Advertisement

அழகியல் 5

நிச்சய வீடு இப்போது வெறிச்சோடி போனது. பாரதி கிளம்பவும், சொந்தங்களும் ஒவ்வொருவராக கிளம்பி விட்டிருந்தனர். ராமமூர்த்தி, மஞ்சுளா தவிர.

பெரியப்பா மட்டும் இறுதியாக நின்று, “இரண்டு நாள் கழிச்சு பாரதியை போய் பாருங்க. முடிஞ்சா நானும் கூட வரேன்” என்றிருந்தார்.

“போகணும் தான் பெரியப்பா. அனுஷா கல்யாண பத்திரிக்கை வைக்கணுமே” என்றார் அருணகிரி.

“சரியா போச்சு. அதை வைச்சு போய் பார்த்துட்டு வந்துடலாம். அங்க என்ன நிலவரம்ன்னு தெரிஞ்சுக்கணும்” என்று கிளம்பினார்.

அருணகிரி சிறிது நேரம் யோசித்திருந்தவர், “மூர்த்தி” என்று தம்பியை அழைத்தவர், “நைட் ஒரு எட்டு மணி போல பாரதிகிட்ட போன்ல பேசிடு” என்றார்.

ராமமூர்த்தியும் அதே எண்ணத்தில் தான் இருந்தார் என்றாலும், அருணகிரி சொல்வதில் மகிழ்ச்சியே. “சரிண்ணா சரிண்ணா” என்றார்.

அருணகிரி சில நொடி மௌனத்திருந்தவர், “நானும் நிறைய தப்பு பண்ணிட்டேன். என்கூட பிறந்தவ இந்தளவு இறங்கிறதுக்கு நானும் ஒரு காரணமாகிட்டேன். அப்பாக்காகன்னு நினைச்சாவது அவளை நான் விட்டிருக்க கூடாது” என்றார் வருத்தத்துடன்.

“நாம முயற்சி பண்ணோம்ங்க. அந்தம்மா பேசின பேச்சுல தானே”

“பத்மா. அவங்க பேசினா, அவ என்னோட பிறப்பு. நான் தானே அவளுக்காக நின்னிருக்கணும். எங்களை மீறி மாப்பிள்ளையை கல்யாணம் செய்றான்னு எனக்கும், அம்மாக்கும் ஒரு கோவம். அதை இப்படி காமிச்சுட்டோம். அவ்வளவு தான்” அருணகிரி சொல்ல, பத்மா அமைதியாகிவிட்டார்.

“இப்போ அந்தம்மா அங்க என்ன ஆட்டம் கட்டி ஆடுறாங்களோ தெரியல. முன்னவாவது மாப்பிள்ளை சப்போர்ட் கொஞ்சம் இருக்கும். இப்போ அவரும் கோவமா தான் இருக்கார். என்ன பண்றா, எப்படி சமாளிக்கிறான்னு  தெரியல” என்றார் மஞ்சுளா கவலையாக.

“அப்படி ஏன் இதை எல்லாம் செய்யணும்? வந்தது ஒரு நாள். அந்த ஓர் நாள்லயும் ஒரு குட்டி பூகம்பத்தையே உருவாக்கிட்டு போயிட்டாங்க. அவங்களுக்கும் சரி, நமக்கும் சரி இதனால எந்த சந்தோஷமும் இல்லை” என்றாள் அனுஷா.

“என்ன பேசுற நீ. பாரதி மனசு உனக்கு இப்போ புரியாது. இந்த வீட்டை விட்டு நீ கல்யாணம் பண்ணிட்டு போன பின்னாடி தான்  புரியும்” என்றுவிட்டார் மஞ்சுளா.

“சித்தி. நான் கோவமா ஏதும் சொல்லலை. அவங்களுக்கும் இப்போ அங்க கஷ்டம் தானே” அனுஷா சொல்ல,

“முன்ன விட இது அவளுக்கு கஷ்டமா இருக்காது. அம்மா வீடு அவளுக்கு ஒரு நாள்ன்னாலும் துணை நின்னிருக்கு. சமாளிப்பா” என்றார் ராமமூர்த்தி.

