா.

“ஷர்மாவா..உனக்கு தான் இந்தி தெரியாதே எப்படி டீ அவர்கிட்டே என்ன வேணும்னு சொல்லுவே?” என்று கேட்க,

“நமக்கு தேவைப்பற பொருளோட படத்தை ஃபோன்லே அனுப்பி வைச்சாப் போதும் அவர் வாங்கிட்டு வந்திடுவார்.” என்றார் விஜயா.

“தனியா எப்படி டீ பொழுது போகுது?” என்று அடுத்த கேள்வியுடன் வந்தார் மகா.

“அதுதான் கொஞ்சம் கஷ்டமா இருக்குது க்கா..சாமி வீட்லே இருந்தா பொழுது போகறதே தெரியாது..சமையல், வீட்டு வேலைன்னு போயிடும்..அவன் இல்லைன்னா தான் கஷ்டமா இருக்கும்..ஓர் ஆளாக்கு என்னத்தை சமைக்கறதுன்னு மண்டை வெடிக்கும்.” என்றார் விஜயா.

“அதுக்காக கஞ்சி குடிச்சிட்டு இருக்காத..நல்லா சமைச்சு சாப்பிடு..ஷண்முகம் வந்ததும் எனக்கு ஃபோன் போடச் சொல்லு..உன் மாமாக்கு அவன்கிட்டே ஏதோ முக்கியமாப் பேசணுமாம்.” என்றார்.

“எப்போ வருவான்னு தெரியலை க்கா..திடீர்னு வந்து நிப்பான்..அவன் வந்ததும் பேசச் சொல்றேன் க்கா.” என்றார் விஜயா.

“எங்கே போறான்? எப்போ வருவான்னு அவன்கிட்டே விசாரிக்க மாட்டேயா? அவனை எதுவும் கேள்வி கேட்காம இருப்பேயா?” என்று தங்கையிடம் குரலை உயர்த்தினார் மகா.

“கேட்டேன் க்கா..இப்போ அவன் எங்கே வேலை செய்யறான்னு கேட்டா அந்த விவரமெல்லாம் உங்களுக்கு தெரிய வேணாம்னு சொல்றான்.” என்றார் விஜயா.

“இதென்னடி கூத்தா இருக்கு? அப்படி என்ன வேலை செய்யறான் அவன்? உன் மாமாகிட்டே சொல்லி விசாரிக்க சொல்லவா?” என்று மகா வினவ,

“ஐயோ அதெல்லாம் வேணாம் க்கா..அவன் என்ன சின்ன பையனா..முப்பத்தி மூணு வயசு ஆகிடுச்சு.” என்றார் விஜயா.

“அதனாலே..எங்கே வேலை செய்யறான்? எந்த ஊருக்குப் போறான்? எப்போ வருவான்னு அவங்க அம்மாகிட்டே சொல்லிட்டுப் போக மாட்டானா ஒரு பையன்?” என்று கோபப்பட்டார் மகாலக்ஷ்மி.

“அவன் வேலை விஷயத்திலே நான் தலையிடறது சரியில்லை க்கா.” என்றார் விஜயா.

“வேலைலே யார் தலையிடறா? அடிக்கடி வெளியூர் போறான்னு சொல்ற.. எங்கே போறேன்னு உன்கிட்டே சொல்லிட்டுப் போகலாமில்லே..அவன் போய் எவ்வளவு நாளாச்சு?” என்று விசாரித்தார் மகா.

“ஒரு வாரம்..நேத்து கூட ஃபோன் செய்து பேசினான்.” என்றார் விஜயா.

“எந்த ஊர்லேர்ந்து ஃபோன் செய்யறான்னு உனக்கு சொல்லலையா?” என்று கேட்டார் மகா.

“இல்லை க்கா..அந்த விவரமெல்லாம் அவன் சொல்றதில்லை..எப்படி இருக்கீங்கம்மான்னு விசாரிப்பான்..அவ்வளவுதான்.” என்று பதில் கொடுத்த விஜயாவிற்கு தெரியவில்லை கடந்த ஒரு வாரமாக அவருடைய மகன் ஷண்முகவேல் அதே தில்லியில், வேறொரு பகுதியில், ரகசிய கண்காணிப்பு  (stake out) பணியில் ஈடுபட்டிருந்தானென்று.