Advertisement

“ப்ரவீன்.. உன் அம்மாவை கொஞ்ச நாளைக்கு பெங்களூர் போக சொல்லு. இங்க வேணாம். கண்ணு நீ உன் அம்மாவை கூட்டிட்டு கிளம்பு ” என்றார் தணிகைவேல் இடையிட்டு.

“ப்பா”

“இல்லை கண்ணு. என்னை கொஞ்ச நாளைக்கு விட்டுடுங்க. கிளம்புங்க” என்ற தணிகைவேல் வெளியே கிளம்பிவிட்டார்.

“போதுமா. இப்போ உனக்கு நிம்மதியா. வேணும் வேணும்ன்னு உன்னை கட்டிக்கிட்டு வந்ததுக்கு அவனை கலங்க வைச்சுட்ட இல்லை” என்று ராஜேஸ்வரி பேச,

“பாட்டி ப்ளீஸ் போதும். என் அம்மாவை பேசணும்ன்னு உங்க சொந்த மகன், பேர பிள்ளைகளை கஷ்டப்படுத்தாதீங்க” ப்ரவீன் கெஞ்சுதலாக சொன்னான்.

“என் அம்மாக்கு அவ்வளவு ஆதங்கமா இருக்கு ப்ரவீன். வீட்டுக்கு பெரியவன்னு உன் பாட்டி  இருக்காங்க. பெத்தவர்ன்னு என் அண்ணா இருக்காங்க. வீட்டு பொண்ணு நான் இருக்கேன்.  எங்களை ஒரு வார்த்தை கேட்காம உன் அம்மா இவ்வளவு பெரிய முடிவு எடுத்திருக்காங்கன்னா யார் கொடுத்த தைரியம் இது?” என்று வேணியும் பேசினார்.

“அத்தை”

“வேணி விடு. என் பேரன், பேத்தி கலங்க கூடாது. நீ வா பாப்பா” என்று பேத்தி கை பிடித்து கொண்டவர், அவள் கண்களை தன்  முந்தானையால் துடைத்தார். “உன் அப்பா கோவம் எல்லாம் கொஞ்ச நாளைக்கு தான். நீ கலங்காத. நான் சீக்கிரம் அவனை சமாதானம் பண்ணி உன் கூட பேச வைக்கிறேன்” என்றார் பாசமாக.

ஜனக்நந்தினி பாட்டி முந்தானையில் முகம் துடைத்து கொண்டவள், “அப்பாவை பார்த்துக்கோங்க பாட்டி. சீக்கிரம் பேச வைங்க” என்றாள் விம்மலுடன்.

“பாப்பா. நான் இருக்கும் போது நீ ஏன் கலங்குற? நான் இருக்கேன். கண்ணை துடை” என்ற ராஜேஸ்வரிக்கும் பேத்தியின் அழுகையில் கண்கள் கலங்கியது.

“என் மகன், பேரன், பேத்தியை கலங்க வைச்சுட்ட இல்லை. உன்னை பார்த்துகிறேன் இரு” என்றார் ராஜேஸ்வரி மருமகளிடம்.

பாரதி ஒருவரை தவிர, மீதி மூவரும் அவருக்கு உயிர். அவர்கள் கலங்கினால் இவருக்கு தாங்காது. “இதுக்காகவே நான் உன்னை மன்னிக்க மாட்டேன்” என்றார் பேத்தி முகம் துடைத்தபடி.

பாரதிக்கு மாமியாரின் வார்த்தைகளை விட, கணவனின் விலகல் தான் அச்சத்தை கொடுத்தது. என்கிட்ட கோவப்பட்டுக்கட்டும். என்னை வெறுக்காம இருந்தா போதும் என்ற வேண்டுதலுடன் பெங்களூர் கிளம்பினார்.

ப்ரவீன்  இருவரையும் அழைத்து கொண்டு கிளம்பினான். அதுவரை தணிகைவேல் வீடு வரவில்லை. ஜனக்நந்தினி அழைத்து அழைத்து ஏமாற்றத்துடன் கிளம்பினாள். ராஜேஸ்வரி தான் பேத்தியை சமாதானம் செய்து வழியனுப்பி வைத்தார்.

ராமமூர்த்தி இரவு அழைக்க, பாரதி சாதாரணமாக பேசி வைத்தார். ப்ரவீனுக்கு அந்த அழைப்பே பிடிக்கவில்லை. அவர்களால் தானே என் வீட்டில் இந்த நிலை என்ற கோவம்.

