Advertisement

அழகியல் 9

மகன் குடும்பம் வீடு வரும் வரை ராஜேஸ்வரி ஹாலிலே அமர்ந்திருந்தார். உடன் வேணி குடும்பமும். சுந்தரம் கிளம்ப பார்க்க, ராஜேஸ்வரி விடவில்லை.

“எனக்காக இருங்க மாப்பிள்ளை. இன்னைக்கே இதுக்கு முடிவு தெரிஞ்சுக்கலாம்” என்றிருக்க, சுந்தரம் பொறுமையாக காத்திருந்தார்.

தணிகைவேல் குடும்பம் மண்டபத்தில் இருந்து ஒரே காரில் வீடு  வர, பாரதியால் மகளிடம் எதுவும் கேட்க முடியவில்லை.

ப்ரவீனுக்கு மட்டும் சந்தேகம். தங்கைக்கு ரகுராமை பிடித்திருக்கிறதா என்று.

ஹாலில் பாட்டியை பார்க்கவும், “ஓஹ் காட்.. இன்னும் பஞ்சாயத்து முடியலை போலயே” என்று முணுமுணுத்தான்.

சோர்வு தான். ஓய்வெடுக்க வேண்டும். ஆனால் ராஜேஸ்வரி விடுவது போல் தெரியவில்லை. சோபாவில் சென்று அமர்ந்து கொண்டான். ஜனக்நந்தினி அண்ணனை கண்களால் கேள்வி கேட்டபடி வர, அவன் தோள் குலுக்கினான்.

“பாப்பா.. நீ பாட்டி பக்கத்துல வந்து உட்காரு” என்று பேத்தியை தன்னுடன் அமர வைத்து கொண்டார் ராஜேஸ்வரி.

ராக்கி, “க்கும்” என, ஜனக்நந்தினியும், ப்ரவீனும் அவனை பார்த்தனர். அவன் கழுத்தில் கோடிழுத்து, நாக்கை நீட்டி, தலையை தொங்க போட்டு கொண்டான்.

அண்ணன், தங்கை முகத்தில் மெல்லிய புன்னகை. “என்ன ராக்கி?” என்று வேணி கேட்க,

“நத்திங்மா.. நீங்க கிடுக்குபிடி பாயிண்ட் யோசிங்க.  இன்னைக்கு  நீங்க போடுற போடுல மாமா இவளை எனக்கு தூக்கி கொடுத்துடணும்” என்றான் மகன்.

“நான் இருக்கேன் தங்கம் உனக்கு. பாட்டி விட்டேனா பாரு” என்றார் ராஜேஸ்வரி பாசத்துடன்.

“அதானே நீங்க இருக்க பயமேன்” என்றவன் மாமன் மகளை பார்த்து கேலியாக சிரித்தான்.

தணிகைவேல் மனைவியுடன் உள்ளே வர, ஆட்கள் வந்து அவர்களிடம் இருந்த உடமையை வாங்கி கொண்டனர். எல்லோரையும் பார்க்கவும் தம்பதிக்கு புரிந்து போனது.

“வேலா.. உன்கிட்ட கொஞ்சம் பேசணும்” என்று ஆரம்பித்தார் ராஜேஸ்வரி.

“நானும் உங்ககிட்ட கொஞ்சம் பேசணும்மா” என்றார் மகன்.

ராஜேஸ்வரி என்ன என்று பார்க்க, “மண்டபத்துல வைச்சு நீங்க பண்ணது சரியா?” என்றார்.

“என் பேத்தி வாழ்க்கைக்காக நான் பேசுவேன் வேலா” என்று ராஜேஸ்வரி சொல்ல,

“அத்தனை பேர் முன்னாடி பேசணும்ன்னு என்ன அவசியம்மா. நம்ம நாலு பேர்க்கு தெரிஞ்ச விஷயத்தை நீங்க இன்னைக்கு நம்ம சொந்தம் பந்தம் முன்னாடி தம்பட்டம் அடிச்சுட்டு வந்திருக்கீங்க” என்று தணிகைவேல் கோவமாகவே கேட்டார்.

மகனின் கோவத்தில் ராஜேஸ்வரி கொஞ்சம் நிதானிக்க, “அங்க நடந்த நிச்சயம் இங்க நம்மளை தவிர யாருக்கும் தெரியாம இருந்துச்சு. இன்னைக்கு நீங்க மொத்தமா சொல்லிட்டு வந்திருக்கீங்க. என் பொண்ணு வாழ்க்கை என்ன உங்களுக்கு விளையாட்டா போச்சா?” என்று கேட்க,

இது யோசிக்கலையே? ராஜேஸ்வரி, வேணி முகம் பார்த்து கொண்டனர். ரகுராம், பாரதியை செய்ய நினைத்து, தங்களுக்கே செய்து கொண்டது இப்போது தான் புரிந்தது.

