Advertisement

அழகியல் 8

இன்னும் அம்மா வீட்டு ஆட்கள் வராததில் பாரதி கண்ணீரை அடக்கி நிற்க, ப்ரவீன் தொடர்ந்து ராமமூர்த்திக்கு அழைத்து கொண்டிருந்தான்.

அவர் எடுக்காததில், அருணகிரி எண்ணுக்கும் அழைத்துவிட்டான். அவரும் எடுக்கவில்லை. ப்ரவீன் புருவம் சுருங்கியது.

‘வரலைன்னா வரலைன்னு சொல்ல வேண்டியது தானே? இதென்ன போன் எடுக்காம இருக்கிறது?’

“ம்மா.. உடனே டவுன் ஆகாதீங்க. அவங்க வருவாங்க” என்று ஜனக்நந்தினி அம்மாவுக்கு ஆறுதல் சொல்ல,

“வருவாங்களான்னு தெரியல கண்ணு. கூப்பிட போனப்போவே அண்ணி உங்க பாட்டி பேசுறதை வைச்சு யோசிச்சாங்க. நான் தான் கண்டிப்பா வந்தே ஆகணும்ன்னு சொல்லிட்டு வந்தேன்” என்றார் பாரதி.

ப்ரவீன் கேட்டபடி வந்தவன், “அவங்க வரலை போல தான். அதான் போன் கூட எடுக்கல. நீங்க அவங்களுக்காக அழுதுட்டு நிக்கிறீங்க” என்றான் ஆதங்கத்துடன்.

“நீங்க யாருக்கு கூப்பிட்டீங்கண்ணா?” என்று தங்கை கேட்க,

“ராமமூர்த்தி மாமாக்கு தான். அவர் எடுக்கலைன்னு உங்க அண்ணனுக்கே கூப்பிட்டேன். அவரும் எடுக்கலை” என்றவன்,  தங்கையின்  முகம் பார்த்து, “நீ யாருக்காவது கூப்பிட்டியா என்ன?” என்று கேட்டான்.

“அவர்.. ரகுராம்க்கு கூப்பிட்டேன். எடுக்கலை” என்றாள் ஜனக்நந்தினி.

“அவனுக்கு நீ ஏன் கூப்பிட்ட? முதல்ல அவன் நம்பர் உன்கிட்ட எப்படி வந்தது பாப்பா?”

“ஏன் யாரும் போன் எடுக்கலை? ஒருவேளை யாருக்காவது எதாவது பிரச்சனையா இருக்குமா?” பாரதி பதட்டமாக கேட்டார்.

அண்ணனும், தங்கையும் இப்போது தான் அப்படி யோசித்தனர். “ம்மா. வர இஷ்டம் இல்லைன்னா கூட எடுக்காம இருக்கலாம் இல்லை. நீங்க இப்படி யோசிக்காதீங்க” என்றான் ப்ரவீன்.

“இல்லை தம்பி. வரலைன்னா கண்டிப்பா மூர்த்திண்ணா போன் எடுத்து சொல்லியிருப்பாங்க” என்ற பாரதிக்கு அடுத்து என்ன என்று யோசிக்க முடியவில்லை.

“ம்மா. பேனிக் ஆகாதீங்க இருங்க. ஊர்ல யார் மூலமாவது விசாரிக்கலாம்” ப்ரவீன் சொல்ல,

“அனுஷா, மஞ்சுளா போனுக்கு கூப்பிட்டு பாருங்க” என்றார் தன் போனை தேடியபடி.

“பாரதி. அங்க என்னத்த தேடிட்டு இருக்க. ஆளுங்க சபையில உட்கார்ந்துட்டாங்க பாரு. இங்க நில்லு” என்றார் ராஜேஸ்வரி.

பாரதிக்கு நிற்கவே முடியவில்லை. ஏதேதோ எண்ணங்கள் வந்து அவரை பலமிழக்க செய்தது. “ம்மா.. ப்ளீஸ் ரிலாக்ஸ். முதல்ல இந்த தண்ணீரை குடிங்க” பாட்டிலை அம்மா கையில் திணித்தாள் மகள்.

பாரதி அடைத்த தொண்டைக்கு வேகமாக வாங்கி குடித்தவர், “என் போன். என் போன் எங்கன்னு பாரு கண்ணு” என்றார்.

“ம்மா. நானும், அண்ணனும் அவங்களை ரீச் பண்ண ட்ரை பண்ணிட்டு தான் இருக்கோம். நீங்க டென்சன் ஆகாதீங்க. எல்லாம் இங்க தான் பார்க்கிறாங்க” என்று சொல்ல, தணிகைவேல் மனைவி முகத்தில் என்னவோ ஏதோன்று எழுந்தே வந்துவிட்டார்.

