Advertisement

வழியில் மஞ்சுளாவிற்கு அழைத்து சண்டை வேறு. ஏன் என்கிட்ட சொல்லலை என்று. ராமமூர்த்தி போன் வாங்கி, “நீ நேர்ல வா உனக்கு இருக்கு” என்றார்.

பாரதி வீட்டுக்கு செல்லும் நேரம், ராமமூர்த்தியும் மனைவியுடன் வந்து விட்டிருந்தார். அண்ணா, அண்ணிக்கு பெரிய அடி இல்லை என்று பார்த்த பிறகே பாரதிக்கு நிம்மதியானது.

“எங்க மாமியாரால நீங்க வரலன்னு நினைச்சேன் அண்ணி” என்றார்.

“அப்படி தோணுச்சு தான். அப்பறம் கார் வரை சொல்லிட்டோம். கடைசி நேரத்துல இப்படியாகி போச்சு. ரகுராம்க்கு விஷயம் தெரியவும் அவன் பயந்து போய் எங்களை பார்க்க விடிய விடிய ஊர் வந்து சேர்ந்துட்டான். அப்படியே அவனை அங்க நிச்சயத்துக்கு அனுப்பி வைச்சாச்சு” என்றார் பத்மா.

“இப்போ நீ சொல்லு. என்ன மண்டபத்துல உன் மாமியார் ஏதேதோ பேசியிருக்காங்க?” என்றார் ராமமூர்த்தி.

“நடந்த நிச்சயம் செல்லாதுன்னு சொல்றாங்களாம். இது முறையா? அப்போவே கேட்டிருப்பேன். ரகுராம் தான் தடுத்துட்டான்”

பாரதிக்கு என்ன சொல்ல முடியும்? மௌனம் காத்தார். “விடு மூர்த்தி. அப்போ நாம பண்ணிட்டோம். இப்போ பசங்க வளர்ந்துட்டாங்க. அவங்க முடிவுபடி நாம போயிடுவோம்” என்றார் அருணகிரி.

மகன் அன்று நிச்சயத்துக்கு செல்ல மாட்டேன் என்று நிற்க, பாரதிக்காக போப்பா என்று கேட்டு கொண்டார் அருணகிரி. அதன் பின்னே அவன் கிளம்பினான். அதில் தந்தைக்கும் உறுத்தல்.

“நானும் அந்த முடிவுக்கு வந்து தான் அமைதியாகிட்டேன். படிச்சு முடிச்சு வேலைக்கு போற பிள்ளைகளுக்கு உலகம் தெரியாதா? அவங்க விருப்பமே எல்லாம்” என்றார் பாரதியும்.

ராமமூர்த்திக்கு தான் கோவம். உடனே கிளம்பிவிட்டார். பாரதி மாலை வரை இருந்து தான் கிளம்பினார்.

அந்த வார இறுதி ஓய்வு நாளில் ஜனக்நந்தினிக்கு சோம்பலாகவே விடிந்தது. பாரதி வேறு இல்லை. மிக தாமதமாகவே எழுந்து கொண்டவள், குக் கொடுத்த காபியை குடித்தாள்.

சிறிது நேரம் மொபைல் பார்த்திருக்க, ராகேஷிடம் இருந்து அழைப்பு வந்தது. “சொல்லுங்க ராக்கி” என்று எடுக்க,

“ஒரு அத்தை மகன் கோவமா போனானே. அவனை கூப்பிட்டு சமாதானம் பண்ணுவோம்ன்னு உனக்கு தோணுச்சா?” என்று கேட்டான் அவன்.

“தோணுச்சு தான். ஆனா நீங்க தான் பிஸ்னஸ்ல ரொம்ப பிசியாச்சே. அதான் ஏன் டிஸ்டர்ப் பண்ணுவானேன்னு”

“கதை அடிக்காத. நான் சென்னை தான் வந்திருக்கேன். எங்க மீட் பண்ணலாம் சொல்லு”

“நீங்களே சொல்லுங்க. என்னை விட உங்களுக்கு தான் சென்னை நல்லா தெரியும்”

“சரி.. லஞ்சுக்கு மீட் பண்ணலாம். உனக்கு அந்த ரெஸ்டாரண்ட் டெக்ஸ்ட் பண்றேன். நீயே வந்துடுறியா? இல்லை நான் உன்னை பிக்கப் பண்ண வரவா?”

“நானே வந்துடுறேன்” என்று வைத்தாள் பெண்.

மெசேஜ் வர, லொகேஷன் பார்த்து கொண்டவள், மெல்ல குளித்து கிளம்பினாள். வீட்டுக்கும் அழைத்து இப்படி என்று சொன்னாள். ப்ரவீன் மட்டும், ஏன்? எதுக்கு? ஊர்ல வந்து மீட் பண்ணா அவனுக்கு ஆகாதாமா? என்று ஆயிரம் கேள்விகள் கேட்டான்.