ராமமூர்த்தி இறுதியாக கேஸ் பற்றி கேட்க, “நான் வக்கீல் கிட்ட சொல்லி வாபஸ் வாங்க சொல்லிடுறேன்ண்ணா” என்று வைத்தார் பாரதி.

ஆனால் அப்படி வாபஸ் வாங்கவில்லை. ராஜேஸ்வரி எல்லா தகவலையும் திரட்டி இருந்தவர், வக்கீலிடம் சொல்லி விட்டிருந்தார். அவர் பாரதி சொன்னதை சொல்ல, “ஏன் என் மருமகளுக்கு அந்த சொத்துல உரிமை இல்லையா?  இருக்கட்டும்” என்றார் அவர்.

அருணகிரி வீட்டில் காத்திருந்து, இறுதியாக பத்திரிக்கை வைக்க கிளம்பி தணிகைவேல் வீடு வந்தனர். பாரதி பெங்களூர் சென்ற விஷயமே அப்போது தான் அவர்களுக்கு தெரிந்தது. ராமமூர்த்தி விழித்தார்.

தணிகைவேல் எதுவும் சொல்லாமல் பத்திரிக்கை வாங்கி வைத்து கொள்ள, அருணகிரி தம்பதி, ராமமூர்த்தி தம்பதி, பெரியப்பா எல்லாம் அமைதியாக இருந்தனர்.

உபசரித்த காபியை ராஜேஸ்வரி பார்வையில் கசப்பாக விழுங்கி வைத்தனர். தணிகைவேல் பேசவே இடம் கொடுக்கவில்லை. ப்ரவீன் தான் அம்மாக்காக வீடியோ கால் செய்து கொடுத்தான்.

பாரதி மகிழ்ச்சியுடன் பேச, இவர்களும் அவர் நன்றாக இருப்பதில் திருப்தியானார்கள். பெரியப்பா தான். “அந்த கேஸ் இன்னும் வாபஸ் ஆகலை பாரதி” என்றார்.

அவர் அதிர்ந்து போனவர், “நான் அன்னைக்கே சொல்லிட்டேனே பெரியப்பா” என்றார்.

“நான் தான் வாபஸ் வாங்க வேணாம்ன்னு சொன்னேன்” என்றார் ராஜேஸ்வரி.

“ம்மா.. ஏன்” தணிகைவேல் முகம் சுளித்து கேட்டார்.

“இருக்கட்டும்ப்பா. அவ அம்மா வீடு சொத்துன்னு அவளுக்கு இருக்கிறது நல்லது தானே. நாம என்ன நம்ம அந்தஸ்துக்கு தகுந்த மாதிரியா கேட்கிறோம். அப்படியே கேட்டாலும் அவங்களால கொடுக்க முடியாதுங்கிறது வேற விஷயம். அதுக்காக அவ உரிமையை கூட ஏன் விட்டு கொடுக்கணும்” என்றார் ராஜேஸ்வரி.

“அத்தை.. அந்த இடத்தை விலை பேசி தான் என் அண்ணா பொண்ணுக்கு  கல்யாணம் பேசியிருக்கு. ப்ளீஸ். இப்படி பண்ணாதீங்க அத்தை” என்றார் பாரதி கலக்கத்துடன்.

“உனக்காக தான் நான் சொல்றேன் பாரதி. என்னதான் நீ சும்மா எங்க வீட்டுக்கு வந்து இங்க ராணி மாதிரி இருந்தாலும், பிறந்த வீடு சீர்ன்னு ஒன்னு வேணாமா. அது கால் காசா கூட இருந்துட்டு போகட்டுமே”

“அத்தை”

“இது தான் முடிவு பாரதி. வக்கீல் கேஸ் நடத்துவார்” என்றார் ராஜேஸ்வரி உறுதியாக.

அவர் கையில் கிடைத்திருக்கும் குடுமியை விடுவாரா?

“கேஸ் எதுக்குங்க. நானே என் தங்கச்சிக்கான பங்கை கொடுத்துடுறேன்” என்றார் அருணகிரி பளிச்சென.

“அதெல்லாம் வேணாம் விடுங்க” தணிகைவேல் சொல்ல,

“இருக்கட்டும் மாப்பிள்ளை. அம்மா வீடுங்கிற உரிமையை அவளுக்கு நான் கொடுக்கிறது தான் முறை. உங்களுக்கு தோதுப்பட்ட நாள் சொல்லுங்க. எழுதிக்கலாம்” அருணகிரி சொல்ல, பாரதி நிலைய சொல்லவே வேண்டாம்.