“என்ன பாரதி. ஏன் இப்படி இருக்க?” என்று கேட்க, பாரதி கண்களில் கண்ணீர் கட்டிவிட்டது.

“அம்மாவோட அம்மா வீட்ல இருந்து யாரும் போன் எடுக்கலைப்பா” என்ற ஜனக்நந்தினி அப்பாவின் கையை பிடித்து கொண்டாள்.

மகளின் வேர்த்த உள்ளங்கையும், மனைவியின் கண்ணீரும் அவருக்கு அச்சத்தை கொடுத்தது.

“ஒன்னும் இருக்காது. இருங்க பார்க்கிறேன்” என்றார் போன் எடுத்தபடி.

“என்ன சம்மந்தி ஏதாவது பிரச்சனையாங்க?” என்று புது சம்மந்தக்காரர்கள் கவனித்து கேட்க, இவர்கள் என்ன சொல்ல என்று தயங்கினர்.

ப்ரவீன் வாசலை பார்த்தவன், “அதோ ரகுராம் வந்துட்டார்” என்றான் உயர்ந்துவிட்ட குரலில் ஆசுவாசத்துடன்.

எல்லார் கண்களும் வாசல் பக்கம் திரும்ப, ரகுராம் வேகநடையுடன் உள்ளே வந்து கொண்டிருந்தான்.

பாரதி அவசரமாக கீழிறங்கி மருமகனிடம் சென்றார். “கொஞ்சம் லேட் ஆகிடுச்சு” ரகுராம் சொல்ல, பாரதி அவன் கையை பிடித்து கொண்டவர், “எங்க அண்ணா, அண்ணி? யாருக்கும் ஒன்னும் இல்லையே” என்று பரிதவிப்புடன் கேட்டார்,

“எல்லாம் நல்லா இருக்காங்க. ஏன் நான் வந்தா சபையில சேர்த்துக்க மாட்டிங்களா?” என்றான் இலகுவாக.

பாரதி கண்களை ஒற்றி கொண்டவர், “நீ இல்லாம சபையே நிறையாது வா” என, பின்னே ராமமூர்த்தி, மஞ்சுளா மற்றும் சில உறவுகளும் வந்துவிட்டனர்.

“எல்லாம் வாங்க” பாரதி  புன்னகையுடன் உறவுகளை வரவேற்றவர், ராமமூர்த்தியையும், அண்ணன் மகனையும் கை பிடித்து மேடைக்கு அழைத்து வந்தார்.

ஜீன்ஸ், வெள்ளை ஷர்ட்டில், முடியை கோதியபடி வந்தவனை ஜனக்நந்தினி பார்த்திருக்க, அவன் எதிரில் நின்றவளை பார்க்காமலே சென்றான்.

வந்தவர்களை பிரவீன் வரவேற்க, தணிகைவேல் கொஞ்சம் தயங்கினாலும், ராமமூர்த்தியை வரவேற்று, ரகுராமை பார்க்க, அவன் இவரை கடந்து சென்று கொண்டிருந்தான். அதில் அவர் முகம் சுருங்க, ஜனக்நந்தினி பார்வை முறைப்பாய் மாறியது.

ராஜேஸ்வரிக்கோ,  “என் பேரன் நிச்சயத்துல இவங்களா?” என்ற பொறுமல்.

அவருக்கு மேல் ரகுராமை பார்க்க வேணிக்கு கொதித்தது. “உன் மருமக பாரு அவங்க கை பிடிச்சு மேடைக்கு கூட்டிட்டு வரதை? அவங்க மாமான்னு சபையில உட்கார்ந்தா அப்பறம் என் புருஷன் எங்க உட்காரம்மா? இத்தனை வருஷம் அம்மா வீடு கதி இல்லாம இருந்ததுக்கு, என் புருஷன் தான் இவங்களுக்கு சீர் செஞ்சு மானத்தை காப்பாத்தி கொடுத்தார். அவருக்கு  உங்க மருமக பண்ற கைமாறை பார்த்தீங்களா? நன்றி கெட்டவங்க” என்று அம்மாவிடம் குதித்தார்.

சுந்தரம் அப்படி எல்லாம் எதுவும் நினைக்காமல், “இங்க வாங்க. உட்காருங்க” என்று அவர்களுக்கு சபையின் நடுவில் அமர இடம் கொடுத்தார்.

ரகுராம்க்கு அவர் யார் என்று தெரியாமல் போனாலும், சினேக புன்னகையுடன் அவரிடம் கை குலுக்கி அமர்ந்தான்.