ராகேஷ் டேபிள் புக் செய்திருக்க, அந்த நேரத்துக்கு பெண் சரியாக சென்று சேர்ந்தாள். ராக்கி அவளுக்காக காத்திருக்க, ஒன்றாக டேபிளில் அமர்ந்தனர்.

“சோ” என்று ராக்கி கேட்க,

“சாரி” என்றாள் ஜனக்நந்தினி.

“கொஞ்சம் எக்ஸ்பெக்ட் பண்ணிட்டேன், இப்போ ஓகே” என்றான் ராகேஷ்.

உண்மையை சொல்ல வேண்டும் என்றால் அவனுக்கு இப்போதும் அந்த ஏமாற்றம் உண்டு தான். கண்ணுக்கு முன் மாமா மகள் குளிர்ச்சியாக இருக்க, அவனுக்கு அவள் மீதான விருப்பம் தானே முளைத்தது. ஆனால் அவளுக்கு அப்படி இல்லை என்பது ஏமாற்றம் கொடுக்காமல்  இருக்குமா?

“உன்னையே கட்டிக்கிட்டா ஊர் ஊரா பொண்ணு தேட வேண்டாம்ன்னு பார்த்தேன்” என்றான் தன் ஏமாற்றத்தை மறைத்து  கிண்டலாக.

ஜனக்நந்தினி முறைக்க, “விடு உனக்கு கொடுத்து வைக்கலை” என்றவன், இருவருக்கும் சூப் கொண்டு வர சொன்னான்.

அதன்பின் இருவருக்கும் பொதுவான பேச்சுக்கள் சென்றன. பிறந்ததில் இருந்தே பழகிய உறவு என்பதால், பேச்சுக்கு குறைவில்லை. உணவும் முடிந்தது.

உடனே கிளம்பும் அவசரமில்லை. சில மணி நேரத்துக்கே டேபிள் புக் செய்திருந்தான் ராகேஷ். பொறுமையாக இனிப்பை வர வைத்தனர்.

மெல்லிய இசை சூழ்ந்த இடம், இப்போது திடீரென கலகலப்பானது. பெரிய டேபிளில் கூட்டமாய் ஆண், பெண்கள். “ஏதோ டீம் லன்ச் போல” என்றான் ராகேஷ் பார்த்து.

ஜனக்நந்தினி அந்த கூட்டத்தில் ரகுராமை பார்த்தவுடனே கண்டுகொண்டாள். அவனும் சில நொடியில் இவளை பார்ப்பது தெரிந்தது.

ரகுராம் அவளுக்கு மெசேஜ் அனுப்பலாமா என்று யோசித்து, எடுத்த போனை வைத்துவிட, பெண் அதனை அவதானித்தாள்.

“இன்னும் அந்தளவு உரிமை இல்லையே” என்ற தயக்கம் அது.

இவர்கள் இனிப்பை சாப்பிட்டு முடிக்கவும், ராகேஷ் தொண்டையை செருமி கொண்டான். “ஒருவேளை நானும் உன் அவர் போல தள்ளி இருந்திருந்தா உனக்கு என்னை பிடிச்சிருக்குமோ?” என்று கேட்டான்.

ஜனக்நந்தினி அமைதியாக இருக்க, “கேட்கணும்ன்னு தோணுச்சு” என்றான்.

ராகேஷ்க்கு தன்னை பிடிக்கும் என்று தெரிந்து தான் சமீபமாக அவனிடம் இருந்து விலக ஆரம்பித்திருந்தாள் பெண்.  அதனாலே அவனின் வருத்தம் அவளுக்கு நன்றாகவே புரிந்தது. இதில் அவனை தவறு சொல்லவும் ஏதும் இருப்பதாக அவளுக்கு தெரியவில்லை.

ஒருவரை விரும்புவது அவ்வளவு பெரிய கொலைகுத்தமும் இல்லை. அவரை வில்லனாக சித்தரிப்பதும் தேவையில்லாத ஒன்று தான். அவர்கள் நமக்கு தொந்தரவு கொடுக்காத வரை!

ராகேஷ் புரிந்து விலகவே முயற்சிக்கிறான். அவனின் புரிதலும் இங்கு அழகியல் தான்!

“உன் அத்தை எனக்கு கேப் விட கூடாதுன்னு பொண்ணு பார்க்கிற மிஷன் ஸ்டார்ட் பண்ணிட்டாங்க. ஆல் தி பெஸ்ட் சொல்லு” என்றான் உரிமையாய்.