“சித்தப்பா நான் அந்த அர்த்தத்துல”

“க்கா.. விடு. நாம இப்போ வேற முக்கியமான விஷயம் பேசணும்” என்றான் ரகுராம்.

எல்லோரும் அவனை கேள்வியாக பார்க்க, “அந்த கேஸ் பத்தி நாம அத்தைகிட்ட பேசல. அதை சரி செய்யாம நாம இடத்தை வாங்கினவர்கிட்ட பேச முடியாது” என்றான்.

அருணகிரி தங்கை செய்ததில் இதை சுத்தமாக மறந்திருந்தவர், இப்போது தான் திடுக்கென விழித்தார். “என்ன தம்பி பண்றது இப்போ” என்றார்.

“நாம எதுவும் பண்ண முடியாதுப்பா.. அவங்க கேஸ் வாபஸ் வாங்கினா தான்”

“இப்போ அவளுக்கு அங்க என்ன சூழ்நிலையோ. இதை பேச முடியுமான்னு தெரியலையே” என்றார் ராமமூர்த்தி.

“என்ன இப்படி சொல்றீங்க. அப்போ என் பொண்ணு கதி? அவ கல்யாணம்” பத்மா கொஞ்சம் கோவமாகவே கேட்டார்.

அனுஷா திருமணத்திற்கு இன்னும் ஓரிரு வாரங்களே தான் உள்ளது. நகை, புடவை, மண்டபம் என்று எல்லாம் பார்க்க வேண்டுமே. பணம் இல்லாமல் எதையும் செய்ய முடியாத நிலை.

“அண்ணி கோவப்படாதீங்க. நான் நைட் அவகிட்ட பேசும் போது இது பத்தி பேசுறேன்” என்றார் ராமமூர்த்தி.

“சரி நீங்க பார்த்து சொல்லுங்க. நான் நைட் சென்னை கிளம்புறேன். அப்புறம் அக்கா கல்யாணத்துக்கு லீவ் கிடைக்க கஷ்டமாகிடும்” ரகுராம் சொன்னவன், கிளம்பும் முன் சித்தப்பாவிடம் தனியே, பாரதி போன் நம்பரை வாங்கி கொண்டான்.

பாரதி குடும்பம் இங்கிருந்து அவர்கள் வீடு சென்று சேருவதற்குள் வேணி அங்கு வந்துவிட்டிருந்தார். ராஜேஸ்வரி போனில் சொன்ன செய்தியில் கொதித்து போயிருந்தார் அவர்.

பாரதி உள்ளே நுழைந்தும் நுழையாமலும், “என்ன அண்ணி இது” என்று ஆரம்பித்துவிட்டார்.

“என் பையனுக்கு தான் ஜானுன்னு உங்களுக்கு தெரியும் இல்லை. யாரை கேட்டு நீங்க உங்க அண்ணன் மகனுக்கு அவளை நிச்சயம் பண்ணீங்க” என்று கேட்டார்.

தணிகைவேல் தங்கையை கடந்து அறைக்குள் செல்ல போக, “அண்ணா” என்று அவரை நிறுத்தினார் வேணி. “எனக்கு நியாயம் சொல்லிட்டு போங்கண்ணா. உங்க பொண்டாட்டி பண்ணது சரியா?” என்று கேட்க,

“அவ பொண்ணுக்கு அவ பண்ணியிருக்கா. இதுல நான் என்ன சொல்லணும் வேணி” என்றார் தணிகைவேல்.

பாரதிக்கு கணவனின் வார்த்தைகள் குத்தியது. வலிக்கவும் செய்தது. நான் தவறு தானே என்று ஏற்று கொண்டார்.

“ப்பா” என்று மகள் அப்பாவின் கை பிடிக்க,

“நீ ஏன் கண்ணு என்கிட்ட சொல்லலை. உனக்கும் நான் வேண்டாமா” என்றார் மகளிடம்.

அவ்வளவு செல்லம். மகள் என்றால் உயிர். மகளுக்கும் அப்பா அப்படியே. அவரின் சிவந்த கண்கள் மகளுக்கு கண்ணீரை கொடுத்தது. “ப்பா” என்று அவரின் நெஞ்சில் சாய்ந்து கொண்டாள்.

