Advertisement

அழகியல் 4

பெண் வந்துவிடவும், நிச்சய ஏற்பாடுகள் சூடு பிடித்தது. நல்லநேரம் காலையிலே குறித்திருந்தனர்.

பாரதி மகளை தனியே அழைத்து சென்றவர், இப்போதிருக்கும் நிலையை சொன்னார். உடன் தன் மனதையும், ஆசையையும் வெளிப்படுத்தினார்.

“உன் மனசுல யாரும் இல்லைன்னு எனக்கு தெரியும் கண்ணு. அதுக்காக நான் பண்றது  சரின்னு ஆகிடாது. எனக்கு வேற வழி இல்லை. உன் அண்ணாகிட்ட தான் முதலில் இருந்து பேசி வைச்சிருந்தேன். அவனும் எனக்காக சரி சொன்னான். ஆனா இங்க சூழ்நிலை வேற மாதிரி ஆகிடுச்சு. அதான் உன்னை என் அண்ணன் மகனுக்கு கேட்டுட்டேன்” என்றார். அவரின் குரலில் மகள் என்ன சொல்வாளோ என்ற பதைப்பும் இருந்தது.

“ம்மா. நைட்டே நான் அண்ணன்கிட்ட எல்லாம்  கேட்டு தெரிஞ்சுகிட்டேன். எனக்கு புல் பிளாங்க். அப்பா, பாட்டிக்கு தெரியாம பண்றது எனக்கு சரியா படலை. அவங்ககிட்ட பேசி”

“இல்லை இல்லை கண்ணு. உன் பாட்டி கண்டிப்பா இதுக்கு ஒத்துக்கவே மாட்டாங்க” பாரதி வேகமாக சொன்னார்.

“அப்பாகிட்ட”

“அவர்கிட்ட பேசுற நேரம் இப்போ நமக்கு இல்லை கண்ணு. எனக்காக நீ இதை செய்வன்னு ஒரு நம்பிக்கையில தான் பேசிட்டேன்”

“அப்போ பாப்பாக்கு சம்மதம் இல்லைன்னா இதை நிறுத்திடுவீங்களாம்மா?” மகன் கேட்டு வைத்தான்.

“உனக்கு அப்படியென்ன என் அம்மா வீடுன்னா இளக்காரமா போயிடுச்சு. உன் அம்மாவும் இங்க பிறந்து வளர்ந்தவ தான் மறந்திடாத” என்றார் பாரதி கோவமாகவே.

“ம்மா.. நீங்க பிறந்து வளர்ந்தது எல்லாம் ஓகே தான். அதுக்காக பாப்பாவை இங்க கொடுக்க நினைக்கிறது எல்லாம் டூ மச்”

“அவ என் பொண்ணு ப்ரவீன். அவளுக்கு இந்த வசதி வாய்ப்பு எல்லாம் பெருசா தெரியாது”

“யாரு இவளுக்கா. பாருங்க இப்போவே எப்படி இருக்கான்னு” என்று சவுகரிய குறைவால் சோர்ந்திருத்தவளை காட்டி கேட்டான்.

“என்ன கண்ணு அப்படியா, உனக்கு இங்க பிடிக்கலையா?” பாரதி மகளிடம் கவலையாக கேட்டார்.

“ம்மா. நீங்க என்னை கேட்டா எனக்கு உண்மையிலே தெரியல. ரொம்ப அவசர படுறீங்கன்னு மட்டும் தான் எனக்கு தெரியும்”

“என்ன கண்ணு அவ்வளவு சொல்றேன். திரும்ப திரும்ப இதையே சொல்ற” எங்கே மகள் மறுத்துவிடுவாளோ என்று கலங்கினார் பாரதி.

“ம்மா. ஓகே. நடக்கிறது நடக்கட்டும். நீங்க சொல்லிட்டீங்க. விடுங்க. பார்த்துக்கலாம்” என்றாள் மகள் அண்ணனிடம் பேசியதை வைத்து.

“பார்த்துக்கலாம்ன்னா என்ன கண்ணு சொல்ற நீ” பாரதி மகளை கூர்மையாக பார்த்தார்.

“ம்ப்ச் ம்மா. அவ தான் ஓகே சொல்றா இல்லை, நீங்க நடக்கிறதை பாருங்க. டைம் ஆச்சுன்னு ஆளுங்க கேட்டுட்டு இருக்காங்க பாருங்க” என்றான் ப்ரவீன்.