“தப்பு தான் வேலா. என் பேத்திக்கு சீக்கிரம் கல்யாணம் நடக்கணும்ன்னு கொஞ்சம் அவசரபட்டுட்டேன்” என,

“அப்படியென்ன அவசரம்மா. ஏன் பெத்தவன் எனக்கு தெரியாது என் பொண்ணு வாழ்க்கையை எப்படி அமைச்சு கொடுக்கணும்ன்னு?”

“உன் பொண்டாட்டி தான் அதுக்கு குறுக்கா நிக்கிறாளே வேலா”

“ஏன்’ண்ணா.. அண்ணி உங்களை கேட்காம தானே அன்னைக்கு நிச்சயம் பண்ணிட்டு வந்தாங்க”

“நிச்சயம் நடந்துச்சு வேணி, கல்யாணம் நடந்துச்சா இல்லையில்லை?”

“சரி அப்போ என் மகனுக்கு உங்க பொண்ணை கேட்கிறேன். கொடுங்க” என்றார் வேணி.

“நான் யோசிக்கணும்” என்றார் தணிகைவேல்.

“இதுல யோசிக்க என்ன இருக்கு வேலா? நம்ம ராக்கிக்கு கொடுக்க என்ன யோசனை வேண்டிக்கிடக்கு?”

“ம்மா.. நான் கொடுக்கிறது உயிர் இல்லாத பொருள் இல்லை. என் பொண்ணு. அவளை கேட்காம, அவளுக்கு பிடிக்காம நான் எதையும் செய்ய மாட்டேன்”

“சரி இங்க தானே பாப்பாவும் இருக்கா. எங்க முன்னாடியே கேட்டுடு” என்றார் ராஜேஸ்வரி.

“உங்களுக்கு என்னம்மா அப்படி ஒரு அவசரம்?”

“மச்சான். இடையில பேச கூடாதுன்னு தான் நினைச்சிருந்தேன். ஆனா இப்போ என் மகனுக்காக பேச வேண்டியிருக்கு. அவனுக்கும் ப்ரவீன் வயசு தான். உங்க முடிவை தெரிஞ்சுக்கிட்டு நான் மேற்கொண்டு என்ன பண்ணன்னு பார்க்கணும் இல்லை” என்றார் சுந்தரம்.

அவர் சொல்வதில் இருந்த உண்மை புரிய, தணிகைவேல் கொஞ்சம் தணிந்தார். அவருக்கு மகளை அங்கு கொடுக்க விருப்பமே. ஆனால் தன் குடும்பத்துக்கு, முக்கியமாக மகள், மனைவிக்கு?

  “கண்ணு நீ சொல்லு. உனக்கு இஷ்டமா?” என்று ராஜேஸ்வரி நேரே பேத்தியிடம் கேட்டார்.

“பாட்டி  எஸ் ஆர் நோ சொல்றதுக்கு முன்னாடி பொண்ணு, பையனை தனியா எல்லாம் பேச சொல்ல மாட்டிங்களா?” என்று ராக்கி கேட்டான்.

“தனியா என்ன பேசணும் உனக்கு?” ப்ரவீன் அண்ணனாக கேட்டான்.

“நீ இப்படியே பேரிகேட் போட்டு தான்டா என்னால அவகிட்ட பெர்பார்ம் பண்ணவே முடியல. இப்போவாவது ஒரு வாய்ப்பு கொடுடா” என்று ராக்கி கேட்க,

“எதா இருந்தாலும் எங்க முன்னாடியே பேசு” என்றான் ப்ரவீன்.

“உனக்கு எல்லாம் எப்படி பொண்ணு செட் ஆச்சு?” ராக்கி கடுப்பாக கேட்டான்.

“என்னடா?”

“என்ன நொன்னடா. நான் தனியா போனா என் மாமா மக கால்ல விழுந்தாவது கரெக்ட் பண்ணுவேன். உங்க முன்னாடி அது முடியுமா?”

“அடப்பாவி”

“ஹாஹா.. இதுக்கு தான் சொன்னேன்”

“ராக்கி, ப்ரவீன் எவ்வளவு முக்கியமான விஷயம் பேசிட்டிருக்கு. இப்போ இந்த விளையாட்டு தேவையா?” என்று வேணி கடுகடுத்தார்.

“ஓகே யூ  கேரி ஆன் மம்மி” என்றான் அவன்.

“நீ சொல்லு பாப்பா. உனக்கு ராக்கியை கட்டிக்க விருப்பம் தானே?” என்று திரும்ப கேட்க, அவள் அப்பா, அம்மாவை பார்த்தாள்.

