Advertisement

“எங்களுக்கு தான்” மஞ்சுளா நேராக சொல்ல,

“நீங்களே தான் சொல்லிக்கணும் அதை. பகல் கனவு காணாம சீக்கிரமே உங்க பையனுக்கு பொண்ணு தேடுற வழியை பாருங்க. இப்போவே ஆரம்பிச்சா தான் உங்க வசதிக்கு ஒரு வருஷத்துக்குள்ள அமையும்” என்றார் ராஜேஸ்வரி.

“உறுதி பண்ண பொண்ணு இருக்க நாங்க ஏன் வெளியே தேடணும்?” என்று மஞ்சுளா கேட்க,

“உறுதி பண்றதுன்னா இது தான். ஊரை கூட்டி, உறவை கூட்டி, வீட்டு பெரியவங்க, பெத்தவங்களை வைச்சு பண்றது. நீங்க பண்ணது இல்லை. அது செல்லவும் செல்லாது” என்றார் அடித்து.

“செல்லாதா? என்ன பேசுறீங்க நீங்க?” மஞ்சுளாவிற்கு அதிர்ச்சியும் கோவமும்.

“இரு மஞ்சுளா நாம பேசலாம்” என்று பாரதி சொல்ல,

“ஆமா.. நீங்க பண்ணது செல்லாது தான். இதோ இங்க நிக்கிறான் பாரு என் பேரன் இவனுக்கும், என் பேத்திக்கும் தான் கல்யாணம்” என்றார் ராஜேஸ்வரி.

“இதென்ன அக்கிரமமா இருக்கு. உறுதி பண்ணது எங்க வீட்டு பிள்ளைக்கு தான்”

“அதான் செல்லாதுன்னு என் அம்மா சொல்லிட்டாங்க இல்லை. என்ன திரும்ப திரும்ப அதையே சொல்லிக்கிட்டு” என்று வேணி பேச,

“உங்க அம்மா சொன்னா, பொண்ணை பெத்தவ தான் சொல்லணும்” என்றார் மஞ்சுளா.

“அப்போ பொண்ணை பெத்தவன், என் அண்ணா சொல்ல வேண்டாமா?” என்று வேணி கேட்டார்.

“அவரும் தான் சொல்லணும். சொல்லுவார்” என்றார் மஞ்சுளா.

“என் மகன் சொல்ல மாட்டான். இந்தா மருமகளே உன் பிறந்த வீட்டுக்கு சொல்லு. நினைக்கிறது எல்லாம் நடக்காதுன்னு” என்று ராஜேஸ்வரி பேச, ரகுராம் வந்தான்.

“ராம் இங்க பாரு இந்த பாட்டி என்னென்னமோ பேசிட்டிருக்காங்க. உனக்கும், நந்தினிக்கும் நடந்த உறுதி செல்லாதாம். இதோ இந்த பையன், அவங்க பேரன், இவனுக்கு  தான் நந்தினியை கட்ட போறேன்னு சொல்றாங்க” என்றார் மஞ்சுளா அவனிடம் படபடப்பாக.

“சித்தி.. இப்போ எதுக்கு இந்த பேச்சு எல்லாம்? விடுங்க” என்றான் ரகுராம்.

“என்ன ராம் விட சொல்ற, அதெப்படி அவங்க இப்படி சொல்லலாம்?”

“சித்தி. இங்க வைச்சு இதை பேச வேணாம். பார்த்துக்கலாம் விடுங்க” என,

“எங்க வைச்சு பேசினாலும் இதே தான் தம்பி. நீ வெளியே பொண்ணு பார்த்துக்கோ. என் பேத்தி கிடைப்பான்னு கனவு கண்டுட்டு இருக்காத” என்று ராஜேஸ்வரி சொல்ல, ரகுராம் மூச்சை இழுத்துவிட்டு தன்னை நிதானித்தான்.

