Advertisement

அழகியல் 3

“எட்டாக்கனி!” இது தான் பாரதியின் நிலை தற்போது.

எட்டாமல், கைக்கு கிடைக்காமல் போகும் பொருளுக்கு மதிப்பும், ஏக்கமும் அதிகம்.

எட்டிய கனியை ருசி பார்த்து தனக்கு அதை பிடிக்குமா, பிடிக்காதா, சேருமா, சேராதா என்று தெரிந்து கொள்ளலாம்.

எட்டாமல் போவதாலே அதற்கான முக்கியத்துவம் மாறுபட்டு விடுகிறது.

பாரதிக்கான அம்மா வீட்டு உறவும் இப்படியான முக்கியத்துவம் வாய்ந்ததாகவே அவருக்கு அமைந்துவிட்டது. அமைத்துவிட்டார்கள் சுற்றியுள்ள உறவுகள்.

உறவுகள் என்றால் புகுந்த வீடு மட்டுமில்லை பிறந்த வீடுமே தான்.

பாரதிக்கான அடிப்படை உரிமையை, வலுக்கட்டாயமாக பிடுங்கும் நிலையில்  வைத்தது அவரின் பிறந்த வீடு தான்.

பாரதியின் கணவர் தணிகைவேல் குடும்பம் பாரம்பரியமாகவே செழிப்பான குடும்பம். திருப்பூர் தான் அவர்களின் பூர்வீகம். இப்போதும் அங்கு தான் அவர்கள் வாசம்.

காட்டன் துணிகளை உற்பத்தி செய்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வது தான் அவர்கள் தொழில். தணிகைவேல் படிப்பை முடித்து தொழிலுக்கு வந்த புதிது. தாங்களே டெக்ஸ்டைல் பிஸ்னஸ் செய்யலாம் என்று அவரின் அப்பாவிடம் சொன்னார்.

காட்டன் ஏற்றுமதி ஒரு புறம் இருக்கட்டும். புதிதாக நாமும் மாற வேண்டும். வளர வேண்டும் என்று முடிவாகி, பெரிய டெக்ஸ்டைல் கடையை திறக்க ஏற்பாடு நடந்தது.

எல்லா வகையான உடைகளும் கிடைக்க, அதற்கான ஆட்களிடம் நேரில் சென்று பேசி, துணிகளின் தரம் பரிசோதித்து ஆர்டர் கொடுத்து வந்தனர். அதன்படி பட்டுக்காக தணிகைவேல் வந்த இடம் தான் கரூர்.

பாரதியின் தந்தை போன்று மற்றவர்களையும் கூட்டாக வரவைத்து ஒப்பந்தம் பேசினார். சிறிது சிறிதாக அவரவர் வசதிக்கு ஏற்ப செய்து வந்தவர்களுக்கு இது நல்ல வழியாக தெரிந்தது. ஏற்று கொண்டனர்.

ஒவ்வொரு தறியாக தணிகைவேல் செல்லும் நேரம் பாரதியை முதன் முதலாக பார்த்தார். அங்கிருந்த சில நிமிடங்களும் பாரதியின் அழகு  அவரை மறுபடி மறுபடி பார்க்க வைத்தது.

தறி நெய்து கொண்டிருந்தவருக்கு உதவியாக இருந்த பாரதிக்கு தணிகைவேல் பார்வையை உணர முடிந்தது. பணக்கார பையன், சைட் அடிக்கிறான் என்று அதை ஓரங்கட்டிவிட்டார்.

தணிகைவேலும் வந்த வேலையை முடித்து கிளம்பிவிட்டார். ஆனால் பாரதி அவர் மனதில் சலனத்தை விதைத்து விட்டிருந்தார். அடுத்த முறை பணம் கொடுக்க ஆட்கள் வராமல் தணிகைவேலே வந்தார்.

பாரதி அவர் கண்களுக்கு அகப்படவில்லை. பார்க்காமல் செல்ல அவருக்கும் மனமில்லை. பக்கத்திலே ஹோட்டலில் தங்கி கொண்டார் மனிதர். மறுநாளும் சந்தேகம் கேட்பது போல் தறிக்கு செல்ல பாரதி அங்கிருந்தார்.

உடனே கிளம்ப மனமில்லாமல் அரை நாள் வரை அங்கேயே இருந்தவரை பாரதி வித்தியாசமாக பார்த்து வைத்தார். தொடர்ந்த மாதங்கள் இதுவே தொடர்ந்தது.  தொழில் ஒருபக்கம் வளர்ந்து கொண்டிருக்க, தணிகைவேல் மனதில் பாரதியும் நங்கூரம் இட்டு கொண்டிருந்தார்.