செய்கையில் காயப்படுத்திவிட்டு, வார்த்தையால் சமாதானம் சொல்ல மகளுக்கு வரவில்லை. தணிகைவேல் மகளை விலக்க பார்க்க, “நோப்பா. ப்ளீஸ்” என்று மகள் அவரை விடாமல் பிடித்து கொண்டாள்.

அவரின் ஒதுக்கம் அவளால் தாங்க முடியாது. “என்னை கொஞ்ச நேரம் தனியா விடு கண்ணு” தணிகைவேல் சொல்ல,

“ம்ஹூம். நானும் உங்களோட இருப்பேன்” என்றாள் மகள்.

“கண்ணு பெரிய விஷயத்துல அப்பாவை ஒதுக்கி வைச்சுட்டு, இது எல்லாம் எதுக்கு கண்ணு” என்றார் தந்தை ஊசியாய் குத்தி.

மகளின் கண்ணீர் அதிகரித்தது. அவரின் நெஞ்சு சட்டையிலே துடைத்து கொண்டவள், “உங்களோட தான் இருப்பேன்” என்றாள்.

தணிகைவேலுக்கு மகளிடம் கத்தி, கோவப்பட்டு எல்லாம் பழக்கம் இல்லை. “என்னை உன்கிட்ட கோவப்பட வைச்சுடாத கண்ணு” என்றார் கோவத்தை அடக்கி.

“கோவப்பட்டுக்கோங்கப்பா. நான் தப்பு தானே” என்றாள் மகள்.

“கண்ணு”

“ப்பா ப்ளீஸ்” மகள் நகர மாட்டாள் என்பதில் தணிகைவேல் கண்களை வேதனையுடன் மூடி திறந்தார்.

“பாப்பா. இதெல்லாம் சரிதான். ஆனா நீ பண்ணதுக்கு என்ன பதில் சொல்ல போற” என்றார் ராஜேஷ்வரி பேத்தியிடம்.

அவளிடம் பதில் இல்லை. அம்மாக்காக என்று சொல்லி இன்னும் பிரச்சனையை கூட்ட விரும்பவில்லை. அப்பா கையை இறுக்கமாக பிடித்தபடி, அமைதியாக இருந்தாள்.

“பாப்பா உன்கிட்ட தான் கேட்கிறேன். அப்பா, பாட்டி ஞாபகம் உனக்கு வரவே இல்லையா. எங்களை ஒரு வார்த்தை கூட கேட்காம  பெங்களூர்ல இருந்து கிளம்பி ஊருக்கு போயிருக்க நீ”

ஜனக்நந்தியினியிடம் மௌனம்.

“பாப்பா நீயும் உன் அம்மா போல அமைதியா இருந்து சாதிக்க நினைக்காத. எனக்கு பதில் வேணும்” என்று ராஜேஸ்வரி அதட்டி கேட்க,

“சாரி பாட்டி” என்றாள் பேத்தி.

“பாட்டி அவளை எதுவும் கேட்காதீங்க. நான் தான் அவளை வர சொன்னேன்” என்றான் ப்ரவீன். தங்கையின் கண்ணீர் அவனை வருத்தியது.

“அண்ணனும், தங்கச்சியும் சேர்ந்து உன் அம்மாவை விட்டு கொடுக்க கூடாதுன்னு நினைக்கிறீங்க இல்லை, அப்போ நாங்க எல்லாம்” ராஜேஸ்வரிக்கு முதல் முறையாக தொண்டை கமறிவிட்டது.

“என்னதான் எல்லாம் உன் ராஜ்ஜியமா இருந்தாலும் என் பசங்க எனக்கு தான்னு காமிச்சுட்ட இல்லை” என்றார் மருமகளிடம் ஆத்திரமாக.

“ம்மா. அவங்க இதை மனசுல வைச்சு தான் இத்தனை வருசமா அமைதியா இருந்திருக்காங்க. நாம தான் ஏமாந்து போயிட்டோம்மா” என்றார் வேணி.

தணிகைவேலுக்கு அங்கு மனைவி முன் நிற்கவே பிடிக்கவில்லை.  அறைக்குள் சென்றுவிட்டார். உடன் மகளும்.