“அத்தை. இப்போ ஏன் இதெல்லாம்?” என்று பாரதி அவரிடம் சொல்ல,

“வேறெப்ப மருமகளே? நீ ஒரு அம்மாவா என்ன பண்ணியிருக்கணும் முதல்ல பொண்ணுக்கு கல்யாணம் பண்ணிட்டு தான் பையனுக்கு பண்ணியிருக்கணும். ஆனா நீ மக வாழ்க்கை போனாலும் பரவாயில்லை, என் பொண்ணை என் அம்மா வீட்ல தான் கொடுப்பேன்னு வைச்சிட்டிருக்க. ஆனா நான் அப்படி இருக்க முடியாது இல்லை. என் பேத்திக்கும், என் பேரனுக்கும் கல்யாணம் முடிச்சுட்டு தான் ப்ரவீனுக்கு பண்ணுவேன்”

“ம்மா.. ப்ளீஸ். கொஞ்சம் அமைதியா இருங்க. வீட்ல போய் பேசிக்கலாம்” என்று தணிகைவேல் முதற்கொண்டு எல்லாம் வந்துவிட்டனர்.

“முடியாது வேலா. நிச்சயம் முடியட்டும்ன்னு தான் நான் இத்தனை நாள் அமைதியா இருந்தேன். இங்கேயே நம்ம வீட்டு ஆளுங்க எல்லாம் இருக்காங்க. இப்போவே பேசி முடிச்சிடலாம். இதோ என் பேத்தி, என் பேரன் இருக்காங்க. இப்போவே முகூர்த்த நாள் குறிக்கலாம்”

“அத்தை.. என் அண்ணன் மகனுக்கு உறுதி முடிஞ்சுடுச்சு”

“அது செல்லாது. பெத்தவன், பெரியவ நாங்க இல்லாம நடந்த உறுதி செல்லாது”

“அம்மா நான் செஞ்சு வைச்சது அத்தை. கண்டிப்பா செல்லும். என் பொண்ணை அங்க தான் கொடுப்பேன்”

“நீ எல்லாம் என்ன அம்மா பாரதி? இளவரசி மாதிரி பெண்ணை வளர்த்துட்டு அங்க போய் கொடுக்கிறேன்னு சொல்ற, அவ கஷ்டப்பட்டாலும் பரவாயில்லை உனக்கு உன் அம்மா வீடு வேணும் இல்லை”

“அத்தை” என்ற பாரதி கண்களில் கண்ணீர் வழிந்துவிட்டது.

உறவுகள் இடையில் வந்து பேச, ஜனக்நந்தினியை பார்த்தான் ரகுராம். அவளின் பார்வையும் அவனிடம் இருக்க, நேரே அவளிடம் வந்தவன், “என் செயின் எங்க?” என்று கேட்டான்.

“அங்க என் பேத்திகிட்ட என்ன பேச்சு உனக்கு” என்று ராஜேஸ்வரி வர,

“அது.. அது இருக்கு” என்றாள் ஜனக்நந்தினி.

“இங்க நடக்கிறது எனக்கு பிடிக்கலை. உன்னோட முடிவு தான் என்னோட முடிவும். உன் பாட்டி கோவத்துல பேசினாலும் உண்மையை தான் பேசுறாங்க. உன் வசதிக்கு நீ என்னோட இருக்கிறது கஷ்டம். யோசிச்சு சொல்லு. இப்போவே இங்கேயே இதை முடிச்சுக்கலாம்” என்றான்.

ஜனக்நந்தினி அவளிடம் முடிவை விடுவான் என்று நினைக்கவில்லை. அம்மா, அப்பாவை பார்த்தாள். தணிகைவேல்க்கு இத்தனை பேர் முன் வைத்து நடப்பது ஒப்பவில்லை.

“ம்மா.. என் மக வாழ்க்கை இது. ப்ளீஸ். விடுங்க” என்று கையெடுத்து கும்பிட்டுவிட்டார்.

“வேலா.. நானும் என் பேத்தி வாழ்க்கைக்கு தான் பேசுறேன்”

“ம்மா.. போதும்மா. போதும். வீட்டுக்கு கிளம்பலாம்”

“வேணி அத்தையை கூப்பிட்டுட்டு கிளம்பு” என்று சுந்தரம் கண்டிப்பாய் சொல்ல, வேணி அம்மாவை சமாதானம் செய்து அழைத்து சென்றார்.

