Advertisement

அழகியல் 7

அந்த இரவு நேரத்திலும் வாகனங்கள் சாலையை முழுதாக ஆக்கிரமித்திருந்தது. ஊர்ந்து செல்லும் அளவு இல்லை என்றாலும் வண்டிகளின் எண்ணிக்கை அதிகம் இருக்க, ஜனக்நந்தினி தன்னை தொடரும் அளவே ரகுராம் சென்றான்.

அவள் கண்பார்வையில் அவள் முன்னே மிதமான வேகத்தில் சென்றவனை, பெண் நூல் பிடித்தது போல் பின் தொடர்ந்தாள். சிக்கனலில் அவன் பைக் அருகே காரை நிறுத்தியவள், கண்ணாடியை இறக்க, ரகுராம் ஹெல்மெட் கண்ணாடியை உயர்த்தினான்.

“நீங்க சாப்பிடல?” பெண் கேட்க,

“பரவாயில்லை. நான் உன்னை விட்டுட்டு அப்புறம் சாப்பிட்டுக்கிறேன்” என்றவன், சிக்னல் விழவும் பைக்கை கிளப்பினான்.

‘அப்புறமான்னா.. டெஸ்டாரண்ட் எல்லாம் குளோஸ் ஆகிடுமே?’ ஜனக்நந்தினி ஹார்ன் அடித்து அவனை நிறுத்த பார்க்க, ரகுராம் நிற்கவே இல்லை. ஓரிடத்தில் வாகனங்கள் எண்ணிக்கை குறைவாக இருக்க, அவனை ஓவர்டேக் செய்து ஓரங்கட்டினாள்.

ரகுராம், “இப்போ என்ன?” என்றான்.

“நீங்க சாப்பிடுங்க” அவள் சொல்ல,

“எனக்கு தெரியும். நீ அட்ரஸ் சொல்லு. உங்க ஏரியா வந்துட்டோம்” என்றான் அவன்.

பெண் அமைதியாகவே இருக்க, ரகுராம்க்கு மெல்ல கோவம் உதயமானது. ஏதாவது உறவு உரிமை இருந்தாலாவது அதை அவளிடம் காட்டியிருப்பான். ஒன்றும் இல்லை.

“நேரம் போகுது. அட்ரஸ் சொல்லு” என்றான்.

“அந்த ரெஸ்டாரண்ட்ல சாப்பிடுறீங்களா?” என்று ஜனக்நந்தினி கைகாட்டி கேட்டாள்.

மூச்சை இழுத்துவிட்டவன், “டைம் என்னன்னு பார்த்தியா? வீட்டுக்கு போக வேணாமா?” என்று கேட்க,

“அப்படி ஒன்னும் டைம் ஆகிடலை. நீங்க போய் சாப்பிட்டு வாங்க” என்றாள் ஜனக்நந்தினி.

‘இந்த அத்தை என்னதான் பண்றாங்க? பொண்ணு இன்னும் வீட்டுக்கு வரலைன்னா எங்க இருக்கா, என்ன பண்றான்னு எல்லாம் கவனிக்க மாட்டாங்களா?’

“உன் அம்மா எங்க?” என்று அவளிடமே கேட்டும்விட்டான்.

“என் அம்மாவா? அவங்க உங்களுக்கு அத்தைன்னு எனக்கு ஞாபகம்” என்ற பெண்ணின் முகத்தில் இப்போது அப்பட்டமான கோவம்.

இவர்களின் உறவு வேண்டும் அவர் போராடும் போராட்டம் என்ன, இவர் பேசுவது என்ன?

ரகுராம்க்கு அவளின் திடீர் கோவத்தில் சலிப்பே. “அவங்க உன்னோட தானே இருக்காங்க?” என்று கேட்டான்.

“எவங்க” ஜனக்நந்தினி காரை விட்டே இறங்கிவிட்டாள்.

முகம் சிவந்து, மூக்கு விடைத்து இவனை முறைத்து நின்றிருந்தாள். ‘எதுக்கு இப்போ இவ்வளவு கோவமாம்’

ரகுராம் ஹெல்மெட்டை கழட்டிவிட்டவன், தலை முடியை கோதியபடி அவள் காட்டிய ஹோட்டலை பார்த்தான். இவ கிளம்ப மாட்டா போல. பசி வேறு சோர்வை கூட்டியது.

