Advertisement

பெங்களூர் வீட்டில் தங்கி பிடெக் இறுதியாண்டு படித்து கொண்டிருப்பவளை கணவருக்கு தெரியாமல் வரவழைக்க வேண்டும். மகளோ அப்பா செல்லம். அவரிடம் சொல்லாமல் கிளம்ப மாட்டாள்.

எப்படி, எப்படி என்று யோசித்து கொண்டிருக்க, அவர் முன் வந்து நின்றான் ரகுராம். பத்மா மகனிடம் சொன்னார். உனக்கு வேணாம்ன்னா நீயே  உன் அத்தைகிட்ட பேசு என்று.

பாரதி தன் யோசனையை அப்படியே தள்ளி வைத்து அண்ணன் மகனை பார்த்தார். உள்ளம் பூரித்தது அவருக்கு. என் அப்பா சாயல் இவன்கிட்ட இருக்கு!

“நான் உங்ககிட்ட கொஞ்சம் பேசணும்” என்றான் ரகுராம்.

ப்ரவீன் கோவமாக, “ஒன்னும் பேச வேணாம். இந்த சம்மந்தம் எல்லாம் நடக்காது. கிளம்பு” என்றான்.

“ப்ரவீன்” பாரதி அதட்டினார் மகனை.

ரகுராம் அவன் கோவத்தை கண்டுகொண்டதாகவே தெரியவில்லை. “எதுக்கு இவ்வளவு பிடிவாதம் பிடிக்கிறீங்க. இதெல்லாம் வேண்டாம். அப்பா எப்படின்னு எனக்கு தெரியாது. இனி உங்க பிறந்த வீடா நான் எப்போவும் இருப்பேன். அக்காவும், நீங்களும் எனக்கு ஒன்னு தான். விட்டுடுங்க. இந்த சம்மந்த பேச்சு எல்லாம் வேண்டாம்” என்றான்.

பாரதியின் முகத்தில் ஒரு மென்புன்னகை. ரகுராம் கையை பிடித்து கொண்டார். “இத்தனை வருஷம் உன்னை போட்டோல தான் பார்த்திருக்கேன். நேர்ல இப்போதான் பர்ஸ்ட் டைம் பார்க்கிறேன். உங்க தாத்தா மாதிரி இருக்க நீ” என்றார் வாஞ்சையாக.

இதை பலர் சொல்லி கேட்டிருந்த ரகுராம் தலையசைத்து ஏற்று கொண்டான்.

“ம்மா.. ப்ளீஸ். இதை எல்லாம் நிறுத்துங்க. அப்பா, பாட்டிக்கு எல்லாம் தெரிஞ்சா பெரிய பிரச்சனையாகிடும்” ப்ரவீன் நடப்பதில் சுத்தமாக பொறுமை இழந்திருந்தவன், இடையிட்டு சொன்னான்.

ரகுராம்க்கு இது வேறயா என்றிருந்தது. “உங்களுக்கே இதனால பிரச்சனைன்னும் போது ஏன் இப்படி, விட்டுடங்களேன்” என்றான்.

“சார் என்ன மொட்டையா பேசுறீங்க. அத்தை சொல்லி கூப்பிட மாட்டிங்களா” பாரதி ஆசையுடனே கேட்டார்.

“ம்மா.. இப்போ இது எல்லாம் ரொம்ப முக்கியமா?” ப்ரவீன் பேச,

“எனக்கு முக்கியம் தான் ப்ரவீன்” அழுத்தி சொன்ன பாரதி, “ம்ஹ்ம்” என்றார் எதிர்பார்ப்புடன் அண்ணன் மகனிடம்.

“ம்ப்ச். ஏன் இப்படி” ரகுராம்க்கு புரியவில்லை.

“சரி விடு இப்போ இல்லைன்னாலும் பின்னாடி நீ கூப்பிட்டு தான் ஆகணும்” பாரதி சொல்ல, ரகுராம்க்கு இவர் புரிந்து கொள்வது போல் தெரியவில்லை. கிளம்பிவிட்டான்.