“நான் ஏன் மூணாவது மனுசியாய் ஆல் தி பெஸ்ட் சொல்லணும். கூடவே இருந்து கல்யாணம் செஞ்சு வைக்கிற ஆள் நான், மறந்துடாதீங்க” என்றாள் பெண் உறவை விட்டு கொடுக்காமல்.

ராகேஷின் புன்னகை இப்போது கண்களை எட்டியது. “அதுவும் சரி தான். மாமா மக இல்லாம என்ன கல்யாணம்?” என்றான்.

ராஜேஸ்வரி இருவரும் சந்திப்பது அறிந்து, பரபரப்பாகவே அழைத்து பேசினார். “இது நார்மல் மீட் தான்” என்று ராகேஷ் அடித்து சொல்லிவிட, கவலையுடன் வைத்துவிட்டார் அவர்.

தொடர்ந்து ப்ரவீன் அழைத்தவன், “இன்னும் கிளம்பலையா நீங்க?” என்று கேட்க, அவனை வெறுப்பேற்றவே ராகேஷ் நேரத்தை கூட்டினான்.

“காபி” என்று கேட்டு ஆர்டர் செய்ய, ஜனக்நந்தினி கண்கள் அடிக்கடி எதிரில் இருந்தவன் மீது பட்டு வந்தது.

“ஓகே. நான் இப்படியே ஊருக்கு கிளம்புறேன்” என்றான் ராகேஷ். இவளுடன் நல்ல உறவில் இருக்கவே அங்கிருந்து கிளம்பி வந்திருந்தான்.

ஜனக்நந்தினியும், அவனும் வெளியே வர அவரவர் கார் வந்தது. “நீங்க கிளம்புங்க. எனக்கு கொஞ்சம் ஷாப்பிங் இருக்கு” என்று அவனுக்கு விடை கொடுத்தாள்.

ஜனக்நந்தினி ஏதோ ஒரு எதிர்பார்ப்பில் காரிலே காத்திருக்க, ரகுராம் லன்ச் முடித்து அவன் டீமுடன் வெளியே வந்தான். பார்க்கிங்கில் வைத்து சில நிமிட அரட்டை. எல்லாம் கிளம்பவும் ரகுராம் பைக் எடுத்து வந்து இவள் கார் பக்கம் நிறுத்தினான்.

பெண் இறங்கியவள், “உங்க கொலீக்ஸ்சா” என்று கேட்டாள்.

“ம்ம்.. டீம் லன்ச்” என்றவன், ராகேஷ் பற்றி கேட்கவில்லை. பெண்ணே, “ராக்கி தெரியும் இல்லை?” என்று கேட்டாள்.

“தெரியும் உன் அத்தை மகன்” என்றவன், அவள் கழுத்தை பார்த்தான்.

இப்போதும் வேறு தான் இருந்தது. அவன் செயின் இல்லை. “என் செயின் எங்க?” என்று கேட்டான்.

“அது.. அறுந்திடுச்சு” என்றாள்.

ரகுராம் “நான் எதுவும் நினைக்க மாட்டேன், என்ன ஆச்சுன்னு சொல்லு” என,

“பாட்டி ஆயில் மசாஜ் பண்ணும் போது மாட்டி அறுந்திடுச்சு” என்றாள்.

“உங்க பாட்டி தானே. நடக்கும்”

“தெரியாம நடந்தது தான்”

“நான் தான் நம்பிட்டேனே”

“க்கும். ரொம்பத்தான்”

“கையில இருக்கா?”

“ஏன் நீங்களே எடுத்துக்கவா, அது என்னது தானே” அவள் படபடத்தாள்.

“உன்னது தான். சரி பண்ண மட்டும் தான்  கேட்டேன்” என்றான்.

“நானே பண்ணிக்கிறேன். நீங்க கஞ்ச மாமா. எடுத்துட்டு போயிட்டா” என்றாள்.

“என்னது கஞ்சா மாமாவா”

“கஞ்சம்ன்னு  சொன்னேன்”

“அதை சிக்கனம்ன்னு கூட சொல்லலாம். அது உனக்கு புரிய வாய்ப்பில்லை” என்றான் அவன்.

“ஏன் ஏன் எனக்கு புரியாது?” அவள் வேகமாக கேட்க,

அவள் காரை பார்த்தவன், “நீ ஓட்டுற கார் விலை தான் என் கடன். அதுக்கு தான் ஏழு நாளும் ஓடிட்டு இருக்கேன்” என்றான். இப்போது கூட காபி ஷாப் சென்று தான் வந்திருந்தான்.

“என் அம்மாவால தானே, சாரி” என்றாள் வருத்தத்துடன்.

“என் அத்தை அவங்கன்னு யாரோ கோவபட்டதா ஞாபகம்” என்று அவன் புன்னகைத்தான். அது அவளுக்கும் தொற்றிக்கொள்ள, “இப்போவும் நீ யோசிச்சுக்கோ. கடன்காரன் நான்” என்றான்.