பாக்கெட்டில் இருந்த அவன் போன் அடிக்க, பத்மா. அப்போது தான் அவர் காலையில் ஏதோ பேச வேண்டும் என்றது நினைவுக்கு வந்தது.

“சொல்லுங்கம்மா” என்று எடுத்தான்.

“நீ கூப்பிடுவன்னு பார்த்து தான் நானே கூப்பிட்டேன் தம்பி” என,

“ம்மா.. நான் வெளியில இருக்கேன். நீங்க தூங்குங்க. நான் காலையில கூப்பிடுறேன்,  பேசலாம்” என்று வைத்தவன், பைக்கை இடம் பார்த்து நிறுத்தியபடி “நீயும் வரியா?” என்று அவளிடம் கேட்டான்.

வா’ன்னு கூப்பிட மனசு வருதா பாரு. கஞ்ச மாமா! ஜனக்நந்தினி  முகம் திருப்பி கொண்டாள்.

“சரி கார்ல இரு. நான் வந்துடுறேன்” ரகுராம் சொல்ல, ம்ஹூம் அவள் இன்னும் வாகாக சாய்ந்து நின்றாள்.

“ஒன்னு என்னோட வா. இல்லை கார்ல உட்காரு. இங்க எல்லாம் நிக்க முடியாது” என்று அவன் நகராமல் நிற்க, ஜனக்நந்தினி காரை லாக் செய்தபடி அவனுடன் நடந்தாள்.

ரகுராம் முதலில் சென்று கையுடன், முகமும் கழுவி கொண்டான். கொஞ்சம் புத்துணர்ச்சியாக இருந்தது. முகம் துடைக்க டிஸியூ, கர்சீப் ஒன்றும் இல்லை.

“இந்தாங்க” பெண் ஹாண்ட் பேக்கில் இருந்து குட்டி டவல் போன்ற ஒன்றை நீட்டினாள்.

உயர்தர துணியில், மெலிதாக, நல்ல வாசத்துடன் இருந்தது. அவளின் உபயோகத்திற்கோ? ரகுராம் மறுத்து அவளிடமே கொடுத்தவன், தோள் சட்டையில் முகத்தை துடைத்து கொண்டான்.

ஜனக்நந்தினிக்கு அவன் செயல் அவளை தள்ளி நிறுத்தவது போல் பட்டது. அதன்பின் அவனுடன் செல்ல மனமில்லை.

போயா பெரிய ஆணழகன்!

“நான் கார்ல இருக்கேன்.  நீங்க சாப்பிட்டு வாங்க” என்று காருக்கு வந்துவிட்டாள்.

ரகுராம் தோள் குலுக்கியபடி தோசை ஒன்று சொல்லி சாப்பிட்டவன், அவளுக்கு பால் வாங்கி கொண்டு வந்தான். கண்ணாடி தட்டி கொடுக்க, “எனக்கு வேணாம்” என்றாள்.

“இங்க  ஹைஜீனா தான் இருக்கும்”

“பால் குடிக்க நான் பாப்பா இல்லை”

“அது சொல்லாமலே தெரியும்” என்றவன், பெண்ணின் முறைப்பை டீலில் விட்டு தானே குடித்துவிட்டான். பின்னே வீணாக்க முடியுமா?

“இப்போவாவது அட்ரஸ் சொல்லு” என்று கேட்க,

“இங்கிருந்து எனக்கு போக வழி தெரியும்” என்றாள் அவள் சாதாரணமாக.

அடிப்பாவி! “அப்போ போக வேண்டியது தானே?” என்று கேட்க,

“இதோ போக தான் போறேன்” என்றவள் கிளம்பியும்விட்டாள்.

ரகுராம் ஆயாசத்துடன் தலையாட்டி கொண்டவன், அவள் பின் சென்றான். ஜனக்நந்தினி அவள் அபார்ட்மெண்ட் முன் காரை நிறுத்தி ஹார்ன் அடித்தாள்.