“நீங்க நினைக்கிறது நடந்தா தானேம்மா அவன் உங்களை அத்தை கூப்பிட?” என்றான் மகன்.

“ஏன் நடக்காது ப்ரவீன்?” பாரதி மகனை கூர்மையாக பார்த்தார்.

“உங்க ஆசைக்காக தங்கச்சி வாழ்க்கையை ஸ்பேரா வைப்பிங்களா” மகனும் பேசினான்.

“ஸ்பேர்ன்னு உனக்கு தெரியுமா? உன் தங்கச்சி மேல உங்க எல்லோரையும் விட எனக்கு தான் முதல் உரிமை. என் பொண்ணு அவ. எனக்கு செய்வா”  உறுதியாக சொன்னவர் நேரம் பார்த்து மகளுக்கு அழைத்தார்.

கல்லூரி முடித்து அப்போது தான் வீடு வந்த மகள் எடுக்க, “நீ உடனே கிளம்பணும் கண்ணு” என்றார் பாரதி.

“எங்கம்மா?” மகளுக்கு புரியவில்லை.

“நான் டிரைவருக்கு சொல்லிட்டேன், அவர் உன்னை கூட்டிட்டு வருவார். அப்புறம் இந்த விஷயம் உன் அப்பா, பாட்டிக்கு மட்டுமில்லை யாருக்கும் தெரிய கூடாது” என்றார்.

“வாட்” மகள் புரியாமல் கேட்டாள்.

“நான் சொன்னது உனக்கு புரிஞ்சது கண்ணு. உடனே கிளம்பு. அம்மாக்காக நீ ஏதாவது செய்ய நினைச்சா நான் சொல்றதை செய் கண்ணு. என் வாழ்க்கையில நான் உன்கிட்ட முதலும் கடைசியா கேட்கிறது இதை மட்டும் தான். நாளை வரைக்கும் நான் சொல்றதை நீ கேட்கணும்” என்றார்.

அந்த பக்கம் மகளுக்கு ஒன்றும் புரியவில்லை. “ம்மா.. நீங்க அண்ணா கூடத்தானே கோயில் போயிருக்கீங்க. அண்ணா இருந்தா அவங்ககிட்ட கொடுங்க” மகள் கேட்க,

பாரதி மகனை பார்த்து கொண்டே, “அவன்கிட்ட நீ நேர்லே பேசிக்கோ கண்ணு. இப்போ கிளம்பு. அம்மாக்காக நீ இதை செய்வன்னு நான் நம்புறேன் பாப்பா. செய்வ தானே?” திரும்ப திரும்ப கேட்டு, மகளை கிளப்பி விட்டு தான் போன் வைத்தார் பாரதி.

“ம்மா.. சீரியஸ்லி நீங்க செய்றது எனக்கு பிடிக்கவே இல்லை. கண்டிப்பா நான் இதை நிறுத்துவேன்” மகன் தங்கைக்கு அண்ணனாக நின்றான்.

பாரதி அவர் முடிவிலே நிற்க, பெரியவர்கள் அழைத்தனர். “சொல்லுங்க பெரியப்பா” என,

“ரகுராம் சின்ன பையன் பாரதி. இப்போ கல்யாணம் முடியாதுன்னு ஒத்தை கால்ல நிக்கிறான். எவ்வளவு சொல்லியும் கேட்கலை. அதான் நாங்க எல்லாம் சேர்ந்து ஒரு முடிவு பண்ணியிருக்கோம். இப்போதைக்கு ஊர் முன்னாடி உறுதி பண்ணிக்கிட்டு, அப்புறமா கல்யாணம்”

“இல்லை இல்லை பெரியப்பா. இப்போ முடிச்சிடலாம்” பாரதி வேகமாக சொன்னார். இப்போது விட்டால் இந்த வாய்ப்பு திரும்ப வராதே.

“பாரதி பசங்க விருப்பம் இல்லாமல் என்ன பண்ணிட முடியும். யோசிமா. நிச்சயத்துக்கே போராடி தான் சம்மதிக்க வைச்சோம்”

“என் பொண்ணை கட்டிக்க உனக்கு அவ்வளவு கஷ்டமா இருக்கா” நேரே ரகுராமிடம் கேட்டார் பாரதி.