“என் பெரிய மச்சான் மகன், சின்ன மச்சான்”  என்று தணிகைவேல் புது சம்மந்தக்காரர்களுக்கு அறிமுகம் செய்து வைத்தார்.

ரகுராமும், மூர்த்தியும் எழுந்து நின்று வணக்கம் வைத்து அமர்ந்தனர். “சரியா போச்சு இப்போதான் மாமா வீட்ல இருந்தே வராங்களா. அதுக்குள்ள ஏன் பாட்டிமா அவசரப்பட்டாங்க?” என்று அந்த பக்கம் ஒரு அம்மா கேட்க,

“வந்துடுவாங்கன்னு தான்” என்றார் ராஜேஸ்வரி சமாளிப்பான சிரிப்புடன்.

“அவங்க இல்லாம என்ன நிச்சயம்? பெரியவங்க உங்களுக்கு தெரியாதா?” அவர் மேலும் கேட்க,

“இத்தனை வருஷம் என் மாப்பிள்ளை தான் இதெல்லாம் செஞ்சார். இவங்க இப்போதான்..” என்று ராஜேஸ்வரி ஆரம்பிக்க,

“ம்மா.. நேரம் ஆகிடுச்சே. ஆரம்பிக்கலாமா?” என்றார் தணிகைவேல் இடையிட்டு.

“ம்ம். ஆரம்பிங்க” என்ற ராஜேஸ்வரி உதடு கோணியது.

அம்மாவும் மகளும் சேர்ந்து பாரதியை அடிக்கண்ணால் பார்க்க, பாரதிக்கோ யாரும், எதுவும் கவனத்தில் இல்லை. அவர் கண்கள் முழுதும் சபையில் இருந்த உறவையே தனக்குள் நிரப்பி கொண்டிருந்தது.

எத்தனை வருட கனவு இது, ஏன் தவம் என்றே சொல்லலாம். இன்று தான் திவ்யமாய் நிறைவேறி கொண்டிருக்கிறது.

அண்ணா, அண்ணி  வரலைன்னாலும்  என் மருமகன் வந்திருக்கார். இது போதுமே!

பெரியவர்கள் உறுதி வாசித்து, முறைகள் செய்ய, ரகுராம் மாமா சார்பில் நின்று எல்லாம் சரியாக செய்தான்.

எங்கேயும் தேங்கி நிற்காமல், நேர்த்தியாக செய்தான். ஆனாலும் ராஜேஸ்வரி வேண்டுமென்றே ஒவ்வொன்றாய் சொல்ல,  ரகுராம் காதில் போட்டு கொண்டதாகவே தெரியவில்லை. ஏன் அவர் பக்கம் கூட பார்க்கவில்லை. “வீட்டுக்கு பெரியவங்கிற மரியாதை இருக்கா பாரு?” என்று அவரால் மகளிடம் திட்டி கொள்ள மட்டுமே முடிந்தது.

அப்போதும், “எங்க பக்கம் இது முறை இல்லை” என்று எதற்கோ ஆரம்பிக்க,

“தம்பி சரியா தான் செய்றார் சம்மந்தியம்மா. இதெல்லாம் செய்றது தானே” என்றனர் பெண்ணின் பக்கம்.

“பெரியவங்க இல்லை, மறக்கிறது சகஜம் தான்” என்று ரகுராம் சொல்ல, சுற்றியுள்ள உறவுகள் சிரித்துவிட்டனர். ராஜேஸ்வரி வெளியே சிரித்து உள்ளே கடுகடுத்தார்.

பாரதிக்கோ நெஞ்சு நிறைந்து போனது. அண்ணன் மகன் சபைக்கு ஏத்தது போல் மிக பொறுப்பாய் ஒவ்வொன்றாய் செய்ய, அவரின் அகமும், முகமும் மலர்ந்து போனது. அது அவரின் உற்சாக நடையிலும் எதிரொலித்தது.

தணிகைவேல் ரகுராமிடம் சொல்வதை பொதுவாக சொல்வது போல் சொல்ல, ரகுராம் தலை மட்டுமே ஆட்டி கொண்டான். “சரிங்க மாமான்னு  சொன்னா குறைஞ்சு போயிடுவானா?” தணிகைவேல் ஒரு கட்டத்தில் வாய் மூடி கொண்டார்.

சுந்தரம் யார் என்று இதற்குள் தெரிந்து கொண்டு விட்டிருந்த ரகுராம், “பெரியப்பா” என்று முறை சொல்லி அவரை முன்னிறுத்தி கொண்டான்.  அதில் சுந்தரத்திற்கு மட்டுமில்லை தணிகைவேலுக்கும் மகிழ்ச்சி தான்.