ரகுராம் அவள் பின் நிற்க, ஜனக்நந்தினி காரில் ஒலித்த பாடலை ஹ்ம் செய்தடி அவனை முன் கண்ணாடி வழி பார்த்தாள்.

“இது இருளல்ல.. அது ஒளியல்ல..

இரண்டோடு சேராத பொன்நேரம்..

தலை சாயாதே. விழி மூடாதே..

சில மொட்டுக்கள் சட்டென்று பூவாகும் பெண்ணே பெண்ணே!”

கேட் திறக்க, கண்ணாடி வழியே  பை எனும் விதமாக கையசைத்து கேட்டிற்குள் சென்றுவிட்டாள்.

ரகுராம் அங்கேயே நின்றான். மூடும் கேட்டை பார்த்தான்.

இவளிடம் அதிகளவில் எதிர்பார்ப்பு இல்லை. ஆனால் ஊர்கூட்டி, உறவுகள் சேர்ந்து செய்து வைத்த நிச்சயத்தின் மீது நம்பிக்கை இருந்தது நிச்சயம்.

இப்போது அதுவும் பொய்த்து போனது!

வெறிச்சோடி போயிருந்த சாலையை வெறிக்க பார்த்தான். ஏமாற்றத்தை மொத்தமாக விழுங்கி கொண்டான்.

ஹார்ன் சத்தத்தில் மெல்ல கிளம்பினான். வண்டியின் வேகம் அவன் மனதை போல் ஊர்ந்தது.

‘இந்த அத்தை அப்பா பார்த்த மாப்பிளையையே கட்டியிருக்கலாம்’

‘ச்சு.. ஏண்டா இப்படி? அவங்க விருப்பம். அவங்க வாழ்க்கை அது’

‘நீ முதல்ல உன் வாழ்க்கையை பாரு. இனி மேலாவது மூவ் ஆன் பண்ணு. இப்போவரை அவளுக்குன்னு இருந்தது போதும்’

‘ம்ஹ்ம். சரி தானே. உறுதியான பொண்ணுக்காகன்னு மூணு வருஷம் உண்மையா இருந்துட்ட, இப்போ தான் அந்த உறுதியே இல்லன்னு ஆகி போச்சே’

நெஞ்சும் கொஞ்சம் தடக்கென, ஓரமாக நின்றுவிட்டான். ஹெல்மெட்டை கழட்டி டேங்க் மேல் வைத்து கொண்டான்.

‘செயின் இல்லன்னா இல்லன்னு ஆகிடுமா? கழட்டி வைச்சிருக்கலாம். அறுந்திருக்கலாம். அப்படி நினைக்க முடியலையே’

‘பொருந்தாத நிச்சயம் தானே. போனா இப்போ என்ன?’

நிமிடம் சென்று தானே சுதாரித்து வீடு சென்றடைந்தான். நண்பர்கள் இருவராக இருந்தனர். தன் அறைக்கு சென்றவன், உடை கூட மாற்றாமல் படுத்துவிட்டான்.

மறுநாள் காலையும் அவனுக்கு சீக்கிரமே விடிந்துவிட்டது. மன நமைச்சல். சரியாகிடும். இரண்டு மூணு நாள் போகட்டும். தனக்கே தானே சொல்லி கொண்டு காபி போட்டான்.

நேரம் பார்த்து அம்மாவிற்கு அழைத்தான். “என்னபா சீக்கிரம் எழுந்துட்டியா?” பத்மா கேட்க,

“தூக்கம் போயிடுச்சும்மா. அப்பா எங்க?” என்று கேட்டான்.

“அப்பா இப்போதான் தறிக்கு கிளம்பி போனார் தம்பி. சமையல் முடிச்சு நானும் போகணும்” அம்மா சொல்ல, அப்போது தான் அவருக்கு இன்னும் பணம் அனுப்பாதது நினைவிற்கு வந்தது.

“தம்பி உன் அத்தை நேர்ல வந்திருந்தா. ப்ரவீனுக்கு கல்யாணம் கூடி வந்திருக்கு. அடுத்த வாரம் நிச்சயம் வைச்சிருக்காங்களாம்” என்றார்.

அவளை விட்டு விலக நினைக்கும் போது தானா?

Advertisement