“நான் இருக்கும் போது நீ யாருக்கும்  பயப்பட கூடாது கண்ணு. உன் இஷ்டம் தான் சொல்லு” என்றார் மருமகளை முறைத்தபடி ராஜேஸ்வரி.

உண்மைக்கும் பாரதிக்கு இந்த நேரம் தேவை தான். அவரே மகளிடம் கேட்க நினைத்ததை தான் இவர்கள் கேட்க, பாரதியே  மகளிடம், “உன் மனசுல என்ன இருக்கோ அதை சொல்லு கண்ணு” என்றார்.

“முன்ன அம்மா கொஞ்சம் அவசரப்பட்டேன் தான். இப்போ உன் முடிவு கேட்க முழு மனசா நினைக்கிறேன். உனக்கு என்ன விருப்பமோ அதை அம்மா முன்ன நின்னு செஞ்சு வைக்கிறேன்” என்றார் திறந்து வைத்த மனதுடன்.

தணிகைவேல்க்கு மனைவி பேச்சில் இருந்த உண்மை புரிய நிம்மதி தான். செல்வ சீமாட்டியாக வளர்த்த மகளை அண்ணன் மகன் என்ற ஒரு காரணத்துக்காக கண்ணை மூடி கொண்டு தூக்கி கொடுத்திட முடியுமா?

ஜனக்நந்தினி ஆழ்ந்த மூச்செடுத்து கொண்டவள், “எனக்கு ராக்கியை சின்ன வயசில் இருந்தே பிடிக்கும். ஆனா அவர் மேல் விருப்பம் எல்லாம் இல்லை” என்றாள்.

ராகேஷ் எதிர்பார்த்தது தானே என்று ஏற்று கொண்டாலும், ஏமாற்றம் அவனுக்கு கடலளவு.

“பிடிக்கும் இல்லை அது போதும் கண்ணு. கல்யாணம் ஆனதுக்கு அப்பறம் விருப்பம் வந்துட்டு போகுது” என்றார் வேணி அவசரமாக.

“இல்லை அத்தை. சாரி. ப்ளீஸ்” என்றாள் பெண் முடிவாக. அத்தை கலங்க, எழுந்து சென்று அவர் கை பிடித்து அவர் முன் மண்டியிட்டு அமர்ந்தாள்.

“நீ தான் என் மருமகளா வருவேன்னு எவ்வளவு ஆசை வச்சிருந்தேன் தெரியுமா? இப்படி சொல்றியே ஜானுமா?

“மருமகளா இல்லன்னா என்ன அத்தை. நான் எப்போவும் உங்க செல்ல அண்ணா பொண்ணு தானே?”

“சொந்த பந்தம் எல்லோருக்கும் நீ தான் என் மருமகன்னு சொல்லியும் வைச்சுட்டேன் கண்ணு, இப்போ வெளியே பொண்ணு பார்த்தா எல்லாம் கேட்பாங்க. அத்தைக்கு அது எவ்வளவு இறக்கம் தெரியுமா?”

“உங்க மகனுக்கு என்னை பிடிக்கலை. அதான் கட்டலைன்னு சொல்லிடுங்க அத்தை” என்றாள் பெண் சமாதானமாக.

“ம்மா. ப்ளீஸ். விடுங்க, இப்போ என்ன உங்க அண்ணா மக இந்த உள்ளூர் அழகி இல்லன்னா, உலக அழகி உங்க மகனுக்கு கிடைக்க மாட்டாளா என்ன?” என்றான் ராகேஷ்.

பெண் அவனை முறைக்க, “நான் தான் உன்னை முறைக்கணும். ஓடிடு” என்றவன், “நான் கிளம்புறேன்” என்று யார் அழைத்தும் நிற்காமல் கிளம்பிவிட்டான்.

சுந்தரத்திடம் பெண், “சாரி மாமா” என, அவர் இட்ஸ் ஓகே மா என்று கிளம்பிவிட்டார்.

“நான் அப்புறமா வரேன்ம்மா” என்ற வேணி யாரிடமும் சொல்லி  கொள்ளவில்லை.

ராஜேஸ்வரி மகள் அழுது கொண்டு செல்லவும், “இப்போ உனக்கு சந்தோஷமா? உனக்கு அம்மா வீடு வேணும்ன்னு என் மகளுக்கு அம்மா வீடு இல்லாம பண்ற இல்லை” என்று பாரதியிடம் கத்திவிட்டு அறைக்கு சென்றுவிட்டார்.

தன்மேல் உண்மையான பாசம் வைத்திருக்கும் அத்தையை நோகடித்து விட்டதில் ஜனக்நந்தினிக்கு வருத்தமே. “சரியாகிடுவா. கொஞ்ச நாள் அவளுக்கு டைம் கொடுக்கலாம்” என்றார் தணிகைவேல்.