“முதல்ல எனக்கு இது கல்யாணம் பண்ற வயசா?” அவனும் பதிலுக்கும் கேட்டான்.

“செஞ்சுகிற சூழ்நிலை வந்தா செஞ்சு தானே ஆகணும்?” பாரதி கேட்டார்.

“அப்படி ஒரு சூழ்நிலை எனக்கு இருக்கா சொல்லுங்க” என்றான் ரகுராம்.

“என் தங்கச்சியை கட்டிக்க இவனுக்கு என்ன தகுதி இருக்குன்னு இவன்கிட்ட கெஞ்சிட்டு இருக்கீங்கம்மா” ப்ரவீன் வார்த்தையை விட்டான்.

“ஏய் என்னப்பா பேசுற” குரல் எல்லா திசையில் இருந்தும் வந்தது.

“உங்ககிட்ட பணம் இருந்தா உங்களோட. சொந்தம் தான் முதல்ல. ரகுராம்க்கு இல்லாத உரிமையா? இந்த பேச்சு எல்லாம் இங்க வைச்சுக்காத தம்பி” மிரட்டலாகவே வந்தது வார்த்தைகள்.

“என்னப்பா அருணகிரி பார்த்தியா நீ உன் உறவை விட்டு கொடுத்ததுக்கு பலன். இனிமேலாவது உன் தங்கச்சி சொந்தத்தை பிடிச்சு வைக்க பாரு” என்று அவருக்கும் பேச்சு.

ராமமூர்த்தி தான் அண்ணன் மகனை முறைத்திருந்தவர், “என் மகனா நினைச்சு கேட்கிறேன். ஒழுங்கா நிச்சயத்துக்கு ஒத்துக்கோ. இல்லன்னா பார்த்துக்கோ” என்றார் நடுங்கிய குரலில் கோவமாக.

“சித்தப்பா. அவங்க பேசுன பேச்சை கேட்டும் இதென்ன, அப்படி யாரும்  அவங்க வீட்டு பொண்ணை கட்டிக்க இங்க காத்து கிடைக்கலை” என்றான் ரகுராம் பொங்கிய ஆத்திரத்துடன்.

அவனுக்கு சுத்தமாக பிடிக்கவில்லை. எனக்கு நான் ராஜா. இவன் என்ன என்னை பேசுவது? மரியாதை காணாமல் போனது.

பாரதி விஷயம் சீரியஸ் ஆவதை உணர்ந்து, “என் மகன் பேசினத்துக்கு நான் மன்னிப்பு கேட்டுக்கிறேன். நீங்க சொன்னபடி நிச்சயம் நாளை வைச்சுக்கலாம். கல்யாணம் பார்ப்போம் என்ன செய்றாங்கன்னு” என்றார்.

“ம்மா..” ப்ரவீன் பேச வர,

“உனக்கு அம்மா  வேணும்ன்னு நீ நினைச்சா இனி ஒரு வார்த்தை கூட நீ பேச கூடாது. நான் கண்டிப்பா செய்வேன்” என்றார் பாரதி தீவிரமாக. “ச்சே” மகன் கையை உதறி வெளியே வந்து நின்றான்.

சூரியன் மறைந்து இருள் சூழ ஆரம்பித்தது. ஒருவழியாக அருணகிரி தன் வாயால் சம்மதம் சொல்ல, ரகுராம் ஒரே நாளில் பல அனுபவங்களை கண்டுகொண்டான்.

இரவு உணவும் தயாராகிவிட்டது. பாரதி மறுத்துவிட்டார். நிச்சய சாப்பாடு பார்த்துக்கலாம் என்றார். ப்ரவீன் அங்கு தண்ணீர் கூட குடிக்கவில்லை.