“என் அண்ணன் மகளை என் மகனுக்கு கட்டணும்ன்னு எவ்வளவு ஆசை வைச்சிருந்தேன். இப்படி பண்ணிட்டாங்களேம்மா?” என்று வேணி மூக்கை உறிஞ்ச,

“நீ எதுக்கு வேணி அழுற? நடப்பதை நடக்கும் போது பார்த்துக்கலாம்” என்றார் ராஜேஸ்வரி.

அவர் சொன்ன அர்த்தம் எல்லோருக்கும் புரிய, பாரதிக்கு திக்கென்றானது. அதை பார்க்கவும் ராஜேஸ்வரிக்கு திருப்தியானது.

ப்ரவீன் என்னடா இது என்று அம்மாவை பார்த்தான். “ப்ரவீன்.. போதும். அம்மா பின்னாடி சுத்தினது போதும். போய் பொழைப்பை பாரு” என்றார் ராஜேஸ்வரி பேரனிடம்.

அவன் செல்லும் போது அம்மாவையும் தன் அறைக்கு அழைத்து சென்றுவிட்டான். நின்றால் நிச்சயம் வார்த்தைகளால் குதறிவிடுவர். பாரதியை கோவமாக பார்த்த அம்மாவும், மகளும் அடுத்து என்ன என்று பேச ஆரம்பித்துவிட்டனர்.

அன்றய நாள் முழுதும் ப்ரவீன் போனிலே அலுவலக வேலையை பார்த்து கொண்டவன், மாலை போல அம்மாவுடன் அப்பாவை தேடி சென்றான். உணவு அவரவர் அறைக்கு வந்துவிட, அப்பாவும் மகளும் சாப்பிட்டதாக தெரியவில்லை.

தணிகைவேல் மெத்தையில் அமர்ந்திருக்க, அவரின் கையை பற்றியபடி மகள் நல்ல தூக்கம். பாரதி அறைக்குள் வரவும் தணிகைவேல் முகம் பாறையாகி போனது.

“பர்வீன் உன் அம்மாவை கொஞ்ச நாளுக்கு இங்க வர வேணாம்ன்னு சொல்லு” என்றார் மகனிடம்.

“என்னங்க”

“ப்ரவீன்” என்றவரின் கத்தலில் பாரதிக்கு தூக்கி போட்டது. மகள் விழித்து கொள்ள, ராஜேஸ்வரி, வேணியும் கூட அங்கு வந்துவிட்டனர்.

“அவ.. அவ ஒரு வார்த்தை கூட என்கிட்ட பேச கூடாது. நான் அவளை பார்க்கவே கூடாது” என்றார் தணிகைவேல் ஒற்றை விரல் நீட்டி கோவமாக.

பாரதி கண்கள் கண்ணீரை சிந்த, மகனும், மகளும் அப்பாவின் கோவத்தில் மிரண்டு போனார்கள்.

“என் மகனை உங்க ஊர் முன்னாடி அசிங்கப்படுத்திட்டு நீ எதுக்கு பாரதி அழுற?நல்லா சந்தோஷமா இரு. நினைச்சதை சாதிச்சுட்டு இல்லை வந்திருக்க” என்றார் ராஜேஸ்வரி பல்லை கடித்து.

“பாட்டி ப்ளீஸ்” ப்ரவீன் சொல்ல,

“என்னடா ப்ளீஸ். அவ தான் சொன்னான்னா உங்களுக்கு எங்க போச்சு புத்தி. நம்ம குடும்ப மரியாதை, அந்தஸ்து தெரியாது. உங்களுக்கு சொல்லி கொடுத்து  வளர்க்கலை நாங்க. எங்க வேணும்ன்னாலும் காலை வைச்சிடறதா. அங்க என்ன இருக்குன்னு தெரியாம. சந்தனமா, சா”

“அத்தை” பாரதி குரல் உயர்ந்து தான் விட்டது.

“என்ன உன் அம்மாவ வீட்டை சொல்லவும் புதுசா கோவம் எல்லாம் வருது”

“என் மகளுக்கு முதல் உரிமையுள்ள இடத்துல தான் அவளுக்கு பேசியிருக்கேன்” என்றார் பாரதி.

Advertisement