மகனுக்கு நிச்சய முடித்த மகிழ்ச்சி அன்று கூட நிலைத்திருக்கவில்லை. “சாரிடா அண்ணா. என்னால உன் டே ஸ்பாயில் ஆகிடுச்சு” என்று ஜனக்நந்தினி அண்ணனிடம் சொன்னாள்.

“நீ வேற ஒரு பிரச்சனைக்கு முடிவு தெரிஞ்சிடுச்சு. இதுவே எனக்கு ஹாப்பியான விஷயம் தான்” என்றான் ப்ரவீன்.

“உண்மை தானே?” என்று மற்ற மூவரும் ஏற்று கொண்டனர்.

“நாம அப்புறமா.. நீ அடுத்த முறை ஊர்க்கு வரும் போது பேசலாம் கண்ணு. பாட்டி சொல்றது போல ப்ரவீன்  கல்யாணத்துக்கு முன்னாடியே, உனக்கு வரன் மட்டுமாவது முடிவு பண்ணிடணும்” என்றார் தணிகைவேல்.

ஜனக்நந்தினி தலையசைத்து கொண்டாள். பாரதி மகளுக்கான இடம் கொடுத்து மௌனம் காத்தார்.

மேலும் இரு நாட்கள் ஊரில் இருந்துவிட்டு ஜனக்நந்தினி சென்னை கிளம்பினாள். பாட்டியுடன் சென்று, வேணி வீட்டில் சொல்லி கொண்டாள். அதில் அம்மா, மகளுக்கு கொஞ்சம் மகிழ்ச்சி தான். பாரதி சில நாட்கள் ஊரில் இருந்துவிட்டு  வருவதாக சொல்லிவிட்டார்.

அடுத்து வந்த நாட்கள் அவரவருக்கான கடமையுடன் சென்றது. பாரதிக்கு அண்ணா, அண்ணி வராத வருத்தம் இதற்குள் மறைந்திருக்க, அருணகிரிக்கு அழைத்தார்.

“சொல்லு பாரதி. நிச்சயம் எல்லாம் நல்ல படியா  முடிஞ்சிடுச்சா” என்று அவர் கேட்க,

“நானே போன் பண்ணா தான் இதையும் கேட்பிங்களா அண்ணா” என்றார் பாரதி.

“இப்போதான் தறிக்கே வர செய்றேன்  பாரதி” என்றார் அவர்.

“ஏன்ண்ணா என்ன ஆச்சு?” பாரதி பதற,

“சின்ன ஆக்சிடென்ட்மா. பதறாத. இப்போ  நானும் உன் அண்ணியும் நல்லா இருக்கோம்” என்றார் அருணகிரி.

“என்னண்ணா சொல்றீங்க? எப்போ நடந்துச்சு இது? என்கிட்ட யாரும் சொல்லவே இல்லை. உங்களை கேட்டதுக்கு நல்லா இருக்கீங்கன்னு தான் சொன்னாங்க”

“நான் தான் சொல்ல கூடாதுன்னு சொன்னேன், நிச்சய நேரத்துல இதை நீ தெரிஞ்சுக்கணுமான்னு தான்” என்றவர், “இந்தா உன் அண்ணிகிட்ட பேசு” என்று கொடுத்தார்.

பத்மா பேச, அவரிடம் பாரதி நடந்ததை கேட்டு கொண்டார். ப்ரவீன் நிச்யத்திற்கு முந்தின நாள், அருணகிரி  இரவு வெகு நேரம் வரை தறியிலே இருந்தார். உடன் பத்மாவும்.

மறுநாள் தறி வேலை தேங்க கூடாது என்பதால் இன்றே செய்ய, அனுஷா போன் செய்து கொஞ்சம் சத்தமிட்ட பிறகே இருவரும் கிளம்பினர்.

இரவு நேரம். வழியில் தெருவிளக்கு எதுவும் இல்லை. அருணகிரி பொறுமையாக வந்த போதும், எதிரில் வந்த பிரைவேட் பஸ்ஸில் இருவரும் இடிபட்டு கீழே விழுந்தனர்.

உடனே இருவரையும் மருத்துவமனை அழைத்து சென்றுவிட்டனர். அருணகிரிக்கு தலையில் கட்டு போட்டிருக்க, பத்மாவிற்கு கையில் அடி. இருவருக்கும் பெரிதாக இல்லை என்பதே ஆசுவாசம்.

பத்மா சொல்லி முடிக்கவும், பாரதிக்கு  கால்கள் நிற்கவில்லை. உடனே வீட்டில் சொல்லிவிட்டு டிரைவருடன் அண்ணா வீட்டுக்கு கிளம்பிவிட்டார். ராஜேஸ்வரி முணுமுணுப்பை நின்று கேட்க கூட இல்லை.

Advertisement