அவர் இத்தனை வருடம் ஆசைப்பட்ட, ஏக்கப்பட்ட அம்மா வீடு துணை கிடைக்கிறது. ஆனால் அதில் மகிழ முடியவில்லை. அவர்கள் நிலை இவரை தவிக்க வைத்தது.

என் ராசியே இப்படி தானா?

“அத்தை நான் பண்ணது தப்பு. என்னை மன்னிச்சுக்கோங்க. அந்த கேஸை வாபஸ் வாங்க விடுங்க” என்றார் பாரதி தன் நிலையில் இருந்து இறங்கி.

“முடியாது” ராஜேஸ்வரி சொல்லும் நேரம்,

“ஏன் பாரதி மன்னிப்பு எல்லாம். அமைதியா இரு” என்றார் அருணகிரி கண்டிப்புடன்.

“இத்தனை வருஷம் யார் என்ன பேசினாலும் நான் உன்னை விட்டிருக்க கூடாது. அது தானே உன்னை என்னவேணா பேசலாம்ங்கிற தைரியத்தை மத்தவங்களுக்கு கொடுக்குது. உன் அப்பா சொத்து கால் காசா இருந்தாலும் உனக்கு வரட்டும். என்ன தான் உடம்பு மொத்தமும் சந்தனத்தையே பூசினாலும், நெத்தியில வைக்கிற குங்குமம் தான் அழகு. அப்படி தான் உன் அம்மா வீடு உனக்கு” என்றார் அருணகிரி தெளிவாக.

பாரதி கண்களில் கண்ணீர் வழிந்துவிட்டது. விம்மிவிட்டார் அவர். தணிகைவேல்க்கு நடப்பதில் அழுத்தம் அதிகரித்தது.

ராஜேஸ்வரிக்கு பொறுக்கவில்லை. “காலம் கடந்து திடீர்ன்னு அம்மா வீடு வந்ததுல ஏன் அழுகை. சந்தோஷமா இரு பாரதி” என்றார் குத்தலாக.

“என் அப்பா மனசும், என் தங்கச்சி ஏக்கமும் என் பொண்ணு கல்யாணம் நடக்கும் போது தானே புரியுது. காலம் அப்படி எல்லாம் ஒன்னும் கடந்து போயிடலை பாரதி. நீ கலங்காம இரு. கல்யாணத்துக்கு மாப்பிள்ளையோட, உன் குடும்பத்தோட வந்து சேர். நாங்க காத்திருப்போம்” என்ற அருணகிரி எழுந்து விட, அவரை பின்பற்றி அவர் குடும்பமும் கிளம்பியது.

ப்ரவீன் வாசல் வரை வந்து அவர்களை வழியனுப்பி வந்தான். “நான் வக்கீல்கிட்ட சொல்லி கேஸ் வாபஸ் வாங்க சொல்றேன்ம்மா” என்று தணிகைவேல் சொல்ல,

“சொல்லு. அதான் அவங்களே எழுதுறேன்னு சொல்லிட்டாங்களே” என்று சென்றார் ராஜேஸ்வரி.

தணிகைவேல் பெருமூச்சுவிட்டவர் ப்ரவீன் வரவும், “உன் அம்மாகிட்ட பேசு. அந்த இடம் எல்லாம் வேணாம். வித்து கல்யாணம் பண்ண சொல்லு” என்றார்.

ப்ரவீனுக்கு மகிழ்ச்சி. அம்மாவிடம் உடனே பேச, அவருக்கும் நிம்மதி தான் என்றாலும், அண்ணா சொல்லிவிட்ட பின் அதை மாற்ற மாட்டாரே?

அப்படியும் பாரதி ராமமூர்த்தி மூலம் வெகுவாக முயன்றார். அருணகிரி அவர் பிடியில் நின்றுவிட்டார். “அப்போ கல்யாண செலவு” என,

“ரகுராம் அவன் ஆபிஸ்ல லோன் வாங்கியிருக்கான். கூட நானும் கொடுத்தேன் பாரதி. சமாளிச்சுக்கலாம்” என்றார் ராமமூர்த்தி.

பாரதிக்கு தான் ஏற்க முடியவில்லை. தன் விரல் தன் கண்ணை குத்தினால் பரவாயில்லை. அவர்களை குத்திவிட்டதே.