 பாரதி பிள்ளைகளை சந்தேகமாக பார்த்து வெளியே சென்றார். அவரின் கையில் பெண்ணுக்கான புடவை கொடுத்து,  “பிளவுஸ்க்கு தான் என்ன பண்ண  தெரியல” என்றார் மஞ்சுளா.

“ம்மா. சேரி கண்டிப்பா நோ. என்கிட்ட இருக்க சுடியே போட்டுகிறேன்” என்றாள் மகள்.

“சரி இதை சபையில வைச்சு கொடுத்துக்கலாம். நீங்க கிளம்பி வாங்க” என்று மஞ்சுளா சென்றார்.

பாரதி மகள் குளிக்க ஏற்பாடு செய்து, இவர்களும் குளித்து கிளம்பினர்.

அங்கு ரகுராம்க்கு வேஷ்டி, சட்டை வர அவன் மறுத்து பேண்ட், ஷர்ட்டில் நின்றான். “என்ன தம்பி” என்று பெரியப்பா கேட்க,

“இதுவே போதும், சும்மா இருங்க பெரியப்பா” என்றுவிட்டான் அவன்.

பத்மா தான் என்ன செய்ய என்று கூட தெரியாமல் அமைதியாக நிற்க, அருணகிரி அதற்கு மேல். யாருக்கோ நிச்சயம் என்பது போல் இருந்தார்.

பாரதி வர, “இவ்வளவு தைரியம் உனக்கு எங்கிருந்து வந்துச்சு பாரதி?” என்றார் அருணகிரி முதல் முறையாக தங்கையிடம் வாய் திறந்து.

ராமமூர்த்தி ஏதோ பேச வர, “அவ பதில் சொல்லட்டும்” என்றார் அண்ணன் கட்டளையாக. “அவ மாமியார் எப்படின்னு நல்லா தெரிஞ்சும் இந்தளவு செய்ய சொல்லுதா அவளை” என்றார் கோவமாக.

“அருணகிரி இப்போ எதுக்கு இந்த பேச்சு எல்லாம்” மாமா முறையில் உள்ளவர் சொல்ல,

“என்ன பேசுறீங்க மாமா.. அவ வீட்டு ஆளுங்களுக்கு தெரியாமல் அவ இதை எல்லாம் பண்ணிட்டிருக்கா. நீங்களும் அவ சொல்றதுக்கு எல்லாம் ஆமாஞ்சாமி போட்டுட்டு இருக்கீங்க. நாளைக்கு இதனால ஒரு பிரச்சனைன்னா அவதான் கஷ்டப்படணும். நானோ, நீங்களோ இல்லை” என்றார் அருணகிரி.

ப்ரவீன் வந்தவன் இதை கேட்டு மாமாவை மெச்சுதலாக பார்த்தான். “நான் சமாளிச்சுப்பேன்” பாரதி சொல்ல,

“இத்தனை வருஷம் சமாளிச்ச மாதிரியா?” அருணகிரி கேட்க,

“இத்தனை வருஷம் இல்லாம உங்களுக்கு என்ன என்மேல புதுசா அக்கறை எல்லாம்?” பாரதியும் பேச,

“என்ன பாரதி. அண்ணா பேசினா நீயும் கூட பேசுவியா?” ராமமூர்த்தி தங்கையை கண்டித்தார்.

“நான் பேசல. அவரையும் பேச வேண்டாம்ன்னு சொல்லுங்க” பாரதி சொல்ல,

“நான் பேச வேணாம். ஆனா என் மகன் மட்டும் உனக்கு மருமகனா வேணுமா?” அருணகிரியும் கேட்டார்.

“ஆமா வேணும் தான். நீ தான் என்னை விட்ட. அவனாவது என்னை விடாம இருக்கணும்ன்னு தான்”

“இப்போ எதுக்கு இந்த பேச்சு எல்லாம்? இரண்டு பேரும் அமைதியா இருங்க. யம்மா பத்மா நீ என்ன அமைதியா நிக்கிற. தட்டு ரெடி பண்ணு” என்றார் பெரியப்பா இடையிட்டு.

“எனக்கும் நீங்க தான் தட்டு ரெடி பண்ணனும் அண்ணி” என்றார் பாரதி உரிமையாக பத்மாவிடம்.

“இப்போ தான் உன் கண்ணுக்கு நான் தெரியறனா?” பத்மா கேட்டேவிட்டார்.

“உங்களுக்கு இப்போ கூட நான் தெரியல தானே. போங்க. ஒரு நாத்தியை நாதி இல்லாம விட்டுட்டு என்னை கேட்கிறீங்க இல்லை” என்றார் பாரதி கண்கள் கலங்க.