இன்று ஒரு முடிவு கிடைத்துவிடும் என்று நினைத்திருந்த வேணி, ராஜேஸ்வரிக்கு பெருத்த ஏமாற்றம்.

ப்ரவீன் உடை மாற்றி இடையில் வந்தவன், உறவுகளை கவனித்து அனுப்பி வைத்தான். தணிகைவேல் சோர்ந்து அமர, “பார்த்துக்கலாம் விடுங்க. எல்லாம் இருக்கோம்” என்று ஆறுதல் சொல்லிய சுந்தரம் மகனுடன் கிளம்பினார்.

பாரதிக்கு மாமியாரின் வார்த்தைகள் சுட்டது நிஜம். ஒருவேளை என் பொண்ணும் இப்படி நினைப்பாளா? சுருக்கென வலித்தது.

தப்பு பண்ணிட்டேனா? இவரும் இத்தனை நாள் இதை தானே சொல்லிட்டிருக்கார். “என் பொண்ணு கஷ்டப்பட கூடாது. கஷ்டப்பட நான் விட மாட்டேன்னு”

ஆனா பணம் நிறைய இருந்தா மட்டும் போதுமா? சந்தோசம் கிடைச்சிடுமா? அப்படின்னா எனக்கு ஏன் அது கிடைக்கலை?

என் பொண்ணுக்கு கொட்டிக்கிடக்கிற பணம் இல்லாமல் போனாலும், அவ சந்தோஷமா இருக்கணும். ரகுராம் கண்டிப்பா அவளை சந்தோஷமா வைச்சுப்பான். எனக்கு நம்பிக்கை இருக்கு.

என் பொண்ணுகிட்ட உட்கார்ந்து தெளிவா பேசிடணும். அப்போ தான் அவசரப்பட்டேன். இப்போ ரகுராம் சொன்ன மாதிரி அவ எடுக்கிற முடிவு தான்! பாரதி தெளிந்து எழுந்தார்.

ராமமூர்த்தி உறவுகளை வேன் வரை விட்டு வர, மஞ்சுளா அவரிடம் நடந்ததை சொல்லி கொண்டிருந்தார். அவர் கோவப்பட்டு நியாயம் கேட்க கிளம்ப, “சித்தப்பா வேணாம். முதல்ல நீங்க ஊருக்கு கிளம்புங்க. நாம அப்புறமா இதை பேசுவோம்” என்று ரகுராம் தடுத்துவிட்டான்.

பாரதி அவர்களை வழியனுப்ப, ராமமூர்த்தி தங்கையிடம் கோவப்பட்டே சென்றார்.

ரகுராம் அங்கிருந்து சென்னை கிளம்ப, பாரதிக்கு அண்ணன் மகனை பார்க்க பார்க்க விம்மியது. அவன் கையை பிடித்து கொண்டு நின்றார். பேச வார்த்தைகள் இல்லை.

நிறைய பேச ஆசை தான். ஆனால் முடியவில்லை. ரகுராம்க்கு அவரை புரிந்து கொள்ள முடிந்தது. “சென்னை வரவும் சொல்லுங்க. உங்களை பார்க்க வரேன்” என்றான்.

பாரதி சரியென, “கிளம்புறேன்” என்றவன், தணிகைவேல், ப்ரவீன், ஜனக்நந்தினியிடம் தலையசைப்பை கொடுத்தான்.

தணிகைவேல்க்கு அவனிடம் ராஜேஸ்வரி நடந்து கொண்டதற்கு சமாதானம் சொல்ல முடியா  இக்கட்டு. மகளை அவனுக்கு கொடுக்கும் எண்ணம் இல்லாத போது, என்ன சமாதானம் சொல்ல?

“சார்” என்று மண்டபம் மேனேஜர் வர, தணிகைவேல் அவருடன் சென்றார்.

ப்ரவீ னுக்கு அப்படி எல்லாம் எதுவும் இல்லை. இன்னும் சொல்ல போனால் இன்று ரகுவின் செயல்கள் அவனுக்கு மிகவும் பிடித்து போனது. வந்து கை குலுக்கி நன்றி சொன்னான்.