திருமண நாள் நெருங்க, பாரதி மகன் மூலம் கணவரிடம் பேசினார். ராஜேஸ்வரி அப்போது தான் வயிற்று வலி என்று மருத்துவமனையிலே தங்கிவிட்டார்.

“நீயும் உன் அம்மாவும் மட்டும் போய்ட்டு வாங்க” என்றார் தணிகைவேல்.

ஜனக்நந்தினிக்கு அனுமதி இல்லை. அவள் கேட்கவும் இல்லை. அப்பா தன்னிடம் பழையபடி பேசினால் போதும் என்றிருந்தாள் பெண்.

ப்ரவீன் மட்டும் அம்மாவுடன் முதல் நாள் சென்றான். அருணகிரி வீட்டினரிடம் ஜோரான வரவேற்பு. பாரதிக்கு முதலில் கலக்க முடியவில்லை. அமைதியாக நிற்க, மஞ்சுளா தான் இழுத்துவிட்டார். பத்மாவிற்கு வருத்தம் இருந்த போதும், மறைத்து கொண்டார்.

“மருமக வரலையா?” என்று ஜனக்நந்தினியை கேட்க,

“அவளுக்கு எக்ஸாம். அதான் வர முடியல” என்றார் பாரதி.

அவள்  வர மாட்டாள், வர விட மாட்டார்கள் என்று ரகுராம்க்கு தெரியும் என்பதால் தோள் குலுக்கி சென்றுவிட்டான்.

ப்ரவீனுக்கு அவன் எதாவது கேட்பான், முயற்சி செய்வான் என்று அவனையே கவனித்திருக்க, ரகுராம் அவளை பற்றி கடைசிவரை பேசவே இல்லை.

பாரதியிடம் கூட கேட்கவில்லை என்பதில் பாரதிக்கு சற்று வருத்தம் தான். “என் மகளை பிடிக்கலையா?” என்று.

சட்டென ஒரு பயம் வேறு. “ஒருவேளை வேற யாராவது அவன் மனசுல இருக்காங்களா. நான் அவசர பட்டுட்டேனா?” என்று.

குறித்த முகூர்த்தத்தில் அனுஷா திருமணம் நல்ல முறையில் நடந்தேறியது. அவர்கள் அளவில் எந்த குறையும் வைக்காமல் பேசியபடி எல்லாம் செய்துவிட்டனர். விரும்பியவனையே கட்டிக்கிட்ட ஆனந்தம் அவள் முகத்தில்.

பாரதி அண்ணன் மகளுக்காக ஒரு நகை செட் கொடுத்தார் தனியாக. அனுஷா பதறி மறுக்க, வீட்டினரும் மறுக்கவே பார்த்தனர். அந்த வீட்டின் பணத்தில் வாங்க மனமில்லை.

பாரதி விடாபிடியாக நிற்க வேறு வழி இல்லாமல் வாங்கி கொண்டனர். அனுஷா புகுந்த வீடு கிளம்ப, பாரதியும் கிளம்பிவிட்டார். ராஜேஸ்வரி தான் விடாமல் அழைத்து கொண்டிருந்தாரே.

ரகுராம் அவர்களை  வழியனுப்ப வர, பாரதி தேங்கி நின்றவர், “உனக்கு அத்தை பண்ணதுல மனசு கஷ்டமா, பிடிக்கலையா. உன் மனசுல வேற யாராவது?” என்று தயங்க,

“இப்போவாவது கேட்க தோணுச்சே” என்றான் ரகுராம்.

பாரதி அதிர, பிரவீன் நல்லதா போச்சு என்று நினைத்தான்.

“உங்க பொண்ணுகிட்டயாவது இதை கேட்டீங்களா?” என்று ரகுராம் கேட்க,

“அவ மனசுல யாரும் இல்லைன்னு எனக்கு தெரியும்” என்றார் பாரதி.

“நல்லது” ரகுராம் சொல்ல,

“நீ முதல்ல நான் கேட்டதுக்கு பதில் சொல்லு” என்று பாரதி கேட்டார்.

“நான் போட்ட செயின் அவ கழுத்துல இருக்கிற வரை, அவ தான் என் வாழ்க்கையிலும்  இருப்பா” என்றான் ரகுராம்.

பாரதியுடன் நிறைவுடன் கிளம்பினார்.

Advertisement