பாரதிக்கு அவர் பார்வைகள் பயத்தை கொடுத்தது. காதலாக அதை அவரால் நினைக்க முடியவில்லை. தணிகைவேல் வந்தாலே அவர் பார்வையில் இருந்து மறைந்து போனார். சில மாதம் இந்த கண்ணாமூச்சி நடந்தது.

ஓர் நாள் தணிகைவேல் நேரே பாரதி முன்  நின்றுவிட்டார். தறியில் இருந்து வீடு சிறிது தூரம் இருக்க வழியில் நின்றார். பாரதிக்கு பதட்டம் இருந்தாலும், “என்ன” என்றார் அதட்டலாக.

“ஏன் என் முன்னாடி வர மாட்டேங்கிற? நான் உனக்காக அவ்வளவு தூரம் இருந்து வந்தா நீ ஓடி வந்துட்ட?” என்று தணிகைவேல் கேட்டார்.

“என்ன பேசுறீங்க நீங்க. உங்க பொழுது போக்குக்கு நான் ஆள் கிடையாது. வழி விடுங்க” பாரதி கண்டித்தார்.

“பொழுதுபோக்கா. என்ன பேசுற நீ, இப்படி நினைச்சு தான் கண்ணாமூச்சி ஆடுறியா?” தணிகைவேல் கொஞ்சம் கோவமாகவே கேட்டார்.

“வேறென்ன நினைக்க சொல்றீங்க?” பாரதி கேட்க,

“எனக்கு உன்னை பிடிச்சிருக்குன்னு நினை” என்றார் அவர் வெளிப்படையாக.

“ஆஹ்.. இது நல்ல கதையா இருக்கே” பாரதிக்கு நம்பிக்கை இல்லை.

“ஏன்”

“ஏன்னா.. சுத்தி சுத்தி தொழில் பார்க்கிற நீங்க பார்க்காத பொண்ணா, அப்படி ஒன்னும் நான் சூப்பர் ஸ்பெஷல் இல்லைன்னு எனக்கு தெரியும்”

“எனக்கு பிடிச்சிருக்குன்னும் போது நீ எனக்கு சூப்பர்  ஸ்பெஷல் தான்”

“சாரி நீங்க எனக்கு சூப்பர்  ஸ்பெஷல் இல்லை”

“இப்போவே சொல்லாத. என் விருப்பத்தை இப்போ தான் உனக்கு சொல்லியிருக்கேன். பார்க்கலாம்” என்று கிளம்பிவிட்டார் மனிதர்.

பாரதிக்கு இதை வீட்டில் சொல்லலாமா என்று யோசனை. அப்பாவை விட அம்மா மிகவும் கண்டிப்பு.  அண்ணா அருணகிரி அப்படியே அம்மா வளர்ப்பு. அவரிடம் மிகவும் நெருக்கம். விஷயம் தெரிந்தால் உடனே மாப்பிள்ளை பார்க்க ஆரம்பித்துவிடுவர்.

பாரதிக்கு அப்போது தான் இருபது  வயது. பனிரெண்டாம் வகுப்பு முடித்து வீட்டில் இருந்தார். கல்லூரி படிக்க ஆசை தான். ஆனால் வீட்டில் ஒத்துக்கொள்ளவில்லை.

“உன் அண்ணாவே படிக்கலை. உனக்கு என்ன காலேஜ் படிப்பு வேண்டிக்கிடக்கு” என்றுவிட்டார் அம்மா.

அருணகிரிக்கு படிப்பு வரவில்லை. அதனால் படிக்கவில்லை என்று சொல்ல ஆசை தான். விட்டுவிட்டார். ராமமூர்த்தி  தான் தொலைதூர கல்வி மூலம் படிக்க அனுமதி வாங்கியிருந்தார். அதுவும்  கெட்டுவிடும் என்பதால் அமைதி காத்தார்.

தணிகைவேல் அதன் பிறகும் மாதாமாதம் வந்தார். நாள் முழுதும் அங்கேயே இருக்கும் படி பார்த்து கொண்டர். பாரதிக்கு அவர் தொடர் படையெடுப்புகள் ஆச்சரியத்தை தான் கொடுத்தது. பதில் பார்வை பார்க்க தோன்றவில்லை.

வருடம் கடந்தது. பாரதிக்கு அம்மா வழி சொந்தத்தில் இருந்து வரன் வந்தது. வீட்டில் எல்லோருக்கும் சம்மதம். பாரதிக்கு தான் நெஞ்சுறுத்தல். தணிகைவேல் தேவையில்லாமல் நினைவுக்கு வந்தார்.

பாரதியின் அம்மா வெகு தீவிரமாக இருந்தார். தன் சொந்தத்தில் மகளை கொடுக்க. உடன் அருணகிரிக்கும் அந்த மாப்பிள்ளை நல்ல பழக்கம் என்பதால் இருவரும் நாளே குறித்துவிட்டனர்.