“இதுக்கு நான் என்ன சொல்ல”

“யோசின்னு சொன்னேன்”

“நீங்க சமாளிக்க மாட்டிங்களா என்ன?”

“சமளிக்காம என்ன, நீ ஏன் என்னோட கஷ்டப்படணும்ன்னு பார்த்தேன்”

பெண் முகம் திருப்பி கொண்டாள். “இந்த வெயில்க்கு நீ பளபளக்கிற. இதுல கோவமும் படாத. இன்னும் டால் அடிப்ப” என்றான்.

கிண்டல் அடிக்கிறாரா என்று பார்க்க, உண்மையாக தான் சொன்னான். “நீங்க என்ன பண்றீங்க, வெயில்ல இருந்து என்னை மறைச்சு நில்லுங்க” என்றாள்.

“என் நிழல் உன்மேல பட்டா பரவாயில்லையா?” அவன் கேட்டபடி அவளை மறைத்து நிற்க,

பெண்ணுக்கு வாய் துறுதுறுத்தது. “என்ன” என்று கேட்க,

“இப்போ அதை சொல்ல கூடாதுன்னு பார்க்கிறேன்” என்றாள் அவள்.

“ஏன் சொல்லு”

“மாட்டேன். அப்புறம் நீங்க என்னை வேற மாதிரி நினைப்பிங்க. ஊர்கார பையன் வேற நீங்க”

“அப்போ ஏதோ வில்லங்கமா நினைச்சிருக்க, சும்மா சொல்லு”

“கண்டிப்பா மாட்டேன்”

ரகுராம் அவளை புருவம் சுருங்க பார்த்தான். “இன்னைக்கும் அந்த பார்ட் டைம் வேலையா?” என்று கேட்டாள். ரகுராம் ஆம் என்று சொல்ல, “தினமும் போவீங்களா?” என்று விசாரித்து தெரிந்து கொண்டாள்.

“என்னை பத்தி கேட்க மாட்டிங்களா” என,

“அதெல்லாம் சித்தப்பா மூலமா வந்திடும்” என்றான் அவன்.

“ம்ம்..”

“கிளம்பவா?” என்றான். பெண் பார்க்க, “ரெஸ்ட் எடுக்கணும். டையர்டா இருக்கு” என,

இவருக்கு என்னுடன் இருக்க ஆர்வமில்லையா? அவளின் உள்ளம்  சுருங்கி போனது. அவனுக்கோ இவளை பார்க்க பார்க்க, தங்கள் முடிவு சரிதானா என்றே தோன்றியது.

“என்னதான் பிரச்சனை உங்களுக்கு” ஜனக்நந்தினி கேட்டுவிட,

ரகுராம், “என் வயசுக்கு உன்னை பிடிக்குது. ஆனா என் வசதிக்கு இல்லை” என்றான்.

“நீங்க ஒன்னும் பிச்சை எடுத்துட்டு இல்லையில்லை” அவள் பட்டென கேட்டுவிட,

“ஏன் பிச்சையெடுத்தா வேணாம்ன்னு சொல்லிடுவியா” என்றான் அவன்.

“கூட சேர்ந்து பிச்சை எடுக்கிறேன் போதுமா”

“உன்னை பார்த்தா காசு கொடுக்கிறவன் கூட கொடுக்க மாட்டான். நீ கூட வந்தா என் பிஸ்னஸ் தான் கெடும்” என்றான் அவன் கிண்டலாக.

“முகம் புல்லா கரி பூசிட்டு வரேன் போதுமா”

“அப்போவும் அழகா தான் இருப்ப”

“இதை இப்படி தான் சொல்லணுமா?”

“வேறெப்படி சொல்லட்டும்?”

“கல்யாணம் முடியறதுக்குள்ள தெரிஞ்சு வைச்சுக்கோங்க”

“அப்போ முடிவே பண்ணிட்டியா”

“போயா” என்று அவள் காரில் ஏற போக,

“ஹேய் இரு இரு” என்று எட்டி அவள் கை பிடித்து தடுத்தவன், “கோவப்படாத அயித்த மகளே. என்னை புரிஞ்சுக்கணும்ன்னா நீ அடுத்த ஜென்மத்துல ஆம்பிளையா பிறக்கணும்” என்றான்.

“இந்த ஆம்பிளையை கட்டிக்கிட்டா கூட புரிஞ்சுக்க முடியும்” என்று முணுமுணுத்தாள் அவள்.

ரகுராமிடம் வசீகர புன்னகை. “நீ என்னை கட்டிக்க ஏற்பாடு பண்றேன். இப்போ கிளம்பலாம்” என்று அவளுக்கு விடை கொடுத்தான்.

Advertisement