பத்மாவிற்கு மனது வருத்தமாகி போனது. அமைதியாக எடுத்து வைக்க சென்றார். மற்றவர்களும் செல்ல, அங்கு ரகுராம், பாரதி, ப்ரவீன் மூவர் மட்டுமே இருந்தனர்.

 “ஏம்மா உங்களுக்கு இந்த போராட்டம்?” ப்ரவீன் மனம் தாங்காமல் அம்மாவிடம் கேட்டான்.

பாரதி சில நொடி அமைதியாக இருந்தவர், “தப்பு பண்றேனா?” என்றார் இருவரையும் பார்த்து கீழே சிந்திவிட்ட கண்ணீருடன்.

என் அக்கா போல தானே இவரும். ரகுராம் நொடியும் யோசிக்காமல்,  “தப்பா இருந்தாலும் சரி பண்ணிக்கலாம். விடுங்க” என்றான்.

பாரதிக்கு இப்போது நிற்காமல் கண்ணீர் வழிந்தது. இந்த வார்த்தை. இதில் ஒளிந்துள்ள அர்த்தங்கள். போதுமே!

ப்ரவீனுக்கும் அம்மாவின் ஓய்ந்த தோற்றம் நிதானிக்க வைத்தது. இவ்வளவு நேரம் சொன்னது போல் ஆமா நீங்க தப்பு என்று சொல்ல முடியவில்லை. இவ்வளவு தூரம் வந்தாச்சு. பார்த்துக்கலாம்.என்ற முடிவுக்கு வந்துவிட்டவன், அம்மாவை தோளோடு அணைத்து கொண்டான்.

“எல்லாம் எடுத்து வைச்சாச்சு சம்மந்தியம்மா பார்த்துக்கோங்க” என்றார் பத்மா.

பாரதி முகம் துடைத்து கொண்டவர், உடை, நகை தவிர மத்தது எல்லாம் சரியாக இருக்க, முகம் தெளிந்தார். மலரவும் செய்தார்.

சபையில் ஆட்கள் வர ஆரம்பிக்க, அனுஷாவின் வருங்கால வீட்டு ஆட்களும் வந்தனர். ராமமூர்த்தி முன் நின்று பாரதிக்கு அவர்களை அறிமுகம் செய்து வைத்தார்.

எல்லோருக்கும் குடிக்க கொடுக்க, பாரதி மகளிடம் சென்றார். சுடியில் ஷாலை ஒரு பக்கமாக இட்டு, ஈரமுடியை உச்சியில் கிளிப் குத்தியிருந்தாள். அவ்வளவு தான். “என்ன கண்ணு இது?” பாரதி அதிருப்தியுடன் கேட்டார்.

“ம்மா. உடனே கிளம்பி வர சொன்னா இப்படி தான்” என்றாள் மகள்.

“சரி இரு” என்றவர், நெற்றிக்கு பொட்டு வைத்து. அவளின் இரண்டடி முடியை இழுத்து பிடித்து இரண்டு பின்னல் போட்டவர், அதில் சிறிதளவு மல்லியை சுற்றினார்.

“இப்போ ஏதோ கொஞ்சம் ஓகே” என்று மகளை பார்க்க, அவளுக்கோ இப்படி ஒரு நிச்சயமா என்றிருந்தது. அவளின் பிறந்த நாள் கொண்டாட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள், ஆடம்பரங்கள்  நினைவுக்கு வந்தது.

“ஓகே அம்மாக்காக. விடு” என்று தனக்கு தானே சொல்லிக்கொண்டவள், ஜன்னல் வழி வெளியே பார்த்தாள்.

அம்மாவின் ஊர்! நினைவு தெரிந்த நாளில் இருந்து பாட்டி வீடு எங்கம்மா என்று அம்மாவிடம் கேட்டு நச்சரித்து இருக்கிறாள். அத்தை வேணி குடும்பத்துடன் தங்கள் வீட்டிற்கு வரும் நேரம், நமக்கு இப்படி ஒரு வீடு இல்லையே என்ற ஏக்கம் இருந்திருக்கிறது.

விடுமுறை நாட்களில் எல்லாம் டூர் தான் சென்று வழக்கம். உறவுகளின் வீடு என்று பார்த்தால் சுற்றி முற்றி அப்பாவின் சொந்தம் மட்டும் தான். அம்மாவின் சொந்தம் என்று ஒருவரையும் பார்த்தது இல்லை. ராமமூர்த்தி தம்பதிகளிடம் மட்டும் பேசியிருக்கிறாள். அவ்வளவு தான்.

Advertisement