தணிகைவேல் அந்த முறை வந்தவர் விஷயம் கேள்விப்பட்டு, அங்கேயே நின்றுகொண்டார். பாரதியை தனியே சந்தித்து, “என்ன பண்ணட்டும்?” என்று கேட்டார்.

“எனக்கு தெரியல” என்றார் பெண் ஒரே வார்த்தையில்.

அதிலே தணிகைவேல் முகம் மலர்ந்து போனது. அன்றே பாரதியின் அப்பாவிடம் பேசினார். அவர் மிரண்டுவிட்டார். பணபலத்தில் எங்கோ இருக்கும் மனிதருக்கு எப்படி பெண்ணை கொடுக்க? முழுமறுப்பு அவரிடம்.

தணிகைவேல் விடாமல் பேசி, நம்பிக்கை கொடுத்தவர், தன் வீட்டிலும் போராடி பெண் பார்க்க அழைத்து வந்துவிட்டார். பாரதியின் அப்பாவிற்கு ஒற்றை மகள் மேல் அதிகளவில் பாசம். தனியே அழைத்து மகளை கேட்க, “உங்க விருப்பம்ப்பா” என்றார் பெண்.

மகளின் விருப்பம் அதிலே கண்டுகொண்டார் தந்தை. “பெரிய இடம் தாயி. நான் இப்போ கட்டி கொடுக்கிறது பிரச்சனையில்லை. பின்னாடி எதாவதுன்னா நீதான் பார்த்துக்கணும். அப்பா முன்ன நின்ன அமைச்சு கொடுத்த வாழ்க்கையை இறுக்கி பிடிச்சு காப்பாத்திக்கணும்” என்றார் தந்தை.

பாரதிக்கு தெரியும் அன்றைய சூழ்நிலை. வீட்டில் அவ்வளவு எதிர்ப்பு. பணம் பார்த்ததும் அப்பாவும், மகளும் மனசு மாறிவிட்டனர் என்று ஊராரை விட வீட்டினரே அதிகம் பேசினர். மனசு வலித்தது நிஜம்.

மூவர் தவிர யாருக்கும் விருப்பம் இல்லாமல் அந்த திருமணம் நடந்தேறியது.

அதன்பின்னும் சில கசப்பான சம்பங்கள் நடந்தேறிவிட்டது. ஆனாலும் அதே சூழ்நிலை தான் இன்றும்.

வருடங்கள் கடந்து, அடுத்த தலைமுறை வந்தும் எதுவும் மாறவில்லை. பாரதி ஒற்றை பெண்ணாக தனக்காக நின்று கொண்டிருக்கிறார்.

யாரும் இல்லன்னா வேற. எல்லாம் இருந்து யாரும் இல்லைன்னா வேற. இத்தனை வருஷம் அந்த கொடுமையை நான் அனுபவிச்சுட்டேன். இனியும் அப்படியே சாக எனக்கு விருப்பமில்லை. எனக்கான இறுதி மரியாதையையாவது என் பிறந்த வீடு எனக்கு கொடுக்கட்டும். அதையும் சுந்தரம் செய்வார். ஆனால் ஏன்? வேண்டாம்.

பாரதிக்கான வைராக்கியம் பல விஷயங்களை உட்கொண்டது. அதுவே அவரை இவ்வளவு தூரத்திற்கு இழுத்து வந்துள்ளது.

ப்ரவீன் ஒரு பக்கம் குதித்து கொண்டிருந்தான். “என் தங்கச்சி இந்த வீட்ல வாழணுமா? உங்களுக்கே இது அதிகமா இல்லையாமா. அவ இளவரசிம்மா. போற வீட்டுக்கு அவ ராணியா தான் இருக்கணும். இந்த தம்மாத்தூண்டு வீட்ல”

“ப்ரவீன்”

“ம்மா.. உங்களுக்கு கோவம் வந்தாலும் அது தான் உண்மை. அவளை கட்டிக்க உன் அண்ணன் மகனுக்கு என்ன தகுதி இருக்கு? உங்களுக்காக நான் சம்மதம் சொன்னது உன் அண்ணா மக அங்க வந்து வாழ போறவன்னு தான். ஆனா என் தங்கச்சிக்கு இங்க. இந்த வீட்ல. ம்ஹூம். நோ வே. முடியவே முடியாது. நான் இதுக்கு ஒத்துக்கவே மாட்டேன்” ப்ரவீன் மிக மிக உறுதியாக மறுத்தான்.

பாரதியோ மகன் பேச்சை ஒதுக்கி வைத்தார். அடுத்து என்ன என்று தான் யோசனை சென்றது. அருணகிரி இன்னமும் மறுத்து கொண்டிருக்க, பெரியவர்கள் அவரிடம் பேசி கொண்டிருந்தனர்.

மகளை எப்படி இங்கு வர வைக்க? அடுத்த சவால், பெரிய சவால்.

Advertisement