ஜனக்நந்தினி நடப்பது எல்லாவற்றையும் கவனித்தபடி நிற்க, வேணியின் பெரிய மகன் ராகேஷ், “அவன்தான் அவனா?” என்று அவளிடம் கேட்டான்.

ஜனக்நந்தினிக்கு அவன் என்றது பிடிக்கவில்லை. “எங்க மாமா அவர். அவன், இவன் சொல்லாதீங்க” என்றாள் நேரடியாக.

“ஓஹ்.. அப்போ நான் யாராம் உனக்கு?” என்று ராக்கி கேட்க,

“கண்ணு.. இங்க வா கொஞ்சம்” என்று பாரதி அவளை அழைத்துவிட்டார். ஜனக்நந்தினி அவனிடம் தலையசைத்து செல்ல, ராக்கி அவளையே பார்த்திருந்தான்.

தட்டு மாற்றியதும், மணப்பெண் ஆர்த்தி புடவை வாங்கி கொண்டு சென்றாள். அடுத்து மணமக்களை ஜோடியாக நிற்க வைத்து, ஆசீர்வாதம் வாங்க செய்தனர்.

அருணகிரி மணப்பெண்ணுக்காக சுத்த பட்டில் நெய்த புடவையை ரகுராம் கொடுக்க,  “இதென்ன புது முறை. இதெல்லாம் செய்ய கூடாது” என்றார் ராஜேஸ்வரி உடனே.

“முறைக்கு கொடுக்கலை. என் அப்பா அவங்களை மகளா நினைச்சு நெய்ததை நான் பொண்ணுக்கு அண்ணனா கொடுக்கிறேன்” என்று கம்பீரமாக சொல்லி, அவர் வாயை ஒரேடியாக அடைத்துவிட்டான்.

“சொந்த பட்டுத்தறியில ஸ்பெஷலா செஞ்சு கொடுக்கிறாங்க. சந்தோஷமா வாங்கிக்கிறதை  விட்டு, இதென்ன சம்மந்தியம்மா?” என்ற பெண்ணின் உறவுகள், மணப்பெண் ஆர்த்தியை வாங்கி கொள்ள செய்தனர்.

ரகுராம் பாரதிக்கும் கொடுக்க, ஜனக்நந்தினி அங்கு வந்தவள், “ம்மா.. அப்பா உங்களை கூப்பிடுறாங்க” என்றாள்.

“இதோ போறேன். நீ இந்த புடைவையை பத்திரமா வை” என்று மகளிடம் கொடுத்து சென்றார்.

ஜனக்நந்தினி அம்மா கொடுத்த புடைவையை வாங்கி கொண்டவள்,  ரகுராமை புருவம் உயர்த்தி பார்த்தாள்.

அவனோ அவள் பார்வையை கவனிக்காதது போல் விலகினான். ஜனக்நந்தினி பொறுமையை இழுத்து பிடித்து கொண்டாள்.

எல்லாம் நல்லபடியே முடியவும் பந்தி ஆரம்பமானது. பாரதி அம்மா வீட்டு உறவுகளை மிகுந்த மரியாதையுடன் கவனித்தார். தணிகைவேலும் மனைவியுடன் நிற்க, வந்திருந்த உறவுகளுக்கு திருப்தி.

பெண் வீட்டினர் உணவு முடியவும் சொல்லி கொண்டு கிளம்பினர்.

இவர்கள் மட்டும் இருக்க, “இப்போ சந்தோஷமா?” என்று பாரதியிடம் கேட்டார் மஞ்சுளா.

“ரொம்ப ரொம்ப சந்தோசம்” என்ற பாரதி, “ரகுராம் எங்க, அப்போவே ஏதோ முக்கியமான போன். பேசிட்டு வரேன்னு போனான்” என்று தேடினார்.

“வந்துடுவார் உன் மருமகர். ஒரேடியா தேடாத” என்று மஞ்சுளா கிண்டலுடன் சிரிக்க, பாரதிக்கும் மலர்ந்த புன்னகைதான்.

“எங்க அம்மாவா இது?” என்று ஜனக்நந்தினி வர,

“உன் அம்மா தான். நல்லா பார்த்துக்கோ மருமகளே” என்றார் மஞ்சுளா.

“யாருக்கு யார் மருமக?” என்று ராஜேஸ்வரி சரியாக வந்து நின்றார். பாரதிக்கு ஏதோ நடக்க போகுது என்று புரிந்து போனது.

Advertisement