“கடைசியா   நடந்ததுக்கு சாரி. பாட்டி இப்படி பண்ணுவாங்கன்னு எதிர்பார்க்கலை. இப்போ இது தேவையில்லாத ஒன்னு” என்று வருத்தமும் கொள்ள, ரகுராம் மெல்லிய புன்னகையின் மூலம் அதை ஏற்று கொண்டு கிளம்பினான்.

ஜனக்நந்தினி அவனுடனே வர, ப்ரவீனும், பாரதியும், அவர்களுக்குள் பேசட்டும். அது தான் நல்லதும் கூட என்று தள்ளி சென்றனர்.

ரகுராம் தன்னுடன் வருபவளை நின்று கேள்வியாக பார்க்க, “ஏன் என்கிட்ட முடிவை கேட்டீங்க” என்றாள் பெண்.

“உன்னோட லைஃபும் தானே இது?” என

“அப்போ உங்களுக்கு இல்லையா?” என்று கேட்டாள் அவள்.

ரகுராம் தலை கோதி நிற்க, “செயின் என் கழுத்துல இல்லைன்னு தான் என்கிட்ட அப்படி நடந்துக்கிட்டிங்களா?” என்று கூர்மையாக கேட்க,

“நான் அத்தைகிட்ட சொல்லியிருந்தேன். அது உன் கழுத்துல இருக்கிற வரை நீ தான் என் வாழ்க்கையில இருப்பேன்னு. இப்போ இல்லன்னதும் நான் என்ன நினைக்க?” என்றான் அவன்.

“இது எனக்கு தெரியாது. அப்படி இல்லைன்னா என்கிட்ட கேட்கணும்ன்னு நினைக்க மாட்டீங்களா?”

“என்னை மறுக்க உனக்கு உரிமை இருக்கு”

“அப்போ உங்களுக்கும் அதே உரிமை இருக்கு தானே”

“எனக்கு உன்னை மறுக்க காரணம் இல்லை”

“எனக்கும் இல்லை”

“என்ன சொல்ல வர நீ?”

“உங்களோட நடந்த நிச்சயம் என்னை உங்களோட கமிட் ஆக்கிடுச்சு. நான் அதை மதிக்கிறேன்”

“அது அவசரத்துல பண்ணது. இப்போ அப்படி இல்லை”

“ஏன் இப்போ உங்களுக்கு வேற யாரும் இருக்காங்களா என்ன?” என்று பெண் கேட்டுவிட,

ரகுராம்க்கு கோவம் வந்துவிட்டது. அவளுக்கு அருகில் நெருங்கியவன், “உன் கழுத்துல செயின் போட்ட நாள்ல இருந்து எந்த பொண்ணையும் நான் பார்க்கலை” என்றான்.

பெண்ணின் உதடுகள் சிரிப்பில் விரிந்த போதும், “அதுல ரொம்ப குறை போலயே உங்களுக்கு” என்றாள்.

ரகுராம் அவளை முறைத்தவன், “இப்போ என்ன சொல்ல வர நீ. நமக்கு நடந்த உறுதியை மதிச்சு ஏத்துக்கலாம்ன்னா” என்று கேட்க,

“அது உங்க இஷ்டம்” என்றாள் அவள்.

“நீ உன் இஷ்டத்தை சொல்லுடின்னா”

“ஆஹ்ன்” என்ற பெண் முகசிவப்புடன் நிற்க,

ரகுராம்  முகத்திலும்  சட்டென ஒரு சிவப்பு. தலை கோதி கொண்டான்.

இத்தனை வருடங்களாக நிச்சயித்த பெண் என்று மனதில் இருந்தவள் மீதான உரிமை ஒரு வார்த்தையில் வெளியே வந்துவிட்டது.

 ஜனக்நந்தினிக்கு அதுவே அவன் மனதை சொன்னது. அதன்பின் இருவரும் மௌனமாகிவிட்டனர். கேட்க கேள்விகள் இல்லை.

தங்களுக்குள் நடந்த உறுதியை இருவருமே மதிக்கின்றனர். இதற்கு மேல் என்ன பேச?

ரகுராம் விடைபெற்று கொண்டு கிளம்பிவிட்டான்.

Advertisement