அப்பா, பாட்டி, அத்தை பற்றிய பயம் பிடித்து கொண்டது அவனுக்கு. வேணியின் எண்ணம் அவனுக்கு தெரியுமே. ஒருவேளை அம்மா அதனாலே இந்த நிச்சயத்தில் இவ்வளவு உறுதியாக உள்ளாரா? மகனுக்கு புதிதான சந்தேகம்.

அன்றிரவு பெரியப்பா வீட்டில் பாரதி மகனுடன் தங்க ஏற்பாடானது. ப்ரவீன் அம்மாவிடம்  பேசி பேசி ஓய்ந்து போனான். அவர் மகள் வருவதில் தான் முழு கவனமும் வைத்திருந்தார்.

உறவுகள் தானே முன் வந்து நிச்சய ஏற்பாட்டை பார்த்து கொண்டனர். ராமமூர்த்தி தலைமை தாங்க, மஞ்சுளா இரவெல்லாம் தூங்காமல் ஏற்பாடுகளை செய்தார். பத்மா இருவேறு மனநிலையில் நிற்க, அருணகிரி அறைக்குள் முடங்கி கொண்டார். அவருக்கு பழைய நினைவுகள் பல.

மறுநாளுக்கான புதிய உடைகள் வந்து சேர்ந்தது. “பேசாம இவங்களை எல்லாம் போலீஸ்ல பிடிச்சு கொடுத்திடலாமா தம்பி?” அனுஷா கேட்க, ரகுராம் வாய்விட்டு சிரித்துவிட்டான்.

“விடுக்கா பார்த்துக்கலாம். அப்படி என்ன உலக அழகியை எனக்கு கட்டி கொடுக்கிறாங்கன்னு” என்றான் ரகுராம்.

அடுத்தநாள் அதிகாலையிலே தங்கள் வீட்டு வாசலில் வந்திறங்கிய  பெண்ணை பார்த்து ரகுராம் அயர்ந்து தான் விட்டான்.

“ஆத்தாடி!”

வெள்ளை பனி ரோஜா போல் மலர்ந்திருந்தாள் பெண்.

பாரதியின் மொத்த அழகையும், தணிகைவேலின் பண செழுமையையும் குறையாமல் பெற்றிருந்தாள்.

பாரதி மகள் கையை பிடித்து கொள்ள, உறவுகள் சூழ்ந்து கொண்டனர். ப்ரவீனுக்கு முதலில் நிச்சயம் முடித்து இங்கிருந்து கிளம்பிவிட வேண்டும். பின் கதையை பின்னால் பார்த்துக்கொள்ளலாம் என்று தங்கையிடமும் சொல்லியிருந்தான்.

இரவெல்லாம் அண்ணனிடம் மெசேஜ் மூலம் விஷயத்தை கறந்திருந்தவள், தெளிவாக தான் இருந்தாள். புதிதான உறவுகளை பெண் ஆர்வமாகவே எதிர்கொண்டாள். நன்றாக பேசினாள். பத்மா தொலைவில் இருந்து அவளை பார்த்து கொண்டார்.

இடையில் ப்ரவீனிடம் யாரு என்று கண்ணால் கேட்டாள். அவன் அனுஷாவிடம் பேசி கொண்டிருந்த ரகுராம் பக்கம் பார்க்க, அந்த அதிகாலை பனியில் ஷார்ட்ஸ், டிஷர்ட்டில் தெளிவில்லாமல் தெரிந்தான்.

“ஷார்ட்ஸ் போட்ட பையனுக்கும், ஸ்கர்ட் போட்ட பொண்ணுக்கும் கல்யாணமாண்ணா?” என்றாள் பெண் குறும்பாக.

“ஷட் அப் பாப்பா.. இப்போ நிச்சயம் மட்டும் தான். நீ சொன்னது கேட்டா அம்மா திரும்ப கல்யாணம்ன்னு ஆரம்பிச்சிடுவாங்க” என்றான் அண்ணன்.

இதே நேரம் அங்கு பேத்தி இரவு ஊருக்கு கிளம்பியது தெரிந்து, ராஜேஸ்வரி மகனுடன் கிளம்பி இங்கு வந்து கொண்டிருந்தார்.

Advertisement